அண்மையில் மறைந்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை பற்றி 10-4-66 அன்று விகடனில் வந்த கட்டுரை. விகடனுக்கு நன்றி! “புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய் சிரிப்பு” மாதிரி எழுதுவது quaint ஆக இருக்கிறது.
அவரை பற்றி நான் எழுதிய ஒரு முந்தைய பதிவு இங்கே. கானா பிரபு மறுபதிவு செய்த அவரது இன்னொரு பேட்டி இங்கே. காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி இங்கே.
ஹரிஜன நிதிக்காக, பணமும் நகைகளும் வசூல் செய்துகொண்டு இருந்தார் காந்தியடிகள். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருபவர்கள் எல்லோரிடமும், தாழ்த்தப்பட்ட மக்களை உய்விப்பதற்காக அந்த மகாத்மாவின் கரம் தாழும். புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கண்டவர்கள் எல்லோரும் தங்களிடமிருக்கும் நகைகள் அனைத்தையுமே தயங்காமல் கழற்றிக் கொடுத்துவிடுவார்கள்.
அன்றும் காந்தியடிகள் கரம் நீட்டிக்கொண்டிருந்தார். கான்வென்ட் பள்ளியிலிருந்து பள்ளிக்கூட டிரஸ்ஸிலேயே வந்திருந்த சிறுமி ஒருத்தி, மந்திரத்தால் கட்டுண்டவள் போல் தன் கையிலிருந்த வளைகளைக் கழற்றி மகாத்மாவிடம் கொடுத்துவிட்டாள்.
மறுநாள், மகாத்மா அந்தப் பெண்ணை அழைத்து, “நேற்று நீ வெள்ளி வளையைக் கழற்றிக் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டாயே!” என்று கேட்டார். “பாபுஜி, நான் அதைத் தங்க வளை என்று சொல்லவே இல்லையே! எல்லோரும் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்தவுடன், என்னையும் மீறி நான் என் கையிலிருந்ததைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள் சிறுமி.
“அதெல்லாம் தெரியாது. அதற்குப் பிராயச்சித்தமாகப் பவுன் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்” என்றார் காந்திஜி. அந்தச் சிறுமி, மகாத்மாவின் கட்டளைப்படி பவுன்களைக் கொண்டு போய்க் கொடுத்து, அவரது பாராட்டுதல்களையும் ஆசிகளையும் பெற்றார்.
மகாத்மாவின் ஆசிகளை மட்டுமா? நேருஜி, பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்ற பல பெரும் தலைவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்றவர் அந்தப் பெண். ஒரு மாபெரும் தியாகியின் அரவணைப்பில் வளர்ந்தவர். தேசபக்தியும் சுதந்திர வேட்கையும் அவருடைய உடன்பிறப்புகள்.
அவர்தான் – தீரர் எஸ்.சத்திய மூர்த்தியின் மகளான திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.
கேரள நாட்டுக் கோட்டையம் பகுதிக்குச் சென்று, திருமதி லக்ஷ்மியைப் பற்றி விசாரித்தால், அவருடைய அரும்பணிகளின் சிறப்பு நன்கு புரியும். அங்கே ‘பிளாண்டராக’ இருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லத்தரசியான திருமதி லக்ஷ்மி, பங்கு பெற்றிராத சமூக ஸ்தாபனங்களே இருக்க முடியாது. தமது இல்லத்திலேயே பெண்களுக்காக இலவச மருத்துவமனை ஒன்று நடத்தி வந்தார் அவர். ‘ஸ்டேட் சோஷல் வெல்ஃபேர் கமிட்டி’ ஒன்றின் தலைவராகப் பணியாற்றுகிறார். மாகாண குடும்பக் கட்டுப்பாடு திட்டக் கல்வி ஆசிரியராக இருக்கிறார். இவை தவிர, கூட்டுறவு இயக்கங்களிலும் தொண்டாற்றுகிறார்.
மகாராஷ்டிரத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, கேரளத்தில் வாழ்க்கைப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி, தற்போது ‘புஸ்தக சங்கம்’ (Book venture) ஒன்றைத் துவக்கி, சிறப்பான இலக்கியப் பணி ஆற்றிவருகிறார். இதற்கு, சென்னையில் ஒரு பெரிய புஸ்தகக் கம்பெனியை வைத்து நடத்தி வரும் இவருடைய கணவர், பேராதரவு தந்து வருகிறார்.
“என் கணவருக்குப் புத்தகங்கள் மீதுதான் முதல் காதல். நான் கூட இரண்டாவது பட்சம்தான்” எனக் கூறும் திருமதி லக்ஷ்மி, இந்தப் புத்தகசங்கத்தின் வளர்ச்சிக்காக, இதுவரை முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சொந்தப் பணத்தைச் செலவழித்துள் ளார்.
“இந்தியாவிலுள்ள படித்த தமிழ்ப் பெண்களில் 500 பேர் எனக்கு உதவி செய்தால், இந்தக் கிளப்பை வெற்றிகரமாக நடத்திவிடுவேன் நான். ஆளுக்கு ஆறு மெம்பர்களைச் சேர்த்துத் தந்தால், மூவாயிரம் மெம்பர்கள் கிடைத்துவிடுவார்கள். அது போதும் எனக்கு” என்கிறார்.
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள 500 பெண்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள்! கண்டிப்பாகக் கிடைப்பார்கள்.
“காந்தியடிகளை முதன்முதலாக எப்போது பார்த்தீர்கள்?” என்று கேட்டபோது, சிறிது நேர யோசனைக்குப் பின்னர், “சரியாக நினைவில்லை. ஆனால், பல முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். என்னிடம் மிகவும் அன்பு உண்டு அவருக்கு. என்னை ஹிந்தியில் கடிதம் எழுதச் சொல்லுவார். நான் எழுதும் ஹிந்திக் கடிதத்திலுள்ள பிழைகளையெல்லாம் திருத்தி, அவற்றைத் திருப்பி அனுப்புவார். தாமே கைப்பட விலாசம் முதற்கொண்டு எழுதுவார். அவரிடம் நான் கவனித்த பெரிய விஷயம், அவருடைய போட்டோகிராபிக் மெமரி! நமது பெரியவாளைப் பற்றிச் சொல்வோமே, அதே போன்ற ஞாபக சக்தி உடையவர் அவர்” என்றார்.
நமது சுதந்திரப் போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி அவர்கள் ஆற்றியுள்ள மகத்தான தொண்டினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் கூடவே நிழல் போல இருந்து வந்த திருமதி லக்ஷ்மியிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால், அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்த தேச பக்தியையும், தியாக உணர்வையும் பற்றிய சிறப்பான விளக்கம் கிடைக்கும்.
காமராஜ் அவர்களைப் பற்றிக் கேட்ட போது, “திருவல்லிக்கேணி வீட்டுக்கு வருவார் அவர். அவர் அதிகமாகப் பேசியே கேட்க முடியாது. அப்பாவிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை. அப்பாவும் காமராஜ் அவர்களின் ஆற்றலை நன்கு அறிந்து வைத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை காமராஜ் அவர்களிடம் நான் இரண்டு சிறப்பான குணங்களைக் கவனித்து வருகிறேன். பழங்காலத் தலைவர்களையும் தியாகிகளையும் மறக்காத குணம். பதவிக்கு ஆசைப்படாத மனம். இந்த இரண்டுதான்! அவர் வகித்த பதவிகள் எல்லாம் வற்புறுத்தி அவரிடம் ஒப்படைக்கப்பட்டவை. டி.ஸி.ஸி. தலைவர் பதவியை அப்பா அவரிடம் வற்புறுத்திதான் ஏற்றுக்கொள்ள வைத்தார். ‘நீ தலைவனாக இரு; நான் காரியதரிசியாக இருக்கிறேன்’ என்றார் அப்பா. ஒரு முறை தலைவராக இருந்தவர், காரியதரிசியாக உழைக்க முன் வந்தார் என்றால், காமராஜ் அவர்களின் ஆற்றலை அப்பா எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது தெரிகிறதல்லவா?” என்றார் லக்ஷ்மி.
ஒருமுறை, காமராஜ் அவர்களின் கல்யாணத்தைக் காணவென்று ஆயிரம் மைல் பிரயாணம் செய்தார் திருமதி லக்ஷ்மி. ஆமாம்! புவனேஸ்வர் காங்கிரஸில், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை காமராஜ் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் திருமதி லக்ஷ்மி.
“எங்கள் காமராஜுக்கு அதுதானே திருமணம்! அந்த ‘காடி’யை அவர் அலங்கரிக்கப் போகும் கண்கொள்ளாக் காட்சியைக் காண, நானும் என் கணவரும் புவனேஸ்வரம் போனோம். உழைப்பும் நேர்மையும் கௌரவிக்கப்பட்ட மகத்தான காட்சியைக் கண்டுவிட்டு வந்தோம்” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார் திருமதி லக்ஷ்மி.
சென்னை மேல்சபையில் அங்கத்தினர் பதவி வகிக்கும் திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, ஒரு காலத்தில் பல பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இசையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், நன்றாக வீணை வாசிப்பார்.
பெண்கள் முன்னேற்றம், தமிழ் இலக்கிய வளர்ச்சி இவை இரண்டிலும்தான் தற்போது இவர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
அன்றைக்கு 30000 ரூபாய் என்றால் இன்றைக்கு மூன்று கோடி பெறும் என்று நினைக்கிறேன். வீட்டை அடகு வைத்து இத்தனை பணத்தை போட்டிருக்கிறார். உண்மையான புத்தக காதல்!
திருமலை ராஜன் புண்ணியத்தில் சமீபத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட அபிதா புத்தகத்தை படித்தேன். என்ன அருமையான புத்தகம்! நான் இங்கே லா.ச.ரா.வின் எழுத்தை சொல்லவில்லை, புத்தகத்தின் அட்டை, பேப்பர், பைண்டிங் ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். உலகத் தரம் வாய்ந்த புத்தகம் வெளியீடு. இன்றைக்கு கூட இப்படி புத்தகங்கள் வருவதில்லை. யாராவது பழைய வாசகர் வட்டம் (நல்ல கண்டிஷனில் உள்ள) வெளியீடுகளை விற்பதாக/கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், நான் நன்றியுடன் வாங்கிக் கொள்கிறேன்!
தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஆளுமைகள்
தொடர்புடைய பிற பதிவுகள்
வாசகர் வட்டம் உருவாக்கி நேர்த்தியான புத்தகங்களை பதிப்பித்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி (Lakshmi Krishnamoorthi)
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அளித்த ஒரு பேட்டி
காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி

April 15, 2010 at 5:35 மு.பகல்
காந்தி செய்தது சரியா? அடாவடி மாதிரி இருக்கே!
- சிமுலேஷன்
//மறுநாள், மகாத்மா அந்தப் பெண்ணை அழைத்து, “நேற்று நீ வெள்ளி வளையைக் கழற்றிக் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டாயே!” என்று கேட்டார். “பாபுஜி, நான் அதைத் தங்க வளை என்று சொல்லவே இல்லையே! எல்லோரும் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்தவுடன், என்னையும் மீறி நான் என் கையிலிருந்ததைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள் சிறுமி.
“அதெல்லாம் தெரியாது. அதற்குப் பிராயச்சித்தமாகப் பவுன் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்” என்றார் காந்திஜி.//
April 15, 2010 at 9:30 பிற்பகல்
சிமுலேஷன், சந்தேகம் என்ன? காந்தி நிதி திரட்டுவதில் கில்லாடி, மிரட்டவும் தயங்கமாட்டார்.
April 16, 2010 at 5:13 மு.பகல்
வாசகர் வட்டம் வெளியிட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பயணத்தொடர் நூல் மிக மிக அருமையானது. காவிரி நதியை தலை(க்காவிரி) முதல் அடி (பூம்புகார்) வரை தொடர்ந்து சென்று வந்து எழுதப்பட்ட கட்டுரை நூல். நாவல்களையும் மிஞ்சும் சுவாரஸ்யம். சிட்டி, தி.ஜானகிராமன் இருவரும் எழுதியது. முதலில் நூலகத்தில் வாங்கிப்படித்த நான், அந்நூல் மேல் கொண்ட காதலால் சொந்தமாகவே வாங்கி வைத்திருக்கிறேன். சமயம் வாய்க்கும்போதெல்லாம் எடுத்துப்படிப்பேன். படிக்கும்போதே மனதில் இனம்புரியாத அமைதி மனதில் குடிகொள்ளும். மனதை உருகவைக்கும் இடம், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைப்பற்றிய பகுதி. வாய்ப்புக்கிடைத்தால் படித்துப்பாருங்கள். இடையிடையே இடம்பெற்றிருக்கும் ஏராளமான புகைப்படங்கள் நம் நெஞ்சை கொள்ளைகொள்ளும். சென்னை வாசகர் வட்டம் வெளியீடு. (முடிந்தால் அந்நூல் பற்றிய விரிவான கட்டுரை இந்தக்’கூட்டாஞ்சோறு’ தளத்திலேயே எழுத முயற்சிக்கிறேன்).
April 16, 2010 at 9:59 பிற்பகல்
சாரதா, உங்கள் மதிப்புரையை வெளியிட காத்திருக்கிறோம்! நண்பர் ராஜனும் இந்த புத்தகத்தை சிலாகித்துக் கொண்டே இருப்பார்.
April 18, 2010 at 12:55 பிற்பகல்
டியர் ஆர்.வி…
இங்கேயே பதித்திருக்கிறேன். அதைத் தனிப்பதிப்பாகப்போடுங்கள். அந்த வித்தை உங்களுக்குத்தான் தெரியும்.
April 18, 2010 at 12:59 பிற்பகல்
‘நடந்தாய் வாழி காவிரி’
சென்னை தி.நகர் ‘வாசகர் வட்டம்’ குழுமத்தைச்சேர்ந்த திருவாளர்கள் சிட்டி, மற்றும் தி.ஜானகிராமன் இணைந்து எழுதிய இதுபோன்ற அற்புத நூலுக்கு மதிப்புரை எழுதும் தகுதியெல்லாம் எனக்க வந்துவிடவில்லையாதலால், இதை மதிப்புரை எனக்கொள்ள வேண்டாம். நூலைப்படித்து வியந்த (வியக்கும்) ஒரு வாசகி/ரசிகையின் எண்ணத்தில் உருவான சில வரிகள் எனக்கொள்ளலாம். இந்நூல் என்னை வந்தடைந்ததே ஒரு சுவையான கதையென்றாலும், அதை பின்னூட்டத்தில் வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நேரடியாக உள்ளே.
முன்பு வெளிநாட்டு பயணக்கட்டுரைகள் என்றாலே விரும்பிப்படிக்கும் ஆர்வம் கொண்ட எனக்கு சிறிது காலத்திலேயே அவை கிட்டத்தட்ட ஒரே நோக்கில் (தமிழில்: ஸ்டீரியோ டைப்) பயணித்து சலிப்பைத் த்ருகின்றனவோ என்று தோன்றத்துவங்கி விட்டது. பிரமாண்டமான விமான நிலையங்கள், உயரமான கட்டிடங்கள், கட்டுரையாளர் உணவகங்களில் சைவம் கிடைக்காமல் அவதிப்பட்டது, அங்குள்ள தமிழ்க்குடும்பங்களின் ஆதரவு, உபசாரம் மற்றும் உதவிகள், அவற்றுக்கு நன்றிக்கடனாக அவர்களைப்பற்றி சில வரிகள் அல்லது சில பக்கங்கள் (உதவியின் அளவைப்பொறுத்து)…. இப்படியாக சலிப்பைத்தந்த வேளையில், தமிழ்நாட்டுக்குள்ளேயே (மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில்) பயணித்து எழுதப்பட்ட, வழக்கமான வரைமுறைகளை மீறி, சரியாகச்சொன்னால் அவற்றுக்கு அப்பாற்பட்டு, கையில் எடுத்தால் கீழே வைக்க மனமில்லாத அளவுக்கு ஒரு தேர்ந்த நாவலையும் தோற்கடிக்கும் சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ எனும் இந்நூலின் துவக்கமே அருமை….
சில இடங்களின் வர்ணனைகள் நூல் எழுதப்பட்ட காலத்தில் இருந்த நிலைமை சார்ந்தது, இப்போது மாறியிருக்கலாம். ‘மாயவரத்தின் பிரதான சாலையிலிருந்து கிழக்கு நோக்கிப்பிரியும் ஒரு மண் சாலையில் ஒரு கைகாட்டி ‘காவேரிப்பட்டினம்’ என்று காட்டிக்கொண்டிருக்க அது சோழர்களின் துறைமுகமான ‘காவிரி புகும் பட்டினம்’ செல்லும் சாலையெனத் தெரிகிறது. ஒரு காலத்தில் துறைமுகத்திலிருந்து தலைநகர் உறையூர் செல்ல அமைக்கப்பட்ட நேர் சாலை இப்போது மணல் சாலையாக, இருபக்கமும் கருவேலமரங்கள் தோரணம் கட்டி நிற்க, சிள்வண்டுகளை இரைய விட்டிருக்கிறது’ என்ற துவக்கமே நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. காவிரியை, தலைமுதல் கால்வரை நேரில் கண்டு ரசிக்கும் ஒரு பயணம் மேற்கொண்டால் என்ன என்று தோன்றியதாகச்சொல்லும் நூலாசிரியர்கள், ‘செயற்கைக்கோள்கள் சந்திரனையும் சுக்கிரனையும் வலம் வந்துகொண்டிருக்கும் இந்த விஞ்ஞான யுகத்தில் இதென்ன விபரீத எண்ணம்?’ என்று தோன்றியதையும் ஒப்புக்கொள்கிறார்கள். சென்னையிலிருந்து தனி வாகனத்தில் நண்பர்கள் சிலருடன் புறப்படும் அவர்கள் நேராகச்செல்வது சீரங்கப்பட்டணத்துக்கு. அதிலிருந்து காவிரிக்கரையூடாகவே செல்லும் அவர்கள் குடகுமலயை அடைந்து, மெர்க்காராவில் தலைக் காவிரியிலிருந்து, பயணித்து வருவதாக சம்பவம்.
ஆனால் அதை அவர்கள் வரிவரியாக விளக்கும் முறையில், நாம் நூலைப்படிப்பதாகத் தெரியாது. அந்த வாகனத்தின் முன்வரிசையில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பார்த்து ரசித்துக்கொண்டே வருவதான உணர்வு நம்மை ஆட்கொள்ளும். அங்கங்கே வரம்புமீறாத இயல்பான நகைச்சுவை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும். தலைக்காவிரியை நோக்கிப்போகும்போது, ‘சித்தாப்பூர் என்னும் ஊரில் வர்ணா பாம்புகள் அதிகம்’ என்று ஒரு புத்தகத்தில் படித்துவிட்டு பயந்துகொண்டே அந்த ஊருக்குள் நுழைய, வர்ணாவும் இல்லை பாம்பும் இல்லை. வர்ணம் அடித்த வீடுகளும் கடைகளும் தென்பட. காருக்கு தீனி வாங்கும் இடத்தில் அங்கிருந்தவனிடம் வர்ணா பாபு எங்கே என்று கேட்க, அவன் பேந்த பேந்த விழித்துவிட்டு, தான் பிறந்ததிலிருந்து ஒரு பாம்பைக்கூட அங்கு பார்த்ததில்லை என்றும், பாம்பாட்டியின் கூடையில்தான் பார்த்திருப்பதாகவும் விளக்கும் இடம் ஒரு உதாரணம். அதைப்படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். மெர்க்காராவில் மேகமூட்டங்களுக்கு மத்தியில் நுழைந்து பயணம் செய்யும்போதும், திடீரென பிடித்துக்கொள்ளும் மழையில் நனைந்துகொண்டே பொருட்களை இறக்கும்போதும், நாமும் நனைகிறோம். ஆடுதாண்டு காவிரியைக்காணும்போதும், பன்னாரிகட்டா பண்னையில் தங்கும்போதும் அப்படியே. ஒகேனக்கலில் ஒரு மன்னார்குடி மாமியின் குடிசை உணவகத்தில் மிளகாய் வத்தல்குழம்பு சாப்பிடும்போதும் நாமும் அதை அனுபவிக்கிறோம். நூலாசிரியர்களின் எழுத்து வன்மை அத்தகையது. அவற்றின் சுவையை பாமரத்தியான எனக்கு சொல்லத் தெரியவில்லை. காவிரித்தாயின் இதயமான மேட்டூர் அணை பற்றி மட்டுமல்ல, அங்கங்கே உள்ள தடுப்பணைகள் பற்றியும் கூட சுவையான தகவல்கள். வழியில் அமைந்துள்ள திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடிலில் பெறும் சுவையான அனுபவங்கள். எதைச்சொல்வது, எதை விடுவது. காவிரியோடு கொள்ளிடம் கண்ட அனுபவங்களைச்சொல்லும்போது, அருகே அமைந்துள்ள கங்கைகண்ட சோழபுரத்துக்கும் ஒரு கிளைப்பயணம் (‘விஸிட்’ என்று சொன்னால் சட்டென விளங்கும் அளவுக்கு ஆங்கிலம் நம் மீது அமர்ந்துவிட்டது). அந்த அத்தியாயம் துவங்குவதே ஒரு அழகு….
‘தொலைவில் நரைநிறத்தில் கோபுரம் தெரியும்போதே மனம் நெகிழத்துவங்கிவிடும். அங்கே செல்லும் ஒவ்வொருமுறையும் ஏற்படும் அனுபவம். ராஜேந்திர சோழன் ஏன் இதைக்கட்டினான்?. தஞ்சையில் ராஜராஜேச்சுரத்தை தந்த த்ந்தையை மிஞ்சவா?. அப்படியானால் அபாரமாகத் திட்டமிட்ட கோபுரத்தை ஏன் பாதியில் மழித்துக் குட்டையாக்கினான்?. எந்த தோல்வி, அல்லது உணர்வு அவனைத்தடுத்தது?. வளமான காவிரிக்கரையை விட்டு வறண்ட இப்பகுதியில் ஏன் இதைக்கட்டினான்?. இப்பகுதி மக்களுக்கும் ஒரு அக வாழ்வைத்தரவா?’…. இப்படி நீண்டு செல்லும் நூலாசிரியர்களின் விளக்கம், பின்னர் கொள்ளிடத்தில் மேலணை கட்ட கற்களூக்காக பிரிட்டிஷ் அரசாங்கம், இக்கோயிலின் ராஜ மதிலைத் தகர்த்து கருங்கற்களை எடுத்துச்சென்ற சோகத்தைச் சொல்லும்போது நம் மனமும் அழும். (இன்றைக்கும் ராஜ மதிலின்றி, திறந்த கோயிலாகத்தான் நிற்கிறது கங்கை கொண்ட சோழீச்சுரம்).
கல்லணையில் துவங்கி பிரியத்துவங்கிய காவிரியின் கிளையாறுகள், தண்ணீரைப்பிரித்து எடுத்துச்செல்ல, கும்பகோணம் வரும்போதே காவிரி சிறுத்துவிடுகிறது. எனவே, கும்பகோணத்துக்கு கிழக்கே வீரசோழன் கிளைக்கும்போது, ‘காவிரி தந்து, தந்து மெலிந்துகொண்டே போவதைப் பார்க்கும்போது நம் மனதில் சோகம் தலைதூக்குகிறது’ என்று நூலாசிரியர்கள் எழுதும்போது நம் மனதையும் அந்த உணர்வு அழுத்துகிறது. காவிரிக்கரையில் வளர்ந்த கலாச்சாரம்தான் எத்தகையது, பண்பாடுதான் எவ்வளவு உன்னதமானது..!. குழாயிலும்தான் தண்ணீர் வருகிறது. அதுவே ஆற்றில் ஓடும்போது இப்படியா பாட்டாகக் கேட்கும், இசையாக மலரும், பண்பாடாக வளரும், கோயிலாக உயரும்…!!!.
ஆயிரம் தடுப்புக்களில் இன்று காவிரி சிறைப்பட்டிருக்கலாம். ஆனால் அன்றைக்கு கல்லணைகூட கட்டப்படாத நிலையில் கரைபுரண்டு ஓடிய காவிரியைப்பார்த்து இளங்கோவடிகள் ஆர்ப்பரித்தது போல இந்நூலைப்படித்தபின் நமக்கும் ஆர்ப்பரிக்கத்தோன்றுகிறது…
‘காவிரி போற்றுதும்…. காவிரி போற்றுதும்…’
இந்நூல் என்னை வந்தடைந்த கதை (போரடிக்காவிட்டால் படியுங்கள்)…
நான் திருமணத்துக்கு முன் ‘லார்ஸன் அண்ட் டூப்ரோ’ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, சென்னை அண்ணாசாலையிலுள்ள ‘தேவநேயப்பாவாணர் அரசு மத்திய நூலக’த்தில் உறுப்பினர் அட்டை மூலம் நூல்கள் எடுத்த்ச்சென்று படிப்பது வழக்கம். அப்படி ஒருமுறை பார்த்துக்கொண்டு வந்தபோது, இடையிடையே புகைப்படங்களுடன் கூடிய ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற தலைப்பிட்ட தடிமனான புத்தகம் கண்ணைக் கவர, எடுத்து சிலவரிகளைப் படித்தபோது மனதைக்கவரவே, உறுப்பினர் அட்டை மூலம் வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக்கத்துவங்கியதும் அதில் கரைந்து மூழ்கிப்போனேன். திருப்பிக்கொடுக்க வேண்டிய ஒருவாரத்துக்குள் மூன்றுமுறை படித்துவிட்ட எனக்கு, இது என்னிடம் இருக்க வேண்டிய புத்தகம் என்று தோன்றவே, பதிப்பகத்தின் பெயரைக் குறித்துக்கொண்டு திருப்பியளித்துவிட்டேன். அன்றிலிருந்து தினமும் மாலை பெரிய புத்தகக்கடைகளில் ஏறி இறங்கினேன். பூங்காநகரிலுள்ள சி.எல்.எஸ்.புத்தகக்கடை, அண்ணாசாலை ஹிக்கின்பாதம்ஸ் உள்பட பெரிய புத்தகக்கடைகள் எதையும் விடவில்லை. ஆனால் இந்த புத்தகம் கிடைக்கவில்லை (அதில் ஒரு சின்ன லாபம். நான் பலநாள் தேடிக்கொண்டிருந்த வேறு சில புத்தகங்கள் கிடைத்தன).
அலுவலகத்தில் என்னோடு பணியாற்றிய நண்பர் வில்லியம்ஸிடம் சொன்னபோது, நேரடியாக பதிப்பகத்துக்கே போய்க்கேட்டுப்பாரேன் என்றார். தி.நகர் தணிகாச்சலம் செட்டி சாலையிலுள்ளது என்றதும் அவருக்கு உற்சாகம். அதன் அருகிலுள்ள ராஜா தெருவில்தான் அவர் வீடு. நானும் வருகிறேன் என்று வந்தார். கதவிலக்கம் தெரியாததால் நடந்துபோய்க்கொண்டிருந்தோம். வழியில் தமிழ்வாவாணன் அவர்களின் மணிமேகலைப்பிரசுரம் தென்பட்டது. ‘இவங்களும் பதிப்பாளர்களாதலால் இவங்க கிட்டே கேட்டுப்பார்’ என்று உள்ளே அனுப்பினார். அலுவலகத்தில் ஒருவர் மட்டும் இருந்தார். சுற்றிலும் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ‘வாங்கம்மா என்ன புத்தகம் வேணும்?’ என்றார், கனிவோடு. ‘இல்லீங்க சார், நான் இங்கே புத்தகம் வாங்க வரலை. புக்வெஞ்ச்சர் பப்ளிகேஷன்ஸ் எங்கே இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?’. அவர் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை சட்டென்று எழுந்து வாசலுக்கு வந்தவர், ‘இப்படியே நேரா போனீங்கன்னா இந்தி பிரச்சார் சபா வரும். அதுக்கு எதிரில் ‘வாசகர் வட்டம்’ அப்படீன்னு ஒரு போர்டு போட்டிருக்கும். அதுதாம்மா’ ஆகா என்ன கனிவு என்ன அக்கறை.. தமிழ்வாணன் இந்த விற்பனையாளரை எங்கே பிடித்தார்?. இவருடைய கனிவுக்காகவே அடுத்தமுறை மணிமேகலைப்பிசுரம் வந்து எதாவது புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே நண்பருடன் நடந்தேன். (அதன்பின் இன்னொரு நாள் அங்கு சென்று இரண்டு புத்தகங்கள் வாங்கியது வேறு கதை).
அவர் சொன்ன போர்டு தென்பட்டது வாசலில் காம்பவுண்ட்டுக்குள் மரங்கள் நிறைந்த அழகான வீடு. கண்ணாடியணிந்த, பார்த்தாலே மதிக்கத்தக்க ஒரு அம்மா வந்து விசாரிக்க, ‘நடந்தாய் வாழி காவிரி’ புத்தகம் வேண்டும் என்றோம். ‘உட்காருங்க’ என்று சொன்னதோடு வாசகர் வட்டம் வெளியிட்ட நூல்களடங்கிய லிஸ்ட் ஒன்றையும் தந்துவிட்டு உள்ளே சென்றார். எங்கள் இருவரையும் தவிர இன்னொரு நடுத்தர வயதைக்கடந்த ஆள் மட்டும் இருந்தார். ‘எவ்வளவு கனிவா பேசுறாங்க’ என்று நண்பர் வில்லியம்ஸிடம் சொன்னபோது, அந்த இன்னொரு ஆள் சொன்னார் ‘இவங்கதான் தியாகி சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமியம்மா’. இதைக்கேட்டதும் ஆச்சரியத்தில் மூழ்கினேன். எவ்வளவு சிம்பிளா இருக்காங்க..!!. அவங்க புத்தகத்தோடு அறையிலிருந்து வெளியில் வந்தபோது என்னையறியாமல் எழுந்து நின்று கைகூப்பினேன் ‘நீங்க யாருன்னு எனக்கு இப்போதான் தெரியும்’ என்று சொன்னதும் அழகான சிறிய புன்னகையோடு ‘உட்காருங்க’ என்று சொல்லிவிட்டு பில் போட ஆரம்பித்தார். இப்போது நினைத்தாலும், லட்சுமியம்மா அவர்களை அன்று பார்த்த தோற்றம் மனதில் நிழலாடுகிறது.
April 19, 2010 at 4:41 பிற்பகல்
சாரதா,
அருமையாக எழுதி இருக்கிறீர்கள். ஓரிரு நாட்களில் பதித்துவிடுகிறேன்.
உங்கள் ஈமெயில் வேலை செய்யவில்லையே? உங்களுக்கு அனுப்பிய ஈமெயில் பவுன்ஸ் ஆகிவிட்டது…
April 18, 2010 at 1:26 பிற்பகல்
நல்ல பகிர்வு
April 18, 2010 at 1:30 பிற்பகல்
எனது பெரியப்பா திரு. ஆர். ஷண்முகசுந்தரம் அவர்கள் எழுதிய “மாயத் தாகம்” நாவல் வாசகர் வட்டம் வெளியீடாக வந்தது. அந்தக் காலகட்டத்தில் ராயல்டி கொடுக்கும் நடைமுறையை முதைல் திருமதி லட்சுமி அவர்கள்தான் அமல் படுத்தினார்கள் என் நினைக்கிறேன்.
April 19, 2010 at 4:40 பிற்பகல்
லதானந்த், யார் “நாகம்மாள்” எழுதிய ஆர். சண்முகசுந்தரம் உங்கள் பெரியப்பாவா? கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் பெரியப்பா நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்!
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்திக்கு முன்னால் ராயல்டி என்ற பழக்கமே இல்லை என்று கேட்க வருத்தமாக இருக்கிறது. அந்த காலத்து எழுத்தாளர்கள் எல்லாம் எப்படித்தான் வாழ்க்கை நடத்தினார்களோ? (இந்த கால எழுத்தாளர்களுக்கும் கஷ்டம்தான் என்று நினைக்கிறேன்.
) க.நா.சு. அண்ணாமலை பல்கலைக்கழக ஹாஸ்டல்களில் ungaL பெரியப்பா நாகம்மாள் புத்தகத்தை கொண்டு வந்து தானே விற்க முயற்சி செய்தார் என்று எழுதி இருந்தது நினைவு வருகிறது.
April 18, 2010 at 8:39 பிற்பகல்
சாரதா
நடந்தாய் வாழி காவேரி படிக்கும் பொழுதெல்லாம் உள்ளத்தை நெகிழ வைக்கும் ஒரு அற்புதமான பயண நூல். ஒரு க்ளாசிக். தி ஜா ரா என்றவுடன் மோகமுள் நினைவுக்கு வரும் அளவுக்கு நடந்தாய் வாழி காவேரி நினைவுக்கு யாருக்கும் வருவதில்லை. நீங்கள் அந்த நூல் பற்றி அவசியம் எழுதுங்கள். நான் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டேயிருக்கிறேன். இப்பொழுது காலச்சுவடு பதிப்பாக வெளி வந்திருக்கிறது
அன்புடன்
ராஜன்