அமெரிக்காவில் வாட்டர் கூலர் டாக் என்று சொல்வார்கள். தண்ணீர் குடிக்கும்போது சக பணியாளர்களிடம் என்ன பேசுவீர்கள்? நம் ஊரில் நான் வேலை செய்த வரைக்கும் சினிமா, கிரிக்கெட், சில சமயம் அன்றைக்கு பரபரப்பான செய்திகள். இப்போது டிவியும் இருக்கும், குறிப்பாக பெண்கள், அதுவும் ஆன்டிகள் பேசும்போது நேற்று சீரியலில் என்ன நடந்தது என்று பேசுவார்கள் என்று நினைக்கிறேன். (யாராவது நாலு பெண்கள் போடா MCP, பெண்களை ஸ்டீரியோடைப் செய்யாதே என்று எழுதுங்கம்மா!)
வாரப் பத்திரிகைகளில் தொடர்கதை என்பது எண்பதுகள் வரைக்கும் கூட மிக பாப்புலரான ஒன்று. அப்போதெல்லாம் டிவி சீரியலுக்கு பதிலாக அதுதான் பேசப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். என் அம்மா பேசியது எனக்கே தெரியும். பாலகுமாரன் இந்த வாரம் கரையோர முதலைகளில் என்ன எழுதினார், சிவசங்கரியின் தொடர்கதையில் அருண் அவன் நண்பனின் மனைவியிடம் தன் “காதலை” சொல்வானா (கதை பேர் நினைவில்லை, ஆனால் இந்த அருண்தாங்க எனக்கு கண்டாலே ஆகாது, ரொம்ப நல்லவரு!), இன்னும் ஒரு பத்து வருஷம் முன்னால் மணியன், அகிலன், நா.பா. என்ன எழுதுவார் என்று பேசியது இன்றைக்கு ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்த வாரத் தொடர்கதை formatஐ மீறி இலக்கியம் உருவாவது கஷ்டம். ஒரு ஃபார்முலா இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்பம் இருக்க வேண்டும். அந்த திருப்பம் அடுத்த ஐந்து நிமிஷத்தில் மறந்துவிடுகிற மாதிரி இருக்கலாம், ஆனால் திருப்பம் இருந்தே ஆக வேண்டும். ஒரு வாரம் கழித்துதான் அடுத்த இன்ஸ்டால்மென்ட் வரும், அதற்குள் போன வாரம் படித்தது மறந்துவிடும். அதனால் போன வாரம் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். சாண்டில்யன்தான் இதை ஏறக்குறைய ஒரு மெக்கானிகல் ப்ராசஸ் ஆகவே மாற்றினார். முதல் இரண்டு பக்கம் போன வாரம் என்ன நடந்தது, அடுத்த இரண்டு பக்கம் போன வார திருப்பத்தைப் பற்றி, கடைசி இரண்டு பக்கம் கதவைத் திறந்தான், அதற்கு பின்னால் நின்றவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் (பின்னால் நிற்பவர் ஒரு பைசாவுக்கு பெற மாட்டார்) என்று எழுதுவார். கோப்பெருந்தேவி எங்கே என்று ஒரு சிறுகதை உண்டு. இந்த மாதிரி எழுத்தை பகடி செய்து எழுதப்பட்டது. அது ஒரு தொடர்கதையின் ஒரு வார இன்ஸ்டால்மென்ட் – கதை பூராவும் குதிரை மேல் உட்கார்ந்துகொண்டு கோப்பெருந்தேவி எங்கே எங்கே என்று யோசிப்பார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. தொடர்கதை முழு நாவலாக வரும்போது இந்த வாரம் ஒரு திருப்பம் ஃபார்முலாவின் குறை மிக நன்றாகத் தெரியும்.
இலக்கியம் உருவாவது கஷ்டம் என்றாலும் சுவாரசியம் குறையாமல் எழுதுபவர்கள் உண்டு. சுஜாதாவை குறிப்பாக சொல்லலாம். கல்கி இதில் நிபுணர். ரா.கி. ரங்கராஜன், ஏ.எஸ்.பி. அண்ணாமலை, பி.வி.ஆர். மாதிரி சில மறக்கப்பட்ட எழுத்தாளர்கள் சுவாரசியமாக எழுதக் கூடியவர்கள். அகிலன், நா.பா. போன்றவர்கள் மிக பிரபலமாக இருந்தவர்கள். லக்ஷ்மி, சிவசங்கரி, மணியன், இந்துமதி, பாலகுமாரன் மாதிரி பலர் பெண்கள், அதுவும் ஆன்டிகள் மனதை கவர்ந்தவர்கள்.
தேவன் சில சமயம் இந்த ஃபார்முலாவை தாண்டி இருக்கிறார். அவரது ஸ்ரீமான் சுதர்சனம் எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று. ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் பணக் கஷ்டங்களை தத்ரூபமாக கண் முன் கொண்டு வருவார். ஜஸ்டிஸ் ஜகன்னாதன் ஒரு கிளாசிக். துப்பறியும் சாம்பு ஃபார்முலாதான், ஆனால் மிக சுவாரசியமான புத்தகம். தேவன் பி.ஜி. வுட்ஹவுஸ் மாதிரி எழுதக் கூடியவர். ஆனால் வுட்ஹவுஸ் வார்த்தைகளில் விளையாடி நம்மை சிரிக்க வைப்பார். தேவன் சிசுவேஷனல் காமெடி எழுதுகிறார். சில சமயம் புன்னகைக்கிறோம்.
தேவனின் கோமதியின் காதலன் ஃபார்முலா தொடர்கதைதான். விகடனின் பக்கங்களை நிரப்ப எழுதப்பட்ட ஒரு தொடர்கதை. இலக்கியம் நிச்சயமாக இல்லை. ஆனால் அந்த காலத் தொடர்கதைகள் எப்படி இருந்தன என்று நமக்கு அழகாக காட்டுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு quote உடன் ஆரம்பிக்கிறார். திருப்பம் வாராவாரம் உண்டு.
பல வருஷமாக சொல்லப்படும் கதைதான். ரங்கராஜன் தன் பேரை மாற்றிக் கொண்டு நாயகி வீட்டில் வேலைக்கு சேர்கிறான். அங்கே நான்தான் ரங்கராஜன் என்று சொல்லிக்கொண்டு மணி வருகிறான். ஆள் மாறாட்டம், காதல் என்று கதை போகிறது. உள்ளத்தை அள்ளித் தா படம் பார்த்ததில்லையா நீங்கள்? ஏறக்குறைய அந்த மாதிரி கதைதான்.
கதை முக்கியமே இல்லை. ஆனால் தேவன் காட்டும் ஒரு உலகம் – உயர் மத்திய வர்க்கம், பிராமணக் குடும்பம் (அப்பா மிராசுதார், மாமா ஜட்ஜ் இந்த மாதிரி) உண்மையாக இருக்கிறது. கதையின் சிறப்பான அம்சம் அதுதான். அதில் வரும் சின்ன காரக்டர்கள், அறிவிப்புகளை சொல்லிக் கொண்டே இருக்கும் சிறுவன், எதுகை மோனை பேசி பேசி தட்சணை கேட்கும் பிராமணர், சண்டை போடும் அண்ணன், ஊரிலிருந்து வரும் கணக்குப்பிள்ளை பையன் எல்லாம் சுவாரசியமான காரக்டர்கள்.
படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
கோமதியின் காதலன் டி.ஆர். ராமச்சந்திரன், சாவித்திரி நடித்து படமாகவும் வந்தது. ஓடவில்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>படிப்பு
தொடர்புடைய பதிவுகள்: தேவன் பற்றி சுஜாதா
April 13, 2010 at 6:57 மு.பகல்
எனது சம்பவாமி யுகே யுகே என்னும் இடுகையில் இக்கதை பற்றி நான் எழுதிய வரிகள்:
அமரர் தேவன் அவர்கள் எழுதிய நாவல், “கல்யாணி” என்று நினைக்கிறேன். (இல்லை அது கோமதியின் காதலன் என திருத்தியவருக்கு நன்றி) அதில் இரு சகோதரர்கள். அப்பா ஒரு கோபக்கார மிராசுதார். ஊரில் இல்லை. அப்போது அண்ணன் தம்பிகளுக்குள் பயங்கர சண்டை. தம்பி கோபித்து கொண்டு சென்னை செல்கிறான். இப்படி போகிறது கதை. கதை அப்படியே போகட்டும், நாம் ஒரு நிமிடம் இந்த சகோதரர்களின் தாயார் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்போம். அவருக்கு ஜோசியத்தில் அபார நம்பிக்கை. வீட்டில் அண்ணன் தம்பிகள் இப்படி அடித்து கொள்கிறார்களே, அதுவும் கணவர் ஊரில் இல்லாத சமயம் பார்த்து என நொந்து போகிறார். இளைய மகன் எங்கிருக்கிறானே என்று வேறு கவலை. அடுத்த நாள் காலை ஜோசியர் வீட்டுக்கு செல்கிறார். அப்போதுதான் ஜோசியர் மனைவி தன் கணவரின் சாமர்த்தியத்தைப் பற்றி தனது வெளிப்படையான எண்ணங்களைத் தெரிவித்து விட்டு, சமையலறைக்கு சென்றிருக்கிறார்.
இந்த நேரம் பார்த்து வந்த மிராசுதார் மனைவியின் முகத்தில் ஏகப்பட்டக் கவலை. ஜோசியருக்கோ அவர் கவலை. இருந்தாலும் நல்ல சம்பாவனை கிடைக்குமே. ஆகவே வரவேற்கிறார்.
ஜோ. வாங்கம்மா, என்ன கவலையா இருக்கீங்க? காளை விஷயம்தானே (அந்த ஊரில் மாட்டுக் கொள்ளை சர்வ சாதாரணம்)?
மி.ம. ஆமாம் ஜோஸ்யரே, இளையக்காளைதான் எங்க வீட்டு மூத்தக்காளையிடம் சண்டை போட்டுண்டு போயிட்டான்.
ஜோ. (திடுக்கிட்டு, ஆனால் சுதாரித்து கொண்டு) அடேடே, நான் பயந்தா மாதிரியே ஆயிடுத்தே. உங்க கிரக நிலை சரியில்லை. ஒரு பூஜை போடலாம்.
மி.ம. (அவருக்கு 100 ரூபாய் கொடுத்து விட்டு கேட்கிறார்): எதுக்கும் நம்ம சேதுவை பட்டணத்துக்கு அனுப்பி பார்க்கச் சொல்லட்டுமா?
ஜோ: (பணத்தை வேட்டியில் முடிந்து கொண்டே, விட்டேத்தியாக): பேஷா செய்யுங்கோ.
‘சேதுவுக்கு மூளை லேது’ என்று பெயர் வாங்கியிருந்த அந்த சேது பிறகு அக்கதையில் செய்யப் போகும் குளறுபடிகள்… அதை அந்த நாவலில் போய் படித்து கொள்ளவும்.
பார்க்க: http://dondu.blogspot.com/2007/06/blog-post_08.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
April 13, 2010 at 5:35 பிற்பகல்
டோண்டு, பதிவு நன்றாக இருக்கிறது! நீங்கள் ஒவ்வொரு பக்கத்தையும் நினைவு வைத்திருக்கிறீர்களே!
April 13, 2010 at 7:29 பிற்பகல்
அல்லயன்ஸ் கம்பெனி, மைலாப்பூர், சென்னை-4
பதிப்பகத்தார் தேவனின் ஏறக்குறைய அத்தனை நாவல்களையும் மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள்.
என் சிறுவயதில் வாரத்தொடர்கதையாக ஆனந்தவிகடனில் தேவனின் ‘ஸி.ஐ.டி.சந்துரு’ என்னும் நாவலை அந்த வயசுக்கேத்த சுவாரஸ்யத்துடன் படித்திருக்கிறேன். இந்த நாவலின் மூலமாகத்தான் அந்தக் கால சென்னையின் பல வீதிகள் எனக்கு அறிமுகம்.
தங்கச்சாலை தெரு, அரண்மனைக்காரத் தெரு,
சைனா பஜார், ஜார்ஜ் டவுனின் குறுக்குச் சந்துகள் நேப்பியர் பார்க் எல்லாம் வரும். சிறுவயதில் சென்னை ஒரு கனவுப் பிரதேசம். (அங்கு தான் பத்திரிகைக் காரியாலயங்கள் இருந்தமையால்) ஆனந்தவிகடன் அப்பொழுது நாலணா.
சி.ஐ.டி. சந்துருக்குப் பின் தான் தேவன் ‘துப்பறியும் சாம்பு’ எழுதினார்.
‘கல்கி’ விகடனிலிருந்து விலகித் தனிப்பத்திரிகை ஆரம்பித்த பிறகு,தேவன் தான் ஆனந்தவிகடனின் முதுகெலும்பாக இருந்தார்.
April 14, 2010 at 5:07 பிற்பகல்
ஜீவி, உங்கள் மறுமொழியை ரொம்ப நாள் கழித்து படிப்பது சந்தோஷமாக இருக்கிறது. சி.ஐ.டி. சந்துரு ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருக்கிறேன். நான் அல்லயன்ஸ் போன அன்று கரெக்டாக அது ஸ்டாக்கில் இல்லை. அடுத்த முறை பார்ப்போம்…
April 14, 2010 at 8:54 பிற்பகல்
[...] This post was mentioned on Twitter by rv_subbu. rv_subbu said: தேவனின் "கோமதியின் காதலன்" நாவல்: http://wp.me/pjKb9-Td [...]
April 16, 2010 at 2:20 பிற்பகல்
கிழக்கு பதிப்பகத்திலும் கிடைக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
April 16, 2010 at 9:58 பிற்பகல்
டோண்டு, கோமதியின் காதலன் புத்தகமா, இல்லை சி.ஐ.டி. சந்துருவா? எது கிழக்கு மூலம் பதிக்கப்பட்டிருக்கிறது?