April 2010


அன்று காலையில்தான் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில்  பரமாசார்யாளைத் தரிசித்து விட்டு ஆசி பெற்றுச் சென்றிருந்தார்கள் .  ஆசார்யாள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.  மாலை சுமார் நான்கு மணியிருக்கும்.   “பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப் போகிறார்கள்.  நீங்களும் இருந்து விட்டுப் போங்களேன்” என்றார் ஸ்ரீ மடத்தில் இருந்த ஒருவர்.   “சரி” என்று தயங்கினேன்.

சில நிமிடங்களுக்குள்ளாக எதிர்பார்த்த பேராசிரியர்கள் வந்தனர்.  “பெரியவாளைப் பார்க்க அவர்கள் வரலாம்.  உங்களையும் பெரியவாள் கூட வரச் சொன்னார்” என்றார் மடத்தைச் சேர்ந்தவர்.  மகிழ்ச்சியுடன் உடன் சென்றேன்.  பெரியவாள் எளிமையே உருவமாகத் தரையில் அமர்ந்திருந்தார்கள்.  தரிசிக்க வந்த ஐந்து பிரஞ்சு பேராசிரியர்களையும் எதிரில் அமரும்படி கூறினார்.  என்னை தமக்கு அருகில் வந்து அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லுமாறு பணித்தார்.

வந்தவர்களில் மூவர் பெண்கள்;  இருவர் ஆண்கள்.  அவர்களின் தலைவராக இருப்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருப்பதாகவும்,  மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினார்.  பெரியவாள் சிரித்துக் கொண்டே ஒவ்வொருவருடைய பெயரையும்,  அவர்கள் எந்தத் துறையில் பேராசிரியர்களாகத் திகழ்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து கொண்டார்.

அவர்கள் தங்கள் தங்கள் துறைகளைக் கூறி வரும்போது,  பெரியவாள் சட்டென்று அவர்களில் ஒரு பெண்மணியைப் பார்த்து,  “நீங்கள் இத்தாலியிலிருந்து வந்தவர்களா?” என்று கேட்டார்.  அந்தப் பெண்மணி பிரஞ்சு நாட்டு பாரீஸ் மாநகரைச் சேர்ந்தவர்.  அங்கு பேராசிரியர்.  அப்படி இருக்கும்போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன்.  அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பிலாழ்த்தியது. “எங்கள் முன்னோர்கள் இத்தாலியைச் சார்ந்தவர்கள் தாம்” என்றார்.  அடுத்து பெரியவாள் கேட்ட கேள்வி மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.  பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க்  என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா? என்று கேட்டார்.  அந்த பெண்மணி ஆச்சரியத்தில் மூழ்கி தன்னுடன் வந்த ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே,  “ஆமாம்” என்று கூறினார்.  இதற்கு முன் அப்பெண்மணி இந்தியா வந்ததேயில்லை.  அப் பெண்மணியைப் பற்றி யாருக்குமே தெரியாது.  அப்படியிருக்க, பெரியவாள் பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும்,  இந்தப் பகுதி தான் என்று வரையறுத்துக் கூறும் பாங்கையும் கண்டு நாங்கள் வியப்பை அடக்க முடியாது வாய் புதைத்து நின்றோம்.

எங்கள் முக பாவங்களைப் பார்த்து பெரியவாளே அது எப்படி என்று விரித்து உரைத்தார்கள்.  “இத்தாலிய நாட்டினருக்கும்,  பாரிஸுக்கும் வடக்கே லுக்ஸ்ம்பர்கிற்குத்   தெற்கில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும்.  இத்தாலியர்களின் லத்தீன் மொழியின் உச்சரிப்பு ஒருவிதமாக இருக்கும்”  என்றார்கள்.  அதைக் கேட்டு அந்த பெண்மணி, “ஆமாம்!  ஆமாம்!” என்று வேகமாகத் தலையாட்டினார்.

காஞ்சிபுரத்தில் ஏதோ ஒரு பகுதியிலிருக்கும் பெரியவாள்,  உலகில் எங்கிருந்து யார் வந்தாலும்,  எம்மொழி பேசினாலும்,  இந்த பகுதியிலிருந்து வந்தவர்,  இந்த மொழி பின்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கையும் பார்த்த போது,  வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து  இன்று பெரியவாள் உருவில் ஒரு ஒப்பற்ற பரம ஞானியாகத் திகழ்வதை உணர்ந்தேன்.

– டாக்டர்,  இரா.  நாகசாமி (முன்னாள் தொல்பொருள்  ஆய்வுத் துறை தலைவர்)


Chola Frescoதஞ்சாவூர் பெரிய கோவிலின் சோழர் கால ஓவியங்கள் புகழ் பெற்றவை. பார்ப்பது கஷ்டம்தான், சாதாரணமாக அனுமதி கிடைப்பதில்லை. என் அதிர்ஷ்டம், என் உறவினர் டாக்டர் நாகசாமி எங்களை அழைத்துக் கொண்டு போய் காட்டினார். ஓவியங்கள் நிறையவே மங்கிப் போய்விட்டன. வெளிச்சம் வேறு கொஞ்சம் குறைவுதான். ஆனால் மறக்க முடியாத ஒரு அனுபவம். உயிருள்ள வண்ணங்கள்; ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்கள் கொஞ்சம் இந்த ஸ்டைலில் இருக்கும்.

அந்த ஓவியங்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்று ஹிந்துவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. மறைந்து கிடந்த இந்த ஓவியங்களை கோவிந்தசாமி என்ற அண்ணாமலை பலகலைக்கழக ஆசிரியர் தற்செயலாக கண்டுபிடித்திருக்கிறார். சோழ கால ஓவியங்கள் கிடைக்குமா என்று அவர் தேடிக் கொண்டிருந்திருக்கிறார். ஹிந்து பத்திரிகையில் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். பிறகு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி உட்பட்ட பலரும் வந்து பார்த்து இவை சோழர் காலத்தவையே என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். சுவாரசியமான கட்டுரை, படித்துப் பாருங்கள்!

பின்னால் சேர்க்கப்பட்டது: நண்பர் தங்கவேல் இந்த ஓவியங்களை கோவிலூர் மடாதிபதியாக இருந்த நாச்சியப்பன் ஃபோட்டோ எடுத்த கதைக்கு ஒரு சுட்டி தந்திருக்கிறார். அவரும் தன் தளத்தில் தஞ்சை கோவிலைப் பற்றி ஒரு நல்ல பதிவு எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>வரலாறு

தொடர்புடைய சுட்டிகள்:
ஹிந்து கட்டுரை
பெரிய கோவில் பற்றி ஒரு தளம்
இந்திரா காந்தி சென்டரில் எல்லா ஓவியங்களும் (பாதிக்கு மேலான ஓவியங்கள் தெளிவாக இல்லை, மங்கிவிட்டிருக்கின்றன. ஆனால் மிச்ச ஓவியங்களை தவறவிடாதீர்கள்.)

அமெரிக்காவில் வாட்டர் கூலர் டாக் என்று சொல்வார்கள். தண்ணீர் குடிக்கும்போது சக பணியாளர்களிடம் என்ன பேசுவீர்கள்? நம் ஊரில் நான் வேலை செய்த வரைக்கும் சினிமா, கிரிக்கெட், சில சமயம் அன்றைக்கு பரபரப்பான செய்திகள். இப்போது டிவியும் இருக்கும், குறிப்பாக பெண்கள், அதுவும் ஆன்டிகள் பேசும்போது நேற்று சீரியலில் என்ன நடந்தது என்று பேசுவார்கள் என்று நினைக்கிறேன். (யாராவது நாலு பெண்கள் போடா MCP, பெண்களை ஸ்டீரியோடைப் செய்யாதே என்று எழுதுங்கம்மா!)

வாரப் பத்திரிகைகளில் தொடர்கதை என்பது எண்பதுகள் வரைக்கும் கூட மிக பாப்புலரான ஒன்று. அப்போதெல்லாம் டிவி சீரியலுக்கு பதிலாக அதுதான் பேசப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். என் அம்மா பேசியது எனக்கே தெரியும். பாலகுமாரன் இந்த வாரம் கரையோர முதலைகளில் என்ன எழுதினார், சிவசங்கரியின் தொடர்கதையில் அருண் அவன் நண்பனின் மனைவியிடம் தன் “காதலை” சொல்வானா (கதை பேர் நினைவில்லை, ஆனால் இந்த அருண்தாங்க எனக்கு கண்டாலே ஆகாது, ரொம்ப நல்லவரு!), இன்னும் ஒரு பத்து வருஷம் முன்னால் மணியன், அகிலன், நா.பா. என்ன எழுதுவார் என்று பேசியது இன்றைக்கு ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த வாரத் தொடர்கதை formatஐ மீறி இலக்கியம் உருவாவது கஷ்டம். ஒரு ஃபார்முலா இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்பம் இருக்க வேண்டும். அந்த திருப்பம் அடுத்த ஐந்து நிமிஷத்தில் மறந்துவிடுகிற மாதிரி இருக்கலாம், ஆனால் திருப்பம் இருந்தே ஆக வேண்டும். ஒரு வாரம் கழித்துதான் அடுத்த இன்ஸ்டால்மென்ட் வரும், அதற்குள் போன வாரம் படித்தது மறந்துவிடும். அதனால் போன வாரம் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். சாண்டில்யன்தான் இதை ஏறக்குறைய ஒரு மெக்கானிகல் ப்ராசஸ் ஆகவே மாற்றினார். முதல் இரண்டு பக்கம் போன வாரம் என்ன நடந்தது, அடுத்த இரண்டு பக்கம் போன வார திருப்பத்தைப் பற்றி, கடைசி இரண்டு பக்கம் கதவைத் திறந்தான், அதற்கு பின்னால் நின்றவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் (பின்னால் நிற்பவர் ஒரு பைசாவுக்கு பெற மாட்டார்) என்று எழுதுவார். கோப்பெருந்தேவி எங்கே என்று ஒரு சிறுகதை உண்டு. இந்த மாதிரி எழுத்தை பகடி செய்து எழுதப்பட்டது. அது ஒரு தொடர்கதையின் ஒரு வார இன்ஸ்டால்மென்ட் – கதை பூராவும் குதிரை மேல் உட்கார்ந்துகொண்டு கோப்பெருந்தேவி எங்கே எங்கே என்று யோசிப்பார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. தொடர்கதை முழு நாவலாக வரும்போது இந்த வாரம் ஒரு திருப்பம் ஃபார்முலாவின் குறை மிக நன்றாகத் தெரியும்.

இலக்கியம் உருவாவது கஷ்டம் என்றாலும் சுவாரசியம் குறையாமல் எழுதுபவர்கள் உண்டு. சுஜாதாவை குறிப்பாக சொல்லலாம். கல்கி இதில் நிபுணர். ரா.கி. ரங்கராஜன், ஏ.எஸ்.பி. அண்ணாமலை, பி.வி.ஆர். மாதிரி சில மறக்கப்பட்ட எழுத்தாளர்கள் சுவாரசியமாக எழுதக் கூடியவர்கள். அகிலன், நா.பா. போன்றவர்கள் மிக பிரபலமாக இருந்தவர்கள். லக்ஷ்மி, சிவசங்கரி, மணியன், இந்துமதி, பாலகுமாரன் மாதிரி பலர் பெண்கள், அதுவும் ஆன்டிகள் மனதை கவர்ந்தவர்கள்.

தேவன் சில சமயம் இந்த ஃபார்முலாவை தாண்டி இருக்கிறார். அவரது ஸ்ரீமான் சுதர்சனம் எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று. ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் பணக் கஷ்டங்களை தத்ரூபமாக கண் முன் கொண்டு வருவார். ஜஸ்டிஸ் ஜகன்னாதன் ஒரு கிளாசிக். துப்பறியும் சாம்பு ஃபார்முலாதான், ஆனால் மிக சுவாரசியமான புத்தகம். தேவன் பி.ஜி. வுட்ஹவுஸ் மாதிரி எழுதக் கூடியவர். ஆனால் வுட்ஹவுஸ் வார்த்தைகளில் விளையாடி நம்மை சிரிக்க வைப்பார். தேவன் சிசுவேஷனல் காமெடி எழுதுகிறார். சில சமயம் புன்னகைக்கிறோம்.

Gomathiyin Kadhalanதேவனின் கோமதியின் காதலன் ஃபார்முலா தொடர்கதைதான். விகடனின் பக்கங்களை நிரப்ப எழுதப்பட்ட ஒரு தொடர்கதை. இலக்கியம் நிச்சயமாக இல்லை. ஆனால் அந்த காலத் தொடர்கதைகள் எப்படி இருந்தன என்று நமக்கு அழகாக காட்டுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு quote உடன் ஆரம்பிக்கிறார். திருப்பம் வாராவாரம் உண்டு.

பல வருஷமாக சொல்லப்படும் கதைதான். ரங்கராஜன் தன் பேரை மாற்றிக் கொண்டு நாயகி வீட்டில் வேலைக்கு சேர்கிறான். அங்கே நான்தான் ரங்கராஜன் என்று சொல்லிக்கொண்டு மணி வருகிறான். ஆள் மாறாட்டம், காதல் என்று கதை போகிறது. உள்ளத்தை அள்ளித் தா படம் பார்த்ததில்லையா நீங்கள்? ஏறக்குறைய அந்த மாதிரி கதைதான்.

கதை முக்கியமே இல்லை. ஆனால் தேவன் காட்டும் ஒரு உலகம் – உயர் மத்திய வர்க்கம், பிராமணக் குடும்பம் (அப்பா மிராசுதார், மாமா ஜட்ஜ் இந்த மாதிரி) உண்மையாக இருக்கிறது. கதையின் சிறப்பான அம்சம் அதுதான். அதில் வரும் சின்ன காரக்டர்கள், அறிவிப்புகளை சொல்லிக் கொண்டே இருக்கும் சிறுவன், எதுகை மோனை பேசி பேசி தட்சணை கேட்கும் பிராமணர், சண்டை போடும் அண்ணன், ஊரிலிருந்து வரும் கணக்குப்பிள்ளை பையன் எல்லாம் சுவாரசியமான காரக்டர்கள்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

கோமதியின் காதலன் டி.ஆர். ராமச்சந்திரன், சாவித்திரி நடித்து படமாகவும் வந்தது. ஓடவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>படிப்பு

தொடர்புடைய பதிவுகள்: தேவன் பற்றி சுஜாதா

ஸ்ரீனிவாஸ் மட்டும் இந்த நாவலைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்காவிட்டால் நானும் எழுதி இருக்க மாட்டேன். பதிவு எழுதும் அளவுக்கு இந்த நாவல் ஒன்றும் நன்றாக இல்லை.

பணக்கார வீட்டுப் பெண். தமிழ் சினிமா மாதிரி ஒரு ஹோட்டல் வெயிட்டரைக் காதலிக்கிறாள். அவள் காதலில் விழும் முதல் சந்திப்பு மாதிரி குழப்படியாக என்னைப் போல ஒரு கத்துக்குட்டி கூட எழுதமாட்டான். ஹோட்டலுக்கு போகிறாளாம், யாரோ கலாட்டா செய்கிறானாம், இந்த வெயிட்டர் அவனை துரத்திவிடுகிறானாம், உடனே ஹீரோயின் ஹோட்டல் முதலாளியான அவள் அப்பாவுக்கு ஃபோன் செய்து அந்த வெயிட்டரை வேலையை விட்டு தூக்கிவிடுகிறாள். என்னங்க இது விபரீதம்? வேலையை விட்டு தூக்கிய பிறகு அவளுக்கு அவன் மீது லவ் வந்துவிடுகிறது. இல்லை ஒரு வேளை லவ் வந்துவிட்டதால் வேலையை விட்டு தூக்க சொல்கிறாளோ தெரியவில்லை. அப்பாவிடம் அவனை வேலைக்கு சேர்த்துக்கொள் சேர்த்துக்கொள் என்று நச்சரிக்கிறாள். “நாயை அடிப்பானேன், …” என்ற பழமொழிதான் நினைவு வந்தது. அப்புறம் அந்த வெயிட்டர் தன் அம்மாவோடு ஒரு வீராணம் திட்ட பைப்பில் வசிப்பவனாம். அந்த பைப்பில் டிவி கூட இருக்கிறதாம். Truth is stranger than fiction என்று சொல்வார்கள்தான், ஆனால் இது கொஞ்சம் ஜாஸ்தி ஆக இருக்கிறது. விட்டால் அந்த பைப்புக்கு ஒரு அட்ரஸ் – தபால் தந்தி எல்லாம் கூட வரும் போலிருக்கிறது. அப்படி பைப்பில் வளர்ந்த டைப்பாக இருந்தாலும் (ஆஹா! பைப்பு, டைப்பு! உங்களுக்கு எல்லாம் என்னை ஹைப் செய்து இரண்டு வார்த்தை டைப் செய்ய ஒரு வாய்ப்பு!) நம்ம ஹீரோ எம்ஜிஆர் மாதிரி – தெரியாத வித்தை இல்லை, பெரிய அறிவுஜீவி! எப்படிங்க கற்றுக்கொண்டான்? அந்த பெண்ணின் அப்பாவுக்கு இருதய நோய் – மாற்று இருதயம் தேவை. நம்ம அறிவு ஜீவி பையில் எப்போதும் ஒரு கார்டு இருக்கும் – என் எல்லா உறுப்புகளையும் தானம் செய்கிறேன் என்று. புரிஞ்சிருக்கணுமே? நடுவில் பிசினஸ் சண்டை, இருதய மாற்று சிகிச்சை பற்றி டெக்னிகல் விஷயங்கள் என்று கதை போகிறது.

இதுதான் அவர் கடைசியாக எழுதிய தொடர்கதையாம். கல்கியில் வந்திருக்கிறது.

பெரிய கொடுமை இதை ப்ரூஃப் படிக்கவே இல்லை போலிருக்கிறது. டயலாக் நடு நடுவே ஜம்ப் ஆகிறது. கதாபாத்திரங்கள் பேசுவதில் மட்டுமே சுஜாதா தெரிகிறார். அதையும் விசா பப்ளிகேஷன்காரர்கள் கெடுத்து வைத்திருக்கிறார்கள்.

சுஜாதா சொதப்பிவிட்டார். நேரத்தை வீணடிக்காதீர்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>படிப்பு–>சுஜாதா பக்கம்

தொடர்புடைய பதிவு: உள்ளம் துறந்தவன் நாவல் பற்றி சுஜாதா

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

அண்மையில் மறைந்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை பற்றி 10-4-66 அன்று விகடனில் வந்த கட்டுரை. விகடனுக்கு நன்றி! “புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய் சிரிப்பு” மாதிரி எழுதுவது quaint ஆக இருக்கிறது.

அவரை பற்றி நான் எழுதிய ஒரு முந்தைய பதிவு இங்கே. கானா பிரபு மறுபதிவு செய்த அவரது இன்னொரு பேட்டி இங்கே. காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி இங்கே.

ஹரிஜன நிதிக்காக, பணமும் நகைகளும் வசூல் செய்துகொண்டு இருந்தார் காந்தியடிகள். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருபவர்கள் எல்லோரிடமும், தாழ்த்தப்பட்ட மக்களை உய்விப்பதற்காக அந்த மகாத்மாவின் கரம் தாழும். புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கண்டவர்கள் எல்லோரும் தங்களிடமிருக்கும் நகைகள் அனைத்தையுமே தயங்காமல் கழற்றிக் கொடுத்துவிடுவார்கள்.

அன்றும் காந்தியடிகள் கரம் நீட்டிக்கொண்டிருந்தார். கான்வென்ட் பள்ளியிலிருந்து பள்ளிக்கூட டிரஸ்ஸிலேயே வந்திருந்த சிறுமி ஒருத்தி, மந்திரத்தால் கட்டுண்டவள் போல் தன் கையிலிருந்த வளைகளைக் கழற்றி மகாத்மாவிடம் கொடுத்துவிட்டாள்.

மறுநாள், மகாத்மா அந்தப் பெண்ணை அழைத்து, “நேற்று நீ வெள்ளி வளையைக் கழற்றிக் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டாயே!” என்று கேட்டார். “பாபுஜி, நான் அதைத் தங்க வளை என்று சொல்லவே இல்லையே! எல்லோரும் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்தவுடன், என்னையும் மீறி நான் என் கையிலிருந்ததைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள் சிறுமி.

“அதெல்லாம் தெரியாது. அதற்குப் பிராயச்சித்தமாகப் பவுன் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்” என்றார் காந்திஜி. அந்தச் சிறுமி, மகாத்மாவின் கட்டளைப்படி பவுன்களைக் கொண்டு போய்க் கொடுத்து, அவரது பாராட்டுதல்களையும் ஆசிகளையும் பெற்றார்.

மகாத்மாவின் ஆசிகளை மட்டுமா? நேருஜி, பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்ற பல பெரும் தலைவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்றவர் அந்தப் பெண். ஒரு மாபெரும் தியாகியின் அரவணைப்பில் வளர்ந்தவர். தேசபக்தியும் சுதந்திர வேட்கையும் அவருடைய உடன்பிறப்புகள்.

அவர்தான் – தீரர் எஸ்.சத்திய மூர்த்தியின் மகளான திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.

கேரள நாட்டுக் கோட்டையம் பகுதிக்குச் சென்று, திருமதி லக்ஷ்மியைப் பற்றி விசாரித்தால், அவருடைய அரும்பணிகளின் சிறப்பு நன்கு புரியும். அங்கே ‘பிளாண்டராக’ இருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லத்தரசியான திருமதி லக்ஷ்மி, பங்கு பெற்றிராத சமூக ஸ்தாபனங்களே இருக்க முடியாது. தமது இல்லத்திலேயே பெண்களுக்காக இலவச மருத்துவமனை ஒன்று நடத்தி வந்தார் அவர். ‘ஸ்டேட் சோஷல் வெல்ஃபேர் கமிட்டி’ ஒன்றின் தலைவராகப் பணியாற்றுகிறார். மாகாண குடும்பக் கட்டுப்பாடு திட்டக் கல்வி ஆசிரியராக இருக்கிறார். இவை தவிர, கூட்டுறவு இயக்கங்களிலும் தொண்டாற்றுகிறார்.

மகாராஷ்டிரத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, கேரளத்தில் வாழ்க்கைப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி, தற்போது ‘புஸ்தக சங்கம்’ (Book venture) ஒன்றைத் துவக்கி, சிறப்பான இலக்கியப் பணி ஆற்றிவருகிறார். இதற்கு, சென்னையில் ஒரு பெரிய புஸ்தகக் கம்பெனியை வைத்து நடத்தி வரும் இவருடைய கணவர், பேராதரவு தந்து வருகிறார்.

“என் கணவருக்குப் புத்தகங்கள் மீதுதான் முதல் காதல். நான் கூட இரண்டாவது பட்சம்தான்” எனக் கூறும் திருமதி லக்ஷ்மி, இந்தப் புத்தகசங்கத்தின் வளர்ச்சிக்காக, இதுவரை முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சொந்தப் பணத்தைச் செலவழித்துள் ளார்.

“இந்தியாவிலுள்ள படித்த தமிழ்ப் பெண்களில் 500 பேர் எனக்கு உதவி செய்தால், இந்தக் கிளப்பை வெற்றிகரமாக நடத்திவிடுவேன் நான். ஆளுக்கு ஆறு மெம்பர்களைச் சேர்த்துத் தந்தால், மூவாயிரம் மெம்பர்கள் கிடைத்துவிடுவார்கள். அது போதும் எனக்கு” என்கிறார்.

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள 500 பெண்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள்! கண்டிப்பாகக் கிடைப்பார்கள்.

“காந்தியடிகளை முதன்முதலாக எப்போது பார்த்தீர்கள்?” என்று கேட்டபோது, சிறிது நேர யோசனைக்குப் பின்னர், “சரியாக நினைவில்லை. ஆனால், பல முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். என்னிடம் மிகவும் அன்பு உண்டு அவருக்கு. என்னை ஹிந்தியில் கடிதம் எழுதச் சொல்லுவார். நான் எழுதும் ஹிந்திக் கடிதத்திலுள்ள பிழைகளையெல்லாம் திருத்தி, அவற்றைத் திருப்பி அனுப்புவார். தாமே கைப்பட விலாசம் முதற்கொண்டு எழுதுவார். அவரிடம் நான் கவனித்த பெரிய விஷயம், அவருடைய போட்டோகிராபிக் மெமரி! நமது பெரியவாளைப் பற்றிச் சொல்வோமே, அதே போன்ற ஞாபக சக்தி உடையவர் அவர்” என்றார்.

நமது சுதந்திரப் போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி அவர்கள் ஆற்றியுள்ள மகத்தான தொண்டினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் கூடவே நிழல் போல இருந்து வந்த திருமதி லக்ஷ்மியிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால், அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்த தேச பக்தியையும், தியாக உணர்வையும் பற்றிய சிறப்பான விளக்கம் கிடைக்கும்.

காமராஜ் அவர்களைப் பற்றிக் கேட்ட போது, “திருவல்லிக்கேணி வீட்டுக்கு வருவார் அவர். அவர் அதிகமாகப் பேசியே கேட்க முடியாது. அப்பாவிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை. அப்பாவும் காமராஜ் அவர்களின் ஆற்றலை நன்கு அறிந்து வைத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை காமராஜ் அவர்களிடம் நான் இரண்டு சிறப்பான குணங்களைக் கவனித்து வருகிறேன். பழங்காலத் தலைவர்களையும் தியாகிகளையும் மறக்காத குணம். பதவிக்கு ஆசைப்படாத மனம். இந்த இரண்டுதான்! அவர் வகித்த பதவிகள் எல்லாம் வற்புறுத்தி அவரிடம் ஒப்படைக்கப்பட்டவை. டி.ஸி.ஸி. தலைவர் பதவியை அப்பா அவரிடம் வற்புறுத்திதான் ஏற்றுக்கொள்ள வைத்தார். ‘நீ தலைவனாக இரு; நான் காரியதரிசியாக இருக்கிறேன்’ என்றார் அப்பா. ஒரு முறை தலைவராக இருந்தவர், காரியதரிசியாக உழைக்க முன் வந்தார் என்றால், காமராஜ் அவர்களின் ஆற்றலை அப்பா எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது தெரிகிறதல்லவா?” என்றார் லக்ஷ்மி.

ஒருமுறை, காமராஜ் அவர்களின் கல்யாணத்தைக் காணவென்று ஆயிரம் மைல் பிரயாணம் செய்தார் திருமதி லக்ஷ்மி. ஆமாம்! புவனேஸ்வர் காங்கிரஸில், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை காமராஜ் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் திருமதி லக்ஷ்மி.

“எங்கள் காமராஜுக்கு அதுதானே திருமணம்! அந்த ‘காடி’யை அவர் அலங்கரிக்கப் போகும் கண்கொள்ளாக் காட்சியைக் காண, நானும் என் கணவரும் புவனேஸ்வரம் போனோம். உழைப்பும் நேர்மையும் கௌரவிக்கப்பட்ட மகத்தான காட்சியைக் கண்டுவிட்டு வந்தோம்” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார் திருமதி லக்ஷ்மி.

சென்னை மேல்சபையில் அங்கத்தினர் பதவி வகிக்கும் திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, ஒரு காலத்தில் பல பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இசையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், நன்றாக வீணை வாசிப்பார்.

பெண்கள் முன்னேற்றம், தமிழ் இலக்கிய வளர்ச்சி இவை இரண்டிலும்தான் தற்போது இவர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

அன்றைக்கு 30000 ரூபாய் என்றால் இன்றைக்கு மூன்று கோடி பெறும் என்று நினைக்கிறேன். வீட்டை அடகு வைத்து இத்தனை பணத்தை போட்டிருக்கிறார். உண்மையான புத்தக காதல்!

திருமலை ராஜன் புண்ணியத்தில் சமீபத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட அபிதா புத்தகத்தை படித்தேன். என்ன அருமையான புத்தகம்! நான் இங்கே லா.ச.ரா.வின் எழுத்தை சொல்லவில்லை, புத்தகத்தின் அட்டை, பேப்பர், பைண்டிங் ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். உலகத் தரம் வாய்ந்த புத்தகம் வெளியீடு. இன்றைக்கு கூட இப்படி புத்தகங்கள் வருவதில்லை. யாராவது பழைய வாசகர் வட்டம் (நல்ல கண்டிஷனில் உள்ள) வெளியீடுகளை விற்பதாக/கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், நான் நன்றியுடன் வாங்கிக் கொள்கிறேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஆளுமைகள்

தொடர்புடைய பிற பதிவுகள்
வாசகர் வட்டம் உருவாக்கி நேர்த்தியான புத்தகங்களை பதிப்பித்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி (Lakshmi Krishnamoorthi)
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அளித்த ஒரு பேட்டி
காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி

நான் ஆதாரமாக கதைகள்,  நாவல்கள் எழுதும் எழுத்தாளன்.  என்னைப் பல முறை பல காரணங்களுக்காகத்  திரைக்கதை எழுதுவதற்கு அழைப்பார்கள்.  கதை பிடித்திருந்தால்தான் அவற்றை எடுத்துக் கொள்வேன்.

கதை பிடித்திருந்தது என்பதற்கு சில விதிகள் எனக்கு உள்ளன.

முதலாவதாக கதைக்கு ஒரு ‘ப்ரிமைஸ்‘ இருக்க வேண்டும்.  அதன் சாரத்தை ஒரு வரியில் சொல்வதற்கு இயல வேண்டும்.

ப்ரிமைஸ்‘ என்பது,  கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டும்.  இதை ‘வாட் இப்  — what if ‘ என்பார்கள்.  எல்லா நல்ல  படங்களுக்கும் இந்த ‘ப்ரிமைஸ்’ உண்டு.

இந்த ‘ப்ரிமைஸ்‘ என்பது நன்றாக, எழுதப்பட்ட பெரிய நாவல்களுக்குக் கூட உண்டு.  உதாரணமாக பொன்னியின் செல்வன்.
சில உதாரணங்கள்:
பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் ஐந்து பையன்கள் வீட்டைவிட்டுச் சென்றால் என்ன ஆகும் ?  (பாய்ஸ்)

ஒரு பணக்காரனுக்குத் தன்னை அறியாமல் திருட்டுப் பழக்கம் இருந்தால் என்ன ஆகும் ?  (கண்களால் கைது செய்)

பழைய காலேஜ் நண்பர்கள் ஒருவன் கல்யாணத்தில் சந்தித்தால் என்ன ஆகும் ?  (பெப்சி)

திருநெல்வேலி கிராமத்துப் பெண்ணின் கணவனைக் காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டால் என்னாகும் ?  (ரோஜா)

http://www.bollywood-stars.net/images/terror-roja.jpg

சுதந்திரப் போராட்டத் தாத்தா, லஞ்சம் வாங்குபவர்களையெல்லாம்  கொல்ல ஆரம்பித்தால் என்னாகும் ?  (இந்தியன்)

http://www.123musiq.com/Tamil-Images/ARRahmanMusicCollections/Indian.JPG

http://3.bp.blogspot.com/_MJBOxOuZOkU/RquX1HOdJcI/AAAAAAAAAHQ/VHhBXUSK8u8/s400/indian1.PNG

வரவேண்டிய சொத்தை எதிர்பாராமல் இழந்தால்,  இரு சகோதரிகளின் காதல்கள் என்னாகும் ?  (கண்டுகொண்டேன்  கண்டுகொண்டேன்)

அல்லது

சொத்தை இழந்த பெண்ணுக்குக்  காதல்  மலர்ந்தால் என்ன ஆகும் ?   (கண்டுகொண்டேன்  கண்டுகொண்டேன்)

http://3.bp.blogspot.com/__7s9GUTM-oY/R5p2gUQhW0I/AAAAAAAABeI/fis6HH1tL5I/s320/200px-Kandukondain_Kandukondain.jpg

http://www.thiraipadam.com/images/movies/2000/Kandukonden%20Kandukonden4.jpeg

http://www.thiraipadam.com/images/movies/2000/Kandukonden%20Kandukonden3.jpeg

http://chandrag.tripod.com/9903_ash.jpg

ஆப்த நண்பனிடம்,  அவன் தங்கையைக் காதலிப்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டால் என்னாகும் ?  (கண்ணெதிரே தோன்றினாள்)

பிரிவினையின் வகுப்புக் கலவரங்களில் மனைவியை இழந்தவன்,  காந்திதான் அதற்குக் காரணம் எனத் தீர்மானித்தால் என்னாகும் ?  (ஹே ராம்)

http://i44.tinypic.com/155p75z.jpg ஹே ராம்

ஒரு சாதாரண டி.வி.  ரிபோர்ட்டருக்கு,  ஒரு நாள் மட்டும் முதல்வராகும் வாய்ப்பு வந்தால் என்னாகும் ?  (முதல்வன்)

http://icdn.raaga.com/Catalog/CD/T/T0000002.jpg

ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன் குள்ளன் என்றால் என்ன ஆகும் ? (அபூர்வ சகோதரர்கள்)

http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SnvLZKtqNmI/AAAAAAAAAm4/oCR2hsqj8Ko/s400/appu.jpg

http://2.bp.blogspot.com/_ps_cLyiVbhA/SgAgqtiN6kI/AAAAAAAAA9c/H6la6rNNaL0/s400/aboorva.jpg

ஒருவன் விரும்பும் பெண்ணை அவனது இரட்டை சகோதரன் கல்யாணம் செய்து கொண்டுவிட்டால் என்ன ஆகும் ? (வாலி)
http://www.ajithfans.com/article-uploads/2010/03/vaali-1.jpg
http://i40.tinypic.com/30m5ru8.jpg

ஒரு மிகச் சிறிய கிராமத்தில் ஒருவனுக்கு லாட்டரி விழுந்த அதிர்ச்சியில் அவன் இறந்து போனால் என்ன ஆகும் ? (Waking Ned Divine என்னும் ஐரிஷ் படம்)

ஒரு கணவன் மனைவி தம் பெண் குழந்தையின் ஒன்பதாவது பிறந்த நாளில் அவள் தத்து எடுக்கப்பட்டவள் என்ற உண்மையை அவளிடம் முதல் முறையாகச் சொன்னால் என்ன ஆகும் ?  (கன்னத்தில் முத்தமிட்டால்)
கன்னத்தில் முத்தமிட்டால்கன்னத்தில் முத்தமிட்டால்கன்னத்தில் முத்தமிட்டால்கன்னத்தில் முத்தமிட்டால்கன்னத்தில் முத்தமிட்டால்

ஓர் இளம் பெண் பெரிய வித்வானைச் சபையில் தைரியமாகத் தமிழில் பாடச் சொன்னால் என்ன ஆகும் ?  (சிந்து பைரவி)
SindhuBhairavi சிந்து பைரவி

இப்படி யோசித்தால்,  எல்லா வெற்றிப் படங்களிலும் இந்த ‘என்னாகும்‘  இருக்கும்,  இருக்க வேண்டும்.   இதை நம் சினிமா பரிபாஷையில்  ‘நாட்‘ அல்லது ‘தாட்‘ என்கிறார்கள்.  ஹாலிவுட்டில்  அவர்கள்  ‘ப்ரிமைஸ்‘  என்கிறார்கள்.

நான் தினமணி கதிரில் இருந்த போது ஒரு நாள் வித்வான் லட்சுமணன் எனக்கு போன் செய்து,  “உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.  எம்.ஜி.ஆர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்.  தாங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும்”  என்று கூறி,  தேதி நேரம் இடம் மூன்றையும் குறிப்பிட்டார்.  அவர் விருப்பப்படியே நான் சத்யா ஸ்டுடியோவுக்குப் போய் எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.

அன்று எம்.ஜி.ஆர் அவர்களின் அன்னையின் நினைவு நாள்.

“வருடா வருடம் என் அன்னையின் நினைவு நாளன்று நான் மிகவும் விரும்பும் ஒருவரை அழைத்து அவருக்குப் பாயசம் தருவேன்.  இந்த ஆண்டு உங்களுக்கு!”   என்று பாயசத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார்.  பிறகு அவர் மதிய உணவுக்கு உள்ளே சென்ற போது கூடவே என்னையும் அழைத்துச் சென்று பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

“ஆனந்த விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்?’   என்று நான் எழுதும் கட்டுரைத் தொடரைப் படிக்கிறீர்களா ?”  என்று கேட்டார்.  இரண்டொரு வாரம் மட்டுமே படித்ததாகச் சொன்னேன்.

“இப்போது உங்களை அழைத்தது எதற்குத் தெரியுமா ?”

“தெரியாது.”

“”உங்கள் தினமணி கதிரில் நான் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதப் போகிறேன்.”

“அதற்கென்ன,  தாராளமாகச் செய்யுங்கள்.  ஆனால் ஒரு சின்ன நிபந்தனை.  உங்கள் கேள்வி பதில் பகுதியை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடும் உரிமை எனக்கு உண்டு.  நான் சொல்லும் வரை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.  நீங்களாகவே நிறுத்தி விடக் கூடாது”  என்றேன்.


“அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை.  அதில் நான் தலையிட மாட்டேன்”  என்று  எம்.ஜி.ஆர் உறுதி அளித்தார்.

கதிரில் இரண்டு மூன்று வாரங்கள் விளம்பரம் செய்தேன்.  அதன் பலனாய் அலுவலகத்துக்கு வந்து குவிந்த வாசகர்களின் கேள்விகளை சாக்குப் பையில்தான்  மூட்டை மூட்டையாகக் கட்டிவைக்க வேண்டியதாயிற்று.  ஒரு தனி மனிதரின் பதிலுக்காக அப்போது வந்த கடிதங்களின் எண்ணிக்கை அளவுக்கு என் பத்திரிகை வாழ்வில் நான் எங்கும் கண்டதில்லை.

அந்த ஆண்டு ஆகஸ்ட் 14 -ம் தேதி பெரம்பூரில் ஒரு சபாவின் ஆதரவில் நான் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ நாடகத்தை திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழு நடத்தியது.  அன்றைய நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் தலைமை தாங்கினார்.   அந்தக் கதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் நாடகத்துக்கு அழைத்திருந்தார்கள்.  நான் வருவதாகச் சொல்லியிருந்த போதிலும் போக முடியாதபடி இக்கட்டான ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

ரொம்ப நாளாகவே காமராஜ் அவர்கள் என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அன்று பார்த்து வருவதாகத் தகவல் அனுப்பி விட்டார்.  அவர் வருவதை நான் மிகப் பெரிய பாக்கியமாகக் கருதியதால் சபாக்காரர்களுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதி அனுப்பி விட்டேன்.  “தமிழகத்தின் ராக்பெல்லரான திரு. எம்.ஜி.ஆர் அவர்களே விழாவுக்கு வரும்போது பிறகென்ன ?” என்று நகைச்சுவையாக அதில் எழுதியிருந்தேன்.  விழாவின்போது என் கடிதத்தை  மைக்கில் படித்து விட்டார்கள்.  காமராஜ் வீட்டுக்கு வருவதால்தான் நான் வரவில்லை என்பது எம்.ஜி.ஆருக்கும் தெரிந்து விட்டது.  ஆனால் அது பற்றி அவர் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

See  full size image
ஆகஸ்ட் 14 -ம் தேதி இரவு எட்டரை மணிக்கு என் வீட்டுக்கு வந்த காமராஜ் மறுநாள் காலை 3 -30  மணிக்குத்தான், அதாவது ஆகஸ்ட் 15 -ம் தேதிதான் திரும்பிப் போனார்.

Cho Ramaswamy

என் அழைப்பின் பேரில் அன்று ‘சோ’ வும் என் வீட்டுக்கு வந்திருந்தார்.  நாங்கள் இருவரும் அன்று இரவு நாட்டு நடப்பு பற்றி திரு. காமராஜ் அவர்களோடு விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்புறமும் எம்.ஜி.ஆர். பதில்கள் கதிரில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.  அவர் தம்முடைய பதில்கள் சிலவற்றில் சோ அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார்.  நான் அவற்றைப் பிரசுரிக்கவில்லை.  அரசியல் கருத்துக்கள் எப்படியிருந்தாலும் சோவும் என்னைப்போல் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பதால் அவரைத் தாக்கி எழுதும் பதில்களை என் பத்திரிகையில் வெளியிடுவது முறையல்ல என்று எனக்குத் தோன்றியது.  எனவே எம்.ஜி.ஆர். ‘சோ’வைத் தாக்கி எழுதியிருந்த பதில்களை மட்டும் தனியாக எடுத்து வைத்து விட்டு மற்றவற்றைப் பிரசுரித்து வந்தேன்.

நாலைந்து வாரங்கள் கழித்து வித்வான் லட்சுமணன் என்னிடம் வந்தார்.  “எம்.ஜி.ஆர்.எழுதும் பதில்களில் சிலவற்றை நிறுத்தி விடுகிறீர்களே,  எல்லாவற்றையுமே வெளியிட்டால் தேவலை” என்றார்.

“சோ வைத் தாக்கி எழுதும் பதில்களைத்தானே சொல்கிறீர்கள்?  அவற்றை நான் பிரசுரிப்பதற்கில்லை.  மன்னிக்க வேண்டும்”  என்றேன்.  “இல்லை,  எம்.ஜி.ஆர். எதிர்பார்க்கிறார்.  அதெல்லாம் அவருடைய கருத்துதானே ?  எல்லாவற்றையும் போட்டு விடுங்களேன்” என்றார்.  வித்வான் லட்சுமணனின் தர்மசங்கடம் எனக்குப் புரிந்தது.

இது பற்றி நானும் எம்.ஜி.ஆரும் சந்தித்துப் பேசுவது நல்லது என்று எனக்குத் தோன்றியதால் வித்வானிடம்,  “நான் எம்.ஜி.ஆரைப் பார்த்துப் பேசட்டுமா?” என்று கேட்டேன்.

“ரொம்ப நல்லது”  என்றார் வித்வான்.

அதன்படி எம்.ஜி.ஆரை ஒரு நாள் சந்திக்கப் போயிருந்தேன்.

கோடம்பாக்கம் ஸ்டூடியோ ஒன்றில் அவர் இருந்தார்.  ஏதோ சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.  நான் போய் ஒரு மணி நேரமாகியும் எம்.ஜி.ஆர் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை.  பார்த்துவிட்டுப் பேசாமலேயே இருந்தார்.  நானாக வலியச் சென்று பேசியபோது ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்.  ஏதோ கோபம் என்று மட்டும் புரிந்து கொண்டேன்.  எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.  ஆனாலும் அரைமணி நேரம் பொறுமையோடு உட்கார்ந்து ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்புறம் பேசுவார் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால் ஷூட்டிங் கலைந்த பிறகும் அவர் என்னிடம் பேசத் தயாராயில்லை என்பது தெரிந்தது.  “இங்கே இவரை ஏன் பார்க்க வந்தோம்”  என்று எனக்கு நானே நொந்து கொண்டேன்.    கடைசியில், “நான் போய் வருகிறேன்”  என்று சொல்லி விடை பெற்றுக் கொண்ட போதுகூட  அவர்,  “எதற்காக வந்தீர்கள்?  ஏன் போகிறீர்கள்?”  என்று என்னிடம் எதுவுமே  கேட்கவில்லை.

என் மீது எம்.ஜி.ஆர்.  கோபமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் கோபம் எதனால் என்பது விளங்கவில்லை.  இரண்டு காரணங்களுக்காக அவர் கோபப் பட்டிருக்க வேண்டும்.  ஒன்று அவரைவிட நான் காமராஜருக்கு முக்கியத்துவம் தந்து அவர் தலைமை வகித்த நடக்க நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்ததாயிருக்கலாம்.  அல்லது ‘சோ’ பற்றி அவர் எழுதிய பதில்களைப் பிரசுரிக்காமல் விட்டதா யிருக்கலாம்.  இவை இரண்டில் எது அவருக்குக் கோபமூட்டியது என்பது அவருக்குத் தான் தெரியும்.

அண்ணா இறந்தபோது நான் விவரம் அறியும் வயதில் இல்லை. ஆனால் அப்போது தமிழகமே உண்மையான துக்கத்தில் ஆழ்ந்தது என்றுதான் தோன்றுகிறது. அடக்கி வாசிக்கும் பழக்கம் எல்லாம் தமிழனுக்கு கிடையாது. அண்ணாவோ உண்மையில் கட்சியைத் தாண்டி பலருடைய நன்மதிப்பைப் பெற்றவர்.

அந்த சமயத்தில் ஜெயகாந்தன் காங்கிரஸ்காரர். காங்கிரசுக்குக்காக அவர், நா.பார்த்தசாரதி, சிவாஜி கணேசன், சோ ராமசாமி, கண்ணதாசன் மாதிரி கலை இலக்கிய நாடக உலக பிரபலங்கள் எல்லாம் காங்கிரசின் பிரச்சார பீரங்கிகள். பேச்சாற்றல், இல்லாவிட்டால் சினிமாக்கார கரிஸ்மா எதையாவது வைத்து அவர்களுக்கும் கூட்டம் வந்தது.

அண்ணா நோய் தாக்கி இறந்து போனார். நாகரிகம் கருதி அது நாள் வரை எதிர்த்தவர்கள் கூட அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். கண்ணதாசன் மாதிரி அண்ணாவுடன் பழகியவர்கள், அண்ணாவின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்தவர்கள் காங்கிரஸ் “சார்பாகவே” அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினார்கள். ஜெயகாந்தன் அங்கே சிங்கம் போல போயிருக்கிறார். இறந்துவிட்டார் என்பதற்காக இது நாள் வரை நான் அவரைப் பற்றி சொன்னதெல்லாம் வாபஸ் வாங்க முடியாது, அவருடைய வழிமுறைகளுக்கு நான் எப்போதும் எதிரி, அவர் மீது எனக்கு இருந்த விமர்சனங்கள் எல்லாம் அவர் இறந்துவிட்டதால் மறைந்துவிடாது, நாகரீகம் கருதி அவரது குறைகளை இந்த சமயத்தில் பெரிதாக சொல்லாமல் இருப்பது வேறு, அவரிடம் குறையே இல்லை என்று பேசுவது வேறு என்று முழங்கி இருக்கிறார். இட்லிவடை தளத்தில் அவரது பேச்சை போட்டிருந்தார்கள். அதைப் பற்றி அப்போதே எழுத கை வரவில்லை. அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:

இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப் போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனி மனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.

அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும் மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.

அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.

பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை…

அந்த ஜெயகாந்தன்தான் இன்று கலைஞருக்கு புகழாரம் சூட்டுகிறாராம்! எல்லாம் நேரம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
இட்லிவடை தளத்தில் ஜெயகாந்தனின் பேச்சு
ஜெயகாந்தன் பக்கம்

கணையாழியின் கடைசிப் பக்கங்களிலிருந்து  (பிப்ரவரி – 1991 )

கிளம்பும்போதே வேன் மக்கர் செய்தது.  இந்த தடங்கலுக்கு ஏதாவது தெய்வக் குற்றம் சம்பந்தப்பட்ட காரணம் சொல்வதற்குள் மற்றொரு வாகனம் வந்து விட்டதால் தடங்கலை மறந்து விட்டோம்.  காலை ஒன்பதரை மணிக்கு காஞ்சிபுரம் சென்றோம்.  நான்காம் நூற்றாண்டிலிருந்து குறிப்பிடப்பட்ட நகரம் இன்று ஒலிபெருக்கிகள் மூலம் ரம் பம் பம் என்று அலறிக் கொண்டிருந்தது.  ராஜீவ் வருகிறார் என்று சவுக்குக் கம்பங்கள் நட்டுக் கொண்டிருந்தார்கள்.  அழகிரி பஸ்கள் இரைச்சலாகத் தெருவை ஆக்ரமித்துக்கொண்டு  செல்ல முனிசிபாலிடிக்காரர்கள் தெருவை சுத்தம் செய்கிறேன் என்று புழுதி கிளப்பிக்கொண்டிருந்தார்கள்.

சங்கர மடத்தில் புதுப் பெரியவாள் பாதபூஜை செய்து கொண்டிருக்க,  பரமாச்சாரியார் தரிசனத்துக்கு, முன் மண்டபத்தில் வெள்ளைக்காரிகள் காத்துக் கொண்டிருந்தனர்.  பூஜை முடிந்ததும் அவரைப் பார்க்கலாம் என்றால் ‘ஸ்பீக்கர் ரபிராய் வந்துட்டான்’.   அவர் போன கார்களின் புழுதி அடங்கினதும்தான் போது மக்களை அனுமதித்தார்கள்.  பரமாச்சாரியாள்  அவர்களை நான் முன்பு மெகபூப் நகரில் தரிசித்திருக்கிறேன்.  இப்போது நூறு வயசுக்கருகில் அவர் தம் ஞானயாத்திரையின் இறுதியில் இருக்கிறார்.  ஈஸிசேரில்  சாய்ந்திருக்க காதருகில் இரைந்து  இன்னார் வந்திருக்கா  என்று வந்தவர்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தி,  எப்போதாவது ஆசிர்வாதம் செய்கிறார்.  அத்தனை ஞானம் கண்டு,  அத்தனை தூரம் நடந்து,  அத்தனை போதித்து,  அத்தனை எழுதி,  அத்தனை தலைவர்களும்,  நீதிபதிகளும்,  ராஜாக்களும்,  ஆர்தர் கோஸ்டலர்களும் வந்து வந்து பார்த்துப் பேசி ஓய்ந்துபோன அந்த மனதில்,  இப்போது என்ன எண்ணங்கள் ஓடும் என்று வியப்படைகிறேன்.  பட்டாபிராமன் என்னைப் பற்றிச் சொல்லி “இவர் சுஜாதான்னு கதை எழுதறவர்.  குவளகுடி சிங்கமையங்கார்னு  சீரங்கத்துல வேத பாடசாலை ஸ்தாபிச்சவர்.  அவருடைய பேரன்….”  இதெல்லாம் காதில் சொனனபோது  சலனமே இல்லை.  “ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ண ஒத்தாசை செய்யறதா சொல்லியிருக்கார்”  என்று கேட்ட மாத்திரத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தி வாழ்த்தினார்.  காமகோடி மடம் சிருங்கேரி போல அத்தனை செல்வாக்கு இல்லை.  பெருந்தலைவர்கள் வந்து பார்த்தாலும் காசுக்கு பிரயோசனமில்லை.  புதுப் பெரியவாள் என்று சொல்லப்படும் தேஜஸ்வியான  முகம் கொண்ட அந்த இளைஞரிடம் மடத்தில் இருக்கும் ஆப்பிள் பழங்களை விட ஆப்பிள் கம்ப்யூட்டர் உபயோகமானது.  அதைப் பயன்படுத்தி ரிகார்டுகளை வேணுமெனில் சம்ஸ்க்ருதத்தில்கூட எழுதி வைத்துக் கொள்ளலாம்.  நல்ல புத்தகங்கள் பதிப்பிக்கலாம்.  உதாரணமாக ஹிந்து என்பது யார் என்பது பற்றியே பல்லாயிரம் குழப்பங்கள் உள்ளன,  அதுபற்றி எழுதலாம்.  வருமானக் கணக்கை துல்லியமாக வைத்துக் கொண்டு அனாவசிய செலவைக் கட்டுப்படுத்தலாம்  என்று சொன்ன போது ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.  நாளந்தா போல ஒரு பல்கலைக் கழகம் காஞ்சிபுரத்தில் ‘கடிகாஸ்தானம்’ என்ற பெயருடன் முன்பு இருந்திருக்கிறது.  அதைத் திரும்ப அமைக்கத் திட்டமிட்டு நிலம் கூட வாங்கியிருக்கிறார்கள்.  1993 -ல் முடிக்க மூன்று கோடி ரூபாய் தேவைப்படும்.  அதற்கு உதவி செய்ய பெரிய மனிதர்களைக் கேட்பதில் தப்பில்லை என்றேன்.  சாந்தமாகப் புன்னகைத்தார்.

Vassily Smyslovவாசிலி ஸ்மிஸ்லோவ் யாரென்று உங்களுக்கு தெரிந்திருந்தால் உங்களுக்கு செஸ் பிடிக்கும். ஸ்மிஸ்லோவ் தலை சிறந்த செஸ் ஆட்டக்காரர்களில் ஒருவர். பத்து நாளைக்கு முன் இறந்துபோனார் – 27 மார்ச் 2010 அன்று. ரஷியா செஸ் உலகத்தை முழுவதுமாக வியாபித்திருந்த நாட்களில் உலக சாம்பியன் ஆக – ஏழாவது உலக சாம்பியன் – இருந்தவர். இந்தியாவின் ஆனந்த் 14ஆவது உலக சாம்பியன்.

செஸ் விளையாட்டில் காலம் காலமாக ஒரு அநியாயம் உண்டு. சாம்பியன் ஆவது கஷ்டம். ஆகிவிட்டால் உங்களை அங்கே இறக்குவது அதை விட கஷ்டம். நான்தான் உலக சாம்பியன் (கனவாவது காண்போமே) என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்னுடன் போட்டி போட யாருக்கு தகுதி உண்டு என்று இரண்டு மூன்று வருஷம் விளையாடி ஒரு ஆளைத் தேர்ந்தெடுப்பார்கள். அவரும் நானும் சில முறை விளையாடுவோம். இரண்டு பேரும் சமமான பாயின்ட்களைப் பெற்றால் நானே சாம்பியனாக தொடர்வேன். டென்னிசில் இந்த நிலை இருந்தால்: ஃபெடரர் இந்த வருஷம் சாம்பியன். இரண்டு வாரம் விளையாடி யார் ஃபெடரரோடு இறுதி சுற்றில் விளையாடுவது என்று தேர்ந்தெடுப்பார்கள். ஐந்து செட் விளையாடுவார்கள். ஆளுக்கு இரண்டு செட், கடைசி செட்டில் 6-6 என்ற நிலை இருந்தால் ஃபெடரர் சாம்பியனாக தொடர்வார். ஃபெடரரை எதிர்த்து விளையாடுபவர் இரண்டு வாரம் விளையாடி களைத்திருப்பாரே, ஃபெடரர் ஃப்ரெஷாக களம் இறங்குகிறாரே என்றெல்லாம் கிடையாது. நல்ல வேலையாக டென்னிஸ் நிலை அப்படி இல்லை. ஆனால் செஸ்சில் இன்றும் அப்படித்தான். நாலைந்து வருஷம் முன்னால் இப்படி ஆயிற்று. ஆனந்த் மிகவும் கஷ்டப்பட்டு ஏழெட்டு ரவுண்ட்களில் அற்புதமாக ஆடி கடைசியில் ஃபைனலில் ஃப்ரெஷாக களம் இறங்கிய கார்போவிடம் தோற்றுப் போனார். அதனால் கார்போவே “ஒரு உலக சாம்பியனாக” தொடர்ந்தார். (செஸ் நிலை பெரிய குளறுபடி – போன வருஷம்தான் சரியாயிற்று, ஆனந்த் எல்லாரும் ஏற்றுக்கொள்ளும், ஒரே உலக சாம்பியன் ஆனார்)

ஸ்மிஸ்லோவ் காலத்தில் இன்னும் அநியாயம் உண்டு. நீங்கள் சாம்பியனை வீழ்த்தினால் நீங்கள்தான் உலக சாம்பியன். ஆனால் தோற்றவர் உங்களிடம் ரீமாட்ச் விளையாடலாம். அதில் அவர் வென்றால் அவர்தான் சாம்பியன். அதிலும் நீங்கள் வென்றால்தான் சாம்பியன். ஸ்மிஸ்லோவ் காலத்தில் அப்படித்தான் ஆயிற்று. அவர் 54-இல் போட்வினிக்கிடம் “தோற்றார்” – அதாவது இருவரும் சமநிலை, அதனால் போட்வினிக்கே சாம்பியனாக தொடர்ந்தார். 57-இல் ஸ்மிஸ்லோவ் வென்றார். ஆனால் 58-இல் ரீமாட்சில் போட்வினிக்கிடம் தோற்றுப் போனார். அதற்குப் பிறகு மற்ற போட்டியாளர்களை சமாளித்து அவரால் உலக சாம்பியன்ஷிப்புக்கு போட்டி போடக் கூட வர முடியவில்லை. அன்றைய ரஷியா செஸ் விளையாட்டில் மிகவும் வலிமையானது. மிகைல் தால், டிக்ரன் பெட்ரோஷியான், போரிஸ் ஸ்பாஸ்கி போன்ற எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது உலக சாம்பியன்கள் விளையாட வந்துவிட்டார்கள். டேவிட் ப்ரான்ஸ்டீன், பால் கெரஸ் போன்ற அவர் ஜெனரேஷன் ஆட்டக்காரர்கள் இன்னும் வலிமையுடன் இருந்தார்கள். அவர்களை எல்லாம் மீறி அவரால் உலக சாம்பியன்ஷிப் போட்டி வரை வரமுடியவில்லை.

ஸ்மிஸ்லோவ் ஒரு கிளாசிகல் ஆட்டக்காரர். Positional play என்று சொல்வார்கள், அதில் அவரை அடிப்பது கஷ்டம். Positional play என்றால் எதிரிக்கும் உங்களுக்கும் சம அளவில் எல்லா காய்களும் இருக்கலாம், ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்பு கம்மி – அந்த மாதிரி நிலையை உருவாக்குவது. Tactical play என்பது அந்த காயை வெட்ட, இந்த காயை வெட்ட முயற்சி செய்து கொண்டே இருப்பது. செஸ்ஸை நன்றாக உணர்ந்தால்தான் positional play சாத்தியம். என் போன்ற துவக்க நிலை ஆட்டக்காரர்களுக்கு இது புரியலாம், ஆனால் அப்படி விளையாடுவது கஷ்டம்.

அவரது புகழ் பெற்ற வெற்றி ஒன்றை இங்கே பார்க்கலாம். இங்கே அவரது positional , tactical பலம் இரண்டுமே வெளிப்படுகிறது.

செஸ் ஒரு அதிசயமான விளையாட்டு. இருக்கும் 32 காய், 64 கட்டம் வைத்துக் கொண்டு என்ன எல்லாம் செய்ய முடிகிறது? அதை இப்படி விளையாடும் பெரிய வித்வான்களில் ஸ்மிஸ்லோவும் ஒருவர். அவரை ஒரு புன்னகையுடன் நினைவு கூர்வோம்!

தொக்குக்கப்பட்ட பக்கம்: செஸ்

தொடர்புடைய பதிவுகள்:
ஸ்மிஸ்லோவ் பற்றி விக்கி
ஸ்மிஸ்லோவ் vs போட்வின்னிக் – புகழ் பெற்ற கேம்

« முந்தைய பக்கம்அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers