ஜூலை 2009
மாதாந்திர தொகுப்பு
ஜூலை 30, 2009
Posted by Bags under
Tamil Culture,
Tamil Nadu Politics | குறிச்சொற்கள்:
British colony,
Congress,
Eelam,
Enathu Poraattam,
India,
Jaffna,
Mattakalappu,
Punjab,
Puthia Tamizagam,
Sind,
Sri Lanaka,
Tamil Murasu,
Tamil Nadu |
[8] Comments
இக்கட்டு்ரை நண்பர் சேதுராமன் அவர்கள் எழுதியது.
நம் தமிழ் நாட்டிலுள்ள இரு கழகங்கள் போட்ட பிரச்சாரக் கூக்குரலில், 1946ம் வருடத்திலேயே “ஈழம் உள்பட்ட ஒரு புதிய தமிழகம்” என்று குரல் எழுப்பிய ஒரு தமிழரை எல்லோருமே மறந்து விட்டனர். ஆம், தீவிர காங்கிரஸ்காரராக இருந்து, பின்னர் தனிக்கட்சி தொடங்கிய திரு ம.பொ.சிவஞானம் தான் அவர்.
புதிய தமிழகம் என்ற தலைப்பில் எழுதப்பெற்ற கட்டுரை சிதறுண்டு கிடந்த தமிழ் வழங்கும் பிரதேசங்களையும், எல்லைகளையும் விரிவாக வரையறை செய்துள்ளது முதல் முயற்சியாகும். ‘முதல் முயற்சி’ என்று குறிப்பிட்டதன் காரணத்தை ம.பொ.சி.யின் பின் வரும் எழுத்துகளில் இருந்து அறிய முடிகின்றது “” இதனை யான் எழுதிய நாளிலே, தமிழ் மாகாணம் படைக்கவும், அதன் வடக்கு-தெற்கு எல்லைகளை மீட்கவும், சென்னையம்பதியைக் காக்கவும், வேறொரு அரசியல் தலைவரோ, அரசியல் கட்சிகளில் எதுவுமோ குரல் கொடுத்ததில்லை என்பதை யான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்” – கட்டுரையிலிருந்து சில பகுதிகள் பின் வருவன:
*** தமிழ் நாட்டின் நீண்ட கால இலக்கியங்களில் காணப்படும் வரலாறுகளின்படி, தமிழ் நாட்டின் வடக்கெல்லை திருப்பதி என்பது திருத்தத்திற்கு இடமில்லாத ஒரு தீர்ப்பாகவே கொள்ள வேண்டும். *****
*** பிரிட்டிஷ் காலனியாக விளங்கும் இலங்கையில் ஒரு பகுதி யாழ்ப்பாணம். ஆனால் இந்தச் சிறு தீவு தமிழ் நாட்டிற்கும், இலங்கைக்கும் மத்தியில் இருக்கின்றது. இந்தத் தீவில் வாழ்வோர் அனைவரும் தமிழர்களே. யாழ்ப்பாணத்தைப் பற்றிய வரலாறுகளைத் தமிழிலக்கியங்களில் படிப்போர் எவரும் அதைத் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகவே ஒப்புக்கொள்வர். எனவே யாழ்ப்பாணத்தை இலங்கையோடு விட்டு வைப்பதா, அல்லது தமிழ் நாட்டுடன் சேர்ப்பதா? என்ற விஷயத்தில், அங்குள்ள மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளும் காலம் வந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். *****
1946ல் தெரிவிக்கப்பட்ட இக்கருத்துக்கள் குறித்து ம.பொ.சி. பின்னர் “எனது போராட்டம்” என்ற நூலில் பின் வருமாறு விளக்கமளித்துள்ளார்:
*** இலங்கையின் வட பகுதியும், இந்தியத் தமிழகத்தை அடுத்தாற்போலுள்ளதும், தமிழர் மிகுதியாக வாழ்வதுமான யாழ்ப்பாணத்தின் மீதும் உரிமை கொண்டாடியிருந்தேன். இலங்கையில் தமிழர் மிகுதியாக வாழும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளைப் பற்றி அப்போது நான் அறிந்திருக்கவில்லையாதலால், யாழ்ப்பாணத்தை மட்டுமே கோரியிருந்தேன்… அந்நாளில், இந்தியாவிலும், இலங்கையிலும் பிரிட்டிஷ் ஆட்சியே நடைபெற்று வந்ததால், இந்த இரண்டு நாடுகளிலுள்ள மக்களுக்குக் குடியுரிமை ஒன்றாக இருந்தது.. அதாவது இந்தியாவிலிருந்து இலங்கை செல்லவும், இலங்கையிலிருந்து இந்தியா வரவும் “பாஸ்போர்ட்” “விசா” பெற வேண்டிய சங்கடங்கள் இருக்கவில்லை. இந்தியாவில் வாழும் எனக்கு இலங்கை அயல் நாடாகத் தோன்றவில்லை - ஆம், யாழ்ப்பாணத்தை அயல் நாடொன்றின் உட்பகுதியாக நான் கருதவில்லை.. அதனால், இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் பிரிட்டிஷார் வெளியேறவிருந்த தருணத்திலே, மொழி அடிப்படையில், இந்திய-இலங்கை எல்லைகளைத் திருத்தி அமைக்குமாறு கோருவது தவறென்று நான் கருதவில்லை.
இந்தியாவையும் இலங்கையையும் கடல் நீர் பிரித்து நிற்பதை நான் அப்போது அறியாமலில்லை.. அறிந்தும், நிலத் தொடர்பற்ற யாழ்ப்பாணத்தின் மீது உரிமை கொண்டாடக்காரணமிருந்தது. அப்போது இந்தியாவில் முஸ்லிம்கள் மிகுதியாக வாழும் நிலங்கள் கொண்ட பாகிஸ்தானை முஸ்லிம் லீக் கோரி வந்தது. வடமேற்கில் உள்ள பஞ்சாப்-சிந்து எல்லைப்புற மாநிலங்களும், அதற்குச் சுமார் ஆயிரம் கல் தொலைவிலுள்ள வங்க மாநிலமும் இணைந்ததே முஸ்லிம் கோரிய “பாகிஸ்தான்” — நிலத் தொடர்பற்ற – ஆயிரம் கல் இடைவெளியைக் கொண்ட இருவேறு பகுதிகளை இணைத்துப் பாகிஸ்தான் அமைக்கப் படலாமென்றால், ஒரு மனிதன் எளிதில் நீந்திக் கடக்கக் கூடிய அளவேயுள்ள கடல் பரப்பால் பிரிக்கப்படும் யாழ்ப்பாணத்தையும், இந்தியத் தமிழகத்தையும் பிணைத்துப் “புதிய தமிழகம்” படைப்பதில் தவறில்லையென்றே நான் கருதினேன். ஆனால், பிற்காலத்தில் யாழ்ப்பாணம் பற்றிய கோரிக்கையை நான் அடியோடு கைவிட்டு விட்டேன், ஆம் – பிரிட்டிஷார் வெளியேறிய பின்னர், இலங்கை முற்றிலும் அயல் நாடாகி விட்டதல்லவா?
(பெ.சு.மணி எழுதிய “தமிழ் இதழியல் வரலாற்றில் ம.பொ.சி.யின் தமிழ் முரசு” – மே 2000 – பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர் சென்னை 600004 — புத்தகத்தில் இருந்து திரட்டப்பட்டவை)
ஜூலை 27, 2009

தான் வாழும் சூழ்நிலையின் பாதிப்பினால் ஒரு எழுத்தாளருடைய மொத்த கொள்கையும் உருவாகலாம் என்பதற்க்கு அய்ன் ராண்ட் ஒரு தலைச்சிறந்த உதாரணம். ரஷ்யாவின் கொள்கைகள் மேலிருந்த வெறுப்பு objectivism என்னும் தத்துவ சிந்தனையில் முடிந்தது. அவருடைய எழுத்தின் உக்கிரம் சுதந்திரமாக இயங்கமுடியாத சூழ்நிலையை புறக்கணிப்பதிலும், தனி மனிதர்களின் வாழ்வின் குறிக்கோள் தங்களை சார்ந்ததாகவே இருக்கவேண்டும் என்பதிலும் தான் மையம் கொண்டிருந்த்த்து. Atlas Shrugged, The Fountain Head போன்ற நாவல்கள் இந்த கொள்கையை பறைச்சாற்றும் தத்துவ நூலகள் போல அமைந்துள்ளது.
இந்தியா போன்ற சமுதாய முன்னேற்ற மைய நோக்கை கொள்கையாகக் கொண்ட அரசாங்கத்தின் கீழுள்ள சமூகத்தில் வாழும் நமக்கு இது போன்ற அய்ன் ராண்ட் நாவல்கள் ஏற்புடையாதாக இருப்பதில்லை. அதனால் இவருடைய கொள்கைகளை புரிந்து கொள்வதற்க்கும் சிரமமாக இருக்கலாம். மேலும் புரியாத கொள்கைகளை கொண்ட இந்த நாவல்களை படிப்பதற்கும் சிரமமாக இருக்கலாம்.
அவருடைய கொள்கைகளை அறிந்து கொள்வதற்கும், சரி வர புரிந்து கொள்வதற்க்கும் ஆன்த்தம் ஒரு primer ஆக விளங்குகிறது. இது அய்ன் ராண்டின் மிக எளிமையான நாவல். ஒரு கற்பனை சோசியலிச சமுதாயத்தை அறிமுகப்படுத்தி, தனி நபர் என்பவரின் அடையாளம் இழக்கபட்ட மற்றும் தனிநபர் என்ற ஒரு அடையாள்மே இல்லாத அப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒரு தனி நபரை அடையாளம் அடைய செயவதே கதையின் மையக் கரு. மேலும் Collectivism vs Individualism எனபதை அடிபபடை வாதமாகக் கொண்டு பின்னப்பட்ட நாவல்.
இலக்கிய கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, ஆன்த்தம் நாவலில் ஒட்டுமொத்த சமுதாய இயந்திரத்தை எதிர்த்து தனிநபரின் சிறப்பை சாதுர்யமாக உயர்த்தி சொல்வது அய்ன் ராண்டின் சிறப்பு. இயந்திர தனமாக மக்கள் செலுத்தப்படுகிறார்கள். இயந்திரத்தனமாக பிறப்பது முதல், படிப்பது, பொழுதுபோக்குவது, வேலை நிர்ணயிக்கப்படுவது, ஏன் சிந்தனை (உயிர் வாழ்விற்கு தேவைப்படும் அடிப்படை சிந்தனை மட்டுமே) செய்வதுகூட இயந்திர தனமாகத்தான். இப்படிபட்ட ஒரு வாழ்க்கை அமைப்பில் தனி நபர் சார்ந்த முன்னேற்றம் குற்றமாக கருதப்படும் பொழுது அந்த குற்றத்தில் சுய பிரஞ்கையுடன் ஈடுபடலாம் என்கிறார். மேலும் அது தான் தனி நபர் தர்மம் என்கிறார்.
படிப்பதற்கு அய்ன் ராண்டின் கொள்கைகள் நம்பிக்கையும் எழுச்சியும் ஊட்டுவதாக இருந்தாலும், சராசரி மனிதர்களே அதிகமாகக் கொண்ட சமுதாயத்தில் வாழும் இப்படிப்பட்ட சராசரி மனிதர்களின் நடைமுறை வாழ்க்கைக்கு இந்தக் கொள்கைகள் சாத்தியமானதா என்பது நமக்கு எப்பொழுதும் எழும் கேள்வி. அய்ன் ராண்ட் இந்த சராசரி மனிதர்களை பற்றி கவலையில்லை என்று தான் ஒரு முகவுறையில் சொல்கிறார். (கவலையில்லை என்றால் அவர்களுக்கு என்ன தீர்வு என்ன என்பது புரியவில்லை. தீர்வைப் பற்றி கவலை பட வேண்டிய அவசியம் தனி மனிதனுக்கு இல்லை என்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.). மேலும் அவருடைய சிந்தனை எல்லாம் அறிவுஜீவிகள் பற்றியே என்றும் இது அறிவுஜீவிகளின் உலகம் மட்டுமே என்பதும் சற்று நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகன் அய்ன் ராண்ட் பற்றி எழுதியுள்ளது கீழே உள்ள சுட்டிகளில் பார்க்கலாம்.
Ayn Rand 1
Ayn Rand 2
Ayn Rand 3
Ayn Rand 4
அய்ன் ராண்ட் பற்றி மேலும் இங்கே பார்க்கலாம்.
Ayn Rand Institute
ஜூலை 23, 2009
சிதம்பரம் கோவிலை பற்றி வினவு தளம் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அது ஒரு விவாதத்தை கிளப்பி இருக்கிறது. கோவில் சம்பிரதாயங்களை மாற்றலாமா? மாற்றலாம் என்றால் யார் யார் மாற்றலாம்? யார் தலையிடக் கூடாது?
பழைய கோவில்கள் – சிதம்பரம், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், திருப்பதி மாதிரி – எந்த ராஜாவோ கட்டி வைக்க, புகழ் பெற்று விளங்கும், பல ஊர்களிலிருந்து பக்தர்கள் வரும் கோவில்கள் எல்லாம் பொது சொத்து. இவற்றை கட்டுபடுத்த ஒரு அரசுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. சிதம்பரம் கோவிலுக்கு பராந்தக சோழன் பொன் கூரை வேய்ந்தான். யார் வீட்டு பணம்? தீட்சிதர்கள் பணமா? அதனால் அரசு அரசியல் சட்ட விதி தரும் வழிகாட்டுதல்படி கோவில் விதிகளை மாற்றலாம், தவறே இல்லை. மக்களுக்கு நல்லது என்று அதற்கு தோன்றுவதை, மதசார்பில்லாமல், அரசியல் சட்டத்துக்கு புறம்பாக போகாமல் கோவில்களில் கொண்டு வரலாம். தமிழில் பாடுவது தவறு என்று சொல்ல வேண்டுமானால் சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் பிரைவேட் கிளப் ஆக இருக்க வேண்டும். ஒரு பொது அமைப்பில் இப்படி ஒரு வழிமுறையை தீட்சிதர்கள் கொண்டு வர முயற்சித்திருக்க கூடாது.
அதே நேரத்தில் எனக்கு தீட்சிதர்களின், அவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களின், மன நிலை புரிகிறது. கோவில் போன்ற அமைப்புகளின் பலமே காலம் காலமாக வரும் சம்பிரதாயங்கள்தான். திருப்பதி வெங்கடாசலபதிக்கு முகம் மறையும்படிதான், மூக்கு வரை நாமம் போட வேண்டும். அவர் முகத்தை பக்தர்களுக்கு காட்டுகிறேன் என்று சின்ன நாமம் போட்டால் அவருக்கு இருக்கும் கெத்து குறைந்துதான் போகும். கேரளா கோவில்களுக்கு போனால் சட்டையை கழற்ற சொல்கிறார்கள், தவறு ஒன்றும் இல்லையே?
இந்த ஆதரவாளர்களுக்கு, இன்றைக்கு தமிழில் அர்ச்சனை, நாளைக்கு தண்ணி அடித்துவிட்டு வந்து அர்ச்சனை செய்வான், இன்னும் கொஞ்ச நாள் போனால் மாத விலக்கான பெண்கள் அர்ச்சனை செய்வார்கள் என்று பயம். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், மாத விலக்கான பெண் அர்ச்சனை செய்தால் ஒரு தவறும் இல்லை என்று என் அறிவுக்கு தெரிகிறது, கடவுள் மாத விலக்கான பெண்களை ஒதுக்கினால் அவர் கடவுளே இல்லை. ஆனால் என் மனம் கூசத்தான் செய்கிறது. என் அறிவு சொல்வதை ஏற்றுக் கொள்வது என் மனதுக்கு கஷ்டம். இன்னும் மூன்று நான்கு ஜெனரேஷன் போனால் இது சாதாரண விஷயமாக தெரியலாம். தெரிய வேண்டும்.
நான் இப்படி யோசிப்பவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றுதான். உடன்கட்டை, குழந்தை திருமணம், தலித்கள் கோவிலுக்குள் வரக்கூடாது எல்லாம் ஒரு காலத்தில் சரியாகத்தான் தெரிந்தன. அவை எல்லாம் தவறு என்று மாற்றும்போது அன்றும் மத விஷயங்களில் தலையிடுகிறார்களே என்று பலருக்கும் உறுத்தி இருக்கும். அன்றைய “முற்போக்காளர்கள்”, இது சரிதான், ஆனால் இதை அனுமதித்தால் இன்னும் என்னென்ன சீரழிவுகள் ஏற்படுமோ என்று பயந்திருப்பார்கள். என் முப்பாட்டன் காலத்தில் கிராப் வைத்தால் சீரழிவு. அதற்கு என்ன செய்வது? இப்போது நடப்பது உங்களுக்கு அறிவுபூர்வமாக சரியாக இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். மனது உறுத்தினால் அதை புறந்தள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
நாத்திகர்கள் ஆடு நனைகிறதே என்று ஏன் அழ வேண்டும் என்று விஜயராகவன் கேட்கிறார். இது முற்றிலும் தவறான வாதம். தவறை யார் வேண்டுமானாலும் தட்டி கேட்கலாம். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. அப்புறம் கிருத்துவ நீதிபதிகள் ஹிந்து குடும்ப சட்ட கேஸ்களை விசாரிக்கலாமா? ஹிந்து மெஜாரிட்டி சுப்ரீம் கோர்ட் ஷா பானோ மாதிரி முஸ்லிம் சிவில் கேஸ்களை விசாரிக்கலாமா? ரஞ்சியில் கூட விளையாடாத ஹர்ஷா போக்ளே கிரிக்கெட் பற்றி எப்படி பேசலாம்? மு.மு. இஸ்மாயில் எப்படி கம்ப ராமாயணத்தில் திளைக்கலாம்? இலங்கைக்கு டூர் கூட போகாத நான் எப்படி பிரபாகரனை பற்றி எழதலாம்? பெரியார் மிக சிறந்த தர்மகர்த்தாவாக விளங்கினார் என்பதை நினைவூட்டுகிறேன்.
இதில் பக்தர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் வேறு வேறு வித ஓட்டுரிமை வேறு! இந்த ஜனநாயக முறையை வைத்துதான் நந்தனார் உள்ளே வரக்கூடாது என்று முடிவெடுத்தார்களா? எந்த stakeholder-ஐ கேட்டு இன்றைய “விதிகள்” அமைக்கப்பட்டுள்ளன? அப்புறம் தமிழில்தான் அர்ச்சனை என்பதில்லை, தமிழிலும் விருப்பப்பட்டால் அர்ச்சனை என்பதுதான் கேட்கப்படுகிறது. ஆறுமுகசாமி தேவாரம் பாட உரிமை வேண்டும் என்று கேட்கிறார்; எல்லாரும் தேவாரம் மட்டுமே பாட வேண்டும் என்று கேட்கவில்லை. என்னை பொறுத்தவரையில் உருதுவில் கூட அர்ச்சனை நடத்தலாம். எல்லாம் வல்ல தில்லை நடராஜனுக்கு மொழி தேவை இல்லை, பக்தர்களுக்குத்தான் மொழி தேவை. துலுக்க நாச்சியாரின் அன்பை பெருமாள் நிராகரித்துவிடவில்லையே?
பெரியார் போராடினார் என்பது வாஸ்தவம்தான். ராஜாஜி சட்டம் இயற்றினார் என்பதும் உண்மைதான். ஆனால் இன்னும் கண்டதேவி, கிண்டதேவி மாதிரி நிறைய நடக்கின்றன. இந்த stakeholders-ஐ கேட்டு எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
அதே நேரத்தில் வேலூரில் ஒரு தங்கக் கோவில் கட்டி இருப்பதாக கேள்விப்பட்டேன். அது ஒரு private enterprise போல தெரிகிறது. அது உண்மையிலேயே private enterprise ஆக இருந்தால், அந்த கோவிலுக்கு அரசு எந்த சலுகையும் காட்டாத பட்சத்தில், அங்கே போய் இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்யக் கூடாது என்று யாரும் தலையிட முடியாது. இந்த சலுகை என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம். கோவிலால் வேலூர் மாநகராட்சிக்கு நல்ல வருமானம் வருகிறது, அதனால் சலுகை தருவோம் என்று மாநகராட்சியோ, தமிழக அரசோ முன் வரலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஒரு லாபம் தரும், வரிப்பணம் தரும் தொழிலுக்கு சலுகை காட்டுவது போலத்தான் இதுவும். ஆனால் அது strictly business ஆக இருக்க வேண்டும்; மதச்சார்பு எங்கே ஆரம்பிக்கிறது, தொழில் எங்கே முடிகிறது என்று திட்டவட்டமாக வரையறுப்பது கொஞ்சம் கஷ்டம்.
நான் சொன்ன அத்தனையும் சர்ச்களுக்கும் மசூதிகளுக்கும் குருத்வாராக்களுக்கும் பொருந்தும். வேளாங்கண்ணி கோவில், சாந்தோம் சர்ச், டெல்லி ஜும்மா மசூதி, அமிர்தசரஸ் தங்கக் கோவில் எல்லாம் பொதுச்சொத்துதான். அரசு பிற மதங்களை கண்டு பம்முகிறது என்பதால் அரசுக்கு உரிமை இல்லை என்பதில்லை.
உரிமை மட்டுமில்லை, கடமையும் இருக்கிறது. கும்பகோணம் குளம் மகாமகத்துக்கு மகாமகமாவது அரசு செலவில் சுத்தம் செய்யப்பட வேண்டும். வந்து போகும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். பஸ் வசதி, குடிக்க தண்ணீர், ஓரளவாவது சுத்தமான கோவில் மற்றும் கோவிலை சுற்றிய இடங்கள், பாதுகாப்பு முதலிய அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். இதை அரசாங்கம் மறந்துவிடுவதுதான் பெரிய சோகம்.
பின் குறிப்பு: வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளும், சமீபத்தில் வந்த தசாவதாரம் படமும் ஒரு சோழ அரசன் கோவிந்தராஜ பெருமாள் சிலையை தூக்கி கடலில் எறிந்ததாக சொல்கின்றன. அதுவும் அரசு தலையீடுதான் என்பதை தீட்சிதர்கள் மறந்துவிடக் கூடாது.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய பக்கங்கள்:
இந்த கட்டுரையின் இரண்டாம் பகுதி
சுப்ரமணிய சாமியுடன் சிதம்பரம் கோவில் பற்றி விவாதம்
37.523851
-122.047324
ஜூலை 22, 2009
Posted by RV under
Blogging [2] Comments
இது வரை பக்ஸ், சேதுராமன், நான் எல்லாரும் சேர்ந்து இரண்டு தளங்களிலும் சேர்த்து நிறைய பதிவுகள் எழுதிவிட்டோம். ஒரு நாற்பது ஐம்பது பேர் ரெகுலராக படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உங்கள் எல்லாருக்கும் நன்றி!
பதிவுகளை எப்படி ஆர்கனைஸ் செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. புதிதாக இங்கே வரும் ஒருவர் எப்படி என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வார்? அட ரெகுலராக படிப்பவராக இருந்தாலும் கூட கஷ்டம்தானே? பக்கங்களாக பிரித்து பார்த்தேன், ஆனால் இப்போது இருக்கும் நிலையில் அதுவும் மிகவும் cluttered ஆக இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை.
உங்களுக்கு ஏதாவது தோன்றினால் சொல்லுங்களேன்! பதிவர்கள் எப்படி இந்த பிரச்சினையை சமாளிக்கிறீர்கள்?
ஜூலை 21, 2009
இந்த தளத்துக்கு விஜயராகவன் பரிச்சயமானவர். பல சிந்தனையை தூண்டும் மறுமொழிகளை எழுதி இருக்கிறார்.
அவர் எழுதிய ஒரு பதிவுக்கான சுட்டியை அவர் ஒரு மறுமொழியில் கொடுத்திருந்தார். இந்த பதிவில் ஆரியர்கள், வேதங்கள் பற்றி பல தகவல்கள் இருக்கின்றன. மறுமொழியை தேடுவது கஷ்டம், அதனால் அந்த சுட்டியை இந்த பதிவில் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்!
ஜூலை 20, 2009
சேதுராமனின் guest post இது. கோத்ரம், அபிவாதயே, சூத்ரம் இவைகளை பற்றி இன்னும் சில விவரங்களை தந்திருக்கிறார்.
ஸூத்ரங்கள், ஒவ்வொருவரும் வாழ்வில் அனுஷ்டிக்க வேண்டிய தர்ம ஸம்ஸ்காரங்களைத்தான் குறிப்பிடுகின்றன. ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா எழுதியுள்ள “சதாசரம்” என்ற புத்தகத்திலிருந்து சில குறிப்புகள்.
அபிவாதயே, பார்கவ, ஸ்யாவன, ஆப்நவாந, ஔர்வ, ஜாமதக்ன்ய, பஞ்சார்ஷேய, ப்ரவரான்வித (ஸ்ரீ வத்ஸ கோத்ர:) ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜுஸ்சாகாத்யாயீ, ஸோமதேவ சர்மா நாமாஹம் அஸ்மிபோ: என்பது போல, அவரவர் ப்ரவரம், கோத்ரம், ஸூத்ரம், வேதம், சர்மா நாம – இவைகளைக் கூற வேண்டும். ப்ரவரான் விதஹ என்று கூறாமல், ப்ரவரான் வித என்று கூற வேண்டும்.
நமது கோத்ர ரிஷியினிடமிருந்து உண்டான, ப்ரபலமான, யோக்யதையுள்ள ரிஷிகளே, ப்ரவர ரிஷிகள் எனப்படுகிறார்கள். சில கோத்ரத்தில் 7 ப்ரவர ரிஷிகள், சிலதில் 5, சிலதில் 3, சிலதில் 1 – இருக்கலாம். ஆதலால் ஸப்தார்ஷேய, பஞ்சார்ஷேய, த்ரயார்ஷேய, ஏகார்ஷேய எனக் கூறுகிறோம். ‘அபிவாதயே’ எனில் இவைகளைச் சொல்லி நான் யாரெனத் தெரிவிக்கிறேன் என்று பொருள்.
ஆதியில் 9 ரிஷிகளிடமிருந்தே கோத்ரங்கள் உண்டாயின. அவை பின்னர் நூற்றுக்கணக்காக வளர்ந்தன. நாம் எந்த ரிஷியின் பரம்பரையிலிருந்து நேராக உண்டானோமோ, அவர்களையே கோத்ர ரிஷி என்கிறோம். சமானமான கோத்ரம் உள்ளவர் சகோதரர். சமமான ப்ரவரமுள்ளவர் சப்ரவர். சகோதரர்களையும், சமான ப்ரவர்களையும் மணந்து கொள்ளக் கூடாது.
முதலில் ப்ரவரம், பிறகு கோத்ரம், பிறகு ஸூத்ரம் என்பதைக் கூறுகிறோம். அதன் பிறகு நமது வேதம் எது என்றும், பிறகு சர்மா என்னவென்றும், அதன் பின் நாமா என்ன என்றும் கூறுகிறோம். அதன்பின் அஸ்மிபோ என்கிறோம். ‘அஸ்மி’ என்றால் (மேலே சொன்னவைகளுடன் கூடியவனாக) இருக்கிறேன் என்று பொருள். “போ” எனில் பெரியோர்களை மரியாதையாக அழைப்பதாம்.
ஆஸ்வலாயநம், கௌஷீதகம், போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம், ஸத்யாஷாடம், வைகாநஸம், காத்யாயனம், த்ராக்யாயனம், ஜைமினீயம் என ஸூத்ரங்கள் பல உள்ளன. அந்தந்த ரிஷிகள் ‘கர்ப்பாதானம்’ முதல் என்ன என்ன ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும் என விதித்திருக்கிறார்கள். மங்களமானவற்றை பூர்வப்ரயோகம் என்றும், மரண விஷயமானதை அபரம் என்றும் கூறுவர்.
ரிக்வேதத்திற்கு ஆஸ்வலாயனம், கிருஷ்ண யஜுர் வேதத்திற்கு போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம், ஸத்யாஷாடம், வைகானஸம் என்ற ஸூத்ரங்கள் ப்ரசித்தமானவை. சுக்ல யஜுர்வேதத்திற்கு காத்யாயனம், ஸாம வேதத்திற்கு த்ராஹ்யாயனம் என்ற ஸூத்ரங்களாம்.
ஒரு வேதத்திற்குப் பல ரிஷிகள் ஸூத்ரம் இயற்றினாலும், நமது பெரியோர் கைக்கொண்ட ஸூத்ரத்தையே நாம் கொள்ள வேண்டும். சிகை, புண்ட்ரம், ஸூத்ரம், ஆசாரம் இவைகளை நம் பெரியோர்கள் ஆசரித்தபடி நாம் செய்ய வேண்டும். நம் ஸூத்ரம் செய்து வைப்பவர் கிடைக்கவில்லையென்று அன்னிய ஸூத்ரத்தால் செய்வது தகாது.
என்ன சம்ஸ்காரம், சூத்ரம் என்றால் என்ன என்று இன்னும் தெளிவாக புரியவில்லை. ஆபஸ்தம்ப சூத்ரத்துக்கும் ஆஸ்வலாயன சூத்ரத்துக்கும் என்ன வித்தியாசம்?
தொடர்புடைய பதிவுகள்
அபிவாதயே – பிராமணர்களின் சுய அறிமுகம்
அதர்வ வேதம் பற்றி சில கேள்விகள்
அதர்வ வேதம் பற்றி மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சுவாமிகள்
விஸ்வாமித்ர கோத்ரம்
ஜூலை 19, 2009
டோண்டு ராகவன் எழுதிய இந்த போஸ்டை படித்தபோது நெவில் ஷூட் எழுதிய Trustee from the Toolroom புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தோன்றியது. என் அதிர்ஷ்டம், லோகல் நூலகத்தில் கிடைத்தது.
கதையை எல்லாம் டோண்டு எழுதி இருக்கிறார். அதனால் அதையே மீண்டும் நானும் எழுத வேண்டிய வேலை மிச்சம்.
சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் நாயகனின் திறமை அவருக்கு உலகெங்கும் பல நண்பர்களை ஏற்படுத்தி கொடுத்தது நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் அவருக்கு எல்லாம் க்ளிக் ஆவது கொஞ்சம் தமிழ் படம் பார்ப்பது போல இருக்கிறது.
படிக்கலாம். A feel good book.
தொடர்புடைய பதிவுகள்
டோண்டுவின் பதிவு
விக்கிபீடியாவில் நெவில் ஷூட்
விக்கிபீடியாவில் Trustee from the Toolroom
ஜூலை 19, 2009
ஜீவியின் எழுத்தாளர் அறிமுகங்களை பற்றி எழுதி இருந்தேன். அவர் இந்த முறை கரிச்சான் குஞ்சு பற்றி எழுதி இருக்கிறார். படித்து பாருங்கள்.
பாலகுமாரன் எழுதிய இரும்பு குதிரைகள் புத்தகத்தில் அவரை சித்தரித்திருக்கிறார் என்று கேள்வி. (மன்னார்குடி ஸ்கூல் வாத்தியார், ரிடையர் ஆன பிறகு லாரி கணக்கு எழுத சென்னைக்கு தன் மகளுடன் வருவார்)
நான் பசித்த மானுடம் புத்தகம் படித்ததில்லை. கரிச்சான் குஞ்சுவின் தெளிவு என்ற ஒரு சிறுகதை தொகுப்பு படித்திருக்கிறேன், அது என்னை அவ்வளவு impress செய்யவில்லை. ஜெயமோகன் பசித்த மானுடத்தை தனது இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ். ராமகிருஷ்ணனும் இதை தன் நூறு சிறந்த நாவல் லிஸ்டில் சேர்க்கிறார்.
தொடர்புடைய பதிவுகள்
கரிச்சான் குஞ்சு பற்றி ஜீவி
ஜீவியின் எழுத்தாளர் அறிமுகங்கள்
ஜெயமோகனின் தமிழ் நாவல் லிஸ்ட்
எஸ். ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த தமிழ் நாவல் லிஸ்ட்
கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானிடம்” பற்றி வெங்கட் சாமிநாதன்
கரிச்சான் குஞ்சுவை வெங்கட் சாமிநாதன் நினைவு கூர்கிறார்
கரிச்சான் குஞ்சுவைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
கரிச்சான் குஞ்சுவைப் பற்றி ஆர்.பி. ராஜநாயஹம்
37.523851
-122.047324
ஜூலை 18, 2009
ஓராண்டு நிறைவு பெற்ற வினவு தளத்துக்கு வாழ்த்துகள்.
வினவு தளம் ம.க.இ.க. சார்புடையது. ம.க.இ.க.வினர் தீவிர கம்யூனிஸ்டுகள். அதுவும் ஸ்டாலினை தெய்வமாகவே கொண்டாடுபவர்கள். அவர்களுடைய பல கருத்துகள் எனக்கு ஏற்புடையவை இல்லை. அவர்கள் தளத்தின் மீது எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் தமிழ் பதிவர் உலகத்தில் வினவின் பதிவுகள் முக்கியமானவை என்றும் நினைக்கிறேன். சரியோ தவறோ, சமூகத்தை, அரசியலை, மதத்தை, நாடுகளை விமர்சித்து, விளக்கி, ஏறக்குறைய தினமும் ஒரு பதிவு வெளி வருகிறது. அது பல சமயம் விவாதங்களை தூண்டுகிறது. இது பாராட்ட வேண்டிய விஷயம்.
ம.க.இ.க.வினர்+வினவு தளம் பதிவு எழுதுவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. தீட்சிதர்கள் மேல் கேஸ் போட்டு, தமிழில் பாடும் உரிமையை பெற்று தந்திருக்கிறார்கள். சிதம்பரம் கோவில் நம் அனைவருக்கும் சொந்தமானது, தீட்சிதர்களுக்கு மட்டும் இல்லை என்பது என் உறுதியான கருத்து. அங்கே தமிழில் பாடக் கூடாது என்று சொல்வது பெரிய அநியாயம். அதை நிறுத்தியதால் எனக்கு அவர்கள் மீது மரியாதை இருக்கிறது.
வினவு குழுவினரின் பெரிய குறை அவர்கள் எடுக்கும் இரட்டை நிலைதான். அவர்களுக்கு ஸ்டாலின் ஒரு holy cow. அதனால் ஸ்டாலின் ஆட்சி பொற்காலம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள். ஸ்டாலின் ஆட்சியில் கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று தயங்காமல் சொல்வார்கள். கம்யூனிச ஆட்சி மக்கள் விருப்பத்துக்கேற்ப நடக்கிறது என்று சொல்வார்கள், ஆனால் கம்யூனிச ஆட்சியை சான்ஸ் கிடைத்தவுடன் ரஷியர்களும் லாட்வியர்களும் எஸ்தோனியர்களும் உக்ரேனியர்களும் கிழக்கு ஜெர்மானியர்களும் நிராகரித்துவிட்டார்களே, பிறகு எப்படி கம்யூனிசம் மக்கள் விருப்பத்துக்கேற்ப நடந்தது என்று சொல்கிறீர்கள் கேட்டால், அந்த தோல்வியை புரிந்து கொள்ள நிபுணத்துவம் வேண்டும், கம்யூனிஸ்டுகளால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய தோல்வி அது என்று வாதிடுவார்கள். இந்த கம்யூனிசத்துக்கும், எல்லாம் பிரம்மம், அதை யாரும் புரிந்து கொள்ள முடியாது என்று பேசும் வேதாந்தத்துக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. சுப்ரமணிய சாமிக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை, ஆனால் அவர் மேல் முட்டை வீசுவது எங்கள் கருத்து சுதந்திரம், அதை யாரும் தடுக்கவோ, கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது என்று வாதிடுவார்கள். பார்ப்பன ஜாதியில் பிறந்த அயோக்கியர்களை விமர்சிக்கும்போது காட்டமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள், மற்ற ஜாதி மதத்தில் பிறந்திருந்தால் அவர் ஜாதி மதத்தை குறிப்பிட மாட்டார்கள் (உதாரணம் ஜேப்பியார்), இல்லை அடக்கி வாசிப்பார்கள்.
ஆனால் குறைகள் இல்லாத மனிதர் யார்? சும்மா பதிவு எழுதும் என்னை விட களத்தில் இறங்கி வேலை செய்பவர்கள் உயர்ந்தவர்களே! இன்று இருக்கும் குறைகளையும் களைந்து, ஒரு consistent value system-த்தை அடிப்படையாக கொண்டு, மேலும் வளர வாழ்த்துகள்!
ஜூலை 17, 2009
Posted by RV under
Drama | குறிச்சொற்கள்:
Annadurai,
Arthur miller,
Ayyo amma ammamma,
Bertolt brecht,
Cho ramaswami,
Crazy mohan,
Crazy thieves in palavakkam,
Doctor narendranin vinodha vazhakku,
Dowry kalyanam,
Evam indrajit,
George bernard shaw,
Ghasiram kotwal,
Girish karnad,
Gnani,
Hayavadhana,
Ibsen,
Indira partthasarathi,
Jayanthan,
Kaatthadi ramamoorthi,
Kalkattu,
Kalki,
Mahabharathatthil mangattha,
Marina,
Mohammad bin thuglaq,
Mohan agashe,
Mowli,
Na. mutthusami,
Nagamandala,
Nana phadnavis,
Nandan kathai,
Narkalikkarar,
Oonjal,
Oor vambu,
Oriravu,
Panapuratthu veeran,
Pattina pravesam,
Ramanujar,
S.v. sekar,
Saathiram sonnathillai,
Sarala,
Shantatha! court chalu ahe!,
Sujatha,
Tale danda,
Tenant commandments,
Tennessee williams,
Thamizhil sothanai natakangal,
Thanik kuditthanam,
The good woman of sezuan,
Thuglaq,
Unmaiye un vilai enna,
Ve. saminatha sarma,
Velaikkari,
Yarukkum vetkamillai,
YGP |
[2] Comments
-
-
காஷிராம் கொத்வால்
-
-
விஜய் டெண்டுல்கர்
நான் பார்த்த நாடகம் எல்லாம் சென்னை சபா சர்க்யூட்டில் பார்த்தவைதான். ஒய்.ஜி.பி., சோ, மௌலி, கிரேசி மோகன், எஸ்.வி. சேகர், காத்தாடி ராமமூர்த்தி நாடகங்களை பார்த்திருக்கிறேன். கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம், டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ், மகாபாரதத்தில் மங்காத்தா, டௌரி கல்யாணம், பட்டின பிரவேசம், அப்புறம் காத்தாடி ஊட்டிக்கு போகும் ஒரு நாடகம், ஐயோ அம்மா அம்மம்மா இவைதான் நான் இந்த சர்க்யூட்டில் பார்த்த நாடகங்களின் உச்சம்.
எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும் ஒரே ஜெனரேஷனுக்கே நாடகம் என்றால் என்ன என்பதை மறக்கடித்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்சனையும் ஷாவையும், ப்ரெக்டையும், ஆர்தர் மில்லரையும், டென்னசீ வில்லியம்சையும் படிக்க ஆரம்பித்ததும்தான் நாடகம் என்றால் என்ன என்று ஓரளவாவது எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அப்போது தமிழில் சோவின் நாடகங்களை படித்தேன். ஆனால் நாடகம் என்பது படித்து புரிந்து கொள்ள வேண்டியது இல்லை, பார்க்க வேண்டியது. அப்புறம் நாவலுக்கும் நாடகத்துக்கும் என்ன வித்தியாசம்?
நாடக உத்திகள் எனக்கு புரிய ரொம்ப நாளானது. உதாரணமாக ப்ரெக்டின் The good woman of Sezuan படித்தபோதுதான் எனக்கு முகமூடிகளை ஒரு நாடகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று புரிந்தது. கிரேக்க நாடகங்களை படித்தபோது என்னடா போரடிக்கிறார்கள் என்று தோன்றியது. அதில் வரும் கோரஸ் மகா முட்டாள்தனமாக தெரிந்தது.
அப்போதுதான் ஹைதராபாதில் காஷிராம் கொத்வால் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகம் என்றால் அதுதான் நாடகம். எனக்கு இந்த நாடகம் பற்றி முன்பின் தெரியாது. ஏதோ நண்பன் கூப்பிட்டான் என்று கூடப் போனேன். முதல் காட்சியில் கோரஸ் வந்த அடுத்த நிமிஷம் எனக்கு கோரஸ் பற்றி ஞானோதயம் ஏற்பட்டது. Extremely powerful drama. விஜய் டெண்டுல்கர் ஒரு ஜீனியஸ். நானா ஃபட்னவிஸாக நடித்த மோகன் அகாஷே இன்னொரு ஜீனியஸ். நாடகம் என்றால் என்ன என்பது இதை பார்த்த பிறகுதான் எனக்கு புரிந்தது. நான் இன்னொரு நாடகத்தை இன்னும் பார்க்கவில்லை.
கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நானா ஃபட்னவிஸ் மராத்திய பேஷ்வா. புனேயில் அதிகாரம் செலுத்தியவர். பெண் பித்தர். அங்கே ஏழை காஷிராம் பிராமணர்களால் அவமானப்படுத்தப்படுகிறான். அவன் தன் பெண்ணை நானாவுக்கு கூட்டிக் கொடுத்து அதிகாரம் உள்ள கொத்வால் பதவியை பெறுகிறான். எல்லா பிராமணர்களுக்கும் டார்ச்சர் கொடுக்கிறான். அவன் பெண் பிரசவத்தில் இறந்துவிட, அவன் அதிகாரம் பறிக்கப்படுகிறது. அவன் அழிகிறான்.
பெங்களூரில் தலே தண்டா என்ற சுமாரான கிரிஷ் கார்னாட் நாடகம் பார்த்திருக்கிறேன். கல்கத்தாவிலும், பம்பாயிலும், பெங்களூரிலும் நாடகம் ஓரளவு நடப்பதாக அப்போதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் டெண்டுல்கர், ஏவம் இந்த்ரஜித் எழுதியவர், கிரிஷ் கார்னாட் மாதிரி தமிழில் யாருமே எழுதுவதில்லையா?
ஏவம் இந்த்ரஜித், சாந்ததா! கோர்ட் சாலு ஆஹே!, துக்ளக், ஹயவதனா, நாகமண்டலா போன்ற நாடகங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இவை அனைத்தும் நல்ல நாடகங்களாக அமையும் என்று தோன்றுகிறது. இது போன்ற நிஜமான நாடகங்கள் தமிழில் வருவதில்லையா? இல்லை வெளியில் தெரிவதில்லையா? இன்று நான் எங்கேயோ வாழ்கிறேன் என்பது உண்மைதான், ஆனால் நாடகம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் நான் வளர்ந்த சூழ்நிலைதான் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
கூத்துப் பட்டறை, ஞானி, நா. முத்துசாமி என்றெல்லாம் இருபது வருஷங்களுக்கு முன் நான் கேள்விப்பட்டது கூட இல்லை. அது சரி, கணையாழி பற்றி கூட தெரியாதுதான்.
இப்போது வளர்பவர்களாவது பார்த்தால் சரிதான். ஆனால் இந்த ஜெனரேஷனுக்கும் எஸ்.வி. சேகர்தான் தெரியும் போலிருக்கிறது.
எனக்கு தெரிந்து சோதான் தமிழில் ஓரளவாவது உருப்படியாக நாடகம் எழுதி இருக்கிறார். அவை எல்லாமே வசனங்களை வைத்து மட்டும் எழுதப்பட்டவைதான். ஆனால் உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சாத்திரம் சொன்னதில்லை, முகமது பின் துக்ளக் ஆகியவை நல்ல முயற்சிகள்.
திராவிட பாரம்பரியத்தில் அண்ணாவின் வேலைக்காரி, ஓரிரவு பெரிதாக பேசப்படுகின்றன. கல்கி ஓரிரவை பார்த்துவிட்டு இதோ ஒரு பெர்னார்ட் ஷா என்றெல்லாம் அண்ணாவை புகழ்ந்திருக்கிறார். கனல் பறக்கும் வசனம் இருந்தால் போதும், கதை முக்கியமில்லை என்று நினைத்த காலம் போல. அப்படி என்றால் வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரனை கூட நல்ல நாடகம் என்று சொல்லலாம்.
இந்திரா பார்த்தசாரதி பற்றி சொல்கிறார்கள். நந்தன் கதை நாடகம் conspiracy theory கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கிறது. (இதன் வீடியோவை ஒரு முறை பார்த்திருக்கிறேன், நல்ல நடிப்பு, ஆனால் கதை சரியில்லை!) ராமானுஜர் நாடகம் வைஷ்ணவ குரு பரம்பரை கதையை அப்படியே போட்டுவிட்டார். இவை எல்லாம் நல்ல நாடகமாக எனக்கு படவில்லை.
மெரினாவின் நாடகங்கள் ஒரு காலத்தில் மிகவும் பாப்புலர். ஊர் வம்பு, கால்கட்டு ஆகியவற்றை விகடனில் படித்திருக்கிறேன். தனிக் குடித்தனம் புகழ் பெற்ற நாடகம். ஆனால் இவை எதுவும் உலகத் தரம் வாய்ந்த நாடகம் என்று எனக்கு தோன்றவில்லை.
சுஜாதா சில முயற்சிகள் செய்திருக்கிறார். சரியாக வரவில்லை. நான் பார்த்த ஊஞ்சல் நாடகத்தின் வீடியோ was quite bad. டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு சிறு வயதில் படித்திருக்கிறேன், அப்போது பிடித்திருந்தது, இப்போது என்ன நினைப்பேனோ தெரியாது. அவர் எழுதிய சரளா என்ற நாடகம் அந்த காலத்தில் எனக்கு டென்னசீ வில்லியம்சை நினைவுபடுத்தியது. மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.
அதே போல் ஜெயந்தன் எழுதிய ஏதோ ஒரு நாடகம் எனக்கு அந்த காலத்தில் பிடித்திருந்தது. கணக்கனோ என்னவோ பேர். மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.
தமிழில் சோதனை நாடகங்கள் என்று என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் நாற்காலிக்காரர் கதை நாடகமாக பார்த்தால் நன்றாக இருக்கலாம்.
நீங்கள் நாடகம் பார்த்த அனுபவங்களை எழுதுங்களேன்! அது எஸ்.வி. சேகரின் ஜோக் தோரணமாக இருந்தாலும் சரி.
தொடர்புடைய பதிவுகள்
சோ – ஒரு மதிப்பீடு
முகமது பின் துக்ளக் விமர்சனம்
அடுத்த பக்கம் »