செப்டம்பர் 2010


தீர்ப்பு எனக்கு புரியவில்லை என்பதை சொல்லத்தான் வேண்டும். படித்த வரையில் ஒரு நீதிபதி இங்கேதான் ராமன் பிறந்தார் என்று சொல்வது போல இருக்கிறது. (ராமன் இங்கேதான் பிறந்தான் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றல்ல, ராமன் இங்கேதான் பிறந்தான் என்று). இன்னொரு நீதிபதி கோவில் இடிக்கப்படவில்லை, ஏற்கனவே இருந்த இடிபாடுகளின் மீது மசூதி கட்டப்பட்டது என்கிறார். இது இவருக்கு எப்படித் தெரியும் என்று புரியவில்லை. ஒருவர் அது மசூதியே இல்லை, ஏனென்றால் அது இடிபாடுகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது என்கிற மாதிரி இருக்கிறது. இத்தனை நாள் இது முஸ்லிம் அமைப்புக்கு சொந்தம் என்பதற்கு documentation இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இல்லை என்கிறார்கள். அப்படி எந்த documentation-உம் இல்லை, இது புறம்போக்கு நிலம் என்றால் இத்தனை நாள் கையகப்படுத்துவதில் ஹிந்து அமைப்புகளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அப்புறம் நிர்மோஹி ஆகாராவாம், இதுவும் ஹிந்து அமைப்புதானே, இதற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் என்றும் புரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் கோர்ட்டில் கேஸ் முடிந்தது சந்தோஷம். தீர்ப்பு பிடிக்கிறதோ இல்லையோ அதை ஏற்றுக் கொள்வதுதான் (இல்லை அப்பீல் செய்வது) சரியான அணுகுமுறை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய சுட்டிகள்: அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்

கிழக்கு பதிப்பகம் ஹரன் பிரசன்னா தான் இலங்கைக்கு போய் வந்த அனுபவம் பற்றி இட்லிவடை தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த இன்ஸ்டால்மெண்டில் இலங்கைத் தமிழர்கள் நிலை பற்றி எழுதி இருக்கிறார். இது பூரா பூரா anecdoctal பதிவு மட்டுமே. அது தெரியுமா இது தெரியுமா என்று ஆரம்பிக்காதீர்கள். ஆனால் கட்டாயமாக படியுங்கள்! ஓர் excerpt:

ராணுவம் சண்டையின்போது பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடத்தியதும் உண்மை. அதேபோல இயக்கமும் சிறுவர்களையும் பொது மக்களையும் கேடயமாகப் பயன்படுத்தியதும் உண்மை என்றார். ராணுவம் பயன்படுத்திய குண்டு பாஸ்பரஸ் குண்டுகள். ஒரு குண்டை எறிந்தால், அது ஒன்பது குண்டாகப் பிரிந்து தாக்குமாம். மேலே பட்டால் அந்த இடமே ரணமாகிக் கொப்பளித்துவிடுமாம். (ஒருவித புன்னகையுடன், இதை சப்ளை செய்தது உங்கட இந்தியாதான் என்றார்.)

மட்டகிளப்பிலிருந்து கேம்புக்கு தப்பிப்பதைத் தடுக்க, இயக்கம் பல்வேறு யுத்திகளைச் செயல்படுத்தியதாம். அதில் ஒன்று, அங்கே இருக்கும் ராணுவத்தவர்கள் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள் என்பது. ஆனால் அப்படி நடந்தது குறைவுதான் என்றார். உடனே அப்படி நடக்கவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது, நடந்தது என்றும் சொன்னார். ஆனால் புலிகள் சொன்ன அளவு நடக்கவில்லை என்றார். சட்டென, உங்கட ஐபிகேஎஃப் செய்ததைவிடக் குறைவுதான் சிங்களவர்கள் செய்தது என்றும் சொன்னார். ஐபிகேஎஃப்பும் எல்லா இடங்களிலும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் சில இடங்களில் மிக மோசமாக நடந்துகொண்டது என்றும் சொன்னார்.

செஞ்சோலை படுகொலை பற்றிச் சொன்னார். பள்ளியில் படிக்கும் சிறார்களை இரு நாள் பயிற்சிக்கென வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது இயக்கம். பயிற்சி கொடுத்தால் நிச்சயம் ராணுவம் அழிக்கும் என்று தெரிந்தே இதைச் செய்தார்கள். ராணுவத்துக்கு பயிற்சி பெறுவது பள்ளி சிறார்களா எனத் தெரியுமா தெரியாதா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. முதல் குண்டு விழவும், பயிற்சி அளித்தவர்கள் சிறார்களை ஓடிச் சென்று வண்டியில் ஏறச் சொன்னார்கள். பயந்து போன பிள்ளைகள் வண்டியில் ஏறவும் வண்டியிலும் குண்டு விழுந்தது. படுகொலை ராணுவம் செய்ததுதான் என்றாலும், பயிற்சிக்கென அழைத்துச் சென்றது இயக்கம்தான் என்றார்.

கறுப்பு வெள்ளை என அடித்துவிடும் விஷயம் இல்லை இது. எல்லாருமே குற்றவாளிகள்தான் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. புலிகளுக்கு வாழ்வா சாவா பிரச்சினை, கேடயமாக இருந்து கூட நாலு தமிழர்கள் செத்தாலும் இயக்கம் வாழ வேண்டும் என்று நினைத்திருக்கலாம். இலங்கை அரசுக்கும் “போருக்கு” முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டிய கட்டாயம், விரும்பி சேர்ந்த புலிகளுக்கும் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்ட புலிகளுக்கும் இடையே வித்தியாசம் பார்ப்பது கஷ்டம், அதனால் எல்லாரையும் அடிப்போம் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் நடுவில் புகுந்து இந்த பாஸ்ஃபரஸ் குண்டு சப்ளை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன இந்தியாவுக்கு? புலிகளை ஒழிப்பது strategically important என்று யாரோ ஒரு ஃபாரின் ஆஃபீஸ் பாபு தீர்மானித்திருக்கிறார்!

ஹ. பிரசன்னாவின் நண்பர் மேலும் சொல்கிறார் -

பிரபாகரன் இறந்த அன்று எப்படி உணர்ந்தீர்கள் என்றேன். சட்டென அவர் இறந்துட்டதா இன்னும் தெரியலையே என்றார். பின்னர், 3 மாத காலம் நடந்த சண்டையின் வெறுப்பில் பிரபாகரன் மீது கடும் கடுப்பில் இருந்தோம். ஆனால் அவர் இறந்ததாகச் சொன்ன அன்று ரொம்ப வருத்தப்பட்டோம் என்றார். இனி ஏதேனும் பிரச்சினைகள் என்றால் என்ன செய்வது என்றும் தோன்றியதாகச் சொன்னார். ஆனால் இலங்கை ராணுவம் அவரது உடல் போன்ற ஒன்றையும், அவரது முகம் போன்ற ஒன்றையும் வைத்து பொய் சொல்லிவிட்டதாகச் சொன்னார். உண்மை என்றால் ஏன் அவரது உடலை பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

சிரிசபாரத்தினம் இறந்த நாளிலிருந்து பிரபாகரனுக்கு எதிர்ப்பு நிலை எடுப்பவன் நான். ஆனால் ஹ. பிரசன்னாவின் நண்பர் சொல்வது போலத்தான் நானும் பிரபாகரனின் மரணச் செய்தி கேட்டபோது வருத்தப்பட்டேன். ஈழத் தமிழர்களுக்கு இருந்த பெரும் பாதுகாப்பு அரண் தகர்ந்துவிட்டது என்று தோன்றியது. ஆனால் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று என்னால் நம்பமுடியவில்லை.

இனி மேலாவது விடிவு வந்தால் சரி.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழம் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
ஹரன் பிரசன்னாவின் பதிவு
பிரபாகரன் மறைவு?
பிரபாகரன் – ஒரு மதிப்பீடு

டெல்லியில் நடக்கவிருக்கும் காமன் வெல்த் விளையாட்டுகள் ”நேஷனல் பிரைட்”.

ஒரு வினாடி- நீங்கள் பெருமைப்பட முயற்சி செய்வதற்கு முன் மேலே படியுங்கள்.

காமன் வெல்த் என்பது ”நேஷனல் பிரைட்” என்ற உணர்ச்சி, நம்மைப்போன்ற காமன் மேனை காட்டிலும் அதிகம் இருக்க வேண்டிய தேசிய தலைவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல.

அவர்கள் காமன் வெல்த் வில்லேஜை கடைசி நேரம் வரை ”ஜன்க்” போன்று வைத்திருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன் பாலம் உடைந்து விழுகிறது. “வில்லேஜ்” கூவம் போல் “வாசம்” கொடுக்கிறது. இன்னும் எத்தனை எத்தனையோ தயாரின்மை. கடைசியில் ஏதோ பண்ணி ஒப்பேத்தியிருக்கிறார்கள். இதற்கு ஆஸ்திரேலிய அணியின் புகழ்ச்சியை பரைசாற்றுகிறார்கள்.

டாய்லட் பேப்பர் $80 டாலர் என்று கொள்முதல் பண்ணியிருக்கிறார்கள். (சோப்பு டப்பா $61 – ரூ.3000) அதாவது கிட்டத்தட்ட ரூபாய். நாலாயிரம். ஒரு ரோலா அல்லது 24 ரோல்கள் கொண்ட ஒரு பாக்கெட்டா என்று என்க்கு சரியாக தெரியவில்லை. 24 ரோல்கள் என்றால் கூட பெஸ்ட் குவாலிட்டி $10லிருந்து  $15வரைத்தான் (ரூ.300 – ரூ.450) அமேரிக்க சந்தையில் அதுவும் சில்லரைச் சந்தையிலேயே கிடைக்கிறது.  மொத்தக் கொள்முதல் நேரடியாக பண்ணும் பொழுது இதில் கால் விலையிலேயோ அல்லது அதிகபட்சம் அரைவிலையிலேயோ சாதாரண மளிகைகடை உரிமையாளர்கள் கூட பேரம் பேசி அடக்கி விடலாம்.  அப்படி பட்டவை இந்திய சந்தையில் எவ்வளவு மலிவாக வாங்கலாம் என்று நினைத்துப் பாருங்கள்! அதுவும் மிக பெரிய பர்சேஸ் மேனஜர்கள் (பெரிய பல்கலைகழகத்தில் MBA படித்தவர்களாகவும் இருக்கக்கூடும்) இதை இப்படி “திறமையாக” கொள்முதல் செய்திருக்கிறார்கள். அவர்களை சொல்லி என்ன பயன்? அவர்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் அரக்கர்கள் அல்லவா இதற்கு காரணம்!

நான் நினைப்பது என்னவென்றால் (என்னுடைய கான்ஸ்பிரஸி தியரி) இது கூட ஒரு வித காசு பண்ணும் திட்டமே. அதாவது கடைசி நேரம் வரை வேண்டுமென்றே ஒன்றும் செய்யாமலிருந்து விட்டு, நேரம் நெருங்கியதும் ஒரு வித பதட்டத்தை பரவச் செய்து, காசு போனால் பரவாயில்லை, எதோ வேலை நடந்தால் சரி என்று மக்கள் எதிப்பார்க்கும் ஒரு நிலை வந்ததும் நேரமில்லாததால் எல்லாவற்றையும் விலை அதிகம் கொடுத்து கொள்முதல் செய்வது போல் செய்து கமிஷன் காசு பார்க்கிறார்களோ!  (அரசியல்வாதிகள் அவர்கள் பிணாமிகள் நிர்வாகம் செய்யும் ஸ்தாபனங்களில் கொள்முதல் செய்தால் அது ”கிக்பேக்” கூட இல்லை. மொத்தமும் அவர்களுக்கு தான்.) ஆனாலும் 4000 ரூபாய் டாய்லட் பேப்பர்  3000 ரூபாய் சோப்பு டப்பா இதெல்லாம் எல்லா வரைமுறைகளையும் தாண்டி விட்டது.  எவன் நம்மைக் கேட்க இருக்கிறான் என்ற திமிர். இப்படி காசு பார்ப்பது தான் அவர்களுக்கு நேஷனல் பிரைடோ என்னவோ!

நேஷனல் பிரைட் அமெரிக்க தேசிய வானொலிகளில் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. சிரிக்கிறார்கள் என்றால் லிட்டரல்லி சிரிக்கிறார்கள். அவர்கள் டாய்லட் பேப்பர் தங்கத்திலா செய்யப்பட்டிருக்கிறதென்று கேட்கிறார்கள்.

இவர்கள் அரசியல்வாதிகள். இவர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஆனால் A.R. ரஹ்மானுக்கு என்ன வந்தது? ஒரு ”தீம் சாங்க்” போட்டுக் கொடுங்கள் என்று ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்திருக்கிறார்களாம். (அல்லது ஒரு மில்லியன் ரூபாய்களா என்பது தெரியவில்லை) அவர் நேஷனல் பிரைடை உயர்த்த வேண்டும் என்று எந்தவித பிரத்தியோக முயற்சியும் எடுத்தது போல் தெரியவில்லை. ஏதோ ஒரு பாட்டை போட்டுக் கொடுத்திருக்கிறாராம். பணத்தைத் தவிர ரசனைக்கெல்லாம் மதிப்புக் கொடுக்காத அரசியல்வாதிகளுக்கே தாங்க முடியவில்லை. பாட்டை மறுபடியும் போட்டுத் தர சொல்லியிருக்கிறார்கள். ஹாலிவுட்க்காக ”ஸ்லம்டாக் மில்லியினர்” மூலம் எடுத்துக் கொண்ட முயற்சியில் கொஞ்சமாவது தேசத்தின் பெருமைக்காக எடுத்திருக்கலாம். எனக்கு இசையிலும், குணத்திலும் பிடித்தவர்களுள் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். அவர் பணம் வாங்கிவிட்டோம், எதையோ போட்டுக் கொடுப்போம் என்று நினப்பவரும் அல்ல. நல்ல மனிதர்.  நல்ல இசை அமைப்பாளர். ஏதோ அலட்சியம்.  அவருடைய அந்த அலட்சியம் ஏமாற்றத்தை அளிக்கிறது.

NPR Relay

Commonwealth Games Could Backfire On India’s Goal

Commonwealth Games 2010

Toilet Paper Scandal

சிறு வயதில் என் அம்மா அவ்வப்போது கேட்பாள் – ஏண்டா இப்படி மூணாம் பேஸ்து அடிச்சவன் மாதிரி உட்கார்ந்திருக்கே என்று. என் முகமே அப்படித்தான் என்று புரிந்ததும் அப்படி கேட்பதை நிறுத்திவிட்டாள்.

அது என்ன மூணாம் பேஸ்து என்று புரிந்ததே இல்லை. உண்மையில் என் அம்மாவுக்கும் அது என்ன என்று தெரியவே இல்லை. அதன் ஒரிஜினல் அர்த்தம் என்னவோ, அது மறந்தே போய் கவலையில் மூழ்கி இருப்பவன் என்று ஒரு புது அர்த்தம் உண்டாகிவிட்டது. போதாக்குறைக்கு இந்த சொல்வடை (idiom) என் கண் முன்னாலேயே வழக்கொழிந்து போயிற்று. இதை எல்லாம் யாராவது பேச்சில் பயன்படுத்தி கேட்டு பல வருஷங்கள் ஆகிவிட்டன.

வாசகர்கள் யாராவது இந்த சொல்வடையை கேட்டிருக்கிறீர்களா? கேட்டிருந்தால் கட்டாயமாக மறுமொழி எழுதுங்கள்.

சமீபத்தில் ரா.கி. ரங்கராஜனின் ஒரு புத்தகத்தில் இந்த சொல்வடையை மீண்டும் பார்த்தேன். பற்றாக்குறைக்கு அப்படி என்றால் என்ன என்று ஒரு கேள்வியை வேறு பாத்திரத்தின் வாய்மொழியாக கேட்டிருந்தார், பதில் இல்லாத கேள்வி. அவருக்கே தெரியவில்லை போலும்!

சொன்னால் நம்பமாட்டீர்கள், அடுத்த இரண்டு நாளில் சில்வர் டங் ஸ்ரீனிவாச சாஸ்திரி என்ற ஓரளவு பிரபலமான தலைவரின் ஒரு புத்தகம் அகப்பட்டது. முப்பதுகளில் எழுதப்பட்ட புஸ்தகம் மாதிரி தெரிகிறது. அதில் அவர் இதை விளக்கி இருந்தார். தஞ்சாவூர் வட்டாரத்தில் ஓரளவு பிரபலமான சொல்வடையாம். ரம்மி ஆடும்போது ஒன்றுமே சேராவிட்டால் (ஃபுல் என்று சொல்வோம்) அதை பேஸ்து என்பார்களாம். மூன்று முறை தொடர்ந்து அந்த மாதிரி ஆனால் அதுதான் மூணாம் பேஸ்து!

பிற்சேர்க்கை: வழக்கொழிந்து போன சொல்வடைகள் ஏதாவது நினைவு வந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி


பாலகுமாரனுக்கு ராஜராஜ சோழன், தஞ்சாவூர் பெரிய கோவில் என்றால் ஒரு பித்து உண்டு. உடையார் புத்தகம் வருவதற்கு முன்பே அவரது பல புத்தகங்களில் இது தெரியும்.

அவருடைய தளத்தில் அவர் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டதைப் பற்றி உள்ளம் உருகி ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதைப் பற்றி விவரித்து எல்லாம் நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. அங்கேயே போய் படித்துக் கொள்ளுங்கள்!

பாலகுமாரன் பதிவைப் பார்த்தேன், அடுத்த நாள் இந்த ஹிந்து கட்டுரை கண்ணில் பட்டது. டாக்டர் நாகசாமியின் ஒரு உரையைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

ராஜராஜ சோழன் 407 தளிச்சேரி பெண்டுகளுக்கு (நாட்டியம் ஆடுபவர்கள்) வீடு, நிலம் வழங்கியது, வீட்டின் அட்ரஸ், (ஏறக்குறைய பட்டா) அடுத்த வாரிசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முறை, பாடுபவர்கள், உடுக்கை அடிப்பவர்கள், வீணை வாசிப்பவர்கள், மத்தளம் வாசிப்பவர்கள், சங்கு ஊதுபவர்கள், கணக்கு வழக்கு பார்ப்பவர்கள், துணி வெளுப்பவர்கள், தைப்பவர்கள், எல்லா நடனங்களையும் மேற்பார்வை பார்ப்பவர்கள் அத்தனை விஷயங்களையும் கோவிலில் கல்வெட்டாக செதுக்கி வைத்திருக்கிறாராம். டாக்டர் நாகசாமி இந்த நானூறு தளிச்சேரி பெண்டுகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி அதை முதல்வர் கருணாநிதி வெளியிட்டாராம்.

சுவாரசியமான கட்டுரை, படித்துப் பாருங்கள்!

அப்புறம் தமிழ் ஹிந்து தளத்திலும் ஒரு அற்புதமான கட்டுரை வந்திருக்கிறது. அதே தளிச்சேரி பெண்டுகள், அவர்கள் வாழ்க்கை முறை, என்ன வட்டிக்கு அந்த காலத்தில் பணம் கிடைத்தது என்று பல விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். கட்டாயமாக படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய பதிவுகள்:
பாலகுமாரனின் பதிவு
தஞ்சை பெரிய கோவில் ஓவியங்கள் – ஆர்வியின் பதிவு, ஹிந்து கட்டுரை
இந்திரா காந்தி சென்டரில் எல்லா ஓவியங்களும் (பாதிக்கு மேலான ஓவியங்கள் மங்கிவிட்டிருக்கின்றன. ஆனால் மிச்ச ஓவியங்களை தவறவிடாதீர்கள்.)
பெரிய கோவில் பற்றி ஒரு தளம்

ஹிந்து கட்டுரை
டாக்டர் நாகசாமி

தமிழ் ஹிந்து கட்டுரை

சில நாட்களுக்கு முன் கிரி ட்ரேடிங் கலைவாணி என்பவரைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தோம். கிரி ட்ரேடிங் என்ற புத்தகக் கடையில் பணி புரியும் கலைவாணி என்பவர் சிறு வயதிலேயே ஆன்மிகம், தத்துவம் எல்லாம் பற்றி ஓரளவு அறிந்திருப்பதைக் கண்டு வியப்படைந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணி புரியும் ஒருவர், அவருக்கு பண உதவி செய்வதைப் பற்றி அதில் எழுதப்பட்டிருந்தது.

இப்போது அது நிஜமும் புனைவும் கலந்த ஒரு “செய்தி” என்று தெரிய வந்திருக்கிறது. கலைவாணி என்பவர் உண்மையாக இருப்பவரே; இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரைத் தேடி கிரி ட்ரேடிங்குக்கு சென்ற நண்பர் விருட்சம் இதை உறுதி செய்கிறார். ஆனால் வாஷிங்டன் போஸ்ட் நிருபர் அவரை கண்டு வியந்ததாகவும் அவருக்கு பண உதவி செய்வதாகவும் சொல்லப்பட்டது கற்பனை என்று தெரியவருகிறது.

நண்பர் ஸ்ரீனிவாசின் தளத்தில் இப்படி ஒரு மறுமொழி காணக் கிடைக்கிறது.

BaalHanuman :

Dear Virutcham,

Looks like this Kalaivani story is only party true. The rest of it is fiction it seems.

Here is the note from the original author (Rajah Iyer):

It is partly true,that the girl was found to be extremely intelligent to identify such books..she knows what she is doing..just to bring out that I have added this story of a journalist from Washington post to add a bit of spice..the fact is she is supporting her 5 sisters from this job at Giri Trdrs..tks for your interest..

http://srajahiyer.sulekha.com/blog/post/2008/11/kalaivani-a-short-story.htm

தவறான செய்தியை இந்த தளத்தில் பதித்ததற்கு வருந்துகிறேன்.

இந்த விஷயத்தை தோண்டி உண்மையை கண்டுபிடித்த விருட்சம், மற்றும் ஸ்ரீனிவாசுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

தொடர்புடைய சுட்டி: கிரி ட்ரேடிங் கலைவாணி பற்றிய உண்மையும் புனைவும் கலந்த, ஆனால் உண்மை செய்தி என்று நாங்கள் நம்பி வெளியிட்ட பதிவு
ஸ்ரீனிவாசின் சுட்டி (மறுமொழிகளில் தேட வேண்டும்)

எப்போதுமே சட்டம் வேலை செய்யாத இடங்களைப் பற்றி பெரிதாக கூக்குரல் இடுகிறோம். மாறுதலுக்காக சட்டம் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு கேஸ், நீதிபதி சின்ஹாவைப் பற்றி இந்த பதிவு.

இந்திரா காந்தி 71 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். அது பங்களாதேஷ் போர் முடிந்திருந்த காலம். அவர் வெற்றி பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.

ஆனால் அந்த தேர்தலில் அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ராஜ்நாராயன் அவர் மேல் ஒரு கேஸ் போட்டார். அந்த கேசும் 4 வருஷத்துக்குள் முடிந்துவிட்டது. விசாரித்தவர் ஜஸ்டிஸ் சின்ஹா. நாட்டின் பிரதமருக்கு எதிராக தைரியமாக தீர்ப்பளித்தார் சின்ஹா.

சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் அப்பீல் செய்து இந்திரா காந்தி வென்றார். ஆனால் அதற்குள் அவசர நிலை பிரகடனம் நடந்தது, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெயிலில், பிறகு தேர்தல், இந்திராவின் வீழ்ச்சி, என்று நாட்டின் சரித்திரமே மாறிவிட்டது.

ஜஸ்டிஸ் சின்ஹா இரண்டு வருஷத்துக்கு முன்தான் இறந்திருக்கிறார். யாரும் பெரிதாக கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார் – என் கடமையைத்தான் செய்தேன் என்று தமிழ் சினிமா கிளிஷே ஒன்றை உண்மையாக செய்தவர் அவர்.

அவரைப் பற்றி முன்னாள் அமைச்சர் சத்தியப் பிரகாஷ் மாளவியா இங்கே எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டி: சத்ய பிரகாஷ் மாளவியாவின் அஞ்சலி

எனக்கு கிரிக்கெட் பைத்தியம் உண்டு. இப்போதெல்லாம் எவ்வளவோ குறைந்திருக்கிறது என்று பேர். ஆனாலும் என் மனைவி நாலு நாள் முன்னாள் கேட்டாற்போல கமன்டரியைப் படித்துக் கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு மனக்குறையும் உண்டு. கிரிக்கெட்டைப் பற்றி தமிழில் எழுத வரவில்லை. கிரிக்கெட்டுக்கு ட்ரான்சிஸ்டர் கமெண்டரிதான் ஒரே கதியாக இருந்த ஒரு காலத்தில் (எழுபதுகள்) முதல் முறையாக ஒரு ரஞ்சி விளையாட்டுக்காக தமிழில் கமெண்டரி வைத்தார்கள். தமிழ் நாடும் கர்நாடகமும் சேப்பாக்கத்தில் ஆடிய மாட்ச். இன்னும் சில கமெண்ட்கள் நினைவிருக்கின்றன.

சந்திரசேகர் மிக அபாரமாக மட்டையை சுழற்றினார். ஒரே ஒரு குறை, பந்து பாட்டில் படவில்லை.

பாண்டவர்களுக்கு அர்ஜுனன் போல கர்நாடகத்துக்கு விஸ்வநாத்.

விமல் எழுதிய ஒரு மறுமொழி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விளையாடி tie ஆன ஒரு டெஸ்ட் மேட்சை நல்ல தமிழில் விவரிக்கிறது. எனக்கு அந்த தமிழ் கமெண்டரி கேட்ட நாட்கள் நினைவு வந்தன…

Australia in India Test Series – 1st Test
India v Australia (Match tie
Played at MA Chidambaram Stadium, Chepauk, Madras
18,19,20,21,22 September 1986 (5-day match)

செப்டம்பர் 22ஆம் தேதியான இன்றைய தினத்தில் வரலாற்றில் பலதரப்பட்ட மனிதரகளுக்கும், நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பல நிகழ்ந்திருக்கலாம். ஆனால் கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை 1986ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி மறக்க முடியாத டெஸ்ட் போட்டியாகும்.

இன்று கவாஸ்கர்/பார்டர் கோப்பை என்று இந்திய – ஆஸ்திரேலிய தொடர் பிரபலமடைந்ததற்குக் காரணமான பார்டரும், கவாஸ்கரும் தங்களை எதிர்த்து விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியாகும் இது.

கவாஸ்கர் தொடர்ச்சியாக 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது இந்த டெஸ்ட் போட்டியின் முதற்கண் சாதனையாகும்.

டீன் ஜோன்ஸின் காவியமான இரட்டைச் சதம், வெயில் தாங்க முடியாமல் அவர் சுருண்டு விழுந்தது, கிரெக் மேத்யூஸ் என்ற ஆஸ்ட்ரேலிய ஆஃப் ஸ்பின்னரின் மைதான சேஷ்டைகளும், ஆஸ்திரேலிய வீரர்களிடத்தில் பொதுவாகக் காணப்படாத நட்பான புன்முறுவலும், கபில்தேவின் அபாரமான சதமும், கவாஸ்கரின் வெற்றிக்கான 90 ரன்களும், அனைத்தையும் விட இந்த நாளில் சேப்பாக்கத்தில் 30,000 ரசிகர்கள் களைகட்டியதும் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.

1960-61ஆம் ஆண்டு பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்று இதற்கு முன் ரன் எண்ணிக்கை அளவில் சமன் ஆனது. அது 498-வது டெஸ்ட் போட்டி அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தினத்தில் சென்னையில் டை ஆன டெஸ்ட் போட்டி 1052-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த டெஸ்ட் போட்டியை மறக்க முடியாத டெஸ்ட் போட்டியாக மாற்றியதில் ஆலன் பார்டருக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது. அவர் 4ஆம் நாள் ஸ்கோரான 170/5 என்று டிக்ளேர் செய்து இந்தியாவுக்கு 5ஆம் நாளன்று சவாலான 348 ரன்கள் இலக்கை நிர்ணயித்தார்.

முதலில் டாஸ் வென்ற ஆலன் பார்டர் ஒன்றுக்கும் உதவாத ஆட்டக்களத்தில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். ஆஸ்ட்ரேலிய அணியில் டேவிட் பூன், ஆலன் பார்டர் சதம் எடுக்க, ஆண்ட்ரூ டீன் ஜோன்ஸ் அபாரமான இரட்டைச் சதம் எடுத்தார். ஆனால் உடலில் உள்ள தண்ணீர் வற்றி அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலையாயிற்று.

3ஆம் நாள்தான் ஆஸ்திரேலியா 574/7 என்று டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் ஷிவ்லால் யாதவ் மட்டுமே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்திய அணியில் அப்போது அதிரடி துவக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இவரும் கவாஸ்கரும் களமிறங்கினர். வேடிக்கை என்னவெனில் கவாஸ்கர் 8 ரன்கள் எடுப்பதற்குள் ஸ்ரீகாந்த் அரை சதம் எடுத்து முடித்து விட்டார்.

புரூஸ் ரீட், கிரெய்க் மெக்டர்மாட் அவரிடம் சரியான வாங்கு வாங்கினர். ஸ்ரீகாந்த் 62 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது இந்தியா கவாஸ்கர், அமர்நாத் ஆகியோரையும் இழந்து 65/3 என்று ஃபாலோ ஆனைத் தவிர்க்க போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் அதன் பிறகு அசாருதீன் (50), சாஸ்திரி (62) பண்டிட் (35) என்று ஸ்கோர் 3ஆம் நாள் ஆட்டத்தில் 270/7 என்ற நிலையை எட்டியது. ஆனாலும் ஃபாலோ ஆன் அச்சுறுத்தல் இல்லாமலில்லை. விழுந்த 7 விக்கெட்டுகளில் கிரெக் மேத்யூஸ் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். அவரது பந்து வீச்சும், பீல்டிங்கும் பெரும் அச்சுறுத்தலாயிருந்த சமயம் அது.

கபில்தேவின் அபாரமான கேப்டன் இன்னிங்ஸ்!

4ஆம் நாளின் போது கபில்தேவ் 33 ரன்களுடனும், இவரது சிஷ்யர் சேத்தன் ஷர்மா 14 ரன்களுடனும் களமிறங்கினர்.

சேத்தன் ஷர்மா ஒரு முனையைத் தக்க வைக்க, கபில்தேவின் அதிரடி இன்னிங்ஸை எதிர்பார்த்து அன்று திரண்டிருந்த ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. கபில்தேவ் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடியதோடு அபாரமான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தினார்

ஷர்மாவும் கபிலும் 8-வது விக்கெட்டுக்காக 85 ரன்களைச் சேர்த்தனர். ஷர்மா 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கபில்தேவ் மொத்தம் 21 பவுண்டரிகளை விளாசினார். 50 ரன்களிலிருந்து சதத்தை எட்டும் வரை 11 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குதியாட்டம் போட வைத்தார்.

ஷிவ்லால் யாதவும் 19 ரன்கள் எடுத்து கைகொடுக்க, கபில்தேவ் 138 பந்துகளில் 21 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 119 ரன்கள் எடுத்து கடைசியாக மேத்யூஸிடம் ஆட்டமிழந்தார். இந்தியா 397 ரன்கள் எடுத்திருந்தாலும் 177 ரன்கள் பின் தங்கியிருந்தது.

அபாரமான டிக்ளரேஷன்!

ஆஸ்திரேலியா தன் இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியபோது ஜெஃப் மார்ஷ், ரவி சாஸ்திரியின் 100-வது விக்கெட்டாகச் சாய்ந்தார்.

சற்றே வேகமாக ரன்களைக் குவித்த ஆஸ்திரேலியா 170/5 என்று 4ஆம் நாள் ஆட்ட்டத்தை முடித்தது.

ஒருவருக்கும் தெரியாது 5ஆம் நாளன்று வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிக்கான் புகழ் பெற்ற டிக்ளரேஷன் அப்போது செய்யப்படும் என்று.

ஆனால் மறுநாள் இந்தியா களமிறங்கும்போதுதான் ஆலன் போர்டர் என்ற சவாலான ஆஸ்ட்ரேலிய கேப்டன் நம் கண்களுக்குத் தெரிந்தார். அந்தத் தொடரில் இதற்கு முன்பான இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே டிரா ஆக, இதுவும் அறுவையான டிரா ஆகக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் டெஸ்ட் போட்டிக்கான விறுவிறுப்பைக் கூட்ட பார்டர் டிக்ளேர் செய்தார்.

பார்டர் டிக்ளேர் செய்வாரா மாட்டாரா என்று தெரியாத நிலையிலும் சென்னை சேப்பாக்கத்தில் அன்று 30,000 ரசிகர்கள் திரண்டனர் என்பது அப்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடப்பட்ட விதத்தை எடுத்துரைப்பதாய் அமைந்தது.

வரலாற்று சிறப்பு மிக்க 5ஆம் நாள் ஆட்டம்!

மொத்தம் அன்றைய தினம் 86 ஓவர்கள் மீதமுள்ளன 348 ரன்கள் வெற்றி இலக்கு. அப்போதெல்லாம் ஸ்ரீகாந்த் என்றால் ரசிகர்களுக்குக் கொள்ளைப் பிரியம்.

அவரும் கவாஸ்கரும் இறங்கும் போது மைதானத்தில் ஆரவாரக் கூச்சல் அதிகமானது.

வழக்கம் போல் ஸ்ரீகாந்த், மெக்டர்மாட், புரூஸ் ரீட் ஆகியோரை பொளந்தார். மெக்டர்மாட் 5 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுத்து அதன் பிறகு ஏனோ அவர் வீசவில்லை. 49 பந்துகளில் 6 பவுண்டரிகளூடன் 39 ரன்கள் எடுத்து ஸ்ரீகாந்த் மேத்யூஸ் பந்தில் ஆட்டமிழக்க, அமர்நாத்தும் கவாஸ்கரும் இணைந்து ஸ்கோரை உணவு இடைவேளையின் போது 94 ரன்களுக்கு உயர்த்தினர்.

அமர்நாத்தும் கவாஸ்கரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 103 ரன்களைச் சேர்த்தனர். இருவரது ஆட்டமும் ஒரு கடைசிநாள் சுழற்பந்துகள் திரும்பும் ஆட்டக்களத்தில் எப்படியான கறார் தடுப்பு உத்திகளையும், ஷாட்டிற்கான பந்துகளை தேர்வு செய்வது எப்படி என்பதையும் இளைஞர்களுக்குக் கற்று கொடுக்கும் விதமான ஆட்டமாகும்.

அமர்நாத்தும் 51 ரன்கள் எடுத்து மேத்யூஸிடம் ஆட்டமிழந்தார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 193/2 என்று இருந்தது. இன்னும் 30 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 155 ரன்கள்.

இந்திய அணிக்கு இருக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள் அசார், கபில், ரவி சாஸ்திரி ஆகியோர்தான்.

கவாஸ்கர் 12 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 168 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது இந்தியா 204/3.

அசாருதீனும், சந்த்ரகாந்த் பண்டிட்டும் இணைந்து ஸ்கோரை விறுவிறுவென்று 251 ரன்களுக்கு உயர்த்த, 3 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 42 ரன்கள் எடுத்த அசாருதீன் ரே பிரைட் பந்தில் ஆட்டமிழந்தார் இந்தியா 251/4.

அடுத்துதான் இந்தியாவுக்கு பேரடி. கபில்தேவ் 2 பந்துகளில் 1 ரன்னிற்கு பெவிலியன் திரும்பினார். 253/5. பண்டிட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரவி சாஸ்திரி மேத்யூஸை 2 சிக்சர்கள் அடித்து சென்னை ரசிகர்களை எழுந்து நிற்கவைத்தார். சேத்தன் ஷர்மா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது இந்தியா 331/7 என்று ஆனது. இப்போது டெஸ்ட் போட்டியின் அனைத்து 4 முடிவுகளும் சாத்தியமாயின.

சரியான தருணத்தில் ஷிவ்லால் யாதவ் ஒரு சிக்சரை அடித்து பிறகு ஆட்டமிழந்தார் ஸ்கோர் 344/9 ஆனது.

கடைசி ஓவர் வந்தது மணீந்தர் சிங் களமிறங்கினார். இந்திய வெற்றிக்குத் தேவை 4 ரன்கள்.

கடைசி ஓவரை வீசியவர் கிரெக் மேத்யூஸ், பேட்டிங்கில் ரவி சாஸ்திரி உள்ளார். இவர் எப்படியும் மேத்யூஸ் பந்தை இறங்கி வந்து சிக்சருக்குத் தூக்குவார் என்று பலத்த எதிர்பார்ப்பு, ரசிகர்களின் ஆரவாரக் கூச்சல் எந்த ஒரு வீச்சாளரையும் அச்சுறுத்தும், ஆனால் மேத்யூஸ் அசரவில்லை.

முதலில் இரண்டு ரன்களை எடுத்த சாஸ்திரி, அடுத்த பந்தில் ஆட்டத்தை தோல்வியிலிருந்து காக்கும் முகமாக ஒரு ரன் எடுத்து பெரிய தவறைச் செய்தார்.

மணீந்தர் சிங் பேட்டிங் முனைக்கு வந்து ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்திற்கிடையே மேத்யூஸ் பந்தை எதிர்கொண்டார். பின்னால் சென்று பந்தை கால்காப்பில் வாங்கினார் நடுவர் கையை உயர்த்தினார் ஆட்டம் ஸ்கோர் எண்ணிக்கை அளவில் சமன் ஆனது. அதாவது டை ஆனது.

சாஸ்திரி 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 48 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

நடுவர் தோதிவாலாவா, விக்ரம் ராஜுவா என்று தெரியவில்லை. மணீந்தர் சிங்கிற்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தது தவறான தீர்ப்பு என்று ரவி சாஸ்திரி கடும் வாக்குவாதம் புரிந்தார். கடைசியில் கோபமாக வெளியேறினார்.

இரு அணியினரின் நடத்தை

கடைசி நாளன்று டென்ஷனில் இரு அணியினரின் நடத்தையும் சற்றே மோசமாக இருந்தது. ஆலன் பார்டர் அடிக்கடி நடுவரின் தீர்ப்புகளூக்கு எதிர்ப்பு காட்டி வந்தார். மேத்யூஸ், விக்கெட் கீப்பர் ஜோரர் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் கவனத்தை கலைக்க ரே பிரைட் முயன்றதால் அவர் பிரைட்டை நோக்கி தன் முஷ்டியை உயர்த்தினார். ஜோன்ஸ் இரண்டாவது இன்னின்சில் மணிந்தர் சிங்கிடம் ஆட்டமிழந்தார். ஆனால் மணீந்தர் அவர் ஆட்டமிழந்து செல்லும் போது 40 அடி அவரைத் துரத்திச் சென்று கடும் வசை பாடினார்.

இவ்வளவு சம்பவங்கள் நடந்தாலும் மறக்க முடியாத இந்த செப்டம்பர் 22-ஐ நமக்கு அளித்தது சென்னை சேப்பாக்கம் என்பதை நம் நினைவிலிருந்து அகற்ற முடியாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கிரிக்கெட்

தொடர்புடைய சுட்டிகள்: கிரிகின்ஃபோ தளத்தில் மாட்ச் ஸ்கோர்கார்ட்

விமலின் ஒரு மறுமொழியை இங்கே பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு விமல்!

ஒரு முறை, உடல்நலக் குறைவால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் சோ. அதன் பின், எதனாலோ அவர் தலைமுடி உதிர ஆரம்பித்து, தலை மொட்டை ஆகி விட்டது.

முடி இல்லாத குறையை மறைக்க பம்பாயிலிருந்து ஒருவர் 800 ரூபாய்க்கு விக் செய்து வந்து கொடுத்தார். அதை தலையில் மாட்டி, கண்ணாடி முன் நின்று பார்த்தார் சோ. சுற்றி இருந்தவர்கள், “ரொம்ப இயற்கையாக இருக்கிறது!” என்று பாராட்டினார்கள்.

ஆனாலும், சோ விக்கை கழற்றி எறிந்து விட்டார்.

“என் தலை மொட்டையாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே ! எதற்காக நான் அதை மூடி மறைத்து, ஏமாற்ற வேண்டும் ? உருவத்திற்கும் எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம்? இனி, நான் இப்படியே மொட்டைத் தலையோடுதான் இருப்பேன்” என்று சொல்லி, அப்படியே இருக்க “முடி”(:-)வெடுத்து விட்டார்.

அவர் எண்ணத்திலும் உண்மை இருந்தது. எதற்கு, யாரை , ஏன், ஏமாற்ற வேண்டும் ?

தகவல் விகடனிலிருந்து வந்தது என்று செல்லப்பையன் சுட்டிக் காட்டுகிறார். அவருக்கும், விகடனுக்கும் நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: சோ ராமசாமி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு
சோவின் தைரியம் பற்றி நல்லதந்தி
துக்ளக் பிறந்த கதை, இட்லிவடை தளத்தில் துக்ளக் ஆரம்பித்த கதை பதிவு

அயோத்தியின் சர்ச்சைக்குரிய ராமஜன்மபூமி-பாபரி மசூதியில் அகழ்வாராய்ச்சி நடந்திருக்கிறது. அங்கே ஒரு கோவிலின் மீதே மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இதைப் பற்றிய கட்டுரையை தமிழ் ஹிந்து தளத்தில் காணலாம். எழுதிய டாக்டர் நாகசாமி ஒரு வரலாற்று நிபுணர். அவர் அங்கே கோவில் இருந்திருக்க வேண்டும், அதன் மேல்தான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அப்படித்தான் இருக்க வேண்டும். அவரது integrity சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது.

இந்த முடிவுகளில் உண்மையான முக்கியத்துவம் முஸ்லிம் அமைப்புகள் மேல் இப்போது ஒரு தார்மீக ரீதியில் அழுத்தம் ஏற்படும் என்பதே என்று எனக்கு தோன்றுகிறது. பல முஸ்லிம் அமைப்புகளும் இந்த மசூதி ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டது என்று ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. அப்படி கட்டப்படவில்லை என்பதை ஒரு தர்ம, நியாய ரீதியான அடிப்படையாக அவர்கள் பயன்படுத்தினர். இனி மேல் அது முடியாது என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்றே நான் கருதுகிறேன்.

ஆனால் இந்த முடிவின் சட்ட ரீதியான significance என்ன? நான் வக்கீல் இல்லைதான், ஆனால் இந்த உண்மைக்கு சட்ட ரீதியாக எந்தவிதமான significance-உம் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

ஐநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசு, ஒரு ராஜா அந்த அரசின் சட்ட, நியாய, தர்மப்படி ஒரு கோவிலை இடித்து அங்கே ஒரு மசூதியைக் கட்டினான். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று “ஹிந்துத்துவவாதிகள்” பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அகழ்வாராய்ச்சியும் அவர்கள் தரப்பை மேலும் வலுவாக்குகிறது. அது பாபரின் அரசு eminent domain என்ற கோட்பாட்டை அதன் சட்ட நியாயங்களுக்கு உட்பட்டு கடைப்பிடித்ததால் உருவான ஒரு நிலை. அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னால் இந்தியாவை விட்டு வெளியே போன கோஹினூர் வைரத்தை இனி மேல் ஆங்கிலேய அரசியிடமிருந்து திருப்பி வாங்கமுடியுமா? Statute of Limitations என்று ஒன்று இல்லையா? அந்த “அநீதியை” இன்றைய அரசு சரி செய்ய வேண்டும் என்று வாதிட்டால் சொத்து என்று ஒரு கோட்பாடு உருவாவதற்கு முன்னால் எல்லாம் எல்லாருக்கும் சொந்தம்; இப்போது இருக்கும் சொத்துரிமை அநீதி என்று எல்லாரும் அவர்கள் அவர்கள் பாங்க் கணக்கில் உள்ள பணத்தை அரசிடம் கொடுத்துவிடுவீர்களா? (நான் நிச்சயமாக மாட்டேன்.)

சட்ட ரீதியாக இதைப் பற்றி யாராவது நிபுணர்கள் எழுதினால் என் போன்ற layman-களுக்கு உதவியாக இருக்கும்.

For the record, கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருந்தாலும் கட்டப்படாவிட்டாலும் மசூதி இடிக்கப்பட்டது நியாய, தர்ம, சட்ட ரீதியாக பெரும் அநீதி, குற்றம் என்பது என் உறுதியான கருத்து.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு, வரலாறு

தொடர்புடைய சுட்டிகள்: தமிழ் ஹிந்து தளத்தில் டாக்டர் நாகசாமியின் கட்டுரை

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers