
ம.பொ.சி
மதிப்பீடு எழுதி ரொம்ப நாளாச்சு. இன்றைக்கு ஒன்று.
எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் (எண்பதுகள்) துக்ளக் பத்திரிகையில் பெரிய அளவில் கிண்டல் செய்யப்பட்டவர் ம.பொ.சி. சரியான ஜால்ரா என்றுதான் நினைத்திருந்தேன். இன்னும் கொஞ்ச நாள் போன பிறகு கலைஞர் ஆட்சியில் இருந்த போது அவருக்கும் ஜால்ரா என்று தெரியவந்தது. அவரை பற்றி சொன்னவர்கள் எல்லாம் அவர் நன்றி கெட்டவர், கலைஞர் ஆட்சியில் இருந்தபோது அவருக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டு இப்போது எம்ஜிஆரை சந்தோஷப்படுத்த கலைஞரை திட்டுகிறார் என்றுதான் சொன்னார்கள்.
இன்னும் கொஞ்சம் விவரம் தெரிந்தபோது இவர்தான் மறந்து போயிருந்த கட்டபொம்மனையும் வ.உ.சியையும் தமிழர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார் என்று தெரியவந்தது. அட! என்று பார்த்தேன். பிறகு மெதுமெதுவாக அவர் தமிழக எல்லை போராட்டத்தில் ஆற்றிய பங்கு, தமிழையும் இந்தியாவையும் ஒரே நேரத்தில் போற்றியது மாதிரி பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். அவரே எழுதிய சில புத்தகங்கள் – ராஜாஜியுடன் அவருக்கிருந்த உறவு பற்றி எழுதியது போல – கிடைத்தன. தமிழம் சைட்டில் தமிழ் முழக்கம் பத்திரிகையின் சில பழைய இதழ்களையும் பார்த்தேன். என்னைப் போல ஒரு அரை வேக்காடு மதிப்புரை எழுத இவ்வளவு தெரிந்தால் போதும்.
ம.பொ.சி. 1906-இல் பிறந்தவர். பனை ஏறும் ஜாதியில் – தாழ்வாக கருதப்பட்ட ஜாதியாம் – பிறந்தவராம். (கிராமணி என்ற அடைமொழியை வைத்து கிராமத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஜாதியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.) சுதந்திர போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். வேதாரண்யம் உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்றார் என்று நினைக்கிறேன். மிக ஏழையாக இருந்திருக்கிறார். பரம்பரை சொத்தும் இல்லை, குடும்பத் தலைவனும் விடுதலை, போராட்டம், ஜெயில் என்று போய்விட்டால் குடும்பத்தின் நிலை கஷ்டம்தான். ஜெயில்வாசம் உடல்நிலையை மோசமாக பாதித்திருக்கிறது. அவரது எளிய பின்புலம், மற்றும் தோற்றம் – குறிப்பாக மீசை, அவர் ரவுடியோ என்ற ஒரு சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது. ராஜாஜியே அப்படித்தான் நினைத்திருந்தாராம். கல்கியை ராஜாஜி convince செய்ய வேண்டி இருந்ததாம்.
அவருக்கு வ.உ.சி.யும், கட்டபொம்மனும் பெரிய icon-கள். அவர்களை பற்றிய பிரக்ஞை தமிழ் நாட்டில் உருவாக அவர்தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். (அவருக்கு அடுத்தபடியாகத்தான் நான் சிவாஜி கணேசனை சொல்லுவேன்)
நாற்பதுகளில் அவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்க ஆரம்பித்தது. சின்ன அண்ணாமலை உதவியுடன் கட்டபொம்மன், வ.உ.சி. புத்தகங்களை வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிறார். அதற்கு முன்னும் வெளி வந்தாலும், அவை விற்கவில்லை. சின்ன அண்ணாமலை மோசமான பிரிண்டிங், சாணி கலர் பேப்பரில் வந்த புத்தகங்களோடு ம.பொ.சி. தன்னை வந்து பார்த்ததாக குறிப்பிடுகிறார். சி. அண்ணாமலை வணிகம் ரத்தத்தில் ஊறிய செட்டியார். அருமையாக மார்க்கெட்டிங் செய்யக்கூடியவர். அவர் தனது பதிப்பகத்தில் இவற்றை நல்ல முறையில் அச்சடித்து வெளியிட்டார். ம.பொ.சிக்கு பணம் கிடைத்த மாதிரி தெரியவில்லை, ஆனால் எல்லாரும் திரும்பி பார்த்தார்கள்.
காங்கிரசை விட்டு வெளியேறிய ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழைய முயன்றபோது காமராஜ் அதை கடுமையாக எதிர்த்தார். அப்போது ராஜாஜி சார்பாக முனைந்து போராடிய தமிழ் நாட்டுக்காரர்களில் இவர்தான் முக்கியமானவர். அப்போதிலிருந்தே ராஜாஜியின் அணுக்க சீடர் ஆகிவிட்டார். ராஜாஜி காங்கிரசுக்குள் நுழைவதற்காக செய்த compromise-களில் இவர் அவமானப்பட்டிருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு ராஜாஜி இவரது விஸ்வாசம் பற்றி தெளிவாக புரிந்துகொண்டார்.
ராஜாஜியின் சிஷ்யர்தான், ஆனால் ராஜாஜிக்கு ஆமாம் போடுபவரில்லை. கண்மூடித்தனமான பக்தி இல்லை. (கல்கி நாட்டில் மழை பெய்ததற்கெல்லாம் ராஜாஜிதான் காரணம் என்று எழுதி இருக்கிறார்) independent ஆக செயல்பட்டார். ராஜாஜி இவரை வருமானம் வரக்கூடிய பல வேலைகளுக்கு சிபாரிசு செய்திருக்கிறார் – கல்கியின் மறைவுக்கு பிறகு கல்கி பத்திரிகைக்கு ஆசிரியர் வேலை உட்பட. இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
52 தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் கிடைக்கவில்லையா, இல்லை தோற்றுவிட்டாரா என்று தெரியவில்லை. ராஜாஜி முதல்வர் ஆனதும் இவரை பிரசாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் பதவி எதுவும் தரவில்லை. எதோ நிலச்சீர்திருத்தம் விஷயத்தில் மிக அற்புதமாக பேசி தஞ்சாவூர் பண்ணையார்களை சட்டத்தை ஒத்துக்கொள்ள வைத்தாராம். காமராஜ் இவரை ராஜாஜியின் சிஷ்யர் என்று ஒதுக்கிவிட்டார். தமிழக எல்லைக்காக இவர் போராடியதும் காமராஜுக்கு embarassing ஆக இருந்திருக்க வேண்டும்.
திராவிட இயக்கத்தின் தமிழ் இவரை கவர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை எதிரியாகத்தான் நினைத்திருக்கிறார். அவர்களது பாணியிலேயே அவர்களது நோக்கங்களை – கடவுள் மறுப்பு, திராவிட நாடு மாதிரி பல – எதிர்த்திருக்கிறார்.அதாவது நல்ல தமிழில் பேசி, எழுதி வந்திருக்கிறார். ராஜாஜியும் காமராஜும் அழகான தமிழ் பேசியதில்லை. அண்ணா, கலைஞர், நாவலர் ஆகியோரின் தமிழ் ஐம்பதுகளில் பெரும் வரவேற்பு பெற்றது. இவர் தன்னுடன் கா.மு.ஷெரிஃப், டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி. நாகராஜன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு தமிழரசு கழகம் என்று ஒரு அமைப்பை ஸ்தாபித்தார். ஏ.பி.என் சினிமா துறையில் அறுபதுகள் வரை பெரும் வெற்றி பெறவில்லை, ஆனால் கலைஞர் போல வர முயற்சி செய்துகொண்டே இருந்திருக்கிறார். தமிழ் முழக்கம் பத்திரிகையை புரட்டினால் கலைஞர், கே.ஆர. ராமசாமி மாதிரி பலரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. ஏ.பி.என்ணின் படங்களும் தி.மு.கவினரால் விமர்சிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
ம.பொ.சியின் தாக்கம் தமிழக எல்லை போராட்டத்தில்தான் பிரமாதமாக வெளிப்பட்டிருக்கிறது. நேருவும், ராஜாஜியும் மொழிவாரி மாநிலங்களின் ஆதரித்ததில்லை. மத உணர்வு பாகிஸ்தான் கொண்டு வந்தது போல மொழி உணர்வு பிரிவினை சக்திகளை ஊக்குவிக்கும் என்றுதான் எண்ணினார்கள். பொட்டி ஸ்ரீராமுலு அனேகமாக போய்ச் சேரும் நிலை வந்த பிறகுதான் முதல்வர் ராஜாஜிக்கும் பிரதமர் நேருவுக்கும் அவரை பற்றி பிரக்ஞையே வந்திருக்கிறது. வேறு வழி இல்லை என்று தோன்றிய பிறகுதான் ஆந்திரா உருவாக ஒத்துக்கொண்டார்கள். மாநில எல்லையை அவர்களும் சரி, பின்னால் வந்த காமராஜும் சரி பெரிய பிரச்சினையாக நினைக்கவில்லை. சென்னை மீது ஆந்திரர்கள் உரிமை கொண்டாடினார்கள் (அவர்களுக்கு உரிமை இருக்கவும் செய்தது). ம.பொ.சி., தமிழரசு கழகத்தார் போராடி இருக்காவிட்டால் திருத்தணி, சென்னை எல்லாம் ஆந்திராவில்தான் இருந்திருக்கும். சித்தூர், திருப்பதி ஆகியவற்றின் மீது தமிழர்களுக்கும் உரிமை அந்த காலத்தில் உண்டு. நேரு வாக்குறுதி எல்லாம் கொடுத்திருக்கிறார், இதை பற்றி விசாரிப்பதாக. எல்லாம் காற்றோடு போய்விட்டது.
காமராஜ் காலத்தில் ம.பொ.சிக்கு ப்ரெஷர் அதிகமாக இருந்திர்க்க வேண்டும். கட்சிக்குள்ளிருந்தே ஒருவர் தமிழக எல்லைகள் பற்றி “கலாட்டா” செய்வது காமராஜுக்கு கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். (கலக்கிட்டடா! கானாவுக்கு கானா) காங்கிரசை விட்டு வெளியேறினார். தமிழை வைத்து நடந்த போட்டியில் தி.மு.க.வினரை வெல்ல முடியவில்லை. தமிழரசு கழகம் மங்க ஆரம்பித்தது. ராஜாஜி சுதந்திராவுக்கு வரும்படி பல முறை கூப்பிட்டும் மறுத்துவிட்டார். ஓரளவு புகழ் இருந்தது, பணம்தான் குறைச்சலாக இருந்திருக்கிறது.
67-இல் ராஜாஜியே தி.மு.க.வுடன் கூட்டு சேரும்போது, ம.பொ.சி. சுலபமாக கூட்டு சேர்ந்து எம்.எல்.ஏ. ஆனார். அவர் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த முதல் பதவி அதுதான் – 60 வயதில். வயதாகிவிட்டது, இளமையில் இருந்த வைராக்யம் குறைந்துவிட்டது. மெதுமெதுவாக கலைஞருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்துவிட்டார். இது அவரது ஆளுமையின் பெரிய வீழ்ச்சிதான், ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய வீழ்ச்சி. அதை விட பெரிய வீழ்ச்சி அவர் எம்ஜிஆருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்தது. ஒரு முறை வெளிப்படையாகவே சொன்னார் – எம்ஜிஆர் நன்றாக ஆட்சி செய்கிறார் ஏனென்றால் எனக்கு மேல் சபை தலைவர் பொறுப்பு கொடுத்திருக்கிறார் என்று. இன்றைய நிலையை வைத்து பார்த்தால் சிறு வசதிகள்தான் – ஒரு கார், ஒரு வீடு, ஏதோ கொஞ்சம் பணம். ஆனால் அதன் அருமை கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்.
அவரை காமராஜ் பயன்படுத்தி இருக்க வேண்டும். காங்கிரசுக்கு பெரும் வலு சேர்த்திருப்பார். அவரது பாணியை காங்கிரஸ் கடைப்பிடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தாக்கு பிடித்திருக்கலாம். அவரது potential பெரிது. அவரது சாதனைகள் குறைவுதான், வாய்ப்பு கிடைக்காத குறைதான்.
சிறந்த பேச்சாளர் என்று சொல்கிறார்கள். நான் அவரது பேச்சை கேட்டதில்லை. அவரது புத்தகங்கள் எதுவும் எனக்கு பிரமாதமாக தெரியவில்லை. ஆனால் அவை முக்கியமான சரித்திர ஆவணங்கள் – கட்டபொம்மன், வ.உ.சி. ராஜாஜி, விடுதலை போரில் தமிழகம் போன்றவை முக்கியமான புத்தகங்கள்.
அரசு இவரது எழுத்துகளை நாட்டுடமை ஆக்கி இருக்கிறது. ஒரு ஸ்டாம்பும் வெளியிட்டிருக்கிறது.
திறமை இருந்தும், லட்சிய வேகம் இருந்தும், தலைமை வகிக்க தகுதி இருந்தும், அவர் தன் வாழ்வில் பெரிய பதவி எதையும் அடையமுடியவில்லை. கடைசியில் தன் பேச்சு திறமையை ஜால்ரா அடிக்க பயன்படுத்திவிட்டார். அவரது தாக்கம் தமிழக எல்லைப் போராட்டத்திலும், வ.உ.சி., கட்டபொம்மன் ஆகியோரை பிரபலப்படுத்தியதிலும் மட்டுமே நிற்கிறது. ஒரு நல்ல ஆளுமையாக வரக்கூடிய தகுதி உள்ள ஒருவரை தேவைகளும், காலமும் எப்படி வீழ்ச்சி அடைய செய்கின்றன என்பதைத்தான் அவர் வாழ்க்கை காட்டுகிறது.
தொடர்புடைய சுட்டிகள்:
ம.பொ.சி. பற்றிய ஸ்ரீ.சேதுராமன் அவர்களின் இடுகை
ம.பொ.சி. பற்றிய விகி குறிப்பு
தமிழக எல்லை நிர்ணயிப்பில் ம.பொ.சி.
வ.உ.சிக்கு சிலை எழுப்ப ம.பொ.சி. பட்ட பாடு
தமிழம் நாளொரு நூல் தளம் – தமிழ் முழக்கம் பத்திரிகைகள், ஆசிரியர் கா.மு. ஷெரிப், (1955 – 4ஆம்ஆண்டு 3,4,9,10,12,13,15,16,18,19, 21, 22) (எண் 441, 425-33. 439, 440)
மற்ற ஆதாரங்கள்:
ம.பொ.சி. எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், நானறிந்த ராஜாஜி, விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு ஆகிய புத்தகங்கள்
சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்பமாட்டீர்கள்
அக்டோபர் 1, 2009 at 4:56 மு.பகல்
desiyathirkkum,gandhiyathirkkum kidaitha maaperum kodai MAA.PO.SI..,kattabommanaiyum,kappalottiya thamilariyum thamilanukku velipatithiyavar.APN,KU.MAA.Balasubramaniam,ku.saa.krishnamoorthy,kavi.kaa.mu.sheriff,m.a.venu,g.umapathy pondra arputhamana kalai ilakkiya vaarisugalai uruvakkiyavar.tamilnattin dhuradhirstam ivar rajajiyin kamaraj dhuveshathil innainthu veenay ponar.piragu kalathin kattayagamaga elanthara arasiyalvadhigalin koojavagi vittar.VIZZY.
அக்டோபர் 25, 2009 at 9:41 பிற்பகல்
Thanks for sharing info about ma.po.si. I was trying to read about him and C.S for long time
ஜூன் 30, 2010 at 1:34 பிற்பகல்
தங்களது மதிப்பீடு சற்று சிறுபிள்ளை தனமாக உள்ளதாக உணர்கிறேன் (உங்கள் பணியில் சொல்ல போனால் அரை வேக்கடகவே உள்ளது ). விமர்சனம் என்பது இதோ நீர் விட்டதை தொடர்கிறேன்,
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம.பொ.சி. என்று ஆயிற்று. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த தியாகி. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றித் தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராட்டினார், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார்.’வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூலை எழுதினார். அந்நூலுக்கு 1966 ல் சாகித்திய அக்காடமி விருது பெற்றார். சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. இன்று ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர் பலர் இருந்தும் தனது ஜாதியை தனது சுயநலத்திற்காக பயன் படுதாதவர். இன்றளவும் சான்றோர் (கிராமணி) இனம் கண்ட மாபெரும் மனிதர், அவர் ஜால்ரா தடியவர் என்று கூறி அதை நியாய படுத்தி இருப்பது மிக கண்டனத்திற்கு உரியது.
ஜூலை 1, 2010 at 5:19 பிற்பகல்
ரீச்வினோ,
மறுமொழிக்கு நன்றி! ம.பொ.சி.யைப் பற்றி தெரிந்தவரைப் பார்ப்பதே சந்தோஷம்
ஆனால் உங்கள் ஆட்சேபனை என்ன என்று புரியவில்லையே? அவருடைய தியாகம், அறுபது வயது வரைக்கும் பதவி ஆசை இல்லாமல், எந்த கஷ்டம் வந்தாலும் வளையாத போக்கு ஆகியவற்றைப் பற்றித்தான் நானும் விழுந்து விழுந்து எழுதி இருக்கிறேனே! அறுபது வயது வரைக்கும் அவர் ஒரு உதாரண புருஷர் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு அவர் அடுத்த இருபது வருஷம் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் ஜால்ரா தட்டினார் என்பதும் உண்மைதானே! அவர் ஜால்ரா தட்டவில்லை என்கிறீர்களா? இல்லை தட்டத்தான் செய்தார். அதுவும் கிட்டத்தட்ட இருபது வருஷங்களாக. அவர் சுதந்திரப் போராட்ட (உண்மையான) தியாகி என்பதோ, இன்று சென்னையும், திருத்தணியும் தமிழ் நாட்டில் இருப்பதற்கு அவர்தான் முக்கிய காரணம் என்பதோ, இதை மாற்றிவிட முடியாதே?
ஸ்ரீனிவாஸ், மற்ற விவரங்களுக்கு நன்றி!
ஜூன் 30, 2010 at 6:51 பிற்பகல்
ம.பொ.சி. என்ற மாமனிதர்!
============================
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற வீர வரியைத் தாரக மந்திரமாகக் கொண்டு ஓயாதுழைத்த உத்தமத்தலைவர் ம.பொ.சி. மூதறிஞர் இராஜாஜி காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியபோது, அவருக்கெதிராக எழுந்த புயல் போன்ற எதிர்ப்புக்கு ஈடு கொடுத்தவர் தளபதி ம.பொ.சி அவர்கள். ம.பொ.சிவஞானம் அவர்கள் 1906-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் நாள் ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார். தந்தையின் பெயர் பொன்னுசாமி. தாயார் பெயர் சிவகாமி. இவரையும் சேர்த்து குடும்பத்தில் மொத்தம் 9 பிள்ளைகள்.
பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். அதற்கு மேல் படிக்க குடும்பத்தில் பண வசதி இல்லை. எனவே ஓர் இடத்தில் வேலையில் சேர்ந்தார். பின்னாளில் ம.பொ.சி தமிழில் சிறந்து விளங்கக் காரணம், இளமையில் அவரது தாயார் சொல்லிக் கொடுத்த அல்லியரசாணிமாலை, பவளக்கொடி மாலை போன்ற நூல்களேயாகும். தேவையான அளவிற்கு அவருக்கு ஆங்கில அறிவு இருந்தது.
1928-ம் ஆண்டு சைமன் கமிஷன் எதிர்ப்பு, 1932-ஆம் ஆண்டு சட்டத்தை மீறி ஊர்வலம், ஆங்கில அரசை எதிர்த்து எழுதப்பட்ட துண்டுப் பிரசாரங்களை வழங்கியதற்காகவும், பல மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். விடுதலைப் போரில் 1928 முதல் 1947 வரை ஆறு முறை சிறைத் தண்டனை அனுபவித்தார். இன்று மாநில சுயாட்சி பற்றிப் பேசப்படுகிறது. மாநில சுயாட்சி என்னும் தத்துவத்தை முதன் முதலாகச் சிந்தித்து தமிழர்களுக்கு வழங்கிய தலைவர் ம.பொ.சி தான்.
காங்கிரஸின் எதிர்ப்பையும், திராவிடர் கழகத்தின் முயற்சியையும் முறியடிக்கத் “தமிழர் முரசு’ என்னும் பெயரில் மாதப் பத்திரிகை ஒன்றை 1946-ம் ஆண்டு மே மாதம் வெளியிட்டார். 1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி தமிழர் மாநிலம் தனியாக பிரித்து அமைக்கப்பட்டது. சென்னையை ஆந்திராக்காரர்கள் உரிமை கொண்டாடாமல் காப்பாற்றப்பட்டது. அதில் பெரும் பங்கு ம.பொ.சி.க்கு உண்டு.
1946-ம் ஆண்டே ம.பொ.சி தமிழகத்துக்கு சுயநிர்ணய உரிமை வேண்டுமென்று கோரினார். மாநில அரசின் எந்த அதிகாரத்திலும் மத்திய அரசின் மேலாதிக்கம் இருக்கக்கூடாது மாநிலங்களுக்குத் தனியே மாநிலக் கொடி, மாநில கீதம், அரசியலமைப்புச் சட்டம் எல்லாம் இருக்க வேண்டும் என்றார். அதற்கு எடுத்துக் காட்டாக, சோவியத்து யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகளை கூறினார்.
அந்த நாளில் தனித் திராவிட நாடு கேட்டவர்கள், மாநில சுயாட்சிக் கொள்கையைக் கேலி பேசினார்கள். நாங்கள் கேட்பது நாலணா, அதில் கிராமணியார் கேட்பது காலணாவாக இருக்கிறது என்றார்கள். பின்னர் திராவிடத் தனி நாடு கோரிக்கை கைவிடப்பட்டு மாநில சுயாட்சி கோரிக்கையை திராவிட இயக்கத்தாரும் ஏற்றுக் கொண்டது காலத்தின் கட்டாயம் என்றார் ம.பொ.சி.
“”ம.பொ.சி தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டை வாழ்விப்பதற்காக அவர் நடத்திய போராட்டங்களுக்காக அவரை நாங்கள் கையெடுத்துக் கும்பிடுகிறோம்” என்றார் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா.
1952-இல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அரும்பாடுபட்டார் ம.பொ.சி. இருப்பினும் பல கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு காங்கிரஸிலிருந்து வெளியேறினார். காங்கிரஸில் தாம் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஏன் சாதாரண உறுப்பினர் நிலையில் இருந்தும் கூட முற்றிலுமாக விலகிவிட்டார்.
“தமிழன் குரல்’ என்ற இதழை 1954-55-ம் ஆண்டுகளில் ம.பொ.சி நடத்தி வந்தார். 1954-இல் சென்னை மாநகராட்சிக் கல்விக் குழுத்தலைவராக இருந்து மாநகராட்சியின் கொடியில் தமிழ் மூவேந்தரின் சின்னங்களாகிய வில், புலி, மீன் போன்ற சின்னங்களைப் பொறித்திடத் தீர்மானித்துப் பிறரையும் ஒப்புக்கொள்ள வைத்து வெற்றி பெற்றார்.
“மதராஸ் மனதே’ என்று குரலெழுப்பி ஆந்திரர்கள் போராட்டம் செய்தனர். அப்போது மாநில முதலமைச்சராக இராஜாஜி இருந்தார். அவரது ஆதரவுடன் சென்னை மாநகரம் தமிழகத்தின் தலைநகராக நிலைநிறுத்திப் பாதுகாக்க ம.பொ.சி. அரும்பாடுபட்டார். “”தலையைக் கொடுத்து தலைநகரைக் காப்போம், காலைக் கொடுத்து கன்னியாகுமரியைக் காப்பாற்றுவேன்” என்றார் ம.பொ.சி.
1954-ஆம் ஆண்டில் தேவி குளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்தோடு சேர்க்கப்பட்ட வேண்டும் என்று போராடினார்கள். மூணாறில் நேசமணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் தெற்கெல்லைப் போராட்டம் தொடர்ந்தது. மூணாறு, நாகர்கோவிலில் இரண்டு இடங்களிலும் ம.பொ.சி முக்கியப் பங்கு வகித்தார். அப்போதைய கேரள முதல்வர் பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சி ஈவு இரக்கமின்றி 11 தமிழர்களைச் சுட்டுக் கொன்றது.
“”ம.பொ.சி எந்தப் பணியைச் செய்தாலும், எத்துறையில் நின்றாலும் அவரது பேச்சும், மூச்சும் தமிழுக்காகவே இருக்கும்” என்றார் முதல்வர் கருணாநிதி.
வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் போன்ற தலைப்புகளில் நூல்களை எழுதினார். இவர் எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 3.10.1995-ம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்தார். சென்னையில் வாழ்ந்தவர்களுக்கும், தமிழ் மொழியை அறியாதவர்களுக்கும், தமிழர் அல்லாதவர்களுக்கும் சென்னையில் பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், ஏன் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும், தன் வாழ்க்கையே அர்ப்பணித்துப் பாடுபட்ட அவருக்கு சென்னையில் ஒரு சிலையோ, ஒரு மணிமண்டபமோ, தெருவிற்குப் பெயரோ, நினைவுத் தூணோ வைக்கப்படவில்லை என்பதுதான் வேதனை.
ஜூலை 1, 2010 at 3:15 மு.பகல்
மிக்க நன்றி