நவம்பர் 2009


புதுப்பிக்கப்பட்டது. புதிய வரிகள் நீல நிறத்தில்.

  1. வாதாபி ஜீர்னோ பவ என்று வாதாபியை ஜீரணித்தவர் பிராமண அகத்தியர். அப்புறம் எப்போது, ஏன், பிராமணர்கள் வெஜிடேரியன்களாக மாறினார்கள்?
    ஒரு காலத்தில் பிராமணர்கள் மாமிசம் சாப்பிட்டதாகவும், புத்த, ஜைன தாக்கத்தால் வெஜிடேரியனிசம் பரவியதாகவும் வித்தகனும் மணியும் சொல்கிறார்கள். யாக்ஞவல்க்யர் மாமிசம் சாப்பிட்டதைப் பற்றி எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறது.
  2. தசாவதாரம், தசாவதாரம் என்கிறார்கள். அப்புறம் இந்த ஹயக்ரீவர், மோகினி, பிருது, ரிஷப தேவர், புத்தர் எல்லாம் என்ன கணக்கு? அதுவும் மோகினி கூர்ம அவதாரக் கதையிலேயே குறிப்பிடப் படுகிறாள்! ஆனாலும் தசாவதாரம்தான், ஏன்?
    மணியும் வித்தகனும் புத்த அவதாரம் புத்த மதத்தை ஹிந்து மதத்துக்குள் இழுத்துக் கொள்ள நடந்த முயற்சி என்கிறார்கள். ரிஷப தேவரும் (முதல் தீர்த்தங்கரர்) ஜைன மதத்தை இழுக்க நடந்த முயற்சி என்கிறார்கள். பொருந்துகிறது. ஆனால் மோகினி, ஹயக்ரீவர் எல்லாம் எந்த மதத்தையும் இழுக்க நடந்த முயற்சியாக இருக்க முடியாது இல்லையா? அதுவும் கூர்மாவதாரத்தில் விவரிக்கப்படும் மோகினி அவதாரத்தை எப்படி கணக்கில் எடுக்கவில்லை?
    ராகவன் 18 அவதாரங்கள் என்கிறார், நர நாராயணர் இரண்டு என்று வைத்துக் கொள்ளலாம். அப்படியும் ஒன்று வரவில்லை.
  3. சுக்ராச்சாரியார் அசுரர்களில் பர்மனென்ட் குல குரு. நவகிரகங்களில் ஒருவர். அவருக்கு மட்டும் அமிர்தம் எங்கிருந்து கிடைத்தது? அசுரர்கள் எல்லாம் சாகிறார்கள் என்றால் அவருக்கு மட்டும் ஏன் சாவே இல்லை?
    சுக்ராச்சாரியார் சஞ்சீவினி மந்திரம் தெரிந்தவர் ஆயிற்றே என்கிறார் ராகவன். அது தெரிந்தால் இறந்தவரை உயிர்ப்பிக்கலாம்தான். ஆனால் தான் இறந்துவிட்டால் தன்னைத் தானே பிழைக்க வைக்க முடியாது. அதனால்தான் கசனுக்கு அவர் மந்திரத்தை சொல்லித் தரும்படி ஆயிற்று. அசுரர்களை விட்டு அவர் மட்டும் அமிர்தம் குடித்திருக்கிறார்.
    மணி நோவா, வெள்ளம் பற்றி என்னவோ சொல்கிறார், என்ன என்று புரியவில்லை.
  4. கைகேயி இரண்டு வரம் கேட்கிறாள். ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள என்று ஒன்று. தாழிரும் சடைகள் தாங்கி ராமன் காட்டுக்கு 14 வருஷம் போக வேண்டும் என்று ஒன்று. அது என்ன 14 வருஷம்? ஒரேயடியாக போக சொல்ல வேண்டியதுதானே? அதுதானே பரதனுக்கு safety?
    அந்தக் காலத்தில் 14 வருஷம் என்றால் ஒரு phase முடிந்துவிட்டது என்று ராகவனும் மணியும் சொல்கிறார்கள். அந்த மாதிரி ஏதாவது இருக்க வேண்டும்.
  5. வால்மீகி வேடர். முதலில் வழிப்பறி செய்துகொண்டிருந்தார். அவர் தவம் செய்ய முடிகிறது, ரிஷி ஆக முடிகிறது, ஒரு குழந்தையையே (குசன்) தன தவ பலத்தால் உருவாக்க முடிகிறது. உத்தர காண்டத்தில் அவர் காரக்டருக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆனால் ராமன் சம்பூகன் என்ற சூத்திரனை தவம் செய்ததற்காக கொன்றானாம். வால்மீகியை மட்டும் ஏன் விட்டுவிட்டான்? சம்பூகன் பிற்காலத்திய இடைச்செருகலா? (குரங்கு ஹனுமான் கூட வேதம், சாஸ்திரம் தெரிந்தவர். ஒரு வேளை பிராமணக் குரங்கோ?) குகனோடும் ஐவரான ராமன், குரங்கு சுக்ரீவனோடு அறுவரான ராமன், அரக்கன் விபீஷனனோடு எழுவரான ராமன், ஒரு வண்ணான் சொன்னதற்காக மனைவியை கைவிட்ட ராமன், திடிரென்று தன பிரஜை ஒருவனை கொன்றே விடுகிறான்!
    மணி சம்பூகனால் ராமனுக்கு லாபமில்லை, அதனால்தான் சம்பூகனை மட்டும் கொன்றான் என்று சொல்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வண்ணானால் என்ன லாபம்? சூத்திரர்கள் ஆரிய சமூகத்தில் ஒரு அங்கம். வேடர்கள் (குகன், வால்மீகி மாதிரி) சமூகத்தில் fringe -இல்தான் இருக்கிறார்கள். ஏகலைவன், மச்சகந்தி போன்றவர்களை இங்கே நினைத்துப் பார்க்கலாம். குரங்குகள் சமூகத்தில் பங்கே இல்லாதவர்கள். அவர்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் – இல்லை வரவேற்கும் ராமன், தன பிரஜையை மட்டும் கொன்றான் என்பது ராமனின் காரக்டருக்கு முரணாகத்தான் இருக்கிறது. இது பிற்சேர்க்கையாகத்தான் இருக்க வேண்டும். ராகவன், உத்தர காண்டம் கம்பன் விட்டுவிட்டது. சம்பூகன் கதை வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டத்தில் வருகிறது என்று சொல்கிறார்கள்.
    மணி, வியாசர் பிறந்த உடனே தவம் செய்ய போய்விடுகிறார். வழிப்பறி எல்லாம் வால்மீகிதான்.
  6. பரசுராமர் க்ஷத்ரிய குல விரோதி. கர்ணனை க்ஷதிர்யன் என்று இனம் கண்டு சபிக்கிறார். பிறகு பீஷ்மருக்கு மட்டும் எப்படி ஆசிரியராக ஒத்துக் கொண்டார்?
    ராகவன் கர்ணன் பொய் சொன்னதால் சபிக்கப்பட்டான் என்கிறார். கர்ணன் பொய் சொன்னதற்கு காரணம் என்ன? பரசுராமன் பிராமணர்களுக்கு (பிராமணர்களுக்கு வில் வித்தை எதற்கு என்று அப்புறமாக ரூம் போட்டு யோசிப்போம்) மட்டும்தான் சொல்லித் தருவேன் என்று ஒரு நியதி வைத்துக் கொண்டிருந்தார். (துரோணருக்கும் அவர்தான் குரு என்று நினைவு) பீஷ்மருக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு கொடுத்தார்?
    மணி என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.
  7. அஸ்வத்தாமா, மகாபலி, வேத வியாசர், ஹனுமான், விபீஷணன், கிருபர், பரசுராமர் ஏழு பேரும் சிரஞ்சீவிகள். (இந்த ஜாம்பவான், மார்க்கண்டேயன் எல்லாம் ஏன் லிஸ்டில் இல்லை என்று தெரியவில்லை). அஸ்வத்தாமாவுக்கு சாவு இல்லை என்பது சாபம். மார்க்கண்டேயனுக்கு வரம். மிச்ச பேருக்கு எப்படி?
  8. மனு நீதி சோழன் கன்றுக்குட்டியின் உயிருக்கு பதில் தன மகனின் உயிரைக் கொடுத்தானாம். ஒரு மிருகத்தை மனிதனுக்கு சமமாக நடத்துவதுதான் மனுநீதி என்றால் மனு ஸ்மிருதியில் உள்ள ஜாதி கோட்பாடு எங்கிருந்து வந்தது?
    மணி ஆர்வி என்கிறார், தி.மு.க. என்கிறார். என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.
    மனு அந்தக் காலத்தில் ஒரு legendary lawgiver ஆகவே இருந்திருக்க வேண்டும். யாராவது நல்ல நீதிமான் என்றால் பாருடா மனு மாதிரி நீதி வழங்குகிறான் என்று பேசி இருக்கலாம். மனு சட்டத்தை தொகுத்தார் என்பது அவர் தொகுத்த சட்டம் என்ன என்பதை விட அழுத்தமாக மக்கள் மனதில் பதிந்திருக்கலாம். காந்தியம் என்ன என்று தெரியாமலே காந்தியை மதிப்பவர்கள் மாதிரி…
  9. ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடிய அவ்வையார் எப்படி குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் பாடுகிறார்? வேறு வேறு அவ்வையாரா?
    மணி இரட்டை நிலை என்று சுலபமாக முடித்துவிட்டார். எல்லாவற்றுக்கும் இதையே சொல்லிவிடலாமே? ராமன் ஏன் வால்மீகியை விட்டுவிட்டான்? இரட்டை நிலை. பரசுராமர் ஏன் பீஷ்மருக்கு குருவானார்? இரட்டை நிலை. கைகேயி ராமனை ஏன் 14 வருஷம் மட்டும் காட்டுக்கு அனுப்பினாள்? இரட்டை நிலை. விஷயம் முடிந்துவிட்டது.
    குலத்தளவே ஆகுமாம் குணம் என்று பாடியவர் வேறு அவ்வையார் என்று தோன்றுகிறது.
    விக்கி அவ்வையார் என்று மூன்று பேர் இருந்ததாக சொல்கிறது. அபிதான சிந்தாமணியும் அப்படித்தான் சொல்கிறதாம்.
  10. தேசிங்கு என்று ஒரு பேரா? சரி ஏதோ ஒரு வடநாட்டு சிங் இங்கே வந்து நம் மக்கள் வாயில் பேர் நுழையாததால் தேசிங்காக மாறிவிட்டார் போல. அவருடைய நிஜமான பேர் என்ன? எனக்கு தோன்றுவது தேஜ் சிங். யாருக்காவது தெரியுமா?
    விக்கிபீடியாவில் தேஜ் சிங் என்று போட்டிருக்கிறது. செஞ்சி பற்றிய குறிப்பைப் பாருங்கள்.
  11. குரோம்பேட்டை புரிகிறது. வண்ணாரப்பேட்டை புரிகிறது. ராயப்பேட்டை புரிகிறது. அது என்ன சைதாப்பேட்டை?
    மணி சைதாப்பேட்டை என்பது சையதுகான்பேட்டை என்பதின் திரிபு என்று கூறுகிறார். விக்கி குறிப்பு இது சையது ஷா என்பவரின் பேரால் அழைக்கப்பட்டது என்று சொல்கிறது. மேற்கு ஜோன்ஸ் ரோட்டில் அந்த காலத்தில் ஜெயராஜ் தியேட்டர் இருந்த இடத்தை தாண்டினால் வரும் அடுத்த ஊர் ஜாஃபார்கான்பேட்டை.

தொடர்புடைய பதிவுகள்:
அவ்வையார் பற்றி விக்கி
செஞ்சிக் கோட்டை பற்றி விக்கி
சைதாப்பேட்டை பற்றி விக்கி

ரொம்ப சீரியசாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு மாறுதலுக்காக:

இரண்டு நாட்களுக்கு முன் என் பெரிய பெண் ஸ்ரேயாவை அவள் வகுப்புத் தோழியின் பிறந்த நாள் பார்ட்டிக்காக தோழி வீட்டில் கொண்டு விடப்போனேன். கூடவே சின்னப் பெண் ஆறு வயது க்ரியாவும் வந்தாள்.

பெரியவளுக்கு ஒரே குஷி. க்ரியா பார்த்துக் கொண்டே இருந்தாள். ஸ்ரேயாவை விட்டதும் என்னிடம் கேட்டாள்.
க்ரியா: Daddy, why is she so happy?
நான்: அவ பார்ட்டிக்கு போறா இல்லே? அப்புறம் நீ வேற அவளை இன்னிக்கு bother பண்ண முடியாது…
க்ரியா: OK, let us bother her double the usual when she comes back in the evening.
நான்: சரிடா குட்டி
க்ரியா: After we go home, I am going to mess up her bed!
நான்: No no. அப்புறம் அம்மா உன்னைத் திட்டுவா!
க்ரியா: OK daddy, you mess up her bed!

படங்களை பற்றி:

  1. ஜாலியாக வீணை வாசிக்கும் பிள்ளையார் – பிள்ளையார் உட்கார்ந்திருக்கும் விதத்தில் குஷி தெரிகிறது.
  2. காலை மடக்கி இருக்கும் பாரத மாதா – நல்ல ஐடியா, ஆனால் என் கண்ணில் நல்ல ஆர்ட் இல்லை.
  3. பிள்ளையார் தலை மேல் நிர்வாணமாக உட்கார்ந்திருக்கும் லக்ஷ்மி, மற்றும் நிர்வாண சரஸ்வதி – நல்ல craft.
  4. புலி மேல் துர்கை – Bad taste
  5. எம்.எஃப். ஹுசேன்
  6. டாக்டர் ருத்ரன் வரைந்த நிர்வாண சரஸ்வதி – டாக்டர் ஒரு ஹிந்து.

கொஞ்ச நேரத்துக்கு முன் டோண்டு எம்.எஃப். ஹுசெனைப் பற்றி எழுதி இருந்ததைப் படித்தேன். சுருக்கமாக என் எண்ணங்களை எழுத முடியாததால் இங்கே ஒரு பதிவாகவே எழுதுகிறேன்.

எனக்கு ஓவியங்கள் பிடிக்கும். ஆனால் பல பிரபல ஓவியங்களில் என்ன இருக்கிறது என்று புரிவதில்லை. புகழ் பெற்ற மோனா லிசா ஓவியத்தை நான் லூவர் மியூசியத்தில் நேராகவே பார்த்திருக்கிறேன். இது என்ன பிரமாதம் என்று புரிந்ததே இல்லை. ஹுசேனின் ஓவியங்களைப் பற்றி எனக்கு அப்படி ஒன்றும் பிரமாதமான அபிப்ராயம் இல்லை. சில ஓவியங்களில் நல்ல தொழில் திறமை (craft ) தெரிகிறது, அவ்வளவுதான். எனக்கு பிடித்த இந்திய ஓவியர்கள் அம்ரிதா ஷெர்கில், ஜாமினி ராய்.

ஆனால் ஹுசேன் சரஸ்வதியையும் துர்கையையும் நிர்வாணமாக வரைந்ததில் எந்த தவறும் இல்லை என்பது என் உறுதியான கருத்து. சரஸ்வதி, துர்க்கை, கிருஷ்ணன், ஏசு, முகமது நபி யாரை வேண்டுமானாலும் நிர்வாணமாக வரைய அவருக்கு பூரண உரிமை உண்டு. எப்படி வேண்டுமென்றாலும் வரையலாம், அது அவரது கருத்துரிமை. தஸ்லிமா நசரீன், சாலமன் ரஷ்டி எல்லாருக்கும் அந்த கருத்துரிமை உண்டு. ஹுசேனின் கருத்துரிமையை பறித்துவிட்டு ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்ததை எப்படி குறை சொல்வது? தஸ்லிமாவுக்கு நிகழும் அநீதிகளை எந்த முகத்தை வைத்துக் கொண்டு எதிர்ப்பது? தஸ்லிமாவை ஆதரித்து பேசுபவர்கள் ஹுசேனை எதிர்க்கும் அதிசயமும், ஹுசேனை ஆதரித்து பேசுபவர்கள் தஸ்லிமாவை எதிர்க்கும் அதிசயமும் இந்த நாட்டில் ஒரு சேர நடக்கிறது!

சரஸ்வதியை இழிவுபடுத்துகிறார் ஹுசேன் என்று பேசும் ஹிந்துக்களின் மன நிலை எனக்கு புரிவதே இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். நான் வணங்கும் அலகிலா விளையாட்டுடையானை, ராமனை, கிருஷ்ணனை, சக்தியை இழிவுபடுத்தும் ஆற்றல் உள்ளவரா இந்த ஹுசேன்? இல்லை எல்லாம் வல்ல சரஸ்வதிக்கு நாலு பாடிகார்ட் தேவையா? இப்படி உணர்பவர்கள் எல்லாம் உண்மையிலேயே கடவுள் சர்வ சக்தி படைத்தவர் என்று நினைக்கிறார்களா? போயும் போயும் இந்த ஹுசேனா சிவனை கேவலப்படுத்த முடியும்?

ஹுசேனின் சில சர்ச்சைக்குரிய படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். அவரது கோட்டோவியங்களில் நல்ல craft தெரிகிறது. சரஸ்வதியின் படம் எந்த விதத்திலும் சரஸ்வதியை கேவலப்படுத்தவில்லை என்பது என் உறுதியான கருத்து. பாரத மாதா படம் நல்ல ஐடியா. காலை மடித்து உட்கார்ந்திருக்கும் பெண் இந்தியாவின் தெற்குப் பகுதியுடனும், மார்புகள் குஜராத்துடனும் நன்றாக பொருந்துகிறது. ஆனால் நல்ல கலை என்று சொல்ல மாட்டேன். துர்கையின் படம் is in bad taste. But bad taste is not a crime!

அடுத்தவர் செய்கை என் மனதை புண்படுத்துகிறது, அதனால் அது தடை செய்யப்பட வேண்டும் என்று சொல்வது மிக தவறான அணுகுமுறை. டோண்டு ராகவன் பூணூல் அணிவது சிலர் மனதை புண்படுத்துகிறது என்பதற்காக அவர் பூணூல் அணிவதை நிறுத்த வேண்டுமா? இல்லை என்றுதான் நானும் அவரும் கருதுகிறோம். அப்புறம் ஹுசேனின் படங்கள் டோண்டுவின் மனதை புண்படுத்துகின்றன என்பதற்காக ஹுசேன் மட்டும் ஏன் இப்படி படம் வரைவதை நிறுத்த வேண்டும்? உயிருள்ளவர்களை கேவலப்படுத்தினால் அவர்களை சட்டம் பாதுகாக்கும்.

ஹுசேனுக்கு ஏசுவை இப்படி வரைய தைரியம் இல்லை, சீவி விடுவார்கள், முகமது நபியை இப்படி வரைந்தால் ஃபட்வாதான், அதனால் அவர் அப்படி வரைவதில்லை என்றுதான் நிறைய பேர் கோபப்படுகிறார்கள். அப்படி நினைப்பவர்கள் செய்ய வேண்டியது தெளிவு – சீவி விடுவார்கள் ஃபட்வா போன்ற நிலையை மாற்றுங்கள். போலி மத சார்பின்மை பேசிக் கொண்டு யாராவது வந்தால் – ராமர் எந்த ஆர்கிடெக்சர் காலேஜில் படித்தார் என்று கேட்டுக் கொண்டே ரம்ஜான் கஞ்சி குடிப்பவர்களை – புறக்கணியுங்கள். அதை விட்டுவிட்டு ஹுசேன் மேல் கேஸ் போட வேண்டும் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அவனுக்கு ஜுரம் வந்தபோது ஊசி போடவில்லை, அதனால் எனக்கு ஜுரம் வரும்போது எனக்கும் போடக்கூடாது என்று குழந்தைகள் அடித்துக் கொள்வது மாதிரி இருக்கிறது!

இந்திய அரசு இந்த ஒரு விஷயத்தில்தான் consistent ஆக நடந்து கொள்கிறது, ஹுசேனின் மேல் கேஸ் போடுகிறது, டாவின்சி கோட், Midnight’s Children புத்தகத்தை தடை செய்கிறது!

புதிதாக சேர்க்கப்பட்டது.
டாக்டர் ருத்ரன் (இவருடன்தான் எனக்கு ஜெநோடைப் பற்றி தகராறு.) ஒரு ஹிந்து. தன்னுடைய வலைத்தளத்தில் இப்போது ஹுசேன் மாதிரி ஒரு சரஸ்வதி படம் வரைந்திருக்கிறார். குறும்புக்காரர்!

தொடர்புடைய பதிவுகள், சுட்டிகள்
எம்.எஃப். ஹுசேன் பற்றிய விக்கி குறிப்பு
டோண்டு ராகவனின் பதிவு
ஜெயமோகனின் பதிவு, அவருக்கு வந்த எதிர்வினைகள் பகுதி 1, பகுதி 2, பகுதி 3
தமிழ் ஹிந்து தளத்தில் ஜெயமோகனுக்கு எதிர்வினை
டாக்டர் ருத்ரனின் பதிவு

அம்ரிதா ஷெர்கில் பற்றிய விக்கி குறிப்பு, அவரது சில ஓவியங்கள்
ஜாமினி ராய் பற்றிய விக்கி குறிப்பு, அவரது சில ஓவியங்கள்

இணையத்தில் அதிகமாக திட்டு வாங்குபவர்களில் காஞ்சி மடத்தின் இன்றைய தலைவரான ஜயேந்திர சரஸ்வதியும் ஒருவர். நான் ஒரு அய்யர் குடும்பத்தில் பிறந்தவன். அய்யர்களில் பலரும் காஞ்சி சங்கர மடத்தை மதிப்பவர்கள். அதனால் எனக்கு ஒரு insider perspective இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு இந்த மடம் கிடம் ஆகியவற்றில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. நான் எழுதுவது என் சொந்த அனுபவம், perspective. இதை படித்தால் உங்கள் மனம் புண்படலாம். என் அம்மா அப்பா படித்தால் ஏண்டா இப்படி எழுதினே என்று கோபப்படலாம். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை, என் கருத்து எனக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த காலத்தில் வேர்க்கடலை கட்டி வந்த பேப்பரை கூட படிப்பேன். காஞ்சி மடத்தை பற்றிய ஐதீகங்களையும் ஆதி சங்கரர் ஐதீகங்களையும் ஓரளவு படித்திருக்கிறேன். மடத்திலேயே சில புத்தகங்கள் கிடைத்தன என்று நினைவு. காஞ்சி மடம் என்பது கும்பகோணத்தில் சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையாக இருந்தது, பிறகு காஞ்சிபுரத்தில் தனி மடமாக மாறிவிட்டது என்பது காஞ்சி மட ஐதீகங்களிலேயே இலைமறைகாயாக தெரிகிறது. ஆனால் official காஞ்சி மடத்து ஐதீகமோ, இது ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஐந்தாவது மடம் என்கிறது. ஆதி சங்கரர் முதல் மடாதிபதியாக இருந்ததாகவும் சுரேஸ்வரர் இரண்டாவாது மடாதிபதி என்றும் official காஞ்சி மடாதிபதிகள் லிஸ்டில் இருக்கிறது. சுரேஸ்வரர்தான் சிருங்கேரி மடத்தை நிறுவியர் என்பது எல்லா சங்கர மடங்களும், ஆதி சங்கரர் ஐதீகங்களும் தெளிவாக சொல்லும் விஷயம். ஒரு பொய்யின் மீது ஒரு ஆன்மீக மடம் எழுப்பப்பட்டிருப்பது எனக்கு சிறு வயதிலேயே பெரிய உறுத்தலாக இருந்தது. கிளை மடமாக இருந்தோம், இப்போது தனியாக பிரிந்துவிட்டோம் என்று வெளிப்படையாக ஒத்துக் கொண்டால் மடத்தின் மகிமை குறைந்துவிடுமா? அப்படி குறைந்துவிடுமென்றால் மடத்துக்கு உண்மையிலேயே ஏதாவது மகிமை இருக்கிறதா?

காஞ்சி மடத்தை பலரும் மதிக்க முக்கிய காரணம் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள்தான். காந்தி வந்து அவரை சந்தித்ததை, அவர் யாரோ ஒரு வெள்ளைக்காரருக்கு திருவண்ணாமலை ரமணரை கை காட்டியதை, சிவாஜி திருவருட்செல்வரில் அப்பருக்கு அவரை ரோல் மாடலாக வைத்துக் கொண்டதை, ஜெயகாந்தன் எழுதிய ஜய ஜய சங்கர சீரிஸ் புத்தகங்கள எல்லாம் பெருமையாக பேசுவார்கள். அவரை நான் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். என் சிறு வயதில் காஞ்சிபுரத்துக்கு பக்கத்தில் உள்ள கலவையோ என்னவோ ஒரு கிராமத்தில் இருந்தார் என்று நினைவு. அங்கே ஒரு முறை போயிருக்கிறேன். பெரிய இடம், அவரைப் பார்க்க இரண்டு மூன்று மணி நேரம் ஆனது. ஆனால் அங்கே சும்மா சுற்றி நடந்து வந்து பொழுது போய்விட்டது. அவர் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுவார், அதுவும் உப்பு இல்லாமல் வாழைப்பூவும் சாதமும் கலந்து ஒரு கவளம் இரு கவளம்தான் சாப்பிடுவார் என்று சொன்னார்கள். அட சுகமாக வாழும் சந்நியாசி இல்லை போலிருக்கிறதே என்று தோன்றியது.

அவர் ஒரு முறை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது எனக்கு ஒரு 13-14 வயது இருக்கலாம். என்னுடைய விதவை உறவினர் ஒருவர் அவரை பார்க்க கிளம்பவில்லை. ஏனென்றால் அவர் தலை மழிக்காத விதவையை பார்த்தால் அன்று சாப்பிட மாட்டாராம். அவர் சாப்பிடும் ஒரு கவளம் இரு கவளத்தையும் நான் ஏன் கெடுக்க வேண்டும் என்று அவர் வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார். விதவை என்றால் தலையை மழித்துக் கொள்ளத்தான் வேண்டுமா, இது என்னடா கொடுமை என்றுதான் தோன்றியது. அதுவும் அந்த வயதுதான் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் வயது, தனக்குத்தான் எல்லாம் தெரியும், இந்த பெரிசுகள் எல்லாம் நாட்டைக் கெடுக்கின்றன என்று ஒரு நினைப்பு இருக்கும் வயது. வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது.

அப்புறம் அவருக்கு வயதாக வயதாக senile ஆகிவிட்டார், அதை யாரும் கண்டும் காணாதது மாதிரி இருக்கிறார்கள் என்று தோன்றியது. தீபாவளி மலரில் அவர் படம் போடுவார்கள். ஒரு தீபாவளி மலரில் அவர் குத்துக்காலிட்டு அடி தொடை தெரிய உட்கார்ந்திருந்தார். தீபாவளியும் அதுவுமாக திவ்ய தரிசனம். வெளியிலும் வரவே மாட்டாராம். வெளியில் வந்தால் உண்மை தெரிந்துவிடப் போகிறது என்று அவரை உள்ளேயே வைத்திருந்தார்கள் என்று எனக்கு தோன்றியது. அவர் மறைந்ததும் அவரை கடவுள் என்று கொண்டாடுகிறார்கள். ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் ஆழ்வார் என்று ஒரு காரக்டர் வருவார். அவர் ஒரு icon, senile ஆனாலும் அவரை வைத்து ஷோ காட்டுவார்கள். அந்த இடத்தை படித்தபோது இவர் ஞாபகம் வந்தது.

உண்மையில் பல அய்யர்கள் அவரை கொண்டாடுவது ஜெயேந்திரர் மீது உள்ள அதிருப்தியால்தான் என்று நினைக்கிறேன். ஜெயேந்திரர் மடத்தை விட்டு ஓடிய போதே இந்த அதிருப்தி தொடங்கிவிட்டது. அரசியல் தலையீடு, மடத்தை புது வழிகளில் – மற்ற ஜாதியினரை போய் பார்ப்பது, கல்வி, சங்கரா யூனிவர்சிடி எல்லாம் இந்த அதிருப்தியை அதிகரித்தது. அப்புறம் கொலை கேஸ், பெண்கள் உறவு என்றெல்லாம் நியூஸ் வர ஆரம்பித்ததும் எல்லாருக்கும் அருவருப்பு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயேந்திரர் சேரிகளுக்கு போனதும், காலேஜ் திறந்ததும், மடத்தின் சொத்துகளை வைத்து, சமூகத்துக்கு ஏதோ செய்ய நினைத்ததும் எனக்கு பிடித்திருந்தது. ஏதோ கொஞ்சமாவது உருப்படியாக ஏதோ செய்கிறார் என்று தோன்றியது. இவரது முயற்சிகளுக்கு பழமையில் ஊறிய பெரியவர் முட்டுக்கட்டை போட்டிருப்பார், அதனால்தான் தாங்க முடியாமல் ஓடியிருப்பார் என்று தோன்றியது. ஆனால் அது அரசியலில் இலைமறைகாயாக தலையிடுதல், ராம ஜன்ம பூமிக்கு ஆதரவு என்று மாற ஆரம்பித்தது. கடைசியில் பார்த்தால் கொலை கேஸ், பெண்கள் என்று முடிந்திருக்கிறது.

ஜெயேந்திரர் மாசு மறுவற்ற உத்தமர் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நெருப்பிலாமல் புகையாது என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு மடாதிபதி, அதுவும் ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட ஒரு மடத்தின் அதிபதி என்று சொல்லிக் கொள்பவர் கொலை எல்லாம் செய்ய வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது. ஜெயலலிதாவுடன் ஏதோ தகராறு, அதனால்தான் அவரை பழி வாங்கவே ஜெ இப்படி எல்லாம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஜெ ஒருவரை ஒழிக்க வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். கைது செய்த போலீஸ் அதிகாரி பற்றியும் சில நெகடிவ் செய்திகள் வந்தது மங்கலாக நினைவிருக்கிறது. கலைஞர் ஆட்சியிலும் கேஸ் விரைந்து நடத்த முயற்சி எடுக்காதது ஏன் என்று புரியவில்லை. ஆனால் ஜெயேந்திரர் மேல் தப்பே இல்லை என்றாலும், இது காழ்ப்பு உணர்ச்சியால் மட்டுமே போடப்பட்ட கேஸ் என்றாலும் ஜெயேந்திரர் கேசை கிடு கிடு என்று முடிக்க முயற்சி செய்ய வேண்டாமா? அப்படி அவரும் முயற்சி செய்வது போல் தெரியவில்லை. அப்படி அவர் முயற்சி செய்யாததுதான் அவர் மீது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

Ceaser’s wife must be above suspicion என்று சொல்வார்கள். கேஸ் முடியும் வரைக்கும் என்னை நானே சஸ்பெண்ட பண்ணிக் கொள்கிறேன், மடத்தின் லௌகீக விஷயங்களை ஒரு கமிட்டி கவனிக்கும், ஆன்மீக விஷயங்களை கவனிக்க இன்னொரு வாரிசை தேர்ந்தெடுக்கிறேன், கேஸ் முடிந்த பிறகுதான் நான் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பேன் என்று சொன்னால், அது அவருக்கும் கௌரவம். அப்படி அவர் செய்ய விரும்புவதாகவே தெரியவில்லை. எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் கேசை இழுத்தடிப்போம் என்றுதான் முனைவதாக தோன்றுகிறது. இது அவருக்கும் இழுக்கு, சங்கர மடம் என்ற அமைப்புக்கும் இழுக்கு.

இன்றைக்கும் அய்யர்கள் காஞ்சி மடத்துக்கு போகத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு காஞ்சி மடம் ஒரு ஆன்மீக ஸ்தலம் மாதிரி. குல தெய்வம் கோவிலில் பூசாரி சரி இல்லை என்றாலும் கடா வெட்டி பூசை செய்வது நிறுத்தாமல் நடப்பது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் எல்லாருக்கும் ஒரு தயக்கம், இங்கே போகிறோமே என்று கொஞ்சம் கவலை எல்லாம் இருக்கிறது. அது எல்லாம் மூத்தவரை கடவுளாகவே பாவிக்கும் நிலையாக உருவாகி இருக்கிறது.

உண்மையில் நாம் கேட்க வேண்டிய கேள்வி வேறு. இந்த கால கட்டத்தில் மடங்கள் போன்ற மத அமைப்புகள் (முஸ்லிம், கிருஸ்துவ, சீக்கிய அமைப்புகளுக்கு பேர் தெரியவில்லை) தேவைதானா? ஒரு மடாதிபதியின் கடமைகள் என்ன? அதை பெரியவரும் ஜயேந்திரரும் செய்தார்களா? பெரியவர் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டியவரா? ஒரு நல்ல மடத்தின், மடாதிபதியின் இலக்கணம் என்ன? இன்றைய கால கட்டத்தில் ஒரு மடம் என்ன செய்ய வேண்டும்? Does a mutt have any relevance today? அதை பற்றி இன்னொரு பதிவில்.

இன்றைய சமுதாயத்தில் ஒரு மடம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? காஞ்சி மடாதிபதிகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன? முடிந்தால் எழுதுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:
காஞ்சி மடம் ஆதி சங்கரர் நிறுவியது இல்லை

வினவு தளத்தின் மீது கொஞ்ச நாட்களாகவே மனக்கசப்பு. அந்த தளத்தை படிப்பதும், அங்கே என் கருத்துகளை பதிவு செய்வது நேர விரயம் என்ற முடிவுக்கு வந்து இரண்டு மூன்று வாரம் ஆகிவிட்டது. இன்று காலைதான் என் ஆர்எஸ்எஸ் ரீடரிலிருந்து வினவு தளத்தை இன்னும் நீக்கவில்லை என்று நினைவு வந்தது. அதை நீக்கப் போனபோது அவர்கள் தினமலரைப் பற்றி எழுதி இருந்த பதிவு கண்ணில் பட்டது. தினமலர் எப்படி கதைகள், “ஆன்மீக” கருத்துகள் மூலம் சாதீயத்தை பரப்புகிறது, அதனால் எல்லாரும் தினமலரைப் புறக்கணியுங்கள் என்பதுதான் பதிவின் கரு. அதிலிருந்து ஒரு பகுதி. // நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். //

வினவு தளம் எனக்கு கசந்து போனதற்கு டாக்டர் ருத்ரன் என் கருத்துகளுக்கு என் ஜெநோடைப்பே என்று சொன்னதும், அதற்கு அங்கே விளக்கம் என்ற பேரில் செய்யப்படும் விதண்டாவாதமும், சப்பைக்கட்டும்தான் காரணம். டாக்டர் ருத்ரன் பிறகு ஜெநோடைப் என்றால் வளர்ப்பு முறை என்று ஜல்லி அடித்தார். வினவு குழுவினரும் வளரும் சூழ்நிலையில் உள்ள விழுமியங்களே உங்கள் கருத்தை தீர்மானிக்கிறது என்பதைத்தான் டாக்டர் ருத்ரன் ஜெநோடைப் என்று சொல்கிறார், இந்த “எளிய உண்மையை” புரிந்து கொள்ளுங்கள் என்று விதண்டாவாதம் செய்தனர். இன்று வரை பிறப்பே – அதாவது ஜெநோடைப்பே – என் கருத்துகளுக்கு காரணம் என்று சொன்ன டாக்டர் ருத்ரனை இது வரை யாரும் அங்கே விமரிச்த்ததில்லை. டாக்டர் ருத்ரன் சொன்னது தவறு இது மனு தர்மம் என்று யாருக்கும் அங்கே தோன்றியதில்லை.

டாக்டர் ருத்ரன் என் பிறப்பே என் கருத்துகளுக்கு காரணம் என்று சொல்லலாம். பிறகு பிறப்பு என்றால் பிறப்பு இல்லை, அது வளர்ப்பு, பார்ப்பனர்கள் அவர்கள் வளர்ப்பினால் ஜாதி பார்க்கிறார்கள் என்று விளக்கலாம். இந்த எளிய உண்மைதான் ஜெநோடைப் என்று வினவு விதண்டாவாதம் செய்யலாம். இது சரியா என்று பல முறை கேட்ட பின்னும் அது கிடக்கட்டும், ஜாதி கொடுமைகளைப் பற்றி பேசுவோம் என்று அதை புறம் தள்ளலாம். ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர் “பார்ப்பனீய” அதவாது “ஜாதீய” விழுமியங்களுடந்தான் வளரும் என்று சொல்லலாம். ஆனால் தினமலரில் எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணம் என்று எழுதினால் அது தவறு, அதற்கு ஒரு பதிவு, அதை புறம் தள்ள வேண்டிய அவசியம் இல்லை. வினவு குழுவினருக்கு உண்மையில் என்ன பிரச்சினை? பார்ப்பனர்கள் மட்டும் என்று சொல்லாமல் “எந்த ஒரு மனிதனும்” என்று சொன்னதா? பார்ப்பனர்கள் (மட்டும்) தான் பிறந்த குலத்தினால் ஜாதி பார்ப்பார்கள் என்று தினமலர் சொல்லி இருந்தால் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவார்கள்!

மாற்று கருத்து உள்ளவர்களுடன் விவாதிப்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு. வினவு தளத்தில் பல முறை விவாதித்திருக்கிறேன். அங்கே தனிப்பட்ட முறையில் எத்தனையோ பேர் எத்தனையோ முறை என்னை தாக்கி இருக்கிறார்கள். நான் சாதாரணமாக இந்த தாக்குதல்களை பொருட்படுத்தியதில்லை. ஒவ்வொரு முறையும் அந்த தாக்குதல்களுக்கு பின்னால் ஏதாவது கருத்து இருந்தால் அந்த கருத்தோடு மட்டுமே விவாதித்திருக்கிறேன், குறைந்த பட்சம் விவாதிக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் இப்படி இரட்டை நிலை எடுப்பவர்களிடம், இது இரட்டை நிலை என்று கூட புரியாதவர்களிடம் அல்லது புரியாதது போல நடிப்பவர்களிடம் என்ன எழவை விவாதிப்பது?

வினவு குழுவினருக்கும் அங்கே ஜல்லி அடிக்கும் கேள்விக்குறி மாதிரி பலருக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன் – ஊரை ஏமாற்ற முயற்சி செய்ய வேண்டுமானால் சரி செய்யுங்கள். அது உங்கள் இஷ்டம், உரிமை. ஆனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

நாகம்மாள்

நாகம்மாள்

இருபது வருஷங்களுக்குமுன்னால் இந்த புத்தகத்தைப் பற்றி முதல் முறையாக கேள்விப்பட்டேன். க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த அறிமுகங்கள் இரண்டு – ஒன்று சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம், இன்னொன்று இது. புத்தகம் எங்கும் கிடைப்பதில்லை. நண்பர் ராஜன் இரவல் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார்.

புத்தகம் ஏமாற்றம் அளித்தது. க.நா.சு.வின் ரசனையும் என் ரசனையும் வேறோ என்னமோ. புத்தகம் உண்மையான மனிதர்களை, உண்மையான சூழ்நிலைகளை சித்தரிக்கிறதுதான். ஆனால் சுவாரசியமான முடிச்சுகள், ஒரு புதிய உலகம், மனிதர்களைப் பற்றிய insights என்று எதுவுமே இல்லை. நாகம்மாள் காரக்டர் இன்னும் கொஞ்சம் டெவலப் ஆகி இருந்தால் நன்றாக வந்திருக்கலாம். புத்தகத்தின் ப்ளஸ் பாயிண்டுகள் என்று பார்த்தால் அனாவசிய உபதேசம் இல்லாதது (ஒரு நா.பா. மாதிரி), ஒரு கிராமத்தை ஓரளவு தத்ரூபமாக கண் முன் கொண்டு வருவது, உண்மையான மனிதர்கள் என்று சொல்லலாம். ஆனால் ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, பூமணி, கி. ராஜநாராயணன் போன்றவர்கள் இதை விட தத்ரூபமாக, இதை விட நல்ல வட்டார இலக்கியம் எழுதி பல வருஷங்கள் ஆகிவிட்டன. அதை எல்லாம் படித்துவிட்டு இதைப் படித்தால் இது அரைகுறையாக நிற்கிறது என்றுதான் தோன்றுகிறது. ஒரு வேளை க.நா.சு. இப்படிப்பட்ட தமிழில் இப்படிப்பட்ட genre-இல் எழுதப்பட்ட முதல் புத்தகம் (1942-இல் வெளி வந்த புத்தகமாம்) என்று பூரித்துப் போய்விட்டாரோ என்னமோ. முன்னோடி நாவல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஜெயமோகன் பல முறை சொன்னார் – ஒரு நாவலுக்கு எக்கச்சக்க விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று. இதைப் படித்த பிறகுதான் அவர் என்ன சொன்னார் என்று கொஞ்சம் புரிகிறது. சாதாரணமாக என் ரசனையும் ஜெயமோகனின் ரசனையும் ஓரளவு ஒத்துப் போகும். இந்த நாவலைப் பொறுத்த வரையில் அப்படி இல்லை. ஜெயமோகன் இதை தமிழில் சிறந்த நாவல்களில் ஒன்று என்று மதிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில் இது // தமிழ் இயல்புவாத (நாச்சுரலிச) நாவல்களுக்கு முன்னோடியான (குறு)நாவல். நாகம்மாள் ‘கெட்டிஎலும்புள்ள ‘ கிராமத்து விதவை. அவளுடைய காதல் கொலையில் முடிகிறது. கிராமத்து ‘இட்டேறிகளை ‘ , கானல் பறக்கும் கரிசல் மண்ணை, ராகம்போடும் கொங்குமொழியை ஆசிரியர் தன்னைப் பின் தொடர்ந்தவர்களை விட சிறப்பாகவே அளித்திருக்கிறார். //

எஸ். ராமகிருஷ்ணனும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். ஆனால் நான் இதை தமிழ் நாவல் எப்படி ஆரம்பித்து எப்படி பரிணமித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சிபாரிசு செய்யமாட்டேன். ஒரு கிராம சூழ்நிலையை, ஜாதி சூழ்நிலையை இதை விட சிறந்த முறையில் பல புத்தகங்கள் பதிவு செய்திருக்கின்றன.

ஷண்முக சுந்தரத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை. கிட்டத்தட்ட 60 வயது வாழ்ந்திருக்கிறார். கூகிள் செய்து பார்த்ததில் கைலாசபதி இப்படி சொல்வது தெரிந்தது. (கைலாசபதி யாரென்றெல்லாம் கேட்காதீர்கள். இலங்கையை சேர்ந்தவர், பிரபல இலக்கிய விமர்சகர் என்று நினைக்கிறேன், அவ்வளவுதான் தெரியும்.) இந்த சுட்டியில் அவர் ஷண்முக சுந்தரத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார். // R.Shanmugasundaram’s Nagammal (1941) is another novel that belongs to this category. In the process of writing a novel on village life, Shenmugasundaram created the vogue for the regional novel. Kongunadu became a symbolic locality in his novels. It must be said, however, that there is nothing nostalgic in his treatment of village life. In Nagammal, for instance, strained relations in a family unit create innumerable problems, especially for the heroine, where only the mental toughness of the characters and a steely adherence to rational self-interest guarantee survival. Shanmugasundaram’s novel owes something to Hardy’s novel like Return of the Native and Tess of the D’Urbervilles in the balanced treatment of the relationship between man and nature. The nature novels lost their vitality by the late fifties. // க.நா.சு. இது 42-இல் வெளியானது என்றுதான் எழுதி இருக்கிறார். எது சரி என்று யாருக்காவது தெரியுமா?

மறு பதிப்புகள் இப்போது வந்திருக்கின்றன என்று தெரிகிறது.

தொடர்புடைய பதிவுகள்
க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா?
ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்ட்
எஸ். ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்ட்
கைலாசபதியின் உரை

யார் இந்த விகாஸ் ஸ்வரூப்? ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஒரிஜினல் நாவலை எழுதியவர் இவர்தான். Q and A என்ற பேரில் வந்தது. படத்தில் கதையின் framework-ஐ மாற்றவில்லை, ஆனால் கேள்விகள் மாற்றப்பட்டிருக்கின்றன. அதற்கேற்றாற்போல ஹீரோ வாழ்க்கையும் மாற்றப்பட்டிருக்கிறது. ஹீரோ (பேர் ராம் முஹம்மது தாமஸ்) அத்தனை கேள்விகளுக்கும் விடை சொல்கிறார். ஸ்பான்சருக்கு அறிவித்தபடி பணம் கொடுக்க முடியாத நிலை. போலீசில் போட்டுக் கொடுக்கிறார்கள். சிறு வயதில் ஹீரோ காப்பாற்றிய பெண் இப்போது வக்கீலாக வளர்ந்து அவனைக் காப்பாற்றுகிறாள். இதில் அண்ணன் எல்லாம் கிடையாது, ஆனால் ஒரு உயிர் நண்பன் உண்டு. காதலும் உண்டு.

நாவல் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நல்ல framework-ஐ பிடித்துக் கொண்டார். அதை வைத்து ஒரு சுமாரான, போர் அடிக்காத நாவல் எழுதி இருக்கிறார். நீண்ட பயணத்தின் போது படிக்கக் கூடிய நாவல்.

இன்னொரு நாவலும் எழுதி இருக்கிறார். Six Suspects. பல நிஜ சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட இன்னொரு போர் அடிக்காத நாவல். வில்லன் பெரிய தொழிலதிபர். உத்தரப் பிரதேசத்தின் உள்துறை மந்திரியின் மகன். மந்திரி உண்மையில் ஒரு தாதா. ஒரு பார்ட்டியில் ஒரு பெண்ணைக் கொன்று விடுகிறார். பணம், செல்வாக்கு இவற்றால் விடுதலை ஆகி விடுகிறார். அதைக் கொண்டாட ஒரு பார்ட்டி, அதில் அவரை யாரோ சுட்டுவிடுகிரார்கள். ஆறு பேர் மேல் சந்தேகம். இதுதான் கதை. ஆறு பேரில் ஒருவரான அந்தமான் தீவிலிருந்து வரும் ஒங்கே இனத்தை சேர்ந்த எகெடி நன்றாக வந்திருந்தது. மகாத்மா காந்தியின் ஆவி அவ்வப்போது ஒருவரைப் பிடித்துக் கொள்கிறது. மந்திரியின் காரக்டர் எப்போதும் தொலைபேசிக் கொண்டே இருக்கிறார்.

விகாஸ் ஸ்வரூப்புக்கு ஒரு நல்ல framework-ஐ தேர்ந்தெடுப்பது சுலபமாக இருக்கிறது. கதைக்கு ஒரு அடிப்படை சட்டம் கிடைத்ததும் ஓரளவு மெக்கானிக்கலாக அந்த சட்டத்தின் மீது கதையை டெவலப் செய்கிறார். கதையின் முடிச்சுகள் சுலபமாக, கொஞ்சம் சினிமாத்தனமாக அவிழ்கின்றன.

படித்தே ஆக வேண்டியவர் இல்லை, இருந்தாலும் படிக்கலாம்.குறிப்பாக நீண்ட பயணங்களின்போது.

தொடர்புடைய பதிவுகள்
ஸ்லம்டாக் மில்லியனர் விமர்சனம், ஸ்ரேயாவின் விமர்சனம், ஆஸ்கார் போட்டி, ரஹ்மானுக்கு ஆஸ்கார், ஆஸ்கார் விருதுகள்
ஏழாம் உலகம், ஸ்லம்டாக் மில்லியனர், நான் கடவுள்
ஏழாம் உலகம்
நான் கடவுள் விமர்சனம்

க.நா. சுப்ரமண்யம் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர். படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். அவரது பொய்த்தேவு மிக அருமையான நாவல். அவரது படித்திருக்கிறீர்களா எனக்கு மிக முக்கியமான படைப்பு – நல்ல தமிழ் படைப்புகளைப் பற்றி எனக்கு சொன்ன முதல் புத்தகம் அதுதான்.

பாரதிமணி க.நா.சு.வின் மாப்பிள்ளை. பாரதி திரைப்படத்தில் பாரதியின் அப்பா சின்ன்னச்சாமியாக நடித்தவர். அவர் க.நா.சுவை நினைவு கூரும் பதிவு ஒன்று இட்லிவடை தளத்தில் வந்திருக்கிறது. கட்டாயமாக படியுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
பொய்த்தேவு
படித்திருக்கிறீர்களா?

உலகின் மிக அபாயகரமான ரோடுகள் என்று ஒரு ஃபோட்டோ பதிவு இங்கே இருக்கிறது. கட்டாயமாக பாருங்கள்!