கொஞ்ச நாளாக எழுத முடியாத சூழ்நிலை. மன்னிக்க வேண்டும். கூடிய சீக்கிரம் எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்…
மே 2010
மே 30, 2010
மே 18, 2010
ஆனந்த்-டொபலோவ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – சில எண்ணங்கள்
Posted by RV under Chess | குறிச்சொற்கள்: 2010 World chess championship, Leven aronian, Magnus carlsen, Vesselin topalov, Viswanathan anand |[6] Comments
- என்றைக்கு சோவியத் யூனியன் உடைந்ததோ அன்றே செஸ்சுக்கு ஸ்பான்சர்ஷிப் திண்டாட்டம்தான். இன்று செஸ் போட்டிகளில் பணம் என்பது செஸ்சில் ஆர்வம் உள்ள தனி மனிதர்கள் (கால்மிகியா நாட்டு அதிபர் இல்யும்ஜிநோவ்), அவர்கள் நடத்தும் நிறுவனங்கள், செஸ்சை கம்ப்யூட்டர்களின் processing power-ஐ விளம்பரப்படுத்தும் ஒரு கருவியாக பயன்படுத்தும் இன்டல் போன்ற நிறுவனங்கள் இவைதான் செஸ்சில் பணத்தைப் போடுகின்றன. செஸ் ஒரு டிவி நிகழ்ச்சி இல்லை. நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்ய மோடிவேஷன் குறைவு. இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஸ்பான்சர் செய்ய பல்கேரியா தவிர யாருமே முன் வரவில்லை. பல்கேரியாவும் டொபலோவ் விளையாடாவிட்டால் ஸ்பான்சர் செய்திருக்காது. இந்த விளையாட்டு தழைக்குமா?
- பொதுவாக இன்றைய செஸ் வீரர்களுக்கு செஸ் மட்டும்தான் தெரியும். செஸ்சை எப்படி மேலும் சுவாரசியமாக ஆக்குவது என்றெல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. டொபலோவ், ஷிரோவ் போன்றவர்களின் aggressive விளையாட்டு முறை அவர்களின் பாணி மட்டுமே, அது பார்ப்பவர்களை கவர ஏற்பட்டதில்லை. (எல்லாருக்கும் சேவாக் ஆடுவதைப் பார்க்க பிடிக்கிறது, ஆனால் சேவாக் அப்படி ஆடுவது அவரது பாணி, அவ்வளவுதான்.) ஐந்து நாள் கிரிக்கெட் இன்று ட்வென்டி-ட்வென்டி ஆக மாறி இருப்பது போல செஸ் மாறுமா?
- ஆனந்த் வருவதற்கு முன் செஸ் ஒரு career என்று இந்தியாவில் யாரும் நினைத்ததில்லை. இன்று நிறைய பேர் வந்திருக்கிறார்கள். சசிகிரண், கங்குலி, கொனேரு ஹம்பி மாதிரி. அடுத்த ஜெனரேஷன் செஸ்சுக்கு வருமா?
- கிராண்ட்மாஸ்டர்கள் விளையாடும்போது பல முறை பத்து இருபது மூவ் ஆடிவிட்டு சமநிலையில் இருப்பார்கள். ஒருவர் டிரா செய்துகொள்ளலாமா என்று கேட்பார். அடுத்தவர் சரி என்று கை கொடுத்துவிட்டு போய்விடுவார். ஒரு பத்து ரவுண்ட் போட்டியில் விளையாடும்போது இப்படி ஒரு டிரா அவர்களுக்கு ஒரு நாள் ஓய்வை கொடுக்கிறது. அது அடுத்த நாள் விளையாட இன்னும் கொஞ்சம் தெம்பை கொடுக்கிறது. ஆனால் பார்ப்பவர்கள் நிலை? ஐந்து நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் டீம் தன் இன்னிங்க்சுக்கு மூன்று நாள், அடுத்த டீம் மிச்ச இரண்டு நாள் எடுத்துக் கொள்வது மாதிரி நிகழ்ச்சி இது. டொபலோவ் இந்த முறை சோஃபியா விதி என்று ஒன்றை கடைப்பிடித்தார். டிரா செய்துகொள்ளலாமா என்று கேட்பதே இல்லை. அனேகமாக இந்த போட்டியின் எல்லா டிராக்களும் செஸ் விதிகளின்படி டிரா ஆனவை. (ஒரு பொசிஷன் மூன்று முறை நேர்ந்தால் அது டிரா). ஆனந்த் எட்டாம் ஆட்டத்தில் தோற்றது சாதாரணமாக கிராண்ட்மாஸ்டர் லெவலில் நடக்கவே நடக்காது. ஐம்பத்தைந்து மூவ் வரைக்கும் சமநிலை என்றால் டிரா என்று இருவரும் ஒத்துக்கொண்டு போயிருப்பார்கள். ஆனந்த் ஐம்பத்தாறாவது மூவில் தவறு செய்தார், உடனே தோல்வியை ஒத்துக்கொண்டு போய்விட்டார். இந்த சோ ஃ பியா விதி எல்லா போட்டிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டால் டிராக்கள் குறையும். அது செஸ்சின் எதிர்காலத்துக்கு நல்லது. (இது எப்போதும் இளைஞர்களுக்கு சாதகமான விதி, கிழவர்கள் தாக்குப் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்)
- இவர்களின் ஆட்டங்கள் எல்லாமே high quality ஆட்டங்கள். ஒவ்வொரு ஆட்டமும் டென்ஷன் மிகுந்தது. ஆனந்த் ஒரு சிம்பிள் டாக்டிக்ஸ் வைத்திருந்தார். கொஞ்சம் பலவீனமான, ஆனால் solid பொசிஷன் வரும்படி விளையாடினார். டோபலோவை முடிந்தால் ஜெயித்துக்கொள் என்று சீண்டிவிட்டார். டொபலோவ் சளைக்காமல் ஒவ்வொரு முறையும் கடுமையாக முயன்றார். ஆனால் ஆனந்த் outright blunder செய்தபோது மட்டுமே அவரால் வெல்ல முடிந்தது. ஆனந்தின் கடைசி வெற்றி மட்டுமே இப்படி டோபலோவின் outright blunder-aal வந்தது. மற்ற இரண்டு வெற்றிகளில் டொபலோவ் எங்கு தவறு செய்தார் என்று தேட வேண்டும். விடாக்கண்டன்-கொடாக்கண்டன் மாதிரி இருவரும் ஆடினார்கள். Bias இல்லாமல் சொல்கிறேன், ஆனந்தின் ஆட்டம் ஒரு மாற்று மேல்.
- ஆனந்துக்கு அந்த நீல NIIT சட்டையை விட்டால் வேறு எதுவுமே இல்லையா? மகா கோரமான சட்டை. டொபலோவ் எப்போதும் நீட்டாக டிரஸ் செய்து கொண்டு வந்தார்.
- அடுத்த முறை ஆனந்த் ஜெயிப்பது கஷ்டம் என்று நினைக்கிறேன். டொபலோவ், கார்ல்சன் இருவரில் யாராவது அடுத்த சாம்பியனாக வருவார்கள் என்று யூகிக்கிறேன். அரோநியனுக்கு outside chance.
தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்
மே 17, 2010
காலைக்கடன் உத்தரவு
Posted by RV under Tamil Culture | குறிச்சொற்கள்: Anandarangam pillai |[10] Comments
அன்றைக்கும் ரோட்டோரம் ஒதுங்குபவர்கள் பிரச்சினை பெரிதாக இருந்திருக்க வேண்டும். இந்த உத்தரவைப் பாருங்கள்.
அர்ச்சிக்கத் தக்க சம்பா கோவிலுக்குத் தெற்காகப் போகிற உப்பங்கழியோரம், பட்டணத்து வீதிகளுக்குள்ளே, கடற்கரையோரம், ஆராகிலும், உபாதைக்குப் போகிறது என்றிருந்தால், ஆறு பணம் அபராதம் வாங்குகிறது. அந்த ஆறு பணத்தில், உபாதைக்குப் போகிறவனை பிடித்துக் கொண்டு வருகிறவனுக்கு இரண்டு பணமும் கொடுக்கிறது. மற்ற நாலு பணம் சாவடி சிப்பாய்கள், அதிகாரிகளால் பங்கெடுத்துக் கொள்ளுகிறது.
யாராவது “உபாதைக்கு” ஒதுங்கினால் அவனை/அவளை கையோடு பிடித்துக் கொண்டு வந்து ஆறு பணம் வாங்கி அதில் இரண்டு பணம் பெற்றுக் கொள்வது. நல்ல தொழிலாக இருந்திருக்கும் போலிருக்கிறதே!
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய பதிவுகள்:
ஆனந்தரங்கம் பிள்ளை பதிவு செய்திருக்கும் மதுவிலக்கு உத்தரவு
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றி கிழக்கு பதிப்பகத் தலைவர் பத்ரி சேஷாத்ரி
மே 15, 2010
ஜெனோவின் டைகாட்டமியில் என் வலது ஆள்காட்டி விரல் சிக்கியிருந்தது. இடது கையில் காஃபி. முக்கால் டம்ளர் மிச்சமிருந்த்து. டிஸ்போஸபில் பேப்பர் கப். மூக்கு கண்ணாடி வழியாக வானத்தைப் பார்த்துக்
கொண்டிருந்தேன். வானத்தில் வெகு தூரத்தில் என் காஃபி தெரிந்தது. இதை குடிக்க வேண்டுமென்றால் இதில் பாதியை முதலில் குடிக்க வேண்டும், அந்தப் பாதியை குடிக்க வேண்டுமென்றால் அந்தப் பாதியில்
பாதியை முதலில் குடிக்க வேண்டும். அந்தப் பாதியில் பாதியை குடிக்கவேண்டுமென்றால் அந்தப் பாதியில் பாதியில் பாதியை குடிக்க வேண்டும். அந்தப் பாதியில் பாதியில் பாதியில் பாதியில்…எந்தப் பாதியைய்
பற்றி இப்ப நினைக்கிறோம்? இரண்டாவது வந்ததா? மூன்றாவது பாதியா? குழம்புகிறதே…எதுவாக இருந்தால் என்ன? இப்பொழுது காஃபி குடிக்க வேண்டும். ச்ச்ச்ச…காஃபி குடிப்பது இவ்வளவு கஷ்டமா?
தலைக்கு மேல் நின்ற எலக்ட்ரானிக் போர்ட் திடீரென்று விழித்துக் கொண்டு “டிரெய்ன் அரைவிங்” என்று அனைந்து அனைந்து அறிவித்து கொண்டிருந்தது. நான் காஃபி குடிப்பது பற்றிய சிந்தனையை தற்காலிகமாக
கைவிட்டுவிட்டு, அடையாளத்துக்காக ஆள்காட்டிவிரலை 27வது பக்கத்தில் மேலும் பத்திரப்படுத்திக் கொண்டேன். லேப்டாப்பின் சுமையால் தோளில் இருந்து உடம்பின் குறுக்காக ஓடிய வார் மெதுவாக நழுவி வந்து கழுத்தை நெருக்கியது. புத்தகம் வைத்திருந்த கையின் பெருவிரலால் வாரை மீண்டும் தோள் பட்டைக்கு கொண்டு வர முயன்ற போது புத்தகத்தின் பைண்டிங் மூலை கண்ணத்தை அறுத்தது.வரிசை பரபரப்பாகியது. முன்னால் மூன்று பேர் தான். இன்று சீட் கிடைக்கும். பின்னால் ஒரு முப்பது பேர் இருந்தனர். அவர்கள் ஏற வேண்டுமென்றால் நான் முதலில் ஏற வேண்டும். நான் ஏறவேண்டுமென்றால் என் முன்னால் நிற்ப்பவர் ஏற…ச்சேய்…என்ன இது? நான் ஜெனோ இல்லயே! அப்புறம் என்ன?
சத்தமில்லாமல் ட்ரெய்ன் வழுக்கிக் கொண்டு நின்றது. வாசல் துல்லியமாக மஞ்சளிலில் கறுப்பு பெயிண்ட் அடித்து பார்வையற்றவர்களுக்காக போட்டிருந்த டெக்ஸ்ஷர்ட் ஸர்பேஸ் முன் வந்து நின்றது. ஹிஸ்ஸ் எனற மெலிதான ஓசையோடு கதவுகள் வழிவிட்டது. க்யூ ஜெனோவின் டைகாட்டமி பற்றி அக்கறையேயில்லாமல் அலட்சியமாக அவருடைய ”ஆரமப” சிக்கலை தாண்டியிருந்தது. நானும் உந்தப்பட்டு காலியாக இருந்த சீட்டுகளில் எதை பிடிப்பது என்று ஒரு கணம் திணறிவிட்டு ஒரு ஜன்னலோர சீட்டில் போய் முடிந்தேன். பத்தே வினாடியில் ஹிஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் கதவுகள் ஜோடி ஜோடியாக மீண்டும் சேர்ந்து கொண்டன. மெலிதான ஒரு உந்தல் உடம்பை தாக்கியது. அவ்வளவுதான்.அதன் பிறகு ட்ரெயின் நகர்கிறது என்பது அவசரமாக பின்னோக்கி செல்லும் வெளிப்புறக் காட்சிகள் மூலம் மட்டுமே ஊர்ஜிதமாகியது.
பதினோறாவது ஸ்டேஷனில் இறங்கவேண்டும். கண்ணை மூடிக்கொண்டேன். அதற்குள் காஃபியை குடித்துவிட்டால் கப்பை தூக்கி எறிந்துவிடலாம். ஜெனோவும், லேப்டாப்பும் தான். ஈஸி. பிரின்ஸ்டன்.
மாணவர்கள். கேள்விகள். எக்ஸ்ட்ரீமா பாயிண்ட்ஸில் சில இன்று எதிர் பார்க்கப்படவேண்டிய ஒன்று. நியூட்டன்-லெய்ப்னிட்ஸ் பற்றி பேசிவிடவேண்டும். அப்புறம் டிஅலெம்பர்ட், அப்புறம் டெல்ட்டா-எப்ஸலான், எக்ஸாம்பிள்ஸ், எக்சர்சைஸ், அடுத்தவாரமாவது டிரைவேடிவ்ஸ் தொட்டுவிடவேண்டும். எல்லாம் தான் ஹைஸ்ஸ்கூலில் படித்திருப்பார்களே? பிறகு நமக்கென்ன தலையெழுத்தா? ட்ரெய்னின் வேகம் குறைந்தது. எப்பொழுது இரண்டாம் வருடத்திற்கு நம்மை புரொமோட் செய்வார்களோ!
அடுத்த ஸ்டேஷன். ஹிஸ்ஸ்ஸ்…தபதபதபதப…..ஹிஸ்ஸ்ஸ்ஸ்…மீண்டும் வேகம். இந்த ட்ரெய்ன் இல்லையென்றால் நமக்கு கஷ்டம் தான். எவ்வளவு ஸ்மூத். காஃபி கொட்டிவிடுமென்ற கவலையே
தேவையில்லை.
உலகத்தில் எல்லா இடத்திலேயும் மெட்ரொ ட்ரெயின்கள். எல்லாம் ஒரே மாதிரி. எங்கே இருருக்கிறோம் இப்போது? பாஸ்டனா? நியூ ஜெர்ஸியா? சிங்கப்பூரா? பெர்லீனா? அல்லது லண்டனா? ச்சே..விஸிட்டிங்
புரொபஸர் பாடு பரவாயில்லை. நான் வெகேஷன் ஸ்பாட் ஃபில் பண்ணுவதற்க்காகவே பிறந்திருப்பேணோ? ஒரே ஒரு வாரத்திற்க்காக மட்டும் பாரிஸில் வொர்க் பண்ணியிருக்கிறேன். ஒரு மூன்று மாதமாவது வேண்டும். ஆமாம். இனி மேல் மூன்று மாதத்திற்கு குறைவாக ஒத்துக்கொள்ளக் கூடாது. இந்தியாவிலும் இப்படி இருக்கக்கூடாதா? ஸ்மூத் டிரெயின்…வேர்க்காமல் விறுவிறுக்காமல்…அப்படி மட்டுமிருந்துவிட்டால் பெர்ம்மாக போய்விடலாம். அப்பா, அம்மாவுடன் திவ்ய தேசம் போகலாம். சரவண பவனில் இட்லியும் மெதுவடையும் சாப்பிடலாம். மாதம் ஒரு முறை ஸ்ரீரெங்கத்திற்கும், திருப்பதிக்கும் மாற்றி மற்றி போய் பகவானிடம் நியூட்டன் லெய்பினிட்ஸூக்கு செய்தது நியாயமா என்று கேட்கலாம்….
”ஸ்ர், ஸ்டேஷன் ஆகயா” – ஃபஸ்ட் இயர் ஸ்டூடெண்ட் மிட்டர் சிங் ல்லையா இவன்? இவன் பிரின்ஸ்டனில் என்ன…ச்சேய்…தூங்கிவிட்டேனா? நான் எங்கேயிருக்கிறேன்? மிட்டர் சிங் என் லேப்டாப்பை
எடுத்துக் கொண்டான். நான் ஆறிப்போன காஃபியை எடுத்துகொண்டேன். அவனும் நானும் பரபரத்து வெளியே குதித்தோம். பின்னால் ஹிஸ்ஸ்ஸ்… திரும்பிப்பார்த்த போது ட்ரெயின் அங்கு இல்லை. எல்க்ட்ரானிக் போர்ட்களில் “ட்ரெய்ன் லீவிங்” மறைந்து ”பல்பஙாஷ்” என்று தோன்றியது
சற்றே நிதானமானேன். இது என்ன? கனவா? அப்போ பிரின்ஸ்டன்? வெளியே நடந்தோம்.
”மிஸ்டர். சீனிவாசன், என்ன இன்றைக்கு இறங்கவேண்டிய ஸ்டேஷனில் கரெக்டா இறங்கிட்டீங்க போலிருக்குதே. பிரின்ஸ்டனை விட்டு வந்த இந்த இரண்டு மாதத்தில் இது இரண்டாவது முறை.”, கேட்டு கொண்டே ஸ்டிவன்ஸ் காலேஜ் பஸ்ஸிர்க்காக காத்துக் கொண்டிருந்த என்னுடனும் மிட்டர்சிங்குடனும் சேர்ந்துக் கொண்டார் ”லாஸ்ட் எபிகிராஃப்ஸ் ஆஃப் சோலாஸ்” பற்றி பேச தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த ஹிஸ்டரி விஸிட்டிங் புரொஃபெஸர் பத்மநாபன்.
கையிலிருந்த ஜெனோ என்னைப்பார்த்து புன்முறுவல் செய்வது போலிருந்தது. ஆறிப்போன காஃபி மேலும் ஆறிக்கொண்டிருந்தது.
(டெல்லி மெட்ரோ ட்ரெய்ன் உலகத் தரத்துடன் இயங்குகிறது என்று Newyork Times ல் வந்த செய்தியால் இன்ஸ்பைர் ஆகியதால் வந்த விளைவே இந்தக் கதை)
தொடர்புடைய சுட்டிகள்
மே 15, 2010
முதல் உண்ணாவிரதப் போராட்டம்?
Posted by RV under Historical | குறிச்சொற்கள்: Xuanzang |Leave a Comment
ஹுவான் சுவாங் என்று படித்த ஞாபகம் இருக்கிறதா? ஹர்ஷன் என்ற ராஜா (இரண்டாம் புலிகேசி, மகேந்திர வர்மா பல்லவன் ஆகியோரின் சம காலத்தவர் இந்த ராஜா) வட இந்தியாவை ஆண்டபோது சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பௌத்தத் துறவி. அவர்தான் முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி இருக்கிறார் போலிருக்கிறது.
வரும் வழியில் காசாங் என்ற ஊரில் தங்கி இருக்கிறார். அந்த ஊரின் ராஜா மிகவும் இம்ப்ரஸ் ஆகி இவரை மேலே போக அனுமதிக்கவில்லையாம். இங்கேயே இருந்துவிடுங்கள் என்று சாம பேத தானம் எல்லாம் பயன்படுத்திப் பார்த்தானாம். இவருக்கோ இந்தியா போயே தீர வேண்டும், அதனால் மறுத்திருக்கிறார். கடைசியில் போக முடியாது என்று ராஜா தடுத்துவிட்டான். இவர் உண்ணாவிரதம் ஆரம்பித்திருக்கிறார். அவனும் பயந்துபோய் விட்டுவிட்டானாம். சுவாரசியமான இந்த தகவலை இங்கே படித்தேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு
தொடர்புடைய சுட்டிகள்:
ஹுவான் சுவாங்கின் சத்யாகிரஹம்
ஹுவான் சுவாங் பற்றிய விக்கி குறிப்பு
மே 14, 2010
யுனெஸ்கோவின் கணக்குப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துகொண்டிருக்கின்றன. இந்த மொழிகளை பேசுபவர்கள் குறைந்துகொண்டே போகிறார்கள். எந்த நாட்டில் அதிகமான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன தெரியுமா? இந்தியாவில்தான். 196 மொழிகள்! சீனா, ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துகொண்டிருக்கின்றன.
நம்மூரில் பொதுவாக பழங்குடிகள் வாழும் இடங்களில் மொழிகள் அழிந்துகொண்டிருக்கின்றன. வடகிழக்கு பிரதேசங்கள், அந்தமான் தீவுகள், ஹிமாலய மலை அடிவாரங்கள்… நிறைய மொழிகள் நூறு பேருக்குக் கூட தெரியாதவை. கிரேட் அந்தமானீஸ் என்ற மொழி தெரிந்தவர்கள் ஐந்தே பேர்தான். (அதுவும் 2009இல், இந்த வருஷம் எல்லாரும் இருக்கிறார்களோ, என்னவோ.)
தமிழ் நாட்டில் டேஞ்சர் நிலையில் இருக்கும் மொழிகள் எல்லாம் நீலகிரி பக்கம் பேசப்படுபவை. தோடா (Thoda -1981 சென்சஸ் படி 1006 பேர் பேசுகிறார்கள்), கோடா (Koda – 1992 கணக்குப்படி 2000 பேர்), குருபா (Kuruba – >14000, 2001 சென்சஸ் படி), கொரகா (koraga – >16000, 1981 சென்சஸ் படி). தோடா அனேகமாக தோடர்கள் என்ற பழங்குடி மக்கள் பேசும் மொழியாக இருக்க வேண்டும். ராஜம் கிருஷ்ணன் இவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். (குறிஞ்சித் தேன்?) முப்பது வருஷங்களுக்கு முன் நான் ஊட்டி போனபோது இவர்கள் வீடு ஒன்றைப் பார்த்திருக்கிறேன்.
நீலகிரியில் வாழும் இன்னொரு பழங்குடி மக்களான படகர்கள் (Badaga) நிலை பரவாயில்லை. 2001 சென்சஸ் படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த மொழியை பேசுகிறார்கள்.
இது பெரிய காரியம். இதை தொகுத்த ஆசிரியர் குழு பெரிய சாதனை செய்திருக்கிறது. ஆனால் இந்தியாவிலிருந்து ஒரே ஒருவர் மட்டும் – உதய நாராயண் சிங் – ஆசிரியர் குழுவில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சிங் மைசூரில் இருக்கும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட்ஆஃப் இந்தியன் லாங்க்வேஜஸ் அமைப்பின் தலைவர்.
மொழிகள் மனித இனத்தின் செல்வங்கள். இவற்றை எல்லாம் பாதுகாக்க அரசு கொஞ்சம் பணம் செலவழிக்கலாமே!
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய சுட்டிகள்:
யுனெஸ்கோ அழியும் மொழிகள் map
தமாஷ் – அழிந்து கொண்டிருக்கும் மொழியான அங்கமி மொழியை நாங்கள் கற்ற கதை
மே 13, 2010
இந்த பதிவு என் பெண்களுக்காக.
இந்த வீடியோ ஒரு காலத்தில் மிக பிரபலம். சர்ச்சில் கல்யாணம். அவர்கள் ஆடும் டான்சில் தெரியும் உண்மையான joie de vivre அபாரம்!
என் பெண் அடிக்கடி “Ah! Charlie bit me” என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். அந்த “சார்லி பிட் மீ” வீடியோதான் யூட்யூபின் நம்பர் 1 வைரல் வீடியோவாம்!
நான் பார்த்தது இந்த இரண்டுதான். ஆர்வம் உள்ளவர்களுக்காக டாப் 50 வைரல் வீடியோக்கள் லிஸ்ட் இங்கே.
தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி
தொடர்புடைய சுட்டிகள்: டைம் பத்திரிகையின் டாப் 50 யூட்யூப் வைரல் வீடியோக்கள்
மே 12, 2010
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #12 – விவரமாக
Posted by RV under Chess | குறிச்சொற்கள்: 2010 World chess championship, Vesselin topalov, Viswanathan anand |[4] Comments
இன்றைக்கு ஆனந்துக்கு கறுப்பு. செஸ் விளையாட்டில் கறுப்பு கலர் சின்ன disadvantage. புள்ளிவிவரங்களைப் பார்த்தால் வெள்ளைக் கலர்தான் நிறைய ஆட்டங்களில் ஜெயிக்கிறது. முக்கால்வாசி கிராண்ட்மாஸ்டர்கள் கறுப்பு கலர் வந்தால் டிரா செய்யத்தான் விளையாடுவார்கள். ஆனந்தும் சில வருஷங்களாக அப்படித்தான். டொபலோவ் கறுப்பு கலர் வந்தாலே ஜெயிக்கத்தான் விளையாடுவார். இன்றைக்கு வெள்ளை. இந்தப் போட்டியில் momentum வேறு டொபலோவ் பக்கம் போய்விட்டது. இன்று ஆட்டம் டிரா ஆனால் அடுத்தபடி டைப்ரேக்கர். அதில் மிக வேகமாக விளையாட வேண்டும். முன்பிருந்த வேகம் குறைந்துவிட்டாலும் ஆனந்த் வேகமாக விளையாடுவதில் கில்லாடி. இன்னும் இளைஞராக இருந்தபோது lightning kid என்ற அடைமொழி அவருக்கு நிஜமாகவே பொருத்தமானதுதான். ஆனந்த் டைப்ரேக்கருக்கு போவதற்குத்தான் பார்ப்பார், அதனால் இன்று ஒரு பாதுகாப்பான drawish கேம்தான் விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன்.
ஆனந்த் super-solid Lasker defense விளையாடினார். முடிந்தால் ஜெயித்துக்கொள் என்று டொபலோவை கொஞ்சம் சீண்டுவது போல இருந்தது. கிடுகிடுவென்று விளையாடினார். Foreplay எல்லாம் முடிந்து பார்த்தால் ஆனந்துக்கு c pawn isolated pawn. (isolated pawn – இரு புறமும் வேறு சிப்பாய்கள் கிடையாது) ஆனால் அவரது காய்களுக்கு நகர இடம், டொபலோவ் ஏதாவது தவறு செய்தால் உடனே அதை ஊதி ஊதி பெரிதாக்கும் வாய்ப்பு இருந்தது. அவரது isolated pawn-க்கு இரு புறமும் – b மற்றும் d ஃபைல்களில் – நல்ல ஸ்கோப் இருந்தது. அவரது பிஷப் நல்ல active ஆக இருந்தது. நீண்ட h1-a8 diagonal-இல் டோபலோவின் ராஜா மேல் கண் வைத்துக்கொண்டிருந்தது.
இருவருக்கும் ப்ளான் தெளிவு. டொபலோவுக்கு அந்த isolated pawn ஒரு நல்ல target.தன் காய்கள் எல்லாவற்றையும் கொண்டு அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாக்கலாம். இரு புறமும் வேறு சிப்பாய்கள் இல்லாததால் ஆனந்த் தன் மற்ற வலுவான காய்களைத்தான் இதை பாதுகாக்க பயன்படுத்தி ஆக வேண்டும். ஆனந்த் தன் பிஷப்பை, பாதி திறந்திருக்கும் b மற்றும் d ஃபைல்களை பயன்படுத்தி தன் காய்களை நல்ல இடத்தில் வைக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் டோபலோவின் ராஜாவை தாக்க வேண்டும் – அதற்கு அந்த பிஷப் உதவியாக இருக்கும். ஆட்டம் சரிசமமான நிலையில் இருந்தது, ஆனால் நல்ல டென்ஷன்.
டொபலோவ் கோட்டை விட்டார். அவரது 31 மற்றும் 32-ஆவது மூவ்கள் இரண்டும் தவறு. திடீரென்று ஆனந்தின் ராணி, ரூக், பிஷப் எல்லாம் டோபலோவின் ராஜாவை குறி வைக்கின்றன. அந்த ராஜாவை சுற்றி இருக்க வேண்டிய சிப்பாய்கள் எல்லாம் வெட்டுப் போய்விட்டன, நகர்ந்துபோய்விட்டன. என் லெவலில் கூட இந்த மாதிரி மூவ் தவறு என்று தெரியும். ஆனால் டொபலோவ் லெவலில் ஆடுபவர்கள், அதுவும் டொபலோவ் போல காம்ப்ளிகேஷன் என்றால் அல்வா என்பவர்கள், தப்பிக்க வழி, இல்லாவிட்டால் தோற்கடிக்கவே வழி கண்டுபிடித்திருக்கலாம். அதனால் என் மாதிரி ஆட்களுக்குத்தான் டென்ஷன். ஒன்பதாவது கேமில் பாருங்கள், டொபலோவ் திடீரென்று தன் குதிரையை வெட்டுக் கொடுத்தார், தோற்கப் போகிறார் என்று நினைத்த கேம் டிரா ஆகிவிட்டது. இத்தனைக்கும் எல்லாரும் டொபலோவுக்கு ஆப்பு என்கிறார்கள், இருந்தாலும் சின்ன பயம். அதுவும் நமக்கு ஜெயிக்க நேர் வழி தெரிந்தால் ஆனந்துக்கு அதை விட சிறந்த, சிம்பிளான வழிகள் எல்லாம் தெரிகிறது. நான் நினைத்த மூவ்களை ஆனந்த் தள்ளிப்போட்டுக் கொண்டே போனார். என்னாகுமோ ஏதாகுமோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
வான வேடிக்கை எல்லாம் முடிந்த பிறகு ஆனந்துக்கு ராணி; டொபலோவுக்கு ஒரு ரூக், ஒரு குதிரை. அந்த நிலையில் எனக்கே கூட டொபலோவை தோற்கடிக்க சான்ஸ் உண்டு. டொபலோவ் ஆனால் ஏதோ நப்பாசையில் விளையாடிக் கொண்டே இருந்தார். கடைசியில் அவர் கை கொடுத்தபோது திருப்தியாக இருந்தது.
ஆனந்துக்கு அதிர்ஷ்டம்தான். இந்த ஆட்டத்தில் ஆனந்த் ஜெயிக்கவில்லை, டொபலோவ் தோற்றார். ஆனால் செஸ்ஸில் இதெல்லாம் சகஜமப்பா! பாருங்கள், முதல் கேமிலும், எட்டாவது கேமிலும் டொபலோவ் ஜெயிக்கவில்லை, ஆனந்த் தோற்றார்.
இன்னும் கொஞ்சம்:
இட்லிவடை தளத்தில் லலிதாராம் என்பவரும் தமிழில் இந்த ஆட்டங்களை பற்றி எழுதுகிறார். அதையும் படித்துப் பாருங்கள். இந்த ஆட்டத்தைப் பற்றி இங்கே.
இந்த போட்டி பற்றி overall எழுத வேண்டும் என்றும் விட்டுப்போன ஆட்டம் # 8,9,10,11 பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆட்டம் #9 இந்த போட்டியின் மிகச் சிறந்த ஆட்டம். பார்ப்போம்.
என்டிடிவியில் ஆனந்தை நாலு கேள்வி கேட்கிறார்கள். அந்த கேள்வி கேட்பவனைப் போல கேனையனை நான் பார்த்ததில்லை. மயிரிழையில் ஆனந்த் வென்றிருக்கிறார். கடைசி கேம் வரைக்கும் விளையாடி were you toying with Topalov என்று கேட்கிறான். கறுப்பு காய்களோடு வென்றிருக்கிறார்; பிளாக் மாஜிக் என்று சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு அதையே சொல்லுகிறார்கள். மாஜிக்கும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை, டொபலோவ் சொதப்பிவிட்டார். இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் பேட்டி எடுத்து, உயிரை வாங்குகிறார்கள். ஆனந்துக்கு எரிச்சல் வருவதும், அதை அடக்கிக் கொள்வதும் தெளிவாகத் தெரிகிறது. பிரஸ் கான்ஃபரன்ஸ் வீடியோவை இன்னும் காணோம், அதனால் இதைத்தான் தர வேண்டி இருக்கிறது.
லலிதாராம் ஒரு நல்ல வீடியோ சுட்டியை கொடுத்திருக்கிறார்.
ஆட்டம் pgn நொடேஷனில்:
[WhiteElo "2805"] [BlackElo "2787"] [PlyCount "112"] [EventDate "2010.04.24"] [EventType "match"] [EventRounds "12"] [EventCountry "BUL"]
1. d4 d5 2. c4 e6 3. Nf3 Nf6 4. Nc3 Be7 5. Bg5 h6 6. Bh4 O-O 7. e3 Ne4 8. Bxe7Qxe7 9. Rc1 c6 10. Be2 Nxc3 11. Rxc3 dxc4 12. Bxc4 Nd7 13. O-O b6 14. Bd3 c5 15. Be4 Rb8 16. Qc2 Nf6 17. dxc5 Nxe4 18. Qxe4 bxc5 19. Qc2 Bb7 20. Nd2 Rfd8 21. f3 Ba6 22. Rf2 Rd7 23. g3 Rbd8 24. Kg2 Bd3 25. Qc1 Ba6 26. Ra3 Bb7 27. Nb3 Rc7 28. Na5 Ba8 29. Nc4 e5 30. e4 f5 31. exf5 e4 32. fxe4 Qxe4+ 33. Kh3 Rd4 34.Ne3 Qe8 35. g4 h5 36. Kh4 g5+ 37. fxg6 Qxg6 38. Qf1 Rxg4+ 39. Kh3 Re7 40. Rf8+ Kg7 41. Nf5+ Kh7 42. Rg3 Rxg3+ 43. hxg3 Qg4+ 44. Kh2 Re2+ 45. Kg1 Rg2+ 46. Qxg2 Bxg2 47. Kxg2 Qe2+ 48. Kh3 c4 49. a4 a5 50. Rf6 Kg8 51. Nh6+ Kg7 52. Rb6 Qe4 53. Kh2 Kh7 54. Rd6 Qe5 55. Nf7 Qxb2+ 56. Kh3 Qg7 0-1
தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்
தொடர்புடைய பதிவுகள்:
ஆனந்த் உலக சாம்பியன்!
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #8
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #7
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #6
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #5
முதல் 4 ஆட்டங்கள்
செஸ்வைப்ஸ் – ஆட்டங்கள், வீடியோக்கள்
ஆனந்த்-டொபலோவ் – லைவ், ஆடும்போது என்ன நடக்கிறது என்று பார்க்க
சூசன் போல்காரின் ரன்னிங் கமெண்டரி
லலிதாராமின் இட்லிவடை தளப் பதிவு
ஆனந்தின் பேட்டி வீடியோ
என்டிடிவி வீடியோ
மே 11, 2010
ஆனந்த் உலக சாம்பியன்!
Posted by RV under Chess | குறிச்சொற்கள்: 2010 World chess championship, Vesselin topalov, Viswanathan anand |[2] Comments
ஆனந்த் கடைசி ஆட்டத்தை வென்று உலக சாம்பியன் ஆக தொடர்கிறார். இப்போதுதான் மீண்டும் இந்த போட்டி பற்றி எழுத மூடே வருகிறது!
டொபலோவின் தவறுகள் மூலம்தான் அவர் வென்றார். பிற விவரங்களை அப்புறம் தர முயற்சிக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #8
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #7
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #6
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #5
முதல் 4 ஆட்டங்கள்
செஸ்வைப்ஸ் – ஆட்டங்கள், வீடியோக்கள்
ஆனந்த்-டொபலோவ் – லைவ், ஆடும்போது என்ன நடக்கிறது என்று பார்க்க
சூசன் போல்காரின் ரன்னிங் கமெண்டரி
மே 11, 2010
போன வருஷம் (2009) 25 -30 பேரின் எழுத்துக்களை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த வருஷம் யாரும் இல்லையா? யாருக்காவது தெரியுமா?
தொகுக்கப்பட்ட, தொடர்புடைய பக்கம்: நாட்டுடமை சீரிஸ்


