சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் ‘நீர்க்குமிழிகள்’, ‘பெட்டி’, ‘கடைசிப்பக்கங்கள்’ எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது.
சுஜாதா முன்னுரை
கடைசிப் பக்கங்களின் முதல் தொகுப்பு விசா பதிப்பகத்தினர் வெளியிட்டு மூன்று பதிப்புகள் கண்டது. அது முழுமையான தொகுப்பல்ல. கைவசம் இருந்த கணையாழி இதழ்களில் கிடைத்த 72 பக்கங்களின் தொகுப்பாக வந்தது. கணையாழியின் ஆரம்ப காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள்வரை நான் கடைசிப் பக்கங்களை ஓரிரு இதழ்கள் தவிர தொடர்ந்து எழுதி வந்திருந்தேன். நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் என்னால் தொகுத்திருக்க முடியாது. தேசிகன் இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். கணையாழி இதழ்கள் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, டோரதி கிருஷ்ணமூர்த்தி, வெ. சபா நாயகம், வெங்கடேஷ் போன்ற ஆர்வலர்களிடம் இருந்தன. ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் சில திரட்டுகள் வெளியிட்டார். யாரிடமும் கடைசிப் பக்கங்கள் முழுமையாக இல்லை. மேலும் கடைசிப் பக்கம் என்று சொல்லி முதல் பக்கம், நடுப் பக்கம், பத்தாம் பக்கம் என்று எங்கிலும் எழுதி வந்தேன். சிறுகதைகள் எழுதும்போது நிறுத்திவந்தேன். கோபித்துக்கொண்டால் சில மாதங்கள் விட்டுப்பிடிப்பேன். இதெல்லாம் கடைசிப் பக்கங்களை முழுவதும் தொகுப்பதை சிக்கலான ஒரு தனித்தேடலாக்கின. தேசிகன் அதை மேற்கொண்டார். நான் எழுதிய அத்தனை கடைசிப் பக்கங்களையும் தொகுத்து முடித்து விட்டார். பிரமிக்கத்தக்க சாதனை! எழுத்தாளன்பால் அளவிலாத வாத்சல்யமும் நிறையப் பொறுமை கொண்ட ஒரு வாசகனால் தான் சாத்தியம். என் இனிய நண்பர் தேசிகனுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்கே என் கதைகளைப் பற்றி எப்போது எழுதினேன், எந்த இதழில் எழுதினேன் என்று சந்தேகம் ஏற்படும்போது அவரைத்தான் கேட்பேன். அந்த அளவுக்கு நான் எழுதியது அனைத் தையும் ஆராய்ந்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார். அவருக்கு இதழ்களை கொடுத்துதவிய அன்பர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்த தொகுப்பை வெளியிட மனுஷ்ய புத்திரன் பிறந்து வரவேண்டி யிருந்திருக்கிறது. ஆம், மனுஷ்ய புத்திரன் பிறப்பதற்கு முன்பிருந்தே நான் கணையாழியில் எழுத ஆரம்பித்துவிட்டேன். இன்றும் மற்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என் எழுத்துக்கு புது வாசகர்கள் அவ்வப்போது பிறந்து வருகிறார் கள். இந்த புதிய ஜன்மங்கள்தான் எனக்கு கிடைக்கும் பரிசுகள். இந்தப் பக்கங்கள் அனைத்தையும் பாரபட்சமின்றி முழுமையாக ஒரு வாசகனின் பார்வையிலிருந்து இப்போது என்னால் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்க்கும் எவருக்கும் என் மனமாற்றங்களும் குணமாற்றங்களும் வெளிப்படும். நாற்பது ஆண்டுகளில் ஒருவனுடைய கவலைகள் மாறுகின்றன; பிடிவாதங்கள் தளர்கின்றன; அழுத்தி சொல்லவேண்டிய விஷயங்கள் குறைந்துபோகின்றன. இல்லையேல் என்னை எப்பொழுதோ நிராகரித்திருப்பார்கள்.
கணையாழி தமிழ் இலக்கியப் பத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான முன்னோடி. அதன் வளர்ச்சிக் காலத்தில் கடைசிப் பக்கங்கள் மூலம் கஸ்தூரிரங்கனுக்கு உதவியதில் பெருமைப்படுகிறேன்.
சுஜாதா
சென்னை
டிசம்பர் 2006
தேசிகனுடைய சிறு குறிப்பு – முதல் பக்கம்
இது 1965ல் ஆரம்பிக்கப்பட்ட கணையாழி இதழிலிருந்து 1998 வரை உள்ள கணையாழியின் கடைசிப் பக்கங்களின் தொகுப்பு.
முதல் கணையாழி இதழ் 1965 ஜூலை மாதத்தில் புது டெல்லியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. அதே வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் சுஜாதா அவர்கள் ‘ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்’ என்ற பெயரில் கடைசிப் பக்கத்தில் எழுத ஆரம்பித்தார். நீர்க்குமிழிகள், பெட்டி, கடைசிப் பக்கம் என்று பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். ‘கடைசிப் பக்கம்’ நிலைத்துவிட்டது.
கணையாழி 40-பைசா இதழிலிருந்து தொகுக்கும்போது, கிடைத்த அனுபவம் சுவாரசியமானது. திரும்பவும் சுஜாதாவின் எழுத்துகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுஜாதாவின் எழுத்துகளை முழுவதும் படித்த எனக்கு அவர் எல்லை எது என்று தீர்மானிக்க முடிவதில்லை. கணையாழியில் ஹெவியான பல விஷயங்களை லைட்டாகச் சொல்லி யிருக்கிறார். நாட்டுப் பாடல், புதுக் கவிதை, ஹைக்கூ, விவாதங்கள், சங்கீதம், சினிமா, சமகால சமுதாயம், ஆன்மிகம், இலக்கிய விமர்சனம், விஞ்ஞானக் கதை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், என்று எந்த ஒரு எழுத்தாளரிடமும் இல்லாத ‘broad spectrum’ இவரிடம் இருக்கிறது.
நான் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் உள்ள இதழ்களிலிருந்து இந்தத் தொகுப்பை ஆரம்பிக்க வேண்டும் என்றபோது சிறிது அஞ்சினேன். பழைய புத்தகங்களின் வாசனை, உடையும் காகிதம், பைண்டிங்கில் ஊசியால் குத்தப்பட்ட உயிர் எழுத்துகள் என்று இந்தத் தொகுப்பை உருவாக்கிய அனுபவம் வித்தியாசமானது. இந்தத் தொகுப்பு முழுமை பெற உதவியவர்கள் இருவர்.
ஒருவர், புதுக்கோட்டை ‘ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி.’ வீட்டிற்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வீட்டையே நூலகமாக்கியுள்ளார் இவர். தன்னிடம் உள்ள கணையாழி இதழ்களைப் படியெடுத்து அனுப்பி வைத்து உதவினார்.
மற்றவர், ‘நேசமுடன்’ ஆர். வெங்கடேஷ். என்னை அவர் வீட்டுக்கு அழைத்து அவரிடம் உள்ள இதழ்களை எல்லாம் என்னிடம் கொடுத்துதவினார்.
இவர்களுக்கு என் நன்றிகள்.
பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லி வருகிறேன். விமானத்தில் உச்சந் தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல இருக்கும் ஹோஸ்டஸ்ஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கெட் அள்ளிக் கொள்கிறார்கள். ’லாக் அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. டாக்ஸிக்காரன் ‘ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான்(பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்).
உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரு. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள்.ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக்கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு, மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள்.
சிவப்பு விளக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான் கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசைகளின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை, மற்றொரு கையில் ஈவ்னிங் நியூஸ். வாங்குங்கள் வாங்குங்கள் என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி…
டில்லி மாறவில்லை.
- கணையாழியின் கடைசிப் பக்கம், பிப்ரவரி 1974
’இரு கோடுகள்’ படத்தை ஜனம் ‘ஓஹோ’ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன். படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன் X கோடு. அப்புறம் ஏன் இப்படி எல்லோரும் பிழியப் பிழிய அழுகிறார்கள்? டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது caricatureஆ! ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபீசில் நிகழவே நிகழாது. முதன்முதல் அந்த கலெக்டருக்கு ஒரு கெடிகாரத்துக்கு உள்ள மூளை இருந்தால்கூட அவள் கேட்பது transfer ஆக இருக்கும்.
அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்பஇன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார். பேப்பர் பேனா எடுத்து வரச்சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார்.
அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி.வி ஸீஸ் டு எக்ஸிஸ்ட்.எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி”
“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes. we do not exist”.
ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்,” Nobody dies; they live in memories and in the genes of their children”. How True ?
சுஜாதா தன் எழுபதாவது பிறந்த நாள் கட்டுரையில்
‘சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது’
சுஜாதா எழுதிய கடைசி பத்தி ‘அப்போலோ தினங்கள்’ அதில் எழுதியிருப்பது
“மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்” — 12 வருடங்களுக்கு முன்பு (18-1-1998) சுஜாதா எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி.
‘எழுத்தும் வாழ்க்கையும்’ – சுஜாதா கட்டுரையில் இருந்து… (11-05-2003)
‘யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது. குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’ என்று சொல்வார்.
Life goes on. இந்த அதீதமான சோகத்தை மறக்க, சீக்கிரமே அன்றாடப் பணிக்குத் திரும்புவது முக்கியம். அதையே நினைத்துக்கொண்டு மறுகினால், எண்ணங்கள் நம்மைச் சாப்பிட்டுவிடும்.
மனுஷ்ய புத்திரன்
உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது.
அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதாவின் நண்பரும் சீடருமான தேசிகன்
அவர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகம் நிறைய. நவம்பர் மாதம், ‘இப்ப எல்லாம் எதையும் படிக்கிறதில்லை; கண்ணும் ரொம்ப ஸ்ட்ரைன் ஆகறது. நான் இப்ப கொஞ்ச நேரமாவது படிக்கிற புஸ்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மட்டும்தான், அதுதான் எனக்கு எல்லாம்!’ என்றார்.
அவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அவர் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியாமல், அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, ‘சிற்றஞ் சிறுகாலே…’ என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.
‘மனித உயிர் என்பது வற்றாத ஓர் அதிசயம், அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால், ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும்’ என்று சுஜாதா சொன்னது எவ்வளவு உண்மை!
இப்போது பிரிகிறோம், இனி எப்போது சந்திப்போம் சுஜாதா சார்?
கேள்வி: உலகத்தில் நிலையானது எது சார் ?
பதில்: மரணம்
லிஃப்டில் இறங்கும்போது, லிஃப்ட் இயக்குபவர், “சார் எந்த பக்கமா போறீங்க?”
“வெளியே போகணும்ப்பா..”
“இல்ல… இந்த லிப்டுக்கு இரண்டு கதவு இருக்கு, இந்தப் பக்கம் திறந்தா வெளிக் கதவு, அந்தப் பக்கம் திறந்தா மார்ச்சுவரிக் கதவு.
கவிஞர் நா.முத்துக்குமார்
மரணம் ஒரு கறுப்பு ஆடு. அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப் பூவைத் தின்றுவிடுகிறது!
சுஜாதா பற்றி சுஜாதா!
இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..?
ஒரு தடவை அவருக்கு மாத்திரை கொடுக்க லேட் ஆயிடுத்து. பதறி ஓடி வந்து கொடுத்தா, ‘ஒரு வாய் மாத்திரை சாப்பிடலேன்னா, நான் செத்துட மாட்டேன். நீ ஏன் வொர்ரி பண்ணிக்கிற..?’ன்னாரு.
தண்ணி, பேப்பர், ரிமோட், சாப்பாடுனு எது கொடுத்தாலும், சின்னதா ‘தேங்க்ஸ்’ சொல்வார். ‘எதுக்கு என்கிட்டயும் தேங்க்ஸ்?’னு கேட்டா, ‘உன்கிட்டயும் தேங்க்சுக்கு ஒரே அர்த்தம்தானே!’னு சிரிப்பார்.
ஐயோ! ஐ ஃபீல் கில்ட்டி… நான் அவரை இன்னமும் நல்லபடியா கவனிச்சுண்டு இருந்திருக்கணும்! என்னை எப்படில்லாம் பார்த்துண்டார். என் பேர்ல எழுதுறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக்கணும். நான் பதிலுக்கு அவருக்கு என்ன செஞ்சுருக்கணும். நான் இருக்குற வரை, அவரை போஷிச்சிருக்க வேண்டாமா..!
சுஜாதா பதில்கள் (குங்குமம்) உலகத்தில் நிலையானது எது சார் ?
மரணம்.
மனித வாழ்க்கையில் இன்னமும் புரியாத புதிராகத் தோன்றுவது எது ?
மரணத்துக்குப் பின் என்ன என்பதை அறிந்துகொள்ள மரணம் சம்பவிக்க வேண்டியிருக்கிறதே, அதுதான்.
எல்லாவற்றுக்கும் ஒரு Saturation Point இருப்பது போல் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உண்டா ?
உண்டு. உயிரின் ரகசியமும், மரணத்துக்குப்பின் என்ன என்பதும் தெரியும்போது விஞ்ஞானம் முற்றுப்பெறும்.
நான் பல வருடங்களாகவே நடப்பதை ஒரு இனிய பொழுது போக்காகக் கொண்டு வருகிறேன். நடக்கும் பொழுது கட்டற்ற தெளிவாக சிந்தனை பிறக்கிறது. ஏகாந்தமான உணர்வு கிட்டுகிறது. மனம் எளிதாகி பறவை போலப் பறக்கிறது. உடலும் மனமும் இயற்கையுடன் ஒன்றி மனம் சிறகடிக்கிறது. அதற்காகவே நடக்கிறேன். உடல் நலம் என்பது அதனால் கிடைக்கும் ஒரு உபரி பலனாகி விடுகிறது. வேலையில் மதிய உணவை வேகமாக முடித்து விட்டு ஒரு 40 நிமிட நடை, வார இறுதியில் ஒரு நீண்ட நடை என்று வாரம் எப்படியும் இருபது மைல்கள் (1 மைல் = 1.61 கீ மீ) என்னையறியாலேயே நடந்து விடுகிறேன். நடப்பது என்பது ஒரு இனிமையான பொழுது போக்காக அமைந்து விடுகிறது. பேச வேண்டியவர்களிடம் பேசி முடிப்பதற்கும், கேட்க்க விரும்பும் இசையைக் கேட்பதற்கும் நடை உறுதுணையாகி விடுகிறது. நடை இப்பொழுது என் நல்ல நண்பன், எனக்கு நல்லதொரு பொழுது போக்கு, என் கொலஸ்டிராலை குறைக்கும் ஒரு சேவகன், என் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு காவலன், என் உடல் நலத்தைப் பேணும் ஒரு நல்ல மருத்துவன், என் கற்பனைகளின் ஊற்று, என் சிந்தனைகளின் வடிகால், என் ஆசிரியன், என் இனிய துணைவன்.
நடப்பதற்கென்றே இங்கு ஏராளமான இடங்களை உருவாக்கிப் பேணி வைத்திருக்கிறார்கள்.வீட்டிற்கு அருகே ஒரு ரெண்டு மைல் தாண்டிப் போனால் அற்புதமான இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பசிஃபிக் மஹா சமுத்திரம் தன்னைத் தடுக்கும் மலைகள் வழியாகப் புகுந்து எங்கள் வீட்டின் அருகே வரை எட்டிப் பார்க்கிறது. கடற்கரைக் காயலும் அவற்றை அணைத்த குன்றுகளுமாக இயற்கை அன்னை தன் எழிலை பொழிந்திருக்கும் அற்புத நிலப் பரப்பு விரிந்திருக்கிறது.
வீட்டில் இருந்து கிளம்பி ஒரு அரை மைல் துரத்தில் ஒரு சின்னப் பாலம் ஏறி இறங்கி, கார் ஓடும் சாலைகளின் இருந்து விலகி உலகின் எல்லை விரியும் இடம் நோக்கி புற வழிச்சாலை வழியாக நேரே போனால் வரிசையாகக் குன்றுகளும் அந்தக் குன்றுகளின் இடை வழியே ஏறி இறங்கினால் பரந்து விரிந்த பசிஃபிக் மஹாசமுத்திரத்தின் மிச்சமும் வந்து விடுகிறது. நான் போகும் பாதையில் கண்ணுக் காணக் கிடைத்தக் காட்சிகளை எல்லாம் கிளிக்கிக் கொண்டே போய் இங்கு இட்டிருக்கிறேன். போக வர மொத்தம் 7 மைல் நீண்ட நடை. வை கோ போயிருந்தால் நீதி கேட்டு நெடிய பயணம் என்று அழைத்திருப்பார். நான் நீதி கீதி எல்லாம் கேட்க்காமலேயே வாரா வாரம் போய் வருகிறேன். இந்த வாரம் போன பொழுது வழக்கமாகக் காணக் கிடைக்கும் மான்கள் கூட இல்லாமல் நான் மட்டும் தனியாகப் போய் எனக்கே சற்று பயமாகிப் போனது ) இருந்த ஒரே ஒரு கொக்கும் கூட என் காமிரா திறமை அறிந்து இவனுக்கெல்லாம் நாம் போஸ் கொடுப்பதா என்று கேவலமாக நினைத்துப் பறந்து போய் விட்டது. மற்றபடி மலையும், கடற்காயலும் பின்னே நானும் மட்டுமே. அந்தப் பரந்து விரிந்த பிரதேசத்தில், இயற்கையும், அணில்களும், குருவிகளும், வாத்துக்களும், இளையராஜாவும் துணைக்கு வரத் தனியே நடந்தேன். முதலில் எங்கள் குடியிருப்புப் பகுதி பின்னால் மறைய, பரந்து மஞ்சள் விரிஞ்ச பூக்கள், மஞ்சள் பூக்காடுகளைத் தாண்டினால் கடற்காயல் தண்ணீர் ஓடும் ஓடைகள், ஓடைகளிலே மிதக்கும் வாத்துக்கள், பசுமை போர்த்திய குன்றுகள், பொன்வேய்ந்த புல்வெளிக் குன்றுகள், மாலை வெயிலின் மஞ்சள் குளிப்பாட்டிய மலைகள், குன்றுகளைத் தாண்டினால் கடல் என்று காட்சிகள் விரிவதை எல்லாம் எதோ என்னால் முடிந்த வரை பிடித்துப் போட்டிருக்கிறேன். கால் போன போக்கிலே கண் போக கண் போன போக்கிலே மனம் போக, மனம் போன பாதையை மறந்து போகாமல் இங்கு இட்டிருக்கிறேன்.
படத்தில் காணப்படும் இந்த இடம் இப்பொழுது கயோட்டி ஹில் என்றழைக்கப் படுகிறது. கயோட்டி எனப்படும் மிருகங்களும், ஓநாய்கள், பறவைகள், அணில்கள் நிறைந்த ஒரு கடற்கரைக் காயல் பிரதேசம். முன்னொரு காலத்தில் ஓலோன் எனப்படும் செவ்விந்தியப் பழங்குடியினர்களின் வசிப்பிடமாக இருந்தது. கடற்கரையோரம் வளரும் ராட்சத நாணற் புற்களை வெட்டி குடிசை கட்டி, அதிலேயே படகு செய்து, வளைகுடாப் பகுதியில் சென்று மீன் பிடித்து, அக்னி வளர்த்து, உலக நலம் வேண்டி யாகங்கள் செய்து, கூட்டுக் குடியிருப்பாய் வாழ்ந்திருந்த இடம். ஆத்தோரம் நாணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு, செடி வளர்த்து ஜோராக வாழ்ந்திருந்த அவர்கள் வாழ்க்கைக்கு எமனாக் வந்தார்கள் ஸ்பானிஷ் மிஷனரிகள். அவர்களைப் பிடித்து அடிமைப் படுத்தி கொட்டடிகளில் அடைத்து உணவு உடை பழக்க வழக்கம் எல்லாம் மாற்றி அந்தப் பழங்குடி இனம் அழிந்து போக இப்பொழுது அவர்கள் வாழ்ந்த இடம் மட்டும் ம்யூசியமாக மிச்சம் இருக்கிறது. செவ்விந்தியர் வாழ்ந்த வாழ்க்கையை இப்பொழுது மியூசியமாக அந்தக் குன்றில் வைத்திருக்கிறார்கள். மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
நான் நடக்கும் இடங்களின் சூழல் – கயோட்டி ஹில்ஸ்
ஆகவே நண்பர்களே நடப்பதினால் ஆய பயன்களை நான் பட்டியலிட்டு விட்டேன். படமும் காட்டி விட்டேன். நடையினால் நிச்சயம் எனக்குப் பலன்கள் பல கிட்டின. நடையினால் கிடைக்கும் பலன்களைப் பற்றிய சந்தேகம் இருப்பின் உங்கள் மருத்துவ நண்பர்களை கேட்டுக் கொள்ளலாம். அட, நடப்பதினால் வேறு எந்த பயனும் கிட்டாவிட்டாலும் கூட வீட்டுச் சச்சரவுகளில் இருந்து கொஞ்சம் அமைதியாக ஒரு மணி நேரத்தை ஏகாந்தமாக கழித்து விட்டாவது வரலாமே, அந்த அமைதிக்காகவாவது நடக்க மாட்டீர்களா என்ன?
நடப்பதனால் நலம் உண்டாம்
நடப்பதினால் நன்மை உண்டாம்
நடப்பதினால் உடல் எடைக் குறைவுண்டாம்
நடப்பதினால் புத்துணர்ச்சியுண்டாம்
நடப்பதினால் கொலஸ்டிராலுக்குக் குறையுண்டாம்
ஆதலினால் நடத்தல் செய்வீர்
முதல் ஐந்து நிமிடம் மெதுவான இயல்பான நடையும், அதன் பின் தசைகளை இழுத்துச் செய்யும் சிறிய உடற்பயிற்சியும் அதன் பின்னர் சற்றே வேகமான இதயத் துடிப்பு தன் உயர் நிலையில் 70% எட்டும் வண்ணம் அதிகரித்த நடை ஒரு 40 நிமிடங்களும் பின் மெதுவான நடையுடன் தினப் படி நடையை முடித்துக் கொள்ளலாம். வெளியில் நடக்க வசதிப் படாவிட்டாலோ, அதற்கான பாதுகாப்பான இடம் கிட்டாவிட்டாலோ வீட்டிற்குள்ளேயே நடை எந்திரமான டிரெட்மில்லில் நடக்க முடியுமா என்றும் பாருங்கள். அலுவலகங்களில் உடற்பயிற்சி இடங்கள் இருப்பின் அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நமது பரபரப்பான வேலை நாட்களில் ஒரே நேரத்தில் ஒரு மணி நேரமோ அல்லது சின்னச் சின்னதாக ஒரு இரண்டு 30 நிமிடங்களோ எடுத்துக் கொண்டு நடப்பது சாத்தியமான ஒரு காரியமே.
நடக்கும் பொழுது உடலை நேராக வைத்துக் கொண்டு கைகளை வீசி, கால்களை அளவான அடி எடுத்து வைத்து நடப்பது அவசியம். நடக்கும் பொழுது பேசக் கூடிய அளவில் மூச்சு சீராக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு விருப்பமான பாடல்களை எம் பி 3 ப்ளேயர்களில் கேட்டுக் கொண்டோ, நீலப் பல் (ப்ளூடூத்) அமைந்த, தோடுடைய செவியராய் செல்பேசிகளில் விருப்பமானவர்களுடன் பேசிக் கொண்டோ கூட நடக்கலாம். அப்படி நடப்பது நடையை எளிமையாக்கும். பாதங்களுக்கு நீண்ட நடைக்கு ஏற்ற நல்லதொரு கேன்வாஸ் ஷீ அவசியம். செருப்புடனோ அல்லது லெதர் ஷீ போன்றவைகளை அணிந்தோ நடவாதீர்கள். கைகளில் சிறிய எடையுடன் நடப்பது எடை குறைக்க உதவும். ஒவ்வொரு நாளும் நடக்கும் தூரத்தையும் வேகத்தையும் அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். வாரம் எப்படியும் 10 மணி நேரங்கள் நடந்து விட வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்துக் கொண்டு நடக்கவும். லேசான நெகிழ்வான பருத்தி ஆடைகளை அணிந்து நடத்தல் அவசியம். நடப்பது கஷ்டமான காரியமாகத் தோன்றாமல் மிக எளிமையான அனுபவித்துச் செய்யக் கூடிய ஒரு பயிற்சியாக ஆக்குவதில் அணியும் உடையும் காலணியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
150 பவுண்டு எடையுள்ள அல்லது 70 கிலோ எடையுள்ள மனிதர் மணிக்கு நான்கு மைல்கள் வேகத்தில் ஒரு மணி நேரம் நடந்தால், கிட்டத்தட்ட நானூறு முதல் ஐநூறு கலோரிகள் நம் உடலில் இருந்து எரிக்கப் படுகிறது. எரிப்பதற்குத் தேவையான சக்கரை சக்தி கிட்டாத பொழுது நம் வயிறு மடிப்புகளிலும் பிற சதைப் பகுதிகளிலும் சேமிக்கப் பட்டு கட்டியாக உறைந்திருக்கும் கொழுப்பில் இருந்து சக்தி பெறப் பட்டு அந்தக் கொழுப்புகள் எரிக்கப் பட்டு நம் உடல் எடை குறைய நடை உதவுகிறது. ஒரு வாரம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் வேக நடை நடந்தால் நாம் 25 முதல் 30 மைல்கள் நடந்திருப்போம். ஒரு நாளைக்கு 500 கலோரியை எரித்தால் வாரம் ஒரு பவுண்டு உடல் எடை குறைய சாத்தியம் உள்ளது. நடையுடன் கூடி உணவுக் கட்டுப்பாட்டையும் கொணர்ந்தால் நம் உடல் எடைக் குறைப்பு நிச்சயம் சாத்தியமான ஒன்றாகும்.
நாம் ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்கிறோம் எத்தனை கலோரிகள் எரித்திருக்கிறோம் என்பதையெல்லாம் கணக்கு எடுக்கும் வேலையை பீடோ மீட்டர் என்னும் சின்ன ஒரு கைக்கு அடக்கமான கருவி கண்டு பிடித்து நமக்குக் காட்டுகிறது. அதை நடக்கும் பொழுது நம் உடலில் மாட்டிக் கொண்டு நடந்தால் அது நமது நடை பற்றிய அனைத்து புள்ளி விபரங்களையும் அளித்து நம் நடைப் பயிற்சியைத் திட்டமிட உதவும். நல்லதொரு பீடோமீட்டர் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்களுக்குள்ளேயே கடைகளில் கிடைக்கும்.
நான் நடக்கும் இடங்கள் – கயோட்டி ஹில்ஸ்
நடப்பதற்கென்று நேரம் ஒதுக்கி நடக்க முடியவில்லையா, நடப்பதை கட்டாயமாக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. மின்தூக்கியில் பயணித்து உயர் மாடிகள் அடைவதைத் தவிர்த்து மாடிப்படிகளை ஏறியே கடக்கலாம். நாம் இறங்க வேண்டிய இடத்திற்கு முந்தைய நிறுத்தத்திலேயே இறங்கி நடக்கலாம், வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே செல்லலாம். வீட்டுச் சாமான்கள் காய் கறிகள் வாங்குவும் வேலைய எடுத்துக் கொண்டு நடந்து சென்று வாங்கி வரலாம்.
(தொடரும்)
இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை. பிடிப்பதில்லை என்பதைவிட , விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ, கேட்கவோஅவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை. ஆகவே “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்கிற நடைமுறையை ஊடகங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன.
அதன்படியே, இன்று அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் நன்றாகவே அதை அமல் படுத்தவும் செய்கின்றன.
அதை உள்வாங்கிக்கொண்டுதான் ‘விகடன்’ குழுமத்திலிருந்து முன்பு வெளிவந்துகொண்டிருந்த ‘விகடன் பேப்பர்’ நாளிதழில், ‘சுஜாதாட்ஸ்’ என்ற தொடர் வெளிவந்தது. அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும், சம்பவங்களையும் தன் சிந்தனை ஓட்டத்தில் இருந்து எழுத்தாளர் சுஜாதா எழுதிவந்தார்.
அதே நேரத்தில், அப்போது நடந்த சில விஷயங்களை, இன்று வாசிக்கிறபோது, வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றன. அந்த சுவாரஸ்யங்களை, வாசகர்கள் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டுதான் இந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.
சுஜாதாவின் முன்னுரை (செப்டம்பர் 2007)
விகடன் நிறுவனத்திலிருந்து சில காலம் வெளிவந்த ‘விகடன் பேப்பர்’ நாளிதழின் ஆசிரியர் பாலன் அவர்கள் என்னை, சிறிய கட்டுரைகள் எழுதச் சொன்னார். ‘சுஜாதாவின் எண்ணங்கள்’ என்கிற கொஞ்சம் அசௌகரியமான தலைப்பை நவீனப்படுத்தி ‘சுஜாதாட்ஸ்’ என்று சுருக்கி வெளியிட்டார்கள். இவ்வகையிலான சின்னச்சின்ன கட்டுரைகள் எழுத எனக்கு எப்போதும் இஷ்டம். சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே போய், அலுக்கும்போல் தெரிந்தால், முடித்து விடலாம்.
நான் என் நண்பர்களும் இன்னும் டி வி எஸ் பள்ளியில் +2 படித்த அதே பதின்ம வயதினர் அல்ல. முதுமையின் பாதையில் பயணிக்க துவங்கி விட்டோம். இனி எதிர்காலம் நமக்கு அரும்பப் போவதில்லை. இருந்தாலும் போக வேண்டிய தூரமும் வருடங்களும் இன்னும் அதிகம் உள்ளன. தலை முடிகள் சுருங்கத் துவங்குகின்றன. இளம் வழுக்கை எட்டிப் பார்க்கிறது, இளம் தொந்தி விழுகிறது, இதுவரைக் கேள்விப் பட்டிராத கொலஸ்டிரால், டயபடிஸ் என்ற பெயர்கள் எல்லாம் அணிவகுக்கின்றன, கண் பார்வை சுருங்குகிறது, தலை முடி நரைக்கிறது, இன்னும் பல உடல் மாற்றங்கள் மெல்ல மெல்ல நாம் உணராமலேயே நம்முள் ஏற்பட்டு விடுகின்றன. இவை எல்லாம் ஆண்டவன் நமக்குப் போடும் ரிமைண்டர் லெட்டர்,நம் காலம் சுருங்குவதை நினைவு படுத்தும் எச்சரிக்கைகள் என்பார் கண்ணதாசன்.
நாற்பது வயதுக்கு மேல் நம் உடல் நலத்தின் மீது மிகுந்த அக்கறை கொள்வது நமக்கு இல்லாவிட்டாலும் நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தாருக்கும் மிக அவசியமானதொன்றாகும். நாம் இது வரை காட்டிய அலட்சியம் இனிமேல் எடுபடாது. நம் உடல் இது வரைத் தன்னைத்தானே பார்த்துக் கொண்டது, இனிமேல் நாம் கவனம் எடுத்து அதற்காக நேரம் செலுத்தி அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது. நீரிழவு நோயையும், மாரடைப்பையும், புற்று நோயையும் நாம் நம்மிடம் அண்டாமல் தள்ளி வைக்க ஒரு சில உடல் உழைப்புக்களை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது. 40 வயதிலேயே இதை நாம் ஆரம்பித்திருக்க வேண்டும். நம்மில் பலர் உடற்பயிற்சிகளையும், உணவுப் பழக்கங்களையும் கவனுத்தடன் கடமையாக தினசரி நேரம் ஒதுக்கி செய்து வருபவர்களாக இருக்கலாம். இந்த வயதில் நாம் ஜிம்முக்குப் போய் உழைக்க முடிந்தால் நல்லதுதான். அதற்கான நேரமோ, இட வசதியோ நம்மில் பலருக்கு அமையாமல் இருக்கலாம். நம் அனைவராலும் நம் உடல் நலத்தைப் பேணுவதற்கு மிக எளிமையான ஒரு வழிமுறை உள்ளது, அதிகமாக நம் உடலை வருத்தாமல், நம் போக்கிலேயே, இயல்பாகவும் அனுபவித்தும் செய்யக் கூடிய ஒரு தேகப் பயிற்சி நடை. ஆம் நடப்பதுதான். ஒரு காலத்தில் நடப்பது நம் இயல்பான செயல்பாடாக இருந்திருக்கலாம், ஆனால் காலம் மாற, வசதிகள் அதிகரிக்க, வாகனங்கள் பெருக நடப்பது என்பது நாம் அறியாமலேயே நாம் அதிகம் செய்யாத ஒரு செயலாக மாறி விடுகிறது.
தினமும் 30 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை வேகமாக நடக்க முயன்றால் அதன் பலன்கள் அளப்பரியவை என்கிறார்கள் மருத்துவர்கள். நடப்பதினால் கெட்ட கொலஸ்டிரால் குறையும், நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்கும், டைப் 2 டயபடிஸ் குறையும், கேன்சர் வருவது தவிர்க்கப் படலாம், உடல் தசைகள் பலம் பெறும், எடை குறையும், மனம் சாந்தியடையும்,மன உற்சாமக் கிட்டும், நல்ல உறக்கம் வரும், வயது முதிர்வின் வேகம் குறையும், தன்னம்பிக்கை வளரும், ரத்த அழுத்தம் குறையும், ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு குறையும், எலும்புகள் உறுதிப் படும், கால்கள் வலுப் பெறும், மூட்டு வலி குறையும், மன அழுத்தமும் பாரமும் இறங்கும் இன்னும் என்ன என்னவோ நல்லது நடக்கும் என்று குடுகுடுப்பைக்காரன் போல மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். தினமும் அரை மணி நேரம் நடந்தாலே மேற்கண்ட அத்தனை நற்பலன்களும் சித்திக்கும் என்கிறார்கள் மருத்துவர்களும் உடல்நல நிபுணர்களும். நடத்தல் எளிதான செலவில்லாத ஒரு தேகப் பயிற்சி. அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. எதற்கும் எங்கும் நடக்க ஆரம்பித்தாலே நடத்தல் இயல்பான ஒன்றாகி விடும்.
நான் நடக்கும் இடங்கள் – கயோட்டி ஹில்ஸ்
நம் அனைவருக்கும் நாம் இருக்கும் இடங்களில் அருகில் நடப்பதற்கு ஏதாவது ஒரு இடம் இருக்கும். நகர் பகுதிகளில் ஆட்கள் மேல் இடித்துக் கொள்ளாமல் நடப்பது இயலாத காரியம். மதுரை போன்ற நெருக்கமான நெரிசலான நகரங்களில் நடப்பதற்கான இடங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. நகரங்களில் வசிப்பவர்கள் அதிகாலை நேரங்களில் நடப்பதை வழக்கமாகக் கொள்ளலாம். புறநகர்ப் பகுதிகளில் வசிப்போர் மாலை நேரங்களில் நடப்பதை வழக்கமாக நடக்கலாம். எங்கு வாழ்ந்தாலும் தினமும் ஒரு மணி நேரம் எப்படியாவது நடந்து விட முயலுங்கள். வார இறுதிகளில் அருகில் உள்ள குன்றுகளைத் தேர்ந்தெடுத்து மலையேறுவது மற்றும் ஒரு நல்ல நடைப் பயிற்சியாக அமையும். அதற்கும் முயன்று பாருங்கள். கொஞ்சம் யோசித்தால் அருகில் மலையேறத் தோதான குன்றுகள் பல இருப்பது உங்களுக்குப் புலப் படும்.
(தொடரும்)
உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான். அனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்திரை என்பதை சித்தரிக்கும் நாவல் வண்ணத்துப்பூச்சி வேட்டை.
ஆண்களின் உலகத்தில் பெண்களின் தனிமையையும், பயங்களையும், அவர்கள் மேல் செலுத்தப்படும் வெளிப்படையான, மானசீக வன்முறையையும் சுஜாதா மன நெகிழ்ச்சியூட்டும் வகையில் இந்நாவலில் விவரிக்கிறார். மிக நுட்பமான சித்தரிப்புகளும், அவதானிப்புகளும் இந்நாவலை மிகவும் அழகியல்தன்மை கொண்டதாக மாற்றுகின்றன.
சுஜாதாவின் முன்னுரை
‘வண்ணத்துப்பூச்சி வேட்டை’, ‘கல்கி’ பத்திரிகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடர்கதையாக வெளிவந்து, இப்போது உயிர்மையில் புதிய பதிப்பாக வருகிறது. (நவம்பர், 2005) முதல் பதிப்பின் முன்னுரை (சுஜாதா – 27-7-94)
இந்த கதை ‘கல்கி’ இதழில் தொடர் கதையாக வெளிவந்தபோது, பலர் இதன் கதாநாயகனான அர்ஜுன் நல்லவனா கெட்டவனா என்று உத்தரவாதமாகச் சொல்லிவிடுங்கள் என்று விசாரித்தார்கள். எனக்கே சொல்ல முடியவில்லை. வாழ்க்கையில் ஒரு வெறித்தனமாக ஆதர்சத்தை வைத்துக்கொண்டு, அதை எப்படியும் துரத்திப் பிடிக்கும் முயற்சியில் எது செய்தாலும் அதை நியாயப்படுத்தும் இளைஞர்களை இந்த சமுதாயம் தினம் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது. கதாநாயகி ரேகா எப்படி ஒரு சமூக அமைப்பின் கைதியோ, அதே அமைப்பின் மற்றொரு கைதிதான் அர்ஜுன் போன்றவர்களும் என்பதைத்தான் இதில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா —- நன்றி – சரவணகுமரன் குமரன் குடில்
எண்பதுகளில், சுஜாதா ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. புத்தகமாக முதல் பதிப்பு வெளிவந்தது நவம்பர் 1986 இல். பின்பு, தூர்தர்ஷனில் நாடகமாக மாற்றங்களுடன் வந்தது. பின்ன, சுஜாதாவின் கற்பனையை அப்படியே எடுப்பது என்றால் சுலபமா என்ன? அதுவும் தூர்தர்ஷனில்?
இப்ப, இதைத்தான் ஷங்கர் எந்திரனாக எடுத்து கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. இயக்குனர் ஷங்கர் தன் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள http://www.directorshankaronline.com/ என்ற வலைதளத்தை 2010 புத்தாண்டு முதல் துவங்கி இருக்கிறார்.
கதையை படித்தால் அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் இந்த கதையில் ஹீரோ என்று யாரும் கிடையாது.
2020 களில் நடக்கும் கதையை 1980 களில் எழுதியிருக்கிறார். 2022 இல் எங்கும் இயந்திர மயம். கதை என்ன கதை? சுஜாதாவின் கற்பனையும் வார்த்தைகளும் தான் விசேஷம். சிபி-நிலா ஒரு இளம் தம்பதி. இவர்கள் வாழும் அப்போதைய இந்தியா, ஜீவா என்னும் ஒற்றை அதிகாரத்தின் கீழ் உள்ளது. ரவி, மனோ என்று மற்றொரு அணி. நாட்டின் அதிகாரத்துடன் விளையாடும் அணி. ரவியுடன் இருந்த ஜீனோ என்ற இயந்திர நாய், நிலாவுடன் இணைந்து போடும் ஆட்டம்தான், இக்கதையின் ஸ்பெஷல். இந்த கதையை, கதை எழுதிய காலக்கட்டத்தில் படித்திருக்க வேண்டும். ஆச்சரியத்துடன் கூடிய சுவாரஸ்யமாக, சரியாக இருந்திருக்கும். இப்போது படித்தால் கிடைப்பது, இன்னொரு வகையான அனுபவம்.
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் சுஜாதா, இரு எழுத்தில் பெயர் வைத்துள்ளார். நாயை விட்டே ஷெல்லியின் கவிதையை பேச விடுகிறார். வருங்காலத்தில் என்ன மாதிரியான இயந்திரங்கள் இருக்கும், மனித மனம் எப்படி மாறுப்பட்டிருக்கும் என தனக்கே உரிய பாணியில் கதையெங்கும் தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்.
இக்கதையில் இருந்து சில வரிகள்.
——
நிலா சிபிக்கு போன் செய்ய போகிறாள்.
“பேசுபவரைப் பார்க்கவும் வேண்டுமெனில் ஒரு ரூபாய் அதிகமாகப் போடவும்” என்றது குரல், இயந்திர முட்டாளாக.
‘என் இனிய இயந்திரா… நிச்சயம் உனக்கு நான் பணிந்து ஒரு ரூபாய் போடத்தான் போகிறேன். இன்று என் கணவனிடம் அந்தச் செய்தியைச் சொல்லும்போது அவன் முகம் மாறுவதைப் பார்த்தே ஆகவேண்டும்.’
“சிபி! நிலா பேசறேன்.”
“நிலா! எங்கருக்கே?”
“மால் பக்கத்தில் பூத்தில. சிபி, ஒரு சுபச் செய்தி!”
——
எட்டாவது தெருவில் டிக்கெட் வாங்கிக் கொண்டு ‘மானோ’ பிடித்தாள். அதன் காந்தத் தண்டு காற்று மெத்தையில் வழுக்கிக் கொண்டு செல்ல, ‘சின்த்’ இயந்திரக் குரலில்-பல்லாவரம், மீனம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி என்று அறிவிக்க, பத்தாவதில் இறங்கி பூமியடி ரயில் பிடித்து எட்டாவது குறுக்குத் தெருவில் இறங்கிக் கொண்டாள். சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு வாரத்துக்கு உண்டான காய்கறி வகைகள் ஆர்டர் செய்தாள்.
——
ஜீனோ மேசை விளக்கைத் தன்பால் பொருத்திக் கொண்டு கொட்டாவி விட்டது நிலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மனத்தைப் படித்தது போல் ஜீனோ, “கொட்டாவி விடுவது என்னுடைய மேம்போக்கான செயல்களில் ஒன்று. நிஜ நாய் போல இருக்கவேண்டும் என்று என் கம்பேனிக்காரர்கள் கற்றுத் தந்த அசிங்கம்!”.
——-
“டில்லிக்கு எப்படிப் போவது?”
“அரை மணிக்கு ஒரு தரம் ஷட்டில் விமானம் இருக்கிறது. வார நாட்களில் போனால் பாதி விலைதான் டிக்கெட். காற்று சுவாச பிளேனில் அரை மணி பயணம்!” என்றது ஜீனோ.
——-
”ஜீனோ, இது என்ன வம்பு? வேண்டாம்! உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவார்கள்.”
“என் மெமரியைக் காப்பி பண்ணிக் கொண்டு விட்டால் சுட்டுப் பொசுக்கினாலும் இன்னொரு மாடல் வாங்கிக் கொள்ளலாமில்லையா? எனக்கு என்ன உயிரா இருக்கிறது?”
——-
“ஐயோ! இது சிபி இல்லை. இது யார்? இது யார்?” என்று நிலா புலம்ப,
“’யார்’ இல்லை, இது அஃறிணை” என்ற ஜீனோ, “எனக்கு இருக்கிற படிப்பறிவுகூடக் கிடையாது, மனித சாதியில்லை. என்ன சக யந்திரமே, உனக்கு சித்தர் பாடல் தெரியுமா?”
——-
நாய் தேநீரை சாஸரில் ஊற்றி ‘ப்ளக் ப்ளக்’ என்று நக்கிக் குடித்தது. “இதில் உள்ள க்ளுகோஸ் மட்டும்தான் என் ஸெல்லுக்கு உபயோகம்! மற்றவை யாவும் விரயம். ரவி, தித்திப்பு என்றால் என்ன?”
“உன் நாக்குக்கு அது தெரிவதில்லையா ஜீனோ?”
“என் நாக்கில் ஒரு தெர்மோகப்பிள் மட்டும்தான் இருக்கிறது. ருசி என்பதே எங்கள் மாடலுக்குக் கிடையாது. நானூறு கொடுத்தால் நாக்கு மாற்றித் தருகிறார்கள்.”
“நாக்கு போல வேறு அவயவங்கள்?”
“ஷட் அப்!” என்றது ஜீனோ.
——–
ஜீனோ போன்ற சிறிய இயந்திர நாயைக் கைது செய்ய மூன்று காவலர்கள் அதிகப்படிதான். மேலும், சக்தி வாய்ந்த லேசர் துப்பாக்கிகளை ‘பயம்’, ‘மரணம்’ போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தமில்லாத அந்த மெஷின் ஜென்மத்திடம் காட்டுவது அபத்தமாக இருந்தது.
——-
“பாட்டரி இணைப்பை எடுத்து விட்டால் போதுமே… நான் செத்துப் போய் விடுவேனே? புறப்படு. தப்பித்து விடலாம்” என்றது ஜீனோ, தீர்மானத்துடன்.
”ஏன் ஜீனோ?”
“பயம்! அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது. என் ஞாபகம், என் செயல்பாடுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டால் நான் என்கிற நான் என்ன ஆவேன்?”
”ஜீனோ, நீ மனிதர்கள் போல் சிந்திக்கத் துவங்கி விட்டாய்.”
——
“ஜீனோ, வர வர நீ பேசுவது எதுவுமே புரியவில்லை எனக்கு.”
பா.ராகவன் இன்று இணைய பதிவர்களில் பிரபலமானவர். கிழக்கு பதிப்பகத்தில் பார்ட்னரோ இல்லை உயர் அதிகாரியோ தெரியவில்லை. கல்கியில் துணை ஆசிரியராக இருந்தவர். அவரது non-fiction பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. பெரிய அறிமுகம் எல்லாம் தேவை இல்லாதவர். அதுவும் நான் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவசியமே இல்லை.
பா.ரா.வின் அப்பா ஆர்.பி. சாரதி, பெரியப்பா சுராஜ் ஆகியோரை சந்தித்திருக்கிறேன். அவர் அப்பாவும் என் அப்பாவும் ஹெட்மாஸ்டர்கள். ஏறக்குறைய சம வயதினர். பா.ரா. ஒரு முறை அவர் தன் முதல் கதையை கிணற்றடியில் வைத்து என் அப்பாவுக்குத்தான் சொன்னதாக குறிப்பிட்டார். சுராஜ் சைதாப்பேட்டையில் பாரதி சங்கம் என்று ஒன்று வைத்து அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்துவார். சின்ன வயதில் சிலவற்றுக்கு போயிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அம்மா அப்பாவின் நண்பி-நண்பர்களை எல்லாம் போய்ப் பார்க்க வேண்டும்.
அவர் இங்கே தனக்கு பிடித்த நூறு புத்தகங்களை பற்றி குறிப்பிடுகிறார். நூறு புத்தகம் பற்றி ஒரே பதிவில் எழுதினால் நானே படிக்க மாட்டேன். அதனால் இதை பகுதி பகுதியாக பிரித்து எழுதுகிறேன்.
1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்: முக்கியமான ஆவணம். ஆனால் அருமையான புத்தகம் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
2. வேதாகமம் [குறிப்பாகப் பழைய ஏற்பாடு]: எனக்கும் புதிய ஏற்பாடை விட பழைய ஏற்பாடுதான் பிடிக்கும். பழைய ஏற்பாட்டில் கதைகள் சுவாரசியமானவை. அதில் ஜெஹோவா நம்மூர் சுடலை மாடன் மாதிரி எனக்கு படையல் வைக்காமல் அவனுக்கா வச்சே என்று கடுப்பாகிவிடுவார். ஒரு கன்னம் மறு கன்னம் எல்லாம் ஏசு வந்த பிறகுதான்.
3. புத்தரும் அவர் தம்மமும் – பி.ஆர். அம்பேத்கர்: படித்ததில்லை.
4. நாலாயிர திவ்யப் பிரபந்தம்: அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாசுரங்களை ரசித்திருக்கிறேன். பொய்கை ஆழ்வாரின் வையம் தகளியா வார்கடலே நெய்யாக பாசுரம் கொண்டு வரும் படிமம் மிக அற்புதமானது. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்ற பாசுரமும் எனக்கு பிடித்தமானது. என்றாவது எனது கவிதை அலர்ஜியை கடந்து படிக்க வேண்டும்.
5. பாஞ்சாலி சபதம் – பாரதியார்:சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு சூதிற் பணயமென்றே அங்கோர் தொண்டச்சி போனதில்லை என்று ஆரம்பிப்பது கவிதை. எனக்கே கற்பூர வாசனை தெரிகிறது.
6. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: படித்ததில்லை. படிப்பேனா என்பது சந்தேகமே.
7. சுந்தர ராமசாமி சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]: சில அற்புதமான கதைகள் உண்டு – கோவில் காளையும் உழவு மாடும், சீதை மார்க் சீயக்காய் தூள், விகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம்…
8. வண்ணநிலவன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]: புத்தகம் இருக்கிறது, படிக்க வேண்டும்.
9. வண்ணதாசன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]: புத்தகம் இருக்கிறது, படிக்க வேண்டும்.
10. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்: அருமை!
11. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி: அபாரம்!
12. சிந்தாநதி – லா.ச. ராமாமிருதம்: படித்ததில்லை.
13. கல்லுக்குள் ஈரம் – ர.சு. நல்லபெருமாள்: நல்ல புத்தகம்தான், ஆனால் ஏ க்ளாஸ் புத்தகம் இல்லை. காந்தியை கொலை செய்யப் போகும் புரட்சி இளைஞன். ஹே ராம் படம் இந்த கதையை ஓரளவு ஒத்துப் போகும்.
14. பொன்னியின் செல்வன் – கல்கி: மிக அற்புதமான கதை சிக்கல் கொண்ட புத்தகம். கொஞ்சம் verbose-தான், ஆனால் கல்கியின் சரளமான நடை அதை மறக்கடித்துவிடுகிறது. அலெக்சாண்டர் டூமா, வால்டர் ஸ்காட் போன்றவர்களை கொண்டாடும் நாம் அவற்றை விட சிறந்த கல்கியை மறந்துவிடுகிறோம்.
15. கார்ல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா: படித்ததில்லை. சாமிநாத சர்மா எழுதிய நான் கண்ட நால்வர் (திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதி) எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அவருடைய நாடகமான பாணபுரத்து வீரனும் பிடிக்கும். அவர்தான் கலைஞரின் மனோகரா ஸ்டைல் உணர்ச்சி பிழம்பு வசனங்களுக்கு முன்னோடி என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.
16. ந. பிச்சமூர்த்தி கதைகள் [முழுத்தொகுப்பு - இரண்டு பாகங்கள்]: சில கதைகள் படித்திருக்கிறேன். முழு தொகுப்பையும் படித்ததில்லை. பிச்சமூர்த்தியின் பெரிய தாக்கம் சிறுகதைகள், நாவல்கள் அல்ல, அவரது கவிதைகள்தான். எனக்கே சில கவிதைகள் பிடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! நான் காசு கொடுத்து வாங்கிய ஒரே கவிதை புத்தகம் பிச்சமூர்த்தி கவிதைகள்தான். பாரதியார் கவிதைகள் கூட அம்மா அப்பா யாராவது வாங்கிக் கொடுத்ததுதான்.
17. புதுமைப்பித்தன் கதைகள் [முழுத்தொகுப்பு]: அற்புதம்! புதுமைப்பித்தனை பற்றி புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. இது வரை வந்த தமிழ் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவர், அவ்வளவுதான்.
18. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார்: படித்ததில்லை.
19. எனது சிறைவாசம் – அரவிந்தர்: தண்டம். பா.ரா.வுக்கு இதெல்லாம் எப்படி பிடிக்கிறது என்று தெரியவில்லை.
21. ஒற்றன் – அசோகமித்திரன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். வாழ்க்கையிலிருந்து விலகி வாழ்க்கையை விவரிக்கும் அணுகுமுறை உள்ளவர். மெல்லிய நகைச்சுவை பக்கத்துக்கு பக்கம் தெரியும். இது அவருடைய உன்னதமான புத்தகங்களில் ஒன்று.
22. நிலா நிழல் – சுஜாதா: இதை படித்த ஞாபகம் இருக்கிறது, ஆனால் கதை ஞாபகம் வரவில்லை. இதுதான் ஒரு நடிகையின் சிறு பெண்ணோடு பக்கத்து மெக்கானிக் ஷாப் சிறுவர்கள் நண்பர்களாகும் கதையோ? நம்ம உப்பிலி ஸ்ரீனிவாஸ் ஏதாவது எழுதுகிறாரா என்று பார்ப்போம்.
23. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா: இதுதான் ஒரிஜினல் ப்ளாக். நன்றாக இருக்கும். இதை பற்றி என்னுடைய ஒரு பதிவு இங்கே.
24. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு: கரிச்சான் குஞ்சை பற்றி நிறைய படித்துவிட்டேன், இந்த புத்தகம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது.
25. அவன் ஆனது – சா. கந்தசாமி: படித்ததில்லை.
26. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்: படித்ததில்லை.
27. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன்: படித்ததில்லை. படிக்க ஆவலாக இருக்கிறது. ஜ.ரா. சுந்தரேசன், புனிதன், பாக்கியம் ராமசாமி, சுந்தர பாகவதர் என்ற பேர்களில் எழுதுவது ஒருவரே (ஜ.ரா.சு.) என்று நினைத்திருந்தேன். இதைப் பார்த்தால் புனிதன் வேறு யாரோ என்று தோன்றுகிறது.
28. வ.உ..சி. நூற்றிரட்டு: படித்ததில்லை.
29. வனவாசம் – கண்ணதாசன்: வனவாசமோ மனவாசமோ ஏதோ ஒன்றுதான் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம் எல்லாம் இல்லை, ஆனால் முக்கியமான ஆவணம். தி.மு.க.வின் உள்குத்துகளை விவரிக்கும் புத்தகம்.
30. திலகரின் கீதைப் பேருரைகள்: படித்ததில்லை.
31. நுண்வெளிக் கிரணங்கள் – சு.வேணுகோபால்: கேள்விப்பட்டதே இல்லை.
32. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – பி.ஆர். அம்பேத்கர் படித்ததில்லை.
33. காமராஜரை சந்தித்தேன் – சோ: படிக்க விரும்பும் ஒரு புத்தகம். இந்த முறை ஊருக்கு போனால் அலையன்சில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். டோண்டு இந்த புத்தகத்தைப் பற்றி எழுதி இருக்கிறாரா தெரியவில்லை. அவர் சோவின் முரட்டு பக்தர். காமராஜ் மேல் பெருமதிப்பு வைத்திருப்பவர்.
34. அர்த்த சாஸ்திரம் – சாணக்கியர்: படிக்க ஆரம்பித்தேன், முடிக்க முடியவில்லை. படித்த வரையில் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்தது. ரொம்ப ப்ராக்டிகலான புத்தகம். நியாய அநியாயங்களை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னைஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப் புத்தகத்தை ஏன் எழுதவில்லை? இந்திய சினிமா, இந்தியத் திரைக்கதைகள் பற்றி எதுவுமே இல்லாத நீண்ட நாள் குறையை நீக்குவதற்கு முதல் படி, முதல் பெரிய படி இதோ.(மணிரத்னம்)
டைரக்டர் ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் கடைசிக் காட்சியில் ஒரு வசனம் எழுதியிருந்தேன்.
காட்சி இது.
ரகுவரனை அர்ஜூன் தன் முதலமைச்சர் அலுவலகத்துக்கு வரவழைத்திருப்பார். ‘உன்னால் எனக்கு ரொம்ப தொந்தரவு. என்னைக் கடமையைச் செய்யவே விட மாட்டேன் என்கிறாய். கலவரம் பண்ணுகிறாய். பாம் வைத்து என் தாய் தந்தையைக் கொன்றுவிட்டாய். உன்னை நான் இப்பொது கொல்லப்போகிறேன்’ என்று ஒரு துப்பாக்கியை டிராயரிலிருந்து எடுக்க, அதற்கு ரகுவரன் சிரித்து, ‘என்னை உன்னால கொல்ல முடியாது. நான் இங்கு வந்ததற்கும் உன்னுடன் தனியாக இருப்பதற்கும் சாட்சிகள் உள்ளன’ என்கிறார்.
அர்ஜுன், ‘நான் சுடப்போவது உன்னையல்ல, என்னை’ என்று தன் கையில் சுட்டுக்கொண்டு அந்தத் துப்பாக்கியை அவர்பால் எறிகிறார். ரகுவரன் அதைப் பிடித்துக்கொண்ட நேரத்தில் காவலாளர்களைக் கூப்பிட்டுவிட, அவர்கள் நிலைமையைத் தவறாகப் புரிந்துகொண்டு ரகுவரனை சுட்டு வீழ்த்துகிறார்கள்.
ரகுவரன் இறந்துபோகுமுன் ஒரு வசனம் எழுதியிருந்தேன். ‘ That was a good interview’ என்று.
ஷங்கர், ‘இதை எதற்காக எழுதினீர்கள்’ என்று கேட்டார்.
‘வில்லன் இறக்கும் முன் புத்திசாலித்தனமாக ஒரு வசனம் சொல்லிவிட்டுப் போவது ஹாலிவுட் வழக்கம். அது ரொம்பப் புத்திசாலித்தனமாக இருந்தால் வேண்டாம்’ என்றேன்.
ஷங்கர், ‘இருக்கட்டும். அதை நான் எப்படிக் காட்டுகிறேன் பாருங்கள்’ என்றார்.
ரகுவரன் இறக்குமுன் ஒரே ஒரு ‘இண்டர்கட்’டாக அந்த இண்டர்வியூவின் ஒரு கேள்வி பதிலை ப்ளாக் அண்ட் ஒயிட்டில் போட்டார். அர்ஜுன் நிருபராக இருந்தபோது முதலமைச்சராக இருந்த ரகுவரனை எடுத்த பேட்டி அது.
அதுதான் கதையின் முக்கியத்திருப்பம். அதை அவ்வாறு ‘இண்டர்கட்’டில் போட்டபோது பாமர மக்களுக்கும் அதைப் புரியவைத்துவிட்டார். டைரக்டரும் திரைக்கதை எழுதுபவரும் ஒத்துழைத்துச் சினிமாவின் அத்தனை சாத்தியம் பயன்படுத்தி ஒரு நல்ல காட்சியை அமைப்பதற்கு உதாரணம் ஷங்கர்.
—
இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். பலமுறை பார்த்தும் சலிக்கவில்லை. மனிஷாவை தவிர எல்லாம் சரியாக இருந்ததென நான் நினைக்கும் படம். ஆக்ஷன் படங்கள் பிடித்துக்கொண்டிந்த காலத்தில், அந்த இண்டர்வியூ காட்சி ஒரு ஆக்ஷன் காட்சியாகத்தான் தெரிந்தது.
வழக்கமாக வரும் ஒரு நீள சண்டைக்காட்சியை கிளைமாக்சில் வைக்காமல், ஒரு டயலாக் சீனை வைத்து விறுவிறுப்பு ஏற்படுத்திய படம்.
கமர்ஷியல் படம் என்றாலும், கமர்ஷியல் ஐட்டம் என்று தேவையில்லாதது எதையும் இந்த படத்தில் ஷங்கர் திணிக்கவில்லை. (பாடல்களை தவிர… அது இல்லாம எப்படி?) காரணம், ஒருவேளை ஷங்கர் தயாரிப்பு என்பதாகக்கூட இருக்கலாம்.