இந்த புத்தகத்தைப் பற்றிய அறிமுகத்தை இங்கே படித்தேன். தமிழ்மகன் என்பவர் எழுதி இருக்கிறார். எழுத்தாளர், சினிமா, டிவிக்கும் எழுதியவர் போலிருக்கிறது.
என் சிறுவயதில் வெட்டுப்புலி தீப்பெட்டி இல்லாத வீடே தமிழ்நாட்டில் எங்கும் இருந்திருக்காது. அதுதான் நன்றாக பற்றிக் கொள்ளும் என்றெல்லாம் சொல்வது நினைவிருக்கிறது. அது என்ன யாரோ புலியை வெட்டப் போகிறானே என்றெல்லாம் ஒரு யோசனையும் தோன்றியதில்லை. தமிழ் மகனுக்கு தோன்றி இருக்கிறது. அது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஓவியம் என்று ஒரு premise வைத்துக் கொள்கிறார். இவர் கதையின் ஹீரோக்கள் யார் அந்த வீரன் என்று விவரம் சேகரிக்க செல்கிறார்கள். அதை வைத்து ஒரு நூறு வருஷமாக தமிழகத்தில் நடப்பதை எழுதி இருக்கிறாராம். அறிமுகம் படிக்க தூண்டுகிறது.
எனக்கு புத்தகங்களை புரட்டிப் பார்த்து வாங்கினால்தான் திருப்தி. இங்கே சிலிகான் வாலி மக்கள் யாரிடமாவது இருந்தால் இரவல் கொடுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு
தொடர்புடைய சுட்டிகள்: வெட்டுப்புலி புத்தக அறிமுகம்
ஜூலை 30, 2010 at 6:34 பிற்பகல்
அன்புள்ள ஆர். வி,
சமீபத்தில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இந்தப் புத்தகம் பற்றிய திரு. கிருஷ்ண பிரபு அவர்களின் விமர்சனம்:
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
ஆசிரியர் : தமிழ்மகன்
விலை : 220/- ரூபாய்
2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ‘வெட்டுப்புலி’ நாவல் வெளியீட்டு விழாவிற்கு நேரில் சென்றிருந்தேன். அப்பொழுதே “நம்ம ஊரைச் சுற்றி நடக்கும் கதைதான்… வாசித்துப் பாருங்கள்” என்று தமிழ்மகன் என்னிடம் சொல்லி இருந்தார். புத்தக அட்டையைப் பார்த்த பொழுது என்னுடைய சிறுவயது விளையாட்டுகள் ஞாபகம் வந்தது.
கிராமங்களில் பனமட்டைகள், உடைந்த வளையல்கள், உபயோகமில்லாத சைக்கிள் டயர், கில்லி, கோலி, பம்பரம், சிகரெட் அட்டைகள், தீப்பெட்டிகளின் முன் அட்டைகள் என பல விஷயங்களை சேகரித்து விளையாட்டுப் பொருளாக்குவோம். அப்படி விளையாடுவதற்காக தீப்பெட்டியின் விதவிதமான அட்டைகளை சிறுவயதில் சேகரித்த அனுபவம் உண்டு. கற்களை வைத்து உருட்டி விளையாடும் விளையாட்டிற்கு (சிசர்ஸ்) தீப்பெட்டிகளின் அட்டைகளும், சிகரெட் அட்டைகளும் தான் ஆதாரம். அதில் பாய்ந்து வரும் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்கு எத்தனிக்கும் ஒருவனின் படமும் இருக்கும். ஒருமுறையேனும் அந்த அட்டைப் பட வடிவமைப்பிற்கான காரணங்களை யோசித்ததில்லை. பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் தமிழ்மகன் அதற்கான தேடலைத் தன் புனைவின் மூலம் அணுகியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து விடுமுறையைக் கழிக்க தமிழ்ச்செலவன் சென்னைக்கு வருகிறான். Cheeta Match Box-ன் முன் அட்டையிலுள்ள சிறுத்தைப் புலியை வெட்டும் நபர் அவனுடைய தாத்தா சின்னா ரெட்டி தான் என்று பாட்டியின் கதை மூலம் தெரிந்து கொண்டதை உறுதிப்படுத்த நண்பர்களுடன் சொந்த ஊரான ஜகநாத புறத்திற்குப் பயணமாகிறான். அங்கிருந்து புழல், காரனோடை, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், சோழவரம், பூந்தமல்லி, பொன்னேரி, சென்னை என பல இடங்களுக்குச் சென்று சின்னா ரெட்டியின் தகவலைச் சேகரிக்கிறார்கள். ஒரு ஊரில் சின்னாரெட்டி சிறுத்தையை வென்ற கதை கூறுகிறார்கள் என்றால் இன்னொரு ஊரிலோ சிறுத்தையால் தாக்கப்பட்டு சின்னாரெட்டி இறந்து போனதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு முரண்பட்ட தகவல்களுக்கு இடையில் உண்மையைத் தேடி அலைகிறார்கள்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, சின்னா ரெட்டியைத் தேடிச்சென்ற பயணம் ஆங்கிலேயர் ஆட்சி, ஜமிந்தார் ஆட்சி முறை, காங்கிரஸின் நிலைப்பாடு, நீதிக்கட்சி, சுதந்திர இந்தியா, திராவிடக் கழகங்களின் தோற்றம் (திக – திமுக – அதிமுக), சினிமா என்ற மாய ஊடகத்தின் வளர்ச்சி என்ற பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. முப்பதுகளின் தொடக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்கள் வரை நாவல் விரிவதால் ஈ வெ ரா, எம் எஸ் சுப்புலட்சுமி முதல் இளையராஜா, ரஜினி, கனிமொழி, அழகிரி வரை பல பிரபலங்கள் பாமரர்களின் சாதாரண உரையாடல்களில் வந்து செல்கிறார்கள்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்த பயணம் முப்பதுகளுக்குத் தாவி அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சமீப காலங்களுக்கு நகர்கிறது. வெவ்வேறு காலக்கட்டங்களில் நாவல் பயணிப்பதால், அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மக்களின் பழக்க வழக்கமும், மனோபாவங்களும் நுண்மையாக சித்தரிக்க வேண்டிய அவசியம் படைப்பாளிக்கு இருக்கிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கால சமுதாய மாற்றத்தை நாவலில் கொண்டுவரும் பொழுது ஏகப்பட்ட தகவல்களைத் திரட்ட வேண்டியதிருக்கும். அதனைத் தமிழ்மகன் சிறப்பாக செய்திருக்கிறார். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை சித்தரிப்பதற்கு அவர் திரட்டிய தகவல்கள் மெச்சப்பட வேண்டிய ஒன்று. ஏராளமான வரலாற்று மற்றும் பிரபலங்களின் தகவல்களை நாவலில் சொல்லியிருந்தாலும் எதுவுமே நாவலின் வேகத்தைக் குறைக்கவில்லை.
சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட பொழுது ஏராளமான கிராமங்கள் மூழ்கியிருக்கிறது. வீட்டை இழந்த கிராம மக்களே அதற்கான கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள். நாவலில் இதனைப் படிக்கும்பொழுது அதிர்ச்சியாக இருந்தது.
நாம் வாழும் வாழ்க்கை யதார்த்தமானது என்று நினைத்தாலும், அரசியல் மற்றும் சினிமாவின் தாக்கம் மூர்கமாக நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இவையிரண்டும் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் சமூகத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. அந்த வகையில் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் சமுதாய மற்றும் மனித மாற்றத்தை பதிவு செய்துள்ள முக்கியமான படைப்பாக வெட்டுப் புலியை எடுத்துக் கொள்ளலாம்.
சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் எழுதியவர்கள் புறநகர்ப் பகுதிகளில் வாழும் அல்லது வாழ்ந்து மடிந்த யாரையும் தனது படைப்புகளில் முழுமையாகக் கொண்டு எழுதியதில்லை. தமிழ்மகன் அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேலும் பல படைப்புகள் சென்னைப் புறநகர் சார்ந்து வருமெனில் அது தமிழ் மகனுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்.
ஜூலை 30, 2010 at 6:37 பிற்பகல்
இந்தப் புத்தகம் பற்றிய மற்றொரு (யுவ கிருஷ்ணா) விமர்சனம்:
http://www.luckylookonline.com/2010/06/blog-post_14.html
ஜூலை 30, 2010 at 10:18 பிற்பகல்
நன்றி, ஸ்ரீனிவாஸ், உங்களிடமிருந்தே இரவல் வாங்கிக் கொள்கிறேன்!
ஜூலை 31, 2010 at 5:45 மு.பகல்
Any time, RV.
You are most welcome!!
ஜூலை 31, 2010 at 12:16 மு.பகல்
தமிழ்மகன் தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணிபுரிபவர் என்று கல்கியில் படித்தேன்.
வழிப்போக்கன்
ஜூலை 31, 2010 at 12:34 மு.பகல்
தமிழ்மகன் சென்னையில் 1964- ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ். நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது “வெள்ளை நிறத்தில் ஒரு காதல்” நாவல் முதல் பரிசு பெற்றது. 1996- ல் “மானுடப் பண்ணை” என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது.
சுஜாதா அறிவியல் புனைகதை போட்டியில் இவருடைய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. ‘சொல்லித் தந்த பூமி’ (1997), “ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம” (2007) ஆகிய நாவல்களும் “எட்டாயிரம் தலைமுறை” (2008), “சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்” (2006) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
ஜூலை 31, 2010 at 6:02 பிற்பகல்
வெட்டுப்புலி – சொல்வனம் விமர்சனம்
http://solvanam.com/?p=8178
ஆகஸ்ட் 1, 2010 at 2:23 மு.பகல்
தமிழ் மகன் பற்றிய விவரங்களுக்கு நன்றி, கிருஷ்ணமூர்த்தி/ஸ்ரீனிவாஸ்!
வெட்டுப்புலி விமர்சன சுட்டிக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!