ஜூலை 2009


தங்கர் பச்சான்

தங்கர் பச்சான்

தங்கர் பச்சானின் இரண்டு சிறுகதை தொகுதிகளையும் ஒரு நாவலையும் நான் இது வரை படித்திருக்கிறேன். குடி முந்திரி, வெள்ளை மாடு, ஒன்பது ரூபாய் நோட்டு. ஒ.ரூ. நோட்டு நேற்று இரவுதான் தூக்கம் வராமல் படிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சிலே படித்து முடித்தேன்.

ஒன்பது ரூபாய் நோட்டு நல்ல நாவல். தமிழிலே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஒரு கணத்தில் தன் மகன்களிடம் சண்டை போட்டுக்கொண்டு ஊரை விட்டும் போகும் மாதவர் தான் சேர்த்த சொத்து அத்தனையும் தன் பிள்ளைகள் கட்டி காக்காததை பார்த்துவிட்டு சாகிறார். மிக சரளமான நடை. கடலூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம் நம் கண் முன் கொண்டு வருகிறார். படிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன். இந்த படத்தை இப்போது தேடி பிடித்து பார்க்க வேண்டும்.

குடி முந்திரியில் டைட்டில் கதை பிரமாதம். விவசாயக் குடும்பம். ஒரு பையனுக்கு ஷூ வாங்க வேண்டும். அவ்வளவுதான் கதை. இதை அற்புதமாக சொல்லி இருப்பார். தமிழின் சிறந்த கதைகளில் ஒன்று. நான் என்றாவது ஒரு தமிழ் கதை ஆந்தாலஜி தொகுத்தால் இந்த கதை நிச்சயம் இடம் பெறும்.

வெள்ளை மாடு புத்தகத்திலும் டைட்டில் கதை அருமை. வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த வெள்ளை மாட்டை விற்க வேண்டி இருக்கிறது. பிறகு ஒரு நாள் அதை பார்க்கிறார்கள். பிரேம்சந்த் எழுதிய அற்புதமான “தோ பைலோன் கி கஹானி” கதையை நினைவுபடுத்துகிறது. (பிரேம்சந்த் கதை டைட்டில் ஏறக்குறையதான் ஞாபகம் இருக்கிறது.)

இரண்டு புத்தகம் என்னிடம் இருக்கிறது. சவுத் பே, ஈஸ்ட் பே பகுதியில் உள்ளவர்கள் இரவல் வாங்கி படிக்கலாம். வெள்ளை மாடு ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும்.

இன்று இந்த தளத்தின் பேருக்கு தகுந்தாற்போல தோன்றியதை எல்லாம் எழுதி இருக்கிறேன்.

துக்ளக் இப்போது நெட்டில் கிடைக்கிறது. வருஷ சந்தா ரூபாய் 900. என்னை போல நீங்களும் கஞ்சனாக இருந்தால் பழைய இதழ்களை ஓசியில் படிக்கலாம். 2006-இலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்னால் வரை ஓசி. வைக்கோவின் பேச்சு ராண்டமாக ஒரு இதழை திறக்க, அங்கிருந்து கிடைத்ததுதான். என்ன ஒரே சோகம் என்றால் பழைய இதழ்களிலும் சோவின் கேள்வி பதில் கிடைப்பதில்லை. நான் துக்ளக்கில் தேடுவது அது ஒன்றுதான்.

எழுத்தாளர் பா.ராகவன் தன பழைய கதை ஒன்றை இப்போது நெட்டில் வெளியிடுகிறார். கால் கிலோ கனவு, அரை கிலோ காதல் என்று.

உரையாடல் போட்டிக்கு ஒரு கதை எழுதி இருந்தேன். போட்டிக்கு வந்த எல்லா கதைகளையும் இங்கே படிக்கலாம்.

நீங்கள் சான் ஃப்ராந்சிஸ்கோ ஃப்ரீமான்ட் அருகே வசிப்பவரா? கடுமையான கோடை காலத்தை சமாளிக்க இது அருமையான வழி. நேற்று என் பெண்ணின் பிறந்த நாளை இந்த வாட்டர் பார்க்கில்தான் கொண்டாடினோம். குழந்தைகளோடு போக நல்ல இடம்.

உங்கள் தளம் எவ்வளவு பாப்புலர் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா? இங்கே பாருங்கள்.

வைக்கோவின் ஒரு பேச்சை சமீபத்தில்தான் படித்தேன். இது 2006-07 காலத்தில் ஆற்றப்பட்ட சொற்பொழிவு. மனிதருக்கு படிப்பில் நிறைய இண்டரஸ்ட் இருக்கிறது. கட் பேஸ்ட் செய்ய முடியாததால், என் வார்த்தைகளில் அவரது பேச்சு.

தமிழ் நாட்டில் கதைகள் எப்போது வந்தது? 1822-இல் சென்னை கல்வி சங்கம் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகளை முதன் முதலாக புத்தகமாக அச்சேற்றி வெளியிட்டது. 1826-இல் வில்லியம்பாக்கம் தாண்டவராய முதலியார் பஞ்ச தந்திரக் கதைகளை வெளியிட்டார். 53-இல் ஈசாப் கதைகள், 56-இல் மதன காமராஜன் கதைகள், 58-இல் மயில் ராவணன் கதைகள், 69-இல் 32 பதுமை கதைகள். 86-இல் பண்டித நடேச சாஸ்திரி தொகுத்த திராவிட பூர்வ கால கதைகள்.

1840,50,60-களில் தெலுங்கில் மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகள் பதிப்பிக்கப்பட்டன. அவற்றை உதய தாரகை என்ற பத்திரிகையில் சதாசிவம் பிள்ளை தமிழில் மறுபதிப்பு செய்தார். 92-இல் சாமிநாத ஐயரின் விவேக சிந்தாமணி வர ஆரம்பித்தது. அதில் மாதவய்யா, டி.எஸ். ராஜம் போன்றவர்கள் எழுதினார்கள்.

1910-இல் ஹிந்து பத்திரிகையில் மாதவய்யா வாரம் ஒரு கதை எழுதினர். 12-இல் ஹிந்துவே அதை குசிகர் குட்டி கதைகள் என்று வெளியிட்டது. (மாதவய்யா தமிழில் எழுதினாரா, ஆங்கிலத்திலா? ஹிந்துவில் தமிழ் கதைகள் வந்தனவா?) 22-இல் கல்கி கடலூர் சிறைச்சாலையில் இருந்து விமலா என்ற நாவலை எழுதினர் (கேள்விப்பட்டதே இல்லை) 23-31 காலத்தில் நவசக்தி, விமோசனம் ஆகிய பத்திரிக்கைகளில் எழுதினார். (அவரது விமோசனம் அனுபவங்கள் பற்றி இங்கே.) 31-41 வரை விகடன். பிறகு கல்கி பத்திரிகை.

33-இல் மணிக்கொடி ஆரம்பித்தது. புதுமைப்பித்தன், கு.ப.ரா., வ.ரா., பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா, டி.எஸ். சொக்கலிங்கம், மணிக்கொடி ஸ்ரீனிவாசன் இன்னும் பலர் மணிக்கொடி தலைமுறையை ஸ்தாபித்தார்கள்.

வைக்கோவின் கல்லூரி காலத்தில் அவருக்கு பிடித்த எழுத்தாளர்கள் அகிலன், மு.வ., கல்கி, காண்டேகர். பிறகு அண்ணா. அண்ணாவின் கொக்கரக்கோ என்ற கதை விகடனில் வந்தது. 49-இல் செவ்வாழை என்ற புகழ் பெற்ற கதை எழுதப்பட்டது. (ப்ராபகண்டாதான், ஆனால் படிக்கக் கூடிய நல்ல கதை). இது பிற்காலத்தில் ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

அண்ணாவைத் தவிர கலைஞர், ராதாமணாளன், ஆசைத்தம்பி, டி.கே. ஸ்ரீனிவாசன், தில்லை வில்லாளன், எஸ்.எஸ். தென்னரசு ஆகிய திராவிட இயக்க எழுத்தாளர்கள் வைக்கோவின் கண்ணில் குறிப்பிட வேண்டியவர்கள். விகடனில் ஜெயகாந்தனின் முத்திரை கதைகள் வந்தபோது நம்முள் பலரும் சுஜாதா தொடர்கதை எப்போது வரும் என்று காத்திருந்தது போல விகடன் எப்போது வரும் என்று வைக்கோவும் தன் மாணவப் பருவத்தில் காத்திருந்திருக்கிறார்.

« முந்தைய பக்கம்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers