அக்டோபர் 2010


ஒவ்வொரு வருஷமும் சிஎன்என் தளம் ஹீரோக்கள் என்று சமூக சேவை செய்யும் சிலரை ஷார்ட்லிஸ்ட் செய்யும். இந்த முறை மதுரையை சேர்ந்த 29 வயது நாராயணன் கிருஷ்ணன் இந்த லிஸ்டில் இருக்கிறார்.

கிருஷ்ணன் தெருவிலே அலையும் மனநிலை பிறழ்ந்த, முதியவர்களுக்கு எட்டு வருஷமாக உணவளிக்கிறார். மதுரையின் பாலங்களுக்கு அடியே இப்படிப்பட்டவர்களைத் தேடித் தேடிப் பிடித்து உணவளிக்கிறார். ஒரு நாளைக்கு சராசரியாக நானூறு பேருக்கு சாப்பாடு போடுகிறாராம். பணம்? அவருடைய அக்ஷயா ட்ரஸ்டுக்கு வரும் நன்கொடைகள், தனக்கு சொந்தமான ஒரு வீட்டின் வாடகை, அப்பா/அம்மாவின் ஆதரவு இவைதான் ஆதாரம். அக்ஷயா ட்ரஸ்டிலிருந்து அவருக்கு சம்பளம் எதுவும் கிடையாது.

அவர் உதவியால் சாப்பிடுபவர்கள் பலருக்கு அவர் யாரென்று தெரியாது, நன்றி என்று கூட சொல்ல முடியாது. பல சமயம் அவரிடம் கோபப்படுவார்களாம். சாதாரணமாக உதவி செய்யும்போது நன்றி என்று சொல்லும் ஒரு வார்த்தை நம்மை கொஞ்சம் ஊக்கப்படுத்தும். அது கூட இல்லை!

முடிந்தால் பண உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் சிஎன்என் தளத்துக்கு சென்று அவருக்கு ஓட்டாவது போடுங்கள். அவர் வென்றால் இன்னும் கொஞ்சம் நன்கொடைகள் கிடைக்கலாம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
அக்ஷயா ட்ரஸ்ட்
சிஎன்என் தளத்தில் நாராயணன் கிருஷ்ணன்

8 போட்டி முடிவுகளை சரியாக கணித்த பால் என்ற ஆக்டோபஸ் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் இறந்தது. வயதாகி இறந்து போனதாம். (அப்பாடா! ஜாதி, மதம், வரலாறு தாண்டி லைட்டாக ஒரு பதிவு எழுதிவிட்டேன்!)

ஆக்டோபஸ் ஜோசியம் மாதிரி நிகழ்ச்சிகள் எப்படி முக்கியத்துவம் பெறுகின்றன, ஏன் ஊடகங்கள் இந்த மாதிரி செய்திகளை பரப்புகின்றன என்பதைப் பற்றி ஆராய்ச்சியே செய்யலாம். மால்கம் க்ளாட்வெல் எழுதிய டிப்பிங் பாயின்ட் என்ற புத்தகத்தில் இது மாதிரி பரவும் fad-களைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்.

நண்பர் கோபால் அனுப்பிய ஒரு ஜோக் கீழே.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

பிரபாகரன்

இன்னும் சிலர் பிரபாகரன் இருக்கிறார் என்று சொன்னாலும் இப்போது இந்திய அரசு ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன் பேரையும் போட்டு அம்மன் பேரையும் நீக்கி இருக்கிறது. தடா நீதிபதி தட்சிணாமூர்த்தி

The case against the absconding accused A1 Prabhakaran and A2 Pottu Amman, alias Shanmuganathan Sivasankaran, is hereby dropped and the charges against them ordered abated

என்று கூறி இருக்கிறார்.

இரண்டு ஆச்சரியங்கள்.

  1. இன்னுமா ராஜீவ் கேஸ் நடக்கிறது? (ஒரு வேளை தீர்ப்பில் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்று இருந்து அதை இப்போது நீக்கி இருக்கிறார்களோ?)
  2. சி.பி.ஐ. ரிப்போர்ட் வர இவ்வளவு நாளா?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழம்

தொடர்புடைய சுட்டி: என்டிடிவி செய்தி

எனக்கு எப்போதும் வரலாற்றைப் பற்றி படிப்பதில் ஒரு குழப்பம் உண்டு. ஒரே கால கட்டத்தில், ஆனால் வேறு வேறு தளத்தில் வாழ்ந்த வரலாற்று மனிதர்களை இனம் கண்டு கொள்வது. சிவாஜியும், சமர்த்த ராமதாசும், அவுரங்கசீப்பும் சம காலத்தவர்கள் என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் சிவாஜி இங்கே வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் ஐரோப்பாவில் என்ன நடந்தது? யார் அந்த காலத்து முக்கிய ஐரோப்பிய கணித வல்லுநர்? ஃபெர்மத்தா (Fermat), நியூட்டனா, ஆய்லரா (Euler) இல்லை வேறு யாராவதா? சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் காலத்தில் கவர்னர் ஜெனரல்கள் வந்தாயிற்றா இல்லையா?

எனக்கு இந்த முத்துசாமி தீட்சிதரின் காலம் பற்றிய கட்டுரை ஒரு வரப்ரசாதமாக இருக்கிறது. படித்தவுடன் தெளிவாக புரிந்துவிடுகிறது. தீட்சிதர் ராபர்ட் கிளைவ் காலத்துக்கு பிற்பட்டவர். கட்டபொம்மன், ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றவர்கள் அவரது சம காலத்தவர். அவர் பிறந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. அவருடைய வாழ்வின் நடுவின் ஜார்ஜ் வாஷிங்க்டன் ஜனாதிபதி ஆகி இருக்கிறார், காஸ் (Gauss) புகழ் பெற்ற கணித பேப்பர்களை எழுதி இருக்கிறார், கட்டபொம்மனுக்கு தூக்கு.

சுவாரசியமான கட்டுரை, படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய சுட்டிகள்: ஹிந்து சுட்டி

கணித நிபுணர் பென்வா மாண்டல்ப்ராட் ஒரு வாரத்துக்கு முன் (அக்டோபர் 14, 2010) மறைந்தார். கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர்களுக்கு ஒரு காலத்தில் நன்றாக தெரிந்த பேர் இது.

கணிதத்தில் எப்போதும் பல விதமான regular, smooth எல்லைகள் உள்ள பொருள்களைப் பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டே இருந்தது. உதாரணமாக ஒரு வட்டத்தை எடுத்துக் கொள்ளுங்களேன், அது ஒரு கற்பனைப் படைப்பு மட்டுமே. பர்ஃபெக்டான வட்டம் உலகில் எங்கும் கிடையாது. ஆனால் வட்டத்தைப் பற்றி கணிதம் சொல்லும் உண்மைகள் நம் நிஜ வாழ்வில் ஒரு approximation ஆக பயன்படுத்தமுடிகிறது. இந்தியாவின் கடற்கரை எவ்வளவு நீளம் என்ற கேள்விக்கு accurate ஆக பதில் சொல்வது கஷ்டம். கடற்கரயில் அவ்வளவு நெளிவு, வளைவுகள் இருக்கின்றன. நீங்கள் எவ்வளவு சிறிய அளவில் (சரி இங்கிலாந்து வேண்டாம், தமிழ் நாடு போதும், இல்லை சென்னை போதும், இல்லை மெரீனா பீச் போதும்) போனாலும் அங்கே நெளிவு வளைவுகள் உண்டு. ஒரு விதத்தில் இந்தியக் கடற்கரையில் உள்ள அதே வளைவுகள் கொஞ்சம் சின்ன அளவில் தமிழ் நாடு கடரகரையிலும், இன்னும் கொஞ்சம் சின்ன அளவில் சென்னை கடற்கரையிலும், இன்னும் சின்ன அளவில் மேரினாவிலும் இருக்கின்றன. இதைத்தான் அவர் self-similar என்று சொல்கிறார். இயற்கையில் இப்படிப்பட்டவை மிகவும் அதிகம். அப்படிப்பட்ட irregular எல்லைகளை எப்படி ஆராய்வது என்று அவருடைய கண்டுபிடிப்புகள் போகின்றன. இதை அவர் fractal என்று அழைத்தார். இவை fractional dimension உள்ளவை என்று சொன்னார். அவருடைய முக்கியமான பங்களிப்பு என்றால் இதுதான்.

இங்கே உள்ள வீடியோவைப் பாருங்கள். முதலில் கிட்னி பீன்ஸ் மாதிரி ஒன்று இருக்கிறது. ஜூம் செய்ய செய்ய அதே போன்று சின்ன சின்ன அளவில் தெரிவதைக் காணலாம்.

பென்வா மாண்டல்ப்ராட்டைப் பற்றி முதல் முறை எம்.டெக். படிக்கும் காலத்தில் கேள்விப்பட்டேன். நண்பன் முகமது ஜாமா திடீரென்று ஹாஸ்டலின் ஒரு சுவரில் ஒரு படம் (mural) வரையலாம் என்று சொன்னான். யாருக்கும் நன்றாக படம் வரைய வாராது. அப்போது இந்த மாதிரி விசித்திர, self-similar விஷயம் ஒன்று, பார்த்தால் யாருக்கும் புரியாத மாடர்ன் ஆர்ட் மாதிரி இருக்கும், அதை ஒரு கிராஃப் பேப்பரில் பிரின்ட் செய்துகொள்வோம், சுவரில் ஒரு grid வரைந்துகொண்டு பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு கலர் அடித்தால் போதும் என்று சொன்னான். எல்லாரும் முழு மூச்சாக இறங்கினோம். அப்போதுதான் இதைப் பற்றி முதல் முறை படித்தேன். இப்படி ஒன்று கம்ப்யூட்டர் மூலம் வரைவது சுலபம், கிடுகிடுவென்று ஒரு ப்ரோக்ராம் எழுதி, பிரின்டவுட் எடுத்து, வரைந்தும் முடிந்துவிட்டோம்.

ஆனால் என்னடா இது fractal dimension , fractal geometry என்று புரியவே இல்லை. ஒன்று, இரண்டு, மூன்று டைமன்ஷன் என்றால் சரி, நான்கு கூட ஒரு மாதிரி குன்சாவாக புரிந்தது, ஐந்து, ஆறு, ஏழு எல்லாம் சரி ஏதோ ஒரு கணித ஐடியா என்று அட்ஜஸ்ட் செய்துகொண்டேன். ஆனால் யாராவது இது ஒன்றரை டைமன்ஷன் என்றால் என்னவென்று புரிந்து கொள்வது? இன்னும் புரியாத விஷயம்தான். என்றைக்காவது மாண்டல்ப்ராட்டின் புகழ் பெற்ற Fractal Geometry of Nature புத்தகத்தை படித்துப் பார்க்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விஞ்ஞானம்

தொடர்புடைய சுட்டிகள்:
மாண்டல்ப்ராட்டின் தளம்
மாண்டல்ப்ராட் பற்றிய விக்கி குறிப்பு
மாண்டல்ப்ராட் – நியூ யார்க் டைம்ஸ் ஆபிச்சுவரி

போன வாரம் என்னை தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக தேர்ந்தெடுத்திருந்த சங்கருக்கு நன்றி!

தமிழ்மணம் என்ன என்று தெரியாதவர்களுக்கு: இது ஒரு தமிழ் ப்ளாக் திரட்டி(Aggregator). வாராவாரம் ஒருவரை நட்சத்திரப் பதிவராக தேர்ந்தெடுத்து அவரது பதிவுகளை highlight செய்கிறது.

இது சம்பிரதாயமான நன்றி இல்லை. சங்கர் கேட்டிருந்த விவரங்களை நான் தாமதமாக அனுப்பி இருந்தேன். அவரே ஏதோ அட்ஜஸ்ட் செய்துகொண்டார். ஒரு பொறுப்பேற்று செய்யும்போது வர வேண்டிய விஷயங்கள் வரவில்லை என்றால் எத்தனை அவஸ்தை என்று நம் எல்லோருக்கும் தெரியும். அதைத் தாண்டி பணியாற்றும் சங்கருக்கு மனப்பூர்வமான நன்றி!

தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 6

இது ஒரு மீள்பதிவு – பழைய பதிவிலிருந்து அப்டேட் செய்திருக்கிறேன். இவை எல்லாம் ப்ளாக் எழுதுவதை பற்றி நான் அனுபவ ரீதியாக கற்றுக்கொண்டவை.

    உங்கள் ப்ளாக் எதைப் பற்றி?

  1. ப்ளாகின் தீமை கவனமாக தேர்ந்தெடுங்கள். இந்த தீமை பற்றி ரெகுலராக எழுத முடியுமா என்று ஒரு நிமிஷமாவது யோசியுங்கள். சன் டிவியின் 75 ஆண்டு சினிமா கொண்டாட்டத்தை பற்றி எழுதுவது சுலபம் – வாரத்துக்கு ஐந்து படம் வந்தது, எழுத விஷயம் ரெகுலராக கிடைத்தது. கணேஷ் வசந்த் கதைகளை பற்றி எழுத ஆரம்பித்தேன். புத்தகங்கள் கிடைப்பதில்லை. நினைவிலிருந்து எழுதலாம் என்றால் ஒரு ரெஃபெரன்சுக்காவது புஸ்தகம் வேண்டி இருக்கிறது. ரெகுலராக எழுத முடியவில்லை. விளைவு அந்த ப்ளாக் கோமா நிலையில் இருக்கிறது.
  2. உங்கள் ரெகுலர் செயல்களை வைத்து ப்ளாக் எழுதினால் சுலபமாக இருக்கும். நீங்கள் வாரா வாரம் குமுதம், விகடன் படிப்பீர்களா? வெள்ளி இரவு ஏதாவது ஒரு பாடாவதி சினிமா பார்ப்பீர்களா? ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிப்பீர்களா? அந்த ரெகுலர் செயலை வைத்து எழுதுவது சுலபம். (நீங்கள் புத்திசாலி என்றால் ரெகுலராக செய்ய விரும்பும், ஆனால் இது வரை செய்ய முடியாமல் இருக்கும், ஒரு செயலை வைத்து எழுதலாம் – diet, exercise மாதிரி – ப்ளாக் எழுதுவது உங்களுக்கு உதவியாக இருக்கும்). அந்த புத்திசாலித்தனம் எனக்கு இது வரை கைவரவில்லை.
  3. ப்ளாகுக்கு focus இருப்பது நல்லது. கூட்டாஞ்சோறு ப்ளாக் “anything goes” என்கிறது. அவ்வப்போது nothing goes , என்ன எழுதுவது என்று தெரியமாட்டேன் என்கிறது. சிலிகான் ஷெல்ஃப் அப்படி இல்லை – குறுகிய வட்டம், புத்தகங்கள் என்று வைத்திருக்கிறேன். எழுத சுலபமாக இருக்கிறது.
  4. தமிழர்களுக்கு பிடித்த தீம் சினிமாதான். இன்னும் சிவாஜி எம்ஜிஆர் சண்டை போடக்கூட மக்கள் இருக்கிறார்கள். ;-) ) அடுத்தபடி தமிழ் நாடு அரசியல், அடுத்தபடி புஸ்தகங்கள்.
  5. ஆனால் நீங்கள் என்ன எழுதினாலும் யாராவது படிப்பார்கள். Long tail effect!

    என்ன மாதிரி பதிவுகள்?

  1. ப்ளாகுக்கு hit rate உயர நல்ல வழி ஏதாவது தகராறுதான். ஜெயமோகன் சிவாஜி எம்ஜிஆரை கிண்டல் செய்தார், அவர் ஒரு ப்ளாக் எழுதுவது தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிந்தது. நான் சிவாஜியை அதிகமாக கிண்டல் செய்கிறேன் என்று எனக்கு ஒரு reputation ஒரு காலத்தில் இருந்தது. அதனால் சில தீவிர சிவாஜி ரசிகர்களுடன் ஓரளவு பழக்கமும், கொஞ்சம் சண்டையும் ஏற்பட்டது, எனக்கும் வாசகர்கள் அதிகமானார்கள். எந்த ப்ளாகிலாவது பிராமணர்களை திட்டினால் அடுத்த இரண்டு நாள் அந்த ப்ளாக் பாப்புலராக இருக்கிறது. நீங்கள் காந்தி நல்லவர் என்று எழுதினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். காந்தி கெட்டவர் என்று எழுதினால் ப்ளாக் சர்குலேஷன் உயரும். “Dog Bites Man” vs “Man Bites Dog” மாதிரிதான். பொதுவாக தமிழர்கள் தங்கள் iconகளை யாராவது எழுத்தில் கிண்டல் செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள், பொங்கி எழுந்து விடுவார்கள். ஆனால் “அசத்த போவது யாரு” மாதிரி நிகழ்ச்சிகளில் கிண்டல் செய்தால் ரசித்து சிரிப்பார்கள்.
  2. ஆனால் பரபரப்புக்காக உங்களுக்கு நம்பிக்கை இல்லாத எதையாவது எழுதாதீர்கள். controversial, uncomplimentary கருத்துக்களில் எது உண்மை, எது சும்மா என்று வெகு விரைவில் எல்லாரும் புரிந்துகொள்வார்கள். உண்மைக்கு ஒரு தனி கவர்ச்சி இருக்கிறது. அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்.
  3. முடிந்த வரை ஒரு consistent value system வைத்துக் கொள்ளுங்கள்.
  4. முடிந்த வரை topical ஆக எழுதுங்கள். அங்காடித் தெரு பற்றி ஆறு மாதம் கழித்து விமர்சனம் எழுதினால் அதை படிப்பவர்கள் குறைவுதான். பராசக்திக்கு இப்போதுதான் விமர்சனம் எழுதுபவன் இப்படி சொல்கிறானே என்று பார்க்கிறீர்களா? :-)
  5. ப்ளாக் எழுதுவது என்று வைத்துக்கொண்டால் ரெகுலராக எழுதுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையோ, இரண்டு நாளைக்கு ஒரு முறையோ வாரத்துக்கு ஒரு முறையோ என்னவோ – உங்கள் ப்ளாகை படிப்பவர்களுக்கு அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கவேண்டும், அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவேண்டும். உங்களால் அப்படி ஒரு நாள் எழுத முடியவில்லையா, இன்று எழுதமுடியவில்லை, அப்டேட் இப்போது வரும் என்றாவது தெளிவாக சொல்லிவிடுங்கள்.

    உங்களைத் தவிர்த்த மற்றவர்கள் – வாசகர்கள், பதிவர்கள், சக ஆசிரியர்கள்

  1. பின்னூட்டங்களுக்கு பதில் எழுதுங்கள். வாசகர்கள்தான் ப்ளாகை அர்த்தம் உள்ளதாக ஆக்குகிறார்கள். அவர்களிடம் அந்த குறைந்த பட்ச கர்ட்டிசி இருக்க வேண்டும்.
  2. தமிழ் ப்ளாக் உலகில் ஒரு சோர்வடைய வைக்கும் விஷயம் – உருப்படியாக பேசுபவர்கள் குறைவு. கருத்து வேறுபாடு இருந்தால் அதை கருத்தளவில் வைப்பவர்கள் குறைவு. தனி மனித தாக்குதல்கள் அதிகம். ஆனால் சோர்வடையாதீர்கள், உங்கள் கருத்துகளை முன் வைக்க ப்ளாக் உலகம் நல்ல வாய்ப்பு. அதை பயன்படுத்துங்கள். உங்களுக்கு உண்மையான நம்பிக்கை உள்ள எந்த கருத்தானாலும் சரி, எவ்வளவு controversial ஆனாலும் சரி, அதைப் பற்றி எழுதுங்கள். திட்டுபவர்களைப் பற்றி எல்லாம் பெரிதாக கவலைபடாதீர்கள். என்ன இவர்கள் சொல்வதை வைத்தா உங்கள் வாழ்வு? நீங்கள் ஏணி என்றால் அடுத்தவர் கோணி என்றுதான் சொல்வார். அதுதான் மனித இயல்பு. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை சொல்லும்போது ஏதோ ஒரு புள்ளியில் அடுத்தவர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பார். அதற்குப் பிறகுதான் நீங்கள் சொல்வதை ஏற்பதும் மறுப்பதும். அதுதான் உங்கள் வெற்றி!
  3. கூட எழுத கூட்டாளி(கள்) இருந்தால் நல்லது. நீங்கள் தளர்ச்சி அடையும்போது, உங்களுக்கு வேலைகள் வந்து அம்மும்போது, அவர்(கள்) கை கொடுப்பார்(கள்).
  4. கூட்டாளிகளை சேர்க்கும்போது எதிர்பார்ப்புகளை தெளிவாக்கிவிடுங்கள். கருத்து வேறுபாடுகள் சில சமயம் கசப்பாக மாறலாம். ஒரு காமன் மினிமம் ப்ரோக்ராம் இருந்தால் நல்லது.
  5. முடிந்த வரை அடுத்தவர் சுட்டிகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள். அவர்கள் சுட்டிகளுக்கு லிங்க் கொடுங்கள், இல்லை அவர்கள் கருத்துகளை சொல்லிவிட்டு மேலே உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். எதுவும் சரிப்படாவிட்டால் கொட்டை எழுத்தில் யாருடைய சுட்டி என்றாவது தெளிவாக தெரிவியுங்கள். (இந்த தளத்திலும் சில முறை தவறு செய்திருக்கிறோம்)

    நகாசு வேலைகள்:

  1. நல்ல தலைப்பு முக்கியம். உங்கள் ப்ளாக் அனேகமாக ஒரு திரட்டியில் சேர்க்கப்பட்டிருக்கும். அங்கே தலைப்பைப் பார்த்துதான் உங்கள் ப்ளாகுக்கு வருவதா வேண்டாமா என்ற முடிவு எடுக்கப்படுகிறது. “என் வீட்டுத் தோட்டத்தில்” என்று தலைப்பு வைத்தால் என்ன இருக்கும் என்று யூகிப்பது கஷ்டம். “ரோஜாச்செடி நன்றாக வளர வழி” என்று தலைப்பு வைத்தால் என்ன எழுதுகிறீர்கள் என்று புரியும், இண்டரஸ்ட் உள்ளவர்கள் படிப்பார்கள்.
  2. முடிந்த வரையில் அறிமுகம் (நறுக்கு) என்று இரண்டு வரிகள் எழுதுங்கள். ஆர் எஸ் எஸ் ரீடர் அந்த சுருக்கத்தை தலைப்போடு சேர்த்துத் தரும்.
  3. படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவற்றை சேர்ப்பது நல்ல விஷயம். பழைய படங்களுக்கு ஸ்டில் தேட ரொம்ப கஷ்டப்பட்டேன். சில சமயம் சோம்பேறித்தனத்தால் எதையும் சேர்க்காமல் விட்டுவிடுவேன். அந்த தவறை செய்யாதீர்கள்.
  4. முடிந்த வரை ஒரு பக்கத்துக்கு மேல் ஒரு போஸ்டை எழுதாதீர்கள். (படிப்பவருக்கு ஸ்க்ரோல் செய்யும் சிரமம் இருக்கக்கூடாது.) இந்த கலை எனக்கும் இன்னும் கைவரவில்லை. ஆனால் என்ன செய்வது, மேலும் பதிவுகளில் யூட்யூப் சுட்டிகளை சேர்த்தால் பாதி ஸ்க்ரீன் அங்கேயே போய்விடுகிறது.
  5. முடிந்த வரையில் எல்லா திரட்டிகளிலும் உங்கள் பதிவை சேருங்கள். தமிழ்மணம் போன்றவற்றில் உங்கள் ப்ளாகை ரெஜிஸ்டர் செய்தால் பதிவுகள் அங்கே அப்டேட் ஆகும்.

தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 5

உள்ளத்தைத் தொட்ட ஒரு (பழைய) செய்தி:

ஜனவரி 25 , 1994-இல் காப்டன் டி.பி.கே. பிள்ளை (D.P.K. Pillay) இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் லோங்டி பாப்ரம் (Longdi Pabram) என்ற கிராமத்தில் ரோந்து போய்க்கொண்டிருந்தார். நான்கு தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை. ஒரு தீவிரவாதி அவுட். பிள்ளைக்கு அபாயமான காயம், பிழைப்பாரா மாட்டாரா என்ற நிலை. பிள்ளையை காயப்படுத்திய கேய்னே போன் (Kaine Bon) உட்பட இரண்டு தீவிரவாதிகள் கைப்பற்றப்பட்டனர்.

ஆனால் துப்பாக்கி சண்டையில் மாசெலியு தாய்மெய் (Maseliu Thaimei) என்ற ஒரு இளம் பெண்ணின் மீதும் குண்டு பாய்ந்தது. பிள்ளையை தூக்கிச் செல்ல ஒரு ஹெலிகாப்டர் வந்தபோது அவர் முதலில் அந்த பெண்ணை எடுத்துச் செல்லச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் லோங்டி பாப்ரம் கிராமத்தை தாக்கி நொறுக்கி விடுகிறோம் என்று பொங்கி எழுத சக அதிகாரிகளை தன்னுடைய கடைசி ஆசையாக அந்த கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஏறக்குறைய சத்தியம் வாங்கி தடுத்திருக்கிறார். பிடித்து வைத்திருந்த தீவிரவாதிகளுக்கும் அடி விழாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நல்ல வேளையாக பிள்ளை பிழைத்துவிட்டார். இன்று அவர் ஒரு லெஃப்டினன்ட் கர்னல்.

ஆறேழு மாதங்களுக்கு முன்னால் மீண்டும் அந்த கிராமத்துக்கு போயிருக்கிறார். காப்பாற்றப்பட்ட மாசெலியு இன்று ஒரு தாய். அந்தப் பெண்ணின் அம்மா தன் பெண்ணின் உயிரை காப்பாற்றியவரை பார்த்து கதறி கதறி அழுதாராம்.

பிள்ளை இது ஒன்றும் பெரிய தியாகம் இல்லை, யாராயிருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள், அந்த பெண்ணுக்கு தான் சுடப்பட்டது என் என்று தெரியாது, எனக்குத் தெரியும், அந்த தீவிரவாதிகளுக்குத் தெரியும், அதனால்தான் அவளைக் காப்பாற்ற வேண்டியது எங்கள் முதல் கடமை என்று நினைத்தேன் என்கிறாராம். தமிழ் சினிமாவில் வருவது போல என் கடமையைத்தானே செய்தேன் என்கிறார், என்ன என்ன சினிமாவில் பார்த்தால் சிரிப்பு வரும், இது genuine ஆக இருக்கிறது.

கிராம நாட்டாமை திரு அடான்போ (Atanbo) அந்த இரவின் ஒவ்வொரு நொடியையும் நன்றாக நினைவு வைத்திருக்கிறார். பிள்ளை எங்களை மன்னிக்காவிட்டால் நாங்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது என்கிறார்.

பிள்ளையே எதிர்பாராத ஒரு சந்திப்பு – கேய்னே போன் அவரை வந்து பார்த்திருக்கிறார். இப்போது தீவிரவாதப் பாதையை விட்டுவிட்டார் என்று தெரிகிறது. 16 வருஷங்களுக்கு முன் ஒருவரை ஒருவர் கொல்ல முயன்ற இருவரும் இன்று தழுவிக் கொண்டனர்.

பிள்ளை “என்னால் நம்பவே முடியவில்லை! கிராமத்தைப் பார்க்க வந்தேன், கேய்னேவையும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை” என்கிறார்.

பிள்ளையின் சக அதிகாரியான கர்னல் சோங்கர் (Chonker) – இன்று லோங்டி பாப்ரம் கிராமத்துக்கு அருகே ஒரு பட்டாலியனுக்கு தலைவராக இருப்பவர் – சொல்கிறார்: “ஒவ்வொரு ராணுவ வீரனின் கனவும் இதுதான் – காப்பாற்றுபவன் என்று பேர் வாங்கவே துடிக்கிறோம், கொல்பவன் என்றல்ல.”

16 வருஷங்களுக்கு பின் தான் சண்டையிட்ட, படுகாயம் பட்ட ஒரு கிராமத்துக்கு ஒரு ராணுவ வீரன் வருவதே அபூர்வம். அந்த கிராமம் அவரை அழைத்திருப்பது அதை விட அபூர்வம். Truly inspiring story.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

தொடர்புடைய பக்கம்: இந்தியன் எக்ஸ்ப்ரஸ் சுட்டி

தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 4

சிறு வயதில் படித்ததுதான் – தமிழை இழித்துப் பேசிய கனக விஜயர் தலையிலே கல்லேற்றிக் கொண்டு வந்தான் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்துப் போய் வென்று வந்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமயம் வரை படையெடுத்துப் போய் வென்றான் கரிகால சோழன், கங்கை வரை சென்று வென்று வந்த ராஜேந்திர சோழன் என்றெல்லாம் பெருமிதத்தோடு சொல்லிக் கொடுக்கப்பட்டது, மூலைக்கு மூலை அரசியல் கூட்டங்களில் – குறிப்பாக தி.மு.க. கூட்டங்களில் பேசப்பட்டது.

எல்லாம் சரிதான், அது எப்படி இந்த படையெடுப்புகளைப் பற்றி தமிழ் நாட்டுக்கு வெளியே எதுவும் பேசப்படுவதில்லை? கனக விஜயர் எந்த பகுதிக்கு ராஜா? சமுத்திர குப்தன் தொண்டை நாடு வரை திக்விஜயம் செய்தது பல்லவ அரசின் ஆவணங்களில் இருக்கிறது, மாலிக் காஃபூர் மதுரையை அழித்ததற்கு ஆவணம் இருக்கிறது, செங்குட்டுவனுக்கும், நெடுஞ்சேரலாதனுக்கும், கரிகால சோழனுக்கும் எதையும் காணோமே? சிலப்பதிகாரத்தில் கரிகாலன் மகத (இன்றைய பீகார்), அவந்தி நாடுகளை வென்றதாக இருக்கிறதாம். வட நாட்டு சரித்திர புத்தகங்களில் தெற்கே இருந்து யாரும் படையெடுத்து வந்ததாக சொல்லப்படவே இல்லையே? நான் படித்த வரையில் இவை வட நாட்டு சரித்திரத்தில், மக்கள் நினைவில் இல்லவே இல்லை.

கங்கை கொண்ட ராஜேந்திரனுக்கு மட்டுமே தமிழ் நாட்டுக்கு வெளியே ஆவணம் இருக்கிறது. ராஜேந்திரனும் நேர் வடக்குப் பக்கம் போகவில்லை. இன்றைய ஒரிஸ்ஸா (கலிங்கம்) வரையில் அன்றைய நட்பு நாடான வேங்கி நாடு பரந்திருந்தது. ராஜேந்திரனின் தளபதிகள் கலிங்கம் வழியாக இன்றைய வங்காள மாநிலம் வரை போய் அங்கிருந்து கங்கை தண்ணீரை சோழ நாட்டுக்கு கொண்டு வந்தார்கள். (கங்கை இன்றைய கல்கத்தாவுக்கு அருகேதான் கடலில் கலக்கிறது.) இது ஒன்றுதான் ஆவணங்கள் இருக்கும், கொஞ்சமாவது வடக்குப் பக்கம் போன படையெடுப்பு என்று நினைக்கிறேன்.

நான் சரித்திர நிபுணன் இல்லை. சிலப்பதிகாரத்தையும் படித்தவன் இல்லை. படித்தவர்கள், நிபுணர்கள் யாராவது இருக்கிறீர்களா? (டாக்டர் நாகசாமி மாதிரி யாரிடமாவது கேட்க வேண்டும்.) இதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? இது உண்மையிலேயே வரலாறா இல்லை தொன்மமா? (legend)

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 3

யார் பிரதமரானாலும் முதல்வரானாலும் அமைச்சரானாலும் நம் அன்றாட வாழ்வில் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. அதுவும் இப்போதெல்லாம் யாரும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு யாரும் அரசியலில் நுழைவதும் இல்லை. ஆனால் நேரடியாக சாதாரண (மத்தியதர) மக்களிடம் தாகம் ஏற்படுத்திய அமைச்சர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள்:

மது தண்டவதே, ரயில்வே அமைச்சர், ஜனதா (மத்திய) அரசு 1977-80 – ரயில் பிரயாணத்தின் கஷ்டத்தை குறைத்தது.
ஒரு காலத்தில் பயணம் என்றாலே ரயில் பயணம்தான். இந்த ஜனதா அரசுக்கு முன் ரயில் பயணம், அதுவும் மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் என்றால் மிகவும் சிரமம்தான். அது சிரமம் என்று கூடத் தெரியாது, ஏனென்றால் ஒப்பிட்டுப் பார்க்க வேறு எதுவும் இல்லை. கட்டை பெஞ்சுகள், மிகவும் வசதி குறைந்த ரயில் பெட்டிகள் என்றுதான் இருக்கும். முதல் வகுப்பை பொறாமையால் எட்டிப் பார்த்தால் குஷன் வைத்த சீட்டுகள் தெரியும். (வேறு என்ன இருக்கிறது என்று தெரியாது, உள்ளே போனால்தானே?) தண்டவதே ரயில்வே அமைச்சரானதும் எல்லா வகுப்புகளிலும் சவுகரியம் உயர்ந்தது, கட்டை பெஞ்சுகள் ஒழிந்தன, எல்லா பெட்டிகளிலும் குஷன் வைத்த சீட்டுகள் வந்தன, நெடுந்தூர ரயில் பயணம் என்பது சிரமமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை என்று முதன்முதலாக புரிந்தது.

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், தொழில் அமைச்சர், ஜனதா (மத்திய) அரசு 1977-80 – அயல் நாட்டு கம்ப்யூட்டர் கம்பெனிகளை வெளியேற்றியது
இந்த liberalization எல்லாம் வருவதற்கு முன்பே இந்தியாவில் ஐபிஎம்மும், கோகோ கோலாவும் மார்க்கெட்டை பிடித்திருந்தன. (மார்க்கெட்டின் சைஸ் சின்னது, வசதியானவர்கள் மட்டும்தான் கோகோ கோலா குடிப்பார்கள், மிச்ச பேர் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் காளி மார்க்தான்) ஃ பெர்னாண்டஸ் என்ன நினைத்தாரோ தெரியாது, எல்லா அயல்நாட்டு கம்பெனிகளையும் இந்தியாவை விட்டு துரத்திவிட்டார். (ரஷியாவுக்கு மிக நெருக்கமானவர் என்று அறியப்பட்ட, சோஷலிசம் சோஷலிசம் என்று பேசிய இந்திரா காந்தி அயல் நாட்டு கம்பெனிகளை வெளியேற்றவில்லை, வலதுசாரி என்று அறியப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசில்தான் இதெல்லாம் நடந்தது.) அவர் என்ன நினைத்து இதை செய்தாரோ தெரியாது, ஆனால் அதனால் அடுத்த ஜெனரேஷன் லிம்கா, கோல்ட் ஸ்பாட் குடித்து வளர்ந்தது, ஹெச்சிஎல், விப்ரோ மாதிரி கம்பெனிகளில் அவர்களுக்கு வேலை கிடைத்தது, மத்திய தர வர்க்கத்தின் நிலை கொஞ்சம் உயர்ந்தது.

எம்ஜிஆர், தமிழக முதல்வர், 1977-87 – தனியார் எஞ்சினியரிங் கல்லூரிகள்
நிறைய தமிழர்கள் இன்று ஓரளவு வசதியாக வாழ்வது அவர்கள் அப்பா அம்மா கடனை உடனை வாங்கி அவர்களை எஞ்சினியரிங் படிக்க வைத்ததால்தான். அதற்கு முன்னாள் தமிழ் நாடு முழுவதும் ஒரு 2500-3000 சீட்தான் எஞ்சினியரிங், மருத்துவ கல்லூரிகளில். யோசித்துப் பாருங்கள், அன்றைக்கு ஒரு நாலு கோடி தமிழர் இருந்திருப்பார்கள், ஒரு கோடி குடும்பம் என்று வைத்துக் கொள்ளலாம். வருஷத்துக்கு ஒரு பத்து லட்சம் பேர் ப்ளஸ்டூ பாஸ் செய்திருப்பார்கள், அதில் மூவாயிரம் பேருக்குத்தான் தொழில் கல்லூரிகளில் சீட் என்றால் மிச்ச பேர் என்ன செய்வது?

மன்மோகன் சிங்-நரசிம்ம ராவ், காங்கிரஸ் (மத்திய) அரசு – 1991-96 Liberalization
பெரும் தாக்கம் உள்ள முடிவு இது. இந்தியாவின் மத்திய தர வர்க்கம் மேலெழுந்தது. பணக்காரர்கள் மேலும் பணம் சம்பாதித்தார்கள். கன்ஸ்யூமர் காலம் என்று சொல்லலாம். ஆனால் ஏழைகள் வாழ்க்கை இன்னும் கீழே போனதோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.

இதைத் தவிர காமராஜின் மதிய உணவுத் திட்டம், தமிழக தொழிலமைச்சர் ஆர்வியின் (ஜனாதிபதி ஆன ஆர். வெங்கட்ராமன்) வேலை வாய்ப்பு தரும் பல தொழில்களை வளர்த்தது, சி. சுப்ரமண்யம் முன்னின்று இயக்கிய பசுமைப் புரட்சி என்றும் சொல்லலாம். ஆனால் இவை எனக்கு பர்சனலாக ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. (சின்னப் பையங்க!) அதனால்தான் இவற்றை குறிப்பிடவில்லை.

அமைச்சர்கள் நினைத்தால் மக்களுக்கு முன்னேற வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதுவே நல்ல அமைச்சர்களின் அடையாளம். அப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவாக இருப்பது நம் துரதிருஷ்டம்.

அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்கிய அரசியல்வாதிகள், தலைவர்கள், அமைச்சர்கள் என்று நீங்கள் யாரையாவது நினைக்கிறீர்களா? பதில் எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers