இது ஒரு தொடர் பதிவு. சுப்ரமணிய சாமியை சந்தித்த அனுபவத்தைப் பற்றி இங்கே; அவருடன் சிதம்பரம் கோவிலைப் பற்றி விவாதித்தது இங்கே.
எனக்கு சாமியின் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி இப்போதும் அதிகமாகத் தெரியாது. அவரை சந்திப்பதற்கு முன்னால் கொஞ்சம் கூடத் தெரியாது. அவரைப் பற்றி எனக்கு இருந்த பிம்பம் மிகவும் சிம்பிள் – தடாலடியாக ஏதாவது ஸ்டேட்மென்ட் விட்டுக்கொண்டே இருக்கும் ஒரு ஜோக்கர். அவரை சீரியஸாக எடுத்துக் கொள்வதோ, அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி தெரிந்து கொள்வதோ நேர விரயம்.
அவர் ஒரு ஹிந்துத்வவாதி, அதுவும் பா.ஜ.க.வின் ஹிந்துத்வம் போதவில்லை என்று நினைப்பவர் என்று இங்கேதான் தெரிந்துகொண்டேன். நான் பார்த்த, பழகிய வரையில் ஹிந்துத்வா பேசுபவர்கள் அனைவருக்கும் நம் நாட்டில் பரவலாக இருக்கும் போலி மதசார்பின்மையைப் – ராமன் எந்த காலேஜில் எஞ்சினியரிங் படித்தார் என்று கேட்டுவிட்டு ரம்ஜான் கஞ்சி குடிப்பது மாதிரி – பார்த்தால் பற்றிக் கொண்டு வருகிறது. (எனக்கும் அப்படித்தான்.) நிறைய பேருக்கு முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும், எதையாவது சாக்காக வைத்து அவர்களை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும், ரொம்ப துள்ளுகிறார்கள் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. தீவிரமாக இயங்கும் சிலர் சிறுபான்மையினர் என்ற போர்வைக்குள் முஸ்லிம்கள்/கிருஸ்துவர்கள் ஏமாற்று மத மாற்றம், ஃபத்வா என்ற விஷயங்களை கூர்ந்து கவனித்து கூச்சல் போடுகிறார்கள். (இன்னும் சிலர் பேட்டை ரவுடிகள்.) சாமி தீவிரமாக இயங்குபவர். அவர் கையில் எடுத்திருப்பது சட்டத்தை. எங்கெல்லாம் (அவர் கண்ணில்) இந்த சிறுபான்மையினர் என்ற கவசத்தை வைத்து “அநியாயம்” நடக்கிறதோ அங்கெல்லாம் கேஸ் போட முயல்கிறார். (மேல் விஷாரம் என்று ஒரு உதாரணம் சொன்னார், இதைப் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!)
சாமியின் பலம் அறிவு கூர்மை; அதிகாரிகளுடன் தொடர்பு; பயம் இன்மை. அவருக்கு எங்கிருந்தெல்லாமோ தகவல் வருகிறது. தி.மு.க. அமைச்சர் பூங்கோதை ஒரு அதிகாரியிடம் என் உறவினர் லஞ்சம் வாங்கிய விஷயத்தை கண்டுகொள்ளாதீர்கள் என்றால் அவருக்கு அந்த செல் ஃபோன் டேப் கிடைக்கிறது. சோனியா காந்தி கேம்ப்ரிட்ஜில் படித்தேன் என்று தன் தேர்தல் மனுவில் அஃபிடவிட் தாக்கல் செய்தால் அவருக்கு சோனியா அந்தப் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை என்று கேம்ப்ரிட்ஜில் இருந்தே தகவல் வருகிறது. மிட்ரோகின் என்ற கேஜிபி அதிகாரி சோனியா/ராஜீவுக்கு கேஜிபி பணம் தந்தது என்று எழுதினால் அந்த ஆவணங்கள் இவர் கண்ணில் மட்டும் எப்படியோ பட்டுவிடுகின்றன. இவருக்கு அவற்றை சட்டத்தின் முன்னும், ஊடகங்களிலும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நல்ல வியூகம் வகுக்க முடிகிறது. யாருக்கும் பயப்படுவதில்லை.
அவரது பலவீனம் மக்கள் ஆதரவு இல்லாதது; ஊடகங்களில் தன் பேர் அடிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் அவரை யாரும் நினைவு வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்ற நிலை; அவர் போடும் கேஸ்களில் அரசு போடும் முட்டுக்கட்டை. அவர் நடத்துவது லெட்டர்பாட் கட்சி. இன்றைய இந்திய ஜனநாயக அமைப்பில் அவரால் ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியுமா என்பது சந்தேகமே. எந்தக் கட்சியாவது அவர் மேல் பரிதாபப்பட்டு கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அவர் பாடு அம்போதான். ஊடகங்களுக்கு வேண்டியது சென்சேஷன். அதற்கு இவர் ஏதாவது தடாலடி ஸ்டேட்மென்ட் விட்டால்தான் சரிப்படும். அந்த மாதிரி ஸ்டேட்மென்ட்கள் அவருக்கு ஒரு ஜோக்கர் இமேஜையே கொடுக்கிறது. என்னதான் கேஸ் போட்டாலும் அவரால் யாரையும் வீழ்த்த முடியவில்லை. சோனியா காந்தி மாதிரி பொய் அஃபிடவிட் கேசில் கூட ஒன்றும் செய்யமுடியவில்லை.
மூன்று விஷயங்களில் அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். ஒன்று சிதம்பரம் கோவில். அதைப் பற்றி இங்கே விலாவாரியாக எழுதி இருக்கிறேன். அவர் தீட்சிதர்களுக்காக போராடுவதற்கு உண்மையான காரணம் எதிரியின் எதிரி என்பதுதான் என்று நினைக்கிறேன். கலைஞர் அரசு செய்ய விரும்பும் விஷயத்துக்கு முட்டுக்கட்டை போடுவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல!
இரண்டாவது இலங்கைத் தமிழர்கள். நிச்சயமாக அவர் புலிகளை எதிர்க்கிறார். (நானும்தான்.) அவர் சீனா இலங்கையில் நுழைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று சில பாயிண்ட்களை முன் வைத்தார். அவருடைய கருத்தில் புலிகளின் வளர்ச்சி இந்தியாவுக்கு ஆபத்து, அதனால் தமிழர்களின் உணர்ச்சிகளைப் பதிவு செய்துகொள்ளுங்கள், ஆனால் இந்தியாவின் strategic தேவைகள் என்ன என்பதை வைத்தே முடிவுகளை எடுக்க வேண்டும். என் கருத்தில் இந்தியாவின் strategic தேவைகளை விட genocide நடக்காமல் தவிர்த்திருக்க வேண்டியதுதான் முக்கியம். புலிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக ராஜபக்ஷே genocide நடந்தால் நடக்கட்டும் என்றுதான் இருந்தார். அவரோடு புலிகளைப் பற்றி எனக்கு இசைவான கருத்து இருந்தாலும் போன வருஷம் இந்திய அரசு கொஞ்சம் மும்முரமாக செயல்பட்டு சேதாரத்தை குறைத்திருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். அவரும் போன வருஷம் இந்திய அரசு மும்முரமாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார், ஆனால் அவர் விரும்பிய மும்முரம் புலிகளை ஒழித்துக் கட்டுவதில்! நாங்கள் இருவரும் முழுதாக இசைவது இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி. இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர் நலனைக் காக்க வேண்டும், மன்மோகன் அரசு இதில் வீக்காக இருக்கிறது என்றுதான் அவரும் சொல்கிறார்.
மூன்றாவது குஜராத் கலவரங்கள். அவர் வெளிப்படையாக சொன்னார் – அரசு நினைத்திருந்தால் இதை தடுத்திருக்க முடியும் என்று. தானும் ஒரு மந்திரியாக இருந்தவன், அரசு எந்திரம் பற்றி தெரிந்தவன், குஜராத் அரசு இதை எதிர்ப்பார்த்திருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும், தடுத்திருக்க முடியும் என்று சொன்னார். அப்படி சொல்லிவிட்டு 84 டெல்லி கலவரம் என்று ஆரம்பித்துவிட்டார். 84 டெல்லி கலவரத்தை கண்டியுங்கள், அதை வைத்து வேறு கலவரங்களை நியாயப்படுத்தாதீர்கள். இந்த சின்ன விஷயம் இவருக்கு புரியாமல் இருக்காது, இருந்தாலும் சப்பைக்கட்டு கட்டுகிறார்.
இந்திய-சீன பொருளாதாரம், வளர்ச்சி ஆகியவற்றில் நிபுணர் என்று கேள்வி. மூன்றாவதாகவும் ஒரு இடத்தில் இதைப் பற்றி பேசினாராம். என்னால் போக முடியவில்லை. போனவர்கள் பேச்சு நன்றாக இருந்தது என்று சொன்னார்கள்.
அவருடைய பல நிலைப்பாடுகளை நான் நிராகரிக்கிறேன். ஆனால் அவர் ஜோக்கர் இல்லை. நம் சிஸ்டத்தை மாற்றப் போராடுகிறார். சட்டம் மட்டுமே அவரிடம் இருக்கும் ஆயுதம். அதை திறமையாக பயன்படுத்துகிறார். அவரால் இதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் சோகம். சுருக்கமாக சொன்னால், நம் அரசியல், ஜனநாயக, கட்சி அமைப்பால் அமுக்கப்பட்ட திறமையாளர்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்
தொடர்புடைய பக்கங்கள்:
சுப்ரமணிய சாமியை சந்தித்தேன்
சாமியுடன் சிதம்பரம் கோவில் பற்றி ஒரு விவாதம்
சாமி என்னதான் செய்திருக்கிறார்?
சாமியின் தடாலடி ஸ்டேட்மென்ட்களை கிண்டல் அடித்து எழுதிய ஒரு பதிவு
சாமியின் லெட்டர் பாட் கட்சி நிலையை கிண்டல் அடித்து எழுதிய ஒரு பதிவு
ஜூலை 7, 2010 at 1:34 மு.பகல்
துல்லியமாக எடை போட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
நான் சென்னையில்தான் இருக்கிறேன். இங்கே சுவாமியின் பேச்சினைக் கேட்டதில்லை. ஆனால் அமெரிக்காவில் பாஸ்டன் அருகே உள்ள ஆக்டன் என்ற சிற்றூரில் அவர் நிகழ்த்திய உரையைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது.
சுவாமி மிகச் சிறந்த அறிவுஜீவி. அப்பழுக்கற்ற அரசியல்வாதி. Maverick என்று சொல்லலாம்தான்.
நமது தேசம் பல திறமைசாலிகளைப் புறக்கணித்து விட்டது; புறக்கணித்தும் வருகிறது.
புறக்கணிக்கப்படும் திறமைசாலிகளில் சுவாமியும் ஒருவர்.
உங்கள் கணிப்புடன் நான் உடன்படுகிறேன்.
ஜூலை 7, 2010 at 1:42 மு.பகல்
//இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து….//
குட்டையை குழப்பாமல் இருந்தால் போதும், நன்றி.
//அவர் சீனா இலங்கையில் நுழைவது…//
அப்போ, சீனா இன்னும் இலங்கைக்குள் நுழையவேயில்லையா?
ஜூலை 7, 2010 at 2:52 மு.பகல்
ரதி, ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி! எப்படி இருக்கிறீர்கள்?
கிருஷ்ணமூர்த்தி, மறுமொழிக்கு நன்றி!
ஜூலை 7, 2010 at 1:49 பிற்பகல்
நான் நலம், RV. நன்றி. ரொம்ப நாட்கள் கழித்து நீங்களும் இப்போது தானே ஈழத்தமிழர்கள் பற்றி நாலு வரிகள் எழுதியிருக்கிறீர்கள்.
அதனால் தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுகிறேன். மறுபடியும் சுவாமியை சந்தித்தால் எங்கள் அறச்சீற்றம் பற்றி மறக்காமல் சொல்லுங்கள்.
“கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்
துணியதனை இழந்ததாலே துரோபதி சபதம் நியாயம்
தனதுமண் இழந்ததாலே தருமனின் யுத்தம் நியாயம்
அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் நியாயம் ! நியாயம் !”
நான் அண்மையில் படித்த கவிதையின் நாலு வரிகள்.
ஜூலை 7, 2010 at 7:24 மு.பகல்
மிக அழகாக அவரைப் படம் பிடித்திருக்கிறீர்கள்
//இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர் நலனைக் காக்க வேண்டும், மன்மோகன் அரசு இதில் வீக்காக இருக்கிறது என்றுதான் அவரும் சொல்கிறார்//
//போன வருஷம் இந்திய அரசு கொஞ்சம் மும்முரமாக செயல்பட்டு சேதாரத்தை குறைத்திருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.//
நடுநிலைத் தமிழர்களின் எண்ணம் இதே தான் என நினைக்கிறேன்
ஜூலை 7, 2010 at 3:24 பிற்பகல்
அருமை! பல திறமையுள்ள, பல மனிதர்களை இழந்தது போல இவரையும் இந்தியா இழந்து விடக் கூடாது!
ஜூலை 7, 2010 at 8:15 பிற்பகல்
ரதி, வினவு தளத்தை மறந்த பிறகு உங்கள் பதிவுகளை படிக்க முடியாமல் போய்விட்டது. எப்போது எழுதுகிறீர்கள் என்று தெரிந்தால் படித்துவிடலாம். சரி ஒரு நாள் தேடிப் படிக்கிறேன். இன்னும் அங்கே எழுதுகிறீர்களா? அடிக்கடி இந்த பக்கமும் வந்து போங்கள்!
விஞ்ஞானி, snkm, மறுமொழிக்கும் பாராட்டுக்கும் நன்றி!