நன்றி – ஜி. ஆர். சுரேந்தர்நாத் (உயிரோசை – 01-03-2010 )
முதலில் புதிதாக ஒரு சுஜாதா உருவாகவேண்டுமென்றால், அவருக்கு சுஜாதாவிடம் இருந்த என்னென்ன விஷயங்கள் இருக்கவேண்டும் என்று பார்ப்போம்.
சுஜாதாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், அவரது பிரத்யேகமான, மெலிதான நகைச்சுவை ததும்பும், அபாரமான மொழி நடை. பெரிய எழுத்தாளர்கள் முதல் வாசகர்கள் வரை அனைவரையும் அவரது எழுத்துகளில் கட்டிப் போடும் வசீகரம் மிக்க, மாய நடை அது. அடுத்து அவருக்கு இருந்த பல்துறை அறிவு. இவை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும் என்பதால், அதைப் பற்றி நான் இங்கு விவாதிக்கப் போவதில்லை.
அடுத்து அவருடைய கடும் உழைப்பு. அவர் படித்தது லட்சக்கணக்கான பக்கங்கள் இருக்கும். எழுதியது ஆயிரக்கணக்கில் இருக்கும். இவ்வளவுக்கும் அவர் எவ்வளவு நேரம் செலவழித்திருக்கவேண்டும். இத்தனைக்கும் அவர் முழு நேர எழுத்தாளருமில்லை. அவர் புகழின் உச்சியில் ஏராளமாக எழுதிக் குவித்த காலத்தில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பணியில் இருந்தார். அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட, சில தொழில் நிறுவனங்களில் ஆலோசகராக இருந்தார். திரைப்படத் துறையிலும் இயங்கிக்கொண்டிருந்தார். இடையிடையே உடல் நலமின்றியும் இருந்தார். இவ்வளவுக்கும் நடுவே வாசிப்பின் மீதும், எழுத்தின் மீதும் இருந்த தீராக் காதலால் இறுதி வரையிலும் அவர் உழைத்துக்கொண்டே இருந்தார்.
அடுத்து சுஜாதா ஒரு கால கட்டத்தோடு தேங்கிவிடவில்லை. அவர் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தார். பலரைப் போல அவர் சங்க இலக்கியத்துடனோ அல்லது பாரதியுடனோ அல்லது இலக்கிய க்ளாசிக்குகளுடனோ மட்டும் நின்றுவிடாமல் மிகவும் அப்டேட்டடாக இருந்தார். அவருக்கு ஆழ்வார் பாடல்களும் தெரியும். சரோஜாதேவியும் தெரியும். நானோ டெக்னாலஜியும் தெரியும். நாட்டுப்புறப் பாடலும் தெரியும். 27.2.2010 அன்று நடைபெற்ற சுஜாதா நினைவுக் கூட்டத்தில் அவருடைய உறவினர் திரு. திருமலை அவர்கள் கூறியது போல், உலக அளவிலேயே இம்மாதிரி பல்துறைகள் குறித்தும் சுவையாக எழுதியவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
அடுத்து சுஜாதா புகழ் பெற ஆரம்பித்த காலகட்டம். சுஜாதாவே இது பற்றி ஒரு முறை குறிப்பிட்டது போல் அது வெகுஜனப் பத்திரிகைகளின் பொற்காலம். விகடன், குமுதம், கல்கி, சாவி, குங்குமம், இதயம்பேசுகிறது, தாய்… என்று எத்தனை இதழ்கள். அதில் பாதி இதழ்கள் இப்போது இல்லவே இல்லை. அந்த இதழ்களில் ஒரு வாரத்திற்கு 3 சிறுகதைகள், 2 அல்லது 3 தொடர்கதைகள் என்று கதைகளுக்கு அபாரமான வரவேற்பு இருந்த காலகட்டம் அது. அந்த உச்ச காலகட்டத்தில் சுஜாதா ஒரே சமயத்தில் நான்கு வார இதழ்களுக்குக் கூட தொடர்கதை எழுதியிருக்கிறார். எனவே அது வெகு ஜன எழுத்தாளர்களின் பொற்காலமாகவும் இருந்தது. அப்போது சுஜாதாவுடன் சேர்ந்து மேலும் பல எழுத்தாளர்களும் மிகுந்த புகழ் பெற்றவர்களாக இருந்தனர்.
ஆனால் அதிலும் கூட சுஜாதாவின் தனித்துவம் என்ன என்றால், கதைகள் வருவது குறைந்தவுடன் அவர் காலத்திற்கு முன்பும், பின்பும் இயங்கிய வெகுஜன எழுத்தாளர்கள் பலரும் அப்படியே தேங்கி, சிறிது காலத்தில் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் சுஜாதா அதற்குப் பிறகும் சேட்டிலைட் சானல் யுகம், இன்டர்நெட் யுகத்திலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தார். சூழல் காரணமாக பிற்காலத்தில் தொடர்கதைகள் எழுதுவது குறைந்தாலும் ‘‘கற்றதும் பெற்றதும்…” என்று தமிழில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கினார். தமிழில் பத்தி எழுத்தையும், ஒரு வெற்றிகரமான, வெகுஜன இலக்கியச் செயல்பாடாக மாற்றிய பெருமையும் சுஜாதாவையே சேரும். அதில் அவர், ஒரு முறை மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்த பிறகு எழுதிய கட்டுரையும், எழுபது வயது நிறைவையொட்டி அவர் எழுதிய கட்டுரையும் தமிழின் சிறந்த கட்டுரைகள் பட்டியலில் சுலபமாக இடம் பிடிக்கக்கூடியவை.
அடுத்து நவீன இலக்கியத்துடன் அவருக்கு இருந்த தீவிர பரிச்சயம். பரிச்சயத்துடன் நின்றுவிடாமல் அவர்களில் முக்கியமானவர்களைத் தம் வாழ்நாள் முழுவதும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தியபடியே இருந்தார். அதனால் அவரைச் சில இலக்கியவாதிகள் கூறுவது போல் பைங்கிளி எழுத்தாளர்கள் பட்டியலில் நிச்சயமாக சேர்க்கமுடியாது. எஸ். ராமகிருஷ்ணன் கூறியது போல், அவர் வெகுஜனப் பத்திரிகைகளில் இயங்கிய ஒரு இலக்கியவாதி.
ஆக, புதிதாக ஒரு சுஜாதா உருவாகவேண்டுமென்றால், அவர் சுஜாதா போல் அபாரமான மொழிநடை வாய்க்கப் பெற்று, பல் துறை அறிவுடன், தனது முப்பது வயதுகளிலேயே புகழ் பெற ஆரம்பித்து, கால மாற்றத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, இடைவிடாமல் அனைத்தையும் படித்துக்கொண்டு, ஏராளமான உழைப்பைச் செலவழித்து பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு, எழுத்தின் மீது ஒரு தீராக் காதலுடன் இயங்கி, கூடவே காலமும் நேரமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் ஒத்து வந்தால்தான் அது சாத்தியமாகும்.
மேற்கூறியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இன்னொரு சுஜாதா உருவாக இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும். ஏனென்றால் அப்படி ஒருவர் இருந்தால், அதன் துவக்கம் இந்நேரம் கண்ணில் பட்டிருக்கும்.
மகத்தான படைப்பாளிகளின் தனித்துவம் என்னவென்றால், அவர்களைப் போல் மற்றொருவர் இல்லை என்பதே. எனவே அந்தக் கருத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, சுஜாதாவும் மகத்தான கலைஞர்களின் வரிசையில், யாராலும் இட்டு நிரப்ப முடியாத இடத்தில் கம்பீரத்துடன் அமர்ந்திருக்கிறார்.
நன்றி – ஜி. ஆர். சுரேந்தர்நாத் (உயிரோசை – 01-03-2010 )
சுஜாதா பதில்கள் – பாகம் 1 (உயிர்மை பதிப்பகம்)
பஞ்சவர்ணம், போளூர்.
நிறைய எழுதுவது — அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ?
நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும்.
வெங்கடாசலம். நீங்கள் எப்படி இன்றும் தொடர்ந்து பீல்டில் இருக்க முடிகிறது ?
தொடர்ந்து படிபதால்.ஆர். கே. குமாரி, சென்னை. சுஜாதாவின் (ரங்கராஜன் இல்லை ஸார்!) இளமையின் ரகசியம் என்ன ?
யாண்டுபலவாகியும் நரையிலன் ஆகுதல் மீண்டும் மீண்டும் dye அடித்துக்கொள்வதால்.
ஜெ. ஜானகிசந்திரன், தம்மம்பட்டி. ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான, முக்கியமான அடிப்படைக் ‘குணம்’ என்ன ?
கூர்மையான பார்வை, காது, படிப்புத் திறன்.
ஆவடி த, தரணிதரன், சென்னை. தங்கள் வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் ?
விடா முயற்சி என்கிற என் நண்பர்.
ஆர். பி. ஜெயச்சந்திரன், திருச்சி. ஒரு மனிதன் எந்த வயது வரை இளைஞனாக வாழ முடியும் ?
இறக்கும் வரை.எழிலரசி, கோவில்பட்டி. வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே மிக முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுகிறீர்கள்?
கற்றது போதாது என்பதை.டி. சுப்பிரமணியன், மேலையூர். இலக்கியத் துறையில் உங்களது இமாலய இலக்கு எது ?
கடைசி வரை எழுதிக் கொண்டிருப்பது.
சுஜாதா பதில்கள் – பாகம் 2 (உயிர்மை பதிப்பகம்)
விவேக். எழுதுகையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் ?
முதலில் யோசிக்காமல் எழுதுவேன். திருப்பிப் படிக்கும்போது சிந்தித்து திருத்துவேன்.
கே. அரவிந்த். நீங்கள் ஸ்பென்சர் பிளாசாவுக்கு முக்காடு போட்டு வந்து ஒட்டுக் கேட்டீர்களா ? அது எப்படி நாங்க பயன்படுத்தும் அதனை வார்த்தைகளையும் நீங்கள் எழுதுகிறீர்கள் ?
1962 இலிருந்து எழுதி வருகிறேனே, இந்தத் தகுதிகூட இல்லையேல் வெட்கம்.
கல்யாண். உங்கள் மூளை இன்ஷூர் செய்யப்பட்டுவிட்டதா ?
இல்லை. அதை மதிப்பிடுவதில் சிக்கல்.
ஸ்ரீப்ரியா.
உங்களை ஒரு க்ளோன் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன். ஒத்துழைப்பீர்களா ?
எந்த விதத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிய வேண்டும்.
ஸ்ரீராம். ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உழைக்கிறீர்கள், எத்தனை மணி நேரம் படிக்கிறீர்கள் ?
நான்கு மணி நேரம். ஒரு மணி நேரம்.
ஷீலாமதி. உங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுத ஆசை ! அனுமதிப்பீர்களா ?
என் எழுத்தைப் பற்றி எழுதுவதானால் சம்மதம். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது.
சுஜாதா, சின்னச் சின்னக் கட்டுரைகள், 1985
.. எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது; மார்புக்குள்ளிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்குக் காத்திருப்பதல்ல – திரும்பத் திரும்ப எழுதுவது – மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது; எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதியதில் திருப்திப்படாமல் இருப்பது…. மீண்டும் எழுதுவது.
சுஜாதா சொன்ன இரண்டு முக்கியமான விஷயங்கள்.
1. நிறைய படிக்கவேண்டும். படிப்பது என்றால் நாம் எழுதியது, அடுத்தவர் எழுதியது என்றெல்லாம் வகை தொகையில்லாமல் படிக்கவேண்டும்
2. காட்டமான விமர்சனங்களுக்கான பதிலடியை படைப்புகளின் மூலமாகத்தான் சொல்லவேண்டும்; பகிரங்கமாக அல்ல.
சுஜாதா ஒரு பேட்டியில்……. “என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டியிருக்கிறாள். “ஆ” கதையைப் படித்துவிட்டு, “என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்” என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!“
“முதல் கதை வெளிவந்த போது திருச்சி நகரமே அலம்பி விட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் ‘சிவாஜி ‘ இதழின் காப்பிகள் கடகடவென்று விற்றுத் தீர்ந்து விட்டன, எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்”, தனது முதல் இதழை பற்றி சுஜாதா..
”தமிழ் இலக்கியத்தின் மீது நான் கொண்ட ரசனையை பன்மடங்கு உயர்த்தியதற்காகவே அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன்” – கமல்.
“உன் விஞ்ஞானப் பார்வையால் வெளிச்சம் பெற்றன சில மூளைகள்” – கவிஞை தாமரை
சுஜாதா – பார்வை 360
எழுத்தில் எந்த அளவுக்கு அந்தரங்க விஷயங்கள் கலக்க வேண்டும்; எந்த விகிதத்தில் உண்மையும் பொய்யும் கலக்க வேண்டும் என்பது பற்றி கருத்துக்கள் வேறுபடுகின்றன. என்னைக்கேட்டால் முழு உண்மையை அப்படியே எழுதக்கூடாது. எப்படியும் நான் எழுத மாட்டேன். தின வாழ்க்கையில் உள்ள சம்பவங்கள் இலக்கிய அந்தஸ்து பெற, அவற்றில் ஒரு காலம் கடந்த உண்மை பொதிந்திருக்கவேண்டும். இல்லையேல் அது ஒரு சாதாரண சிறுவனின் நாட்குறிப்பு போல, காலை எழுந்தேன், பல் தேய்த்தேன், குப்பை பொறுக்கினேன் என்று அற்பமாக முடிந்துவிடும். முழுக்க முழுக்க கற்பனையாகவும் எழுத முடியாது. அப்படி எழுதினால் அது கதையல்ல fairy tale, fantasy. உண்மையும் பொய்யும் கலக்க வேண்டும். இந்த கலக்கல், ஸ்ரீரங்கம் தெற்கு வாசலில் ஒரு கடையில் மட்டும் கிடைக்கும் நன்னாரி சர்பத் போல தனிப்பட்டது. இந்த விகிதாச்சாரம் ஆளுக்காள் மாறுபடுவதைக் கவனிக்க, கோபிகிருஷ்ணன், தி. ஜானகிராமன், ஆதவன் இம்மூவரின் கதைகளைப் படித்துப் பாருங்கள்.
ஹுசேன் இப்போது கட்டார் குடிமகன் ஆகிவிட்டாராம். இதைப் பற்றி யோசித்தால்:
ஹுசேனுக்கு அவர் நினைத்ததை வரைய முழு உரிமையும் உண்டு என்ற நிலை எடுப்பவன் நான். அவர் சரஸ்வதியை நிர்வாணமாக வரையலாம், முகமதை ஓரினச்சேர்க்கையாளராக வரையலாம், அவர் இஷ்டம் அவர் சவுகரியம். அது bad taste என்று நானும் நீங்களும் நினைக்கலாம். But bad taste is not a crime.
அது உங்கள் மனதை புண்படுத்தினால் நீங்களும் தாராளமாக இப்படி வரையாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கலாம். அவர் வீட்டின் முன்னால் சத்யாகிரகம் கூட செய்யலாம். சட்டம் இடம் கொடுத்தால் அவர் மேல் கேஸ் கூட போடலாம். ஆனால் இறுதி முடிவு அவருடையது என்பதை உணர வேண்டும். அவரை இப்படித்தான் வரைய வேண்டும், இப்படி எல்லாம் வரையக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
சட்டம் இடம் கொடுத்தால் கேஸ் போடலாம். ஆனால் அப்படிப்பட்ட சட்டங்கள் தவறானவை. மாற்றப்பட வேண்டியவை. இதை இப்படியே விட்டால் நாளை BT கத்திரிக்காயைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்று கூட சட்டம் போடுவார்கள். ஓ இன்றைக்கே போட்டுவிட்டார்களோ!
அவர் மேல் கேஸ் போடப்பட்டால் அதை அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும். சட்டம் தவறானது என்று போராடத்தான் வேண்டும். அவருக்காக சட்டம் வளையமுடியாது. ஆனால் அவர் இப்படி பயப்படும் வகையில் ஒரு சட்டம் இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
போராட மனதிலும் உடலிலும் வலிமை இல்லை என்றால் கட்டாருக்கு போக வேண்டியதுதான். இது அனேகமாக அவரது சொந்த விஷயம். அவருக்கு இருக்கும் பயங்களும் நிர்ப்பந்தங்களும் என்ன என்று அவருக்குத்தான் தெரியும். அவருக்கு தன சொந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ கட்டார்தான் சிறந்த இடம் என்று தோன்றினால் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
ஆனால் ஒரு விஷயம் உதைக்கிறது. அவர் சொல்கிறாராம் – “I enjoy complete freedom in Qatar. Now Qatar is my place. Here no one controls my freedom of expression. I am very happy here” கட்டாரில் என்ன சுதந்திரம் கிடைத்துவிடும் இவருக்கு? அங்கே போய் முகமதின் உருவத்தை வரைந்தால் artistic self-expression என்று இவரை விட்டுவிடுவார்களா? கட்டாரில் சுதந்திரமாக சரஸ்வதியை வரையலாம், அவ்வளவுதான். ஒரு வேளை ஏசுவையும் வரையலாமோ என்னவோ. இந்தியாவில் சுதந்திரம் இல்லை, கட்டாரில் இருக்கிறது என்று இவர் சொல்லும்போது கேக்கறவன் கேனையனாக இருந்தால் என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.
டாக்டர் ருத்ரனும் நானும் ஹுசேன் விஷயத்தில் ஏறக்குறைய இசைந்த கருத்துடையவர்கள். அவரது சில ஹுசேன் பதிவுகளுக்கு என் ஆளுமைகள் பக்கத்திலேயே சுட்டி கொடுத்திருக்கிறேன்.அவர் இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆவல்!அவர் பொங்கி எழுந்திருக்கிறார். அது ஒரு கலைஞனின் நியாயமான ஆக்ரோஷமே. ஆனால் கட்டார் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லமாட்டார் என்று நினைக்கிறேன்.
திருமலை ராஜனின ”ஆதலினால் நடத்தல் செய்வீர்” ஒரு மன எழுச்சியை உண்டு பண்ணியதன் விளவே இந்தக் கட்டுரை.
விளையாட்டு வாழ்க்கையில் எனக்கு முக்கியமான ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. பல்ருக்கு இது போல் தான் இருக்கிறது. சில சமயம் இதை நட்பையும் முறிக்கும். ஏப்படி? ஒரு அனுபவம் கீழே.
மெட்ராஸ் வாழ்க்கையின் காலத்தில் (என்ன, ஒரு இருபத்தேழு, இருபதெட்டு வயது இருக்கும்) காலை சுமார் 6 மணிக்கு பாட்மிண்டன் கோர்ட்டில் ஆஜர் ஆவேன் ”டவுசர்” பையனாக. இன்னும் 3 அல்லது 4 முப்பதுகளில் அல்லது நாற்பதுகளில் அல்லது ஐம்பதுகளில் உள்ள ”டவுசர்” பையன்கள் வந்து சேர்வார்கள் ஒரு மணிநேரம் கடுமையான விளையாட்டு. வெள்ளை வெளேரென்று, கான்வெண்ட் ஆங்கிலம் பேசி கொண்டிருக்கும் ஒரு கிறுத்துவ சாக்லட் பாய் ”டவுசர்” பையன் (இவன் தான் உண்மையான பையன் – பதினேழு, பதினெட்டு வயதிருக்கும்; மற்றவர்களெல்லாம் “பையர்கள்”) என்னுடன் டீம் சேர்க்க விரும்பவான். பெரிய பையர்கள் அவன் இஷ்டப்படி விட்டுக் கொடுத்து விடுவதால் நானும் அவனும் தான் அனேகமாக ஜோடி.
அவனோ சால்மான் கான் போல் வெல் பில்ட். நான் வெல் பில்ட் இல்லை என்றாலும் பத்து பதினைந்து வருடமாக விட்டு விட்டு விளையாடிய அனுபவம். இருவரும் சேர்ந்து எதிர் டீம்களை ஏழு மணிவரை துவம்சம் செய்திருப்போம். நாங்கள் தரையில் இருந்து இரண்டடி குதித்தெழுந்து அடிக்கும் ஸ்மாஷ்கள்களினால் (smashes) ஷட்டில் எதிர் தரப்பு கோர்ட்டில் பட்டு கிட்டத்தட்ட அவர்கள் தலை வரை பவுன்ஸாகும். ஒன்றும் செய்ய முடியாமல் ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருப்பர்கள். சில சமயம் வெறுத்து போய்விடுவார்கள். ஆனால் அவர்களிடம் பாராட்டவேண்டியது என்ன வென்றால் அவர்கள் எங்கள் அணியை முதலில் சொன்னது போல் கலைக்க விரும்பமாட்டர்கள். எங்களை தோற்கடித்தே தீர வேண்டும் என்பது அவர்களுடைய ஆவல். எல்லோரும் வயது வந்தவர்களாதலால் ஒருவரும் பேசிகொள்ள மாட்டார்கள். உண்மையான ”டவுசர்” பையன் தான் “ஷூட்”, “மை”, ”ஹெக்” என்றாவது ஒற்றை வார்ததையில் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பான்.
அவனுடைய தந்தையும் விளையாட வருவார். சற்றே பருமனான குள்ளமான உருவம். குறுந்தாடி வத்திருப்பார். கண்ணாடி அணிந்திருப்பார். பின் கழுத்திலிருந்து கிளம்பும் ஸ்போர்ட் கார்ட் கண்ணாடியை கச்சிதமாக அதன் இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கும். ஒரு நிஜாரும், போலோ ஷர்ட்டும், விலை மிக்க ஸ்னீக்கர்ஸும் அணிந்திருப்பார். மிகவும் கட்டுப்பாடான தந்தை என்று நினக்கிறேன். மற்றும் அவனுக்கு கோச்சும் அவர்தான்.
பொதுவாக 4 பேர் விளையாடிக் கொண்டிருக்கையில் வெயிட் செய்துக் கொண்டிருப்பவர்கள் ரெஃப்ரியாக இருப்பார்கள். இவன் விளையாடும் பொழுது தந்தை ரெஃப்ரியாக இருக்கும் சூழ்நிலைகள் வரும். இவன் வயதின் வேகத்தில் சில சமயம் “இட்ஸ் ஒயிட்”, “இட்ஸ் ஒயிட்” (It’s wide) என்று கதறிக் கொண்டிருக்கையிலேயே தந்தை “இன்” என்று தீர்ப்புக் கூறி விட தலையை பிடித்துக் கொண்டு ”நோ, இட்ஸ்….ஒயிட்” என்று சுருதி இறங்கிப்போய் தரையைப் பார்த்துகொண்டே தலையை பக்கவாட்டில் அகலமாக ஆட்டியவாறு தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்துவான். அப்பா உடனே “டூ நாட் டிஸ்புயூட் த அம்பையர்” என்று ஸ்திரமான ஸ்டேட்மண்ட் விடுவார். பையன் கப் சிப் காரா வடை. அவர் எல்லோருக்கும் சொன்ன மாதிரி எல்லோருமே கப் சிப் தான் அன்றைய கோட்டா முடிவடையும் வரை. ஏழு மணிக்கு விளையாட்டு முடிந்து விடும். குளித்திருப்போம். இருந்தாலும் நீர் குளியல் போட்டு அம்மா நீட்டும் டிஃபனை சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கு பெஸண்டு நகர் பஸ்டாண்டுக்கு ஒரு ”நீண்ட” நடை
பயணம்…சிபிடபிள்யுடி குவாட்டர்ஸிலிருந்து.
சிறுவயதிலிருந்தே விளையாட்டு என்னுடன் சேர்ந்தே பயணித்தது. எங்கு சென்றாலும் அதில்லாவிட்டால் தவறு செய்வது போன்ற ஒரு உள்ளுணர்வு. உறுத்தல். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விளையாட்டு. சாக்கர், பாட்மிண்டன், க்ரிக்கெட், சில சமயம் பிங் பாங்…பள்ளிக் காலத்தில் க்ரிக்கெட்டும் (மாட்டட் பிட்ச்) பாட்மிண்டனும் (இண்டோர் சிமெண்ட் கோர்ட்), கல்லூரியில் சிறிது க்ரிக்கெட்டும் (ரெகுலர் பிட்ச்) சாக்கரும், கல்லூரிக்கு பின்னர் சில வருடங்கள் க்ரிக்கெட்டு… தரம் தாழ்ந்த பிட்ச், சில சமயம் தெரு க்ரிக்கெட்…பின்னர் ஒரு வருடம் ஒரு மின் உற்பத்தி நிலையத்தின் கண்ட்ரோல் ரூமில் பிங் பாங் (இது சிங்கப்பூரில்), பின்னர் சில வருடம் மேலே சொன்ன சிமெண்ட் கோர்ட் ஷட்டில் காக் விளையாட்டு.
இப்படி போய் கொண்டிருந்தபொழுது ஒரு நாள் ஒரு ஞாயிறு அன்று விளையாடி முடித்து எல்லோரும் கிளம்பிய பின்னரும் நானும் மாத்யூவும் மட்டும் கோர்ட் அருகிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவன் ஒரு திட்டத்தை முன் வைத்தான். அவன் தீவிரமாக டென்னிஸ் விளையாடுவதாகவும், என்னுடன் சேர்ந்து டென்னிஸ் டீம் அமைக்க வேண்டும் என்று விரும்பவதாகவும் கூறினான். எனக்கும் ஆசைதான். ஆனால் என்னுடைய வாழ்க்கை வேறு பக்கம் திரும்பிக் கொண்டிருந்தது. இன்னும் பதினைந்து நாட்களில் அமெரிக்கா புறப்பட ஆயத்தமாகி கொண்டிருந்தேன்.
”மாத்யூ, ஸாரி, பட் ஐம் லிவீங் டூ யுனைட்டட் ஸ்டேட்ஸ் இன் ஃபிஃப்டீன் டேஸ்”
”யாஹ்? ரியலி”
“யாஹ், ஸோ …”
“யூ ஆர் நாட் ஈவன் கோயிங் டு ப்ளே திஸ்?” – பாட்மிண்டன் கோர்ட்டை சுட்டியபடி
எனக்கு திடுக்கென்றது. என்னடா இது. நான் சொன்னதை இவன் நமபவில்லையோ?. ஏதோ டென்னிஸ் விளையாடபிடிக்காமல் தான் இப்படி ஒரு கதை சொல்கிறேன் என்று நினைக்கிறானோ?
“யெஸ் அஃப்டெர் 15 டேஸ்…”
அவன் கண்ணில் ஏமாற்றத்தை காண முடிந்தது. நன்றாக் இரண்டு வருடமாக போய்கொண்டிருந்த விளையாட்டு த்டைபடப்போகிறது எனப்தில் எனக்கும் ஏதோ ஒன்றை இழக்கும் உணர்வு ஏற்பட தொடங்கியிருந்தது. தலையை குனிந்து கொண்டான். சிறிது நேரம் மௌணமாக உட்கார்ந்திருந்தோம். பின்னர் எழுந்தான். “குட் லக்” என்று கூறிவிட்டு விடைப்பெற்று சென்று விட்டான். பின்னர் மிஞ்சியிருந்த பதினைந்து நாட்களில் அவன் கோர்ட்டுக்கு வரவேயில்லை.
விளையாட்டு என்பது சிலருக்கு மிக ஸீரியஸான ஒன்று. நானும் விளையாட்டில் ஸீரியஸ்தான். இவனுக்கும் அது போல்தான். ஏதோ பிராஜக்டை நான் அபாண்டன் செய்வது போல் உணர்ந்து விட்டான் என நினைக்கிறேன். வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு நகரவேண்டிய நிர்பந்தம் எனக்கு. என்னுடைய ஸ்டேட் டீம், நேஷனல் டீம் கனவுகளெல்லாம் கலைந்து முடிந்த தருணம். மாயை விலகி விழித்தெழுந்துப் சுற்று முற்றும் பார்த்த பொழுது யதார்த்த உலகம் என்ற பஸ்ஸில் “போலாம் ரைட்” என்று விசில் அடித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஃபுட்போர்டிலாவது இடம் கிடைத்து விடாதா என்று அந்த பஸ்ஸுடன் ஓடிக்கொண்டிருந்த கால கட்டம்.
அவனுக்கோ அவனுடைய கனவு பிம்பத்தை நினைவாக்கும் வயதும், முயர்ச்சியும் இருந்தது. அதுவரை என்னுடைய டென்னிஸ் விளையாட்டெல்லாம் மொத்தமே ஒரு எட்டு மணி நேரம் தான். ஜப்பானிய சக ஊழிய நண்பர்கள் இருவர் சிங்கப்பூரின் ஆர்ச்சிட் ஓட்டலில் டென்னிஸ் கோர்ட்டை ஒரு ஆறு மணி நேரத்திற்கு 90 டாலர்கள் கொடுத்து புக் செய்திருப்பார்கள். அவர்கள் ஓய்வெடுக்கும் நேரங்களில் இன்னொரு சக இந்திய ஊழியரும், நானும் டென்னிஸ் பந்துகளை நெட்டை தாண்டி எதிராளியிடம் அடிக்க முயல்வோம். ஆனால் பந்துகளுக்கு என்ன கோபமோ தெரியவில்லை, கோர்ட்டின் வேலியை தாண்டி விழும். நாங்கள் அடித்த பந்தை நாங்களே பொறுக்கி வருவதற்க்குள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் முடிந்துவிடும். இவவளவு தான் என் டென்னிஸ் எக்ஸ்பீரியன்ஸ். என்னை வைத்து மாத்யூ எந்த மாட்சை ஜெயிக்க?
முரண்பாடுவுடைய ஒரு விளையாட்டே வாழ்க்கையில் அங்கம் வகித்தது. இங்கே அமெரிக்காவில் வந்து செட்டிலாகி விளையாட்டு ஒரு ஒழுங்குக்கு வருவதற்கு கிட்டத்தட்ட ஒன்பது வருடமாகியது. ஆனாலும் இந்த இடைப்பட்ட ஒன்பது வருடங்களிலும் அப்படி இப்படி விளையாடி எப்படியோ டென்னிஸும் கற்றாகியது. ஏதோ அடித்தால் ஒழுங்காக பந்து போகும். சர்வ் பலமாக செய்ய வர ஆரம்பித்தது. அதன் பின்னர் ஒரு நான்கு வருடங்களாக வார இறுதியில் தீவிர டென்னிஸ். இப்பொழுது ஒரு 6 மாதமாக மறுபடியும் தேக்கம், விளையாடுவதற்கு ஒரு நிரந்தர சக டென்னிஸ் வீரர் கிடைக்காததால்.
முதல் பகுதி இங்கே. இரண்டாம் பகுதி இங்கே. இந்த பகுதியில் கடைசி 33 புத்தகங்கள்.
68. ஜீரோ டிகிரி – சாரு நிவேதிதா: முதலில் படிக்கும்போது மிக ஷாக்கிங்காக இருந்தது. ஷாக் வால்யூ தவிர வேறு எதுவும் இந்த புத்தகத்தில் இல்லை.
69. பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்: தமிழின் தலை சிறந்த புத்தகங்களில் ஒன்று. கதையும் பிரமாதம், அவர் பயன்படுத்தி இருக்கும் பல இலக்கிய உத்திகளும் பிரமாதம். எழுத்தின் ஆர்ட்டும் க்ராஃப்டும் அருமையாக கலந்த புத்தகம்.
70. ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வு – டி.ஆர். கார்த்திகேயன்: படித்ததில்லை.
71. வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: பிரமாதம்! இதைப் பற்றிய பதிவு இங்கே.
72. குட்டி யாப்பா – நாகூர் ரூமி: படிக்க வேண்டும்.
73. சார்லி சாப்ளின் கதை – என். சொக்கன்: படித்ததில்லை.
74. Made in Japan – அகியோ மொரிடா: படித்ததில்லை.
75. வைரமுத்து கவிதைகள் [முழுத்தொகுப்பு]: வைரமுத்து pretentious என்பது என் கருத்து. மேலும் கவிதை என்றால் எனக்கு அலர்ஜி. அதனால் இதை படிக்கும் வாய்ப்பு மிக குறைவு.
76. India after Gandhi – ராமச்சந்திர குஹா: மிக நல்ல புத்தகம். மொழிவாரி மாநிலங்கள் பற்றிய பகுதி அருமையாக இருந்தது. இதைப் பற்றிய பதிவு இங்கே.
77. இரும்புக் குதிரைகள் – பாலகுமாரன்: பாலகுமாரனின் நல்ல புத்தகங்களில் ஒன்று. காயத்ரியின் free sex கொஞ்சம் வலிந்து நுழைக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த வாத்தியார் கரிச்சான் குஞ்சுவை மனதில் வைத்து எழுதப்பட்டவராம். ஆர்தர் ஹெய்லியை போல ஒரு தளத்தின் – மார்க்கெட், லாரி தொழில் – பல நுணுக்கங்களை நன்றாக கொண்டு வந்திருப்பார்.
78. மதினிமார்கள் கதை – கோணங்கி: படிக்க வேண்டும்.
79. காற்றில் கலந்த பேரோசை – சுந்தர ராமசாமி: படித்ததில்லை.
80. புலிநகக் கொன்றை – பி.ஏ. கிருஷ்ணன்: நல்ல புத்தகம்.
81. கொரில்லா – ஷோபா சக்தி: படித்ததில்லை.
82. ஸ்… [அண்டார்டிகா] – முகில்: படித்ததில்லை.
83. அங்க இப்ப என்ன நேரம் – அ. முத்துலிங்கம் முத்துலிங்கம் அசோகமித்ரனின் வாரிசு. எல்லா கதைகளிலும் ஒரு observer மாதிரிதான் எழுதுவார். அருமையான நகைச்சுவை உணர்வு உள்ளவர். நான் அவரது முழு தொகுப்பையும் இணையத்தில்தான் படித்தேன்.
84. முத்துலிங்கம் கதைகள் [முழுத்தொகுப்பு]: முந்தைய புத்தகத்துக்கு எழுதியதுதான்.
85. தீ – எஸ். பொன்னுத்துரை: படித்ததில்லை.
86. சடங்கு – எஸ். பொன்னுத்துரை: படித்ததில்லை.
87. வரலாற்றில் வாழ்தல் – எஸ். பொன்னுத்துரை: படித்ததில்லை.
88. காந்திஜியின் இறுதி 200 நாட்கள் – வி. ராமமூர்த்தி: படித்ததில்லை.
89. இஸ்தான்புல் – ஓரான் பாமுக்: பாமுக் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். படித்ததில்லை.
90. A House for Mr Biswas – வி.எஸ்.நைபால்: படித்ததில்லை.
திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது.
சுஜாதாவின் முன்னுரை
திருவள்ளுவரின் திருக்குறளுக்கு சில சமயம் வள்ளுவரைவிட சுருக்கமான உரை எழுதினபோது, எனக்கு இதைத் தமிழ் மக்கள் ஏற்பார்களோ என்று அச்சமாக இருந்தது. முதலில் இவ்வகையில் எளிமையாகச் சொல்வதற்கான தகுதி எனக்கு இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ என்பதை ‘கடவுளைக் கும்பிடவில்லை என்றால் படித்துப் பிரயோசனமில்லை’ என்று சொல்வதற்கேற்ற துணிச்சலை ஏற்படுத்திக் கொள்ள, திருக்குறள் பற்றிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பரிமேலழகரிலிருந்து மு. வரதராசனார் வரை அத்தனை உரைகளையும் படித்தேன்.
அதன்பின்தான் இந்த சுதந்திரம் எடுத்துக்கொண்டேன். இதனால்தான், இந்த உரை அங்கீகரிக்கப்பட்டு பல பதிப்புகள் கண்டது. இப்போது உயிர்மை பதிப்பகத்தாரால் புதிய வடிவில் வெளி வருகிறது.
கவிஞர் மனுஷ்ய புத்திரன் ‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற குறளுக்கு உத்தம உதாரணம்.
சுஜாதா பதில்கள் – பாகம் 1
டி. எம். முருகானந்தம், திருவைகாவூர்.
ஒவ்வொரு மனிதனும் 1330 குறள்களையும் முழுமையாகப் படித்து, அதான் விளக்கங்களைப் புரிந்துகொண்டால் அவனது வாழ்வு எப்படி அமையும் என்கிறீர்கள் ?
படித்தால் மட்டும் போதாது.
எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. வாய்க்கொழுப்பு இருக்கலாமா ?
லாகாது.
“தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே வாயினால் சுட்ட வடு” என்று திருக்குறளைச் சற்றே மாற்றிச் சொல்ல வேண்டும்.
மயிலாடுதுறை இளையபாரதி, சென்னை. “அட்வைஸ்” செய்வது உங்களுக்குப் பிடிக்குமா ?
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
என்ற அட்வைஸ் மிகப் பிடிக்கும்.
கே. விஜயலட்சுமி, சென்னை. மனிதனுக்கு ஏழ்பிறப்பு உண்டு என்று திருவள்ளுவரும் குறளில் கூறியுள்ளாரே ?
மறுபிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அந்தக் குறளை மட்டும் விட்டுவிட்டு மற்றக் குறள்களால் பயன்பெறலாம்.
சன்சுதா, பிலிக்கல்பாளையம். திருக்குறளின் அனைத்துக் கருத்துகளும் ஏற்புடையதா ?
இல்லை. ராஜம்கிருஷ்ணன் போன்ற பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ளாத சில கருத்துகளும் அதில் உண்டு.
சத்தி. ஏ. ஜே. ஜப்பார், சத்தியமங்கலம். திருக்குறளுக்கு நீங்களும் தெளிவுரை எழுதியிருக்கிறீர்கள். என்றாலும் உங்கள் உரை தவிர இதுவரை வந்ததில் உங்களுக்குப் பிடித்தமான தெளிவுரை எது ?
டாக்டர் மு. வரதராசனுடையது.
அ. ச. அலெக்சாண்டர், தி. அத்திப்பாக்கம். உங்களுக்குத் திருவள்ளுவரிடம் பிடித்த முக்கியமான விஷயம் என்ன சார் ?
சொற்சிக்கனம் .சு. பாலசுப்பிரமணியன், இராமேஸ்வரம். திருக்குறளுக்குக் கிடைத்த பெருமை நாலடியாருக்குக் கிடைக்கவில்லையே, ஏன் ?
அதிகப்படியான இரண்டு அடிகள் தான் காரணம்.
அய்யை சி. முருகேசன், கடவூர் ஆயிரத்து முன்னூற்றி முப்பது திருக்குறள்களில் எந்த ஒரு குரலிலும் “தமிழ்” என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்தாதது ஏன் ?
தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்தினாலும் தமிழ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத காரணம், திருக்குறள் தமிழ் பேசும் தமிழர்களுக்கான நீதிகளை மட்டும் சொல்வதல்ல என்பதுதான். உலகப் பொதுமறை அது. அனைத்து மொழியினருக்குமான பொதுச்சொத்து. மொழி கடந்த மனித நீதி.கல்லார் ரஹ்மத், நாகை. திருக்குறள்படி ஒருவன் வாழ முடியுமா ?
சில அதிகாரங்களை.
திருக்குறளிலும் சில முரண்பாடுகள் இருப்பதாகப் படித்தேன். உண்மையா ?
‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று ஒரு குறள் சொல்கிறது. ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்று இன்னொரு குறள் சொல்கிறது. தெய்வ நம்பிக்கையைப் பற்றிக் ‘கடவுள் வாழ்த்து’ பேசுகிறது. ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று ஒரு குறள் அறிவிக்கிறது. ‘பரந்து கெடுக உலகியற்றியான்’ என்று தெய்வத்தையே கோபிக்கிறது ஒரு குறள். இவற்றை முரண்பாடுகள் என்று கூற முடியாது. வெவ்வேறு சூழல்களில், கருத்தக்களை உரத்து வலியுறுத்தக் கைக்கொள்ளப்பட்ட முறைகள் எனக் கொள்ள வேண்டும்.
கோபம் மனிதனுக்கு வருவதால், அவனது வாழ்நாள் குறையும் என்பது உண்மையா ?
அவன் யாரைக் கோபித்துக்கொள்கிறானோ, அவனுடைய வாழ்நாளும் கூடக் குறையும். ‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்று ஐயமில்லாமல் அறிவிக்கிறார் அய்யன்.
ஆசைகள் கொஞ்சமும் இல்லாமல் இருக்க முடியுமா ?
ஆசையில்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பதும் ஓர் ஆசை தானே ? ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்கிறார் வள்ளுவர். திருமூலரோ ‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்’ என்கிறார். ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்று சொனன புத்தர் அதனால்தான் கடவுள் ஆசையையும் துறக்க நினைத்தார் போல் தோன்றுகிறது. கடவுளைப் பற்றி புத்தர் எதுவும் சொல்லவில்லை.
ச. தங்கமணி, சத்திரப்பட்டி. உலகில் மிக இனிமையானது எது ?
மழலை என்றார் வள்ளுவர். காசோசை என்கிறது இன்றைய உலகம்.
வாசுதேவன், ஸ்ரீராம்பூர். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளைப் புரிந்துகொள்வதைவிட ஒளவையாரின் ஆத்திசூடியைச் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறதே. என்ன காரணம் ?
ஆத்திசூடி காலத்தால் மிகப் பிற்பட்டது. அதுதான் காரணம்.
எஸ். அகிலா, தென்கடப்பன்தாங்கல். உலகத்தைப் படைத்த இறைவனையே, அழிந்துபோகும்படி வள்ளுவர் கூறியிருக்கிறாரே, என்ன காரணம் ?
உழைக்காமல் பிச்சையெடுக்கும் சோம்பேறிகளைப் பார்த்து, வள்ளுவருக்கு வந்த சீற்றம் அது. மேலும் உலகியற்றியான் என்று கூறுவது ஆராய்ச்சிக்குரியது. அவர் அரசனைச் சொல்கிறாரோ என்னவோ ?
ஔவை, திருவள்ளுவர், கபிலர் என்போர் உடன் பிறந்தவர்களா ?
அப்படியும் ஒரு கதை. உண்மையில் அவர்கள் தமிழுடன் பிறந்தவர்கள்.
எம். தாமோதரன், ஆண்டிப்பாளையம். திருக்குறளில் குழந்தைகளுக்குக் காமத்துப் பால் தேவையா ?.
குழந்தைகளுக்குக் காமத்துப் பால் தேவையில்லை. ஆனால், குழந்தைகள் தேவையென்றால், காமத்துப் பால் தேவை.
ஆர். பி. ஜெயச்சந்திரன், பூனாம்பளையம். நடுரோட்டில் நிற்கும் தலைவர்களின் சிலைகள் பற்றி ?
தக்கர் தகவிலர் என்பது தலைவர்களைப் பொறுத்தவரை அவரவர் எச்சத்தால் (வாரிசால்) காணப்படும் என்ற குறளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் காக்கை எச்சத்துக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.
எம். தாமோதரன், கானூர். பொருள் தெரியாமல் 1330 குறள்களையும் ஒப்பிப்பதால் என்ன பயன் ?
ஒப்பிப்பதற்குப் பொருள் கொடுத்து ஊக்கப்படுத்தும்போது, கொஞ்ச நாள் கழித்து, பொருளையும் புரிந்து கொள்ள ஆர்வம் வரும் அவர்களுக்கு. பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும்போது அழுக்காறாமை, வெகாமை போன்ற அதிகாரங்களைப் பரீட்சைக்காகத்தான் நெட்டுருப் போட்டேன். ‘அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்றுத் தீயுழி உய்த்து விடும்’ என்பதன் முழு அர்த்தம் 50 வயதில் தான் புரிந்தது.
ஆர். ராம்மோகன், என். மேட்டுப்பட்டி. ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் !’ ஊழல் வினை ?
முதலில் செல்வம் காட்டும். பின்னர் கைவிலங்கு பூட்டும்.
சுஜாதா பதில்கள் – பாகம் 2
தமிழ்மகன், சென்னை. ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று வள்ளுவர் கூறியிருக்கிறாரே, அது சாத்தியமா ?
சும்மா சிரித்தால் மட்டும் போதும். அதனை ‘அடுத்து ஊர்வதற்கு’ (வெல்வதற்கு) இந்த மேம்போக்கான மகிழ்ச்சியை விட வேறு எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்.
கல்பனா, சுப்ரமணியபுரம். திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு உள்பட எல்லா இலக்கியத்துக்கும் ஏன் மீண்டும் மீண்டும் உரை எழுதணும் ? இதில் நிலையான ஒரு உரையை எப்படி தேர்ந்தெடுத்து வாங்கிப் படிக்கறது ?
நிலையான உரை மட்டும் போதாது. இவைகளின் அடித்தளத்தில் பல அர்த்தங்கள் இருப்பதால்.
சுகுமாரன். ‘சிக்’ ஜோக் என்றால் என்ன ?
வள்ளுவர் சொனன ‘இடுக்கண் வருங்கால் நகுக’ தான். ஆனால் ஒரு சிறு மாறுதல். இடுக்கண் அடுத்தவர்களுக்கு வர வேண்டும்.
மகேஷ். உங்கள் தேர்வில் ‘Man of the Year’ யார் ?
ஏபிஜே அப்துல் கலாம்தான்.
அப்துல் கலாம் பற்றி சுஜாதா
அந்த நாட்களில் அவர் பணியில் கவனமும், கடமை உணர்ச்சியும் மிக்க ஓர் உன்னதமான தலைவராக, வேலை, வேலை, வேலை என்று காலையும், மாலையும் ஆர்வலராகத்தான் அறிமுகமானார். எந்தக் காரியத்தையும் நேற்றே செய்து முடிக்க வேண்டும் என்னும் அவசரத்தில் இருந்தார். அவர் நடத்தும் கூட்டங்கள் சுருக்கமானவை. தன் கீழ் பணி புரிவார்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைப்பார். அவருடைய வெற்றியின் ரகசியம் ‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்னும் திருக்குறளின் சாராம்சமாக இருந்தது.517 . இதனை இவனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து)
அதனை அவன்கண் விடல் ‘இந்தச் செயலை, இப்படி இவன் முடித்துக் கொடுப்பான்’ என்று ஆராய்ந்து அந்தச் செயலை அவனிடம் விட்டுவிட வேண்டும் (சுஜாதா உரை)
236 தோன்றின்புகழோடு தோன்றுக அதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
எங்கேயாவது தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும். இல்லையேல் சும்மா இருக்க வேண்டும் (சுஜாதா உரை)
மறுப்புகள் – சுஜாதா
ஷங்கரின் முதல்வன் படத்தின் மறுப்பு வேறு விதமாக இருந்தது. “அதில் வரும் முதல்வரின் பாத்திரம் எந்த விதத்திலும் தமிழக முதல்வர் கலைஞரை தோற்றத்திலோ, பேச்சிலோ பிரதிபலிக்காமல் இருக்க பிரத்தியேக கவனம் எடுத்துக்கொள்ளுங்க” என்று ஷங்கரிடம் சொன்னேன். அந்தப் பாத்திரத்தில் நடித்த ரகுவரனுக்கு நரைத்த தலையும், ஜிப்பாவும் தடுமாற்ற தமிழ் உச்சரிப்பும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. எந்தவிதத்திலும் தமிழக முதல்வரைப்போல இல்லை. ஒரே ஒரு இடத்தில மட்டும் ‘அகலா(து) அணுகாது தீக்காய்வார் போல்க’ என்ற திருக்குறள் பயன்படுத்தியிருந்தேன். போச்சு! அது போதுமானதாக இருந்தது மறுப்புக்கு. எந்த முதல்வர் திருக்குறள் மேற்கோள் காட்டுகிறார் என்று மதுரையில் அந்தப் படத்துக்கு பெரிய மறுப்பு ஊர்வலம் நடத்தினார்கள்.691 அகலா(து) அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
கிட்டேயும் போகாமல், தூரத்திலும் இல்லாமல் நெருப்பில் குளிர்காய்பவர்களைப் போல மன்னரிடம் பழக வேண்டும். (சுஜாதா உரை)
செப் 5, 2009 சனிக்கிழமை அன்று ஃப்ரீமாண்ட் நகர நூலகத்தில் நடந்த எழுத்தாளர் ஜெயமோகன் கூட்டத்தில் திருமலை ராஜனால் வாசிக்கப் பட்ட எழுத்தாளர் அறிமுக உரை .
ஜெயமோகனின் சொற்பொழிவு
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் சென்று இந்தியப் பாரம்பரியம், பண்பாடு, கலைகள், வரலாறு, இலக்கியம், இந்தியத் தத்துவங்கள் என்று பல தளங்கிலும் தான் பெற்ற ஞானத்தை அமெரிக்க வாழ் தமிழர்களிடம் தனது கலந்துரையாடல்கள் மூலமாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் மூலமாகவும் மதிப்பிற்குரிய எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.ஜெயமோகன் பகிர்ந்து கொண்டு வருகிறார். சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வசிக்கும் தன் வாசகர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் சந்திக்க இங்கு வருகை தந்திருக்கும் ஜெயமோகன் அவர்களை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவர் சார்பாகவும் வரவேற்கிறேன்.
இங்கு கலந்து கொண்டவர்களில் ஜெயமோகன் வாசகர்களுக்கும் அவரைப் பற்றி அறிந்தவர்கள் பலருக்கும் தமிழகத்தின் தலைச் சிறந்த எழுத்தாளர் ஜெயமோகன் குறித்து எவ்வித அறிமுகம் எதுவும் தேவையில்லை. அவரது எழுத்துக்கள் மூலமாக அவரை நன்கு அறிந்தவர்கள் அவர்கள். இருப்பினும் சம்பிரதாயம் கருதியும், ஜெயமோகன் அவர்களது படைப்புக்களுடன் அறிமுகமில்லாமல் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் வந்திருப்பவர்களின் வசதிக்காகவும் இங்கு ஒரு சிறிய அறிமுகத்தை அளிக்க முயல்கிறேன்.
எந்தவொரு மொழியின் இலக்கியத்திலும், பல தரப்பட்ட வகையான படைப்புக்கள் உருவாவது இயற்கையே. தமிழிலக்கியமும் அதற்கு விலக்கல்ல. படிக்கும் வாசகர்களுக்கு வெறும் வாசிப்பு இன்பம் மட்டும் அளித்து தற்காலிகமாக அவர்களைப் பரவசப் படுத்தும் படைப்புகள் பொதுவாகவே ஜனரஞ்சமானதாகவும் பிரபலமானதாகவும் அமைகின்றன. அது போன்ற படைப்புக்கள் ஜனரஞ்சக எழுத்து அல்லது பொழுது போக்கு வகை எழுத்துக்கள் என்று அறியப் படுகின்றன. பெரும்பாலான வாசகர்கள் தங்கள் ஆரம்ப வாசிப்பை அது போன்ற நூல்கள் மூலமாகவே துவக்கியிருந்திருக்கக் கூடும். பெரும்பாலும் இந்த வகை எழுத்துக்கள் எந்தவிதமான ஆழமான தாகக்த்தையும் சிந்தனைத் தூண்டுதலையும் வாசகர்களிடம் ஏற்படுத்துவதில்லை. துப்பறியும் நவீனங்கள், மேம்போக்கான வரலாற்றுக் கதைகள், பெண்களை அழ வைக்கும் சம்பவங்கள் நிறைந்த குடும்பக் கதைகள் போன்ற பொழுது போக்கு வகை எழுத்துக்கள் தமிழில் சிறுகதை/நாவல் இலக்கியம் தோன்றிய காலம் முதலே இருந்து இன்று வரையிலும் கூட பலத்த வரவேற்பினைப் பெற்றே வருகின்றன. இருந்தாலும், தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆரம்ப காலம் தொடங்கி தீவீரமான, வாசகர்களிடம் ஆழ் மனத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி, வாசகர்களுடன் ஆழ்ந்த உரையாடல் நடத்தி, படிப்பவர்களின் சிந்திக்கும் தளத்தினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் இலக்கியவாதிகளும் சென்ற நூற்றாண்டின் நடுவில் இருந்து தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருகின்றனர்.
”இலக்கியத்தின் அழகு அது பேசும் உண்மையில் இருந்து பிறக்கிறது திட்டமிட்ட வடிவங்களால் சொல் அலங்காரங்களால் அல்ல” என்பார் இலக்கிய விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன். இந்த வகை நவீன இலக்கியங்கள், எழுத்தாளனின் கற்பனையும், ஆழ்ந்த அகத் தேடலும் கூடி உருவானவை. எழுத்தாளனின் அக அனுபமும் தேடல்களும் வாசகனின் அக அனுபவங்களுடன் கலந்து அவனது சிந்தனையை அனுபவ எல்லையை விரிவடையச் செய்வது, அது வெறும் கேளிக்கைகளையும், தற்காலிக சுவாரசியத்தையும் உருவாக்குவது அல்ல.
சாக்ரமெண்ட்டோ தமிழ் சங்க கூட்டத்தில் பேசும் பொழுது ஜெயமோகன் “இலக்கியம் ஒரு புல்நுனியை வைத்து ஒரு காட்டை உருவாக்கிக் கொள்ளும் கலை. உங்கள் சிறிய வாழ்க்கைக்குள் மாபெரும் வாழ்க்கையை நிகழ்த்தும் கலை. உங்கள் கற்பனை மூலம் ஒரு வாழ்க்கைக்குள் நீங்கள் பலநூறு பல்லாயிரம் வாழ்க்கையை வாழமுடியும். இலக்கியம் உங்களுக்கு எதை அளிக்கிறதென்று கேட்டீர்கள் என்றால் இன்னும் பெரிய வாழ்க்கையை என்றே பதில் சொல்லுவேன்” என்று பேசினார். அந்த வகை இலக்கியங்களே காலத்தைக் கடந்து நிற்பவை. தமிழ் நவீன இலக்கியங்களின் முன்னோடிகளானபுதுமைப் பித்தன், நகுலன்,கா நா சு, கு ப ரா, சுந்தரராமசாமி , அசோகமித்திரன், ஜெயகாந்தன் வரிசையில் என்பதாவது வருடத்திற்குப் பின் வந்த இலக்கியகர்த்தாக்களில் தனக்கென ஒரு தனியிடம் பெற்று ஒரே வகையான எழுத்துக்களில் மட்டுமே தேங்கிவிடாமல் பன்முக ஆளுமை கொண்டு இயங்கி பல லட்சம் வாசகர்களைக் கொண்டு இயங்கி வருபவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஜெயமோகனின் தாயார் விசாலாட்ச்சி அம்மையார் ஒரு தீவீரமான வாசகியாக இருந்திருக்கிறார். அவரது வாசிப்பின் தேடலால் உந்தப் பட்டு சிறு வயதில் இருந்தே எழுத்தில் ஆர்வமுடைய ஒரு தீவீரமான வாசகரகாக இருந்திருக்கிறார் ஜெயமோகன். சிறுவயதில் ஆசிரியர் “ வளர்ந்த பின் எந்த வேலைக்குப் போக விருப்பம்?” என்று கேட்க்கும் பொழுது சக மாணவர்கள் டாக்டர், இஞ்சினீயர், விமான பைலட், போலீஸ் என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது ”நான் வைக்கம் பஷீராக விருப்பம்” என்று சொன்ன வித்தியாசமான மாணவராக வளர்ந்திருக்கிறார் ஜெயமோகன். ஒரு எழுத்தாளனாவதே தன் வாழ்நாளின் லட்சியம் என்று கூறி, நம்பி இன்று தமிழின் மாபெரும் படைப்பாளியாக வளர்ந்தும் இருக்கிறார். தன் லட்சியத்தை அடைந்திருக்கிறார் ஜெயமோகன்.
எண்பதுகளில் இருந்தே எழுதத் தொடங்கிய ஜெயமோகனது சிறுகதைகள் பல இலக்கிய பத்திரிகைகளில் வெளியாகி அவருக்கு நம்பிக்கையை அளிக்க ஆரம்பித்துள்ளன. 1990ல் அவர் எழுதிய ரப்பர் என்ற நாவல் அகிலன் நினைவுப் பரிசைப் பெற்று அகில இந்திய அளவிலும் இலக்கிய விமர்சகர்களாலும், வாசகர்களாலும் பலத்த பாராட்டினையும் வரவேற்பினையும் பெற்று நவீன இலக்கிய உலகில் ஜெயமோகனுக்கு ஒரு முக்கிய அடையாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. நமது பாரதப் பண்பாடு, புராணங்கள், தொன்மங்கள், பல்லாயிரக்கணக்கான ஆண்டு காலமாக உருவான வரலாறு ஆகியவற்றைப் புறக்கணித்தலும், அந்நியப்படுத்தலுமே நவீன இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளர்களின் போக்காக இருந்து வரும் இன்றைய நிலையில், நமது பாரம்பரியங்கள், தத்துவங்களின் அர்த்தங்களையும், தொன்மையான மரபினையும், பாரதப் பண்பாட்டின் பல்லாயிரக்கணக்கான வருட மரபுகளின் ஒரு தொடர்ச்சியாக ஒரு நீட்சியாக தன் படைப்புக்களை உருவாக்கி வருகிறார் ஜெயமோகன்.
தன் தாய்மொழி மலையாளமாக இருந்த பொழுதிலும், தமிழும், மலையாளமும் பரவலாகப் புழங்கும் கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்துள்ள போதிலும் தன் சிந்தனையை, கற்பனையை, படைப்பாற்றலை இலக்கியமாக மாற்றும் கருவியாக அவர் தமிழ் மொழியினையே தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் எழுத ஆரம்பித்த சில வருடங்களுக்குள்ளாகவே இலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் முயற்சித்து சிறந்த படைப்புகளை அந்த அனைத்து வடிவங்களிலும் உருவாக்கியுள்ளார். சிறுகதை, நாவல், கட்டுரை, மலையாளத்தில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும் மொழிபெயர்ப்புக்கள், கவிதை, தத்துவக் கட்டுரைகள் ஏன் காதல் கதைகள், ஒற்றர்கள் பற்றிய புனைவுகள் என்று அனைத்து வகையான இலக்கிய வடிவங்களிலும் தனது அபாரமான சொல்லாட்சியினாலும்,கற்பனைத் திறத்தாலும், மொழி நேர்த்தி கொண்டும் பல சிறப்பான படைப்புக்களை படைத்துள்ளார்.
அவரது முதல் நாவலான ரப்பரில் ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் மூலமாக அந்தக் குடும்பத்திலும் அந்த சமுதாயத்திலும், அந்த வட்டாரத்திலும் நடந்த சமூகப், பொருளாதாரா, சுற்று சூழல், விவசாய மாற்றங்களை மிகக் கச்சிதமாக விவரிக்கிறார். ஒரு சமூகத்தில் ஏற்படும் எழுச்சியும் வீழ்ச்சியும் எப்படி அதனை ஒட்டிய பிற சமூகங்களையும், அந்த நிலப் பரப்பின் சூழலையும் பாதிக்கிறது என்பதை மிக ஆழமாகச் சொல்லும் நாவல் ரப்பர். தமிழ் நவீன இலக்கியத்தில் அவசியம் படிக்கப் பட வேண்டிய முக்கியமான சூழலியல் இலக்கியம் ரப்பர், அவரது முக்கிய படைப்புக்களில் ஒன்று ரப்பர்.
ரப்பர் நாவலைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும், குறு நாவல்களையும், புனைவில்லாத படைப்புக்களையும் பல தளங்களைத் தொட்டு எழுதி வருகிறார். நாவல்களில் ரப்பரைத் தொடர்ந்து பரவலான கவனிப்பையும், விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்த நாவல் விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் என்ற இரு பெரும் நாவல்கள். இந்த இரண்டு நாவல்களும் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமான மாபெரும் பிருமாண்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. இந்த இரு நாவல்கள் குறித்தும் சற்று விரிவாக நண்பர்கள் பாலாஜியும், அருணகிரியும் பேச இருக்கின்றார்கள்.
ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ஏழாவது உலகம், கன்யாகுமரி, காடு, கொற்றவை ஆகியவை ஜெயமோகன் படைத்துள்ள நாவல்களாகும். இதில் ஏழாவது உலகம் படித்த வாசகர்களின் மனசாட்சியையெல்லாம் உலுக்கிய நம் சமூகத்தின் லட்சியங்கள், அறங்கள், கோட்பாடுகள் தர்ம நியாங்கள் குறித்த அடிப்படைக் கேள்விகளை எழுப்பிய ஒரு படைப்பாகும். பிச்சைக்காரர்களின் உலகத்தை அவர்களுடன் பழகி, வாழ்ந்து நம்மிடையே நாம் காணாத ஒரு உலகத்தை, ஏழாவது உலகத்தை நமக்கு நெருங்கிய நாம் உணரத்தக்க ஒரு அனுபவமாக மாற்றியிருக்கிறார் தன் ஏழாவது உலகம் நாவல் மூலமாக. தமிழில் வாசிக்கத் தெரிந்த ஒவ்வொரு வாசகரும் தவறாமல் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் ஏழாவது உலகம். நாம் இது வரை அறிந்த உலகத்தின் யதார்த்தத்தில் இருந்து நம் மனசாட்சியை உலுக்கும் படைப்பு ஏழாவது உலகம்.
ஜெயமோகனின் மற்றொரு முக்கியமான படைப்பு காடு என்னும் நாவல். அது மனித உறவுகளின் காடு. கருமையும் பசுமையும் போர்த்திய அடர்ந்த ஒரு வனம், இதில் காடு மாபெரும் ஒரு குறியீடாக வருகிறது. குறிஞ்சித் திணையை அடிப்படையாகக் கொண்டு தமிழின் மரபிலக்கியத்தின் நீட்ச்சியாக படைக்கப் பட்டுள்ள அற்புதமான நவீன இலக்கியம் காடு.
ஜெயமோகனின் மாபெரும் நாவல்கள் தவிர அவர் எழுதியுள்ள எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் கூட ஆழமான மனத் தாக்கத்தையும், சிந்தனைகளையும் தூண்டுபவையே. அவற்றின் வடிவங்கள் பலவிதமானவை. ஜெயமோகனின் சிறுகதை உலகில் ஒரு சிறுகதை போல் மற்றொன்று இருப்பதில்அலை. அதன் நேர்த்தி, வடிவம், சொல்லாட்சி, மொழித் திறன், அழகியல் காட்சிகள், கற்பனை வளம் அனைத்தும் சிறுகதைக்குச் சிறுகதை வேறு படுபவை. ஜெயமோகனின் சிறுகதைகளில் மாடன் மோட்சம், படுகை, போதி, நதி, பல்லக்கு, ஊமைச் செந்நாய், மத்தகம் போன்ற சிறுகதைகளும், குறு நாவல்களும் குறிப்பிடத்தக்க ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புகளாகும்.
பல பிரபலமான இலக்கியகர்த்தாக்களைப் போன்று படைப்புலகுடன் மட்டும் தன் மொழி வளத்தையும், கற்பனைத் திறனையும், வளமான அறிவையும், அகண்ட வாசிப்பையும், குறுக்கிக் கொள்ளாமல் இந்தியத் தத்துவங்கள், இந்திய வரலாறு, பாரம்பரிய சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்று சூழல், காந்தியம், உலக இலக்கியம், இலக்கிய விமர்சனங்கள், இலக்கியம் மற்றும் அரசியல் ஆளுமைகள் குறித்த அறிமுகங்கள், பகவத் கீதை, வேதங்கள், மார்க்சியம், காந்தியம், ஓவியம், சிற்பம், இந்தியக் கலைகள், நடனங்கள், மலையாள மொழி இலக்கியம், சினிமா மற்றும் பல்வித நுண்கலைகள் என்று எண்ணற்ற துறைகளிலிலும் தான் பெற்ற பரந்த அறிவையும், நுட்பமான அலசல்களையும், ஆராய்ச்சிகளையும் தன் வாசகர்களுடன் ஆயிரக்கணக்கான தன் கட்டுரைகள் மூலமாகத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறார். ”அவற்றுள் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற நூல் குறிப்பிடத் தகுந்த ஒரு தத்துவ விளக்க நூலாகும். இந்து தத்துவ மரபுகளை எல்லாம் சடங்குகள் சார்ந்த பக்தி மரபுகள் என்று ஒதுக்குவோர் ஒரு குழுவாகவும், அவை எல்லாம் வணங்குவதற்குரிய சடங்குகள் நிறைந்த ஒரு பக்தி மரபு என்று பக்திபூர்வமாக எடுத்துக் கொள்வோர் ஒரு குழுவாகவும் நம் தத்துவங்களை அணுகி வரும் நிலையில், இந்துத் தத்துவ்ங்களின் சாரங்களாகிய வேதங்களையும், அதில் இருந்து கிளைத்த உபநிடதம் மற்றும் பிரிவுகளையும் மிக விரிவாக எளிய முறையில் அந்தத் தத்துவங்களின் பின்னால் உள்ள பிரபஞ்சம் சார்ந்த அறிவியல் பார்வையை இந்த நூல் அணுகுகிறது. இந்து தத்துவங்கள் என்பது அனைத்து வித வழிகளையும் உள்ளடக்கியது என்பதையும் அதன் பிரபஞ்சத் தேடல்கள் குறித்தும் மிக எளிமையாக இந்த நூல் அறிமுகப் படுத்துகிறது. இந்துத் தத்துவங்களில் ஜெயமோகன் அவர்களுக்கு உள்ள ஆழ்ந்த ஞானத்தை இந்த நூல் வெளிப்படுத்துகின்றது.
இலக்கிய விமர்சனம் என்பது தமிழில் அருகி வரும் ஒரு பிரிவாக இருக்கிறது. அந்தப் பணியையும் ஜெயமோகன் செவ்வனே செய்து வருகிறார். தமிழின் முன்னோடி இலக்கியவாதிகளை அறிமுகப் படுத்தியும், அவர்கள் படைப்புக்களை விமர்ச்சித்தும் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் 13 மூன்று நூல்களாக வெளி வந்துள்ளன. இன்னும் பல தொகுப்புகளாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. மலையாளத்தில் இரு நூல்கள் எழுதியுள்ளார். மலையாள நூல்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். இவரது பேட்டிகள், உரையாடகள் ஆகியவை தொகுக்கப் பட்டு மூன்று நூல்களாக வெளி வந்துள்ளன.
ஜெயமோகன் இந்தியாவின் மீதும் இந்தியப் பண்பாட்டின் மீதும் அளவற்ற நேசமும் நம்பிக்கையும் கொண்டுள்ளவர். இந்தியா முழுவதையும் பல முறைகள் பயணித்திருக்கிறார். கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்த ஜெயமோகன் காஷ்மீர், இமயமலைகள் வரை பல இடங்களுக்கு இரண்டு வருட காலமாக ஒரு எளிய துறவி போலச் சென்று இந்திய தரிசனத்தை அடைந்துள்ளார். தொடர்ந்து இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டே வருகிறார். அவரது இந்தியப் பயண அனுபவங்கள் பிற பயண நூல்களில் இருந்து பெரிதும் வேறு படுபவை. செல்லும் இடங்களின் பண்பாடு , சமூகம் அந்த மக்களின் தொன்மப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை கூர்மையாக அவதானித்துத் தன் பயண அனுபவங்களாகப் பதிந்து வருகிறார். ஜெயமோகனின் இந்தியப் பயணம் குறித்தான கட்டுரைத் தொடர்கள் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு அனைத்து இந்தியர்களாலும் அவசியம் படிக்கப் பட வேண்டியவை. அந்தக் கட்டுரைகளை இணையத்தில் படிக்க விரும்புபவர்கள் www.jeyamohan.in என்னும் ஜெயமோகன் வலைத் தளத்தில் படிக்கலாம். தற்பொழுதைய அமெரிக்க பயண அனுபவங்கள் குறித்தும் ஜெயமோகன் தன் வலைப் பதிவில் எழுதத் துவங்கியுள்ளார்.
ஜெயமோகன்.இன் வலைத்தளம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு இணைய தளம். தினமும் பத்தாயிரத்திற்கும் மேலான தமிழ் வாசகர்களை படிக்க ஈர்த்து வரும் ஒரு வலைத் தளம். அதில் ஜெயமோகனின் அபாராமான நகைச்சுவை உணர்வும், அங்கதமும் வெளிப்படும் பல கட்டுரைகளையும் படிக்கலாம். அவரது பன்முக ஆளுமையையும் விரிவான ஞானத்தையும் விளக்கும் ஒரு விரிவான இணைய தளம் அது. அவரது ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் விவாதங்களையும் கொண்டு மேலும் விரிந்து வரும் ஒரு தளம். அவரது புனைவுகள், பயணக் கட்டுரைகள், தத்துவ கட்டுரைகள், சினிமா கலை சம்பந்தமான கட்டுரைகள், விரிவான காந்தியத்தின் அலசல்கள் என்று பல துறைகளிலும் விரியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளின் ஒரு இணையக் களஞ்சியம் அவரது இணைய தளம் www.jeyamohan.in
பன்முகத் திறன் படைத்த ஜெயமோகனின் படைப்பாற்றல் தமிழ் சினிமா உலகிலும் பயன் படுத்தப் பட்டு வருகிறது. அவரது நண்பரும் மலையாள சினிமா உலகின் சிறந்த க்தாசிரியருமான சமீபத்தில் மறைந்த லோகிததாஸின் இயக்கத்தில் வெளி வந்த கஸ்தூரி மான் என்ற படத்திற்கு தமிழில் வசனம் எழுதியுள்ளார். ஜெயமோகன். அதைத் தொடர்ந்து இயக்குனர் பாலா, ஜெயமோகனின் ”ஏழாவது உலகம்” என்ற நாவலை அடிப்படையாக வைத்து இயக்கிய நான் கடவுள் என்ற படத்திற்கான வசனமும் எழுதி அது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளி வர இருக்கும் அங்காடித் தெரு என்னும் படத்திற்கும், பழசி ராஜா என்ற மலையாளத் திரைப்படத்தின் தமிழ் வடிவத்திற்கும் இன்னும் சில படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதி வருகிறார் ஜெயமோகன். மலையாளப் படங்களில் எம் டி வாசுதேவன் நாயர், தகழி, பத்மராஜன் போன்ற சிறந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் சினிமாவாக எடுக்கப் பட்டு வெகுஜன வரவேற்பைப் பெறுகின்றன. தமிழ் திரைப்பட உலகிலும் அது போன்ற ஒரு ஆரோக்யமான சூழல் ஜெயமோகன் போன்ற படைப்பாளிகளின் முயற்சியினால் தமிழிலும் தரமான படங்கள் உருவாகும் என்ற நம்பிக்கையை இவரது திரைப்படப் பங்களிப்பு ஏற்படுத்துகிறது.
பல திசைகளிலும், பல துறைகளிலும் நிறைந்த அறிவும், அனுபவமும் பெற்ற ஜெயமோகன் அவர்களை இந்தச் சிறிய அறிமுகம் முழுமையாக விளக்கி விட முடியாது. அவரைப் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள அவரது எழுத்துக்களைப் படிப்பது ஒன்றே வழி. கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் ஒரு பெரிய பனி மலையைப் போன்ற ஒரு பிருமாண்டமான ஆளுமையின் ஒரு சிறிய முனையை மட்டுமே இந்தக் கூட்டத்தில் என்னால் இயன்ற அளவில் உங்களுக்கு அறியத் தர முடிந்தது. அவரது பன்முக ஆளுமையினையும், அவரது படைப்புக்களையும் நேரடியாகப் படிப்பதன் மூலமே அதன் பயனை நீங்கள் அடைய முடியும், அந்த ஆர்வத்தை உங்களிடம் ஏற்படுத்தவும், அதை நோக்கிய உங்களது முயற்சிக்கும் எனது சிறிய அறிமுக உரை உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பாலாஜியின் அறிமுக உரை
தமிழ் இலக்கிய உலகிற்கும், அறிவுலகிற்கும் தனது பரந்த அறிவினாலும், செழுமையான மொழி வளத்தாலும், எல்லையில்லாத கற்பனை வளத்தாலும், தமிழ் இலக்கியத்தைச் வளப் படுத்தியும், அதன் வாசகர்களின் சிந்தனைத் தளத்தை உயர்த்தியும் வரும் ஜெயமொகன் அவர்களின் பங்களிப்பை இந்த வளைகுடாப் பகுதி தமிழர்களின் சார்பாக பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டதற்கான நன்றியையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயமோகனின் இரு நாவல்கள் குறித்த அறிமுக உரைகளைத் தொடர்ந்து ஜெயமோகன் அவர்களை இந்த கூட்டத்தில் உரையாற்றுமாறு அழைக்கிறேன்.
முதல் பகுதி இங்கே. இந்த பகுதியில் அடுத்த 33 புத்தகங்கள்.
35. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்: படிக்க வேண்டும்.
36. ராமானுஜர்(வாழ்க்கை வரலாறு) – ராமகிருஷ்ண மடம் வெளியீடு: ராமானுஜரின் வாழ்க்கையை பற்றி நான் பெரிதும் குரு பரம்பரை ஐதீகங்கள் மூலமே படித்திருக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் நாடகமும் அதையே பெரிதும் ஒட்டி வருகிறது. இது எப்படி என்று தெரியவில்லை. மயிலாப்பூரில் திலிப் குமாரின் புத்தகக் கடைக்கு எதிரில்தான் மடம் இருக்கிறது. ஊருக்கு போனால் இங்கேயும் எட்டி பார்த்துவிட வேண்டியதுதான்.
37. பாரதியார் வரலாறு – சீனி விசுவநாதன்: படித்ததில்லை.
38. இந்திய சரித்திரக் களஞ்சியம் – ப. சிவனடி கேள்விப்பட்டதே இல்லை.
39. ஆதவன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]: ஆதவனின் என் பெயர் ராமசேஷன் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்த ஒரு புத்தகம். அவரது சிறுகதைகளில் எனக்கு ஞாபகம் இருப்பது உயரமாக சிவப்பாக மீசை வச்சுக்காமல் ஒன்றுதான். (பாஸ்டன் பாலா அதற்கு இணையத்தில் சுட்டி கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். அவர் குலம் வாழ்க!)
40. சுப்பிரமணிய ராஜு கதைகள் [முழுத்தொகுப்பு]: ராஜுவை நான் படித்ததில்லை.
41. பட்டாம்பூச்சி – ஹென்றி ஷாரியர் : மொழிபெயர்ப்பு – ரா.கி. ரங்கராஜன்: ஒரிஜினலை படித்திருக்கிறேன். இது என்ன பெரிய விஷயம் என்று எனக்கு புரியவே இல்லை.
42. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி: புரட்டி பார்த்திருக்கிறேன். படிக்க வேண்டும்.
43. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ. பத்மநாபன்: படிக்க வேண்டும்.
44. காந்தி – லூயி ஃபிஷர் : தமிழில் தி.ஜ. ரங்கநாதன்: ஒரிஜினலை படித்திருக்கிறேன். நல்ல புத்தகம்.
45. பாரதியார் கட்டுரைகள்: பாரதியாரின் கட்டுரைகள் அவரது கவிதைகள் அளவுக்கு பிரபலம் அடையவில்லை. ஆனால் நன்றாக இருக்கும். ஞான ரதம், சின்ன சங்கரன் கதை போன்றவையும் நன்றாக இருக்கும். அவற்றையும் படியுங்கள்.
46. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி: படித்ததில்லை.
47. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே: படித்ததில்லை.
48. குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி: என்னவோ இந்த புத்தகம் என்னை பெரிதாக இம்ப்ரஸ் செய்யவில்லை. சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல் அவ்வளவு இலக்கியத் தரம் உள்ளது என்று சொல்ல மாட்டேன், ஆனால் முக்கியமான ஆவணம். கீழ் வெண்மணியை பற்றி ஒரு புத்தகம்தான் படிக்கப் போகிறீர்கள் என்றால் அதை படிக்கலாம்.
49. பயணியின் சங்கீதம் – சுகுமாரன்: படித்ததில்லை.
50. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்: யுவனின் ஒளி விலகல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை நான் படித்ததில்லை.
51. God of small things – அருந்ததிராய்: படித்ததில்லை.
52. Midnight’s Children – சல்மான் ருஷ்டி: படித்ததில்லை.
53. Moor’s lost sigh – சல்மான் ருஷ்டி: படித்ததில்லை.
54. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி: சில கதைகள் பிடித்திருந்தன.
55. Train to Pakistan – குஷ்வந்த் சிங்: மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. படிக்கலாம்.
56. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா: படித்ததில்லை.
57. All the president’s men – Bob Woodward: சுமாரான புத்தகம். பா.ரா.வின் பத்திரிகை பின்புலம் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுக்க வைத்திருக்கலாம்.
58. மதிலுகள் – பஷீர் [நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு மட்டும்.]: படிக்க வேண்டும்.
60. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ: படித்ததில்லை.
61. Courts and Judgements – அருண்ஷோரி: படிக்க வேண்டும்.
62. மோகமுள் – தி. ஜானகிராமன்: புத்தகத்தை படிக்கும்போது கும்பகோணத்து புழுதி மூக்கில் ஏறும். மிக அருமையான புத்தகம்.
63. ஜனனி – லா.ச. ராமாமிருதம்: படிக்க வேண்டும்.
64. பஞ்ச பூதக் கதைகள் – லா.ச. ராமாமிருதம்: எனக்கு இதில் பூரணி என்ற ஒரு கதைதான் தேறும். பூரணி பூமியின் உருவமாக சித்தரிக்கப்படுகிறாள்.
65. கி.ராஜநாராயணன் கதைகள் [முழுத்தொகுப்பு]: நான் கதவு, கொத்தை பருத்தி போன்ற சில தொகுப்புகளை படித்திருக்கிறேன். முழுதும் படித்ததில்லை. கி.ரா.வின் பல கதைகள் சிறப்பானவை.
66. அசோகமித்திரன் கட்டுரைகள் [இரண்டு பாகங்கள்]: அசோகமித்திரன் ஜீனியஸ் என்பது என் எண்ணம். அவரது கட்டுரைகளை அங்கும் இங்குமாகத்தான் படித்திருக்கிறேன். தொகுப்பாக கிடைத்தால் வாங்கிவிட வேண்டியதுதான்.
67. இரா. முருகன் கதைகள் [முழுத்தொகுப்பு]: இரா. முருகனை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் எதுவும் படிக்கவில்லை.
முதல் பதிப்பின் முன்னுரை – சுஜாதா (22-12-95)
தமிழில் சரித்திர நாவல்களுக்கு உண்டான சம்பிரதாயத்தை வகுத்தவர்கள் கல்கியும், சாண்டில்யனும். தற்போது எழுதப்படும் சரித்திர நாவல்கள் அனைத்தும் இவ்விருவர் பாணியில்தான் எழுதப்படுகின்றன. லேசான சரித்திர ஆதாரங்கள்; நிறைய சரடு; நீண்ட வாக்கியங்கள் – இவைகளின் உள்ளே ஒரு நவீனக் கதைதான் மறைந்திருக்கும். குஞ்சரமல்லர்கள், கத்திச் சண்டைகள், சல்லாத் துணித் திரைகளுக்குப் பின் கரிய கண்கள் கொண்ட பெண்கள் – இவைகள் எல்லாம் சரித்திர நாவலுக்கு உண்டான ‘பார்முலா’ க்களாக இன்றும் இருக்கின்றன. இவைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆசையுடன் ‘கருப்பு, வெளுப்பு, சிவப்பு’ என்னும் நாவலை குமுதத்தில் துவங்கினேன். சாதிக்கலவரம் எழுந்து அதை நிறுத்த வேண்டியிருந்தது. ஒரு விதத்தில் சமரசம் பண்ணிக்கொண்டு, அதை ‘ரத்தம் ஒரே நிறம்’ என்று சில தினங்கள் விட்டு துவங்கி முடிக்க முடிந்தது.’காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டைன், சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர்கள் விஸ்தாரமாக எழுதியிருக்கும் சரித்திரக் குறிப்புகளை ஆதரித்தவை. எந்தக் காலக் கட்டத்திலும் முதிர்ந்த அனுபவமுள்ள ஒருவரும், விளையாட்டுப் போக்கான ஒரு இளைஞனும் இருப்பார்கள். எந்தக் காலத்திலும் பொறாமை, சதி, அரசியல் ஆதாயங்களுக்காகத் திருமணங்கள் எல்லாம் இருக்கும். இந்த நாவலில் கணேசபட்டர் என்னும் பிரம்மதேயக்காரரும், வசந்தகுமாரன் என்னும் இளைஞனும், அந்தப் பெயரில் இல்லாவிட்டாலும் வேறு பெயரில் வாழ்ந்திருக்கலாம். அது போலத் தான் அபிமதி. அரசவையில் எத்தனையோ ராணிகளில் ஒருத்தியின் மகளாக இருந்திருக்கலாம்.’காந்தளூர்ச்சாலை’ என்னும் இடத்தில சோழர்களுக்கும் சேர — பாண்டிய மன்னர்களுக்கும் நடந்த நில — கடல் போரின் ஆதாரக் காரணம் தூதனை அவமதித்தது என்பதில் கருத்து வேறுபாடில்லை. அதனால் வசந்தகுமாரன் சோழ நாட்டுத் தூதுவனாகச் சென்றிருக்க முடியும்.இந்தக் கதையின் தொடர்ச்சியாக, காந்தளூர்ச் சாலையில் நடந்த போரின் விவரங்களைக் கொஞ்சம் படித்து ஆராய்ந்துவிட்டு எழுத உத்தேசித்திருக்கிறேன்.
இக்கதைக்குப் பல புத்தகங்கள் எனக்குப் பயன்பட்டன. புரவலர் பொன். முகிலன் அவர்கள் எனக்குச் சில சோழர்காலத்துச் சொற்களைக் குறிப்பிட்டு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு நன்றி. அந்தக் காலத்து நிகண்டுகளும் பயன்பட்டன.
நன்றி – மகேஷ் : ரசிகன் (http://gcefriends.blogspot.com/2009/10/blog-post_29.html)
ராஜராஜ சோழனின் காந்தளூர்க் கடிகைப் போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ராஜராஜன் மெய்கீர்த்தியிலும் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போர். சேர மன்னனுடன் பேச அனுப்பப்பட்ட தூதுவன் ஒருவன் அவமதிக்கப்பட்டதால் வெகுண்ட ராஜராஜன் சேர நாட்டின் மீது போர் தொடுத்தான் என்பது வரலாறு. இதைப் பின்புலமாகக் கொண்டு அமரர் சுஜாதா எழுதிய நாவல் தான் “காந்தளூர் வசந்தகுமாரன் கதை”
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள விழிஞம் தான் அப்போதைய காந்தளூர். மிக முக்கியத் துறைமுகம் காந்தளூர். சேர நாட்டின் மீதான நிரந்தர வெற்றிக்கு இந்தத் துறைமுகத்தைப் பிடிப்பது முக்கியமாக இருந்தது. தவிர ராஜராஜனால் நாடுகடத்தப்பட்ட ரவிதாசன் முதலியோரும் இங்கிருந்து தான் ஒற்றர்களைத் தயார்படுத்தி அனுப்பியாதாகவும் கூறுவர்.
இனி கதை…
கதைப்படி, வசந்தகுமாரன் சேர நாட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவன். அவனுடைய குரு,நண்பர் கணேசபட்டர். இந்த பெயர்களை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? சுஜாதாவின் பிரியத்துக்குரிய நாயகர்கள் கணேஷ், வசந்த் தான் சரித்திரத்தில் வருகிறார்கள். கணேச பட்டரிடம் அதே தீட்சண்யம். வசந்தகுமாரனிடம் அதே இளமைக் குறும்பு. ரசிக்க வைக்கிறார்கள்.
குதிரை வியாபாரத்துக்காக சோணாடு வந்த யவனன் ஒருவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறான் வசந்தகுமாரன். இதனிடையே அரசகுமாரி அபிமதியைக் காதலிக்கிறான். பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காந்தளூரைச் சேர்ந்த சேர நாட்டு ஒற்றன் எனப் பழி சுமத்தப்படுகின்றான். இந்த சதியில் சிக்க வைப்பது ராஜராஜனைக் கொல்ல வந்த எதிரி நாடு ஒற்றர்கள். மரண தண்டனை விதிக்கப்படும் வசந்தன் எப்படித் தப்பிக்கிறான், எதனால் சேர நாடு அனுப்பப்படுகிறான், ராஜராஜன் உயிர் எப்படிக் காப்பாற்றப்பட்டது, வசந்தன் காதல் என்ன ஆனது என்பதை சுஜாதா தனது பாணியில் விவரித்திருக்கிறார்.
இந்தக் கதையில் நடைபெறும் அனைத்து முக்கிய சம்பவங்களுக்கும் சரித்திரத்தில் நடந்ததாகச் சொல்கிறார் சுஜாதா. பாத்திரங்களின் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் உண்மை என்கிறார். உதகைக் கோட்டையைப் பிடிக்க முனைவது, ராராஜேஸ்வரத்துக்கான ஆயத்தப் பணிகள், மலை நாட்டின் மீதான போர் என ஏராளமான விஷயங்கள் வருகின்றன. இந்தப் போர்களுக்கெல்லாம் கலிங்கப்பரணி,மூவர் உலா போன்ற நூல்களை ஆதாரமாகக் காட்டுவார்கள்.
பாத்திரங்களை கல்கி அளவுக்கு கட்அவுட் பாத்திரங்களாகப் படைக்காமல் சாதாரண மக்களாக உலவ விட்டிருப்பார் சுஜாதா. இதை அவரே கூறியிருப்பார். உதாரணத்துக்கு ராஜராஜன் மீதும் மக்கள் கோபப்படுகிறார்கள்கள். நாயகன் வசந்தனும் ஏராளமான வசவு வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றான்(உம் : விலைமகள் மைந்தன்). கணேச பட்டரும் ஆபத்துக் காலத்தில் மயங்கி நிற்கிறார்.
ஆனால் அரசகுமாரி ஒருத்தி கடத்தப்பட்டால் அந்நாளில் இப்படி வாளாவிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அது தவிர, அபிமதியை சளுக்க மன்னன் விமலாதித்தனுக்குக் கொடுக்க முனைந்தது, ராஜராஜனைக் கொல்ல நடந்த சதியில் விமலாதித்தன் இருந்தான் என்பதெற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிறைய இடங்களில் ராஜராஜனை “இராஜராஜீச்சுரம் கொண்ட” என அடை மொழி கொடுத்து அழைக்கிறார்கள் கோயில் கட்டுவதற்கு முன்பே. இந்த மாதிரி சில விஷயங்கள் நெருடுகின்றன. ஆனால் உண்மையான வராலாறு தெரிந்தால் இதுவும் ஒரு பிரச்சனையாக இருக்காது என நம்புகிறேன்.
பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதப்பட்ட ஒரு காட்சி, நாடகத் தனமான வசனங்கள் என்றே சரித்திர நாவல்களைப் படித்தவர்களுக்கு சுஜாதாவின் கூர்மையான வசனங்களும், எளிய கதையோட்டமும் வித்தியாசமான விருந்தாக இருக்கும்.
ஆனால் சுஜாதாவின் மற்ற நாவல்களில் உள்ள அந்த “அது” இந்த நாவலில் இல்லை
குறிப்பு : காந்தி செத்துட்டாரா ரேஞ்சுக்கு இந்த நாவலைப் பற்றி இவ்வளவு தாமதமாக எழுதியிருக்கிறேன். ரொம்ப நாள் தேடலுக்குப் பின் போன வாரம் கிடைத்தது இந்த நாவல். அதான்!
நன்றி – பிரசன்னா இராசன் (http://oliyudayon.blogspot.com/2009/08/blog-post.html)
STD – ன்னா வரலாறு தானே என்று திரிந்து கிடந்த எனக்கு சரித்திரத்தில் கொஞ்சமாவது பிடிப்பு ஏற்படுத்தியவை கல்கியின் நாவல்களே. ’பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’, ’பொன்னியின் செல்வன்’ மூன்றுமே தமிழின் ஆகச் சிறந்த படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும், கல்கியின் பாத்திர படைப்புகள் பெரும்பாலும் கொட்டாவி விடவே வைத்தன. கல்கியின் பாத்திரங்கள் ஒன்று ரெம்ப நல்லவர்களாக இருப்பார்கள், அல்லது ’தவசி’ பாசையில் ரெம்ப ரெம்ப கெட்டவர்களாக இருப்பார்கள். ‘பார்த்திபன் கனவு’ என்னைப் பொறுத்த மட்டில் அவரின் மிகச் சிறந்த முழுமையான படைப்பு. அதற்கு பிறகு ‘சிவகாமியின் சபதம்’, அதற்கு அடுத்த வரிசையில் தான் எல்லோராலும் கொண்டாடப் படும் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் பாத்திரங்களின் அளவுக்கு அதிகமான ரொமாண்டிஸிஸம், என்னை பல சமயங்களில் தூக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இது அனைத்தும் எனது கருத்தே (பின்னூட்டத்தில சண்டை போடாதீங்க சாமிகளா!!)
சரி சரி மேட்டருக்கு வரேன் மாமே. இப்ப தான் சுஜாதாவின் இரண்டாவது சரித்திர நாவலான ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’யைப் படித்து முடித்தேன். (அவரின் முதலாவது சரித்திர நாவல் ‘இரத்தம் ஒரே நிறம் – முதலாம் சிப்பாய் கலகத்தின் அடிப்படையில் எழுதியிருந்தார்). கதை வழக்கம் போல் சோழப் பேரரசின் காலத்தில் நடக்கும் கதை. ஆனால் கதை நாயகன் நம்ம வசந்த குமாரன். அவனுக்கு குரு போல் இருந்து செயல் படுபவர் கணேச பட்டர். இந்த பேரை எல்லாம் எங்கே கேட்டது போல் இருக்குதா. ஆமாம் பாஸீ. கணேஷ், வசந்த் ஒரு சரித்திர நாவலில். ஷப்பா!! இன்னாமா யோசிச்சு இருக்காருப்பா சுஜாதா. சத்தியமாக மேலே சொன்ன வரிகளை எழுதும் முன் இந்த பாத்திரப் படைப்பை நான் உணரவில்லை.
நம்ம வசந்தகுமாரன் வழக்கம் போல் பெண் பித்தன். சூதாடுபவன். நம்மாளு சிக்கல்ல மாட்டும் போதெல்லாம் நம்ம கணேச பட்டர் தான் காப்பத்துறாரு. கணேச பட்டர் பிரம்மதேய பணியில் இருப்பவர் (லாயர் மாமே). யவன தேசத்தில் (க்ரீஸ்) இருந்து வரும் ஒரு குதிரை வணிகனிடம், குதிரைகளை வாங்குவதற்காக பேரம் பேசும் வசந்தகுமாரன், அவனை ஒரு பதியிலார் விடுதிக்கு (ஹிஹி… அர்த்தம் புரிஞ்சதா??!!) அழைத்து செல்ல அங்கு மர்மமான முறையில் அவன் இறக்கிறான். அதற்கு பிண்ணனியில் உள்ள சதி என்னவென்று கணேச பட்டர் உதவியுடன் ஆராய அது இராஜ இராஜ சக்கரவர்த்தியை சேர, பாண்டியர்கள் கொலை செய்யும் சதியில் வந்து முடிகிறது. கதையின் முடிவை போட்டு உடைக்க விரும்பவில்லை. அதனால் படித்து தெரிந்து கொள்ளுங்களேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. இந்த நாவலுக்கு இரண்டாம் பாகம் எழுத நினைத்திருக்கிறார். அது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஏனெனில் இறுதி அத்தியாயம் முழுமையாக முற்று பெறவில்லை.
சரித்திரத்தின்படி பார்த்தால் காந்தளூரில் நிகழ்த்திய யுத்தம் தான் முதலாம் இராஜ இராஜ சோழன் நிகழ்த்திய மிகப் பெரிய துவந்த யுத்தம். கி.பி 994இல் சேரனும், பாண்டியனும் இணைந்து சோழர்களுக்கு எதிராக நடத்திய இந்த யுத்தத்தின் பின்னர் இராஜ இராஜன் மும்முடிச் சோழன் என்னும் புகழ் பெற்றான். காந்தளூர் இன்னும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. அதன் பின்னர் உதகை கோட்டை யுத்தம், அதன் தொடர்ச்சியாக இலங்கை யுத்தம். இப்படி தான் செல்கிறது முதலாம் இராஜ இராஜனின் வரலாறு. வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் புனைவு தானே. இந்த வரலாற்றில் கணேஷ், வசந்த் கதாப் பாத்திரங்களை புகுத்தியது தான் சுஜாதாவின் சாமர்த்தியம்.
நாவலின் ஆரம்பத்திலே சுஜாதா சொல்லி இருக்கிறார். ”கட் அவுட் கதாப்பாத்திரங்களாக அமைக்காமல் அவற்றை சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறேன்” என்றிருக்கிறார். உண்மை தான். கல்கியின் கதாப்பாத்திரங்களின் ரொமாண்டிஸிஸம் இங்கு சுத்தமாக இல்லை. கதையின் நாயகன் ஒழுக்க சீலனாக இல்லாமல், சூப்பர் ஹீரோ போல் காட்டாமல் மிகச் சாதாரணமாகக் காட்டி இருந்தார்.சரித்திரப் படி, மிகத் துல்லிய தகவல்களை தர மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். அங்கங்கே சுஜாதா டச். முதல் பாகத்திலேயே மசாலா மேட்டரை ஆரம்பித்திருந்தார் சுஜாதா ( பதியிலார் விடுதி!! இன்னும் புரியலையா??).இருப்பினும் கதையின் வேகத்தில் ஏனோ கொஞ்சம் மந்தம். வழக்கமான கணேஷ், வசந்த் நாவலின் சூடு இல்லை.
‘யவனிகா’ நாவலின் கடைசியில் வசந்த் சொல்வதாக ஒரு வரி வரும். “இந்த கதையைப் படமா எடுத்தா புரொடியூசர் வெடிகுண்டுக்கு செலவு பண்ணியே போண்டி ஆகிடுவார்”. சுஜாதா என்றும் தன் நாவல்களை திரைப்படமாக எடுக்கப் பட விரும்பியதில்லை. அதை தனது நாடகம் ஒன்றில் அவரே தெரிவித்து இருந்தார். ஆனால் என்னமோ இந்த நாவலைப் படிக்கும் போது மனதில் ஒரு பெரிய பிரம்மாண்டமான திரைப்படம் ஓடியது. கல்கியின் சரித்திர நாவல்களுக்கு, முக்கியமாக ‘பொன்னியின் செல்வனுக்கு’ ஒரு சமர்ப்பணம் போல் தான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. இந்த நாவலின் இன்னொரு பாகம் ஏன் வெளிவரவில்லை என்ற ஏக்கம் தான், ஏனோ ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.
சுஜாதா பதில்கள் – பாகம் 1 (உயிர்மை பதிப்பகம்)
செ. செல்லமுத்து, நத்தக்காடையூர். காந்தளூர் வசந்தகுமாரன் கதையின் இரண்டாம் பாகம் என்னவாயிற்று ?
எனக்கு வேளையும், ‘மூடு’ ம் வரக் காத்திருக்கிறது.
சிவக்குமார், அரக்கோணம். முன்பு போல் சரித்திர நாவல்கள் இப்போது எழுதப்படுவதில்லையே ஏன்? எழுத்தாளர்கள் இல்லையா அல்லது ரசிகர்கள் குறைந்து விட்டார்களா ?
சரித்திரச் சம்பவங்கள் குறைந்து விட்டன. இனிச் சரித்திர நாவல்கள் அடுத்த நூற்றாண்டில்தான் சாத்தியம்.