* Free your heart from hatred
* Free your mind from worries
* Live simply
* Give more
* Expect less
December 2009
December 31, 2009
December 31, 2009
சுஜாதா கதைகள் – 5
Posted by Bags under Books, Reading, Tamil Literature, Writings | குறிச்சொற்கள்: Ganesh-Vasanth, Sujatha |Leave a Comment
(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)
எதையும் ஒருமுறை
======================
ஒரு சட்டக் கல்லூரியில் மாணவர்களுடன் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கணேஷ் வசந்த் கல்லூரிக்கு சென்று இருப்பார்கள். அங்கு நிருபமா என்ற மாணவியின் சில கேள்விகளுக்கு பதிலளிப்பார் கணேஷ். திரும்பி வரும் போது தன்னை ஓர் இடத்தில் இறக்கிவிட வேண்டுமென நிருபமா கேட்க இவர்களும் காரில் ஏற்றிக் கொள்வார்கள். வழியில் ஒரு கால்வாயில் ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருக்கும். போலிஸ், கூட்டமென அந்த இடம் பரபரப்பாக இருக்கும். மூவரும் இறங்கி சென்று பார்ப்பார்கள். அதை அனாதை பிணமென போலிஸ் தீர்மானத்திருக்கும். நிருபமா அதை கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அதில் தங்களின் உதவி வேண்டுமென கணேஷிடம் கேட்பார். கணேஷ் அது கடினம் எனக் கூறிய பிறகும் நிருபமா பிடிவாதமாக இருப்பதால் கணேஷ் சில உதவிகளைச் செய்வார். ஒரு சமயம் அந்த கால்வாயின் வழியே சிறிது தூரம் நிருபமாவின் நச்சரிப்பால் செல்வார்கள். அங்கு இறந்தகிடந்த பெண் அணிந்திருந்த சேலையைப் போன்றே ஒரு சேலையை அணிந்து மற்றொரு பெண் இருப்பதைப் பார்த்து அவரிடம் விசாரிப்பார்கள். அந்தப் பெண் தானும் தன் தோழி காவேரியும் அந்த சேலையை ஒன்றாக வாங்கினோம் என கூறுவாள். தன் தோழியை ஒரு பத்து நாளாக காணவில்லையெனக் கூறுவாள். அவள் உதவியுடன் காவேரியின் வீட்டிற்கு செல்வார்கள். இறந்த பெண் காவேரி தானா என முடிவாகவில்லை. எல்லாமே யூகம் தான். அங்கு ஒரு புத்தகம் மட்டும் வித்தியாசமாக இருக்கும். பறவைகள் சம்பந்தப்பட்ட புத்தகம். அதில் ஒரு பெயர் இருக்கும். பறவைகள் சார்ந்த ஒரு சங்கத்தின் மூலம் அந்த புத்தகத்திற்கான ஆளைக் கண்டுபிடிப்பார்கள். அவரின் செயல்களைப் பார்த்து நிருபமாவின் மூலமாக சுஜாதா ஆண்களை எக்கச்சக்கமாக திட்டுவார்
அந்த மனிதர் வாழ்க்கையில் எதையும் ஒருமுறை செய்துபார்க்க வேண்டுமென நினைப்பவர். பல பெண்களுடன் பழகி அவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து இருப்பார். காவேரியும் அதில் உண்டென அவர் சொல்ல(இவர்களின் சில செய்திகளால்) இவர்கள் பார்ப்பார்கள். நிருபமா இவன் தான் கண்டிப்பாக காவேரியைக் கொலையை செய்து இருப்பான் என முடிவுடன் இருக்க, மருத்துவமனையில் இருந்த அனாதைப் பிணம் தங்கள் மகள் கங்கா எனக் கூறி அவரின் பெற்றோர்கள் பிணத்தைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள். கணேஷ் நிருபமாவிடம் ஒன்றும் செய்ய முடியாதெனக் கூறிவிடுவார்.
மறுபடியும் கணேஷ்
=====================
பிரபாகர் என்ற ஒரு தொழிலதிபரின் மனைவி ஷைலஜா. பிரபாகர் இந்தப் பெண்ணை சட்டென்று மணந்து கொண்டு வந்துவிடுவார். அந்தப் பெண் கல்லூரி நேரத்தில் தயாள் என்பவரைக் காதலித்திருப்பார். கல்யாணமாகி எட்டு வருடம் கழித்து தயாள் மறுபடி ஷைலஜாவை சந்தித்து தன்னுடன் வந்துவிடுமாறு கேட்பான். மணவாழ்க்கையில் ஏற்பட்டக் கசப்பாலும் குழந்தையின்மையினாலும் இருக்கும் ஷைலஜா இதனால் சிறிது குழப்பமடைவார். கணவருக்கு இந்த விஷயம் தெரிந்துவிடும். ஒரு நாள் பெங்களூர் செல்லும்போது மனைவியைக் கண்காணிக்க ஒருவரிடம் கூறிவிட்டு செல்வார். ஷைலாஜா வும் அன்று ஒரு கடற்கரையில் தயாளை சென்று சந்திப்பாள். நாளை இரவு சென்ட்ரல் நிலையத்துக்கு வரும்படி அவன் சொல்லிவிட்டு கிளம்பிவிடுவான். இந்த விஷயம் பெங்களூரில் இருக்கும் கணவனுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். அவர் அடுத்த நாள் காலை விமானத்தில் சென்னை வர தயாராகி விடுவார். இதனிடையில் சென்னையில் வீட்டில் ஷைலாஜாவுக்கு ஒரு கடிதம். கணவனுக்கு தெரியாமல் இருக்க 10000 ரூபாய் தரவேண்டுமென. இவள் குழம்பிப்போய் கணேஷை உடனே வரச் சொல்வாள். கணேஷ் வசந்த வந்து இவளிடம் பேசி சில விஷயங்களைத் தெளிவாக்கி விடுவர். மறு நாள் தெளிவாக கணேஷிடம் பேசும் ஷைலஜா வேலைக்காரர்களை சீக்கிரம் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தானும் புறப்படுவார். திரும்பி வரும்போது கணவர் வீட்டிலிருப்பார். வாக்குவாதம் முற்றி மனைவியைக் கொன்று விட்டு தற்கொலை மாதிரி அனைத்தையும் மாற்றிவிட்டு திரும்ப பெங்களூர் சென்றுவிடுவார். மாலை ஷைலாஜா கேட்டுக்கொண்ட படி அவரை சந்திக்க வரும் கணேஷ் வசந்த் அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பார்கள். போலிஸுக்கு தெரிவிப்பார்கள்.ஏறக்குறைய எல்லாம் தற்கொலை என உறுதி செய்யப் படுமுன் வசந்த் சில விஷயங்களைக் கண்டுபிடித்து சொல்வார். இவர்கள் ஒரு காகிதத்தில் வரிசையாக என்னென்ன நடந்திருக்குமென கண்டுபிடிப்பார்கள். சரியாகப் பொருந்திவரும். பிரபாகரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றால் அங்கு அவரும் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பார். கணேஷ் போலிஸுக்கு தொலைபேசியில் மறுபடியும் கணேஷ் என்பார். இரண்டு கொலையும் ஒரே மாதிரி ஆனால் வேறு வேறு ஆட்களால் செய்யப்படும்.
அனிதா – இளம் மனைவி
===========================
இது நைலான் கயிறுக்கு அடுத்து குமுதத்தில தொடர்கதையாக எழுதப் பட்ட நாவல். இதில் கணேஷ் மட்டும் தான். கணேஷிடம் வசந்துக்கும் உரிய அனைத்து குணங்களும் இருக்கும்.ஒருவரின் சடலம் ஒன்றைக் கண்டுபிடித்து அங்குக் கிடந்த முகவரியின் மூலம் அவர் வீட்டிற்கு போலிஸ் போன் செய்து இறந்தவர் ஷர்மா என்பவரா என உறுதிப்படுத்த வேண்டுமெனக் கேட்பார்கள். ஷர்மாவின் மனைவி அனிதாவும் உதவியாளர் பாஸ்கரும் ஷர்மாதான் என கூறுவார்கள். அவர் தன் இன்னொரு உதவியாளரோடு கிளம்பி போனார் என தெரியும். உதவியாளார் தலைமறைவாகி விட்டாரெனத் தெரிந்து அவரைத் தேடுவார்கள். அவரின் ஒரு புகைப்படம் கூட கிடைக்காது. ஷர்மாவின் மகள் மோனிகா அமெரிக்காவில் இருப்பார். அவர் வருமுன் இங்கு அனைத்துக் காரியங்களும் முடிந்து விட்டிருக்கும். அவர் நேராக கணேஷை சந்தித்து தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை நீங்கள் சீக்கிரம் பெற்றுத்தர வேண்டுமெனக் கூறுவார். கணேஷ் ஒப்புக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு செல்வார். அங்கு ஷர்மாவின் இரண்டாவது மனைவி அனிதாவை (மோனிகா முதல் மனைவியின் மகள்) சந்திப்பார். நிறையத் திருப்பங்கள். கணேஷ் கொலையாளியைக் கண்டுபிடிக்கவும் தீர்மானித்து விடுவார்.முதலில் அனிதாவின் மேல் சந்தேகம். கணவரைப் பழிவாங்கி விட்டாரோ என. பின பாஸ்கரின் மேல். ஆனால் பாஸ்கரும் கொல்லப்படுவார். அனிதா காணாமல் போவார். இறுதியில் திருப்பங்களுடன் கதை முடியும். ஷர்மாவுடன் கடைசியாக காரில் சென்ற செயலாளரின் புகைப்படம் கிடைக்காததன் பின்னணியேக் கொலையாளி மற்றும் கொலையுண்டவரின் கதை.
December 31, 2009
சுஜாதா கதைகள் 4
Posted by Bags under Books, Reading | குறிச்சொற்கள்: Ganesh-Vasanth, Sujatha |Leave a Comment
(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)
தண்டனையும் குற்றமும்
===========================
இது ஒரு சிறுகதை. உயிர்மையின் சுஜாதாவின் மர்மக் கதைகள் தொகுப்பில் உள்ளது. நான் படித்த கணேஷ் வசந்த் கதைகளில் அவர்கள் எடுத்துக் கொண்ட வழக்குகளில் தோற்ற ஒன்று இது மட்டும் தான். ஒருவன் அவன் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட முதலாளியைக் கொல்லப் போவதாக எல்லோரிடமும் சொல்லித் திரிவான். ஒரு நாள் அந்த முதலாளியைத் தேடி செல்லும் போது அவர் ஏற்கனவே கொல்லப்பட்டிருப்பார். போலிஸ் சரியாக அந்த ஆளை கொலை நடந்த இடத்திலேயே பார்த்துக் கைது செய்வார்கள். கணேஷ் வசந்த் அவருக்காக வாதாடுவார்கள். அனைத்து சாட்சிகளும் குற்றம் சாட்டப் பட்டவருக்கு எதிராகவே இருக்கும். கணேஷ் வசந்த் கொலையை செய்தது கொலையுண்டவரின் பார்ட்னர் தான் என்பதைக் கண்டுபிடித்தாலும் நிருபிக்க முடியாமல் இருப்பார்கள். நிரபராதிக்கு தண்டனை வழங்கப் பட்டுவிடும். இறுதியில் ஒரு திருப்பத்துடன் சுஜாதாவின் சிறுகதை உத்தியுடன் முடியும்.
விதி
=====
சென்னை – பெங்களூர் சாலையில் வேலுர் அருகில் நடக்கும் ஒரு பேருந்து விபத்தில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து விடுவார்கள். இது நடந்து ஒரு வாரம் கழித்து ஒரு பெண் கணேஷ் வசந்த அலுவலகத்திற்கு வந்து அந்த விபத்தில் தன் அண்ணனும் இறந்து விட்டான். பெங்களூரில் எங்களுக்கு உறவினரோ தெரிந்தவர்களோ யாருமில்லை. என் அண்ணனுக்கு சம்பவம் நடந்த அன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னிடம் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று போனவர் ஏன் பெங்களூர் பேருந்தில் போக வேண்டும். இது விதியென்று என்னால் நம்ப முடியவில்லை. அவன் ஏன் பெங்களூர் செல்லவேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கேட்பாள். கணேஷ் வசந்தும் இதை விதியென்றே நினைப்பார்கள். விபத்தில் சிக்கிய பேருந்தின் கம்பெனிக்கு சென்று சில விவரங்களைப் பெறுவார்கள். பின முதலாளியையும் சந்தித்து பெண்ணின் அண்ணனைப்(தாமோதர்) பற்றி விசாரிப்பார்கள். கிடைத்த விவரங்கள் போதாது. தாமோதர் பணிபுரிந்த நகரத்தின் முக்கிய புள்ளிகள் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு க்ளப்புக்கு சென்று அவரைப் பற்றி விசாரிப்பார்கள்.தாமோதருக்கு நிறையப் பெண்களிடம் தொடர்பு இருந்ததெனவும் அவர்களில் ஒருத்தரைச் சந்திக்க பெங்களூர் சென்று இருக்கலாம் எனவும் முடிவுக்கு வருவர். அந்த க்ளப்பில் விபத்திற்குள்ளான பேருந்து கம்பெனி முதலாளியின் மனைவியும் உறுப்பினர். இதற்கிடையில் தாமோதரின் தங்கை தாமோதரின் தொலைபேசி தொடர்புகள் உள்ள ஒரு நோட்டை கணேஷ் வசந்திடம் தருவார். அதில் பேருந்து கம்பெனி முதலாளி வீட்டு எண்ணும் இருக்கும். விபத்து நடந்த அன்று பேருந்து 9.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இருக்கும். ஆனால் தாமோதர் 10 மணி வரை வீட்டிலிருந்ததாகத் தெரிய வரும். உடனே உள்ளுணர்வின் பேரில் ஒரு முடிவுக்கு வருவார்கள். அது சரியாகவே இருக்கும்.
மெரீனா
=========
பணக்கார வீட்டு இளைஞர்களின் செயலைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்டக் கதை. திலீப் என்ற இளைஞன் தன் காரில் நண்பர்களுடன் வந்து மெரீனா கடற்கரையில் குடித்துவிட்டு போதை மருந்தும் அடித்துக் கொண்டிருப்பார்கள். அங்கு டாடா சுமோ வில் வரும் இன்னொரு இளைஞனையும் பெண்ணையும் பார்த்துவிட்டு தங்கள் நண்பன் தான் ஒரு பெண்ணுடன் வந்து உள்ளதாக நினைத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பார்கள். ஆனால் வேறு ஆளான அந்த இளைஞன் இவர்களைத் தாக்க வருவான். திலீப் அவன் மண்டையில் டயர் லீவரால் அடித்து விடுவான். அவன் இறந்துவிட்டான் என்று இவர்கள் ஓடி வந்துவிடுவார்கள். கார் சாவியைத் தொலைத்து விடுவார்கள். வீட்டுக்கு சென்று சாவி தேடிக்கொண்டிருக்கையில் திலீப்பின் தந்தை வந்து நடந்ததெல்லாம் அறிந்து அவரே காரை கொண்டு வந்து விடுவார். மறுநாள் போலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து விசாரிப்பார். அங்கு ஒரு அனாதைப் பிணம் இருந்ததாகவும் உங்கள் கார் அங்கு இரவு அங்கு இருந்ததால் சந்தேகமெனவும் கூறுவார். இன்ஸ்பெக்டர் பணம் எதிர்பார்ப்பார். பணம் கொடுத்தால் பிரச்சினையை முடித்து விடுவதாக. பணம் கொடுக்கும் முன் திலீப்பின் தந்தை நண்பர் ஒருவரின் யோசனையால் கணேஷ் வசந்தின் உதவியை நாடுவார். பணம் கொடுத்தால் எல்லாம் சரியாக நடக்குமா என்பதை மட்டும் தெரிந்து கொள்ள. அடிபட்டவன் இறக்கவில்லையென கண்டறிவார்கள், மேலும் அனாதைப் பிணம் வேறு யாரோ என்றும் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இறுதியில் திலீபை கைது செய்ய அவர்களே இன்ஸ்பெக்டருக்கு யோசனை கூறுவார்கள்.
(
உயிர்மை வழங்கும் Sujatha’s Books List
http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=101
http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=101&pn=2
)
December 31, 2009
சுஜாதா கதைகள் 3
Posted by Bags under Books, Reading | குறிச்சொற்கள்: Ganesh-Vasanth, Sujatha |Leave a Comment
(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)
ஐந்தாவது அத்தியாயம்
———————————-
ஒரு திருமணமான பெண் தம்பு செட்டித் தெருவில் உள்ள கணேஷ் வசந்த் அலுவலகத்துக்கு ஒரு வார இதழுடன் வருகிறார். அந்த இதழில் வரும் தொடர்கதை தன்னைக் குறிப்பதாகச் சொல்கிறார். ஐந்தாவது அத்தியாயத்தின் போது தான் கொல்லப் படுவோமென பயந்து இவர்களிடம் வருவார். அவர் தன் கணவரின் மேல் சந்தேகப் படுவார்.வசந்த் கதையை எழுதுபவரை கண்டுபிடுப்பார். ஆனால் அவர் எங்கிருந்தோ கொரியரில் வரும் கதையை தட்டச்சு செய்து அனுப்புபவர் மட்டும்தான் எனத் தெரியும். ஆனால் கடைசியில் அந்த பெண் கணவரைக் கொன்று விடுவார்.தற்காப்புக்காகக் கொன்றதாக சொல்லுவார். குற்றவாளி யார் என்பதை சுஜாதா வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவார்.
ஆயிரத்தில் இருவர்
=============================
ஒரு (எத்திராஜ்) பெண்ணும் தந்தையும் கணேஷிடம் வருவார்கள். அவரின் மூத்த மகள் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசரை மணந்து ஒரு வருடம் முன்பு குஜராத் அகமதாபாத்தில் கேஸ் அடுப்பு வெடிப்பினால் இறந்து போய் இருப்பார். அது விபத்து இல்லையென்றும் மகளின் மாமனார், மாமியார் மற்றும் கணவருமே அவளைக் கொன்று விட்டனர் எனவும் கூறுவர். கூடவே மூத்த மகள் எழுதிய ஒரு கடிதத்தையும் காண்பிப்பார். கணேஷ் – வசந்த் தங்கள் வேலையைத் துவங்குவார்கள். ஐ.ஏ.எஸ் ஆபிசர் குடும்பத்தின் நடவடிக்கைகள் சந்தேகங்களை வலுப்படுத்தும். கணேஷும் வசந்தும் ஒருமுறைத் தாக்கப் படுவார்கள். ஆபிசர் இரண்டாவதாக மணப்பதாக இருக்கும் பெண் திடீரென தாக்கப் படுவார். அவர் தன்னை மிரட்டியது ஒரு தாத்தா என்று ஒரு சமயம் கூறுவார். திடிரென மாமனாரும் மருமகனும் ஒரே அணிக்கு வந்துவிடுவார்கள். தன் மருமகனை தவறாகப் புரிந்து கொண்டதாக இறந்த பெண்ணின் தந்தை கூறிவிடுவார். திடீரென முட்டாளாக்கப்பட்டதாக உணரும் கணேஷும் வசந்தும் இதன் பின்னணியை கண்டுபிடிப்பார்கள்.
கொலையரங்கம்
=================
இதுவும் சொத்துப் பிரச்சனையின் பின்னணியில் நடைபெறும் சில கொலை முயற்சிகள் மற்றும் கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யாரெனக் கண்டுபிடிப்பதுதான்.பீனா மற்றும் உத்தம் எனும் இருவருக்கும் பொதுவான சொத்திற்காக நடைபெறும் பிரச்சனை. இலங்கைப் போராளிகளின் வெடிகுண்டுடன் ஆரம்பிக்கும் கதை அதற்கு எந்த தொடர்புமில்லாதது. ஒரு மருத்துவமனையிலேயே பாதிக்கும் மேற்பட்டக் கதை நடக்கும்.கதை மருத்துவமனயிலேயே நிறைவு பெறும். முதலில் பீனா மீது சந்தேகம் வர, பின் அவரே கத்தியால் குத்தப் பட்டு மோசமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவார். அமெரிக்காவில் குடிபெயர்ந்துவிட்ட இன்னும் இருவருக்கு அந்த சொத்தில் பாத்யதை இருந்தும் அவர்கள் வேண்டாமென்று எழுதிக் கொடுத்துவிட்டிருப்பர். அதில் ஒருவர் இந்த சமயத்தில் வேலை சம்பந்தமாக சென்னை வர அவர் மேல் சந்தேகம் வர அவரும் கொலை செய்யப்படுவார். அனைத்தும் மறுபடி முதலில் இருந்து தொடங்கும். வசந்த்க்கு மருத்துவமனையில் கத்திக்குத்து என நீண்டு கணேஷ் இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பார்.
விபரீதக் கோட்பாடு
=====================
ஒரு சங்கம் செய்யும் ஒரு விபரீத செயலைக் கண்டுபிடிக்கும் கதை. தம்புசெட்டித் தெருவுக்கு ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும் கணேஷ் வசந்தின் அலுவலகத்திற்கு வருவார்கள். இருவரும் விரைவில் மணந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி திடிரெனக் காணாமல் போய் விடுகிறார். எனவே மனைவியைக் கண்டுபிடித்து விவாகரத்துப் பெற வேண்டும். இது அந்த இரண்டாவதாக மணந்து கொள்ளப் போகும் பெண்ணின் பிடிவாதத்தால் தான். கணேஷ் வசந்த் சரி என்று ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு போவார்கள். அங்கு முதல் மனைவியின் அறையில் சில ஃப்லிம் சுருள்களை கணேஷ் எடுத்து வைத்துக் கொள்வார், கூடவே ஒரு நோட்டிலிருந்து மேல் காகிதத் துண்டையும். அங்கு அந்த இளைஞனின் சித்தப்பா ஒருவரையும் சந்திக்க நேரிடும். சித்தப்பாவின் உதவியாளராகத்தான் இரண்டாவது பெண் அங்கு சேர்ந்து அந்த இளைஞனைக் காதலித்து மணமுடிக்க இருப்பார். அந்த ஃப்லிம் சுருள்கள் அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்த்தும். கணேஷ் முதல் மனைவி ஊட்டியில் இருப்பதைக் கண்டு பிடித்துவிடுவார். ஆனால் இவர்கள் அங்கு போய் சந்திக்கும் முன் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இருப்பார். இது நிறைய சந்தேகங்களை எழுப்பும். அவர் ஏன் ஊட்டி யாருக்கும் தெரியாமல் சென்றார். அந்த வீட்டில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடிப்பதே கதை.ஏதோ ஒரு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விபரீதத்தை அந்த சங்கம் நிறைவேற்றும் குற்றத்தை இறுதியில் கண்டுபிடிப்பார்கள்.
December 31, 2009
சுஜாதா கதைகள் 2
Posted by Bags under Reading, Tamil Literature | குறிச்சொற்கள்: Ganesh-Vasanth, Sujatha |Leave a Comment
(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)
சுஜாதாவின் கதைகள் சொல்லப் பட்ட விதத்தாலேயே வாசகர்களுக்கு ஒரு துள்ளலான மன நிலையை அளித்தன. வசந்தின் சொல்லி முடிக்கப்படா ஜோக்குகளும், கண் மறைவில் சொல்லப் பட்டு ,கேட்ட பெண்ணின் எதிர்வினைகள் மட்டுமென வாசகனுக்கு அறிமுகமான சில ஜோக்குகள் என பிரசித்தம். வசந்த் சில கதைகளில் பாரதி கவிதைகளையும் உபயோகத்திருப்பார். அப்துல் ரகுமான், மேத்தா போன்றொரின் கவிதைகளும் அடக்கம். கன்னம் வைப்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் வசந்த் செய்திருப்பார். ஒரு கதையில் அவரே இதைக் குறிப்பிட்டிருப்பார். சில முறை அந்த மாதிரி வேலைகளில் தாக்கப் பட்டிருப்பார். நைலான் கயிறில் கணேஷ் , வசந்தின் இம்மாதிரி வேலையைச் செய்து போலிஸிடம் அகப்பட்டு பின்பு சமாளித்து வெளிவருவார். ஏறக்குறைய எல்லாக் கதைகளின் துப்பறிதலிலும் Mistrust the Obvious என்பதே கணேஷின் அடிப்படையாக இருக்கும்.
நைலான் கயிறு, பாதி ராஜ்யம் மற்றும் ஒரு விபத்தின் அனாடமி போன்ற நாவல்களில் கணேஷ் மட்டுமிருப்பார்.
நிர்வாண நகரம்
———————-
சென்னை நகர இளைஞன் ஒருவன் கோபத்தாலும், இயலாமையாலும் சென்னையைப் பழி வாங்க வேண்டுமென நினைக்கிறான். சில கொலைகளைச் செய்யப் போவதாக வரிசையாக காவல்துறைக்குக் கடிதங்கள் எழுதுகிறான்.பெயர் சிவராஜன், திருவல்லிக்கேணி மேன்சன் வாசி. ஆனால் தான் கொல்லப் போகிறவர்களின் அடையாளங்களைத் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை.ஒவ்வொரு கடிதத்திற்குப் பிறகும் குறிப்பிட்டபடி ஒவ்வொருத்தராக கொல்லப் படுகிறார்கள். போலிஸ் இவனைத் தேடுகின்றனர். கணேஷ் வசந்த் இங்கிருந்துதான் வருகிறார்கள். அவர்களும் இவனைத் தேடுகின்றனர். இதற்கிடையில் இவனுக்கு காதலியுடன் கல்யாணம் நிச்சயமாகிறது.கல்யாணத்துக்கு முந்தைய நாள் கணேஷ் வசந்த் இவனைக் கண்டுபிடிக்கின்றனர். அங்கு ஒரு திருப்பத்துடன் கதை முடிகிறது.சிவராஜன் என்ற பெயரால் சில பிரச்சினைகள் வந்ததாக சுஜாதா ஒருமுறைக் குறிப்பிட்டுள்ளார்.
வஸந்த்! வஸந்த்!
————————-
கூழமந்தல் எனும் கிராமத்தில் உள்ள ராஜராஜன் கிணறு எனும் ஒரு பழங்கால கிணறு ஒன்றின் மர்மத்தில் ஆரம்பிக்கும் இந்த கதையில் வஸந்த் நிறைய கஷ்டபட்டிருப்பார். ஒருமுறை விஷம், இறுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு காப்பாற்றப் படுவார். ஒரு வரலாற்றுப் பேராசிரியரின் வரலாற்றுக் குறிப்புக் காணாமல் போவதில் இருந்து கதை ஆரம்பிக்கும். கிணற்றை ஒரு சமூக விரோதக் கும்பல் ஏதோ ஒரு காரணத்துக்காக உபயோகப் படுத்திக்கொள்கின்றனர். புதையலா, ஏதேனும் பழங்கால சிலையா எனத் தெரியாமல் கணேஷும் வஸந்தும் துப்பறிவார்கள். இதற்குள் சிலர் தாக்கப் படுவதும் ஒரு கொலையும் நடந்துவிடும். வஸந்த் வழக்கம் போல சைடில் ஒரு பெண்ணையும் மேத்தமேட்டிக்ஸ் பண்ணிக்கொண்டிருப்பார். இறுதியில் வசந்த் வில்லனிடம் மாட்டிக் கொண்டு துப்பாக்கியின் ஒரு தோட்டாவை உடம்பில் வாங்கிக் கொள்வார். கணேஷ் போலிஸுடுன் வந்து அவர்களைக் கைது செய்து வசந்தை காப்பாற்றி கதை நிறைவு பெறும்.
கொலையுதிர் காலம் (தொடர்ச்சி)
———————————————-
ஒரு பெண்ணின் சொத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போய் ஏற்படும் சவால்கள் நிரம்பியக் கதை. பேய், ஆவி என நிறுத்தாமல் வாசிக்கச் சொல்லும் ஒரு கதை. அந்த பெண்ணின் பரம்பரையில் ஒரு பெண் கொடுமைப் படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அது ஆவியாக உலவி அந்தப் பரம்பரையைப் பழி வாங்குவதாகவும் அந்த ஊரே நம்பிக் கொண்டிருக்கையில் வஸந்தும் கணேஷும் பேயைப் பார்க்கவும் செய்கின்றனர். கணேஷ் பேயிடம் அடியும் வாங்குகிறார். சொத்துக்கு இன்னொரு வாரிசான வியாசனின் மேல் சந்தேகமிருக்க அவரும் கொல்லப் படுகிறார். இறுதியில் திடிரென வரும் ராமபத்ரன் எனும் ஐ.ஐ.டி பேராசிரியர் தான் கொலையாளி எனக் கண்டுபிடிக்கின்றனர். கதை மிகமிக வேகமாக சென்று திடிரென முடிந்துபோகும்.பொதிகையில் 90 களில் நாடகமாகவும் வந்துள்ளதாகத் தெரிகிறது.
December 31, 2009
சுஜாதா கதைகள் 1
Posted by Bags under Books, Tamil Literature, Uncategorized, Writings | குறிச்சொற்கள்: Ganesh-Vasanth, Sujatha |Leave a Comment
(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)
யவனிகா
PublishedYear : 2002
சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
காந்தளூர் வசந்த குமாரன் கதையிலும் கூட கணேஷ் (கணேச பட்டர்) மற்றும் வசந்த் (வசந்த குமாரன்) வருகிறார்கள். மிகவும் ரசித்தேன்.
Over to Sujatha on this novel….
‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டைன், சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர்கள் விஸ்தாரமாக எழுதியிருக்கும் சரித்திரக் குறிப்புகளை ஆதரித்தவை.
வஸந்த் வஸந்த்
PublishedYear : Dec.2005
சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல் வஸந்த்! வஸந்த்! ஒரு பழங்காலக் கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும் குற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்படும் இந்நாவல் வாசகர்களின் யூகங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு திசைக்குத் திருப்பிவிட்டு எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது. சுஜாதாவின் அங்கதம் அதன் உச்சத்தைத் தொட்ட படைப்புகளில் இதுவும் ஒன்று.
கொலையுதிர் காலம்
PublishedYear : Dec.2007
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
சுஜாதா சொல்கிறார்:
(ரேவதி ரவீந்திரன் பேட்டி)
கேள்வி: கதைகளில் “கணேஷை” அறிமுகப்படுத்தி விட்டு நீங்கள் பெங்களூர் வந்தப்ப தான் “வசந்த்தை” அறிமுகப்படுத்திநீங்களா ?
கணேஷ் வந்து “நைலான் கயிறு” ல்ல வந்தான் ‘68ல்ல. வசந்த் வந்து “பிரியா” ல்ல தான் அறிமுகமானது. கணேஷ் முதல்லே “Solo”வா இருந்தான். ஆனா கதை எழுதறபோது Structureல்ல கஷ்டமா இருந்தது. கணேஷ் வந்து மனசில, நினைச்சுகிட்டு இருந்ததை சொல்ல Counterpoint character தேவையாய் இருந்தது. கணேஷ் வந்து matured; வசந்த் immatured childish ஆக இருக்கான். கூட்டங்களுக்கெல்லாம் போனா “வசந்த்தை” ஏன் அழைச்சிட்டு வரல்லேன்னு கேக்கறாங்க. பஸ்லே பார்த்தேன்னு… சொல்றாங்க. பெண்கள் நிறைய பேர் வசந்துக்கு கல்யாணம் பண்ணி வைக்காதீங்கன்னு எழுதறாங்க.. psychological ஆ அது ரொம்ப Interest ஆ இருந்தது. கல்யாணத்தை கலைச்சிடுங்க, வேண்டான்னு சொல்றாங்க. They feel they will lose something charming அது மட்டுமல்ல… One reader sent a telegram நான் அவனுக்கு வந்து என் bloodஐ கொடுக்க தயாரா இருக்கேன்னு” They believe that Vasanth exists. எல்லோருக்கும் அவன் character பிடித்து இருக்கு. அந்த மாதிரி இருக்க ஆசைப்படறாங்க.
December 31, 2009
கணேஷ் – வஸந்த் : ஒருவரா இல்லை இருவரா?
Posted by Bags under Books, Reading | குறிச்சொற்கள்: Ganesh-Vasanth, Sujatha |[6] Comments
(This post is from Srinivas Uppili)
(இது ஒரு மீள் பதிவு. டோண்டுவின் ஒரிஜினல் பதிவு இங்கே: http://dondu.blogspot.com/2004/11/blog-post_110005261711525005.html நன்றி டோண்டு அவர்களே!)
டோண்டு கூறுகிறார்:
சுஜாதாவின் கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் ஒருவரே என்பதில் எனக்கு ஐயமில்லை. அவர் கதைகளை ஆதி காலத்திலிருந்தே படித்து வருபவன். “நைலான் கயிறு” கணேஷ் இப்போதைய வசந்த் போலவே செயல் பட்டிருப்பார். “அனிதா இளம் மனைவி” யில் கராத்தே சண்டை கூடப் போட்டிருப்பார். காலப் போக்கில் வசந்த் தேவைப் பட்டிருக்கிறார்.
கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் ஒருவரே என்பதில் எனக்கு ஐயமில்லை.சுஜாதா வாசகர்களின் கருத்து என்ன?
பின் குறிப்பு:
காந்தளூர் வசந்த குமாரன் கதையிலும் கூட கணேஷ் (கணேச பட்டர்) மற்றும் வசந்த் (வசந்த குமாரன்) வருகிறார்கள். மிகவும் ரசித்தேன். முக்கியமாக வசந்த குமாரனின் சேட்டைகளை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
From this web site, you can purchase e-book versions of most of Sujatha’s novels/shortstories – for $3 apiece..
http://www.writersujatha.com
December 24, 2009
தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 2
தமிழ் நாடு அரசு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை காலி அறிக்கையில் பிற்சேர்க்கையாக ஆதி திராவிடர், பழங்குடியினர், மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் லிஸ்டை கொடுத்திருந்தார்கள். அதில் சில ஜாதிகளின் பெயர்கள் வினோதம்!
ஆதி திராவிடர் லிஸ்டில் பள்ளர், பறையர், அருந்ததியர், தேவேந்திர குலத்தார் மட்டும் இல்லை; கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னன் என்ற ஜாதியினர் ஆதி திராவிடராம். சேரமான் என்று ஆதி திராவிடர் ஜாதி இருக்கிறதாம்.
மன்னன் ஜாதியினர் பழங்குடிகள் லிஸ்டிலும் இடம் பெறுகிறார்கள். மலயாளி என்ற ஜாதியினர் பழங்குடியினராம். இவர்கள் மலையாளம் பேசுவார்களா, இல்லை மலைப்பகுதியில் வாழ்பவர்களா என்று தெரியவில்லை.
தென்னிந்திய திருச்சபை, லத்தீன் கத்தோலிக்கர்கள் பிற்படுத்தப்பட்டவராம். இது சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததாக இருக்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் லத்தீன் கத்தோலிக்க கிருஸ்துவ வண்ணார் என்று ஒரு உட்பிரிவு!
தங்கப் பதக்கம் திரைப்படம் பார்த்தபோது தமிழர்களில் யார் சௌத்திரி என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. ஆனால் சௌத்திரி என்பது பிற்படுத்தப்பட்ட ஒரு ஜாதியின் பெயராம்!
ஏனாதி நாயனார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏனாதி என்பது ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியின் பெயராம்! பெரிய புராணத்துக்கும் முந்தைய காலத்திலிருந்தே இந்த ஜாதி இருக்கிறது போலும்!
செட்டியார்களில் எத்தனை வகை? கற்பூர செட்டியார் (கற்பூரம் மட்டும் விற்றார்களா?), பன்னிரண்டாம் செட்டியார் (மிச்ச பதினொன்று செட்டியார் உட்பிரிவுகள் என்ன ஆயிற்று?), உத்தம செட்டியார், சாதுச் செட்டி, சுந்தரம் செட்டி (என்ன அழகான செட்டியார்கள் என்று பேர் வாங்கியவர்களா?) என்ற பெயர்கள் ஆச்சரியப்படுத்தின.
வேளாளர்களும் இப்படித்தான் – குடிகார வேளாளர் (அனேகமாக குடிபடை என்ற அர்த்தத்தில் இருக்கும் என்று ஒரு நிமிஷத்துக்கு அப்புறம்தான் தோன்றியது), பொடிகார வேளாளர் (பொடிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?) உட்பட பல பிரிவுகள்.
யோகீஸ்வரர் என்று ஒரு MBC பிரிவு. யோகிக்கே ஜாதியா?
யவனர் என்றால் வெளிநாட்டவர், குறிப்பாக கிரேக்க நாட்டவர் என்று யவன ராணி படித்த காலத்திலிருந்து நினைத்துக் கொண்டிருந்தேன். யவன என்று ஒரு ஜாதி இருக்கிறது! அந்த காலத்தில் இங்கே வந்து போன யவனர்களின் வாரிசுகளோ?
தக்காளி முஸ்லிம் என்று ஒரு உட்பிரிவு!
(ராமகிருஷ்ண)ஹெக்டே – (தேவே)கௌடா சண்டை கர்நாடகத்தில் பிரபலம். தமிழ்நாட்டில் ஹெக்டே, கௌடா இரண்டும் பிற்படுத்தப்பட்ட ஜாதி.
சொன்னால் நம்பமாட்டீர்கள், கேப்மாரிகள் என்று சீர்மரபினர் ஜாதி இருக்கிறது. (சீர்மரபினர் அந்த காலத்து “குற்றப் பரம்பரையின்” நீட்சியோ?) கேப்மாரி என்பது சென்னை வட்டாரத்தில் ஒரு வசவு. யாரோ ஒருவர் சொன்னார், கேனையன் என்பது தருமபுரி வட்டாரத்தில் ஒரு ஜாதி என்று! இந்த லிஸ்டில் காணவில்லை.
லிஸ்டில் ஆந்திர, கர்நாடக, கேரள மூலம் உள்ள ஜாதிகள் நிறைய தெரிகின்றன. செட்டியார், போயர், ஒட்டர், நாயக்கர் மட்டுமில்லை. ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் பல உட்பிரிவு. குறவர் என்றால் அதில் ஒரு இருபது முப்பது உட்பிரிவு, போயர், தேவர், வன்னியர் என்று எல்லா ஜாதியிலும் இப்படித்தான்.
சமூக ஆராய்ச்சி செய்ய நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் இருக்கும் ஜாதிப் பெயர்கள் மட்டுமே கூட ஒரு fertile ground ஆக இருக்கும். மன்னன் ஒரு காலத்தில் குறுநில மன்னனாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த மாநில எல்லைகளுக்கு அர்த்தமே இல்லை என்று தெரிகிறது. செட்டியார் தமிழர், செட்டி ஆந்திராவிலிருந்து வந்தவர்; அப்படி என்றால் செட்டிகள் ஆந்திராவுக்கு போய் செட்டிலான செட்டியார்களின் வாரிசுகளா? கர்நாடகப் பகுதியிலும் ஷெட்டி என்று ஒரு பிரிவு உண்டு. இதை எல்லாம் பற்றி ஆராய தமிழ் நாட்டுக்கு ஒரு டி.டி. கோசாம்பி வேண்டும்!
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜாதி
தொடர்புடைய சுட்டிகள்:
பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை காலி அறிக்கை (ஜாதிகள் லிஸ்ட் பிற்சேர்க்கை) – pdf download
December 23, 2009
வந்தேமாதரம்
Posted by RV under Indian culture, Indian Freedom Movement | குறிச்சொற்கள்: A.r. rahman, Jana gana mana, Sare jahan se accha, Vande mataram |[4] Comments
நெட்டில் இருப்பதை எல்லாம் படித்தே கொஞ்ச நாளாகிவிட்டது. வந்தேமாதரம் பற்றி எழுந்த சர்ச்சை இப்போதுதான் கண்ணில் பட்டது.
நான் ஒரு நாலைந்து வருஷம் கார்லி, செயின்ட் ஜோசஃப் பள்ளிகளில் படித்திருக்கிறேன். இவை எல்லாம் கிருஸ்துவ மத சார்புடைய பள்ளிகள். கார்லி பள்ளியில் காலை பிரேயர் எல்லாம் நடக்கும். தேவ பிதா எந்தன் மேய்ப்பனல்லோ, கேளுங்கள் தரப்படும் (நாங்களும் ஸ்கூல் இன்றைக்கு மூடிவிட வேண்டும் என்று கேட்டு கேட்டு பார்த்தோம்…) என்றெல்லாம் பாட்டு பாடுவோம். பரமண்டலத்தில் இருக்கும் பரம பிதாவை கூப்பிடுவோம். அதற்கு முன் படித்த அரசு பள்ளிகளிலும் சரஸ்வதி வாழ்த்து என்று யாராவது ஏதாவது (அபூர்வமாக) பாடுவார்கள். நந்தகுமார், சந்திரசேகர், ஸ்ரீனிவாசன், சுப்ரமண்யன், சமத் கான், ஜெசுமூர்த்தி எல்லாரும்தான் பாடுவோம், ஜெபிப்போம். எங்களுக்கும் சரி, எங்கள் பெற்றோர்களுக்கும் சரி தவறாகத் தெரிந்ததில்லை. அது ஸ்கூலின் வழிமுறை; ஏதோ ஒரு விதத்தில் கடவுளை வழிபடுகிறார்களா, ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம்தான் இருந்தது. (நாஸ்திகன் யாரையும் நான் காலேஜுக்கு முன்னால் பார்த்ததில்லை)
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பண்பாட்டுப் பின்புலம் இருக்கிறது. அந்த பண்பாட்டுப் பின்புலத்தில் மதத்துக்கு பெரும் பங்கு இருக்கிறது. வந்தேமாதரம் பாட்டு அப்படித்தான். விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் முழங்கிய மந்திரம் அது. வங்காள மொழி புரியவில்லை என்று தூத்துக்குடிக்காரர்கள் அதை ஒதுக்கவில்லை. குர்ஆனில் ஆழமான புலமை கொண்ட மௌலானா ஆசாத்தும் அதை முழங்கி இருப்பார். ஏன் ஜின்னாவே கூட வந்தே மாதரம் என்று கூவி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதில் சக்தியை புகழ்ந்து நாலு வார்த்தை இருக்கிறதே என்று யாரும் அதை தேசிய கீதம் ஆக்கவில்லை. (அதைக் கூட “எடிட்” செய்துவிட்டார்களாம்.) பிறகு என்ன ஆட்சேபனை? என் கருத்தில் ஜனகனமன தேசிய கீதம் ஆகியே இருக்கக் கூடாது. வந்தே மாதரத்துக்கு பதில் என்ற பேச்சே எழுந்திருக்கக் கூடாது. அப்படியே எழுந்திருந்தாலும் சாரே ஜஹான் சே அச்சா alternate தேசிய கீதம் ஆகி இருக்க வேண்டும்.
சரி இனி மேல் சரித்திரத்தை மாற்ற வேண்டிய தேவை இல்லை. ஜனகனமன தேசிய கீதமாகவும் வந்தே மாதரம் அல்டேர்ணடே தேசிய கீதம் ஆகவுமே இருந்துவிட்டுப் போகட்டும். அதையும் மாற்ற நினைப்பது தவறு. இதில் முஸ்லிம்கள் மனம் புண்படுகிறது என்று யாராவது ஒரு முல்லா சொன்னால் கண்டுகொள்ளாமல் போய்விட வேண்டும். முகமது நபிக்கு முந்தைய நபியான ஈசா நபி (நம்ம ஏசுனாதருங்க) சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் – Render unto Ceaser what is due to Ceaser! அப்புறம் பஞ்சாபிகள் ஏன் பஞ்சாபி மொழியில் தேசிய கீதம் இல்லை என்று வருத்தப்படுவார்கள்; கலைஞர் செம்மொழியில் ஏன் இல்லை என்று கேட்பார். அத்வானி ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே என்பார். (நானும் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்று நினைப்பவன்தான். ஆனால் அது சுற்றுச்சூழல் பாதிப்பு, மற்றும் ஆகும் செலவுக்கு ஏற்ற வரவு இருக்காது என்ற காரணங்களுக்காக; நான் ராமனை கும்பிடுபவந்தான். ஆனால் ராமனே நேரில் வந்து இது நான் கட்டிய பாலம் என்று சொன்னாலும் ராமன் கட்டிய பாலம் இடிக்கப்படுவதால் ஏற்படும் ஹிந்துக்களுக்கு ஏற்படும் intangible நஷ்டங்களை விட நாட்டுக்கு ஏற்படக் கூடிய tangible லாபங்களே – அப்படி லாபம் ஏதாவது இருந்தால் – முக்கியம் என்று நினைக்கிறேன்.) அரசு தன எல்லை எது என்று தெளிவாக புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஹெல்மட் போட வேண்டும் என்று சட்டம் போட்டால் சீக்கியர் தலைப்பாகை அணிய வேண்டும், அதனால் அவர்களுக்கு விதிவிலக்கு என்று மதத்தையும் அரசையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. அப்புறம் நாளைக்கு அம்மை ஊசி போட்டால் மாரியம்மனுக்கு தெய்வக் குத்தம் ஆகிவிடும் என்று நினைப்பவர்களிடம் என்ன சொல்வது?
வந்தே மாதரம் பாட்டு கீழே. (ஒரிஜினல், ஏ.ஆர். ரஹ்மான் version இல்லை)
December 22, 2009
டாக்டர் நாகசாமியின் புத்தகம் ஆன்லைனில்
Posted by RV under Tamil Culture, Tamil Nadu TemplesLeave a Comment
ரெகுலராக எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டேன். முயற்சியாவது செய்ய வேண்டாமா?
- அர்த்தநாரி சூரியன்
அர்த்தநாரீஸ்வரர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். பாதி ஆண் பாதி பெண் உருவம் – சிவன் தன் உடலில் ஒரு பாதியில் உமையாக காண்பிப்பார். (சங்கரன் கோவிலில் பாதி சிவன் பாதி நாராயணனாக சங்கரநாராயணன் என்ற கோலத்தில் பார்க்கலாம்.)
அர்த்தநாரி உருவத்தில் உள்ள சூரியனை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? நான் கேள்வி கூடப்பட்டதில்லை. சாதாரணமாக நவகிரகங்கள் நடுவில் நிற்கும் சூரியன்தான் பிரபலம். சூரியனுக்கு எனக்கு தெரிந்து கோனார்க்கில் புகழ் பெற்ற கோவில் இருக்கிறது; தமிழ் நாட்டில் சூரியனார் கோவில் என்ற சின்ன ஊரில் ஒரு கோவில் இருக்கிறது. இந்த லிங்கை பாருங்கள்!
இது டாக்டர் நாகசாமி எழுதிய தவம் செய்த தவம் என்ற புத்தகத்தில் ஒரு கட்டுரை. டாக்டர் நாகசாமியை பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். வரலாற்று அறிஞர் – குறிப்பாக கல்வெட்டுகள், நாணயங்கள், சோழர் கால கலை (சிற்பம், ஓவியம்) ஆகியவற்றில் உலக அளவில் மதிக்கப்படும் நிபுணர். அவர் எழுதிய தவம் செய்த தவம் புத்தகம் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது. இந்த புத்தகத்தில் பல அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள் பற்றி அவர் எழுதி இருக்கிறார். மேலே உள்ளது ஒரு சாம்பிள்தான்.
டாக்டர் நாகசாமி காஞ்சி மடத்தை – குறிப்பாக மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களை பெரிதும் மதிப்பவர். இவரே ஒரு பெரிய ஸ்காலர். இவருக்கு சில விஷயங்களை சந்திரசேகரர் விளக்கி இருக்கிறாராம். திடீரென்று அந்த புத்தகத்தை போய்ப் பார், இந்த கல்வெட்டைப் பார் என்றெல்லாம் டாக்டர் நாகசாமியிடம் சொல்வாராம். எனக்கு காஞ்சி மடத்தை பற்றி என்ன நினைப்பு என்று நிறைய எழுதிவிட்டேன். ஒரு மடாதிபதிக்கு இந்த மாதிரி வரலாறு, தத்துவம், புத்தகங்கள் ஆகிய விஷயங்களை பற்றி ஆராய வாய்ப்பு அதிகம் என்று எழுதி இருந்தேன், அதை சந்திரசேகரர் மிக அருமையாக செய்திருக்கிறார் போல இருக்கிறது.
கல்வெட்டு, வரலாறு மாதிரி விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படித்துப் பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கங்கள்: இந்திய வரலாறு, படிப்பு, ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
டாக்டர் நாகசாமி, அவரது எழுத்துக்கள் நிறைந்த தமிழ் ஆர்ட்ஸ் அகாடமி, அவர் பதித்த வீரை கவிராஜ பண்டிதரின் தமிழ் ஸௌந்தர்ய லஹரி
அதர்வ வேதம் பற்றி மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சுவாமிகள்
அபிவாதயே – பிராமணர்களின் சுய அறிமுகம் பற்றி மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சுவாமிகள்
காஞ்சி மடம் பற்றி என் கருத்து
மடம் எல்லாம் வேஸ்டா?
