ஒரு காலத்தில் வாரப் பத்திரிகைகளிருந்து எடுத்து பைண்ட் செய்யப்பட பழைய தொடர்கதைகள் பல உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் புழங்கும். எனக்கு அந்த மாதிரி புத்தகங்களை படிக்கும்போது ஒட்டிக் கொண்டு வந்திருக்கும் மிச்ச பக்கங்களை படிப்பது பிடிக்கும். அப்படிதான் நான் சில கோவில் ஓவியங்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் சில்பி என்ற பெயர் தெரியாது. (பெயர் தெரிந்த முதல் ஓவியர் ஜெயராஜ்தான்.) யாரோ வரைந்திருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான். சமீபத்தில் வரலாறு.காம் என்ற தளத்தில் சில்பியை பற்றிய சில கட்டுரைகளைப் பார்த்தபோது பழைய ஞாபகங்கள் வந்தன. அங்கே சில்பியின் வாழ்க்கை, சில்பியின் கோட்டோவியங்கள், சில்பியைப் பற்றி ஒரு அறிமுகம் என்று மூன்று கட்டுரைகளைப் பார்த்தேன்.
(விகடனுக்கும் பசுபதிக்கும் வரலாறு.காம் தளத்துக்கும் நன்றி!) உதாரணத்துக்காக அங்கிருந்து ஒரு ஓவியத்தை இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறேன். அதில் எத்தனை நுணுக்கம்? ஒரு புகைப்படத்தில் கூட இப்படி ஒரு எஃபெக்டை கொண்டு வருவது கஷ்டம். (படத்தை கிளிக்கினால் பெரிய சைஸ் ஓவியம் தெரியும்.)
ராஜன் உபயத்தில் இந்த சிற்பத்தின் புகைப்படமும் கிடைத்திருக்கிறது. இது ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உள்ள ஒரு சிற்பமாம்.
சில்பி விகடனில் பணி புரிந்திருக்கிறார். ஊர் ஊராகப் போய் அங்குள்ள கோவில்களை – கோவில் என்றால் மூலவர் உற்சவர் கோபுரம் மட்டுமில்லை – எந்த மூலை முடுக்கில் அவரை ஒரு சிற்பம் கவர்ந்தாலும் அதை வரைவார். தென்னாட்டு செல்வங்கள் என்று ஒரு தொடர் வந்ததாம். அது பூரா இவர் ஓவியங்கள்தானாம். இங்கே இருக்கும் ஓவியம் கூட அந்த தொடரில் வந்ததுதானாம்.
எனக்கு ஓவியத்தின் கலை நுணுக்கம் எல்லாம் தெரியாது. ஓவியம் பிடித்திருக்கிறது இல்லை என்பது பார்த்த நொடியில் படுவதோடு சரி. அதன் பின்னால் இருப்பது க்யூபிசமா, சர்ரியலிசமா, பாயிண்டிலிசமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் இது பார்ப்பதை அப்படியே பிரதி எடுக்க முயற்சி என்பது தெரிகிறது. என் கண்ணில் சிறந்த ஓவியம், ஆனால் ஓவியக் கலைஞர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. டாக்டர் ருத்ரன் மாதிரி யாராவது என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!
சிற்பியின் ஓவியங்களின் பிரின்ட் எங்காவது இன்னும் கிடைக்கிறதா? இணையத்தில் பார்க்க முடியுமா? “தென்னாட்டு செல்வங்கள்” தொடர் புத்தகமாக கிடைக்கிறதா? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்!

பிற்சேர்க்கை: ஸ்ரீனிவாஸ் இரண்டு ஓவியங்களை அனுப்பி இருக்கிறார். இடது பக்கம் கங்கை கொண்ட சோழபுரம் கோவில். அதற்கு அடுத்தபடி இருப்பது திருவாலங்காடு சிவன் கோவில். அவருக்கு நன்றி!
சில்பியின் பாணி, தரம் போன்றவை என் போன்ற பாமரனுக்கு மட்டும்தான் பிடிக்குமா இல்லை ஓவியர்களும் கலை விமர்சகர்களும் அதை உயர்ந்த ஓவியம் என்று கருதுகிறார்களா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. டாக்டர் ருத்ரன் நல்ல ஓவியர், எனக்குத் தெரிந்த ஒரே ஓவியர். அவரைக் கேட்டேன் – அவர் வார்த்தைகளில்:
சில்பி ஒரு மேதை மட்டுமல்ல, மகான். அப்படி வரைவது வெறும் திறமையாக எனக்குப் படுவதில்லை, அது அருள், வரம்.
சில்பியின் ஓவியங்களை லக்ஷ்மி எனும் விமர்சகரும் பார்வதி கலைக்கூடத்தின் உரிமையாளரும் ஒரு நூலாக்க சில வருடங்களுக்கு முன் முயன்றார்கள். சில்பியின் குடும்பத்தினர் ஒத்துவரவில்லை என்று சொல்லப்பட்டது.
விகடனுக்கு அப்புறம் மணியனின் இதயம் பேசுகிறது இதழில் சில்பி வரைந்து வந்தார். அவற்றுள் காந்திமதியும் அபிராமியும் அற்புதம்.
ரகுவீரதயாள் திருப்பதி ஐயங்கார் என்பவர் “தென்னாட்டு செல்வங்கள்” தொடரின் சில பகுதிகளை தொகுத்திருக்கிறார். ஸ்ரீனிவாஸ் அவற்றுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். இருவருக்கும் நன்றி! இரண்டு பகுதிகள் நெட்டில் கிடைக்கின்றன. முதல் பகுதி தஞ்சாவூர் பெரிய கோவிலைப் பற்றியது. இரண்டாம் பகுதி திரிபுவனம் கோவிலைப் பற்றியது.
தொடர்புடைய பக்கங்கள்:
சில்பி – ஒரு அறிமுகம்
சில்பியின் கோட்டோவியங்கள்
சில்பியின் வாழ்க்கை வரலாறு
வரலாறு.காம் தளம்
தஞ்சாவூர் பெரிய கோவில் – சில்பியின் ஓவியங்கள்
திரிபுவனம் கோவில் சித்திரங்கள்
ஆகஸ்ட் 24, 2010 at 1:04 மு.பகல்
ஏங்க இந்த மாதிரி ஓவியங்களைப் பத்தி கருத்து சொல்ல அவங்க மாதிரி ஆளுங்களைக் கூப்பிடறீங்க?
கண்ணு, மூக்கு, வாய் வயிறு எல்லாமே இடம் மாறி இருக்குன்னு சொல்லுவாங்க. தேவையா!!
ஆகஸ்ட் 24, 2010 at 1:14 மு.பகல்
பசுபதி கூறுகிறார்….
‘சில்பி’யின் படங்கள் நூல் வடிவில் வராதது பற்றிய என் ‘புலம்பல்களை’ச் சில இணையக் குழுக்களில் முன்பு நான் எழுதி இருக்கிறேன் . என்னைப் போன்ற இன்னும் சிலரும் ‘வரலாறு’ ஆசிரியக் குழுவில் இருக்கிறார்கள் என்பது அறிந்து மகிழ்கிறேன்!
(http://groups.google.com/group/yAppulagam -இல்
Pictures இழையில் நான் இட்டிருந்த ஒரு ‘சில்பி’யின் படத்தை ஆசிரியர்
குழு இந்த இதழின் தலையங்கத்தில் …
http://www.varalaaru.com/Default.asp?articleid=441
. . பயன்படுத்தியது குறித்து மகிழ்கிறேன்.
அது … ராமர் சுக்ரீவனை அணைக்கும் ஒரு விசேஷமான சிற்பம்! எனக்கு
நேரம் கிடைக்கும் போது இன்னும் சில ‘சில்பி’யின் படங்களை ‘யாப்புலகம்’ தளத்தில் இட முயல்கிறேன். )
‘வரலாறு’ தலையங்கம் விகடனில் வந்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரைக்
குறித்திருக்கிறது. இதில்தான் ‘சில்பி’யின் பல அமர ஓவியங்கள் வெளிவந்தன. ‘சில்பி’யின்
ஓவியங்களுக்குச் சுருக்கமாக விளக்கங்கள் கொடுத்த கட்டுரைத் தொடர்
ஆசிரியரையும் நாம் மறக்கக் கூடாது! ‘சில்பி’ செய்த பெரிய தொண்டைப் போலவே, இந்த ஆசிரியரும் பிற்காலத்திற்கு ஒரு பெரிய பொக்கிஷம் விட்டுச் சென்றிருக்கிறார்! இவருடைய விளக்கங்களை ஒரு ‘அறிமுகம்’ என்று வைத்துக் கொண்டு, இந்த சிற்பங்களைப் பல கோணங்களில் ஆய்ந்து பல்வேறு ஆய்வுகள், தகவல்கள் சேகரித்து நம் கோயில் சிற்பச் செல்வங்களில் புதைந்து இருக்கும் கலை, இலக்கிய, புராணக்குறிப்புகளைப் பற்றிப் பலரும் பிற்காலத்தில் பல கட்டுரைகள் எழுதலாம். இதற்குத் துணையாகத் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ போன்ற தொடர்கள் நூல்களாக வரவேண்டும்.
( ‘சில்பி’ இதே மாதிரி இன்னும் சில இதழ்களில் . . விகடனை விட்டபிறகு..சில தொடர்களில் வரைந்து பணி செய்திருக்கிறார்; அவையும்
நூல்களாக வெளிவர வேண்டும்.)
‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரை எழுதியவர் பி.ஸ்ரீ. ( தொடர் வரும்போது எழுதியவர் பெயர் வரவில்லை. ) இதை எழுதியவர் ‘தேவன்’ என்று
பிரபல ஓவியர் ‘கோபுலு’ ‘விகடன்’ பவழ விழா மலரில் ஒரு கட்டுரையில்
எழுதவே, இதைப்பற்றிப் பல காலமாக யோசித்துக் கொண்டிருந்த நான் பிரபல
எழுத்தாளர் ‘சாருகேசி’ யைத் தொடர்பு கொண்டதில், அவர் இதை எழுதினவர்
‘தேவன்’ அல்லர்; ‘பி.ஸ்ரீ என்று சொன்னார். பி.ஸ்ரீ யின் பேரனை அறிந்த நண்பர் அனந்தநாராயணன்
தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு கட்டுரைத் தொடரின் ஆசிரியர்
பி.ஸ்ரீ தான் என்று ஊர்ஜிதம் செய்தார்.
மேலும் பிஸ்ரீ -யின் ‘ சித்திர ராமாயணம்’ ( இது ஓவியர் ‘சித்திரலேகா’வின் அருமையான ஓவியங்கள் வந்த இன்னொரு அற்புதத்
தொடர்; ஓர் எடுத்துக் காட்டாக, இத் தொடரில் வந்த தமிழகத்தில் ராம தூதர்கள் ..என்ற ஓர் அத்தியாயத்தை ‘யாப்புலகம்’ தளத்தில் பார்க்கலாம்.
) ‘ தென்னாட்டுச் செல்வங்கள்’ . . இரண்டின் காப்புரிமைகளும் ‘விகட’னிடம் இருக்கின்றன என்றும் பி.ஸ்ரீ -யின் பேரர் ஸ்ரீனிவாசன் (அவரும் அமரராகி விட்டார், இப்போது)
ஊர்ஜிதம் செய்தார்.
இந்த இரண்டு தொடர்களுமே நூல்கள் வடிவில் வரவேண்டிய பொக்கிஷங்கள்.
‘விகடன்’ என் வாழ்நாளில் வெளிக்கொணரும் என்ற நம்பிக்கையை நான் இன்னும் இழக்கவில்லை!
ஆகஸ்ட் 24, 2010 at 5:50 மு.பகல்
ஸ்ரீனிவாஸ், தகவலுக்கு நன்றி!
ஆகஸ்ட் 24, 2010 at 7:00 மு.பகல்
சில்பி ஒரு மேதை மட்டுமல்ல, மகான். அப்படி வரைவது வெறும் திறமையாக எனக்குப் படுவதில்லை, அது அருள், வரம்.
சில்பியின் ஓவியங்களை லக்ஷ்மி எனும் விமர்சகரும் பார்வதி கலைக்கூடத்தின் உரிமையாளரும் ஒரு நூலாக்க சில வருடங்களுக்கு முன் முயன்றார்கள். சில்பியின் குடும்பத்தினர் ஒத்துவரவில்லை என்று சொல்லப்பட்டது.
விகடனுக்கு அப்புறம் மானியனின் இதயம் பேசுகிறது இதழில் சில்பி வரைந்து வந்தார். அவற்றுள் காந்திமதியும் அபிராமியும் அற்புதம்.
ஆகஸ்ட் 24, 2010 at 5:30 பிற்பகல்
ருத்ரன், வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி! சில்பியை நீங்கள் ஒரு மேதையாக கருதுகிறீர்கள் என்பது தெரிந்து இன்னும் சந்தோசம்!
ஸ்ரீனிவாஸ், சுட்டிக்கு நன்றி, அதையும் இப்போது பதிவில் சேர்த்துவிட்டேன்.
ஆகஸ்ட் 24, 2010 at 7:02 மு.பகல்
இப்போதுதான் முதல் பின்னூட்டம் பார்த்தேன். இதற்கு தான் இதுகளோடு வைத்துக் கொள்வதில்லை!
ஆகஸ்ட் 24, 2010 at 7:30 மு.பகல்
சாரி டாக்டர். வேடிக்கையாக சொன்னது- உங்கள் உணர்வுகள் புண்பட்டிருக்குமானால் முழு மனதோடு மன்னிப்பு கேட்கிறேன். சாரி
ஆகஸ்ட் 24, 2010 at 11:09 மு.பகல்
இங்கே இன்னும் சில சில்பி ஓவியங்கள்….
http://rajamragu.spaces.live.com/blog/cns!4809C9EB88545E42!622.entry
ஆகஸ்ட் 25, 2010 at 2:17 மு.பகல்
thankyou thankyou thankyou
ஆகஸ்ட் 25, 2010 at 6:08 பிற்பகல்
ஆர் வி
சில்பி ஓவியர்களுள் ஒரு மாமேதை. அவர் செய்தது வெறும் காப்பிகாட் விஷயம் அல்ல. நமது தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான புராதனமான கோவில்கள் நாத்திக கட்சியினர்களின் தொடர் ஆட்சியினால் அழிந்து விட்டன அல்லது அழிய விடப் பட்டு விட்டன. பல அரிய சிற்பங்கள் எல்லாம் இருந்த விஷயமே பின்னாளில் சில்பி அவர்களின் ஓவியம் மூலமே தெரிய வரும். சிற்பக் கலைகளின் சிறப்புக்களை தன் ஓவியங்கள் மூலமாக பிரபலப் படுத்தியவர் அழியாமல் பதிந்து வைத்தவர் சில்பி.
இதில் நீங்கள் இட்டுள்ள முதல் ஓவியம் ஸ்ரீவைகுண்டம் கோவிலில் நுழையும் பொழுது வலது புறம் உள்ள அழகிய மண்டபத்தின் முகப்பில் அமைந்துள்ள சிற்பங்கள். அந்த மண்டபத்தினுள் பல்வேறு அழகிய யாளிகள் உள்ளன, என் ஆல்பத்தில் காணவும். ஆனால் அந்த மண்டபம் இடியும் நிலையில் உள்ளது. அதன் முகப்பில் அமைந்துள்ள அனுமன் வணங்கும் இராமபிரானின் சிற்பத்தையே சில்பி வரைந்துள்ளார். இதை எனது நவ திருப்பதிகள் ஃபோட்டோ ஆல்பத்தில் காணலாம்
http://picasaweb.google.com/strajan123/NAVATP#5151093743279929906
அழகர் கோவிலில் சிலைகளும் மண்டபங்களும் எப்படி பாழ் பட்டு நிற்கின்றன என்பதை என் அழகர் கோவில் ஆல்பத்தில் காணவும்
http://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#
ஏன் சில்பி காப்பி அடித்தார் என்று கேட்கிறீர்கள். அவர் வரைந்திராவிட்டால் அப்படி ஒரு எழிலான சிற்பம் அங்கிருந்தது என்ற உண்மையே இன்று வெளி வந்திருக்காது ஏனென்றால் இன்று அந்த சிற்பம் அங்கு இல்லை. ஆம். அங்கு அதே அழகுடனும் வடிவத்துடனும் அங்கு இல்லை.
புனருத்தாரனம் செய்கிறேன் பேர்வழி என்று பொடி மணலை அதிக அழுத்தத்தில் சிற்பங்களின் மீது அடித்து நவ திருப்பதியில் உள்ள அனைத்து அழகிய சிற்பங்களையும் மூழியாக்கி விட்டார்கள். வண்டு குடைந்த மம்மிக்கள் போல இப்பொழுது அவை காட்சியளிக்கின்றன. இப்படிப் பட்ட அனுகூலச் சத்ருக்கள் மண் கொண்டு சிற்பங்களைத் துளை போட்டு விடுவார்கள் என்று எதிர்பார்த்தே சில்பி பதிந்து வைத்து விட்டுப் போயிருக்கிறார், இந்த சிற்பம் இப்படி இருந்தது பாருங்கள் என்று. அவர் நம் கலைகளை ஓவியங்களில் பதிந்த ஒரு அற்புதமான கலைப் பதிவாளர்.
இதை நான் முன்பு ராயர் காப்பி கிளப்பில் வெளியிட்டிருந்த பொழுது கனடா பேராசிரியர் பசுபதி அவர்கள் இந்த ஓவியங்களின் ஸ்கேண்டு காப்பியை எனக்கு அனுப்பியிருந்தார். கல்கி தீபாவளி மலரில் இடம் பெற்றிருந்த ஓவியங்கள் என்று குறிப்பிட்டிருந்ததாக நினைவு. பி ஸ்ரீ அவர்களின் சித்திர ராமயணம் ஏனோ மறு பதிப்புக் காணவில்லை. செம்மொழி மாநாட்டில் கம்பருக்கே இடம் இல்லாத பொழுது பி ஸ்ரீ ஆச்சார்யாருக்கா இடம் இருக்கப் போகிறது? கனி மொழிகளின், கவிதாயினி கயல் விழிகளின் கவிதைகளை ஆராய்ச்சி செய்ய்யவே செம்மறி மாநாடு போதவில்லை எங்கே போய் சில்பியின் படைப்புக்களையும் சித்திர ராமாயணத்தையும் மறுபதிப்புச் செய்யப் போகிறார்கள்? பி ஸ்ரீ அவர்களின் கொள்ளுப் பேரன் சுதாங்கன் போன்றோர் யாரிடம் இருக்கிறது என்று கண்டு பிடித்து அனுமதி பெற்றுக் கொடுத்தால் கிழக்கு போன்ற பதிப்பாளர்கள் மீள் பதிப்புச் செய்வார்கள். அரசை நம்பியோ நமீதாவையே நம்பி வாழும் விகடனை நம்பியோ பலனில்லை. வரலாறு டாட் காம் போன்ற தளங்கள் சில்பி போன்றவர்களை நினைவு கொள்வதே பெரும் ஆறுதல் தருகிறது.
அன்புடன்
ராஜன்
ஆகஸ்ட் 25, 2010 at 7:55 பிற்பகல்
ராஜன்,
அந்த ஒரிஜினல் சிற்பத்தின் புகைப்படத்தை நான் பதிக்கலாம் என்று இருக்கிறேன், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே? மிக அழகான புகைப்பட தொகுப்புகள். இந்த சிற்பங்கள் அழிந்து கொண்டே போவது பெரிய துரதிருஷ்டம். மதுரையில் ஒரு பெரிய சிலை (வீரபத்திரன்?) உண்டு. அது நான் பார்க்கும்போதே வெண்ணை அடித்து மூடிவிட்டார்கள். சுசீந்திரம் கோவில் அனுமாரும் அந்த வழியில்தான் போய்க்கொண்டிருக்கிறார்.
// அவர் செய்தது வெறும் காப்பிகாட் விஷயம் அல்ல. // நான் பார்த்த எல்லா கோவில் சித்திரங்களிலும் அவர் பார்த்ததை பிரதி எடுக்கத்தான் முயன்றிருக்கிறார். பிரதி எடுப்பதும் என் கண்ணில் நல்ல ஓவியமே. நார்மன் ராக்வெல் இங்கே கொண்டாடப்படுவதில்லையா? ஆனால் ஓவியக்கலை நிபுணர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தேர்ந்து கொள்ள முயற்சி.
// ஏன் சில்பி காப்பி அடித்தார் என்று கேட்கிறீர்கள். // நான் கேட்கவில்லையே?
ஆகஸ்ட் 25, 2010 at 10:34 பிற்பகல்
தாராளமாக நான் பொதுவில் போட்டிருக்கும் ஃபோட்டோக்கள் எதையும் பயன் படுத்திக் கொள்ளலாம், ஆட்சேபணையே இல்லை. என் படத்தைப் போட்டால் மட்டுமே ஆட்சேபணை
). போட்டுக் கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜன்
ஆகஸ்ட் 25, 2010 at 7:55 பிற்பகல்
சில்பி அவர்கள் படம் வரைவதை ஒரு தவமாக வைத்திருந்தவர். கடுமையான ஆசார அனுஷ்டானங்களும், நியம நிஷ்டைகளும் அவருக்கு உண்டு. பயங்கரமான கோபக்காரர் வேறு! படங்கள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று தன்னை வருத்திக் கொள்ளலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது.
(சில்பியைப் பற்றி அவரது சீடர் ஓவியர் பத்மவாசன் ‘ஜெயித்த கதை’ புத்தகத்தில் — தொகுப்பாசிரியர் – ஔரங்கசீப்)
ஆகஸ்ட் 25, 2010 at 8:01 பிற்பகல்
சில்பியைப் பற்றி அவரது சீடர் ஓவியர் பத்மவாசன் மேலும் கூறுகிறார்….
நான் வந்த நேரம் சில்பி கொல்லூருக்குச் செல்வதற்கிருந்தார். இளையராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க கொல்லூர் மூகாம்பிகையை வரையும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்.
துரதிருஷ்டவசமாக அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்துவிட்டது.
ஆகஸ்ட் 25, 2010 at 10:44 பிற்பகல்
தகவல்களுக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!
பெப்ரவரி 10, 2011 at 3:20 மு.பகல்
[...] பத்திரிகை ஓவியர்கள் கோபுலுவும் சிற்பியும் என்று சொன்னார். நார்மன் [...]