தோன்றியதைப் பற்றி எல்லாம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறேன். அமார்த்ய சென்னிலிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை வரை ஒரே அவியலாக இருக்கிறது. ஒரு சேஞ்சுக்காக ஒரே ஒரு விஷயம் பற்றி focus செய்யலாம் என்று எண்ணம். இந்த வாரம், சிறுகதை வாரம். சிறுகதைகளை பற்றி மட்டும் எழுதப் போகிறேன். என்ன எழுதப் போகிறேன் என்று இது வரை எனக்கே தெரியாது. 🙂

சிறுகதை என்றால் என்ன என்று பெரிய பெரிய மேதைகளே வரையறுக்க குழம்புகிறார்கள். சிலர் சைஸை வைத்து வரையறுக்கிறார்கள். பத்து பக்கம் இருந்தால் சிறுகதையா? 25 பக்கம்? 50 பக்கம்? எத்தனை பக்கம் இருந்தால் சிறுகதையிலிருந்து கொஞ்சம் பெருகதைக்கு மாறுகிறது? (இந்த இடத்தில் எப்படியாவது அருகதை என்று எழுதிவிட வேண்டும் என்று நினைத்தேன், அப்புறம் படிப்பவர்கள் பாவம் என்று விட்டுவிட்டேன்) நான் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன். அதிலெல்லாம் படம் போட்டு பாகங்களை குறித்த பிறகும் கதை பத்து பக்கத்தை தாண்டாது. இருபது பக்க “சிறுகதையே” எனக்கு கொஞ்சம் கஷ்டம். 🙂 ஆனால் டிக்கன்ஸ் சிறுகதை எழுதினால் ஒரு ஐம்பது பக்கம் போகும். ஜோஸஃப் கான்ராடின் Heart of Darkness படிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். என் கண்ணில் அது சிறுகதைதான். அது ஒரு 70 பக்கம் இருக்கம். பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு மூன்று decade-களில் எழுதப்பட்ட கதைகள் பொதுவாக நீளமாக இருக்கின்றன.

சிலர் சிறுகதை ஒரு moment -ஐ, ஒரு நக்மா-வை, (நக்மாவுக்கு நல்ல தமிழ் வார்த்தை யாராவது சொல்லுங்கப்பு!) காட்டுவதுதான் சிறுகதை என்று சொல்கிறார்கள். (நக்மாவை காட்டினால் அல்லது நக்மா காட்டினால் அது சிறுகதை இல்லை, சினிமா என்று யாராவது கடிப்பதற்கு முன் ஹிந்தியில் நக்மா என்றால் ஒரு moment என்று சொல்லிவிடுகிறேன். அது moment-உக்கும் கொஞ்சம் மேலே, உருது வார்த்தைகளுக்கு உள்ள ஒரு charm அதில் இருக்கிறது.) அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் நல்ல உதாரணம். ஆனால் புதுமைப்பித்தனின் ஒரு கதை – பேர் ஞாபகம் வரவில்லை, கூடுவிட்டு கூடு பாயும் நன்னய பட்டன்? என்று நினைக்கிறேன் – பல யுகங்களை கடக்கிறது. அதுவும் நல்ல கதைதான்.

பெரிய பெரிய மேதைகளே தடுமாறும்போது நான் எதற்கு கஷ்டப்பட வேண்டும்? யாரோ ஒருவர் போர்னோக்ராஃபி பற்றி சொன்னது நினைவு வருகிறது. அதை என்னால் வரையறுக்க முடியாது, ஆனால் பார்த்தால் எது போர்னோ, எது இல்லை என்று தெரியும் என்று சொன்னாராம். சிறுகதைக்கும் அந்த வரையறைதான் சரிப்பட்டு வரும். எந்த வரையறைக்கும் விதிவிலக்குகள் காட்ட முடியும். ஆனால் பார்த்தால் இது சிறுகதையா, குறுநாவலா, நாவலா என்று தெரியும்.

ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த சிறுகதை ஆசிரியர்கள்/கதைகள் – உடனடியாக தோன்றுபவை – சாகி, எம்.ஆர். ஜேம்சின் பேய்க்கதைகள், ஓ. ஹென்றியின் சில கதைகள், பல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், சில ஜாக் லண்டன் கதைகள், சில பி.ஜி. வுட்ஹவுஸ் கதைகள், வெகு சில அசிமோவ், உர்சுலா லி க்வின் கதைகள் பிடிக்கும். பெரிதாக பேசப்படும் ஹாதொர்ன், எட்கார் ஆலன் போ (Purloined Letter, Gold Bug, Pit and the Pendulum பிடிக்கும்), சாமர்செட் மாம், மார்க் ட்வேய்நின் சிறுகதைகள் எல்லாம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

இந்திய மொழிகளில் ஹிந்தியில் பிரேம்சந்த். மிக அற்புதமான சிறுகதைகள். மணிக் பந்தோபாத்யாயின் வங்காளச் சிறுகதைகளில் பல மிகவும் சக்தி உள்ளவை. மைதிலியோ, போஜ்புரியோ என்னவோ ஒன்றில் எழுதிய ஃபனீஸ்வர்நாத் ரேணு அருமையாக எழுதுவார். வேறு யாரும் எனக்கு தெரியவில்லை. இஸ்மத் சுக்டை, சாதத் ஹாசன் மாண்டோ, கிருஷ்ண சந்தர் மாதிரி எல்லாம் பேர் நினைவு வந்தாலும் எந்த கதையும் நினைவு வரவில்லை. மற்றவர்களின் நாவல்கள்தான் நினைவு வருகின்றன.

தமிழில்தான் நான் ஓரளவு சிறுகதைகளை படித்திருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதை வடிவத்தை ஜீரணித்து பல வருஷம் ஆயிற்று. இத்தனைக்கும் நூறு வருஷமாகத்தான் சிறுகதைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. புதுமைப்பித்தன் ஒரு ஜீனியஸ். அவர் சிறுகதைகள், கட்டுரைகள் மட்டுமே எழுதினர். கு.ப.ரா. அருமையான கதைகளை எழுதி இருக்கிறார். அசோகமித்திரன் தமிழின் இன்னொரு ஜீனியஸ். அவருக்கு சிறுகதை கை வந்த கலை. கு. அழகிரிசாமி சிறுகதையின் மாஸ்டர். கி.ராஜநாராயணன் இன்னொரு மாஸ்டர். ஈகோவை வைத்து மிக subtle-ஆன கதைகளை எழுதும் சா. கந்தசாமி, அன்றைய காலகட்டத்தின் நியாய அநியாயங்களை எடுத்து வைத்த ஜெயகாந்தன், மிக சுவாரசியமான கதைகளை வணிக இதழ்களுக்காக எழுதிய கல்கி, தேவன், சுஜாதா, ஒரு காலத்தில் மிக அபாரமான சிறுகதைகளை எழுதிய பாலகுமாரன், மிக குரிவாகவே எழுதினாலும் மறக்க முடியாத கதைகளை எழுதிய ஜி. நாகராஜன், திலீப் குமார், வெளுத்து வாங்கும் அ. முத்துலிங்கம், நாவல்கல் அளவுக்கு வராவிட்டாலும் நல்ல சிறுகதைகளை எழுதும் ஜெயமோகன் என்று மணிக்கொடி காலத்திலிருந்து இன்று வரை லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம்.

உங்களுக்கு என்ன சிறுகதைகள் பிடித்திருந்தது? உங்களை பாதித்த சிறுகதைகள் ஏதாவது உண்டா? சிறுகதைகளை பற்றி உங்கள் எண்ணம் என்ன? சும்மா நானே பேசுவதை விட எல்லாரும் பேசினால் நன்றாக இருக்குமே!

நீங்கள் எழுதிய சிறுகதை எதையாவது இங்கே பதிக்க விரும்புகிறீர்களா? (எனக்கு பிடித்தால்தான் பதிப்பேன்.)

பக்ஸ், சேதுராமன் நீங்கள் யாராவது இதைப் பற்றி எழுத விரும்புகிறீர்களா?

தொடர்புடைய பதிவுகள்:

சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு