செப்டம்பர் 2009
மாதாந்திர தொகுப்பு
செப்டம்பர் 12, 2009
பதிவு எழுதுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்த சமயத்தில் வசந்தகுமார் எங்களை சுவாரசிய பதிவர்களாக தேர்ந்தெடுத்தார். நன்றி கூட சொல்லாமல் கம்மென்று இருந்துவிட்டோம். அவர் எங்களை மன்னிப்பாராக.
மௌனமாக இருந்த நேரத்தில் எதற்காக இணையத்தில் எழுதுகிறோம் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நான் காந்தியோ, தோரோவா, அம்பேத்காரோ, ராமச்சந்திர குஹாவோ ஜெயமோஹனோ இல்லை. உலகத்துக்கு சொல்ல என்னிடம் ஒரு செய்தியும் இல்லை. என் எண்ணங்கள், ரசனை ஆகியவை இந்த உலகத்துக்கு தெரியாவிட்டால் ஒன்றும் குடி முழுகிவிடாது. அப்படி இருக்கும்போது எழுதுவதால் எனக்கு என்ன லாபம், படிப்பவர்களுக்கு என்ன லாபம்?
பெரிதாக எதுவும் இல்லை. ஓரளவு கலந்து பேச முடிகிறது. அப்படி கலந்து பேசும்போது நம் எண்ணங்கள் மேலும் தெளிவடைகின்றன. முகத்தையே பார்க்காவிட்டாலும் சிலர் நண்பர்கள் ஆகிறார்கள். ரசனையில் ஒரே வேவ்லேங்த் உள்ள சிலர் அறிமுகம் ஆகிறார்கள். நமக்கு பொதுவாக பிடிக்கும் சில பதிவர்களை வைத்து நாமே ஒரு “செய்தித்தாள்” உருவாக்கிக்கொள்ள முடிகிறது. அவ்வளவுதான்.
வசந்தகுமார் எங்களுக்கு அளித்த சுவாரசிய பதிவர் விருது அந்த விதத்தில் மிக பயனுள்ளது. அவர் விருதளித்திருக்கும் மற்றவர்களில் நான் லதானந்த் தவிர மற்றவர்கள் பற்றி கேள்விப்பட்டதில்லை. எங்களுக்கு விருது கொடுத்தற்கு மட்டுமல்ல, மற்றவர்களை அறிமுகம் செய்து வைத்ததற்கும் நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் எழுதுவதை ஒருவர் படிக்கிறார் என்பதே சந்தோஷத்தை தரும். அவர் எங்களுக்கு விருதே கொடுக்கிறார் என்றால் அது பெரிய மகிழ்ச்சியை தருகிறது.
வசந்தகுமார் சொல்கிறார் – விருது பெற்றவர்கள், தாங்களும் ஆறு பேரைக் கூப்பிட்டுக் காட்டி விட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். ஒரே நிபந்தனை, அவர்கள் சுவாரஸ்யமாய் எழுதுகிறார்கள் என்று விருதினர் நம்பியிருக்க வேண்டும்.
இதற்கு பின் வருவது என் (ஆர்வி) சுவாரசிய பதிவர் தேர்வுகள். திட்ட வேண்டுமென்றால் என்னை திட்டுங்கள், பக்சை விட்டுவிடுங்கள்.
சுவாரசிய பதிவர்கள் லிஸ்டில் பிரபலமான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், டோண்டு போன்றவர்களை நான் சேர்க்க விரும்பவில்லை. அவ்வளவாக பிரபலமாக இருக்க கூடாது, நான் அவர்களை RSS மூலம் படிக்க வேண்டும் என்ற இரண்டு கண்டிஷன்களுக்கு உட்பட்டே தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
இதயம் பேத்துகிறது ஜவஹர்: இவர் க்ரோம்பேட்டைக்காரர், லக்ஷ்மி, வித்யா என்று சொன்னால் அது பல்லாவரம் லக்ஷ்மி தியேட்டர், தாம்பரம் வித்யா தியேட்டர் என்று புரிந்துகொள்வார் என்பதே மகிழ்ச்சியான விஷயம். குசும்புக்காரர். நல்ல நகைச்சுவை பதிவுகளை எழுதுகிறார்.
பூவனம் ஜீவி: ஜீவி ரொம்ப நாளாக எழுதுகிறார். நான் சமீபத்தில்தான் அவர் ப்ளாகை பார்த்தேன். அவர் எழுத்தாளர்களை பற்றி எழுதுபவை எனக்கு மிகவும் பிடித்தமானவை.
அழியாசுடர்கள்: இது யார் எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. கூட்டு முயற்சியாக இருக்கலாம். கட்டாயமாக படிக்க வேண்டிய தளம்.
நந்தவனம் சூர்யா: சூர்யா எங்கள் சினிமா பதிவுகளின் முதல் ரசிகர். அருமையாக எழுதுபவர்.
பத்திரிகையாளர் ரவி பிரகாஷ் – உங்கள் ரசிகன்: எழுத்தாளர் சாவியிடம் கற்றவர். மிக சுவாரசியமான பதிவர்.
கடைசியாக சிட்டி: சிட்டி புகழ் பெற்ற எழுத்தாளர். இப்போது சிட்டி உயிருடன் இல்லை. நிறைந்த வாழ்வு வாழ்ந்தவர். ஆனால் அவர் எழுதிய ப்ளாக் இன்னும் கிடைக்கிறது. கட்டாயம் புரட்டி பார்க்க வேண்டிய ப்ளாக். ( தி.ஜா.வும் இவரும் இணைத்து நடந்தாய் வாழி காவேரி புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள்.)
கீழே உள்ளவர்கள் பிரபலமானவர்கள் என்று என் லிஸ்டில் சேர்க்கவில்லை.
பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் – தமிழிலே எழுதுவோம்
முரளி கண்ணன் – நீரோடை: இவரை நிச்சயமாக இந்த சீரிஸில் வேறு யாராவது சொல்லி இருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. சினிமா பற்றி இவர் எழுதும் பதிவுகள் எல்லாம் சேகரிக்கப்பட வேண்டியவை.
எழுத்தாளர் உஷா ராமச்சந்திரன் – நுனிப்புல்
செப்டம்பர் 11, 2009
Posted by Bags under
Tamil Culture | குறிச்சொற்கள்:
A.M.M. Arunachalam,
Agarchand Manmal,
Aiyappa,
Andrew Cogan,
Armagoan,
Association of British Scholars,
Chandrakiri Raja,
D.G.S. Dhinakaran,
Damarla Venkatappa,
Dr. Vedagiri Shanmugasundaram,
Dubashi Peeri Thimmappa Chettiar,
Durgarayapatnam,
Elihu Yale,
Fort St. George,
Francis Day,
H.C. Brown & L.C. Mulan,
H.J.Brown,
Indian Overseas Bank,
Jesus Calls,
Karunya Trust,
L.M. Sithalay and Sons,
LIC Building,
M.C.T.M. Chidambaram Chettiar,
Manonmaniam Sundaranar University,
Masoolipatnam,
P.M. Belliappa IAS,
Palaniappa Brothers,
R. Revathi,
S. Muthiah,
Sasi Nayar,
St. George,
Susheela Raveendran,
T.I.A.M. Building,
Travancore Rayons,
Union Jack,
United India Insurance Company,
V. Sriram,
Vincent D'Souza |
1 Comment
(இது ஸ்ரீ. சேதுராமன் அவர்களின் இடுகை)

சென்ற ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி எங்கள் ஊர் ‘சென்னை’க்கு 370 வயது நிரம்பியது. சென்னைவாசிகள் இந்த தினத்தைப் பல்வேறு வகைகளில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். பள்ளிகளிலும், மற்ற பொது இடங்களிலும், சென்னையைப் பற்றியும் அதன் சிறப்பு அம்சங்களைப் பற்றியும் பேச்சுகளும், நடனம், நாடகங்களும் இடம் பெற்றன.
சென்னையின் சிறப்பு சரித்திராசிரியர், திரு எஸ்.முத்தையா அவர்களின் வழி காட்டுதலில், சசி நாயர், வின்செண்ட் டி’சௌசா, சுசீலா ரவீந்திரன், வி.ஸ்ரீராம், ஆர்.ரேவதி ஆகியோர் சிறந்து பணியாற்றினர்.
1639ம் வருஷம், இந்த ஆகஸ்ட் 22ம் தேதியில் தான் தாமர்லா வெங்கடப்பாவும் அவரது சகோதரர் ஐயப்பாவும், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏஜண்ட் ஃப்ரான்சிஸ் டே அவர்களுக்கு, சென்னைக் கடற்கரையோரம் நிலமும், கட்டடங்கள் கட்டவும் ஏற்றுமதி இறக்குமதி செய்ய அனுமதியும் வழங்கினர்.
நீங்கள் எல்லோரும் அறிந்தபடி, ஆங்கிலேயர் நம்மிந்திய நாட்டில் முதன்முறை யாக வந்திறங்கியது சூரத்தில், ஆயிரத்தி ஐநூற்று தொண்ணூற்றியொன்பதாம் வருஷத்தில். அடுத்த வருஷம் ஈஸ்ட் இந்தியா கம்பெனி நிறுவப்பட்டது.
சில காலம் அங்கிருந்த பிறகு, வியாபார முன்னேற்ற நிமித்தம், ஒரு குழு கிழக்குக் கடற்கரையோரமுள்ள மசூலிப் பட்டணம் வந்து சேர்ந்தது. அருகேயுள்ள ஆர்மகோன் (துர்காராயப் பட்டினம்) அடுத்த இலக்கு. முதலில் அங்கே முன்னமேயே வந்திருந்த டச்சு நாட்டினருடன் சேர்ந்து வணிகம் செய்யலாம் என்ற எண்ணத்தை, 1626ல் கைவிட்டனர். அதன் பின்னர் தங்களுக்கென்று ஒரு நிரந்தர இடம் தேடிக் கொள்ள விரும்பி, பல முயற்சிகள் செய்தனர்.
இந்தக் காலகட்டத்தில் விஜயநகர மன்னரின் பிரதிநிதியாக, சந்திரகிரி ராஜா இருந்து வந்தார் – அவரது வந்தவாசி தளபதி தான் தமர்லா வெங்கடப்பா. வெங்கடப்பாவின் சகோதரர் ஐயப்பா சென்னை அருகேயுள்ள பூந்தமல்லியில் அவர்களது நிர்வாகத்தினராயிருந்தார்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏஜண்ட் ஆன்ட்ரூ கோகனும், ஆர்மகோன் நிர்வாகி ஃப்ரான்சிஸ் டேயும், தாமர்லா சகோதரர்களை முன்னமேயே சந்தித்து கம்பெனி கடற்கரையோரம் நிலம் விரும்புவதாகவும், அதற்கு ஆவன செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்திருந்தனர். சமயமறிந்து, சகோதரர்கள் சந்திரகிரி ராஜாவிடம் பேசி அனுமதி பெற்ற பிறகு, கடற்கரையோரமுள்ள ஒரு நிலத்தை கம்பெனிக்கு வழங்க சம்மத்தினர். இதுதான் கூவம் நதிக்கு வடக்கே விஸ்தாரமான நிலம்.
கோகனும் டேயும், 1639 ஜூலை மாதக் கடைசியில் சென்னை வந்து சேர்ந்தனர். பேச்சுகளுக்குப் பிறகு, ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டனர். அதன்படி, இரண்டு வருஷ காலங்களுக்கு, இந்த நிலம் கம்பெனிக்கு அளிக்கப்படும் என்றும், கம்பெனியினர் அங்கு ஒரு கட்டடம் (கோட்டை) கட்டிக்கொள்ளலாமென்றும், அங்கிருந்தபடியே ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் தொடரலாம் என்றும் நிச்சயிக்கப்பட்டது. கம்பெனியிடம் அப்போது நிதி வசதி குறைவாகவே இருந்ததால், கட்டிடச் செலவுகளையெல்லாம், ராஜாவே ஏற்றுச் செய்வதென்றும் இந்தச் செலவுகளை, கட்டிடத்தில் குடியேறியவுடன் கம்பெனி திருப்பித் தர வேண்டும் என்றும் ஒப்பந்தமாயிற்று. இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்ட நாள்தான் ஆகஸ்ட் 22ம் தேதி. இந்த இடம் தாமர்லா சகோதரர்களின் தந்தை சென்ன கேசவ நாயகர் நினைவாக ‘சென்னப் பட்டினம்’ என்று பெயரிடப்பட்டது.
கம்பெனியாருக்குத் துபாஷி பேரி திம்மப்ப செட்டி அவர்கள் – அவரே ராஜாவுக்கும் தாமர்லா சகோதரர்களுக்கும் தரகராகவும் இருந்தார்.
கம்பெனியின் பிரதிநிதிகள் 1640 ஏப்ரலில் 23ம் தேதி, உள் கட்டிடமொன்றின் வேலைகள் நிறைந்தவுடன், குடியேறினர். அந்த நாள் ஆங்கிலேயர்களுக்கு செயிண்ட் ஜார்ஜ் நாளாகையால், குடியேறிய இடத்திற்கும் அவர்கள் ஃபோர்ட் செய்ண்ட் ஜார்ஜ் என்று பெயரிட்டனர் என்று சொல்லப்படுகிறது.
1640ம் வருஷத்திலேயே குடியேறி விட்டாலும், கோட்டையில் யூனியன் ஜாக் கொடி பறந்தது, 1687ம் வருஷம், எலிஹு யேல் கவர்னராகப் பொறுப்பில் இருந்த போதுதான்!
டேயின் போறாத காலம், குடியேறிய சில மாதங்களிலேயே, கம்பெனி டைரக்டர்களின் அனுமதியின்றி எப்படிக் கோட்டை கட்டப் பட்டது என்று விளக்கமளிக்க இங்கிலாந்துக்குத் திருப்பி அழைக்கப் பட்டார். அவர் அளித்த விளக்கம் கம்பெனியாருக்குத் திருப்தியாயிருந்ததால், டே இந்தியாவுக்குத் திரும்ப வரவும், கம்பெனி ஏஜண்ட்டாக (1643-1644) இருக்கவும் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையிலே எவ்வளவோ இடங்கள், கம்பெனியின் அதிகாரிகள் பெயர் தாங்கியும், அரசாண்டவர்கள் பெயர் தாங்கியும் இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக ஃப்ரான்சிஸ் டே பெயரிலோ, அல்லது கோகன் பெயரிலோ ஒரு நினைவுச் சின்னம் கூடக் கிடையாது – சிலைகளோ, படங்களோ, முக்கியமான இடங்களோ அவர்கள் பெயரில் இல்லை – கம்பெனியாரும் மற்றவர்களும் அவர்களை ஏனோ கை கழுவிவிட்டனர்.
***
சென்னையில் இன்னொரு பிரசித்தமான இடம் தன்னுடைய ஐம்பதாவது ஆண்டு நிறையப் பெற்றது. ஏனோ தெரியவில்லை – இதைப் பற்றி யாருமே பேசவும் இல்லை, எழுதவும் இல்லை. இதுதான் சென்னை நகரின் முதல் முதல் “வானளாவி”க் கட்டிடமான, மௌண்ட் ரோடிலுள்ள (தற்போதைய அண்ணா சாலை) எல்.ஐ.சி. கட்டிடமாகும்.

ஐம்பத்தி ஐந்து கிரௌண்டுகளில், பதினான்கு மாடிகளுடன் கூடிய இந்தக் கட்டிடம் 1959ம் வருஷம் ஆகஸ்ட் 23ம் தேதி திறக்கப் பட்டது. இந்தக் கட்டிடத்தின் வேலைகள் 1950லேயே தொடங்கப்பட்டன. எம்.சி.டி.எம் சிதம்பரம் செட்டியார்தான் இக்கட்டிடம் உருவாகக் காரணமாயிருந்தவர். இக்குடும்பத்தினர் இந்தியன் ஒவர்சீஸ் பாங்க் (1937), யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி, திருவாங்கூர் ரேயான்ஸ் (1946) போன்ற வர்த்தக நிறுவனங்களைத் திறம்பட நடத்தி வந்தனர்.
இங்கிலாந்து கம்பெனியான ஹெச்.ஜே.ப்ரௌன் அண்ட் எல்.சி.மூலான் என்ற கட்டிட நிர்மாண நிறுவனம் இவ்வேலைகளை ஆரம்பித்த போதிலும், சில மனஸ்தாபங்கள் காரணமாக அவர்கள் 1957ல் கட்டிட வேலையை மேலே தொடர்ந்து செய்ய முடியாதென்று தெரிந்தவுடன், சென்னை பிரபல ஆர்கிடெக்ட் கம்பெனி “எல்.எம்.சித்தாலே அண்ட் சன்” இந்தப் பொறுப்பை ஏற்று 1959ம் வருஷம் முடித்துக் கொடுத்தது. இந்தக் கட்டிடம் மௌண்ட் ரோடு வாசியான எனக்கு “அண்டை வீடு”. இன்றும் இக்கட்டிடம் பொலிவுடன் விளங்குகிறது!!
எல்.ஐ.சி. வானளாவிக்கு முன், சென்னையில் உயர்ந்த கட்டிடம், பீச் ரோடில் இருந்த ‘T.I.A.M. கட்டிடமாகும். இக்கட்டிடமும் இன்னொரு நகரத்தார் குடும்பம் வசமிருந்தது – அவர்கள் தான் ஏ.எம்.எம்.அருணாசலம் குடும்ப்த்தினர்.. இக்கட்டிடத்தின் முதல் சொந்தக்காரர் கலீலி குடும்பத்தினர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கலீலி குடும்பத்தினர் சிலர் பாகிஸ்தானுக்குக் குடியேறிவிட்டனர். பல வருஷங்கள் டி.ஐ.இடமிருந்த இந்தக் கட்டிடம் இரண்டு வருஷங்களுக்கு முன்னர் கை மாறியதென்றும், இப்போது ‘ஜீசஸ் கால்ஸ்’ நிறுவனரும்,
சிறந்த மத போதகருமான டி.ஜி.எஸ்.தினகரனின், காருண்யா ட்ரஸ்ட்தான் இதன் சொந்தக்காரரென்றும் இக்கட்டிடத்தின் விலை நூறு கோடி ரூபாய் என்றும் தெரிய வருகிறது. இன்கம் டாக்ஸ் வாரியத்திற்கு இதன் மூலம் இருபத்தியாறு கோடி ரூபாய் வரி கிடைத்ததென்று ஹிந்து எழுதியது.
கலீலி குடும்பத்தினரைப் பற்றிப் பேசும்போது, அவர்களது இன்னொரு பிரசித்தி பெற்ற கட்டிடத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது! சென்னை மௌண்ட் ரோடில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ‘கலீல் மான்ஷன்ஸ்’ தான் அது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இந்தக் கட்டிடமும் கைமாறியது. இதன் சொந்தக்காரர் திரு. அகர்சந்த் மான்மல் அவர்கள், கட்டிடத்தின் பெயரும் இப்போது ‘அகர்சந்த் மான்ஷன்ஸ்’ மாறியுள்ளது. 1947ல் நான் சென்னைக்கு வந்த போது, இக்கட்டிடத்திலுள்ள ஒரு தனியார் வர்த்தகக் கம்பெனியில்தான் வேலையிலிருந்தேன். பிரம்மாண்டமான அழகிய கட்டிடம் – இதன் முகப்பை இப்போது பெயர்ப் பலகைகளும், மற்ற கட்டுமானங்களும் அழித்துக் கொண்டிருக்கின்றன.
நகரமே மாறிவிட்டது. இருந்தாலும் எங்களுக்கெல்லாம் வாழ்வளித்த இந்த நகரத்தை மறக்க முடியுமா?
செய்திகள் ஆதாரம்:
டாக்டர் வேதகிரி ஷண்முகசுந்தரம் (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக முதல் துணைவேந்தர்), திரு பி.எம்.பெல்லியப்பா ஐ.ஏ.எஸ்.(ஓய்வு) (தற்போதைய தலைவர் – அசோசியேஷன் ஆஃப் பிரிட்டிஷ் ஸ்காலர்ஸ்) ஆகியோர் MADRAS Chennai – A 400 Year Record of the First City of Modern India – Edited by S. Muthaiah – published by Palaniappa Brothers I Volume 2008) புத்தகத்தில் எழுதிய கட்டுரைகள்
செப்டம்பர் 11, 2009
உரையாடல் போட்டிக்கு நான் அனுப்பிய கதை தேர்வு பெற்றிருக்கிறது. இது எட்டு வருஷங்களுக்கு முன் எழுதிய கதை. இதற்கு முன் இதை படித்தவர்கள் என் மனைவி, என் நண்பர்கள் மனீஷ் ஷர்மா, சஞ்சய் மால்பானி. (தமிழ் தெரியாத நண்பர்களுக்காக ஆங்கிலத்தில் எழுதினேன்). தூக்கம் வராத ஒரு இரவில் நினைவிலிருந்து அந்த கதையை கொஞ்சம் மாற்றி தமிழில் எழுதினேன். இதுதான் நான் எழுதிய முதல் கதை. முதல் கதையே பரிசு பெற்றது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது.
250 கதைகளில் என் கதையையும் சேர்த்து 20 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ஜ்யோவ்ராம் சுந்தரும் பைத்தியக்காரனும் கைக்காசு போட்டு போட்டியை நடத்தி இருக்கிறார்கள். எதிர்பாராத logistics பிரச்சினைகள் வந்தபோது அவர்களே வந்த எல்லா கதைகளையும் படித்து கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த அளவு தீவிர இலக்கிய ஆர்வம் பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த போட்டியின் format இது வரை நான் பார்க்காத ஒன்று. போட்டிக்கு வந்த எல்லா கதைகளும் படிக்க விரும்புபவர்களுக்கு கிடைத்தன. நடுவர்களை தவிர வேறு யாரும் 250 கதைகளையும் படித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் படித்தவற்றில் ஒவ்வொருவருக்கும் இந்த கதை வெற்றி பெறும், இந்த கதை வெற்றி பெறும் என்று கணிப்புகள் இருந்திருக்கும். இந்த format எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் பைத்தியக்காரனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! போட்டியில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள்!
இது நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. காலம் தாழ்ந்துதான் நன்றியே சொல்கிறேன். பைத்தியக்காரனும் ஜ்யோவ்ராம் சுந்தரும் என்னை மன்னிக்க வேண்டும்.
தொடர்புடைய பதிவுகள்:
அம்மாவுக்கு புரியாது சிறுகதை
செப்டம்பர் 10, 2009
நான் பள்ளி மாணவனாக வளர்ந்த காலத்தில் தமிழ் கட்டுரை வகுப்பில் கொடுமையான அனுபவமாக இருந்தது “மரம் தன் வரலாறு கூறுதல்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவது. என்ன எழுதிவிட முடியும் அந்த வயதில்? எழுதுவதற்கு ஒன்றுமே இல்லாதது போல் தெரியும். ஒன்றுமே எழுதாவிட்டால் ஆசிரியரிடம் பிரம்படி படவேண்டுமே, அதற்க்காகவாவது எதையாவது எழுதி வைப்போம் என்று எழுதுவோம். எல்லா மரத்திற்கும ஒரே கதை தான். “நான் செடியாக வைக்கப்ப்ட்டேன், தண்ணீர் ஊற்றப்பட்டேன். சில நாட்கள் எஜமானனின் சோம்பேரி தனத்தால் தண்ணீர் ஊற்றப்படாமல் பட்டினி போடப்பட்டு வதைக்கப் பட்டேன். வெயிலும் மழையும் என் வாழ்நாள் முழுவதும் மாற்றி மாற்றி மீண்டும் மீண்டும் என்னை தாக்கியது. இப்படி சொல்லனா துயரங்களை அனுபவித்த நான் இன்று தலை நிமிர்ந்து நிற்க்கிறேன்” என்றெல்லாம் தத்துப்பித்து என்று உளறிக்கொட்டிக் கொண்டிருப்போம். எல்லோரும் ஆலமரம் அல்லதுவாழைமரம் ஆகியவற்றை அவசர அவசரமாக தேர்வு செய்து எழுதுவோம். ஏனென்றால் அவை இரண்டு பற்றியும் மற்ற மரங்களை காட்டிலும் அதிகமாக எழுதமுடியும் என்ற ஒரு நம்பிக்கை. உதாரணமாக ஆலமரத்திற்கு விழுதுகள் உண்டு. அதில் குழந்தைகள் ஊஞ்சல் கட்டி விளையாடுவார்கள் என்று எக்ஸ்ட்ராவாக எழுதமுடியுமே! இன்னும் ஒரு சில ஞான சிகாமணிக்கள் பசு, எருமை போன்றவற்றை பற்றி நிறைய எழுதிவிட்டு இறுதியில் அப்பேற்பட்ட பசுவை என்னுடன் சேர்த்து கட்டுவார்கள் என்று எழுதி ஆசிரியரின் கோபத்தை பரீட்சித்துப் பார்ப்பார்கள். (இது நகைச்சுவை மட்டும் அன்று. உண்மையில் நடந்திருக்கிறது.) அன்று அவர்களால் சாப்பிடுவதற்க்கு கைகளை உபயோகப்படுத்தமுடியாது.
சுந்தர ராமசாமியின் ”ஒரு புளியமரத்தின் கதை”க்கும் எங்கள் பள்ளிக் கட்டுரைகளுக்கும் பல ஒளி வருடத் தூரம். 1966ல் முதல் பதிப்பு வெளி வந்தது. அப்பொழுது அது தமிழ் இலக்கிய உலகத்தை ஒரு கலக்கு கலக்கி இருக்கவேண்டும். இந்த இலக்கிய படைப்பை வாசித்து உணர்ச்சிப் வசப்பட்ட தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களை தன் வரலாறு கூறும் கட்டுரைகளை எழுதச் சொல்லி துன்புறுத்தியிருக்கலாம் என்பது என் கணிப்பு. எல்லாம் ஒரு அனுபவம் தான்.
இரண்டு சிறுதொழில் வியாபாரிகள் தங்கள் போட்டி பொறாமைகளினால் எவ்வளவு தூரம் இன மதப் பிரச்சனைகளை உருவாக்கமுடியும்? அதன் விடை தான் இந்த கதையின் மையக் கரு. அமைதியாக இருக்கும் ஊரில் குழப்பம் உண்டு பண்ணுவது மட்டுமல்லாமல், இயற்க்கையை அழிக்கவும் முற்படுகிறார்கள். போராடமுடியாத புளியமரம் தோற்றுவிடுகிறது. ஊரை அனாதையாக்கிவிடுகிறது. செல்லத்தாயின் தற்கொலைக்கு பிறகு புளியமரத்திற்கு தெரிந்தது தன்னுடைய கொலை. கூலி அய்யப்பன் தன் மீது பாதரச லேகியத்துடன் ஏறும் பொழுது வாயில்லாமல், கதறமுடியாமல், படபடக்க முடியாமல், மௌனமாக பரிதவிக்கிறது. யாரேனும் வந்துகாபாற்றிவிட மாட்டார்களா என்று நம்மை துடிதுடிக்கச் செய்கிறார் சுரா. அய்யப்னுக்கு கைமேல் பலன் கிடைத்தும் புளியமரம் சாவிலிருந்து தப்பிக்கமுடியாமல், அதனை எதிநோக்கி இருந்தவாறே தன் கடைசி நாள் நிழலை புளியமர ஜங்ஷனை அண்டவரும் மானிடர்களுக்கு அமைதியான சோகத்துடன் அளிக்கிறது. புற்று நோய் கண்ட மனிதர் மருத்துவர்களும், மருத்துவ உலகமும் தன்னை கைவிட்டு அனாதையாக்கிய பிறகு, தன் ஒவ்வொரு அங்கமும் ஒன்றன் பின் ஒன்றாக தன் கண்முன்னால் செயலிழந்து, வாழ்க்கையிலிருந்து தன் உடலும் உயிரும் நழுவி விழுந்துக் கொண்டிருக்கையில், கையையும் மனதையும் பிசைந்துக் கொண்டு தன்னுள் எழும் மரண ஒலத்தை அடக்கியவாறு பரிதவிப்பது போல், மிக சத்தமான மௌனத்துடன், கண்ணீர் சுரக்க வழியில்லாமல், புளியமரம் மெதுவாக இலைகளை உதிர்க்க ஆரம்பிக்கிறது.
வேப்பமூடு ஜங்ஷன் என்று இன்றும் நாகர்கோவிலில் சொல்லப்படும் இடமே புளியமர ஜங்ஷன். வேப்பமரம் ஏன் புளியமரம் ஆகியது என்று தெரியவில்லை. கதையின் வசதிக்காக – புளியமரக் குத்தகை, தோட்டிகள் கல்லெரிதல் போன்ற வசதிக்காக – சுரா மாற்றி இருக்கலாம். வேப்பம் பழம் குத்தகைக்கு போகாதே!. அப்படி போனாலும் திருட்டுத்தனமாக கல்லெறிந்து பறிக்கும் அளவிற்கு வருபவர்கள் குறைவு.
சுராவின் முதல் இலக்கிய நாவல். 58ல் சரஸ்வதி பத்திரிக்கைகாக தனது 28வ்து வயதில் புளியமரம் என்ற தலைப்பில் தொடராக எழுத ஆரம்பித்தார். சரஸ்வதி 4 அல்லது 5 பிரதிகளுடன் படுத்துக்கொண்டது. சுராவும் கிடப்பில் போட்டுவிட்டு, பின்னர் 1966ல் ஒரு முழு இலக்கிய நாவலாக உலகுக்கு அளித்தார். ஆற்றூர் ரவிவர்மா அவர்களால் மலையாளத்திலும், மீனாட்சி பூரி அவர்களால் இந்தியிலும், பெங்குவின் பதிப்பகத்தில் எஸ்.கிருஷ்ணன் அவர்களால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. எபிரேய (Hebrew) மொழியில் ரோனிட் ரிக்கி “Sipuroshel ets Hadalarhindi” என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். ஒரு தமிழ் நாவல் முதன் முதலில் எபிரேய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்ற பெருமை ”ஒரு புளியமரத்தின் கதை”க்கு சேரும். கலாகௌமுதி மலையாள இதழில் தொடராகவும் வந்தது.
செப்டம்பர் 10, 2009
Posted by RV under
Reading,
Tamil Culture | குறிச்சொற்கள்:
Jeyamohan |
[7] Comments
ஜெயமோகன் ஃப்ரீமாண்டுக்கு வருகிறார் என்று தெரிந்தபோது அவரை சந்திக்கப் போவதா வேண்டாமா என்று எனக்கு இரண்டு மனதாக இருந்தது. காரணம் ரொம்ப சிம்பிள் – அவருடன் என்னத்தை பேசுவது? அவரிடம் எனக்கு விஷ்ணுபுரம், பி.தொ.நி. குரல், காடு போன்ற புத்தகங்கள் பெரும் சாதனைகளாக தெரிகின்றன என்று சொல்லலாம். அது அவருக்கு தெரியாமலா இருக்கும்? எனக்கு கன்யாகுமரி பிடிக்கவில்லை என்று சொல்லலாம் – அது அவ்வளவு மரியாதையாக இருக்குமா? வயதாக ஆக புதியவர்களுடன் small talk தவிர வேறு எதுவும் சாத்தியம் இல்லாமல் போகிறது.
அவரை சந்திக்க முக்கியமான காரணம் என் மனைவிதான். ஹேமா திருப்பி திருப்பி சொன்னாள் – அவர் புத்தகங்களை பற்றி நிறைய எழுதுகிறார், உங்களுக்கும் புத்தகப் பித்து அதிகம், போய்ப் பாருங்களேன் என்று ஹேமா கொடுத்த ப்ரெஷரில்தான் நான் அவரை சந்திக்க போனேன்.
நடுத்தர உயரம், பருமன். தலையில் இன்னும் நிறைய கருப்பு முடியும் கொஞ்சம் நரையும் இருக்கிறது, ஆனால் பின் தலையில் வழுக்கை லேசாக தெரிகிறது. (நான் புதிதாக யாரைப் பார்த்தாலும் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்று கவனிப்பேன். சொந்தக் கதை சோகக் கதை) மீசையை எடுத்த பிறகு இன்னும் இளமையாக தெரிகிறார். மலையாள accent உள்ள பேச்சு – Condemborary என்றால் Contemporary என்று அர்த்தம். நாஞ்சில் நாட்டு பேச்சு அவ்வப்போது வருகிறது – சொல்லுதேன் என்பார்.
தங்கு தடையில்லாத பேச்சு. சொல்ல வரும் விஷயம் சாதாரண பேச்சில் கூட பல வருஷம் யோசித்து வைத்தது போல் செறிவாகவும், திட்டவட்டமாகவும் வந்து விழுகிறது. அடுத்தவர்கள் பேச்சை கவனிக்கிறார், பதில் சொல்கிறார் ஆனால் பெரும்பாலும் நடப்பது உரையாடல் இல்லை, லெக்சர்தான். ஒரு ப்ரொஃபஸர் – மாணவர்களோடு நன்றாக கலந்து பேசுபவர் – க்ளாஸ் எடுக்கிற மாதிரித்தான். அது பாந்தமாகவும் இருக்கிறது. ஏனென்றால் மனிதர் படித்திருப்பது நிறைய. வாழ்க்கை அனுபவங்கள் மூலமும், சிந்தனை மூலமும், புரிந்து கொண்டிருப்பதும் நிறைய. விஷயம் தெரிந்தாலும் பலரால் அதை கோர்வையாக எடுத்து சொல்ல முடியாது – இவருடைய பெரிய பலம் சொல்ல வரும் விஷயத்தை கோர்வையாக, ஒரு சதஸில் தன் கருத்தை எடுத்து வைப்பவர் போல் சொல்ல முடிவதுதான்.
தூணையும் பற்றி பேசுவார், துரும்பையும் பற்றி பேசுவார் – சுவாரசியமாக. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் விருந்து உபசரிப்பு முறைகள், இந்திய பண்பாட்டின் கூறுகள், ஜாதியை பற்றி டி.டி. கோசாம்பி என்ன கூறுகிறார், காந்தளூர்சாலை கலமறுத்தருளி என்று ராஜ ராஜ சோழனின் மெய்க்கீர்த்தியில் வருவதன் பொருள் என்ன என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய பேப்பர், திருவண்ணாமலை தீபம் என்ற ஐதீகம் எங்கிருந்து வந்திருக்க வேண்டும் எதை பற்றி வேண்டுமானாலும் பேச ரெடி. மார்க்சிய முறைப்படி வரலாற்று ஆய்வுகள், மலையாள சினிமா, மத்திய பிரதேசத்தில் இருக்கும் வறுமை, இலக்கிய சர்ச்சைகள், மேல் நாட்டு இலக்கியங்கள் எல்லாம் grist to his mill. அதே நேரத்தில் வெட்டி பேச்சு கிடையாது. நடிகை நிலாவுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் என்ன உறவு, நயனதாரா பிரபு தேவா கல்யாணம் நடந்துவிட்டதா என்றெல்லாம் பேசுவதில்லை. சுவாரசியமாக, அதே நேரத்தில் உருப்படியாக பேச வேண்டும் என்பதை ஒரு கோட்பாடாகவே வைத்திருக்கிறார்.
எப்படி மறுத்து பேசினாலும் கோபம் வருவது இல்லை. சுற்றி இருக்கும் யாருக்கும் தன்னை போல் படிப்பும் உழைப்பும் இல்லை, இந்திய வரலாற்றை, தத்துவத்தை, பண்பாட்டை மேலோட்டமாகவே அறிந்தவர்கள் என்று தெரிந்தாலும் அவர்கள் கேட்கும் எந்த இடக்கு மடக்கு கேள்விக்கும் சலிக்காமல் விளக்கம் சொல்கிறார். அவரை எரிச்சல் ஊட்டுவது இரண்டு விஷயங்கள் (எனக்கு தெரிந்து) – ஒன்று அவர் பேசும்போது கவனிக்காமல் பராக்கு பார்ப்பது; இரண்டு இந்தியாவை தாழ்த்தி பேசும் மனப்பான்மை. பலரும் நான் பெரிய பிஸ்தா, இந்தியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற ரேஞ்சில் இவரிடம் பேசி இருக்கிறார்கள் போல தெரிகிறது. நான் பார்த்த கூட்டத்தில் உண்மையில் பிஸ்தா அவர்தான்.
தான் பெரிய எழுத்தாளர், தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்ற பெருமிதம் அவரிடம் இருக்கிறது. (என் கண்ணில் அவர் உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.) ஆனால் கர்வம் என்பது கொஞ்சம் கூட இல்லை. எதிரில் இருப்பவனுக்கு ஒன்றும் தெரியாது என்ற மனப்பான்மை துளியும் இல்லாதவர். அடுத்தவர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து அதை மறுத்தோ ஆமோதித்தோ விளக்கம் சொல்வார். நாம் ஏதாவது சொல்லும்போது கவனிக்காமல் பராக்கு பார்க்கும் பழக்கம் கிடையாது.
ராத்திரி தூங்கவே மாட்டாரோ என்று தோன்றியது உண்டு. ஒரு நாள் இரவு பனிரண்டு ஒரு மணி வரை பேசிவிட்டு வீட்டுக்கு வந்தேன். கம்ப்யூட்டரை திறந்து பார்த்தால் நான் வீட்டுக்கு வந்த பதினைந்து நிமிஷத்துக்குள் இரண்டு பதிவு போஸ்ட் செய்திருக்கிறார். அட ஏற்கனவே எழுதி வைத்திருந்தாலும் அதை கடைசி ஒரு முறை சரி பார்க்க மாட்டாரா?
அவருடன் நாலைந்து முறை பேச முடிந்தது. ராஜன் வீட்டில் சில முறை சந்தித்தோம்; என் மற்றும் பக்ஸ் வீட்டுக்கு வந்தார். ஒரு கலந்துரையாடலில் வந்தவர்களை அப்படியே கட்டிப்போட்டுவிட்டார். ஒரு உரை, மற்றும் கேள்வி பதில் நன்றாக அமைந்திருந்தது. இவரை மாதிரி ஒரு தமிழ் இல்லை சரித்திர வாத்தியார் இருந்தால் அது பெரிய அதிர்ஷ்டம்.
சுருக்கமாக சொன்னால் அவரை இன்னும் 4 முறை பார்த்திருக்கலாமே, இன்னும் பேசி இருக்கலாமே, பேசுவதை கேட்டிருக்கலாமே, என்று தோன்றுகிறது. மிக அபூர்வமான மனிதர். அவர் எழுத்துக்கள் மட்டும் இல்லை, அவர் பேச்சும் மீண்டும் மீண்டும் யோசிக்க வைக்கிறது. என்னவோ ஊரிலிருந்து நிறைய நாளாக பார்க்காத ஒரு அதி புத்திசாலி ஒன்று விட்ட அண்ணன் வந்து போனது போல் இருக்கிறது.
என்னதான் சொன்னார்? அது இன்னொரு பதிவில்.
தொடர்புடைய பதிவுகள்
ஜெயமோகன் ஃப்ரீமாண்டில் ஆற்றிய சொற்பொழிவு
ஏழாம் உலகம்
செப்டம்பர் 8, 2009
Posted by Bags under
Uncategorized | குறிச்சொற்கள்:
Aathichchanallur,
Akbar,
British,
Caribbean Islands,
Chengiz Khan,
City,
Europe,
Fiji Islands,
Gandhaaram,
George Bush,
Great Bengal Famine,
Herman Hess,
Iraavatham Mahadevan,
Jawaharlal nehru,
Jehangir,
Jeyamohan,
Kongu Naadu,
Lord Wavell,
Marathi Empire,
MGR,
Moin Khan,
MuthumakkaL thaZhi,
Naa. Ganesan,
Nagaram,
Shah Jehan,
Thathu Varuda Pancham,
To the People of India Cheque,
Turkey,
Vijayanagar Empire,
West Indies Islands |
[2] Comments

எழுத்தாளர் ஜெயமோகன் கலிஃபோர்னியா மாநிலத்தில், ஃப்ரீமாண்ட் நகரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5, 2009) தனது இரண்டு மாத கால அமேரிக்க சுற்றுப்பயணத்தின் இறுதி சொற்பொழிவை ஆற்றினார். சுமார் 100 பேர் வந்திருந்து அரங்கை நிறைத்தனர்.
அருமையான உரை. RV, நான் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சென்றிருந்தோம்.
இதை இங்கு காணலாம் – http://jeyamohan.in/?p=3891
வாசகர்களின் வசதிக்காக இங்கேயும் மீள்பதிகிறேன் (முறையாக அனுமதி பெறாததற்குஜெயமோகன் மன்னிப்பாராக)
ஜெயமோகன் உரை:

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர் ‘சார் என் குரலை தெரியுதா?’ என்றார். நான் தெரியவில்லையே என்றேன். ‘நான் எம் ஜி ஆர் ரசிகன் சார்…உங்களை போனவருஷம் கூப்பிட்டு திட்டியிருக்கேன்” என்றார்
சென்றவருடம் நான் எழுதிய சாதாரணமான நகைச்சுவைக்கட்டுரைகளை ஆனந்த விகடன் பெரிதுபடுத்தியமையால் ஒரு விவாதம் எழுந்தது நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் மனம் புண்பட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலர் என்னை ·போனில் கூப்பிட்டு கடுமையாக வசை பாடினார்கள். அதில் ஒருவர் அவர்
எனக்கு குரல் தெரியவில்லை. இருந்தாலும் தெரிகிறது என்றேன். ”சார் என்பேரு கணேசன், டெய்லரா இருக்கேன். நான்லாம் குடிச்சு சீரழிஞ்சவன் சார். வாத்தியார் படம்பாத்துத்தான் திருந்தினேன். இன்னைக்கு நல்லா இருக்கேன்…” என்றார் கணேசன் ”…வாத்தியார் செத்தபிறகுதான் சார் நான்லாம் படமே பாக்க ஆரம்பிச்சேன். அவரு என் தெய்வம். அவர நீங்க கிண்டல் பண்ணினதாலே கொஞ்சம் ஜாஸ்தியா பேசிட்டேன். மன்னிச்சுக்குங்க…”
”பரவாயில்லை.உங்க மனசு எனக்கு புரியுது…” என்றேன். ”அதில்லை சார்…நான் ரொம்ப ஓவரா பேசிட்டேன். மன்னிச்சுக்குங்க…” என்றார் அவர். ”சரிங்க” என்றேன். ”மனசிலே ஒண்ணும் வைச்சுக்காதீங்க சார்” ”இல்லைங்க கணேசன்..நான் அதை அப்பவே விட்டாச்சு…”
”இல்ல சார், இப்ப எனக்கு பையன் பொறந்திருக்கான். என் மனைவி என்ன சொல்றான்னா நீங்க சரஸ்வதி கடாச்சம் உள்ளவரு. உங்களை திட்டினதனாலே பையனுக்கு படிப்பு வராம போயிடும்கிறா சார்…” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ”அதெல்லாம் ஒண்ணும் இல்லை கணேசன்…”என்றேன்
”நீங்க என்னைய மன்னிக்கணும் சார். பையனை ஆசீர்வாதம் பண்ணணும்..” ”கண்டிப்பா…பையனுக்கு என்னோட ஆசீர்வாதம் முழுக்க உண்டு…” ”பையனுக்கு முனியராஜ்னு பேருசார்..” ”முனியராஜுக்கு நல்லாவே படிப்பு வரும். நான் ஆசீர்வாதம் பண்ணியாச்சு …” ”ரொம்ப தாங்க்ஸ் சார்…ஊருக்கு வந்தா புள்ளைய பாக்க எங்கூட்டுக்கு வாங்க சார்”
கணேசனின் மனநிலையைக்குறித்தே யோசித்துக்கொண்டிருந்தேன். அவருக்கு எழுத்தாளனைப்பற்றியோ இலக்கியம் பற்றியோ ஒன்றும் தெரியாது. ஆனால் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’ என்ற ஞானம் அவருக்கு நம் மரபால் அளிக்கப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக் நம் நாட்டில் ஒருவேளை கல்வி பரவலாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் கல்வியை வழிபடும் ஒரு மனநிலை எப்போதும் எங்கும் இருந்துகொண்டிருக்கிறது.
இப்போது தென் தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரிலும் அருகிலும் புராதனமான தாழிகளும் பானைகளும் கிடைக்கின்றன. குறைந்தது ஐயாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட ஒரு நாகரீகத்தின் சாட்சியங்கள் அவை. அவற்றை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள் சொல்லும் முக்கியமான ஒரு கருத்து உள்ளது. அவற்றில் அன்றாட உபயோகத்துக்குரிய மண்பானைகளில்கூட எழுத்துக்கள் உள்ளன. அதாவது எழுத்து என்பது தினசரி வாழ்க்கை சார்ந்ததாக இருந்திருக்கிறது. சாதாரணமாக பானைகளை புழங்கியவர்களுக்குக் கூட எழுத்தும் வாசிப்பும் தெரிந்திருக்கிறது. கல்வி பரவலாக ஆகிவிட்டிருந்த ஒரு காலகட்டம் அது
எத்தனை தொன்மையான காலம் அது! இன்று நாகரீகம் மிக்க நாடுகளாக இருக்கும் பல பிரதேசங்களில் சுட்டுத்தின்னத்தெரியாத தொல்குடிகள் வாழ்ந்திருந்த காலம்! உலகின் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்கள் வேட்டைக்கருவிகளையோ ஆடைகளையோ கண்டறிந்திராத காலம்!
அந்த மரபு தொடர்ச்சியாக இருப்பதையே நாம் சங்க காலத்தில் காண்கிறோம்.
காமம் காமம் என்ப
காமம் அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்
முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்
மூதாதைவந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளாயே
பெரிய தோள் கொண்டவனே, காமம் காமம் என்று சொல்கிறார்களே அது தெய்வம் ஆவேசிப்பதோ அல்லது நோயோ அல்ல. நினைத்துப்பார்த்தால் மேட்டு நிலத்தில் முளைத்த இளம்புல்லை பல்போன பசு சப்பிப்பார்ப்பதைப்போல ஒரு தீரா விருந்து
என்ற அபாரமான கவிதையை பாடியவன் கொல்லன் அழிசி. இரும்படிக்கும் தொழிலாளி. ஆனால் இக்கவிதை தொழிலாளர் பாடும் ஒரு நாட்டுப்புறப்பாடல் அல்ல. கனகச்சிதமான செவ்வியல் வடிவம் கொண்டது. ஒரு சொல் கூட இதில் மிகை இல்லை. கவிதை சொல்லியதைவிட சொல்லாது குறிப்புணர்த்திய விஷயங்களாலேயே தன்னை நிகழ்த்துகிறது. இரண்டாயிரம் வருடத்தில் கவிதையிலக்கணம் எத்தனையோ முறை மாறியபின்னரும் அழியாத கவித்துவம் கொண்டது. என்றும் நிலைத்திருக்கும் மகத்தான விவேகம் ஒன்றை முன்வைக்கிறது.
செவ்வியல் சாதாரணமாக உருவாகி வரக்கூடியதல்ல. செவ்வியலுக்குபின்னால் ஒரு நீண்டகால இலக்கிய வரலாறு இருந்தாகவேண்டும். கவிதைகள் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு செம்மைசெய்யப்பட்டு வந்திருக்க வேண்டும். அதன் விளைவாக அச்சமூகத்தில் கவிதையின் வடிவம் குறித்தும் உள்ளடக்கம் குறித்தும் ஒரு தெளிவு உருவாகி வந்திருக்கும். அதுவே செவ்வியல் இலக்கணமாக ஆகிறது
மேலும் அச்சமூகம் ஒரு பெரும் பண்பாட்டு பின்புலம் கொண்டதாக இருக்கவேண்டும். குடிமைநீதி கொண்டதாக, தத்துவ விவாதம் நிகழ்ந்து கொண்டிருப்பதாக அச்சமூகம் இருந்தாகவேண்டும். அப்போதுதான் செவ்வியலின் சாராம்சமாக இருக்கும் விவேகத்தை அச்சமூகம் அடைய முடியும். அதாவது கொல்லன் அழிசி ஒரு தனி மனிதன் அல்ல. அவன் ஒரு பெரும் பண்பாட்டு மரபின் துளி. கல்வி ஓங்கியிருந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதி
இங்கே அமெரிக்காவெங்கும் சென்றபோது நான் மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஒரு கேள்வி உண்டு. என்ன ஆயிற்று இந்தியாவுக்கு என்று. இந்திய மரபின் பெருமைகளை நாம் பேசுகிறோம். ஆனால் நாம் பழைமையை எண்ணி மட்டுமே பெருமைகொள்ள வேண்டிய ஒரு மக்கள்கூட்டம் மட்டும்தானா? நண்பர்களே, இக்கேள்வியை என்னிடம் கேட்காதவர்களே அனேகமாக கிடையாது.
அதற்கு நான் ஒரு சிறு வரலாற்றுச் சித்திரத்தை அளிப்பதுண்டு. வரலாற்றில் எப்போதும் நிகழும் ஓர் அபத்தமான பரிணாமகதி.
ஹெர்மன் ஹெஸ்ஸி ‘நகரம்’ என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்தக்கதை ஒரு நகரம் நூற்றாண்டுகள் வழியாக எப்படி பரிணாமம் கொண்டது என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான கவித்துவமான சித்திரம். அந்நகரம் முதலில் வேட்டைக்காரர்கள் ஓய்வெடுக்கும் மையமாக உருவாகியது. பின்னர் அந்தவேட்டைக்காரர்கள் ஒரு குடியாக ஆனார்கள். உக்கிரமான போர்வீரர்களாக மாறினார்கள். அவர்கள் பிற நிலப்பகுதிகளை தாக்கிக் கொள்ளையடித்தார்கள். கொள்ளையடித்த செல்வத்தால் மேலும் ஆயுதங்களை செய்தார்கள். அந்த ஆயுதத்தால் மேலும் கொள்ளையடித்தார்ககள்.
மெல்ல மெல்ல அந்நகரம் செல்வ வளம் மிக்கதாக ஆகியது.செல்வம் உயர்பண்பாட்டை உருவாக்கியது. கல்வியை வளர்த்தது. கல்வி மேலும் சிறப்பான விழுமியங்களை உருவாக்கியது. கலைகளும் இலக்கியங்களும் வளர்ந்தன. அந்நகர மக்கள் பண்பட்டவர்களாக ஆனார்கள். காலம் செல்லச்செல்ல அம்மக்கள் போரை மறந்தார்கள். வன்முறையை இழந்து நுண்ணிய மனம் கொண்ட சான்றோர்களாக ஆனார்கள்.
அந்நிலையில் அருகே இருந்த இன்னொரு காட்டுப்பகுதியில் வாழ்ந்த ஒரு வேட்டைக்குழுவினர் ஆயுதங்களுடன் திரண்டு வந்து அந்நகரத்தை தாக்கினார்கள். அந்த மூர்க்கமான மக்களை இந்த நகரத்து மக்களால் எதிர்கொள்ள முடியவில்லை. நகரம் சூறையாடப்பட்டது. எரியூட்டப்பட்டது. அந்நகரின் செல்வம் முழுக்க அதைவிட்டு அகன்றது. அது நினைவுகளின் நகரமாக ஆகிறது.
இதுவே மானுட வரலாறு. இந்திய வரலாற்றில் ஒரே ஒரு வித்தியாசம்தான். இந்தியா வன்முறைமூலம் பிறரை சூறையாடுவதன்மூலம் அதன் செல்வத்தை அடையவில்லை. அதற்கான தேவை அதற்கு இருக்கவில்லை. முடிவிலாத இயற்கை வளம் மிக்க மண் அதற்கு வாய்த்தது. ஜீவநதிகளின் கரையில் அதன் நாகரீகம் வளர்ந்தது.
பத்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வரலாறு என்பது செல்வச்செழிப்பின் பண்பாட்டுச்செழிப்பின் வரலாறு. அதன் பின்னர் வரண்ட பாலைநில மக்களின் மூர்க்கமான தாக்குதல்களால் அதன் அனைத்து அமைப்புகளும் ஆட்டம் கண்டன. பேராலயங்கள் இடித்தழிக்கப்பட்டன. நகரங்கள் குலைந்தன. தட்சசிலா பல்கலையும் நாலந்தா பல்கலையும் எரியூட்டப்பட்டன. இந்த மண்ணின் வளர்ச்சியும் மேன்மையும் தேக்கம் கண்டன.
காந்தாரம் முதல் துருக்கி வரை பரவியிருந்த அந்த பாலைநில மக்களுக்கும் பின்னர் அதுவே நிகழ்ந்தது. அவர்கள் கீழை நாடுகளைச் சூறையாடிப் பெற்ற செல்வத்தால் செழித்தார்கள். காலப்போக்கில் உயர்பண்பாட்டை உருவாக்கினார்கள். அவர்களை சூறையாட மங்கோலியப் பாலைநிலத்தில் இருந்து ஜெங்கிஸ்கான் கிளம்பி வந்தான்.
வரலாறு அளித்த பெரும் அடிகளுக்குப்பின் இந்த தேசம் மீண்டும் தளிர்த்தது இரண்டு வழிகளில். ஒன்று இந்த மண்ணின் பன்முகத்தன்மையை உணர்ந்து இதை மீண்டும் கட்டி எழுப்பிய விவேகம் மிக்க முகலாய ஆட்சியாளர்களால். அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான் ஆகியோரின் ஆட்சியில் பல சிக்கல்களையும் தாண்டி இந்த தேசம் இன்னொரு வகையில் தன்னை திரட்டிக்கொண்டு மேலெழுந்தது. இந்நிலப்பரப்பில் உறுதியான ஆட்சியும் பொருளியல் நிர்வாகமும் உருவாகியது. இந்தன் செல்வம் அன்னியப்படைகளால் சூறையாடப்படாமல் காக்கப்பட்டது
இன்னொன்று முகலாய ஆட்சிக்கு எதிராக எழுந்த இரு பேரரசுகளால். முதலில் விஜயநகரப்பேரரசு. பின்னர் மராட்டியப்பேரரசு. இந்நாட்டின் பண்பாட்டுப்பாரம்பரியம் அவர்களால் பாதுகாப்பட்டது. நாம் இன்று காணும் பண்பாட்டுச் சின்னங்கள் அனைத்துமே அவர்களால் உருவாக்கப்பட்டன. பின்னடைவிலிருந்து சற்றே மீள நாம் முயன்ற காலம் இது எனலாம்.
ஆனால் நமக்கு வரலாறு மேலும் அடிகளை வைத்திருந்தது. முகலாய அரசு மீது ஜெங்கிஸ்கானின் பலத்த தாக்குதல் நிகழ்ந்தது. அந்த மரண அடியில் இருந்து அது மீளவேயில்லை. டெல்லி ஆட்சி வலுவிழந்து சிதறியது. மராட்டிய, விஜயநகர அரசுகள் அந்த சிதறிய அரசின் பகுதிகளுடன் மோதி சீரழிந்தன. இந்தச் சிதறிய துண்டுகள் ஒன்றுடன் ஒன்று போராடின. இந்தியா முழுக்க போரின் அழிவும் அராஜகமும் நிலவியது. நாம் மேலும் பின்னடைவை சந்தித்தோம்.
நமது பண்பாடு முந்நூறு வருடப்பின்னடைவைச் சந்தித்த அதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் அவர்களின் பண்பாடு பலமடங்கு வேகத்துடன் முன்னோக்கிப் பாய்ந்தது. அவர்கள் உலகையே காலனியாக்கினார்கள். நம்மை அவர்கள் அடிமை கொண்டார்கள்.
ஒரு சமூகம் இயற்கையை எதிர்கொள்ளும் சவால்கள் மூலம் அது தன் தனித்தன்மைகளை உருவாக்கிக் கொள்கிறது என்று சொல்லலாம். நமது பண்பாட்டு வெற்றிகள் இந்திய நிலத்தின் நதிகளாலும் மழையாலும் காடுகளாலும் மக்கள் பெருக்கத்தாலும் நாம் அடைந்தவை.
அப்படிப்பார்த்தால் எந்த இயற்கைச் சக்தி ஐரோப்பாவை உருவாக்கியது? ஒன்று, குறைவான மக்கள்தொகை. இரண்டு, குளிர்காலம். மூன்று கடல்வழித்தொடர்பின் கட்டாயம். மக்கள்தொகைக்குறைவும் குளிரும் அவர்களை கருவிகளையும் இயந்திரங்களையும் நோக்கித்தள்ளிக்கொண்டே இருந்திருக்கிறது. குளிர் காரணமாக புதிய எரிபொருட்களுக்கான நிரந்தரமான தேடலில் இருந்தார்கள். கடல் அவர்களை மாலுமிகள் ஆக்கியது. குளிர் இல்லையேல் நிலக்கரியை கண்டிருக்க மாட்டார்கள். ஆவிக்கப்பல்கள் தோன்றியிருக்காது. புதிய வணிக வழிகளை, வெடி ஆயுதங்களை அறிந்திருக்கமாட்டார்கள். உலகம் மீது அவர்களுக்கு மேலாதிக்கம் உருவாகியிருக்காது.
உண்மையில் இதெல்லாம் ஊகங்கள். சில பகுதிகள் சில வரலாற்றுச் சந்திகளில் ஏன் எழுந்து வருகின்றன என்பது ஒரு வரலாற்றுப்புதிர் தான். எப்படியோ ஐரோப்பா உலகத்தை உண்ண ஆரம்பித்தது. பேரரசுகள் பெரும் நிலப்பகுதிகளை கொள்ளையடித்தே உருவாக முடியும். ஐரோப்பாவில் ஒரே சமயம் எட்டு பேரரசுகள் உருவாயின. அவர்களுக்கு பூமி போதவில்லை
நண்பர்களே, இந்தியா பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் ஒரு சீரழிந்த நிலையை அடைந்திருந்தது. அந்த சீரழிந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு காலனிய ஆட்சிகள் இந்தியாவில் வேரூன்றின. முதலில் போர்ச்சுகல் ஆட்சி. பின்னர் டச்சு ஆட்சி. பின்னர் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும்
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நிலையான உறுதியான ஆட்சி ஒன்றை உருவாக்கினார்கள். புறவயமான நீதியமைப்பை நிறுவினார்கள். போக்குவரத்து துறையை நவீனப்படுத்தி இந்தியா நவீனமயமவதை தொடங்கி வைத்தார்கள். ஆனால் பதினொன்றான் நூற்றாண்டு துருக்கிய ஆப்கானிய படையெடுப்புக்குப் பின்னர் இந்தியாவின் செல்வம் பெருமளவில் கொள்ளை சென்றது பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்திலேயே.
நமது பேரிலக்கியங்களை எடுத்துப்பார்த்தால் பஞ்சங்களைப் பற்றிய குறிப்புகள் வந்தபடியே இருக்கின்றன. மகாபாரதத்திலேயே மழை பெய்யாமல் அங்கநாடு வரண்டதைப்பற்றிய குறிப்பு உள்ளது. ஐவகை நிலமும் வயின் வயின் திரிந்து பாலை ஆகும் என்று தமிழிலக்கணம் சொல்கிறது. காரணம் நம் நாடு பருவமழையை நம்பி இருக்கும் பகுதி. ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாகும் பெரும் பஞ்சங்களை நாம் சந்தித்ததே இல்லை! அதைப்பற்றிய குறிப்பே நம் இலக்கியத்தில் இல்லை.
ஏன் என்றால் பாலைநிலங்களில் பஞ்சத்தால் மக்கள் மடிவதில்லை என்பதே காரணம். பஞ்சம் வருமென அவர்களுக்குத் தெரியும். அதைச் சமாளிக்க அவர்கள் பயின்றிருப்பார்கள். அதற்கான சமூகஅமைப்புகள் அவர்களிடம் இருக்கும்.
இந்தியாவெங்கும் இருந்த பொது நிதி அமைப்பு பஞ்சம் தாங்கும் தன்மை கொண்டது. சில இடங்களில் விளைச்சலில் நாலில் ஒருபங்கு கூட வரியாக விதிக்கப்பட்டிருந்தது. அவற்றில் நேர் பாதி அந்தந்த இடங்களில் கோயில்களிலும் பிற களஞ்சியங்களிலும் சேமிக்கப்பட்டது.
பஞ்சம் வரும்போது பெரும் பொதுக்கட்டுமானங்கள் செய்யபப்ட்டன. இந்தியாவின் பெரும் கோபுரங்கள் பெரும்பாலும் பஞ்ச காலத்தில் கட்டப்பட்டவையே. ஏரிகள் பஞ்ச காலத்தில் வெட்டப்பட்டவையே. கோபுரம் கட்டினால் பஞ்சம் நீங்கும் என்ற நம்பிக்கையாக இந்த பொருளியல் திட்டம் அக்காலத்தில் இருந்தது. அவ்வாறு செல்வம் வினியோகம் ஆகி பஞ்சம் நீங்கியது– கீய்ன்ஸின் பொருளியல் கொள்கையேதான்
ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி உருவான ஐம்பதே வருடத்தில் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆண்ட பகுதிகளில் கடுமையான பஞ்சம் வந்தது. 1776ல் வந்த முதல் பஞ்சத்தில் கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் செத்து அழிந்தார்கள். கிரேட் பெங்கால் ·பேமைன் என்று சொல்லப்படுகிறது இது. தமிழில் தாது வருடப்பஞ்சம் என்று.
அதுவரை நாம் அத்தகைய பஞ்சத்தைப் பார்த்ததில்லை. ஆகவே நம் நாட்டுப்புற இலக்கியங்களில் எல்லாமே அந்தப் பஞ்சத்தைப்பற்றிய வருணனைகள் திகட்டத் திகட்ட இடம்பெற்றன. மீண்டும் அடுத்த பெரும் பஞ்சம் 1884ல் வந்தது. 15 லட்சம் பேர் இறந்தார்கள்.
ஏன் இத்தனை மரணம்? ஏன் என்றால் பஞ்சத்தை சமாளிக்கும் இந்திய அரச அமைப்புகள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சியால் செயலிழக்க வைக்கப்பட்டிருந்தன என்பதே. இந்திய சமூகத்தில் இருந்த உபரி சேமிப்பு முழுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஒட்டச்சுரண்டப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக இந்திய அரசாங்கத்திலும் கோயில்களிலும் நிலப்பிரபுக்களிலும் சேர்ந்திருந்த செல்வம் முழுக்க வெளியே போய்விட்டது!
பிரிட்டிஷ் வரிவசூல் முறையே இதற்குக் காரணம். சிறுகச் சிறுக வரியை ஏற்றிக்கொண்டே இருந்தார்கள் பிரிட்டிஷார். அவர்கள் ஐரோப்பாவில் நடத்திய எல்லா போர்களுக்கும் இந்தியாவில் வரி வசூல் செய்தார்கள். எத்தனை வரிபோட்டும் அவர்களின் உலக அரசாங்கத்தின் போர்ச்செலவை சமாளிக்க பணம் போதவில்லை.
பிரிட்டிஷார் தாங்கள் ஆண்ட பகுதிகளில் ஜமீந்தார்களை நியமித்து அவர்களிடம் வரி வசூலித்தார்கள். தங்களுக்குக் கட்டுப்பட்ட மன்னர்களிடம் ஒட்டுமொத்த வரிவசூல் செய்தார்கள். அதாவது வரிவசூல் செய்வது மட்டுமே அவர்களின் வேலை. ஆட்சி செய்ய வேண்டியவர்கள் இந்திய மன்னர்களும் ஜமீந்தார்களும்தான். இந்தியாவின் எந்த பிரச்சினைக்கும் பிரிட்டிஷார் பொறுப்பல்ல. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய மக்களுக்கு எதுவுமே செய்யவேண்டியதில்லை. தங்கள் ஆட்சி வசதிக்காக சில இடங்களில் சாலைகளையும் ரயில்பாதைகளையும் தபால்நிலையங்களையும் அமைத்தது தவிர அவர்கள் எதையுமே செய்யவில்லை.
ஒட்டச்சுரண்டப்பட்ட இந்தியாவில் முதலில் மன்னர்களிடம் இருந்த செல்வம் போயிற்று.பிறகு கோயில் செல்வங்கள் போயின. கடைசியாக தனிப்பட்ட விவசாயிகள் வைத்திருந்த குறைந்தபட்ச சேமிப்புகள் கூட பறிபோயின. அதன்பின் பஞ்சம் வந்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக செத்துக்குவிந்தார்கள். இன்று கிழக்கே ·பிஜி தீவுகள் முதல் மேற்கே வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் வரை உலகம் பரவியிருக்கும் இந்தியர்கள் அந்த பெரும்பஞ்சங்களில் ஒருவேளை சாப்பாட்டுக்காக தங்களைத்தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்டவர்கள்தான்
இந்தப் பெரும்பஞ்சங்களில் மக்கள் சாகும்போதே பிரிட்டிஷ் ஆட்சி பஞ்சாபில் இருந்து கோதுமையை தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றது. தென்னகத்தில் இருந்த காடுகளை வெட்டி மரங்களைக் கொண்டு சென்றது. இதற்கு அப்பால் லார்ட் வேவல் பஞ்சத்துக்கு ஒரு விளக்கமும் அளித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தமையால் நிறைய சாப்பிட்டுவிட்டார்கள். ஆகவேதான் பஞ்சம் வந்தது என்று. அவர்தான் நம் ஜார்ஜ் புஷ்ஹ¤க்கு முப்பாட்டா!
இந்தியா சுதந்திரம் கிடைக்கும்போது பஞ்சப்பராரி நாடாக இருந்தது நண்பர்களே. 1943ல் தென்னகத்தில் வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் செத்தார்கள். மீண்டும் 1950களில் வடக்கே வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் தெருவுக்கு வந்தார்கள்.
ஆனால் இப்போது நேரு தலைமை தாங்கிய அரசாங்கம் இருந்தது. உலகம் முழுக்க கையேந்தி பிச்சை எடுத்து மக்களைக் காப்பாற்றினார் நேரு. இக்காலகட்டத்தில் அமெரிக்கா செய்த உதவி என்றும் இந்தியா நினைக்கத்தக்கது. அப்போதைய அமெரிக்க தூதர் மொய்னிகான் இந்தியாவுக்கு ‘டு த பீப்பிள் ஆ·ப் இண்டியா’ என்று எழுதிய செக் தான் உலக வரலாற்றிலேயே ஒரு தர்மகாரியத்துக்காக எழுதப்பட்ட மிகப்பெரிய செக் என்று ஹ¥ஸ்டனில் ஆய்வாளர் நா.கணேசன் சொன்னார். நூறுகோடி இந்திய ரூபாய்! அந்த நன்றிக்கடனுக்காக இந்தியா அமெரிக்காவுக்கு ஐந்துகோடி ரூபாய்க்கு புத்தகங்கள் அளித்ததாம். அந்நூல்கள் இன்றும் பெர்க்கிலி பல்கலையில் உள்ளனவாம்.
அந்த நாடு எப்படி முன்னேறியது? முதல் இருபது வருடம் உலகம் முழுக்க சென்று சமாதானக்கொடியை பறக்கவிட்டுக்கொண்டே இருந்தார் நேரு. கையிருப்பின் எல்லா செல்வத்தையும் செலவழித்து அணைகள் கட்டினார். இந்திய விளைநிலத்தின் அளவை நாற்பது சதவீதம் பெருக்கினார். அதன் விளைவாக பஞ்சம் அழிந்தது. இந்தியா உணவை உபரியாக உற்பத்தி செய்தது. பொதுத்துறையை நிறுவி மெல்ல மெல்ல இந்திய தொழில்களை உருவாக்கி வளர்த்தார்
வெறும் ஐம்பதாண்டுகள். இன்று உலகின் மாபெரும் வளரும் பொருளாதாரங்களில் ஒன்று நம்முடையது. சிந்தித்துப்பாருங்கள் பஞ்சத்தால் மக்கள் சாகும் எத்தியோப்பியா 2060 ல் ஓர் உலக பொருளியல்சக்தியாக ஆகுமென்றால் அது எத்தனை பெரிய ஆச்சரியம்! அந்த ஆச்சரியம்தன் இந்தியாவில் நடந்தது!
இந்தியாவின் இறந்த காலத்துக்காக மட்டுமல்ல அதன் நிகழ்காலத்துக்காகவும் நீங்கள் பெருமைப்படலாம். ஆம், நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.நம்மிடம் வறுமை இருக்கிரது. ஊழல் இருக்கிறது. எத்தனையோ சமூகத்தீமைகள் இருக்கின்றன. ஆனால் நாம் வந்த தூரம் அதிகம். பிரமிப்பூட்டும் அளவுக்கு அதிகம்.
நண்பர்களே அது இந்த அமெரிக்கா வந்த தூரத்தைவிட அதிகம் என்றால் ஆச்சரியப்படுவீர்க்ள். சொல்லப்போனால் மொத்த ஐரோப்பா வந்த தூரத்தை விட அதிகம்! சிந்தனை செய்து பாருங்கள். அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கனடாவும் அந்த புதிய நிலத்தின் அளவில்லாத கனிவளத்தை பயன்படுத்தத்த்தான் நவீன மயமாவதற்கு தேவையான முதலீட்டை உருவாக்கிக் கொண்டன. உலகநாடுகளில் பாதியை காலனியாக ஆக்கி சுரண்டி அந்தச் செல்வத்தை பயன்படுத்திக்கொண்டுதான் ஐரோப்பா நவீனமயமாகியது
நவீனமயமாதல் என்பது மூன்று தளங்கள் கொண்டது. ஒன்று நவீன போக்குவரத்து, செய்தித்தொடர்பு , நவீனக் கல்வி ஆகியவற்றின் மூலம் ஒரு சமப்படுத்தபப்ட்ட தரப்படுத்தப்பட்ட சமூகத்தை உருவாக்குதல். இரண்டு, நவீன தொழில் உற்பத்தி முறைகள் மூலம் ஒட்டுமொத்த பொருளியல் அமைப்பை உருவாக்குதல். மூன்று நவீன ஜனநாயக அரசு. இதில் முதல் மூன்றுக்கும் பெரும் முதலீடு தேவை
நாம் பட்டினிதேசமாக ஆரம்பித்தோம். முதலீடே இல்லாமல் நவீன யுகத்தில் நுழைந்தோம். எப்படி நாம் நம்மை உருவாக்கிக் கொண்டோம்? ஒரு முப்பது வருடத்தை உங்களால் பார்க்கமுடிந்தால் அதைக் கண்கூடாகவே காணமுடியும். வெறும் மேய்ச்சல்நிலமாக இருந்ததுதான் கொங்குமண்டலம். அங்கே சுற்றிலும் பரம்பிக்குளம் ஆளியாறு மேல்பவானி கீழ் பவானி அமராவதி குந்தா என அணைகள் எழுந்தன . மக்கள் மண்ணில் குடும்பம் குடும்பமாக இரவுபகலாக உழைத்தார்கள்
கொங்குநாட்டில் வயல் தோறும் ஒரு கூழாங்கல் மலை இருக்கும். வேளாண்மைக்கு தகுதியற்ற கூழாங்கல் நிலம் அது. கையாலெயே கூழாங்கற்களை பொறுக்கி பொறுக்கி அதை விளைநிலமாக ஆக்கினார்கள் நம் மக்கள். வேளாண்மையில் கிடைத்த செல்வத்தை உண்ணாமல் உடுக்காமல் பைசா பைசாவாகச் சேர்த்து தொழில்களில் முதலீடு செய்தார்கள். இன்று கொங்குமண்டலத்தில் வருடத்துக்கு ஏறத்தாழ ஒருலட்சம்கோடி ரூபாய் புரள்கிறது என்கிறார்கள். அப்படி எத்தனை சமூகங்கள் இந்த ஐம்பது வருடங்களில் எழுந்து வந்திருக்கின்றன இந்தியா எங்கும். அவைதான் இந்தியாவை மீண்டும் கட்டிஎ ழுப்பிய சக்திகள்.
எந்த மனநிலை நம்மை உருவாக்கியது? இரண்டு அடிபப்டைக்கூறுகளை நான் சுட்டிக்காட்டுவேன். ஒன்று நம் குடும்ப அமைப்பு. நம்மில் பெரும்பாலானவர்களின் தாத்தாக்கள் பட்டினி கிடந்தவர்கள்தான். மாடுமேய்த்தவர்கள். பொட்டலில் உழுதவர்கள். அவர்கள் தங்கள் ஒவ்வொரு துளி குருதியையும் வியர்வையாக்கி தங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்கினார்கள். நம் அப்பாக்கள் பள்ளிக்குச் சென்றார்கள்.நம் அப்பாக்களின் குருதியை உண்டு நாம் கல்லூரிக்குச் சென்றோம்.
ஒவ்வொரு குடும்பமும் தன்னைத்தானே மேலே தூக்கிக் கொள்ள கணம்தோறும் உழைக்கிறது இந்தியாவில். ஒவ்வொரு தனி மனிதனுக்குப் பின்னாலும் ஒரு குடும்பம் கண்விழித்திருக்கிறது. வெற்றி பெற்ற ஒவ்வொருவரைத்தொடர்ந்தும் ஒரு குடும்பம் மேலெழுந்து வருகிரது. அது நம்முடைய மிகப்பெரிய ஆற்றல். நமது குடும்ப விழுமியங்கள் நம்மை உருவாக்கிய பெரும் சக்தி
அதைவிட முக்கியமானது நமக்கு கல்விமேல் உள்ள அபரிமிதமான பற்று. ஒவ்வொரு சாமானியனும் கல்வியை உள்ளூர மதிக்கும் தன்மை . தன் மகனுக்கு சரஸ்வதி கடாட்சம் வேண்டும் என்று சொன்ன அந்த எளிய தொழிலாளி ஒரு பெரும் பண்பாட்டின் சாரமான மனநிலையை வெளிக்காட்டுகிறார்.
ஆதிச்சநல்லூரில் உறங்கும் நம் மூதாதையர் நமக்கு விட்டுச்சென்ற செய்தி அதுவே. நாம் தோற்காதவர்கள். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் எழும் மாபெரும் தேசம் நாம். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு’ என உணர்ந்தவர்கள். அந்த செல்வமே நமக்கு பிற அனைத்துச் செல்வங்களையும் அளிக்கக்கூடியது
அந்த தேசத்துக்காக பெருமைப்படுங்கள். எங்கே வாழ்ந்தாலும் அந்த மகத்தான மண்ணின் அதில் உறங்கும் மூதாதையரின் வாரிசுகள் என்பதை மறவாதிருங்கள். அமெரிக்கா முழுக்க இதையே நான் சொன்னேன். அதை மீண்டும் இங்கே உறுதி செய்து முடிக்கிறேன். நன்றி
« முந்தைய பக்கம்