பிரபஞ்சன் இந்த புத்தகம் பற்றி சொல்கிறார் -
தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!
மேலும் சொல்கிறார் -
முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.
அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சரித்திர நாவல் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் பேர் சாண்டில்யன்தான். சாண்டில்யன் கதைகள் நமக்கு தரும் அனுபவம் எம்ஜிஆர் படங்கள், காமிக்ஸ் சாகசம் மாதிரிதான். அவர் கொண்டு வரும் வரலாறு எல்லாம் ராஜா ராணி இளவரசன் இளவரசி பற்றிதான். தமிழில் இது வரை வந்த சரித்திர நாவல்களில் மிக சிறந்ததாக நான் நினைப்பது பொன்னியில் செல்வன். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட பொ. செல்வனில் அன்றைய வாழ்க்கை முறை – ஜாதி, விவசாயம், குறுநில மன்னர்கள்-மைய அரசு பற்றிய உறவு, படை எப்படி திரட்டப்பட்டது – பற்றி எல்லாம் ஒரு வரி கூட கிடையாது. அதைப் படித்து சுந்தர சோழனுக்கு அப்புறம் உத்தம சோழன் பட்டத்துக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம். பொ. செல்வனின் சிறப்பு அதன் கதைப் பின்னல் மட்டுமே.
நம் எல்லாருக்கும் வரலாறு என்றால் அசோகன், விக்ரமாதித்தன், நரசிம்ம வர்மன், ராஜராஜன், அக்பர் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போது எனக்கு இந்த கேள்வி உண்டு – பாபருக்கு பிறகு அக்பர் வந்தால் என்ன, இல்லை அக்பருக்கு பிறகு பாபர் வந்தால் என்ன, இந்த இழவை எல்லாம் எதற்கு படிக்க வேண்டி இருக்கிறது என்று. தமிழ் வரலாற்று நாவல்கள் இந்த ராஜா-ராஜா சண்டைகளை தாண்டவே இல்லை.
பிரபஞ்சன் தாண்டி இருக்கிறார். தகவல்களை தேடி எடுத்து அதை சுவாரசியமான கதை ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை நாவல் ஆக்கி இருக்கிறார்.
ஆனால் அவராலும் ராஜா கதையை முழுதாக தாண்ட முடியவில்லை. நாவலில் பெரும் பகுதி சந்தா சாஹிப், தஞ்சை அரசர்கள், ஆட்சி உரிமைக்கான தகராறுகள் பற்றி பேசுகிறது. இவை பெரும்பாலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன. ராஜராஜ சோழன் கதையை முதலமைச்ச்சர் அநிருத்த பிரம்மராயர் கண்ணோட்டத்தில் விவரிப்பது போல.
நாவலின் பிரச்சினை கதை கோர்வையாக இல்லாததுதான். உதாரணமாக ஒரு முதலியார் தன சம்பதியிடமிருந்து அடிமைகளை வாங்குவது ஒரு பகுதியில் விவரிக்கப்படுகிறது. இது ஒரு தனி கிளைக்கதை. ஒரு பத்து பக்கம் போகிறது. முன்னேயும் பின்னேயும் அதை பற்றி வேறு பேச்சு இல்லை. அதில் வரும் பாத்திரங்கள் வேறு எங்கும் வருவதும் இல்லை. ஒரு வருஷம் பேப்பர் தலைப்பு செய்திகளை சேகரித்து அதை ஒரு கதை ஆக்குவது போலத்தான்.
ஆனால் மிக அருமையான முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ் நாவல். தமிழின் மூன்று சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று. (பொ. செல்வன், சிவகாமியின் சபதம் மற்ற இரண்டு)
ஜெயமோகன் இதை தமிழின் பத்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ். ராமகிருஷ்ணன் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார்.
தொடர்புடைய பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல் சிபாரிசுகள், இன்னும் சில சிபாரிசுகள்
ஜெயமோகனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்
எஸ். ராமகிருஷ்ணனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்
செப்டம்பர் 24, 2009 at 1:20 பிற்பகல்
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றி நான் இட்ட இடுகை இதோ. http://dondu.blogspot.com/2009/02/blog-post_03.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெப்ரவரி 11, 2010 at 6:19 மு.பகல்
பலராலும் சிபாரிசு செய்யப்பட்ட இப்புதினத்தை நேற்றுதான் வாங்கிப் படித்தேன். பிரபஞ்சன் தமது முன்னுரையில் ‘ஆஹா! ஓஹோ!’ என்று என்னென்னவோ குறிப்பிட்டு எதிர்பார்ப்பினை அதிகரிக்க வைத்தார். ஆனால், நான்கு அத்தியாயங்கள் படித்த பின்னர் எனக்கு மிஞ்சியது எரிச்சலும் சோகமும்தான்.
கதை சொல்லும் விதத்தில் ஒரு நெறி இருப்பதாகத் தெரியவில்லை. தேவையில்லாத பல பாத்திரங்கள் – பெயர்களுடன் – கதையில் நுழைகின்றன. அதே வேளையில் முக்கியக் கதை மாந்தர்கள் முழுமை பெறாமலேயே பிரபஞ்சனின் சிந்தனைக் கலங்களாகத் திரிகின்றன — உயிரூட்டமில்லாமலேயே. இந்நூலை ஒரு புதினம் என்பதைவிட 52 சம்பங்களின் தொகுப்பு என்பதே சிறப்பானதும் பொருத்தமானதுமென எனக்குப் படுகிறது.
தமிழில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த புதினங்களில் ஒன்று ‘மானுடம் வெல்லும்’ எனில், தமிழ் இலக்கியத்தின் நிலைதான் யாதோ? (புதினத்தை முழுதும் படித்த பின்னர் ஒரு முழுமையான விமர்சனத்தை முன்வைக்கிறேன்.)
பெப்ரவரி 11, 2010 at 6:55 பிற்பகல்
இளஞ்செழியன்,
மானுடம் வெல்லும் புத்தகத்தின் பலமும் பலவீனமும் அதுதான். அது சாதாரண மனிதர்களைப் பற்றி பேச முயற்சிக்கிறது. சரித்திர நாவல்களை அரண்மனை, சதித்திட்டம், படையெடுப்பு, போர், இளவரசியின் காதல் ஆகியவற்றுக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றி பேச முயற்சிக்கிறது. அதே நேரத்தில் கோர்வையாக இல்லை. இப்படிப்பட்ட முயற்சிகள் கட்டாயமாத் தேவை, இது நல்ல எழுத்தும் கூட என்பது என் எண்ணம்.