செப்டம்பர் 2009


Chidambaram Temple

Chidambaram Temple

இந்த பதிவு மேலெழுந்தவாரியாக படித்தால் சிதம்பரம் தீட்சிதர்களை புகழ்ந்து பேசுகிற மாதிரி இருக்கலாம். உண்மையில் ஒரு புத்தகத்தில் தீட்சிதர்கள் தங்கள் குழுவின் சட்ட திட்டங்கள் பற்றி எழுதியவை, ஒரு வழக்கு ஆகியவற்றை பற்றி விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பகுதியில் தீட்சிதர்கள் தந்த வாக்குமூலம் அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை என்பதையும் கவனியுங்கள். முன் பதிவுகளில் தீட்சிதர்களுக்கு கோவில் சொந்தம் இல்லை என்று எழுதிவிட்டு இப்போது இப்படி ஒரு பதிவு வருகிறதே என்று குழப்பம் அடையாமல் படியுங்கள்.

தீக்ஷிதர்களுக்கு எதிராகச் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது. அவர்கள் உச்ச நீதி மன்றம் செல்லலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக பவள விழாவின் போது, “வரலாற்றில் சிதம்பரம் நடராஜர் கோயில்” என்றொரு புத்தகம் வெளியடப் பட்டிருக்கிறது. சிதம்பரம் மயில்வாகனன் தொகுத்துள்ள இப்புத்தகம் 2004ல் சிதம்பரம் மெய்யப்பன் பதிப்பகத்தின் வெளியீடு. இரண்டு பகுதிகள், நல்ல கட்டுரைகள் உள்ளன. இதிலிருக்கும் ஒரு கட்டுரை தீக்ஷிதர்களைப் பற்றியது. அதிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன்!

*** கோயில் நிர்வாகம் — இக்கோயில் நிர்வாகம் தில்லை மூவாயிரவர் எனப்படும் தீக்ஷிதர்களின் நுணுக்க சட்ட திட்டங்களினால் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது! ஆதி நாள் முதல் தீக்ஷிதர்களின் சமுதாயம் வேத சாஸ்திர சம்பிரதாயங்களுடன் இன்றியமையாச் சட்ட திட்டங்களை இயற்றிக் கோயில் பராமரிப்புடன் புராதனப் பழக்க வழக்கங்களில் வழுவாது நிலைக்கும் சிறப்பு தில்லையம்பதி சபைக்கே உரியது எனில் மிகையாகாது.அந்தணர் தீர்ப்புக் கூறும் கால் முறை பிசகாது யாவரும் ஒப்புக் கொள்ளும் வண்ணம் செய்த தீர்ப்பு ஈண்டு கூர்ந்து நோக்கத் தக்கது. இன்றும் அத்தகைய வழக்கம் நிலவி வருகிறது.

இராமாயணம் அரங்கேற்ற முதலில் தில்லையம்பதிக்குத்தான் கம்பர் வந்தார் என்பது தில்லை வாழ் அந்தணர் நிர்வாக நேர்மையுடையவர் என்பதைப் பறைசாற்றி நிற்கும் நிகழ்ச்சியாகும். அக்காலம் முதல் இக்காலம் வரை, இனி எக்காலத்திற்கும் ஏற்ற வண்ணம் அமைந்துள்ள சட்டங்கள், முறைகள், அமைப்பு முதலியனவும், வைதீக சம்பிரதாயம், பழக்க வழக்கங்கள் ஆகியவைகளும் இங்கு மட்டும்தான் கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு இப்போது தில்லைவாழ் அந்தண்ர்கள் சுமார் 300 பேர் இருக்கின்றனர். இவர்கள் ஸ்ரீ நடராஜரை அர்ச்சித்து பூஜை செய்பவர்கள், திருமணமானவர்கள். குழந்தைகள், தாய்மார்கள், பெண்கள் ஆகியோரை இதில் சேர்க்கவில்லை. தில்லை 3000 என்றல்லவா சொல்வர், 300 தானேயுள்ளது, மீதி எங்கே என்றால் குறைந்தவர் எல்லாம் ஸ்ரீ நடராஜரே என்று கொள்ள வேண்டும். ஏனெனில் முன் அந்தர்வேதியாகத்தில், ரித்விக்கில் ஒன்று குறைய, குறைந்த ஒன்று நானே என்றவர் நடராஜர். இந்த முன்னூறு பேரும் திருமணமாகிய பின்புதான் மூர்த்தியை அர்ச்சிகும் உரிமையுடன் கோயில் நிர்வாகப் பொறுப்பின் உரிமை உடையவர்களாகவும் கருதப்படுகின்றார்கள். உரிமைத் தகுதி வந்த தீக்ஷிதர் ஒரு ஓலையில் தன் பெயரை எழுதிக் கோயில் பொது சபையினர் முன்னர் கொடுத்து, தன்னை நிர்வாகத்துறையில் ஒரு பங்குதாரராக ஏற்றுக் கொண்டு ஏக மனதாய் உத்திரவு செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்த பிறகே சம உரிமை படைத்த தீக்ஷிதராக ஆகிறார். இவ்வாறு பங்குடையவர் வயது, கல்வி, திறமை, பொருளாதாரம் இவைகளினால் எந்த வேறுபாடும் உடையவராகக் கருதப்படமாட்டார் என்பதும் சட்டம்.

பொதுக் கூட்டத்தில் ஒரே மதிப்புடையவர் யாரும் கருத்துத் தெரிவிக்கலாம். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது இல்லை என்ற நிலை. சிறிய நாட்டுச் சபையே இது. இத்தகைய உரிமை தொடக்கம் முதல், தீக்ஷிதரின் இறுதி நாள் வரை தொடர்கிறது சாஸ்திர சம்பிரதாயங்களுடன் சேர்ந்த சட்டமாகும். திட்டமிட்ட ஒரு முறை தீக்ஷிதர்கள் எல்லோருக்கும் மூர்த்தியை அர்ச்சிக்க ஒரு சம வாய்ப்பு தருகின்றது. ஸ்ரீ நடராஜருக்கு ஒரு காணி நிலம் கூட இல்லை. அவ்வாறிருந்தும் எல்லாம் முறைப்படியே இங்கு நடைபெறுவதால் கோயில் வேறு, நாங்கள் வேறு என்று பாராமல், கோயில் நலமே எங்கள் நலம் என்ற எண்ணம் இங்கு என்றும் நிலைத்துள்ளது****

(புத்தகத்தின் முதற் பகுதியில் புலவர் வெ.வை.சிவசங்கர தீக்ஷிதர் எழுதியுள்ள ‘கோயில் அமைப்பும், பொது தீக்ஷிதர்கள் நிர்வாகமும்’ என்ற கட்டுரையிலிருந்து திரட்டப் பட்ட மேற்கோள்கள்)

மேற்கண்ட விவரங்கள் படிக்க நன்றாகவே இருந்தாலும், குறைகளும் இருந்தன என்பது தெரிய வருகின்றது.

பதினொன்றாம் நூற்றாண்டில் சென்னி குலோத்துங்கன் (1135-1146) திருமால் மூர்த்தத்தைக் கடலில் இட்டான் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. ஆனால் சமீப காலத்திலும் கசக்கும் நிகழ்ச்சி ஒன்றிருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கக் காரணமில்லை. இதே புத்தகத்திலுள்ள இன்னொரு கட்டுரை குறிப்பிடும் ஒரு ‘கறார் நாமா’ தீக்ஷிதர்களின் தகராறு ஒன்றை வெளிக் கொண்டு வருகிறது. இந்த ஒப்புதல் வாக்குமூலம், தீக்ஷிதர்கள் நடராஜர் கோயிலுள் இருக்கும் ‘ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோயிலை அக்கிரமமாய் 10 வருட காலம் மூடி வைத்ததும் மேற்படி கோயிலுடைய பூசை வகையறாக் கட்டுப்படுத்தி இருந்ததும்’ தெரிய வருகிறது. இந்த தகராறின் காரணங்களும் விவரங்களும் குறிப்பிடப் படவில்லை.

“அஜரத் முஹம்மது மோதீன் கான் சாயிப்பு அவர்கள் ஆமில் உத்தியோகமாயிருக்கும் காலத்தில், மேற்படி கோயிலைத் திறந்து விட்டு மாமூல் பிரகாரம் பூசை வகையறா ஆரம்பித்து சர்க்கார் நவுக்கிறல் பாரா ஜவானும் பாளையக்கிற் வகையறாகப் பியாதாக்களையும் (??) மேற்படி கோயில் வாசலில் வைத்திருந்ததை நாங்கள் அவர்களை ஜபர்த தாப் (?) அடித்ததும் அல்லாமல் கோயிலை இடித்துப் போடவும் எண்ணம் கொண்டதும் தவிர, மாமூலாய் இருக்கப்பட்ட பெருமாள் கோயில் பலிபீடம் என்று சொல்லப்பட்ட மேடையையும் துவஜத்தையும் இடித்து ஒடித்துப் போட்டோமே, இந்த தப்பிதத்தையெல்லாம் நாங்கள் ஒப்புக் கொண்டிருப்பதாலே , நாங்கள் கறார் செய்வது என்னவென்றால் மாமூலாய் நடந்து வருகிற பெருமாள் கோயில் பூசை, பஞ்ச பர்வ உற்சவம் வகையறாவையும், மேற்படி கோயில் தானீகாள் பரமானந்தம் என்று சொல்லப்பட்ட கிணத்திலிருந்து ஜலம் எடுக்கவும், நாங்கள் தடை செய்வதில்லை. மேற்படி கோயில் உற்சவங்களுக்கு மாமூலாய் இருக்கிற நூற்றுக்கால் மண்டபத்தை அவர்களுக்கு விட்டு விடுகின்றோம் என்று மேலும் பல ஒப்புதல்கள் அளிப்பதுடன் “இனி மேல் யாரொரு சச்சரவு முதலானது எங்களுக்குள்ளே நடந்தால் சர்க்காரில் தெரியப்படுத்தி அபராதம் போட வேண்டியதாயிருந்தால், அந்த அபராதத்தை சர்க்காருக்கு சேர்த்துக் கொண்டு வருவோமாகவும், இனிமேல் நாங்கள் கும்பலும் சேரமாட்டோம், சர்க்கார் உத்திரவுக்கு தலையாலே நடந்து கொள்கிறோம் – இது தப்பி நடந்தால் சர்க்காருக்கு “நோ தானாய்” (?) போவோம் — இப்படிக்கு — சிதம்பர நாத தீக்ஷிதர் முதலாய் 34 பேர்கள்” என்று தீக்ஷிதர்களும் மற்ற சிப்பந்திகளும் ஒப்புமூலம் கொடுத்துள்ளனர். (இதுவும் மேற்படி புத்தகத்தில், ஆய்வாளர் க.மங்களகௌரி எம்.ஏ.(அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறை) எழுதியுள்ள ‘தில்லை திருச்சித்திரக்கூடம்’ என்ற கட்டுரையிலிருந்து திரட்டப்பட்ட மேற்கோள்கள்)

இந்த ஒப்புமூலம் 17-10-1976**அன்று கொடுக்கப் பட்டிருக்கிறது. பத்து வருஷமாய் கோயிலை மூடியிருந்தோம் என்றால், இத்தகராறு 1966ம் வருஷமே தொடங்கியிருக்க வேண்டும் என்று அனுமானிக்கலாம்! இந்தச் சம்பவத்தைப் பற்றி வைஷ்ணவ நண்பர்களிடம் விசாரித்தேன், அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. என்னவாயிருப்பினும், இது தீக்ஷிதர்களின் பெயருக்குக் களங்கமே!

** This appears to be a printer’s devil in the published book. The title clearly says 17-10-1976 but all enquiries locally with friends and interested parties brought out a negative result. The date must actually be 17-10-1796 and not 1976, as after a very thorough search I found the following statement in another article appearing in the same book. “In the last decade of the eighteenth century, there arose a renewed dispute between the two shrines, leading to the stoppage of worship in the Vishnu shrine for some years and even the walling up of its entrance. It was settled by the arbitration of the Nawab’s faujdar of the district, and confirmed by a parwana of Nawab Omdut-ul-Umarach Bahadur of the Carnatic, dated 1797, which defined the respective rights and claims of both the parties.”

After the establishment of the British rule over the district the disputes between the two shrines were fought out in the law courts, off and on, with varying fortunes. Now the main points of contention have been settled fairly amicably and the managers of the two shrines have agreed to work harmoniously, largely through the mediation efforts of the Rajah of Chettinad, who renovated the ruined mantapa in front of the Vishnu shrine, repaired the shrine itself, which was in a dilapidated condition, reconstructed the gopura and the vimana over the garbagraha, and reconstructed the sannidhi itself in the summer of 1934 — (Excerpts from the article “Vignettes from the History of the Chidambaram shrine – by Prof.C.S.Srinivasachari, M.A — page 542 of the same book earlier mentioned)

சிதம்பரநாத தீட்சிதரின் தமிழ் அங்கங்கே புரியவில்லை. புரிந்தவர்கள் விளக்குங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:
சிதம்பரம் கோவிலும் தமிழ் வழிபாடும் பகுதி 1, பகுதி 2

கரிச்சான் குஞ்சுவை பற்றி இங்கே எழுதி இருந்தேன். அது என்ன தற்செயலோ தெரியவில்லை, அதற்கு பிறகு பல அருமையான சுட்டிகள் கண்ணில் பட்டன. அவற்றை எல்லாம் இங்கே தொகுத்திருக்கிறேன்.

எஸ். ராமகிருஷ்ணன் கரிச்சான் குஞ்சுவை பற்றி இங்கே எழுதி இருக்கிறார்.

வெங்கட் சாமிநாதன் கரிச்சான் குஞ்சுவை பற்றி இங்கே மற்றும் இங்கே எழுதி இருக்கிறார். முதல் சுட்டியில் பசித்த மானுடம் நாவலை பற்றி எழுதி இருக்கிறார். இரண்டாவது சுட்டியில் அவருக்கு கரிச்சான் குஞ்சுவோடு உள்ள பழக்கத்தை பற்றி எழுதி இருக்கிறார்.

ஆர்.பி. ராஜநாயஹம் நிறைய படிப்பவர். அவர் கரிச்சான் குஞ்சுவின் பெரிய விசிறி போல தெரிகிறது. அவர் எழுதிய இரண்டு பதிவுகள் இங்கே மற்றும் இங்கே. பிந்தைய பதிவில் பசித்த மானுடம் பற்றி கொஞ்சம் எழுதி இருக்கிறார். அவர் சொல்வது போல வெ.சா. கரிச்சான் குஞ்சுவை பற்றி எழுதாமல் இல்லை. குறைந்த பட்சம் 2007-இல் எழுதி இருக்கிறார் (மேலே உள்ள சுட்டிகளில் முதலாவது). அதற்கு முன்பும் சாகித்திய அகாடமி என்சைக்ளோபீடியாவில் எழுதி இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

கரிச்சான் குஞ்சுவை பற்றி ஜீவி எழுதி இருந்ததை ஏற்கனவே சுட்டி இருக்கிறேன். கரிச்சான் குஞ்சுவின் உயிரை தி. ஜானகிராமன் காப்பாற்றிய நிகழ்ச்சியை அவர் இந்த பதிவில் குறிப்பிடுகிறார். கரிச்சான் குஞ்சுவின் வார்த்தைகளிலேயே:

அன்று விடியற்காலையில் எங்களுக்கு நேர்ந்த அனுபவம் ஒன்று மறக்க முடியாதது. நாங்கள் திருநாகேஸ்வரம் அருகே சென்றபோது குமபகோணம் போகும் ரயில் வரும் நேரம். ஆகவே அவசரமாக ஸ்டேஷனுக்குப் போவதற்காக குறுக்கே ஸ்டேஷனுக்கு எதிரே சாலையிலிருந்து கிழக்கே இறங்கினோம். இடையில் ஒரு வடிகால் நீர்த்தேக்கம். அவசரத்தில் இருவரும் அதைக்கடக்க இறங்கினோம். ஜானகிராமன் நாலடி தள்ளி, நான் இப்புறம். ஆழமே இல்லை. முழங்காலளவு இருக்கும். அவ்வளவுதான். ஆனால் நான் இறங்கிய இடத்தில் உளை சேறு. என் கால்கள் புதைந்து கீழே, கீழே.. போய்க்கொண்டே இருந்தேன். இடுப்பளவு புதையுண்டு விட்டேன். மேலும் உள்ளே இறங்குகின்றன கால்கள். இதற்குள் அவன் தாண்டி விட்டிருந்தான். நான் வாய்விட்டுக் கத்தக் கூட முடியாமல் மரண பயத்தால் ஸப்த நாடியும் ஒடுங்கி எப்படியோ ஆகிவிட்டிருந்தேன். இறந்து விட்டது போலவே தேசலாக ஓர் நினைவு ஓடியது ஞாபகம் இருக்கிறது. மனம் என்பதே மாய்ந்து விட்டது. மறுகணம் ஜானகிராமனையோ மற்ற எதையுமோ நினைவில்லை எனக்கு.

சில நிமிஷங்களுக்குப் பின் நான் கரையில், ஈரம்,சேறு தோய்ந்த நிலையில் பிரக்ஞை பெற்றபோது, நாலைந்து பேர் என்னைச் சூழ்ந்திருந்தனர். ஒரு கயிற்றைப் பற்றிக் கொண்டிருந்தேன். ஜானகிராமன் கலக்கத்துடன் என்மீது படிந்திருந்த சேற்றை வழித்து எறிந்துகொண்டே கண்ணீர் ததும்ப ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான். அவன், “ஐயோ, ஐயோ” என்று மிகவும் உரத்த குரலில் கத்தினானாம். சிலர் ஓடிவந்து என் தோள்களுக்கடியில் கயிறு போட்டுத் தூக்கினார்களாம்.

கரிச்சான் குஞ்சுவின் புத்தகங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும். குறைந்த பட்சம் பசித்த மானுடத்தை தேடி பிடிக்க வேண்டும்.நெட்டில் அவர் ஃபோட்டோ கிடைக்கிறதா என்று தேடித் பார்த்தேன். ஒன்று கூட கிடைக்கவில்லை!

கோல்வால்கர்

கோல்வால்கர்

கிலாஃபத் இயக்கத்தை பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய அருமையான கடிதத்தில் இருந்து இங்கே
தாவினேன். பதிவிலிருந்து:

ஸ்ரீ மாதவ சாதாசிவ கோல்வால்கர் எனும் ப.பூ. குருஜி கோல்வால்கர் நாசி ஆதரவாளரா பாசிஸ்டா இந்துத்வம் என்பது பாசிச நாசி தன்மை கொண்டதா… இந்த விவாதத்தின் மையத்தில் இருப்பது குருஜி கோல்வல்கர் எழுதிய ‘நாம் நம் தேசத்தின் வரையறை’ ஆகும். இந்நூலில் இருந்து கையாளப்படும் பகுதிகளையும் நாம் காணலாம்.

“இனத்தின் தூய்மையையும் அதன் கலாச்சாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள ஜெர்மனி அத்தேச செமிடிக் இனத்தை தேசத்திலிருந்து நீக்கி (purges) உலகை திடுக்குற செய்தது. இனகர்வம் அதன் மிக அதீத அளவில் இங்கு வெளிப்பட்டுள்ளது. ஜெர்மனி காட்டியுள்ளது என்னவென்றால் எப்படி தம் அடிப்படையில் மாறுபடும் இனங்கள் கலாச்சாரங்கள் ஒன்றாக ஒருங்கிணையமுடியாது என்பதே. இது இந்துஸ்தானத்தில் உள்ள நம் அனைவருக்கும் லாபம் தரும் நல்ல படிப்பினையாகும்.”

மற்றொரு மேற்கோள் பினவருமாறு ஆகும்: “புத்திசாலித்தனமான பழமையான நாடுகளின் இந்த நிலைப்பாட்டின் படி இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து தருமத்தை மரியாதை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் தனித்தன்மையை விட்டு இந்து இனத்துடன் கலந்திட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இந்து தேசத்திற்கு கீழ்படிந்து எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட கோராமல்- இருந்திட வேண்டும்.”

அ. நீலகண்டன் கோல்வால்கர் ஒரு நாஜி இல்லை, ஃபாசிஸ்ட் இல்லை என்று நீளமாக வாதாடுகிறார். அவர் நாஜியா இல்லையா என்பதை விட அவர் சொன்ன கருத்துகள் சரியா இல்லையா என்பதுதான் முக்கியம்.

எனக்கு கோல்வால்கர் என்ற பேரைத் தவிர வேறு எதுவும் அவரைப் பற்றி தெரியாது. அ. நீலகண்டன் கோல்வால்கரை பெரிதும் மதிக்கிறார் என்று புரிகிறது, அதனால் அவர் காட்டும் இந்த இரண்டு மேற்கோளும் சரியாகவே சுட்டப்பட்டிருக்க வேண்டும். Out of context ஆக இருக்காது. இந்த இரண்டு மேற்கோளிலும் இருக்கும் கருத்துகள் ஏற்க முடியாதவை.

அடிப்படையில் மாறும் இனங்கள் கலாச்சாரங்கள் ஒன்றிணைய முடியாது என்று முதல் மேற்கோளில் சொல்லப்படுகிறது. அவர் சொல்லும் “இனங்கள்” ஹிந்துக்களும் மற்ற மதத்தினரும் – குறிப்பாக முஸ்லிம்களும் என்பது தெளிவு. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைய முடியாது என்றால் பிராமணனும் தலித்தும் ஒன்றிணைய முடியுமா? பணக்காரனும் ஏழையும்? காஷ்மீரியும் தமிழனும்? ஒரு தமிழ் ஹிந்துவுக்கும் தமிழ் முஸ்லிமுக்கும் உள்ள வேற்றுமை தமிழ் ஹிந்துவுக்கும் காஷ்மீரி ஹிந்துவுக்கும் உள்ளதை விட அதிகமா குறைவா? மொழி, உடை, உணவு, பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் வேறுபட்டாலும் காஷ்மீரியையும் தமிழனையும் இணைக்கும் புள்ளிகள் இருக்கும்போது மத வேறுபாட்டால் தமிழ் முஸ்லிமும் தமிழ் ஹிந்துவும் ஒன்றிணைய முடியாது என்பது சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. மத வேறுபாடு மட்டுமே கோல்வால்கருக்கு அடிப்படை வேறுபாடாக தெரிகிறது.

இரண்டாவது மேற்கோள் முதல் மேற்கோளை கொஞ்சம் மறுக்கிறது. எப்படி ஒன்றிணைய முடியும் என்று சொல்கிறது. இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், அப்படி ஏற்றுக்கொண்டால் ஒன்றிணையலாம் என்பது கோல்வால்கரின் எண்ணம். யார் அந்நியர்? கோல்வால்கருக்கு ஹிந்துக்களைத் தவிர மற்றவர் அந்நியர். பெரியாருக்கு பிராமணர் அந்நியர். பால் தாக்கரேக்கு மராட்டியர் தவிர மற்றவர் அந்நியர். தமிழனுக்கு மார்வாடி அந்நியர். யார் எல்லைகளை வரையறுப்பது? இந்திய எல்லை ஒன்று போதும்.

அப்புறம் மொழி என்று சொல்கிறார். என்ன மொழி? சமஸ்கிருதமா? ஹிந்தியா? மராத்தியா? (பேரை வைத்து கோல்வால்கர் மராத்தியர் என்று யூகிக்கிறேன்) நிச்சயமாக தமிழ் இல்லை. இவர் சொல்லும் இந்து கலாச்சாரத்தில் சீக்கியர்கள் உண்டா? கபீர்? அக்பர்? டாடா? தாஜ் மஹால்? ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? எல்லாரும் மதம் மாற வேண்டுமா? குடி மக்களுக்கான உரிமைகள் கூட கிடையாது என்றால் இந்தியாவில் வாழ எந்த முஸ்லிம் விரும்புவார்?

பன்முகத்தன்மை இந்தியாவின் சிறந்த கூறுகளில் ஒன்று, ஹிந்து மதத்தில் சிறந்த கூறுகளில் ஒன்று என்று சொல்பவர்கள் இந்த எண்ணங்கள் ஒருமுகத்தன்மைக்கே கொண்டு செல்லும் என்பதை உணரவில்லையா? கோல்வால்கர் ஹிந்து மதத்தை சுற்றி கோடு போட்டால், பால் தாகரே மராத்தியத்தை சுற்றி கோடு போடுவார்; பெரியார் திராவிடஸ்தான் சுற்றி கோடு போடுவார்; வத்தால் நாகராஜ் காவிரியை சுற்றி கோடு போடுவார்; ராமதாஸ் வன்னியரை சுற்றி கோடு போடுவார்; நாட்டில் வேற்றுமைக்கா பஞ்சம்?

ஆர்எஸ்எஸ், கோல்வால்கர் போன்றவர்கள் ஜின்னாவின் இரட்டை நாடு கொள்கைக்கு எதிரானவர்கள் என்று நினைத்திருந்தேன். இங்கே இவரே “இனங்கள்” சேர்ந்து வாழ முடியாது, பாகிஸ்தானை பிரித்து கொடுத்து விடுங்கள் என்று சொல்வது போல இருக்கிறது.

Disclaimer: மீண்டும் சொல்கிறேன். கோல்வால்கர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அ. நீலகண்டனே சுட்டி இருக்கும் இரண்டு மேற்கோள்களை வைத்து மட்டுமே இந்த பதிவு எழுதப்பட்டது. இவை ஏற்க முடியாதவை, அவ்வளவுதான்.

பின் குறிப்பு: இந்த இனங்கள் என்ற வார்த்தையே எரிச்சல் மூட்டுகிறது. மனிதனும் கொரில்லாவும் வேறு வேறு இனம். ஹிந்துவும் முஸ்லிமும் வேறு இனம், தேவரும் தலித்தும் வேறு இனம், அமெரிக்கனும் ஆஃப்கானும் வேறு இனம் என்றால் எப்படி? எல்லாருக்கும் அதே 46 க்ரோமோசொம்தான்.

தொடர்புடைய பதிவுகள்
கோல்வால்கர் – விக்கி குறிப்பு
கோல்வால்கர் நாஜியா? – அரவிந்தன் நீலகண்டன்

காந்தி

காந்தி

எனக்கு காந்தி என்ற தலைவர் மீது மிகுந்த பிரமிப்பு உண்டு. அவரால் எப்படி ஒரு பெரும் ஜனக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது? அவர் அந்த கூட்டத்துக்கு அவர் அப்படி என்ன கொடுத்துவிட்டார்? அவரால் கொடுக்க முடிந்தது எல்லாம் சிறைவாசம்; அவர்களது சவுகரியமான சமூக வாழ்வில் மாற்றம்; ஜாதி வித்தியாசம் பார்க்காதே, மலம் அள்ளு, கிராமத்துக்கு போய் சேவை செய், படிப்பை, நல்ல பணம் தரும் தொழிலை விடு என்ற கஷ்டமான உபதேசங்கள்; சாதாரண மனித இயல்பிலிருந்து மாறி நடக்க வேண்டிய கட்டாயம், அடித்தால் வாங்கிக் கொள் என்ற கோட்பாடு; இதை எல்லாம் செய்தால் உங்களுக்கு என்றாவது சுதந்திரம் கிடைக்கலாம் என்ற ஒரு மங்கலான கனவு. இதை வைத்து அவர் எப்படி பெரும் கூட்டத்திடம் உற்சாகத்தையும் சலிப்பில்லாமல் உழைப்பதையும் ஏற்படுத்தினார்? ((இந்த பிரமிப்பை பற்றி ராஜேந்திர பிரசாத் எழுதிய At the Feet of Mahatma Gandhi பதிவிலும் எழுதி இருக்கிறேன்.)

எனக்கு காந்தி என்ற சிந்தனையாளர் மீது மரியாதை உண்டு, ஆனால் அந்த சிந்தனையாளரைப் பற்றி அவ்வளவு தெரியாது . அஹிம்சை என்ற ஒரு கோட்பாடு ஒன்றே போதும் மரியாதை வர. அவர் கிராமங்கள் பற்றி சொன்னவை இன்று கொண்டாடப்படும் ஷூமாகர், ரேச்சல் கார்சன், ஃபுகுவோகா போன்றவர்களின் எண்ணங்களை ஓரளவு ஒத்திருக்கின்றன. அவரது பொருளாதார சிந்தனைகளை புரிந்து கொண்டவர் ஜே.சி. குமரப்பா ஒருவர்தான் என்று நினைக்கிறேன். குமரப்பா சுதந்திர இந்தியாவில் பொருட்படுத்தப்படவே இல்லை. அது சரி காந்தி சொன்னதையே ஒதுக்கிய பின், குமரப்பா எந்த மூலை?

காந்தியின் சிந்தனைகள் பற்றி தெரிந்துகொள்வதில் ஒரு பெரும் பிரச்சினை உண்டு. சாதாரணமாக கிடைக்கும் புத்தகங்கள், கட்டுரைகள் காந்தி என்ற தலைவரை மட்டுமே பேசுகின்றன. நீங்கள் காந்தியை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் சம்பரான், ரௌலட் சட்டம், ஜாலியன்வாலாபாக், ஒத்துழையாமை இயக்கம், சௌரி சௌரா, ஆக்கப் பணிகள், உப்பு சத்யாக்ரகம், வட்ட மேஜை மாநாடு, காங்கிரஸ் அரசுகள், வெள்ளையனே வெளியேறு, நவகாளி, பாகிஸ்தான், இறப்பு என்று ஒரு chronological படிமம் சுலபமாக கிடைத்துவிடுகிறது. அவரது சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் அஹிம்சை, ஹரிஜன் இதை தாண்டி போவது கஷ்டம். அவரது unprocessed கட்டுரைகள் கிடைக்கலாம். அவருடன் ஓரளவு வேறுபட்ட அம்பேத்கார், பெரியார், கோல்வால்கர் சொன்னது மூலம் சில தகவல்கள் indirect ஆக கிடைக்கலாம். அவரது எண்ணங்களை, சிந்தனைகளை படிக்கிற மாதிரி process செய்து வெளியிட்ட புத்தகங்கள் அபூர்வம் என்றே நான் நினைக்கிறேன். ஒரு விதத்தில் இது ஒரு நூறு வருஷத்துக்கு உட்பட்ட ஓரளவு சிந்தித்த தலைவர்கள் எல்லாருக்குமே – காந்தி, அம்பேத்கார், பெரியார், ராஜாஜி, நேரு எல்லாருக்குமே பொருந்தும்.

அந்த விதத்தில் ஜெயமோகன் சமீபத்தில் எழுதிய சில கட்டுரைகள் மிக உதவியாக இருக்கின்றன. குறிப்பாக காந்தியும் ஜாதியும், காந்தியும் தொழில் நுட்பமும், காந்தியும் ஹிந்தியும் என்ற இந்த பதிவுகள்.

காந்தியும் ஜாதியும் பதிவில் ஜாதியை பற்றிய காந்தியின் எண்ணங்கள் எப்படி மாறி இருக்கின்றன என்பதை ஜெயமோகன் எடுத்துக் காட்டுகிறார். காந்தி “வருணப் பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும் பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது.” என்று நம்பி இருக்கிறார் என்று ஜெயமோகன் கூறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஜாதியின் negative கூறுகள் அதன் positive கூறுகளை விட முக்கியமானவை என்பதை அவர் வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார். இன்று ஜாதி இல்லை என்று நம்மில் பலரும் வாயளவிலாவது சொல்கிறோம் – அதற்கு முக்கிய காரணம் காந்திதான் என்று தோன்றுகிறது. மிக அருமையான கட்டுரை.

காந்தியும் ஹிந்தியும் பதிவில் ஜெயமோகன் சொல்வது இதுதான் – “காந்தி இந்தியை வலியுறுத்துவதன் மூலம் பன்மைத்தன்மைக்கு எதிராக ஒற்றை மையத்தை வலியுறுத்தவில்லை. அவர் உருவகித்த பன்மைத்தன்மை மிக்க கிராம சுயராஜ்யத்தின் தேசிய அளவிலான பொதுஇணைப்புமொழியாக ஒரு நடைமுறை யதார்த்தமாக இந்தியை முன்வைத்தார்.” இது எனக்கு சரியாகவே தோன்றுகிறது. அவர் இன்று இருந்திருந்தால் ஆங்கிலத்துக்கு இன்னும் முக்கியத்துவம் வேண்டும் என்று சொல்லி இருப்பார்.

இணையம் என்ற technology தெரியாதவர்கள் யாரும் என் இந்த பதிவை படிக்கப் போவதில்லை. ஆனால் காந்தி தொழில் நுட்பத்துக்கு எதிரானவர் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஏன் எனக்கும் அப்படித்தான் எண்ணம். அவர் பெரும் தொழில்களை விரும்பவில்லை, ஆலைகள் வேண்டாம், கை ராட்டினம் வேண்டும் என்று சொன்னவர்தான். ஜெயமோகனின் எண்ணத்தில் காந்தி appropriate technology வேண்டும் என்ற முன்னோடி. எனக்கு இந்த பதிவு காந்தியிடம் இன்றைய மதிப்பீடுகளை கொண்டு போய் பொருத்திக் கொள்கிறதோ என்று தோன்றுகிறது. காந்தி நவீன மருத்துவம் போன்றவற்றையும் நிராகரித்தவர். கஸ்தூரிபாவுக்கு இங்லிஷ் மருந்து கொடுத்திருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். நவீன மருத்துவம் மட்டுமே சரியான வழி என்று நான் சொல்ல வரவில்லை. நவீன மருத்துவம் ஒரு விஞ்ஞான முறை, அதை சோதனை செய்து பார்க்காமலேயே காந்தி நிராகரித்தார். மீண்டும் அந்த பதிவை ஆற அமர ஒரு முறை படித்து பார்க்க வேண்டும்.

சத்தியாகிரகத்தின் விதிகள் எவை என்று இந்த பதிவில் விளக்குகிறார். மனிதருடைய புரிதலும் சரி, அதை விளக்கும் திறமையும் சரி, அபாரமானவை.

காந்திக்கும் அம்பேத்காருக்கும் இருந்த பரஸ்பர சிந்தனைத் தாக்கம் இந்த பதிவில் விளக்கப்படுகிறது.

காந்தியை பற்றி சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் விவாதித்தது இங்கே.

இனி குறிப்பிடும் பதிவுகள் காந்தியின் சிந்தனையை விளக்குபவை இல்லை. இருந்தாலும் முக்கியமானவை, சுவாரசியமானவை என்பதால் குறிப்பிடுகிறேன்.

காந்தியின் தவறுகள் என்று சொல்லப்படுவதை பற்றி இங்கே மிக சிறப்பான ஒரு பதிவு இருக்கிறது. நான் கூட சமீபத்தில் கிலாஃபத் இயக்கம் தவறு என்று நீங்கள் கருதவில்லையா என்று கேட்டு ஒரு அவருக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தேன். அவர் ஏற்கனவே எழுதி இருப்பதை நான்தான் பார்க்கவில்லை. பல நூறு கட்டுரைகள் எழுதி இருக்கிறார், எங்கே எது இருக்கிறது என்று தெரிய மாட்டேன் என்கிறது!

கிலாஃபத் இயக்கத்தை பற்றி எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. துருக்கியில் என்ன ஆட்சி முறை இருக்க வேண்டும் என்று இந்தியர்கள் போராடியது, அதற்கு காந்தியும் ஆதரவு தந்து கூட போராடியது, வெறும் அபத்தமாக இருக்கிறது. அரவிந்தன் நீலகண்டன் இதை பற்றி ஜெயமோகனுக்கு ஒரு அருமையான, ஆதாரங்கள் நிறைந்த ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அ. நீலகண்டன் மௌலானா முகம்மது அலியின் பிரசித்தி பெற்ற காந்தி பற்றிய கருத்தை சுட்டிக் காட்டுகிறார் – அலி சொன்னது – “ஆம் என் மார்க்கத்தின் படி ஒரு விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத முஸ்லீம் திருவாளர்.காந்தியைக்காட்டிலும் உயர்ந்தவர்தான்”. இதை காந்தி பெரிதுபடுத்தவில்லை. ஆனால் மௌலானா அளித்த விளக்கம் அவ்வளவாக பிரசித்தி பெறவில்லை. ஏறக்குறைய அவர் சொன்னது – “ஐந்தடி உயர உத்தமர் ஆறடி உயர திருடனை விட குள்ளமானவரே.”

காந்தியின் தாக்கம் லாரி பேக்கரை எப்படி பாதித்தது என்று இங்கேயும் கிருஷ்ணம்மாள்-ஜெகன்னாதன் பற்றி இங்கேயும் எழுதி இருக்கிறார்.

தொடர்புடைய பதிவுகள் (எல்லாம் ஜெயமோகன் எழுதியவை)
காந்தியின் சிந்தனைகளை விளக்கும் பதிவுகள்:

  • காந்தியும் ஜாதியும்
  • காந்தியும் தொழில் நுட்பமும்
  • காந்தியும் ஹிந்தியும்
  • சத்தியாகிரகத்தின் விதிகள்
  • காந்திக்கும் அம்பேத்காருக்கும் இருந்த பரஸ்பர சிந்தனைத் தாக்கம்
  • காந்தியை பற்றி சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் விவாதித்தது
  • காந்தியின் எளிமையும், அதற்கு ஆன செலவும்
  • மற்றவை:

  • காந்தியின் தவறுகள்
  • கிலாஃபத் இயக்கம் பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கடிதம்
  • லாரி பேக்கர்
  • கிருஷ்ணம்மாள்-ஜெகன்னாதன்
  • என் பதிவு:
    ராஜேந்திர பிரசாதின் At the Feet of Mahatma Gandhi

    ஆனந்தரங்கம் பிள்ளை

    ஆனந்தரங்கம் பிள்ளை

    மானுடம் வெல்லும் புத்தகத்திலிருந்து:

    பிரசித்தமான சகல ஜனங்களாகிய வெள்ளைக்காரர், தமிழர், மற்றுமுள்ள கறுத்த ஜனங்களுக்கு அறிவிக்கிறதாவாது:

    லாகிரி வஸ்துவாகிய பல வித சாராய வகைகள் கோடை காலமாகிய உஷ்ண காலங்களிலே வாய் கட்டாமல் மிகுதியாய்க் குடிக்கிறவர்களுக்கு மிகுதியும் வியாதிகள் சம்பவக்கிரபடியால் இந்த அவசரமான வேளையில் எங்களால் ஆன மட்டும் விலக்கினோம். நிற்க உத்தாரமாக கட்டளை இட்டதாவது. எந்தச் சாதியில் எப்பேர்ப்பட்டவராகிலும், மார்ச்சு மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரைக்கும், பிராந்தி சாராயம், லிக்கர் சாராயம், பத்தாவி சாராயம், கொழும்பு சாராயம், கோவை சாராயம், பட்டை சாராயம் மற்றுமுள்ள சுளுக்கான சாராயங்கள் விற்றாலும் விற்பித்தாலும், கொஞ்சமானாலும் ரொம்பவானாலும் பின்னே எந்த மார்க்கத்திலேயாவது வழக்கம் பண்ணி இந்த உத்தாரத்தை மீறி நடந்தவர்கள் ஆயிரம் வராகன் அபராதமும், கொடுத்து ஒரு வருஷம் காவலிலே கிடக்கிறது. அபராதம் வாங்கிய வராகனிலே பிச்சைக்காரருக்கு ஒரு பங்கு கொடுத்துவிடுகிறது. இந்த உத்தாரத்தை, பயமுறுத்தி மிரட்டுகிறதாக எண்ணத் தேவையில்லை. மெய்யாக இந்த கட்டளைப்படிக்கு நடத்துவோம். தமிழர்களாவது பறையர்களாவது கரிகாப்பு இல்லாதவர்களாவது இவர்கள் சொலுதாதுகளுக்காவது பின்னை யாவருக்காவது விற்றாலும் கொண்டு வந்து கொடுத்தாலும், கூலிக்கு எடுத்துப் போனாலும் இது சாட்சி சாதகத்துடனே அகப்பட்டால், அவர்களை சாவடியிலே கட்டி அடிச்சு, வலது தோளிலே சுணக்கி முத்திரை போட்டு குண்டுக்கு வெளியே துரத்திவிடுகிறது. தோட்டங்களிலே, வீட்டுக் கொல்லைகளிலே, தென்னை மரம் வைத்திருக்கிறவர்கள் எவர்களுக்காவது தோட்டங்களிலேயாவது, வீடுகளிலேயாவது, மற்ற இடங்களிலேயாவது கள்ளு ஒரு காசு அளவிலே விற்றாலும், விற்கச் செய்தாலும், யாதொருத்தர் குடித்தாலும் குடிக்கச் செய்வித்தாலும், அவர்களுக்கும் முன்னே எழுதி இருக்கிற ஆக்கினையும் அபராதமும் நடக்கும். கள்ளு இறக்குகிறவர்கள், காபியாக்கி விற்றுக் கொள்ளலாம். அவரவர்களும் அவரவர் வீட்டிலே வைத்திருக்கிற பல்லய்ய வித சாராயங்களை மூன்று நாளைக்குள்ளாக கிரேபுக்கு வந்து மிசியோ திமிரேன் கையிலே, இவ்வளவு இருக்கிறதென்று வெளியாகச் சொல்லி எழுதுவித்து கையெழத்துப் போட்டுக் கொடுக்கிறது. கிரேபிலே சொல்லி எழுதுவிச்சவர்களுக்கு கொடுக்கத் தக்கது கொடுத்து, மற்றதை கும்பனீர் மக்செனிலே எடுத்துக் கொண்டு அதுக்குள்ளே கிரயம் கொடுத்துவிடுகிறது. இப்படிச் சகல ஜெனங்களும் அறிந்து கொள்ளவும்.

    இது கவர்னர் டூமாவின் (Dumas) கட்டளையை தன டைரியில் எழுதி இருப்பதாம். பிரபஞ்சன் இது சமூக ஆய்வாளர்களுக்கு பயன்படும் என்று அப்படியே கொடுத்திருக்கிறார். ஆனந்தரங்கம் பிள்ளை 1709-1761 காலத்தில் வாழ்ந்தவர். இந்த உத்தரவு வந்தது 1735 வாக்கில் இருக்க வேண்டும்.

    தமிழ் வினோதமாக இருக்கிறது. என் கண்ணில் பட்டவற்றை நான் ஹைலைட் செய்திருக்கிறேன். சில விஷயங்கள் ஒரு மாதிரி குன்ஸாகத்தான் புரிகிறது. சில இடங்களில் கோனார் நோட்ஸ் தேவைப்படுகிறது. (கோனார் நோட்ஸ் இப்போதெல்லாம் வருகிறதா?) உதாரணமாக குண்டுக்கு வெளியே என்று ஒரு பிரயோகம் இருக்கிறது. அப்படி என்றால் கோட்டைக்கு வெளியே என்று அர்த்தமாம்! போர்கள் மலிந்த அந்த காலத்தில் இது makes sense!

    பத்தாவி சாராயம் – இப்படி என்றால் என்ன என்று தெரியவில்லை. ஒரு வேளை Batavia -விலிருந்து வந்த சாராயமாக இருக்குமோ? படாவியா என்பது இந்தோனேஷியாவில் உள்ள ஜாகர்த்தாவின் பழைய பெயர்.

    கோவை சாராயம் – இந்த டைரி எழுதப்பட்ட காலத்தில் கோயம்புத்தூர் பெரிய ஊராக இருந்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இல்லாவிட்டால் இதை கோயம்புத்தூர் சாராயம் என்று பொருள் கொள்ளலாம்.

    சுளுக்கான சாராயங்கள் – சாராயத்தில் என்ன சுளுக்கு?

    அபராதத்தில் பிச்சைக்காரருக்கு ஒரு பங்கு! – எதற்கு?

    தமிழர்களாவது பறையர்களாவது – தமிழர் வேறு, பறையர் வேறு! பறையர் தமிழர் இல்லை!

    கரிகாப்பு இல்லாதவர்கள் – அது என்ன கரிகாப்பு?

    சொலுதாதுகள் – சோல்ஜர் என்று அர்த்தமாம். பிரபஞ்சன் சொல்கிறார். ஃப்ரெஞ்ச் தெரிந்த டோண்டு ராகவன் மாதிரி யாராவது இது ஃப்ரெஞ்ச் வார்த்தையா என்று சொல்லுங்கள்.

    சாவடியிலே கட்டி அடிச்சு – சத்திரம் சாவடி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சாவடி என்றால் சத்திரம் மாதிரி என்று நினைத்திருந்தேன். சாவடி அந்த காலத்து போலீஸ் ஸ்டேஷனோ?

    வலது தோளிலே சுணக்கி – அது என்ன சுணக்கி?

    குண்டுக்கு வெளியே – கோட்டைக்கு வெளியே

    கள்ளு இறக்குகிறவர்கள் காப்பியாக்கி விற்றுக் கொள்ளலாம். – கள்ளை எப்படி காப்பியாக்குவது? அது என்ன விதமான காப்பி?

    பல்லய்ய வித சாராயங்கள் – பல்லய்ய என்றால் பல என்று அர்த்தமா?

    க்ரேபு – ஒரு வித அலுவலகமாம். பிரபஞ்சன் சொல்கிறார்.

    மிசியோ – monsieur.

    கும்பனீர் மக்சென் – கும்பனீர் என்றால் கம்பெனியார். மக்சென் என்றால்?

    உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்!

    பின் குறிப்பு: ஜி.யு. போப் Tamil Prose Reader என்று ஒரு புத்தகத்தை பதிப்பித்திருக்கிறார். பல தரப்பட்ட தமிழ் – கடிதங்கள், கோர்ட் கேஸ் விவகாரங்கள், உத்தரவுகள் இந்த மாதிரி – அந்த புத்தகத்தில் பார்க்க கிடைக்கும். எல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வாக்கில் வந்தவை. என்னிடம் ஒரு காப்பி இருக்கிறது, எங்கே என்றுதான் தெரியவில்லை. ஃப்ரீமாண்ட் நூலகத்திலும் கிடைக்கும். படித்துப் பாருங்கள்!

    தொடர்புடைய பதிவுகள்:
    பிரபஞ்சனின் மானுடம் வெல்லும்

    ஜெயமோகன் படிக்க வேண்டிய வரலாற்று புத்தகங்கள் என்று சிபாரிசு செய்திருந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கிறது.

    காந்தியின் leadership குணம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துவது. ஐம்பது வயது வரைக்கும் இந்தியாவில் அவ்வளவாக visibility இல்லாத மனிதர். திடீரென்று வருகிறார். இரண்டு மூன்று வருஷங்களில் காங்கிரஸ் அவர் பாக்கெட்டுக்குள். பழம் தின்று கொட்டை போட்ட மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், லாலா லஜ்பத் ராய் எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டார். திலகர் கூட காந்தியின் வழி வேலை செய்கிறதே என்று சொன்னாராம். காந்தி சொன்னார் என்று பெரும் பணக்கார, வாழ்க்கையில் வெற்றி பெற்ற படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் போன்ற வக்கீல்கள் எல்லாம் சொத்து சுகத்தை விட்டுவிட்டு ஜெயிலுக்கு – ஜெயிலுக்கு! – போக க்யூவில் நிற்கிறார்கள். அந்த காலத்தில் ஜெயிலுக்கு போவது என்றால் இந்த படித்த, பணக்கார வர்க்கம் எப்படி பயப்பட்டிருக்கும்! வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றவர்கள் பட்ட பாட்டை பார்த்த பிறகு எவனுக்கு தைரியம் வரும்? காந்தி வர வைத்திருக்கிறார். நாடே அவர் சொன்ன பேச்சை கேட்டிருக்கிறது. அவர் சொன்னால் ஒத்துழையாமை இயக்கம். சௌரி சௌராவில் வன்முறை, நிறுத்தி விடுங்கள் என்றால் நின்றுவிடுகிறது. இது என்ன மந்திரமா மாயமா?

    இது காந்தி உத்தமர், தியாக் சீலர் என்பதானால் வந்த தாக்கம் இல்லை. என் கண்ணில் கோகலே காந்தியை விட தியாக சீலர். கோகலேயின் தாக்கம் காந்தியின் தாக்கத்தில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. ஒரு இயக்கத்தின் தலைவன் தனி மனித சாதனையாக என்ன செய்துவிட முடியும்? அந்த செயல்களுக்கு ஒரு symbolic value இருக்க வேண்டும். காந்தி அந்த gesture-களை கவனமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். உப்பெடுப்பதாக இருக்கட்டும், சட்ட மறுப்பு இயக்கமாக இருக்கட்டும், உண்ணாவிரதமாக இருக்கட்டும், அது சாதாரண மனிதனுக்கு புரிகிறது, அவனுக்கும் செய்ய வேண்டும் என்ற ஒரு தூண்டுதல் ஏற்படுகிறது.

    பிரசாத் பாபுவின் புத்தகத்தில் நல்ல insight கிடைக்கிறது. சம்பரானில் அவுரி பயிர் செய்யும் பெரும் ஜமீன்தார்களுக்கும் நிலத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கும் தகராறு. பஞ்சம். காந்தி ஆஃப்ரிக்காவில் உழைத்திருக்கிறார் என்பதால் அவரை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எதோ ஒரு காங்கிரஸ் வருஷாந்திர கூட்டத்தில் கேட்டிருக்கிறார்கள். எனக்கு தெரியாது, விசாரித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு சம்பரானுக்கு வந்திருக்கிறார். கூட லோகல் பெரிய மனிதர்கள், பிரசாத் பாபு உட்பட. காந்தி உள்ளே வரக்கூடாது என்று தடை உத்தரவு. காந்தி இதை நான் ஏற்கப் போவதில்லை, நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை, நீங்கள் எல்லாம் போய்விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். பிஹாரி பாபுக்கள் எல்லாம் கூடி பேசுகிறார்கள் – எங்கிருந்தோ வந்த ஒருவர் பிஹாரி மக்களுக்காக ஜெயிலுக்கு போக தயாராக இருக்கிறார், நாம் திரும்பி போவது வெட்கக்கேடு என்று. காந்தி கூட சேர்ந்து நிற்கிறார்கள். அன்றிலிருந்து பிரசாத் பாபு காந்தியின் அடிமை. பிரசாத் வெளிப்படையாகவே சொல்கிறார் – சில சமயம் காந்தி சொல்வது எனக்கு புரிவதில்லை, பிடிப்பதில்லை, ஆனால் நான் அவர் பேச்சை தட்டுவதும் இல்லை என்று.

    காந்தியின் ரகசியம் இதுதானோ? கஷ்டமான காரியத்தை – அது மலம் அள்ளுவதாக இருக்கட்டும், ஜெயிலுக்கு போவதாக இருக்கட்டும், உண்ணாவிரதம் இருப்பதாக இருக்கட்டும், சட்ட மறுப்பு போராட்டமாக இருக்கட்டும் – தான் முன்னால் நின்று செய்து மற்றவர்களுக்கு moral pressure உருவாக்கி இருக்கிறார். அவர் பின்னால் ஒருவர் வந்தாலும் போதும், அது மேலும் peer pressure-ஐ உருவாக்குகிறது. ஒன்று இரண்டாகி பத்தாகி நூறாகி கோடியாகிறது.

    மானேஜ்மென்ட் குரு எல்லாரும் படிக்க வேண்டியது காந்தியின் வழிகளைத்தான்.

    ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கிறது.

    தொடர்புடைய பதிவுகள்:
    படிக்க வேண்டிய இந்திய வரலாற்று புத்தகங்கள் – ஜெயமோகன்

    பிரபஞ்சன் இந்த புத்தகம் பற்றி சொல்கிறார் -

    தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!

    மேலும் சொல்கிறார் -

    முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.

    அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சரித்திர நாவல் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் பேர் சாண்டில்யன்தான். சாண்டில்யன் கதைகள் நமக்கு தரும் அனுபவம் எம்ஜிஆர் படங்கள், காமிக்ஸ் சாகசம் மாதிரிதான். அவர் கொண்டு வரும் வரலாறு எல்லாம் ராஜா ராணி இளவரசன் இளவரசி பற்றிதான். தமிழில் இது வரை வந்த சரித்திர நாவல்களில் மிக சிறந்ததாக நான் நினைப்பது பொன்னியில் செல்வன். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட பொ. செல்வனில் அன்றைய வாழ்க்கை முறை – ஜாதி, விவசாயம், குறுநில மன்னர்கள்-மைய அரசு பற்றிய உறவு, படை எப்படி திரட்டப்பட்டது – பற்றி எல்லாம் ஒரு வரி கூட கிடையாது. அதைப் படித்து சுந்தர சோழனுக்கு அப்புறம் உத்தம சோழன் பட்டத்துக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம். பொ. செல்வனின் சிறப்பு அதன் கதைப் பின்னல் மட்டுமே.

    நம் எல்லாருக்கும் வரலாறு என்றால் அசோகன், விக்ரமாதித்தன், நரசிம்ம வர்மன், ராஜராஜன், அக்பர் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போது எனக்கு இந்த கேள்வி உண்டு – பாபருக்கு பிறகு அக்பர் வந்தால் என்ன, இல்லை அக்பருக்கு பிறகு பாபர் வந்தால் என்ன, இந்த இழவை எல்லாம் எதற்கு படிக்க வேண்டி இருக்கிறது என்று. தமிழ் வரலாற்று நாவல்கள் இந்த ராஜா-ராஜா சண்டைகளை தாண்டவே இல்லை.

    பிரபஞ்சன் தாண்டி இருக்கிறார். தகவல்களை தேடி எடுத்து அதை சுவாரசியமான கதை ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை நாவல் ஆக்கி இருக்கிறார்.

    ஆனால் அவராலும் ராஜா கதையை முழுதாக தாண்ட முடியவில்லை. நாவலில் பெரும் பகுதி சந்தா சாஹிப், தஞ்சை அரசர்கள், ஆட்சி உரிமைக்கான தகராறுகள் பற்றி பேசுகிறது. இவை பெரும்பாலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன. ராஜராஜ சோழன் கதையை முதலமைச்ச்சர் அநிருத்த பிரம்மராயர் கண்ணோட்டத்தில் விவரிப்பது போல.

    நாவலின் பிரச்சினை கதை கோர்வையாக இல்லாததுதான். உதாரணமாக ஒரு முதலியார் தன சம்பதியிடமிருந்து அடிமைகளை வாங்குவது ஒரு பகுதியில் விவரிக்கப்படுகிறது. இது ஒரு தனி கிளைக்கதை. ஒரு பத்து பக்கம் போகிறது. முன்னேயும் பின்னேயும் அதை பற்றி வேறு பேச்சு இல்லை. அதில் வரும் பாத்திரங்கள் வேறு எங்கும் வருவதும் இல்லை. ஒரு வருஷம் பேப்பர் தலைப்பு செய்திகளை சேகரித்து அதை ஒரு கதை ஆக்குவது போலத்தான்.

    ஆனால் மிக அருமையான முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ் நாவல். தமிழின் மூன்று சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று. (பொ. செல்வன், சிவகாமியின் சபதம் மற்ற இரண்டு)

    ஜெயமோகன் இதை தமிழின் பத்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ். ராமகிருஷ்ணன் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார்.

    தொடர்புடைய பதிவுகள்:
    தமிழில் சரித்திர நாவல் சிபாரிசுகள், இன்னும் சில சிபாரிசுகள்
    ஜெயமோகனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்
    எஸ். ராமகிருஷ்ணனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்

    (இது ஸ்ரீ சேதுராமன் அவர்களின் இடுகை)

    FY

    சசி தரூர் ஆபத்து விலகியது – சோனியாவைச் சந்தித்து விளக்கம் – இனி கவனமாக இருக்கும்படி கண்டிப்பு (தினமலர் தலையங்கம் – செப்.23,2009)

    மத்திய அரசின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து இணைய தளத்தில் கருத்து தெரிவித்த வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் “விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்வது, மாட்டுத் தொழுவத்தில் (cattle class) பயணிப்பது போன்றது என்று கூறியிருந்தார் – இதற்கு எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது — ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சசி தரூர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்றும், செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் தரூருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளமுடியாது, அவர் கருத்துக்கள் கண்டனத்திற்குரியன என்றும் கூறினர். பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் ‘சசி தரூர் கூறியது ஒரு ஜோக் தான் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.

    இந்த விவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடந்த போது சசி வெளிநாடுகளில் – லைபீரியா, கானா – சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். விவாதம் முற்றுவது கண்டு அவர் தன் கருத்துக்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அறிவித்தார்…  பயணத்திலிருந்து திரும்பியவுடன், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை, அவரது இல்லத்தில் இருபது நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்..  சந்திப்பு முடிந்து வெளியே வந்த சசி செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.  (தின மலர் செய்தி)

    நமது அரசியல் வாதிகளுக்கு என்றுமே கலா ரசனை கிடையாது என்பது இதிலிருந்து நிதர்சனமாகத் தெரிகிறது..  ட்விட்டரில் ஒரு பட்டாளமே சசியை ஆதரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றது!  ஒரு சாதாரண ‘கடி’  என்ன விளைவை ஏற்படுத்தி விட்டது என்று பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது..  ஏனெனில் இது முதல் தடவையல்ல, பெரிசுகளுக்கு நினைவிருக்கலாம், ஐம்பது வருஷங்களுக்கு முன், இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்து, லோக் சபாவில் விவாதங்களும், பரிமாற்றங்களும் நடந்து ஒரு  சிறு புத்தகம் வாபஸ் பெறப்பட்டது…  அந்தப் புத்தகம் தான் “Foolishly Yours”

    ஜே.ஆர்.டி.டாடாவின் “ஏர் இந்தியா” நிறுவனத்தின் கமர்ஷியல் டைரக்டர், எஸ்.கே. (பாபி) கூகாவின் கற்பனையில் உதித்த ஒரு முத்து இந்தப் புத்தகம். எல்லா ஏர் இந்தியா விமானங்களிலும், இருக்கைக்கு முன்னுள்ள பையில், இந்தப் புத்தகம் இருக்கும்.  பயணிகளின் கவனத்திற்கென சில விஷயங்கள் நகைச்சுவையுடனும், சித்திரங்களுடனும் விளக்கப் பட்டிருக்கும்..

    இந்தப் புத்தகம் ஏர் இந்தியா நிறுவனத்தினால் 1948 போல் வெளியிடப்பட்டது. படிக்கும் போது நன்றாகவாய் விட்டுச் சிரிக்கலாம் – விமானப் பயணம் அன்று, இப்போதிருப்பது போல் மக்களைக் கவரவில்லை, வெகு சிலரே, நிதி வசதி உள்ளவர்களே விமானங்களில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.  பயணத்தின் போது எப்படி இருக்க வேண்டும், என்னென்ன செய்வது என்றெல்லாம் ‘கடி’யாக விவரித்திருக்கும்  –

    உதாரணமாக “நீங்கள் பயணம் முடிந்தபின் கீழே இறங்கும் போது, எங்கள் ஏர் ஹோஸ்டஸ் உங்களைத் தழுவிக்  கொண்டார் என்றால், அது உங்கள் பேரில் அவருக்குள்ள அன்போ, ஆசையோ அல்ல – மறதியாக நீங்கள் உங்கள் பைக்குள் எடுத்துப் போட்டுக் கொண்ட எங்கள் ஸ்பூன், ஃபோர்க்  (cutlery) முதலானவற்றைத் திரும்ப எடுப்பதற்குத்தான்!!

    இன்னொன்று — எங்கள் விமானக் கேப்டன் உங்கள் இருக்கையை நோக்கி ஒரு பாய்ச்சலில் வருவது கண்டால், உங்கள் மனைவியையும், பர்சையும் மறு புறம் மாற்றி விடுங்கள்! கூகாவின் கற்பனையிலுதித்த ஏர் இந்தியா போஸ்டர்கள் பிரசித்தி பெற்றவை – பல தேசங்களைச் சேர்ந்த விமானக் கம்பெனிகளின் நானூறு போஸ்டர்கள் கண்காட்சியில் 1959ல் ஏர் இந்தியா போஸ்டர் தான் “அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ட்ராவல் ஏஜண்ட்ஸ்” பரிசைத் தட்டிச் சென்றது… 1960ல் இந்தியாவின் “இண்டியன் சொசைட்டி ஆஃப் அட்வர்டைஸர்ஸ்” ஏர் இந்தியாவின் அக்காலச் சின்னமான “மஹாராஜா’வை உலகிற்கு அறிமுகப் படுத்திய திரு. கூகாவைக் கௌரவித்தது.  ஆனால் அதே வருஷம் தான், இந்தியப் பார்லிமெண்டில் நமது எம்.பி.க்கள் இத்தகைய விளம்பரங்களினால், இந்தியாவின் மானமே பறி போய்விட்டது என்று கூக்குரலிட்டனர்.. இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தது, ஏ.எம்.தாரிக் என்ற எம்.பி.  — கட்லரி ‘கடி’யைச் சுட்டிக்காட்டி இந்தியர்களெல்லாம் திருடர்களா என்ன? என்றார் அவர்.  குறிப்பிட்ட கார்ட்டூன் சித்திரத்தில், பயணிக்கு ஒரு காந்தி குல்லா இருந்ததும் சுட்டிக் காட்டப் பட்டது.

    அப்போதைய சபாநாயகர் தன் பங்கிற்கு “விமானத்தில் நானும் கவனித்திருக்கிறேன் – விளக்குகள் அணையும் போது பெண் பயணிகள்  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்று சொல்லுகிறார்களே என்றார் — அவர் குறிப்பிட்டது மேலே குறிப்பிட்ட இரண்டாவது ‘கடி’  –   இந்த விவாதங்களுக்குப் பிறகு அந்தக் கைப் புத்தகம் விமானக் கம்பெனியால் வாபஸ் பெறப்பட்டது.  அப்போதைய அமைச்சர் எவ்வளவோ முயன்ற போதும், நமது எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கையை த் திரும்பப் பெற மறுத்தனர்.

    வருஷங்கள் ஐம்பது ஆனாலும் எம்.பி.க்கள் மாறவில்லை – அவர்களது நோக்கிலும் முன்னேற்றங்களில்லை..

    (செய்திகள் ஆதாரம் – தினமலர், சென்னை  — டைம் பத்திரிகை செப்.1960 – எனது கடந்த கால நினைவலைகள்)

    விஸ்வாமித்ரருக்கு ஏது பிராமண சந்ததியர், இந்த விஸ்வாமித்ர கோத்ரம் எங்கிருந்து வந்தது என்று நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். பிறகு எப்போதோ தேவி பாகவதத்தில் படித்தது நினைவு வந்தது.

    ஹரிச்சந்திரன் சத்தியசந்தன், என்ன கஷ்டம் வந்தாலும் பொய் சொல்லமாட்டான், அவனை விஸ்வாமித்ரர் பல விதமாக கஷ்டம் கொடுத்து சோதித்தார் என்ற கதை நம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தேவி பாகவதத்தில் வேறு ஒரு கதை வருகிறது.

    ஹரிச்சந்திரனுக்கு ரொம்ப நாளாக குழந்தை இல்லை. பிறகு அவன் வருணனிடம் தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்றும், பிள்ளை பிறந்தால் அதை வருணனுக்கே யாகம் செய்து பலி கொடுத்துவிடுவதாகவும் வேண்டிக் கொள்கிறான். பலி கொடுப்பதற்கு பிள்ளை எதற்கு என்றெல்லாம் யோசிக்காதீர்கள். வருணனும் மனம் மகிழ்ந்து உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும் என்று வரம் கொடுக்கிறான். லோகிதாசனும் பிறக்கிறான். வருணன் யாகம் செய்து பலி கொடு என்று கேட்கிறான். ஹரிச்சந்திரன் இல்லை இல்லை பிள்ளை கொஞ்சம் வளரட்டும் என்று சொல்ல வருணனும் ஒத்துக் கொள்கிறான். இப்படியே பல தடவை தவணை கேட்கிறான். அதற்குள் ஓரளவு விவரம் தெரிந்துகொண்ட லோகிதாசன் எங்கோ ஓடிவிடுகிறான். கோபம் வந்த வருணன் ஏதோ வியாதி வரும் என்று ஹரிச்சந்திரனுக்கு சாபம் கொடுக்கிறான். லோகிதாசனும் இல்லை, என்னதான் வழி என்று ஹரிச்சந்திரன் யோசித்து சுனச்சேபன் என்ற ஏறக்குறைய அதே வயது பையனை அவன் பெற்றோர்களிடமிருந்து வாங்கி அவனை யாகத்தில் பலி கொடுக்க ஏற்பாடு செய்கிறான். வருணனும் பலி பெற்றுக் கொள்ள ரெடி. யாகம் நடக்கும் வேளையில் அங்கே வரும் விஸ்வாமித்ரர், என்னமோ சொல்லி வருணனை சாந்திப்படுத்தி சுனச்சேபனை மீட்கிறார். சுனச்சேபன் தன்னை விற்ற பெற்றோர்கள், தன்னை காப்பாற்ற தவறிய அரசன், ஆகியோரிடம் மீண்டும் போக விரும்பவில்லை. விஸ்வாமித்ரர் அவனை தன மகனாக ஏற்றுக் கொள்கிறார்.

    விஸ்வாமித்ர கோத்ரம் சுனச்சேபனிடமிருந்து வந்திருக்கலாம். சமீபத்தில் எங்கோ படித்தேன் – சுனச்சேபன் விஸ்வாமித்ரரின் மருமகன்(nephew) என்றும் அவரது நூறு ஒரிஜினல் பிள்ளைகளும் சுனச்சேபனை தங்கள் சகோதரனாக ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றும், அதனால் அவர் அந்த பிள்ளைகளை சபித்துவிட்டார், அந்த பிள்ளைகள் விந்திய மலையை தாண்டி தெற்கில் விஸ்வாமித்ர கோத்ரத்தை பரப்பினார்கள் என்றும் படித்தேன். எனக்கு நினைவிருப்பது விஸ்வாமித்ரர்-வசிஷ்டர் சண்டையில் அவரது நூறு பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள் (சண்டையின் போது விஸ்வாமித்ரர் ராஜா, அவரது பிள்ளைகளை க்ஷத்ரியர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்) என்றுதான்.

    சுனச்சேபனுக்குத்தான் விஸ்வாமித்ரர் காயத்ரி மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார் என்றும் மங்கலாக ஒரு நினைவு இருக்கிறது.

    ஹரிச்சந்திரன் பல தடவை வருணனிடம் பொய் சொல்கிறான். ஆனால் பிறகு சத்தியசந்தனாக மாறிவிடுகிறான். ஒரு வேளை இது வேறு ஹரிச்ச்சந்திரனோ? ஆனால் பையன் பேரும் சரியாக லோகிதாசன் என்றே இருக்கிறது.

    தொடர்புடைய பதிவுகள்
    விச்வாமித்ர கோத்ரம்

    லா.ச.ரா.வின் அபிதா படிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நண்பர் ராஜன் புண்ணியம் கட்டிக்கொண்டார்.

    அபிதாவின் பலம் அதன் மொழி. சொகுசான நடை. லா.ச.ரா.வின் நடையை விவரிப்பது கஷ்டம். மிக அற்புதமான படிமங்களை கொண்டு வருகிறார். சில உதாரணங்கள்.
    “நேற்றிரவே மின்சாரம் தோற்றுவிட்டது” (பவர் கட் ஆகிவிட்டதாம்)
    “வாய்க்கால் வளைந்து தன் தலையை தேடும் பாம்பு போல ஓடிற்று.”
    “கல் வடித்த கண்ணீர்” (கல் திட்டுக்களுக்கு அடியில் ஒரு ஊற்று கசிகிறது)
    “(வெற்றி) இருவரில் ஒருவருக்கு துரோகம் செய்தே ஆக வேண்டும்.”

    மீண்டும் மீண்டும் படிக்கலாம். கவனிக்க தவறிய வார்த்தைகள், படிமங்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர் சொல்வாராம், நெருப்புன்னு எழுதினா படிக்கறவனுக்கு சுடணும் என்று.(சரியான வார்த்தைகள் ஞாபகம் இல்லை, ஆனால் இந்த அர்த்தத்தில்தான்) யோசித்து யோசித்து செதுக்கி இருக்க வேண்டும்.

    சில சமயம் யோவ் கிழவா, என்னய்யா சொல்றே என்று ஒரு கடுப்பும் கிளம்புகிறது.

    கதையின் பலவீனமும் மொழிதான். மொழி மட்டுமே போதுமா? லா.ச.ரா. படிமங்கள், அழகு இல்லை இல்லை ஸௌந்தர்யம், அதை தாண்டி போக பிரயாசைபடுவதில்லை. அவருக்கு கதையே அவரது வார்த்தைகளை, படிமங்களை மாட்டும் ஒரு சட்டம்தானோ(frame) என்று தோன்றுகிறது.

    புத்தகத்தை பதிப்பித்த வாசகர் வட்டத்தை பற்றி ஒரு வார்த்தை. புத்தகம் வெளியிட்டு 40 வருஷம் ஆகிவிட்டது. இன்னும் கருக்கு குலையாமல் அப்படியே இருக்கிறது. இந்த கால புத்தகம் கூட நாலு முறை படித்தால் பைண்டிங் கிழிந்து விடும், பக்கம் கசங்கிவிடும். வாசகர் வட்டம் காலத்தில் நான் இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது. நல்ல முறையில் அச்சிடப்பட்ட புத்தகத்தை படிப்பதும் ஒரு சுகம்!

    அபிதா ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவர் லிஸ்டிலும் இடம் பெறுகிறது.

    தொடர்புடைய பதிவுகள்:
    வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
    லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் பேட்டி
    ஜெயமோகன் சிபாரிசு செய்யும் தமிழ் நாவல்கள்
    எஸ். ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த தமிழ் நாவல் லிஸ்ட்

    அடுத்த பக்கம் »