மார்ச் 2010
மாதாந்திர தொகுப்பு
மார்ச் 31, 2010
ஹுசேனைப் பற்றி எழுதியது போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கே கொஞ்சம் அலுத்துவிட்டது. ஆனால் இரண்டு அருமையான பதிவுகளைப் பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது.
ஒன்று டாக்டர் ருத்ரன் எழுதியது. இதன் பின்புலம் ஹுசேனை வைத்து ஷோ காட்டி அவருக்கு எதிராக ஒரு அணியில் ஓட்டுகளை திரட்டுவதே என்று நிறுவுகிறார். அப்புறம் நிர்வாண சரஸ்வதி விஷயத்தில் literal ஆகவே படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறார், புட்டு புட்டு வைக்கிறார். கட்டாயமாக படித்துப் பாருங்கள்.
இன்னொன்று ராஜ நடராஜன் எழுதியது. ஹுசேன் இது பற்றி சொன்னவற்றை பதித்திருக்கிறார். அருமையான பதிவு, படித்துப் பாருங்கள்.
இன்னொரு விஷயம் – நான் கூட கொஞ்சம் பயந்தேன், டாக்டர் ருத்ரன் வரைந்த நிர்வாண சரஸ்வதி படத்தை எல்லாருக்கும் மீண்டும் நினைவுபடுத்தி அனாவசியமாக அவரை வம்புக்கு இழுக்கிறோமே என்று. ஒருவர் – ஒரே ஒருவர் கூட அதை ஆட்சேபிக்கவில்லை. என்ன வரையப்பட்டிருக்கிறது என்பது என்பதை விட யார் வரைந்தது என்பதுதான் முக்கியம்!
பின்குறிப்பு: எதிர்வினைக்கு எதிர்ப்பதம் என்னங்க? யாருக்காவது தெரியுமா? நேர்வினை என்றால் சரியாக வரவில்லை, எதிர் எதிர்வினை என்று எழுதினால் எனக்கு எதிரிகள் உருவாகிவிடப் போகிறார்கள்!
தொகுக்ககப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
டாக்டர் ருத்ரன் படம் வரைந்து பாகங்களை குறிக்கிறார்
ராஜ நடராஜன் ஹுசேன் என்ன சொல்கிறார் என்பதை பதித்திருக்கிறார்
ஹுசேன் – சில எதிர்வினைகள்
எம்.எஃப். ஹுசேனின் “சர்ச்சைக்குரிய” ஓவியங்கள் பற்றி நான், டாக்டர் ருத்ரன், ஜெயமோகன்
ஹுசேனின் கட்டார் முடிவு பற்றி நான், டாக்டர் ருத்ரன்
37.523851
-122.047324
மார்ச் 30, 2010
Posted by srinivas uppili under
Books [2] Comments
இயக்குனர் பாலசந்தரின் முன்னுரை தொடர்கிறது………
இது போல் சாவி என்கிற சிறுவன்,
சாவி என்கிற நேர்மையாளர்,
சாவி என்கிற adventurist ,
சாவி என்கிற வாலிபர்,
சாவி என்கிற நுணுக்கம் தெரிந்த வணிகர்,
சாவி என்கிற நகைச்சுவையாளர்ஒவ்வொரு பழைய கணக்கும் ஒரு சினிமா காட்சி போல் ஒரு ஆரம்பம் — ஒரு இனிய மோதல் — ஒரு உச்ச கட்டம் — ஒரு தீர்மானம் — ஒரு முத்தாய்ப்பு என்று முடிகிறது. இதைப் பார்க்கும்போது அவர் ஏன் சினிமாவில் கை வைக்கவில்லை என்றே ஆதங்கம் தோன்றுகிறது.
சென்னைக்கு வரும் மாமாவை சினிமா தியேட்டருக்குக் கூட்டிபோய், முதல் வரிசையில் உட்கார வைக்கிறார் இவர். ஊருக்குப் போன மாமா மருமானின் செல்வாக்கை கிராமம் பூராவும் சொல்லி, “என்னை முதல் வரிசையில் உட்கார வச்சான்னாப் பாரேன்” என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
ஒவ்வொரு சம்பவமும் ஒரு பஞ்சதந்திரக் கதை மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறது.
இப்படி டயமண்டு கல்கண்டு போல் சின்னச்சின்ன வடிவங்கள் ஒட்டு மொத்தமாய் ஒரு இனிப்புத் தோரணமாகத் தொடர்கிறது பழைய கணக்கு.
இவையனைத்தும் ‘உழைப்பே உயர்வைக் கொடுக்கும்’ என்கிற சிந்தாந்தத்தைத்தான் வலியுறுத்துகிறது. Starting from the scrap என்று சொல்வார்களே, அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் பழைய கணக்குகள் பயனுள்ள ‘பார்முலா’ க்கள்.
கே. பாலசந்தர்
34 , வாரன் சாலை,
சென்னை – 4
தொடர்புடைய பதிவுகள்:
மார்ச் 30, 2010
Posted by srinivas uppili under
Books [2] Comments
இயக்குனர் பாலசந்தரின் முன்னுரை தொடர்கிறது………

சாவியின் கிராமத்திற்கு ஒரு குறத்தி வருகிறாள். இளம் வயது. வசீகரமான தோற்றம். அவளிடம் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு ஒரு ஆசை எழுகிறது. அரையணா கொடுத்து பச்சை குத்திக் கொள்கிறார் சிறுவனாய் இருந்த சாவி. இந்த நிகழ்ச்சியை சாவி விவரிக்கும் போது அந்தக் குறத்தியைத் தேடிப்பிடித்து நாமும் பச்சை குத்திக் கொள்ளலாமா என்கிற ஏக்கம் தான் மேலிடுகிறது. இந்த நிகழ்ச்சியின் முடிவில், ‘அவள் போன பிறகு மாம்பாக்கமே ஒளி இழந்த மாதிரி எனக்குப் பட்டது’ என்று அவர் முடித்திருந்த இடத்தில் எனக்கு ஒரு சிறுகதை தெரிகிறது.
‘இரண்டும் கெட்டான் வயதில் செய்து விட்ட அசட்டுத்தனம் ஆயுள் முழுவதும் நிரந்தரமாகி விட்டது’ என்று அவர் குறிப்பிடும்பொழுது ஒரு தத்துவம் நிலைபெறுகிறது.
தன்னுடைய இளம் வயதில் ஊரைவிட்டே ஓடிவிட்ட பையனுக்காக வேண்டிக் கொள்ளும் தந்தை, இவர் திரும்பி வந்ததும் பல வைதீகர்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டுப் பரிகாரம் செய்கிறார். சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு பெரியவர், ‘அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருடா. எங்களுக்கு இது போல் சாப்பாடு கிடைத்துக் கொண்டே இருக்கும் ‘ என்று கூறுகிற கட்டுரையில் நகைச்சுவை மட்டுமல்ல, அவர்களது பொருளாதாரமும் புரிகிறது.
முன்னுரை தொடரும்……
தொடர்புடைய பதிவுகள்:
மார்ச் 29, 2010
Posted by srinivas uppili under
Books Leave a Comment

இயக்குனர் பாலசந்தரின் முன்னுரை
வாராவாரம் தொடர்ந்து சாவி பத்திரிகையில் இந்தப் பழைய கணக்கின் பல பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுது தனித் தனிக் கட்டுரையாக வாசித்தபோது சுவையாக இருந்த அந்தக் கட்டுரைகள் இப்பொழுது ஒரு புத்தகமாகப் படிக்கிற போது இன்னும் அதிகமான சுவையோடு ஒரு சுயசரிதை என்கிற பரிமாணத்தில் நம் மனக் கண் முன் சம்பவங்களாக விரிகின்றன.
புள்ளி விவரங்களையும், தேதிக் குறிப்புகளையும் அடுக்கிக் கொண்டே போய் சம்பவங்களை அகராதி மாதிரி வரிசைப் படுத்திக் கொண்டே போனால் தான் சுயசரிதையா ?
இந்தப் பழைய கணக்கும் ஒரு வகை சுயசரிதைதான் !
முன்னுரை தொடரும்……
தொடர்புடைய பதிவுகள்:
மார்ச் 27, 2010
Posted by srinivas uppili under
Writings Leave a Comment

மனிதன் எத்தனை வருஷம் உயிர் வாழ முடியும் என்கிற கேள்வி இப்போது என்னை வசீகரிக்கிறது. கற்காலத்தில் மனிதனின் சராசரி வாழ்நாள் பதினெட்டு வருஷமாக இருந்தது. சோழர் காலத்தில் அது முப்பத்துமூன்று ஆண்டுகளாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முன்னேற்ற நாடுகளில் நாற்பத்தொன்பதாக உயர்ந்தது. இன்றைய தினங்களில் அது எழுபத்து ஒன்பது வயது வரை வந்திருக்கிறது. இதற்கு காரணம் டெக்னாலஜி, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம்தான். ‘இவ்வாறு அதிகரித்துக்கொண்டே போனால் எதிர்காலத்தில் மனிதனால் அதிகபட்சமாக எத்தனை வருஷம் வாழ முடியும் ? அவனால் சிரஞ்சீவித்தனம் பெற முடியுமா?’ என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்திருக்கிறது. என்னதான் சராசரி வாழ்நாள் அதிகரித்துக்கொண்டே வந்தாலும் மனிதனின் அதிகப்படியான வயசு இதுவரை 110 -க்கு மேல் போனதில்லை. 110 –தான் ஒரு உச்ச வரம்பாக உள்ளது. கிராமப்புறங்களில் சுயமாக அறிவித்தபடி சில தாத்தாக்கள் 160 — வயது வரைகூட வயசு சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கணக்கு தப்பு என்பதுதான் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈகவெடார் நாட்டில் ஒரு கிராமத்தில் இவ்வாறு அதிக நாள் வாழ்ந்தவரை ஒரு வருஷ இடைவெளியில் இருமுறை சந்தித்தார்களாம். இரண்டாவது தடவை அவர் வயதைக் கேட்டபோது ஏழு வயசு கூடி விட்டதாகச் சொன்னாராம். 110 -க்கு மேல் வயசு சொல்வதெல்லாம் நம்பிக்கையாக இல்லை.
ஜெராண்டாலஜிஸ்டுகள் (கிழவியலாளர்கள்) மனித வாழ்வை ஒரு ஓட்டப்பந்தயத்துக்கு ஒப்பிடுகிறார்கள். நடுவே சில தடைகள் உள்ளன. எல்லோரும் ஒரே இடத்தில்தான் ஆரம்பிக்கிறோம். சிலர் பாதியில் விழுந்து விடுகிறோம். பலர் முக்கால்வாசி தாண்டுகிறோம். அதன்பின் அந்தக் கடினமான ஓட்டப்பந்தயதைக் கைவிடுகிறோம். தடைகள் என்ன ? இதயநோய், கேன்சர், டயபடீஸ், பிக்கல் பிடுங்கல், துரோகம், சோகம், மன அழுத்தம், வேலையில் டென்ஷன் இப்படி எத்தனையோ தடைகள் உள்ளன. இவற்றை மீறிவிட்டால் எல்லோராலும் 110 –வரை வாழ முடியும் என்கிறார்கள். மனிதனுக்கு மட்டும் இல்லை. எல்லா மிருகங்களுக்கும் வயசாகிறது. இயற்கையைப் பொறுத்தவரையில், ஓர் உயிரினம் இன விருத்திக்குப்பின் பயனற்றதாகி விடுகிறது.
மற்றொரு கோஷ்டி செயற்கையாக ஒவ்வொரு அவயத்தையும் ஸ்பேர் பார்ட்போல மாற்றி மாற்றி வாழ்நாளை நீடிக்க முடியும் என்கிறது.
சரி, நீடிப்பதில் மட்டும் என்ன பயன் ? வாழ வேண்டும். போர் அடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளில் முப்பது வயசுக்குள் ஒரு வாழ்நாளுக்கு உண்டான அனுபவத்தைத் தீர்த்து விடுகிறார்கள். கல்யாணம், குழந்தை, டிவோர்ஸ், விபத்து, நிறைய பணம் எல்லாமே முடிந்து விடுகிறது. அதன்பின் தொண்ணூறு வருஷம் தொடர்வதில் அர்த்தமில்லாமல் பண்ணிவிடுகிறார்கள்.
ஹெமிங்வே போன்றவர்கள் ‘ஆச்சு… போதும்’ என்று சொல்லி தற்கொலை செய்து கொள்கிறார்கள். சங்க காலத்து வடக்கிருத்தல் போல.
நன்றி விகடன் — கற்றதும் பெற்றதும் — பாகம் II
மார்ச் 26, 2010

இந்த பதிவை எழுத மூன்று காரணங்கள். ஒன்று கிரி என்பவர் எழுதிய ஒரு பதிவு, இரண்டு திருச்சிக்காரன் என் முந்தைய பதிவில் எழுதிய சில பின்னூட்டங்கள், மூன்று டோண்டுவின் ஒரு பதிவு.
ஹுசேன் பற்றி என் நிலை – ஹுசேனுக்கு ஹிந்து கடவுள்களை அவர் இஷ்டப்படி வரைய எல்லா உரிமையும் உண்டு - தெரிந்ததே. டாக்டர் ருத்ரன், ஜெயமோகன் போன்றவர்கள் ஏறக்குறைய இதே நிலை எடுப்பவர்கள். டாக்டர் ருத்ரன் ஓவியர். அவர் ஹுசேனின் ஓவியங்களை ஒரு நிபுணருக்கு மட்டுமே கை வரும் ஆர்வத்துடன் ரசிக்கிறார், எழுதுகிறார். ஜெயமோகன் ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மையில் இவையும் அடங்கும் என்பதை வற்புறுத்துகிறார்.
பதிவுலகத்தில் இந்த நிலை எடுப்பவர்கள் மைனாரிடிதான். பல தளங்களில் உறுமல்தான் கேட்கிறது. நான் அவ்வப்போது பார்க்கும் தளங்களில் தமிழ் ஹிந்து தளம், டோண்டு, திருச்சிக்காரன் என்று பலரும் எதிர்வினை புரிகிறார்கள். என்ன கொழுப்பு இந்த ஹுசேனுக்கு, முகமதை இப்படி வரைவானா என்று பலரும் குமுறுகிறார்கள். என்ன வரையப்பட்டிருக்கிறது என்பதை விட பலருக்கு வரைந்தது ஒரு முஸ்லிம் ஆயிற்றே என்பதுதான் முக்கியம். ஒரு ஹிந்து வரைந்திருந்தால் என்ன சொல்வார்கள்? டாக்டர் ருத்ரன் இப்படி சில படங்கள் வரைந்திருக்கிறார், அதை என் ஒரிஜினல் பதிவில் பதிக்க அனுமதியும் கொடுத்தார். அதைப் பற்றி ஒரு குரல் – ஒரே ஒரு குரல் – கூட வரவில்லை. அவர்கள் ரேடாரில் இது வரவே இல்லையா, இல்லை ஹிந்து வரைந்தால் அது அவர்கள் மனதை புண்படுத்தாதா என்று தெரியவில்லை. இங்கே அவரது ஓவியங்களை மீள்பதிவு செய்திருக்கிறேன். (டாக்டர் ருத்ரன் பேரை இப்படி firing lineஇல் இழுப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாராக!)
- கிரியின் முக்கியமான கேள்வி # 1 – ஹுசேனை விமர்சிப்பவர்கள் ஹிந்து வெறியர்களா?
- இல்லை, இல்லவே இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். ஹுசேன் படம் என் மனதை புண்படுத்துகிறது என்று சொன்னால் ஹிந்துத்வா என்று யாராவது சொன்னால் “போய்ட்டு வா” என்று அனுப்பி விடுங்கள். (ஹிந்துத்வா என்பது எப்படி “கெட்ட” வார்த்தை ஆகிறது? இஸ்லாமியம், கிறிஸ்துவம், பவுத்தம் எல்லாம் கெட்ட வார்த்தையா?)
- உங்கள் அபார்ட்மெண்டில் நீங்கள் உங்கள் சந்தோஷத்தை கொண்டாட மிக அதிக வால்யூமில் பாட்டு வைத்து ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் அபார்ட்மென்ட், உங்களுக்கு கொண்டாட எல்லா உரிமையும் உண்டுதான். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அது அடுத்தவர்களை பாதிக்கத்தான் செய்கிறது. அப்படி பாதிக்கும் புள்ளி என்ன என்பதில் பலருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு புள்ளி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. என்னைப் பொறுத்த வரையில் இந்த விஷயத்தில் அந்தப் புள்ளி ஹுசேனைத் தாண்டி வெகு தூரத்தில் இருக்கிறது. அதனால்தான் இப்படி வரைவது தவறு என்று சட்டம் இருந்தால் அது மாற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்காக உங்களுக்கு அந்த புள்ளி பக்கத்தில் இருக்கக் கூடாதா என்ன? எனக்கு காது டமாரம், பாட்டு எவ்வளவு சத்தமாக வைத்தாலும் கேட்பதில்லை என்றால் நீங்களும் செவிடாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
- எனக்கு தெய்வங்கள் உண்மையிலேயே மனித சக்திக்கு அப்பாற்பட்டவை. போயும் போயும் ஒரு மனிதன் தெய்வங்களை அவமானப்படுத்த முடியும் என்று நினைக்கக் கூட முடியவில்லை. பெரியார் பிள்ளையாருக்கு செருப்பு மாலை போட்டு பிள்ளையாரை அவமானப்படுத்துவதோ இல்லை ஹுசேன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்து சரஸ்வதியை அவமானப்படுத்துவதோ எப்படி முடியும்? நீங்கள் தெய்வங்கள் மனிதர்களால் அவமானப்படுத்தக் கூடியவை என்று நினைக்கலாம். அப்படி நினைப்பதும், அதனால் ஹுசேனை விமர்சிப்பதும் உங்கள் உரிமை. ஆனால் அவர் மீது வன்முறை என்ற பேச்சே கூடாது, அது சட்ட, நியாய விரோதம். சட்டம் இருக்கிறதாம், அதன்படி நடவடிக்கை எடுங்கள்! (நான் அந்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று நினைப்பவன். ஏனென்றால் கருத்து சுதந்திரம் எனக்கு மிக முக்கியம்.)
- பொதுவாக இந்திய அரசுக்கு இந்த புள்ளி மிக பக்கத்தில் இருக்கிறது. அதனால்தான் இந்த மாதிரி விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக – முட்டாள்தனமாக, கோழைத்தனமாக – நடந்து கொள்கிறது. அதனால்தான் சல்மான் ரஷ்டியின் புத்தகம் தடை செய்யப்படுகிறது, டாவின்சி கோட் திரைப்படம் தடை செய்யப்படுகிறது. இன்றைக்கு ஹுசேன் செய்ததும் தவறு என்று சட்டமே இருப்பது போல தெரிகிறது. (சும்மா டம்மி கேசா, இல்லை நிஜமாகவே சட்டப்படி ஹுசேன் தண்டனைக்குரியவரா என்று எனக்கு சந்தேகம் உண்டு.)
- இப்படி வரைந்திருப்பது என் மனதை புண்படுத்துகிறது என்று சொல்ல – உங்கள் உணர்வுகளைப் பற்றி நீங்கள் சொல்ல – உங்களுக்கு இல்லாத உரிமையா? தாராளமாக சொல்லுங்கள். அந்த புள்ளி எங்கே இருக்கிறது என்று விவாதியுங்கள். ஆனால் சத்தமாக பாட்டு வைத்திருப்பவரிடம் யப்பா சாமி, கொஞ்சம் வால்யூமை குறைப்பா என்று வேண்டுகோள் விடலாம்; சமூக நிர்பந்தம் மூலம் (கள்ளுக்கடைகளுக்கு எதிராக காந்தி மறியல் செய்யச் சொன்ன மாதிரி) அவரை வீட்டை காலி செய்ய வைக்கலாம். என்ன நீ வீட்டுக்கு திரும்பி வந்தால் ஜெயில், அடிப்போம் என்று பயமுறுத்துவீர்களா? அப்படி செய்வது சரி என்று நினைப்பவர்கள் யாராவது உண்டா? அந்த மாதிரி தண்டனைகள் “குற்றத்துக்கு” appropriateதானா? இப்போது ஹுசேன் கட்டார் குடிமகனாகி இருப்பது ஜெயில், அடி என்ற பயத்தினால்தானே? இவரை பயமுறுத்துவது மட்டும் சரி என்று எப்படி நினைக்கிறீர்கள்? அப்படி செய்பவர்களுக்கும் கட்டைப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்?
- கிரியின் முக்கியமான கேள்வி # 2 – ஹுசேன் படங்கள் கலைக்கண்ணோடு மட்டும் பார்க்க வேண்டியவையா?
- இந்த கலைக்கண், மாலைக்கண்ணோடு எல்லாம் எப்படி பார்ப்பது என்று எனக்கு தெரியாது. ஓவியத்தை பிரஷ் வொர்க், பேப்பர் வழவழ என்று இருக்கிறதா இல்லையா, அது இம்ப்ரஷனிஸ்ட் ஓவியமா இல்லை க்யூபிஸ்ட் ஓவியமா என்று ஒரு expert பார்க்கலாம். எனக்கு அந்த ஓவியம் என்னுள் என்ன உணர்ச்சிகளை எழுப்புகிறது என்பதுதான் முக்கியம். எல்லாரும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், you will be disappointed.
- திருச்சிக்காரனின் முக்கியமான கேள்வி – பெரும்பாலான மக்கள் மனம் புண்படும் என்று தெரிந்தும் ஏன் ஹுசேன் இப்படி செய்ய வேண்டும்? அவருக்கும் ஒரு சமூகப் பொறுப்பு வேண்டாமா? (அதாவது அபார்ட்மெண்டில் பாட்டு கொஞ்சம் கம்மி வால்யூமில் கேட்க வேண்டும் என்று அவருக்கு தெரிய வேண்டாமா?) அதற்கு காரணம் மத வெறிதானே?
- திருச்சிக்காரன் சொல்வது ஓரளவு நியாயமானதே. நாலு பேர் வாழும் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்சில் எவனும் இரவு பாட்டை சத்தமாக வைத்துவிட்டு தோம் தோம் என்று ஆடக் கூடாது என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு? ஆனால் ஹுசேன் விஷயத்தில் பாதிப்பு tangible இல்லை. மனம் புண்படுகிறது என்பதை காரணமாக வைத்து ஒரு விஷயத்தை தடை செய்தால் அப்புறம் எதையும் யாரும் செய்ய முடியாது. பாமியன் புத்தர் சிலைகள் தாலிபன்காரர்களின் மனதை புண்படுத்தியது, அதனால்தான் அந்த அரிய கலைச் செல்வத்தை உடைத்து எறிந்தார்கள். நாளை ஒரு அறிவுக் கொழுந்து வந்து அஜந்தா ஓவியங்களுக்கு மேலாடை வரையச் சொல்வார். இன்று ஹுசேனை தண்டித்தால் அதுதான் நாளை அவர்களுக்கு precedent ஆக மாறும்.
- ஹுசேன் இந்த படங்களை வரைந்து ஒரு நாற்பது வருஷம் இருக்கும் போலத் தெரிகிறது. இரண்டு மூன்று வருஷமாகத்தான் பலரும் சவுண்ட் விடுகிறார்கள். முப்பது முப்பத்தைந்து வருஷம் பெரும்பாலான மக்கள் ஒன்றும் சொல்லவில்லை என்றால் அவர் என்ன நினைத்திருப்பார்? பெரும்பாலான மக்கள் மனம் நம் ஓவியங்களால் புண்படுகிறது என்றா? இது சும்மா சென்சேஷனுக்காக ஹிந்துக்களை மத அடிப்படையில் ஒன்றாக திரட்ட விரும்பும் அமைப்புகளும், ஊடகங்களும் செயற்கையாக ஊதி பெரிதாக்கி இருக்கும் பிரச்சினை.
- அப்புறம் அவர் என்ன வீடு வீடாகப் போய் தன் படங்களை காட்டிக் கொண்டிருக்கிறாரா? அவர் இருப்பது ஒரு elite உலகம். அங்கே அம்பானிகளும் பச்சன்களும் சோனியாக்களும்தான் வாழ்கிறார்கள். அவர் படம் வரைந்து அது ஒரு புண்ணாக்கு பாதிப்பையும் நம் சாதாரணர் சமூகத்தில் ஏற்படுத்தப் போவதில்லை. கான் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழாவில் மட்டுமே திரையிடப்படும் ஆர்ட் ஃபில்ம் மாதிரிதான் அவரது ஓவியங்களும். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஏதாவது ஒரு புத்தகத்தில் பதித்திருப்பார்கள்.
- நாற்பது வருஷம் முன்னால் வரைந்த படத்துக்கும் அவர் வருத்தம் தெரிவித்திருப்பதாக கேள்விப்பட்டேன். (என் கண்ணில் அவர் அப்படி செய்திருக்கக் கூடாது.) இன்னும் அவரிடமிருந்து நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்? அவர் வேறு என்னதான் செய்ய வேண்டும்?
- மேலும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்க வேண்டும் என்ற வாதம் சரி இல்லை. ஒரு நூறு வருஷத்துக்கு முன்னால் ஜாதி தவறு என்று ஆயிரத்தில் ஒருவர் நினைத்திருந்தால் சொல்லி இருந்தால் அதிகம். அவர்களும் இப்படி நம் கருத்து பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதனால் நாம் சொல்லக் கூடாது, எழுதக் கூடாது, என்று நினைத்திருந்தால் இன்று நம் கதி என்ன?
- டோண்டுவின் கேள்வி # 1 – ஹிட்லரை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹுசைன் சரஸ்வதி, சீதை, பார்வதி ஆகிய பெண் கடவுளரை வரைந்தது எதில் சேர்த்தி?
- புண்படுத்தும் எண்ணத்தில் வரையவில்லை என்று ஹுசேன் சொல்லி இருக்கிறார். சரஸ்வதியை “அவமானப்படுத்தவும்” அவருக்கு சுதந்திரம் உண்டு. நான் வணங்கும் சரஸ்வதி தெய்வம். தெய்வத்தை மனிதன் அவமானப்படுத்த முடியும் என்று டோண்டு நினைப்பது தெய்வத்தை குறைத்து மதிப்பிடுவது. அவர் சரஸ்வதியை குறைத்து மதிப்பிட்டு என் போன்ற கடவுள் நம்பிக்கை உள்ள ஹிந்துக்களின் மனதை புண்படுத்துகிறார். உண்மையில் அதுதான் சரஸ்வதிக்கு “அவமானம்!”
- டோண்டுவின் கேள்வி # 2 – நிர்வாணமாகக் கூட வேண்டாம், முகம்மதுவின் படத்தை துணியுடன் வரையத் துணிவானா அவன்?
- சம்பந்தமே இல்லாத கேள்வி. முகமதுவை வரைந்தால்தான் சரஸ்வதியை வரைய வேண்டும் என்று டோண்டு புதிய கோட்டா சிஸ்டம் கொண்டு வருகிறார்! அவருக்கு துணிவில்லை என்றே வைத்துக் கொள்வோம். வீரர்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம் என்று சொல்ல வருகிறாரா?
- டோண்டுவின் கேள்வி # 3 – முகம்மது பற்றிய ரெஃபரன்ஸ் வந்ததற்கே இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் கலவரம் செய்ய, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்து அதை நீக்கியவன் இங்கு மட்டும் ஏன் மொண்டித்தனம் செய்ய வேண்டும்?
- இது என்ன என்று தெரியவில்லை. ஹுசேன் ஏதோ முகமதுவின் படத்தை வரைந்து பின்னால் நீக்கி இருக்கிறாரோ என்னவோ. சரி பேட்டை ரவுடிக்கு மாமூல் கொடுத்தாயே எனக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கலாமா? அந்த இஸ்லாமிய அமைப்புகளை அடக்குங்கள் என்று டோண்டு பொங்கி இருந்தால் புரிந்து கொள்ளலாம். அவனை மட்டும் அயோக்கியத்தனம் பண்ண விடுகிறாயே, என்னை ஏன் விடுவதில்லை என்று கேட்பது போல அல்லவா இருக்கிறது?
- டோண்டுவின் கேள்வி # 4 – சல்மான் ருஷ்டி விவகாரத்தில் அவருக்கு வந்த மரண மிரட்டலை எங்காவது இவன் எதிர்த்திருக்கிறானா? (முக்கால்வாசி அதற்கு ஆதரவு கூட தெரிவித்திருப்பான்)
- டோண்டுவுக்கும் அவர் நிலை என்ன என்று தெரியாது – எனக்கும் தெரியாது. என்ன, நான் எந்த முன் முடிவுக்கும் போகவில்லை.
- அப்புறம் ஹுசேன் எந்த நிலை எடுத்தால் என்ன? அவர் ரஷ்டி விஷயத்தில் தவறான நிலை எடுத்தால் ஹுசேன் விஷயத்தில் நாம் எல்லோரும் தவறான நிலை எடுக்க வேண்டுமா? ஹுசேன் ரஷ்டி வீட்டில் திருடினால் நீங்கள் ஹுசேன் வீட்டில் திருடுவீர்களா? என்ன லாஜிக் என்றே புரியவில்லையே!
- டோண்டுவின் கேள்வி # 5 – தஸ்லீமா விவகாரத்தில் இவனது நிலைப்பாடு என்ன?
- டோண்டுவுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. என்ன நிலைப்பாடாக இருந்தாலும் அது irrelevant.
- டோண்டுவின் கேள்வி # 6 – மேலே உள்ள இரண்டு கேள்விகளுக்கான விடைகள் அவனுக்கு சப்பைக்கட்டு கட்டும் போலி மதச்சார்பற்றவர்களிடமாவது அவர்களை பொருத்து உள்ளனவா?
- நான் மதச்சாற்பற்றவனா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. என்னிடம் விடைகள் இருக்கின்றன, அதை முன்னாலும் எழுதி இருக்கிறேன். சல்மான், மற்றும் தஸ்லிமாவுக்கு, மற்றும் டாவின்சி கோட், மற்றும் முகமதை பற்றி வந்த டேனிஷ் கார்ட்டூன், நாளை யாராவது முகமதை ஓரினச் சேர்க்கையாளராக வரைவது இல்லை மேரியும் ஏசுவும் உறவு கொள்வது போல வரைவது போன்றவற்றுக்கு முழு உரிமை உண்டு. நான் அதை விமர்சிக்கலாம். (ஏசு மேரி உறவு படம் வரையப்பட்டால் நான் அதை நிச்சயமாக கண்டிப்பேன், ஆனால் அப்படி வரைய அவருக்கு முழு உரிமை உண்டு என்று வாதிடுவேன்.)
- தன கேள்விகளுக்கு மாற்று கருத்து கொண்ட யாரும் பதில் சொல்லாமல் நழுவுகிறார்கள் என்று டோண்டு சொல்கிறார். For the record, நான் நிச்சயமாக சொல்லி இருக்கிறேன், டோண்டு அவற்றை படித்துவிட்டு இங்கே எதிர்வினையும் புரிந்திருக்கிறார்.
- டோண்டுவுக்கும் ஒரு கேள்வி: சல்மான், தஸ்லிமா, டாவின்சி கோட் தடை, முகமதைப் பற்றி வந்த டேனிஷ் கார்ட்டூன் ஆகியவற்றில் உங்கள் நிலை என்ன?
- டோண்டுவின் வாதம் மிக சிம்பிளாக: ஹுசேன் தனக்கு ஒரு நியாயம், ஊருக்கு இன்னொன்று என்று நினைக்கும் அயோக்கியன், அதனால் நாம் “நல்லவர்களுக்கு” பார்க்கும் நியாய தர்மத்தை இவருக்கு பார்க்க வேண்டியதில்லை. இந்த நிலை எனக்கு இசைவானதில்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
ஹுசேனுக்கு ஹிந்து கடவுள்களை அவர் இஷ்டப்படி வரைய எல்லா உரிமையும் உண்டு – ஆர்வி, டாக்டர் ருத்ரன், ஜெயமோகன்
ஹுசேன் செய்தது தவறு – கிரி, டோண்டு, திருச்சிக்காரனின் கருத்துகள் இந்த பதிவின் பின்னூட்டத்தில் இருக்கின்றன.
ஹுசேனின் கட்டார் முடிவு பற்றி ஆர்வி, டாக்டர் ருத்ரன், சோ ராமசாமி
37.523851
-122.047324
மார்ச் 26, 2010
Posted by srinivas uppili under
Hinduism 1 Comment

விண்ணில் எழாது — ஒரு
பெண்ணில் எழுந்தது
ரமணன் என்னும் –
ரவி;
புன்மை இருள்
போயொழிந்து
புலர்ந்தது — இப்
புவி!
*****
தன்னைத்
தானே விரும்பாதவன்;
வீடுபெற வேண்டி
வீடு விட்டு வந்தபின் –
வீடு திரும்பாதவன்!
அவன்–
ஆரையும் விழுத்தவல்ல –
நசைகள் மூன்றும்
நண்ணா மலை;
அமர்ந்த இடம்
அண்ணாமலை!
அவன்
அரிய குணங்களின் –
அற்புத
ஆவணம்;
கோவணம் கட்டிய — திருமுறைப்
பாவணம்!
குகை புகுந்த — வாலறிவின்
சிகை;
அதனுள் சுரந்த
ஆனந்தச் சுனையில் — ஞான
அரவிந்தமாய் — மடல்
அவிழ்ந்த முகை!
மான்;
மயில்;
ஆன்;
அஜம்;
அனைத்திடமும்
அன்பு பாராட்டினான் — ஒரே
அளவதாய்; அவன் ஓர் –
ஆண் தாய்!
‘உன்னுள் இருக்கும்
உன்னை அறி;
நீயாகவே –
நிற்பான் அரி!’
உதவினான்
உபதேசம்;
உட்கார்ந்து கேட்டது
ஊர்; தேசம்!
‘நான்’ விட்டவன் — ஒருநாள்
வான் சென்றான்; செல்லுமுன்
‘நான்’ விட்டவன் — எவரும்
வான் செல்லலாம் என்றான்!
– கவிஞர் வாலி (இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்)

மார்ச் 25, 2010
Posted by srinivas uppili under
Books [4] Comments

நன்றி - மகேஸ்வரன் http://www.maheshwaran.com
சுஜாதாவின் ’24 ரூபாய் தீவு’ – ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித துயரம் என்று எந்த வகையிலும் ‘categorise’ செய்ய முடியாத அற்புதமான நாவல். இது குமுததில் தொடர்கதையாக வெளிவந்த போதே கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றதாம். அதை தொடர்ந்து கன்னடத்தில் ‘ஒண்டித்வனி’ என்ற பெயரில் ஏகப்பட்ட வணிகரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததாம். இந்த நாவலை ‘அப்படியே’ எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாஸன் அடிக்கடி சொல்வார் என்று சுஜாதா தன் நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். 120 பக்கங்களில் ஒரு நிருபரின் அபாயகரமான வாழ்க்கையை அச்சு அசலாக நம் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் சுஜாதா. நம்புங்கள்… இந்த நாவலை படிப்பது ஒரு roller-coaster ride-க்கு சமானம்.
தின ஒளியில் நிருபராக வேலை பார்க்கும் விஸ்வநாதனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து ஃபோன் கால் வருகிறது. குறித்த நேரத்துக்கு விஸ்வநாதன் அங்கு போகும்போது அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். போலீஸுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் விஸ்வநாதன், அந்த ஃபோன் கால் தன் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டி போடபோகிறது என்று எதிபார்க்கவில்லை. அந்த கொலை பற்றி அவன் எழுதும் செய்திகளால் அவன் ஓவர்நைட்டில் புகழடைகிறான். அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. கூடவே எதிரிகளும் முளைக்கிறார்கள்.
இது தெலுங்கு டப்பிங் தனமான பூனை புலியாகி திருப்பி தாக்கும் கதை அல்ல. விதி வசத்தால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும் ஒரு சாதாரண மனிதனின் அல்லல். அரசியல்வாதிகளின் கைப்பாவையாய் செயல்படும் அரசு இயந்திரங்களும், அரசியல் திரையில் பொம்மலாட்டம் காட்டும் ராஜதந்திரிகளும், சந்தர்ப்பம் கிடைத்தால் யார் முதுகிலும் ஏறி மேடை போடும் தொழிலாளர் இயக்கங்கள், இவர்களுக்கிடையே சிக்கிக் கொண்டு போராடும் ஒரு சாமானியனின் விதி. இந்த நாவலின் சிறப்பு என்று சொன்னால், கடைசிவரை எதிரி கண்ணுக்கு தெரியாமல் இருப்பது தான். ஒரு கட்டத்தில் நமக்கே விஸ்வநாதன் மீது ‘இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று ஒரு கையாலாகாத கோபம் வருகிறது.
கடைசி 20 பக்கங்களில் கணேஷும் – வசந்தும் வருகிறார்கள். ஒரே பாராவில் வசந்த் மொத்த புதிரையும் அவிழ்த்துவிடுகிறான். முடிவு யாரும் எதிர்பாராதது என்றபோதும் விஸ்வநாதன் அந்த மனநிலைக்கு வருவான் என்பதும், அவன் வாழ்க்கையில் விளையாடும் சூத்ரதாரி யார் என்பதும் இந்த நாவலை படிக்கும் யாருமே யூகிக்ககூடியது என்பதால் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் விஸ்வநாதனின் பத்து வயது தங்கை பலாத்காரம் செய்யப்படுவதும், அதை தொடர்ந்து வரும் காட்சிகளும் உண்மையிலேயே தூக்கத்தை கொள்ளையடிக்கக் கூடிய சம்பவங்கள்.
சுஜாதாவே சொல்வது போல இது சினிமாவாக ‘அப்படியே’ எடுக்க மிகவும் தோதான கதை. சமயத்தில் பேனாவை அமிலத்தில் தோய்த்து எடுத்தது போல படு காட்டமாக எழுதியிருக்கிறார். சில சமயங்களில் எனக்கு புத்தகத்தை மூடி வைத்து விடலாமா என்று கூட தோன்றியது. ஆனால் அது தான் சுஜாதாவின் ஸ்டைல் – சுற்றி சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வருவது. இரண்டாவது பாதியில் நடப்பவை பலமுறை படித்துவிட்ட புளித்துபோன ‘cliched’ சம்பவங்கள். ஆனால் கிளைமேக்ஸில் ஜிவ்வென்று விட்டதை பிடித்து விடுகின்றார். அது மட்டும் தான் இந்த நாவலின் பலவீனம்.
சுஜாதாவுக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்த & வாசகர்களால் மிகவும் விரும்பப்படும் படைப்புக்களில் ஒன்று இந்த ’24 ரூபாய் தீவு’. ஒரு முறை தாராளமாக படிக்கலாம். அவரின் ‘பிரிவோம் சந்திப்போம்’ படமாவதை போல, இதையும் ‘அப்படியே’ யாராச்சும் படமாக எடுப்பார்கள் என்று நம்பலாம்.
நன்றி - மகேஸ்வரன் http://www.maheshwaran.com
தொடர்புடைய பதிவுகள்:
மார்ச் 24, 2010
Posted by srinivas uppili under
Hinduism 1 Comment
![[paramacharya-021.jpg]](http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/S5p-QpZ2EAI/AAAAAAAAA44/J_jo0BAD_6s/s1600/paramacharya-021.jpg)
ஆயிரத்து இருநூறு
ஆண்டுகள் முன்னம்
ஆரியாம்பாள் ஈன்றனள் — ஓர்
அழகு மதலை; அவள் –
அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ்
ஆதிமுதலை; அதைத்தான்
ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர்
ஆற்று முதலை!
காலடி பிறந்தவன்
காலடி பதிந்திடாத
நாலடி — இந்த
நாட்டினில் இல்லை; திரு –
மாலடி போற்றி — அவன்
மொழிந்த பஜகோவிந்தம் போல்
நூலடியொன்று — பிற
நூலோர் ஏட்டினில் இல்லை !
‘அவன்தான் –
இவன்;
இவன்தான்
அவன்!’
எனும்படி — இங்கு
எழுந்தருளினான்….
காஞ்சி –
காமகோடி — ஸ்ரீ
சந்திர சேகரேந்திர –
சரஸ்வதி; அந்த
இமயநதிக்கு இணையான — ஒரு
சமய நதி!
துவராடை தரித்த
திருவாசகத்தை; இரு
கால்கொண்டு — ஒற்றைக்
கோல்கொண்டு — இப்
படிமிசை உலவிய — அத்வைதப்
பெருவாசகத்தை;
கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான
வெயிலை; மன்பதையின் –
அவத்தைப் போக்க
பவத்தைப் போக்க –
தவத்தைப் புரிந்த சிவத்தை;
அரிசிப் பொறி
அருந்தி –
அஞ்சு பொறி
அவித்த….
நுழைபுலம் மிக்க — ஒரு
நூற்றாண்டுக் கிழவனை; நம்
நெஞ்சை — ஒரு
நஞ்சை நிலமாக்க — விழி
நாஞ்சில் கொண்டு
நாளும் உழுத உழவனை;
அரசுமுதல் ஆண்டிவரை –
அறியும் ‘பெரியவாள்’ என்று;
அழுக்கு மனங்களில்
அப்பிக் கிடக்கும் –
அவலப் புதர்களை
அரியும் பெரிய வாள் என்று!
– கவிஞர் வாலி (இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்)

மார்ச் 23, 2010
Posted by srinivas uppili under
Indian Legends [2] Comments

சுஜாதா கூறுகிறார்……

தேவன் அறக்கட்டளையினர் எதிர்பாராத ஒரு காலையில் என்னை விளித்து இந்த வருஷம் தேவன் நினைவாக உங்களை கௌரவிக்க விரும்புகிறோம், சம்மதமா’ எனக் கேட்டனர். எப்படி என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் ? என்று வினவியபோது தற்கால எழுத்தாளர்களில் நீங்கள் ஒருவர்தான் இன்னும் தேவனை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், என்று சாருகேசி சொன்ன காரணத்துடன், முழுவதும் சம்மதமில்லை எனினும் தேவன் நினைவாக ஒரு பாராட்டைப் பெறுவது எனக்குச் சம்மதமே.
மாணவப் பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களில் தேவன் முக்கியமானவர். அவருடைய ஸ்ரீமான் சுதர்சனம் ஆனந்த விகடனில் தொடர் கதையாக வந்தபோது ஏகப்பட்ட பணமுடையால் அலுவலகத்தில் பணம் கையாடிவிட்டு எப்போது மாட்டிக் கொள்வோமோ என்கிற பரிதாபத்துடன் நகைச்சுவையையும் கலந்து தரும் அவருடைய நடையின் எளிமையையும் சரளத்தையும் வியந்திருக்கிறேன். இறுதியில் ஆபீசில் தீ விபத்தில் வவுச்சர்கள் எல்லாம் எரிந்துவிட தண்டனையிலிருந்து சுதர்சன் தப்பித்தான் என்று நாம் பெருமூச்சு விடும்போது முதலாளிக்கு அவன் பணம் எடுத்தது முதலிலிருந்தே தெரியும் என்று ஒரு அதிர்ச்சி தந்து முடிப்பார்.
தேவன் ஒரு கால கட்டத்தில் வெகுஜன எழுத்துக்கு முக்கியமான முன்னோடி. கல்கி அளவுக்கு அவருடைய பலதிறமை இருந்திருக்கிறது. அவரும் கல்கியைப் போல ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாடுகளைவிட்டு வெளியே வந்து தனியே ஒரு பத்திரிகை துவங்கியிருந்தால் என்ன ஆயிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.
இந்தக் காலத்து எழுத்தாளர்களுக்கு தேவன் எழுத்துக்கு ஒரு அறிமுகம் செய்ய என் பட்டியலில் ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சின்னக் கண்ணன் கதைகள், ராஜத்தின் மனோரதம், துப்பறியும் சாம்புவின் சில கதைகள், கோமதியின் காதலன், ஆரம்ப நாட்களில் அவர் ஆனந்தவிகடன் தீபாவளி மலர்களில் எழுதிய மல்லாரி ராவ் கதைகள் முக்கியம். தேவன் அவர்களை ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். எம்.ஐ.டியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவர் தமிழ்ச் சங்கத்தின் கூட்டத்திற்கு வந்திருந்தார். என்னை அறிமுக உரை பேச வைத்தார்கள். சுத்தத் தமிழில் அவையோர்களே, மாணவப் பெருந்தகைகளே என்று ஆரம்பித்தபோது ‘இந்தப் பையன் ஏன் இப்படி கஷ்டப்படறான் ? தினப்படி உங்க ஹாஸ்டல்ல பேசறமாதிரி பேசிட்டுப் போயேன்’ என்றார். கேள்வி நேரத்தில் சின்னக் கண்ணன் பற்றி ஒருவர் கேட்டபோது தனக்குக் குழந்தையே இல்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார். பிற்காலத்தில் தேவன் அதிகம் பிரபலமாகாததற்குக் காரணம் அவர் சீக்கிரமே இறந்த பின் பல வருடங்கள் அவர் நூல்கள் புத்தகமாக வெளிவராததுதான். இப்போது அறக்கட்டளையினர் அனைத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இளம் தலைமுறையினருக்கு தேவன் ஒரு புதிய அறிமுகமாகக் கிடைக்கட்டும். நூற்றாண்டின் இறுதியில் அவர் கதைகள் முழுதும் தமிழ் தகவல் தளத்தில் உள்ளிடப்பட்டு செவ்விலக்கியமாகக் கருதப்படும்போது நகைச்சுவை வறண்டுவிட்ட நாட்களில் வுட்ஹவுசுக்கு ஈடாக தமிழில் நகைச்சுவை எழுதியவர் என்கிற தகுதியில் இலக்கிய வரலாற்றில் அவருக்கு இடம் நிச்சயம் உண்டு. மற்றொரு தேவன் வருவாரா என்று காத்திருப்போம்.
தொடர்புடைய பதிவுகள்:
எழுத்தாளர் கடுகு என்கிற அகஸ்தியன் எழுத்தாளர் தேவன் பற்றி
வி. திவாகர் தேவன் – 50ஆவது ஆண்டு நினைவு
வே.சபாநாயகம் ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்….(1)’தேவன்’
அடுத்த பக்கம் »