April 2010


செஸ்ஸில் வெள்ளை காய்கள் என்பது ஒரு (சின்ன) advantage – ஏனென்றால் வெள்ளைக் காய்கள்தான் முதல் மூவ் செய்யவேண்டும். கிராண்ட்மாஸ்டர் (நிபுணர்) லெவலில் வெள்ளை காய்களோடு விளையாடுபவர்கள் அதிகம் ஜெயிக்கிறார்கள். என் லெவலில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. எந்த நிற காயாக இருந்தாலும் மோசமாகத்தான் ஆடுவோம். அதனால் ஆனந்த் உட்பட்ட நிறைய கிராண்ட்மாஸ்டர்களுக்கு ஒரு ஆட்ட முறை உண்டு – வெள்ளைக் காய்கள் இருந்தால் வெற்றி பெறவும், கறுப்பு காய்கள் இருந்தால் டிரா செய்யவும் விளையாடுவார்கள். டொபலோவ் அப்படி இல்லை, எந்த நிற காயாக இருந்தாலும் ஜெயிக்கவே விளையாடுவார்.

இன்றைய ஆட்டத்தில் ஆனந்துக்கு கறுப்பு காய்கள், டொபலோவ் வெள்ளை. இன்றைக்கு விட்டால் அப்புறம் இரண்டு மூன்று ஆட்டத்தில் டொபலோவ் கறுப்பு காய்களோடு விளையாட வேண்டும். ஏற்கனவே ஒரு கேம் டவுன். அதனால் இன்று அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்டம் ஒரு positional struggle ஆகத்தான் இருந்தது. முதல் பதினைந்து இருபது மூவ்கள் மூன்றாவது ஆட்டத்தில் விளையாடிய மூவ்களே. ராணிகள் exchange ஆகிவிட்டன. ராணிகள் இல்லாவிட்டால் அதிரடி ஆட்டம் ஆட வாய்ப்புகள் குறைவு. ஆனந்த்தான் முதலில் மூன்றாவது ஆட்டத்தில் விளையாடிய ஒரு மூவை சற்று மாற்றினார். சிப்பாயை ஒரு கட்டத்துக்கு பதில் இரண்டு கட்டம் நகர்த்தினார். (இதெல்லாம் ஒரு மாற்றமா என்று கேட்காதீர்கள், அது போன ஆட்டத்திலிருந்து ஒரு improvement.) ஒரு இருபத்தைந்து முப்பது மூவ்கள் முடிந்த பிறகுதான் ஆட்டத்தில் டென்ஷனே ஆரம்பித்தது.

இந்த டென்ஷன் செஸ் பற்றி தெரியாதவர்களுக்கு புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம். இருந்தாலும் முயற்சிக்கிறேன். இருவரிடமும் “சமமான” காய்கள். போர்டின் ஒரு புறம் தலா இரண்டு பான்கள்; மறு புறம் தலா நான்கு பான்கள். இருவரிடமும் ஒரு ரூக்; ஆனந்திடம் குதிரை, டொபலோவிடம் பிஷப். குதிரையும் பிஷப்பும் ஏறக்குறைய சம பலம் உடைய காய்கள். ஆனால் போர்டின் நிலையில் பிஷப் அதிக பலம் உடையதாக இருந்தது. இரண்டு பான்களை ஆனந்த் fix செய்துவிட்டார். அதாவது அந்த column களில் ஆனந்தும் சரி, டோபலோவும் சரி பான்களை நகர்த்த முடியாது. டொபலோவ் எப்படியாவது ஆனந்தின் defensive formation-ஐ உடைக்க வேண்டும் என்று முயன்றார். ரூக்கள் exchange ஆகிவிட்டால் டோபலோவுக்கு நல்லது. அப்போது நீண்ட தூரம் நகரக் கூடிய பிஷப் அந்த பிக்ஸ் ஆன ஆனந்தின் பான்களை வெட்டுவது கொஞ்சம் சுலபம் ஆகிறது. ஆனந்த் perfect defense விளையாடி டிரா செய்தார்.

இது போர் கேம் என்று தோன்றலாம். ஆனால் இது வரை ஆடிய அத்தனை ஆட்டங்களும் high quality!

இப்போது ஆனந்தின் கை ஓங்கி இருக்கிறது. பிரயாண களைப்பு தீர்ந்து புத்துணர்ச்சியோடு விளையாடுகிறார். டோபலோவின் நாட்டில் விளையாடுவது அவரை எந்த விதத்திலும் பாதிப்பதாக தெரியவில்லை. முதல் ஆட்டத்தைத் தவிர வேறு எதிலும் தவறு செய்யவில்லை. இனி மேல் வரும் ஆட்டங்களில் அவருக்கு நாலு ஆட்டங்களில் வெள்ளை. டோபலோவின் ஆட்டத்தை அவரால் சுலபமாக சமாளிக்க முடிகிறது. அவரது strategy positional play என்று முடிவு செய்திருக்கிறார் போலத் தெரிகிறது, அந்த மாதிரி ஆட்டத்தை அவரால் கொண்டு வர முடிகிறது. பார்ப்போம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்

சுட்டிகள், தளங்கள்:
முதல் 4 ஆட்டங்கள்

செஸ்வைப்ஸ் – ஆட்டங்கள், வீடியோக்கள்
ஆனந்த்-டொபலோவ் – லைவ், ஆடும்போது என்ன நடக்கிறது என்று பார்க்க
சூசன் போல்காரின் ரன்னிங் கமெண்டரி

Dick Francisஎனக்கு பிடித்த த்ரில்லர் எழுத்தாளர்களில் டிக் ஃபிரான்சிசும் ஒருவர். சமீபத்தில் – போன ஃபெப்ரவரியில்தான் இறந்து போனார். அவரது சமீபத்திய புத்தகம் இப்போது வந்திருக்கிறது, அதைப் படிக்கும்போதுதான் தெரிந்தது.

ஃபிரான்சிஸ் முதலில் குதிரைப் பந்தய ஜாக்கியாக இருந்தார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் குதிரைகளை ஓட்டி இருக்கிறார். ரிடையர் ஆனதும் மெதுமெதுவாக எழுதத் தொடங்கினார். நல்ல த்ரில்லர்களை எழுதி இருக்கிறார். எல்லாமே குதிரைப் பந்தய பின்னணி கொண்டவை. ஹீரோக்களுக்கும் ரேஸ் உலகத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும். சில சமயம் ஹீரோ அவரைப் போலவே ஜாக்கிதான், ஆனால் குதிரை வாங்க கடன் தரும் பாங்க் அதிகாரி, குதிரைகளை வரையும் ஓவியர், குதிரைகள் பற்றி எழுதும் எழுத்தாளர், குதிரை சொந்தக்காரருக்குத் தெரிந்த நடிகர், குதிரைப் பந்தய நிகழ்ச்சிகளுக்கு மது விற்கும் ஒருவர், சமையல்காரர், குதிரைகளை ஏற்றிக்கொண்டு போகும் வண்டிகள் வைத்திருப்பவர், ரேஸ் கோர்ஸ்களுக்கு இடையே விமானம் ஓட்டுபவர் என்று பலதரப்பட்டவர்கள் ஹீரோவாக வருவார்கள். கிட்டத்தட்ட நாற்பது புத்தகங்கள். எல்லாவற்றையுமே படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

அவரது ஹீரோக்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். Low-key, competent; தன்னை, தன் பலங்களை, பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டவர்கள். எந்த விதமான போலித்தனமும் இல்லாதவர்கள். Strong ethical core உடையவர்கள். உறுதியானவர்கள். அடுத்தவர்களின் தவறுகளை புரிந்து கொள்பவர்கள், சுலபமாக மன்னிப்பவர்கள். அடுத்தவர்களை பழி வாங்குவது, பதிலுக்கு பதில் கொடுப்பது எல்லாம் இரண்டாம் பட்சம்தான் இவர்களுக்கு; காரியம் நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் வலுத்த focus உடையவர்கள். நல்லது நடந்தால் போதும், வில்லன்கள் தண்டிக்கப்படாமல் தப்பித்தாலும் சரி. எல்லா நாவலிலும் ஒரு சீனில் பயங்கர அடி வாங்குவார்கள், ஆனால் அந்த அடி அவர்களை பின்வாங்க வைக்காது. எனக்கு இந்த மாதிரி ஹீரோக்கள் பிடிக்கும் என்பது இவர் புத்தகங்களை படித்த பின்தான் தெரிந்தது. :-)

ஒரே ஒரு புத்தகம் படிக்க விரும்புகிறீர்களா? Forfeit படியுங்கள். ஹீரோ ஒரு பத்திரிகையாளர். குதிரை ரேஸ் பந்தயத்தில் மேட்ச் ஃபிக்சிங் செய்யும் வில்லன்கள். இவரை பல விதமாக மிரட்டிப் பார்ப்பார்கள், எதுவும் நடக்காது. கடைசியில் அவரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து அவர் மனைவியை கொல்வதாக மிரட்டுவார்கள். மிக பிரமாதமான சீன் அது. அந்த மாதிரி ஒரு சீன் எழுத வந்தால் நன்றாக இருக்கும்.

சிட் ஹாலி நாவல்கள் ஒரு நாலு இருக்கும். ஹாலி ஒரு முன்னாள் ஜாக்கி. குதிரைப் பந்தய விபத்தில் ஒரு கை போய்விடும். பிறகு ப்ரைவேட் டிடக்டிவாக மாறுவார். Odds Against , Whiphand இரண்டும் நல்ல நாவல்கள். Under Orders, Come to Grief இரண்டும் படிக்கலாம்.

எனக்கு கிட் ஃபீல்டிங் நாவல்கள் இரண்டும் பிடிக்கும். ஃபீல்டிங் ஒரு ஜாக்கி. Breakin மற்றும் Bolt. நன்றாக எழுதி இருப்பார்.

Nerve எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு நாவல். ஒரு ஜாக்கிக்கு நல்ல காலம் பிறக்கும். அப்போது ஒரு சிறு விபத்து. அதற்குப் பிறகு எந்த ரேசிலும் அவர் ஜெயிக்கமாட்டார். அவர் பயந்துவிட்டார் என்று ஒரு வதந்தி பரவும்.

நினைவு வரும் மற்ற நாவல்கள் – Banker, Enquiry, Bonecrack, High Stakes, Danger, Hot Money, Decider.

த்ரில்லர் பிடிக்க விரும்புவர்கள் நிச்சயமாக படித்துப் பாருங்கள்! படித்தவர்கள் உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தளங்கள், சுட்டிகள்:
டிக் ஃபிரான்சிசின் தளம்
நியூ யார்க் டைம்ஸ் ஆபிச்சுவரி

எனக்கு செஸ் மிகவும் பிடிக்கும். இருக்கும் 64 கட்டத்தில் கணக்கிலடங்காத விளையாட்டு.

தற்போதைய உலக சாம்பியன் இந்தியாவின் ஆனந்த் என்பது தெரிந்திருக்கும். அவரோடு இப்போது உலக சாம்பியன் பட்டத்துக்கு மோதுபவர் பல்கேரியாவின் டொபலோவ். 12 முறை மோதுவார்கள், அதில் யார் அதிகம் வெற்றி பெறுகிறார்களோ அவர்தான் அடுத்த சாம்பியன். இரண்டு பேருக்கும் சம அளவு வெற்றி என்றால் டைப்ரேக்கர். இன்றைக்கு உலகில் டொபலோவ் இரண்டாம் இடத்தில் இருக்கும் செஸ் ஆட்டக்காரர்(முதல் இடம் மாக்னஸ் கார்ல்சன்). ஆனந்துக்கு மூன்றாவது இடம்தான். இருவருக்கும் இடையே 20 பாயின்ட் வித்தியாசம். செஸ் உலகில் இது பெரிய வித்தியாசம்.

இரண்டு வகை செஸ் ஆட்டம் உண்டு. ஒன்று அதிரடி. காய்களை attack, initiative ஆகியவற்றுக்காக sacrifice (sacrifice – வலுவான காயை வெட்டுக் கொடுப்பது) செய்ய தயங்கமாட்டார்கள். இந்த மாதிரி விளையாடுபவர்களுக்கு நிறைய காய் இருந்தால் நல்லது. ஆட்டத்தை complicate செய்ய முயற்சிப்பார்கள். டொபலோவ் அந்த மாதிரிதான் ஆடுவார். இன்னொன்று மெதுமெதுவாக தம் காய்களை நல்ல கட்டங்களில் உட்கார்த்தி வைப்பது, அடுத்தவர் ஆட முடியாமல் செய்வது என்று விளையாடுவது. இதை positional play என்று சொல்வார்கள். இதன் நோக்கம் long term simplification with a small advantage. இருவருமே இரண்டு வகை விளையாட்டிலும் சூரர்கள்தான், ஆனால் டொபலோவ் முதல் வகை ஆட்டக்காரர் என்று சொல்லலாம். ஆனந்துக்கு இரண்டுமே கை வரும். டொபலோவ் கிரிக்கெட் செவாக் மாதிரி. அதிரடி ஆட்டக்காரர். ஆனந்தை சச்சினுக்கு ஒப்பிடலாம். ஒரு காலத்தில் அதிரடி ஆட்டக்காரர், ஆனால் இப்போது கொஞ்சம் conservative ஆட்டக்காரர். இருவரும் விடாமல் போராடுபவர்கள்.

போட்டி பல்கேரியாவின் தலைநகரான சோஃபியாவில் நடக்கிறது. சாதாரணமாக போட்டிகள் ஒரு neutral இடத்தில்தான் நடக்கும். போட்டிக்கு வேண்டிய பரிசுத் தொகையை கொடுப்பது பல்கேரியர்கள். வேறு யாரும் கொடுக்க முன்வரவில்லை. அதனால் ஆனந்தும் இதை ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இது அவருக்கு ஒரு disadvantageதான்.

அடுத்த disadvantage ஐஸ்லாந்தின் எரிமலை வெடிப்பால். ஆனந்த் போக வேண்டிய விமானம் ஜெர்மனியோடு நின்றுவிட்டது. அதற்கப்புறம் ஒரு கார் ஏற்பாடு செய்து போயிருக்கிறார். போட்டியை 3 நாள் தள்ளி வைக்குமாறு கேட்டார், ஒரு நாள்தான் தள்ளி வைக்கப்பட்டது. பிரயாண அலுப்பு முழுதும் தீராதபோது ஆட வேண்டி இருந்தது.

முதல் ஆட்டம் ஆனந்துக்கு தோல்வி. டொபலோவ் இந்த மாதிரி விளையாடுவது என்று home preparation-ஓடு வந்திருந்தார். சின்ன advantage கிடைத்தது, அப்போது ஆனந்த் தன் ராஜாவை நகர்த்தினார். டொபலோவ் உடனே தன் குதிரையை sacrifice செய்தார். ஆனந்துக்கு தோல்விதான் என்று எனக்கே தெரிந்தது. எதோ move order மாற்றி விளையாடிவிட்டார் என்று பின்னால் தெரிந்தது. பிரயாண களைப்பாகத்தான் இருக்க வேண்டும். டொபலோவ் அற்புதமாக ஆடினார், ஆனால் அவரது வெற்றி ஆனந்தின் தவறினால்தான்.

அடுத்த ஆட்டம் ஆனந்துக்கு வெற்றி. அற்புதமான ஆட்டம். ஒவ்வொரு மூவிலும் ஆனந்தின் advantage இத்துனூண்டாவது அதிகமானது. ஆனந்த் ராணியை exchange செய்து (exchange – சமமான காய்களை இருவரும் வெட்டுவது) doubled pawns (doubled pawns – இரண்டு சிப்பாய்கள் ஒரே column-இல் இருப்பது) ஏற்படுத்திக் கொண்டது இதெல்லாம் எனக்கு இன்னும் புரியவில்லை. Psychological play (எதிராளிக்கு uncomfortable ஆக இருக்கும் நிலைக்கு ஆட்டத்தை கொண்டுவருவது) என்று நினைக்கிறேன். ஆனால் a5 கட்டத்துக்கு டொபலோவ் தன் சிப்பாயை நகர்த்தியதும், ஆனந்தின் விளையாட்டு அற்புதம்!

மூன்றாவது ஆட்டம் டிரா. ஆனந்த் டொபலோவுக்கு எந்த சான்சும் கொடுக்கவில்லை. ஆனந்த் தன் யானையை g8 கட்டத்தில் நகர்த்தியது எனக்கு புரியவில்லை. டொபலோவை கட்டிப்போட்டது நன்றாக இருந்தது. ஆனால் அநேகம் பேருக்கு இந்த கேம் போரடித்திருக்கும்.

நான்காவது ஆட்டத்தில் ஆனந்தின் விளையாட்டு முறை முற்றிலும் மாறிவிட்டது. இரண்டாவது, மூன்றாவது ஆட்டத்தில் அவர் ராகுல் திராவிட் மாதிரி விளையாடினார் என்றால் இதில் அவர் செவாக் முறையில் விளையாடினார்! செஸ்ஸில் இப்படி விளையாட்டு முறையை மாற்றுவது ரொம்ப கஷ்டம். அதனால்தான் ஆனந்தை universal player என்று சொல்கிறார்கள். அவர் தன் குதிரையை sacrifice செய்தது நான் எதிர்பாராத மூவ். ஆனால் செஸ் நிபுணர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்குப் பிறகு டொபலோவுக்கு சான்சே இல்லை. மிகப் பிரமாதமாக ஆனந்த் விளையாடினார்.

செஸ்வைப்ஸ் தளத்தில் எல்லா ஆட்டங்களையும் பார்க்கலாம். ஒவ்வொரு ஆட்டத்துக்கு பிறகும் இருவரும் ஆட்டத்தைப் பற்றி பேசும் வீடியோவும் இருக்கிறது. ஆனந்த்-டொபலோவ் தளத்தில் லைவ் அப்டேட்ஸ் கிடைக்கிறது.சூசன் போல்காரின் ப்ளாக ரன்னிங் கமெண்டரி கொடுக்கிறது. சூசன் போல்கார் செஸ் வீராங்கனைகளில் அதிக ரேட்டிங் உள்ளவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்

சுட்டிகள், தளங்கள்:
செஸ்வைப்ஸ் – ஆட்டங்கள், வீடியோக்கள்
ஆனந்த்-டொபலோவ் – லைவ், ஆடும்போது என்ன நடக்கிறது என்று பார்க்க
சூசன் போல்காரின் ரன்னிங் கமெண்டரி

பாரதி தமிழ் சங்கம் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இருக்கிறது. வரும் சனிக்கிழமை – மே 1, 2010 அன்று – தமிழ் புத்தாண்டு விழா நடத்துகிறார்கள். கலை, நடன நிகழ்ச்சிகள், சிறு நாடகம் ஒன்று எல்லாம் நடத்துகிறார்கள். சன்னிவேல் கோவிலில் நடைபெற இருக்கிறது.

முன்னின்று நடத்துபவர்களில் நண்பர் வாசுதேவனை எனக்கு ஓரளவு தெரியும். கடந்த நான்கு மாதங்களாக கடினமாக இந்த நிகழ்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக நன்றாக இருக்கும். இலவசம் வேறு. ஒரு weekend மாலை நன்றாகப் போகும். வந்துதான் பாருங்களேன்!

இதைப் படிக்கும் உள்ளூர் ஆட்கள் கொஞ்சம் பேராவது இருக்கமாட்டீர்களா? அங்கே சந்திப்போமே!

நிகழ்ச்சி அழைப்பிதழை இங்கே காணலாம். பாரதி தமிழ் சங்கத்தின் URL இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>மிச்சம் மீதி

“நடந்தாய் வாழி காவேரி” புத்தகத்தை சாரதா வாங்கிய அனுபவமும் சுவையாக இருக்கிறது. வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் நேராக வாங்கி இருக்கிறார். பதிவின் நீளம் கருதி இதை தனியான பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு சாரதா!

இந்நூல் என்னை வந்தடைந்த கதை (போரடிக்காவிட்டால் படியுங்கள்)…

நான் திருமணத்துக்கு முன் ‘லார்ஸன் அண்ட் டூப்ரோ’ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சென்னை அண்ணா சாலையிலுள்ள ‘தேவநேயப்பாவாணர் அரசு மத்திய நூலக’த்தில் உறுப்பினர் அட்டை மூலம் நூல்கள் எடுத்துச் சென்று படிப்பது வழக்கம். அப்படி ஒரு முறை பார்த்துக் கொண்டு வந்தபோது, இடையிடையே புகைப்படங்களுடன் கூடிய ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற தலைப்பிட்ட தடிமனான புத்தகம் கண்ணைக் கவர, எடுத்து சில வரிகளைப் படித்தபோது மனதைக் கவரவே, உறுப்பினர் அட்டை மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கத் துவங்கியதும் அதில் கரைந்து மூழ்கிப் போனேன். திருப்பிக் கொடுக்க வேண்டிய ஒரு வாரத்துக்குள் மூன்று முறை படித்துவிட்ட எனக்கு, இது என்னிடம் இருக்க வேண்டிய புத்தகம் என்று தோன்றவே, பதிப்பகத்தின் பெயரைக் குறித்துக் கொண்டு திருப்பியளித்துவிட்டேன். அன்றிலிருந்து தினமும் மாலை பெரிய புத்தகக் கடைகளில் ஏறி இறங்கினேன். பூங்கா நகரிலுள்ள சி.எல்.எஸ். புத்தகக்கடை, அண்ணா சாலை ஹிக்கின்பாதம்ஸ் உள்பட பெரிய புத்தகக் கடைகள் எதையும் விடவில்லை. ஆனால் இந்த புத்தகம் கிடைக்கவில்லை (அதில் ஒரு சின்ன லாபம். நான் பல நாள் தேடிக் கொண்டிருந்த வேறு சில புத்தகங்கள் கிடைத்தன).

அலுவலகத்தில் என்னோடு பணியாற்றிய நண்பர் வில்லியம்ஸிடம் சொன்னபோது, நேரடியாக பதிப்பகத்துக்கே போய்க் கேட்டுப் பாரேன் என்றார். தி.நகர் தணிகாச்சலம் செட்டி சாலையிலுள்ளது என்றதும் அவருக்கு உற்சாகம். அதன் அருகிலுள்ள ராஜா தெருவில்தான் அவர் வீடு. நானும் வருகிறேன் என்று வந்தார். கதவிலக்கம் தெரியாததால் நடந்து போய்க்கொண்டிருந்தோம். வழியில் தமிழ்வாணன் அவர்களின் மணிமேகலைப் பிரசுரம் தென்பட்டது. ‘இவங்களும் பதிப்பாளர்களாதலால் இவங்க கிட்டே கேட்டுப் பார்’ என்று உள்ளே அனுப்பினார். அலுவலகத்தில் ஒருவர் மட்டும் இருந்தார். சுற்றிலும் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ‘வாங்கம்மா என்ன புத்தகம் வேணும்?’ என்றார், கனிவோடு. ‘இல்லீங்க சார், நான் இங்கே புத்தகம் வாங்க வரலை. புக்வெஞ்ச்சர் பப்ளிகேஷன்ஸ் எங்கே இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?’ அவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை சட்டென்று எழுந்து வாசலுக்கு வந்தவர், ‘இப்படியே நேரா போனீங்கன்னா இந்தி பிரச்சார் சபா வரும். அதுக்கு எதிரில் ‘வாசகர் வட்டம்’ அப்படீன்னு ஒரு போர்டு போட்டிருக்கும். அதுதாம்மா’ ஆகா என்ன கனிவு என்ன அக்கறை. தமிழ்வாணன் இந்த விற்பனையாளரை எங்கே பிடித்தார்? இவருடைய கனிவுக்காகவே அடுத்த முறை மணிமேகலைப் பிரசுரம் வந்து ஏதாவது புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நண்பருடன் நடந்தேன். (அதன் பின் இன்னொரு நாள் அங்கு சென்று இரண்டு புத்தகங்கள் வாங்கியது வேறு கதை).

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

அவர் சொன்ன போர்டு தென்பட்டது வாசலில் காம்பவுண்டுக்குள் மரங்கள் நிறைந்த அழகான வீடு. கண்ணாடியணிந்த, பார்த்தாலே மதிக்கத் தக்க ஒரு அம்மா வந்து விசாரிக்க, ‘நடந்தாய் வாழி காவிரி’ புத்தகம் வேண்டும் என்றோம். ‘உட்காருங்க’ என்று சொன்னதோடு வாசகர் வட்டம் வெளியிட்ட நூல்களடங்கிய லிஸ்ட் ஒன்றையும் தந்துவிட்டு உள்ளே சென்றார். எங்கள் இருவரையும் தவிர இன்னொரு நடுத்தர வயதைக் கடந்த ஆள் மட்டும் இருந்தார். ‘எவ்வளவு கனிவா பேசுறாங்க’ என்று நண்பர் வில்லியம்ஸிடம் சொன்னபோது, அந்த இன்னொரு ஆள் சொன்னார் ‘இவங்கதான் தியாகி சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமியம்மா’. இதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் மூழ்கினேன். எவ்வளவு சிம்பிளா இருக்காங்க..!!. அவங்க புத்தகத்தோடு அறையிலிருந்து வெளியில் வந்தபோது என்னையறியாமல் எழுந்து நின்று கைகூப்பினேன் ‘நீங்க யாருன்னு எனக்கு இப்போதான் தெரியும்’ என்று சொன்னதும் அழகான சிறிய புன்னகையோடு ‘உட்காருங்க’ என்று சொல்லிவிட்டு பில் போட ஆரம்பித்தார். இப்போது நினைத்தாலும், லட்சுமியம்மா அவர்களை அன்று பார்த்த தோற்றம் மனதில் நிழலாடுகிறது.

சமீபத்தில் ஹிந்துவில் பெண் பதிப்பாளர்களைப் பற்றி ஒரு கட்டுரையில் லக்ஷ்மியைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு quote:

We were not good at marketing. If people burn their fingers, we burnt our arm!

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:

தி. ஜானகிராமன் + சிட்டி எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” – சாரதா அறிமுகம் செய்கிறார்
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய பதிவுகள்:
வாசகர் வட்டம் உருவாக்கி நேர்த்தியான புத்தகங்களை பதிப்பித்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி (Lakshmi Krishnamoorthi)
சமீபத்திய ஹிந்து கட்டுரை
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அளித்த ஒரு பேட்டி
விகடனில் அளித்த இன்னொரு பேட்டி
காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி
சாரதாவின் பிற பதிவுகள்:
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படம்

சாரதாவுக்கு அறிமுகம் தேவை இல்லை. அவருடைய சினிமா விமர்சனங்களை அவார்டா கொடுக்கறாங்க தளத்தில் ஏற்கனவே பதிப்பித்திருக்கிறேன். தி. ஜானகிராமன் மற்றும் சிட்டி இணைந்து எழுதிய travelogue – பயண நூல் – “நடந்தாய் வாழி காவேரி” தமிழில் எழுதப்பட்ட பயண அனுபவங்களிலேயே மிகச் சிறந்தது எனக் குறிப்பிடப்படும் புத்தகம். தலைக்காவிரி தொட்டு பூம்புகார் வரைக்கும் காவிரிக் கரையோரமாக பயணம் செய்து எழுத்தாளர்கள் சிட்டியும் தி.ஜாவும் எழுதியிருக்கிறார்கள். இது வாசகர் வட்டம் பதிப்பித்த புத்தகம். இப்போது காலச்சுவடு மறுபதிப்பு செய்திருக்கிறதாம். இதற்கு சாரதா எழுதிய மதிப்புரை கீழே.

Thi. Janakiraman

Chittiசென்னை தி.நகர் ‘வாசகர் வட்டம்’ குழுமத்தைச் சேர்ந்த திருவாளர்கள் சிட்டி, மற்றும் தி.ஜானகிராமன் இணைந்து எழுதிய இது போன்ற அற்புத நூலுக்கு மதிப்புரை எழுதும் தகுதியெல்லாம் எனக்கு வந்துவிடவில்லையாதலால், இதை மதிப்புரை எனக் கொள்ள வேண்டாம். நூலைப் படித்து வியந்த (வியக்கும்) ஒரு வாசகி/ரசிகையின் எண்ணத்தில் உருவான சில வரிகள் எனக் கொள்ளலாம். இந்நூல் என்னை வந்தடைந்ததே ஒரு சுவையான கதையென்றாலும், அதை பின்னூட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நேரடியாக உள்ளே.

முன்பு வெளிநாட்டு பயணக் கட்டுரைகள் என்றாலே விரும்பிப் படிக்கும் ஆர்வம் கொண்ட எனக்கு சிறிது காலத்திலேயே அவை கிட்டத்தட்ட ஒரே நோக்கில் (தமிழில்: ஸ்டீரியோடைப்) பயணித்து சலிப்பைத் தருகின்றனவோ என்று தோன்றத் துவங்கிவிட்டது. பிரம்மாண்டமான விமான நிலையங்கள், உயரமான கட்டிடங்கள், கட்டுரையாளர் உணவகங்களில் சைவம் கிடைக்காமல் அவதிப்பட்டது, அங்குள்ள தமிழ்க் குடும்பங்களின் ஆதரவு, உபசாரம் மற்றும் உதவிகள், அவற்றுக்கு நன்றிக்கடனாக அவர்களைப் பற்றி சில வரிகள் அல்லது சில பக்கங்கள் (உதவியின் அளவைப் பொறுத்து), இப்படியாக சலிப்பைத் தந்த வேளையில், தமிழ்நாட்டுக்குள்ளேயே (மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில்) பயணித்து எழுதப்பட்ட, வழக்கமான வரைமுறைகளை மீறி, சரியாகச்சொன்னால் அவற்றுக்கு அப்பாற்பட்டு, கையில் எடுத்தால் கீழே வைக்க மனமில்லாத அளவுக்கு ஒரு தேர்ந்த நாவலையும் தோற்கடிக்கும் சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ எனும் இந்நூலின் துவக்கமே அருமை.

சில இடங்களின் வர்ணனைகள் நூல் எழுதப்பட்ட காலத்தில் இருந்த நிலைமை சார்ந்தது, இப்போது மாறியிருக்கலாம். ‘மாயவரத்தின் பிரதான சாலையிலிருந்து கிழக்கு நோக்கிப் பிரியும் ஒரு மண் சாலையில் ஒரு கைகாட்டி ‘காவேரிப்பட்டினம்’ என்று காட்டிக் கொண்டிருக்க அது சோழர்களின் துறைமுகமான ‘காவிரி புகும் பட்டினம்’ செல்லும் சாலையெனத் தெரிகிறது. ஒரு காலத்தில் துறைமுகத்திலிருந்து தலைநகர் உறையூர் செல்ல அமைக்கப்பட்ட நேர் சாலை இப்போது மணல் சாலையாக, இரு பக்கமும் கருவேல மரங்கள் தோரணம் கட்டி நிற்க, சிள்வண்டுகளை இரைய விட்டிருக்கிறது’ என்ற துவக்கமே நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. காவிரியை, தலை முதல் கால் வரை நேரில் கண்டு ரசிக்கும் ஒரு பயணம் மேற்கொண்டால் என்ன என்று தோன்றியதாகச் சொல்லும் நூலாசிரியர்கள், ‘செயற்கைக் கோள்கள் சந்திரனையும் சுக்கிரனையும் வலம் வந்துகொண்டிருக்கும் இந்த விஞ்ஞான யுகத்தில் இதென்ன விபரீத எண்ணம்?’ என்று தோன்றியதையும் ஒப்புக் கொள்கிறார்கள். சென்னையிலிருந்து தனி வாகனத்தில் நண்பர்கள் சிலருடன் புறப்படும் அவர்கள் நேராகச் செல்வது சீரங்கப்பட்டணத்துக்கு. அதிலிருந்து காவிரிக் கரையூடாகவே செல்லும் அவர்கள் குடகு மலையை அடைந்து, மெர்க்காராவில் தலைக் காவிரியிலிருந்து, பயணித்து வருவதாக சம்பவம்.

ஆனால் அதை அவர்கள் வரி வரியாக விளக்கும் முறையில், நாம் நூலைப் படிப்பதாகத் தெரியாது. அந்த வாகனத்தின் முன்வரிசையில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டே வருவதான உணர்வு நம்மை ஆட்கொள்ளும். அங்கங்கே வரம்பு மீறாத இயல்பான நகைச்சுவை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும். தலைக்காவிரியை நோக்கிப் போகும்போது, ‘சித்தாப்பூர் என்னும் ஊரில் வர்ணா பாம்புகள் அதிகம்’ என்று ஒரு புத்தகத்தில் படித்துவிட்டு பயந்துகொண்டே அந்த ஊருக்குள் நுழைய, வர்ணாவும் இல்லை பாம்பும் இல்லை. வர்ணம் அடித்த வீடுகளும் கடைகளும் தென்பட, காருக்கு தீனி வாங்கும் இடத்தில் அங்கிருந்தவனிடம் வர்ணா பாம்பு எங்கே என்று கேட்க, அவன் பேந்த பேந்த விழித்துவிட்டு, தான் பிறந்ததிலிருந்து ஒரு பாம்பைக் கூட அங்கு பார்த்ததில்லை என்றும், பாம்பாட்டியின் கூடையில்தான் பார்த்திருப்பதாகவும் விளக்கும் இடம் ஒரு உதாரணம். அதைப் படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். மெர்க்காராவில் மேகமூட்டங்களுக்கு மத்தியில் நுழைந்து பயணம் செய்யும்போதும், திடீரென பிடித்துக் கொள்ளும் மழையில் நனைந்து கொண்டே பொருட்களை இறக்கும்போதும், நாமும் நனைகிறோம். ஆடுதாண்டு காவிரியைக் காணும்போதும், பண்ணேர்கட்டா பண்னையில் தங்கும்போதும் அப்படியே. ஒகேனக்கலில் ஒரு மன்னார்குடி மாமியின் குடிசை உணவகத்தில் மிளகாய் வத்தல் குழம்பு சாப்பிடும்போதும் நாமும் அதை அனுபவிக்கிறோம். நூலாசிரியர்களின் எழுத்து வன்மை அத்தகையது. அவற்றின் சுவையை பாமரத்தியான எனக்கு சொல்லத் தெரியவில்லை. காவிரித் தாயின் இதயமான மேட்டூர் அணை பற்றி மட்டுமல்ல, அங்கங்கே உள்ள தடுப்பணைகள் பற்றியும் கூட சுவையான தகவல்கள். வழியில் அமைந்துள்ள திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடிலில் பெறும் சுவையான அனுபவங்கள். எதைச் சொல்வது, எதை விடுவது. காவிரியோடு கொள்ளிடம் கண்ட அனுபவங்களைச் சொல்லும்போது, அருகே அமைந்துள்ள கங்கைகண்ட சோழபுரத்துக்கும் ஒரு கிளைப்பயணம் (‘விஸிட்’ என்று சொன்னால் சட்டென விளங்கும் அளவுக்கு ஆங்கிலம் நம் மீது அமர்ந்துவிட்டது). அந்த அத்தியாயம் துவங்குவதே ஒரு அழகு.

‘தொலைவில் நரைநிறத்தில் கோபுரம் தெரியும்போதே மனம் நெகிழத் துவங்கிவிடும். அங்கே செல்லும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் அனுபவம். ராஜேந்திர சோழன் ஏன் இதைக் கட்டினான்? தஞ்சையில் ராஜராஜேச்சுரத்தை தந்த தந்தையை மிஞ்சவா? அப்படியானால் அபாரமாகத் திட்டமிட்ட கோபுரத்தை ஏன் பாதியில் மழித்துக் குட்டையாக்கினான்? எந்த தோல்வி, அல்லது உணர்வு அவனைத் தடுத்தது? வளமான காவிரிக்கரையை விட்டு வறண்ட இப்பகுதியில் ஏன் இதைக் கட்டினான்? இப்பகுதி மக்களுக்கும் ஒரு அக வாழ்வைத் தரவா?’ இப்படி நீண்டு செல்லும் நூலாசிரியர்களின் விளக்கம், பின்னர் கொள்ளிடத்தில் மேலணை கீழணை கட்ட கற்களூக்காக பிரிட்டிஷ் அரசாங்கம், இக்கோயிலின் ராஜ மதிலைத் தகர்த்து கருங்கற்களை எடுத்துச் சென்ற சோகத்தைச் சொல்லும்போது நம் மனமும் அழும். (இன்றைக்கும் ராஜ மதிலின்றி, திறந்த கோயிலாகத்தான் நிற்கிறது கங்கை கொண்ட சோழீச்சுரம்).

கல்லணையில் துவங்கி பிரியத் துவங்கிய காவிரியின் கிளையாறுகள், தண்ணீரைப் பிரித்து எடுத்துச்செல்ல, கும்பகோணம் வரும்போதே காவிரி சிறுத்துவிடுகிறது. எனவே, கும்பகோணத்துக்கு கிழக்கே வீரசோழன் கிளைக்கும்போது, ‘காவிரி தந்து, தந்து மெலிந்துகொண்டே போவதைப் பார்க்கும்போது நம் மனதில் சோகம் தலை தூக்குகிறது’ என்று நூலாசிரியர்கள் எழுதும்போது நம் மனதையும் அந்த உணர்வு அழுத்துகிறது. காவிரிக் கரையில் வளர்ந்த கலாச்சாரம்தான் எத்தகையது, பண்பாடுதான் எவ்வளவு உன்னதமானது! குழாயிலும்தான் தண்ணீர் வருகிறது. அதுவே ஆற்றில் ஓடும்போது இப்படியா பாட்டாகக் கேட்கும், இசையாக மலரும், பண்பாடாக வளரும், கோயிலாக உயரும்!

ஆயிரம் தடுப்புக்களில் இன்று காவிரி சிறைப்பட்டிருக்கலாம். ஆனால் அன்றைக்கு கல்லணை கூட கட்டப்படாத நிலையில் கரை புரண்டு ஓடிய காவிரியைப் பார்த்து இளங்கோவடிகள் ஆர்ப்பரித்தது போல இந்நூலைப் படித்த பின் நமக்கும் ஆர்ப்பரிக்கத் தோன்றுகிறது.
‘காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும்’

“நடந்தாய் வாழி காவேரி” புத்தகத்தை சாரதா வாங்கிய அனுபவமும் சுவையாக இருக்கிறது. வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் நேராக வாங்கி இருக்கிறார். பதிவின் நீளம் கருதி இதை தனியான பதிவாக போடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு, ஊர் சுற்றல்

தொடர்புடைய பதிவுகள்:

சிட்டி:
சிட்டியின் ப்ளாக் – அவர் மறைவதற்கு ஒரு ஆறேழு மாதம் முன்னால்தான் எழுத ஆரம்பித்திருக்கிறார்.
சிட்டியைப் பற்றி ஹிந்து நாளிதழில்

சாரதாவின் பிற பதிவுகள்:
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படம்

அறுசுவை அரசு நடராஜன் தொடர்கிறார் …..
இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது.   திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று.    ஒரு குழந்தையும் பிறந்து விட்டது.   என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை.    வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.

‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது.   வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’   என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.

இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய்,  மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.  இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன்.   பெரியவரை தரிசனம் செய்தேன்.   என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல்  அவரிடம் சொன்னேன்.

எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி!   இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம்.  இங்கேயே தூங்குங்கள்.  நாளை போய்க் கொள்ளலாம்!’   என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல….  கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட  எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம்.  பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால்,  தூக்கம் நன்றாக வந்தது.

காலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம்.  புது வேட்டியும்,  புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி,  அதை எங்களிடம் கொடுத்து  உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.
http://3.bp.blogspot.com/_WRTfA9x_seg/StHjVredajI/AAAAAAAABYs/cbkmwJg-BFc/s320/maha_periyava_014s%5B1%5D.jpg
உடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும்,  எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார்.  ‘போ!  எல்லாம் சரியாயிடும்! ‘   என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.   என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது.   ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம்.  தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது.  வெற்றி நிச்சயம் கிடைக்கும்’  என்ற உறுதி பிறந்தது.

அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது.   கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு,  மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர்.    அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.

அதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன்.   ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது,  ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா….  இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே…  முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’  என்றார் பெரியவர்.

வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து  பார்த்தும் சல்லிக்காசு இல்லை.   என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன்.  காதில் தோடு தெரிந்தது.   அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது)  கொண்டு போனேன்.   பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……

‘என்ன….  லட்டு செய்ய முடிஞ்சுதா?  ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’   என்றார் மெலிதான புன்னகையுடன்.

என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை.    ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே….  அதுவே போதும்’   என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்)  அன்று  லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன்.  லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது…   இன்று எங்கள் குடும்பம் முழுவதும்  மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால்,  அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.

பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை  — நிறைவுற்றது

தொடர்புடைய பதிவுகள்:சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”

nullClick Here Enlarge

உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை.    சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.
பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது.   வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு.

ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.

திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.

அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.

ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.

அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.

அவர் குமுதத்தில் எழுதிய ‘ரத்தத்தின் நிறம் சிவப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.

‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.

ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.

சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.

எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பை யும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.

மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் _ கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.

null

உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு  ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.

தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.

நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.

அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.

நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.

குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.

குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.

சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப்போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.

ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.

இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..

( நன்றி: குமுதம் 12.3.2008 )

இந்த தளத்தின் இன்னொரு பொறுப்பாளரான உப்பிலி ஸ்ரீனிவாஸ் கொஞ்ச நாளாக சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் புகழும் பதிவாக போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு அவர் கருத்துகளில் முழு இசைவு இல்லை. என் கண்ணில் சந்திரசேகரர் scholar, அவ்வளவுதான். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது தோன்றியவை:

ஊரில் பரவலாக இருக்கும் நினைப்பு இதுதான். சந்திரசேகரர் உத்தமர். ஞானி. வேதம், சாஸ்திரம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர். உண்மையான துறவி. காஞ்சி மடத்துக்கு இன்றைக்கு மிச்சம் இருக்கும் பேருக்கும் புகழுக்கும் அவர்தான் காரணம். ஜெயேந்திரரோ பலவீனங்கள் உள்ளவர். கொலை செய்யத் தூண்டினார் என்று நம்புகிறோமோ இல்லையோ பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படித்தான். அவருக்கு தத்துவ ஞானம் இருக்கிறதோ இல்லையோ அது அதிகமாக வெளியே தெரியவில்லை. அரசியலில் எல்லாம் தலையிட்டார். அவரால்தான் காஞ்சி மடத்துக்கு பேர் கெட்டது. எனக்கும் ஏறக்குறைய இதே எண்ணம்தான். சந்திரசேகரரை பெரும்பாலான பிராமணர்கள் தெய்வம் என்று கொண்டாட முக்கியமான காரணமே அவர்களுக்கு ஜெயேந்திரர் மேல் உள்ள அதிருப்தியும் வெறுப்புமே என்று எனக்கு தோன்றுகிறது. ஜெயேந்திரர் சந்திரசேகரரின் அடிச்சுவட்டிலேயே சென்றிருந்தால் இன்று சந்திரசேகரரை எல்லாரும் மறந்தே போயிருப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதி

சந்திரசேகரர் தனிப்பட்ட முறையில் உத்தமர்தான். ஒரு உண்மையான துறவிக்குரிய லட்சணங்கள் அனேகமாக அவருக்கு பொருந்தித்தான் இருக்கின்றன. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பெரும் பாண்டித்தியம் உடையவர். அவருக்கு தமிழில் பாண்டித்தியம் இருந்தது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. (டாக்டர் நாகசாமி சில இடங்களில் இது பற்றி பேசுகிறார்.) மறைந்துகொண்டிருக்கும் நம் பாரம்பரியம் மீண்டும் தழைக்க பாடுபட்டார். அதர்வ வேதம் மீண்டும் ஓரளவு உயிர்த்தெழ அவர்தான் காரணம் என்று தெரிகிறது. ஒரு நாளைக்கு உப்பில்லாத வாழைப்பூ பொரியலும் சாதமும் கலந்து ஒரு கவளம்தான் சாப்பிடுவார் என்று சொல்வார்கள். உண்மையோ பொய்யோ, மனிதர் உடலில் ஊளைச்சதை எதுவும் கிடையாது. ஊளைச்சதையை விடுங்கள், சதையே கிடையாது. (ஜெயேந்திரர் பார்க்க கொஞ்சம் புஷ்டியாக இருப்பார்.)

இப்படி உண்மையான துறவு ஒரு புறம், அதே நேரத்தில் திறமையான நிர்வாகி/மடாதிபதியும் கூட. ஒரு மடத்தின் பலம் அந்த மடாதிபதி மேல் மக்களுக்கு இருக்கும் நல்ல எண்ணமே என்பதை புரிந்து வைத்திருந்தார். ஒரு நல்ல தலைவனுக்கு வேண்டிய charisma அவரிடம் நிறைய உண்டு. அவரை சந்தித்துப் பேசியவர்களில் அநேகமானவர்கள் மிகவும் impress ஆகி இருக்கிறார்கள். அவர் வருவதற்கு முன் ஐயர்கள் எல்லாரும் ஒரு மடாதிபதி பின் நின்றிருக்கமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஜெயேந்திரர் பேர் இப்படி சீப்பட்ட பிறகும் முக்கால்வாசி ஐயர் கல்யாணப் பத்திரிகைகள் காஞ்சி சங்கராச்சாரியார் ஆசியுடன் என்றுதான் அடிக்கப்படுகின்றன (என் கல்யாணப் பத்திரிகையும் அப்படித்தான்.) சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையாக இருந்த கும்பகோணம் மடம் இன்று ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஜெயேந்திரர் கேவலப்படுவதற்கு முன் சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் அது மக்கள் கண்களில் ஏறக்குறைய முதல் இடத்துக்கே வந்து கொண்டிருந்தது. இப்படி அந்த மடத்துக்கு மதிப்பு இருப்பதற்கு சந்திரசேகரரே முக்கிய காரணம். இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது – மடத்தின் பிரஸ்டிஜை வளர்த்த ஒரு துறவி பொய் சொன்னாரா? எனக்குத் தெரிந்து அவர் எங்கேயும் தன் வாயால் இது ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது என்று சொன்னதில்லை, ஆனால் அப்படி சொல்வதை எப்போதும் தடுத்ததில்லை. அதை மறைமுகமாக ஊக்குவித்தார் என்றுதான் நினைக்கிறேன். இந்த ஒரு விஷயம் அவரது துறவுக்கு ஒரு இழுக்குத்தான்.

ஜயேந்திர சரஸ்வதி

ஜெயேந்திரரோ, சொல்லவே வேண்டாம். கோர்ட்டில் எப்போது தீர்ப்பு வருமோ தெரியாது – ஆனால் என்ன தீர்ப்பு வந்தாலும் அவர் மீது படிந்த களங்கம் போகாது. பெண் விஷயத்தில் வீக் என்று அனேகமாக எல்லாரும் நினைக்கிறார்கள். கொலை பற்றி எனக்கே கொஞ்சம் சந்தேகம் உண்டு. அவர் இப்படி எல்லாம் கேவலப்படாவிட்டாலும் அவர் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு – ராம ஜன்ம பூமி விஷயத்தில் அவருடைய தலையீடு, பொதுவாக அவருடைய பி.ஜே.பி. சார்பு நிலை, ஒரு காலத்திய ஜெயலலிதா சார்பு நிலை எல்லாம் துறவுக்கு இழுக்கு. ஒரு துறவி அரசியலில் தலையிடுவது என் கண்ணில் தவறுதான். என் நினைவு சரியாக இருந்தால் இவர் பி.ஜே.பி. அலுவலகம் எல்லாம் திறந்து வைத்திருக்கிறார். ஒரு காலத்தில் ஜெயலலிதா, பி.ஜே.பி. தலைவர்கள் எல்லாருக்கும் வேண்டியவராக இருந்தார். ஜெயலலிதா கொண்டு வந்த கட்டாய மத மாற்ற தடை சட்டத்துக்கு இவர்தான் மூல காரணம் என்று கேள்வி. மேலும் சந்திரசேகரரோடு ஒப்பிடும்போது இவருக்கும் வேதம், சாஸ்திரம் பற்றி தெரிந்திருப்பது குறைவுதான் என்று தோன்றுகிறது.

ஆனால்:
சந்திரசேகரர் ஹிந்து மதத்தின் காலாவதி ஆகிவிட்ட, அடக்குமுறை அம்சம் உள்ள சில நியதிகளை மீண்டும் நிறுவ முயன்றார். முக்கியமாக, ஜாதி: அவருக்கு வேதம் படிப்பது குறைகிறதே என்ற கவலை இல்லை, ஆனால் பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் வேதம் படிப்பது குறைகிறதே என்ற கவலை இருந்தது. யாருக்கு வேண்டுமானாலும் சொல்லித் தருகிறேன், வேதம் தழைத்தால் போதும் என்று அவர் கிளம்பவில்லை. அவருக்கு பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் என்பதில் நம்பிக்கை இருந்தது. பி.ஏ. கிருஷ்ணன் தலித்கள் கோவிலுக்கு வரலாம் என்று 1939இல் ராஜாஜி தமிழ் நாட்டு முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட மசோதாவை எதிர்த்தார் என்று குறிப்பிடுகிறார். காந்தி அவரை பார்க்க வரும்போது நடுவில் ஒரு பசு மாட்டை நிறுத்தினாராம். ஏனென்றால் காந்தி பனியா, பிராமணர்களை விட “கீழ் ஜாதி”, பசு மாடு இல்லாவிட்டால் “தீட்டாகிவிடும்”. மொட்டை அடித்துக் கொள்ளாத விதவைப் பெண்களைப் பார்க்க மாட்டாராம்; அப்படி பார்க்க நேரிட்டால் அன்று சாப்பிட மாட்டாராம். இதனால் அவரை பார்க்காமல் தவிர்த்த உறவினர்கள் எனக்கு உண்டு. பெண்களுக்கு சமூகத்தில் என்ன இடம் சரியானது என்று நினைத்திருப்பார் என்று தெளிவாகத் தெரிகிறது.

செல்வாக்கு நிறைய இருந்தது. அவர் செயலாக இருந்த காலத்தில் பிராமணர்கள்தான் நிறைய படித்த ஜாதி. இவர் சொல்லி இருந்தால், ஜாதியின் தாக்கம் இன்னும் குறைந்திருக்கும்; பெண்கள் இன்னும் கொஞ்சம் சமமாக நடத்தப்பட்டிருப்பார்கள். ஆனால் இவருக்கே அது தவறு என்று தோன்றவில்லை, அப்படிப்பட்ட சமூகமே சரி என்று நினைத்தார். அவரை குறை சொல்லியும் பயனில்லை. 1894இல் பிறந்தவர். அவர் வளர்ந்த காலத்தின் விழுமியங்கள் வேறு. அவரால் அந்த விழுமியங்களை தாண்ட முடியவில்லை.

ஜெயேந்திரர் 1935இல் பிறந்தவர். அவருடைய இளமைக் காலத்தில் ஜாதி தவறு என்று சொல்வதை நிச்சயமாக கேட்டிருப்பார். ஜெயேந்திரர் பல வருஷங்களாக மடத்தை சமூகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்று முயன்றார். மடத்தை இன்னும் வலுவானதாக ஆக்க வேண்டும் என்ற ஆர்வமாகக் கூட இருக்கலாம் – ஆனால் தலித்களோடு பழக முயன்றார். மடம் பிராமணர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சொந்தமானது என்று ஆக்க முயன்றார். அவரை சந்திரசேகரர் இருந்த வரைக்கும் சுதந்திரமாக இயங்கவிடவில்லை. ஜெயேந்திரர் மடத்தை விட்டு ஓடிய நிகழ்ச்சிக்கு இதுதான் மூல காரணம் என்று சொல்கிறார்கள். ஜெயேந்திரர் தன் முயற்சியில் வெற்றி அடையவில்லை, இன்றும் மடம் பிராமணர்களின் மடமே. ஆனால் அவர் முயன்றார் என்பது பெரிய விஷயம். ஜெயேந்திரர் சந்திரசேகரரை விட நாற்பது வயது இளையவர். அவருக்கு இது இன்னும் சுலபமாக இருந்திருக்கலாம்.

ஒரு பக்கம் தனிப்பட்ட முறையில் உத்தமரான, ஆனால் காலாவதி ஆகிவிட்ட ஹிந்து மதத்தின் சில பழக்க வழக்கங்களை மீண்டும் நிலைநிறுத்த முயன்ற ஒரு உண்மையான துறவி; இன்னொரு பக்கம், தனிப்பட்ட முறையில் பலவீனங்கள் உடைய, ஆனால் மடத்தை பயனுள்ள பாதையில் திருப்ப முயற்சி செய்து தோற்றுப் போன ஒரு மனிதர். எனக்கு மடத்தை மாற்ற முயன்றவர்தான் மேலானவராகத் தெரிகிறது.

டிஸ்க்ளைமர்: நான் தெய்வத்தின் குரல் எல்லாம் படித்தத்தில்லை. படிப்பேன் என்ற நம்பிக்கையும் இல்லை. புத்தகத்தின் பேரே கொஞ்சம் கடுப்படிக்கிறது. மனிதனை தெய்வமாக்காதீர்கள்!

பின்குறிப்பு: இந்த தளத்தின் இன்னொரு பொறுப்பாளரான நண்பர் ஸ்ரீனிவாஸ் ஒரு பதிவில் சந்திரசேகரர் பல்லக்கிலிருந்து மாயமாக மறைந்து போனார் என்றெல்லாம் எழுதி இருந்தார். இதே ஸ்ரீனிவாஸ் பெங்களூரில் இருக்கும் நித்யானந்தா எனக்கு திருவண்ணாமலையில் காட்சி தந்தார் என்று சாரு நிவேதிதா எழுதினால் விழுந்து விழுந்து சிரிப்பார். :-) மனிதனை தெய்வமாக்காதீர்கள், அனாவசிய கட்டுக்கதைகள் வேண்டாமே!

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஆளுமைகள்–>காஞ்சி சங்கர மடம் பற்றிய பதிவுகள்


கல்யாண சமையல் சாதம்
ஆசிரியர்: ‘அறுசுவை அரசு’ நடராஜன்
விலை INR:180
ISBN NO. 978-81-8476-013-2
பதிப்பு 3
அறுசுவை அரசு நடராஜன் கூறுகிறார்…..
ஒவ்வொரு வருடமும் மே மாதம் நெருங்க நெருங்க எனக்குள் ஒரு விதமான பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்வது வழக்கம்.   எனக்கு மட்டுமல்ல…   என் குடும்பத்தார் அத்தனை பேருக்கும்!
[FXCD0033-1.jpg]
காஞ்சி முனிவர் மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ‘ஜெயந்தி’  (பிறந்த தினம்) வருவது அந்த மாதத்தில்தான்.   அந்த நாளின் போது,  நான், என் மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முழுவதுமாக காஞ்சிபுரத்துக்குச் சென்று,  ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து,  லட்டுகள் செய்து,  கூடையில் சுமந்து கொண்டுபோய் மடத்தில் ஒப்படைப்போம்.  இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி.
http://3.bp.blogspot.com/_WRTfA9x_seg/StHjVredajI/AAAAAAAABYs/cbkmwJg-BFc/s320/maha_periyava_014s%5B1%5D.jpg
இந்த சாதாரண சமையல்காரன்,  ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழந்து  ‘இதோடு எல்லாம் போதும்’  என்று விபரீதமான முடிவு எடுக்க இருந்த சமயத்தில்,  நம்பிக்கை கொடுத்து,  “நீ நன்றாகத்தான் இருப்பாய்’  என்று அபயக்கரம் நீட்டிய அந்த மாமுனிவருக்கு நான் செலுத்தி வரும் காணிக்கை இது.

கொஞ்சம் முழுசாகச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது  சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது.  மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார்.  தினந்தோறும்  மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில்  அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும்.    இதற்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும்.  மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர்.  அவருக்கு உதவியாக என் அப்பா (விக்கிரபாண்டியம் நாராயணசாமி அய்யர்)   உட்பட நாலைந்து பேர் இருந்தனர்.  என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.

ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள்.  படுவெயிட்டாக இருக்கும்.  இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடும்போது,   கூடைக்குள்ளிருந்து  மிச்சம் மீதி சாம்பார்,  ரசம், பாயசமெல்லாம்  காதோரமாகக் கொட்டி தோளெல்லாம் வழியும்.   அதைத் துடைப்பதற்கு முடியாமல் அப்படியே தலையை ஒடித்துக் கன்னத்தால் தேய்த்து விட்டுக் கொள்கிறபோது அது வாயில்பட்டு நாக்கில் ருசிக்கும்.   ‘எச்சில்’   என்று தோன்றாது.   பெரியவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி,  இறைவனால்  கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியாகத் தான் அது தோன்றும் என்பதால் துளிகூட அருவருப்பு இருக்காது எங்களுக்கு!

இப்படி இலைக்கூடையைக்   கொண்டுபோய் கொட்டிய கையோடு,  காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும்,  அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!

சங்கர மடத்துக்கு இணையாக விசேஷ நாட்களில் தெய்வப்பெருமாள் நல்லூர்  அன்னதான சிவன் என்பவரும் தனியாக அன்னதானம் செய்வார்.  இத்தனைக்கும் சாதாரண சமையல்காரர்தான்.  அதென்னவோ அவருக்குள் ஒரு வெறி.  தானே கடை கடையாக ஏறி இறங்கி,  வியாபாரிகளிடம் மன்றாடி அரிசி, பருப்பு என்று தானம் வாங்கி வந்து ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துவார்.

‘மடத்துக்குப் போட்டியாக அவர் அப்படிச் செய்கிறார்’   என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும்,  மஹா பெரியவருக்கு இதில் சந்தோஷம்தான்.  தன்னை தரிசிப்பதற்கு அன்னதான சிவன் வரும்போது,  சிரித்துக் கொண்டே, ‘என்ன சிவன்,  இன்னிக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டாய் ?’  என்று பெரியவர் கேட்பார்.

‘இன்னிக்கும் நிறையப் பேருக்குப் போட்டேன்!’  என்று சிவனும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்வார்.  (இந்த அன்னதான சிவன் பேரிலேயே  பெரிய கமிட்டி போட்டு,  பல பெரிய மனிதர்கள் சேர்ந்து  ‘டிரஸ்ட்’ டாகத் தொடர்ந்து அன்னதானப் பணியைச் செய்துகொண்டு இருந்தார்கள்.  அந்த ‘டிரஸ்ட்’  இப்போது  இருக்கிறதா எனத் தெரியவில்லை).

பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை  — இறுதிப் பகுதி அடுத்த பதிவில்……

தொடர்புடைய பதிவுகள்:சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers