சமீபத்திய விகடனில் வந்த கட்டுரை. விகடனுக்கு நன்றி! இந்த கட்டுரை முக்கியமானது என்று நினைப்பதால் இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். எழுதியவர் பேர் ப. திருமாவேலன். அவருக்கும் நன்றி! ஓவர் டு விகடன்!
கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.
‘30 ஆண்டு காலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்து விட்டோம்’ என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. ‘சர்வ தேசியத் தமிழீழ அரசாங்கம்’ என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். ‘ஐந்தாம் யுத்தம்’ கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று ‘தமிழீழத்தில்’ தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை.
அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்….
1. ‘கூடாரங்களைப் பிரியுங்கள்!’
ஈழத் தமிழரின் இன்றைய பெயர், ‘கூடார மக்கள்’. ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண்டோவின் கணக்கின்படி, 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சும்மா ரோட்டில் கிடத்தாமல் கூடாரங்களில் இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! வாஷிங்டன் மனித உரிமைக் காப்பகம், ‘இவை தற்காலிகக் குடியிருப்புகள் அல்ல; சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்’ என்கிறது. தினமும் இங்கு மக்கள் செத்து விழுகிறார்கள். கழிவறை வசதியைக்கூடச் செய்து தர மறுத்துவிட்டது சிங்கள அரசு. ‘கக்கூஸ்கள் அமைக்கப்படாததை மக்கள் ஐ.நா. சபையிடம்தான் கேட்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார், மீள் குடியேற்றத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன். ‘பசியில் இறந்தாலும் ஐ.நா-வே பொறுப்பு’ என்று சொல்லிவிட்டார்கள். ‘இந்த இடத்தில் இருந்து எங்களை விட்டால் போதும். எங்களது வீடுகளுக்குப் போக அனுமதித்தால் போதும்’ என்று கெஞ்சுகிறார்கள் மக்கள்!2. காணவில்லை… காணவில்லை!
ஒரு குழந்தை காணாமல் போனால் இங்கு விளம்பரங்கள், போலீஸ் விசாரிப்புகள், தனிப் படைகள் என எத்தனையோ முஸ்தீபுகள். ஆனால், அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன கடத்தல்கள். குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதால்தான் கடத்தல்கள் எளிதாக நடக்கின்றன. இதில் பெண்களும் சிறுவர்களும்தான் அதிகம் காணாமல் போகிறார்கள். ஒரு முகாமில் 870 சிறுவர்கள் அநாதைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கென யாருமே இல்லை. மருத்துவமனைக்கோ, பக்கத்து முகாமுக்கோ சம்பந்தப்பட்டவர்களை அனுப்பிப் பார்க்க அனுமதித்தால், உறவினர் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவாவது முடியும். அதற்கும் அனுமதி இல்லை. இப்படிக் காணாமல் போன சுமார் 20 ஆயிரம் மக்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்!3. வெள்ளை அறிக்கை
நீண்ட கால மரணங்களும் இழப்புகளும் கொண்டது ஈழத்துப் போராட்டம். 1983 முதல் 2001 வரை இறந்தவர்கள் ஒரு லட்சம் பேர். யாழ்ப்பாணம் தொடங்கி முல்லைத் தீவு வரை மொத்தமாக நாசமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துச் சொல்லியிருக்கிறது. வட கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 34 ஆயிரம் வீடுகள் சேதமானதாகவும் சொல்கிறது அடுத்த புள்ளிவிவரம். இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அழிவுகள்தான் உச்சபட்சம். தமிழர் வாழும் கிராமங்கள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்ட நிலை. இப்படி தமிழர் பகுதிகள் அத்தனையும் கணக்கிட்டால் பாழடைந்த வீடுகள் எத்தனையோ?
முதல்கட்டமாக… பாதிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலங்கள் குறித்த தகவல்களுடன் இறந்தவர், இருப்பவர், இதில் உடல் ஊனமானவர் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளிவந்தாக வேண்டும்!4. பொதுமன்னிப்பு
“படுகொலைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்ற போராளிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் மன்னிக்க வேண்டும்!” – இப்படிச் சொல்லி இருப்பவர் புலிகளின் பரம்பரை எதிரியான டக்ளஸ் தேவானந்தா. இன்று அமைச்சராக இருப்பவர். இப்படி சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. “வவுனியா, முல்லைத் தீவுப் பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். அவர்களை விசாரணை செய்வோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்தார். இதன்படி 3,000 பெண்கள் உட்படப் பலரிடமும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை வேறு வேலைகள் பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்; சித்ரவதைகள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்கின்றன மனித உரிமை அமைப்புகள்!5. ஏதாவது ஒரு நிவாரணம்
போர், மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல; அவர்களது அன்றாட வாழ்க்கை, இதுவரை சேர்த்துவைத்த சொத்துகள், பணம் அத்தனையையும் கொள்ளை கொண்டுவிட்டது. விவசாயம் பார்த்தவர்களுக்கு நிலம் இல்லை. மீன்பிடித் தொழில் செய்து பிழைத்தவருக்குப் படகும் வலையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 560 மீன்பிடிக் கிராமங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, 2.70 லட்சம் மீனவர்கள் இருந்தார்கள். ஆனால், அது படிப்படியாகக் குறைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் ஆனார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களது மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குத் கீழே தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன தென்னை, பனை மரங்கள் மொத்தமாகக் கொளுத்தப்பட்டன. தாங்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடாகவோ, அல்லது தங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளுக்கான கருணைத் தொகையாகவோஅந்தப் பணம் அமைய வேண்டும்!6. பயமற்ற சூழ்நிலை
‘இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை’, ‘பயங்கரவாதிகள் வேறு பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள்’ என்று சொல்லி மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணுவத்தின் முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பள்ளிக்கூடங்கள், கோயில்கள், முக்கியத் தெருக்களில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். முன்பு மக்கள் இருந்த பெரிய வீடுகளில் இன்று ராணுவத்தினர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளில் ராணு வத்தினர் தங்கியுள்ளனர். வட கிழக்கில் 156 பள்ளிக்கூடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். முக்கிய மான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட்டம் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. செக் போஸ்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, மக்களுக்குப் பயமற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு முன் வர வேண்டும்!7. யாழ்ப்பாணம்
ராணுவத்திடம் சுமார் 15 ஆண்டுகளாக இருக்கும் யாழ்ப்பாணம், ‘எமர்ஜென்ஸி’ பகுதியாகவே இன்னமும் உள்ளது. மாலை 6 முதல் காலை 6 வரை யாரும் ரோட்டில் நடமாட முடியாது. எங்காவது வேலைக்குப் போகும் ஆட்களும் 6 மணிக்குள்ளாக வீட் டுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை ஆண்டு அடக்குமுறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. மேலும், அங்கு பொருளாதாரத் தடைகளும் விலக்கப்படவில்லை. பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் யாழ்ப்பாணத்தை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்!8. கொழும்பு
எப்போதும் கொந்தளிப்பில் இருப்பவர்கள் கொழும்புத் தமிழர்கள். இங்கு தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் இல்லை. பதிலாக, சிங்களத் தீவிரவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உறுமய, ஜாதிகல உறுமய போன்ற குழுக்கள் எதையாவது சொல்லி தமிழர் கடைகள், வீடுகள், தொழிற்சாலைகளை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கிக்கொள்கிறார்கள். பூட்டி இருக்கும் வீடுகள் அடித்துத் திறக்கப்பட்டு நொறுக்கப்படுகின்றன. உயிருக்கும் உடைமைக்கும் கொழும்பில் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியமானது!9. அச்சுறுத்தும் ஆயுதங்கள்
புலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆயுதம் தாங்கிய பல குழுவினர் இலங்கை முழுவதும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள். ஈ.என்.டி.எல்.எஃப்., டக்ளஸின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தன் தலைமையிலான பிளாட், கருணா குரூப் எனப் பலரும் ஆயுதம் தாங்கி அலைகி றார்கள். மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடுகள் நடப்பதும், திடீர்க் கொலைகள் நடப்பதற்கும் பின்னணியாக இவர்கள் இருப்பதாகவும் ஆட்கடத்தல், கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!10.உண்மையை உணர்ந்த மனிதர்கள்
இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது இலங்கை. என்ன நடந்தது, எத்தனை பேர் செத்தார்கள், இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன தேவை என எதையும் நேரடியாகப் பார்க்க யாரையும் அனுமதிக்காத நிலையைத் தளர்த்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் என அங்கீகரிக்கப்பட்ட ஆர்வலர்களை உள்ளே அனுப்பி, மக்களைச் சந்திக்க வைத்தால் மட்டுமே அங்கு உள்ளவர்களுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கும்.“20 நாடுகளின் உதவியுடன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றோம்” என்று வெளி விவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சொல்லி இருக்கிறார். அப்படியானால், போருக்குப் பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் இந்த 20 நாடுகளுக்கும் உண்டுதானே! அதில் இந்தியாவும் ஒன்று!
இதை படிக்கும்போது மனம் மிக கனக்கிறது. மேலே எதுவும் எழுதப் பிடிக்கவில்லை.
தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு
ஜூன் 25, 2009 at 1:39 பிற்பகல்
மே 20 வாக்கிலேயே, இந்தியா அரசாங்கம் எல்லா தமிழ் அகதிகளும் 6 மாதத்திற்குள் , அவரவர் வழக்கமான வசிப்பிடத்துற்கு அனுப்பப் படுவர் என்று ஸ்ரீலங்கா அர்சுவிடம் ஒரு வாக்கு வாங்கியது. அத்ற்கு மேல் 5000 மிலீயன் ரூபாய் நிவரணம் ஒரு 3,00,000 தமிழ் அகதிகள் மேல் செலவிடப் போகிரதாம். அதற்கு முன்னாடியே இந்திய அரசாங்கம் 100 கோடி ரூபாய் , தமிழக அரசு 50 கோடி ரூபாய் நிவார்ணம் தருகிறேன் என சொல்லியுள்ளனர். இதையெல்லாம், உணர்சியிலும் , பொய்களிலும் மிதக்கும் தமிழ் ஊடகங்கள் படித்ததாகவே தெரியவில்லை.
தமிழ்நட்டு அரசியல்வாதிகள், கொஞ்சமாவது ஈழ தமிழர்கள் மீது அக்கறையிருந்தல், இந்திய அரசு, தன் திட்டம், வாக்குகள் படி நடக்கும், ஸ்ரீலங்க அரசு மேல் அழுத்தம் கொடுக்க முழுமூச்சாக செயல்படுவார்க்ள். தற்போது இலங்கை அரசின் மீது இந்திய அரசிற்கு தான் இன்ப்ளுவப்ஸ் உண்டு.
ஜூன் 25, 2009 at 2:30 பிற்பகல்
RV,
இதற்கே மனம் கனத்தால் எப்படி? இது வெறும் புள்ளிவிபரங்கள் மட்டுமே. ஒவ்வொரு ஈழத்தமிழனின் சொந்தக்கதை இதைவிட கொடுமையாக இருக்கும். இங்கே பலர், ஒரு கொடுமை நடக்கும் போது கண்டு கொள்ளமாட்டார்கள். பிறகு அது திரைப்படமாக (Powerful but usless media) எடுக்கப்படும் போது ஐயோ இப்படி எல்லாம் நடந்ததா என்று உச்சுக்கொட்டுவார்கள்.
நிற்க, தமிழக உறவுகளிடம் நாங்கள் வேண்டுவது இதுதான், வவுனியா வதைமுகாம்களில் தொடர்ந்தும் கொலை, கற்பழிப்பு, காணாமல் போதல் என்று இன்னும் நித்தம் நித்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களை அங்கிருந்து மீட்க, அவர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு மறுபடியும் எவ்வளவு விரைவில் அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவில் அனுப்புவதற்கு தயவு செய்து உங்களால் ஆனதை செய்யுங்கள். உங்கள் அரசுக்கு, அரசியல்வாதிகளுக்கு, ஐக்கியநாடுகள் சபைக்கு, மனிதஉரிமை அமைப்புகள் என்று எல்லா வழிகளிலும் அழுத்தங்களை கொடுங்கள். இந்த அழுத்தங்களின் விளைவு இவர்களை இலங்கை அரசுடன் வதைமுகாம்களில் உள்ள அப்பாவித்தமிழர்களின் புனர்வாழ்வு பற்றி கண்டிப்பாக பேச வைக்கும். இது செய்வதற்கு கடினமான காரியம் அல்ல.
ஒரு சினிமா ஈழத்தமிழனின் போரியல் வாழ்வை அதன் சீரழிவை சித்தரிக்கும் வரை காத்திருக்காதீர்கள். அது காலம் கடந்ததாகத்தான் இருக்கும். உங்களால் முடிந்ததை இன்றே கண்டிப்பாக செய்யுங்கள். நன்றி.
ஜூன் 29, 2009 at 11:29 பிற்பகல்
Rathi, You are a dirty facist. You don’t have right to speaak about Ealam Tamils.
Aadu nanakirathenru onaai alukirathu.
ஜூன் 25, 2009 at 6:03 பிற்பகல்
விகடனில் வெளிவந்த இந்தக்கட்டுரைக்கு ஹரிகரன் தமிழ்யூகே என்ற பெயர்களில் எழுதும் சில பதர்கள் ஈழத்தமிழர்களை கேவலப்படுத்தும் சில பின்னூட்டங்களை இட்டிருந்தார்கள் விகடன் மட்டுறுத்துனர்கள் அதனை அகற்றவேயில்லை விகடன் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுகிறது.
ஜூன் 25, 2009 at 6:09 பிற்பகல்
ரதி அக்கா ,அருட் தந்தை ஜெகத் கஸ்பெர் நக்கீரன் வார இதழ் மூலம், இதற்காக ஈழ தமிழர்களுக்காக போராடி வருகிறார்.வதைமுகாம்களில் உள்ள அப்பாவித்தமிழர்களின் புனர்வாழ்வு பற்றி கண்டிப்பாக,
என்னால் முடிந்த
மட்டும் தமிழர்களுக்கு பரப்பி கொண்டு இருக்கிறேன்.
இது பற்றி பேசினால் ஒரு மாதிரியாக பார்பவர்களும் உண்டு.
ஐயோ ,பொன்னியின் செல்வர்களே உன் இனம் அழிந்து கொண்டு இருக்கிறது .அவர்களுக்காக தயவு செய்து போராடுங்கள்.நம் இனம் இல்லையா.
தொண்டை வறண்டு போனாலும் கத்துவேன் .முள் படுக்கையில், என் இனம்.
விடமாட்டேன் ,
சரவணகுமார்.
ஜூன் 26, 2009 at 5:48 மு.பகல்
நெஞ்சை உருக்கும் செய்திதான்.
இவர்கள் அனைவரும் பரம ஏழைகள். கட்டத்க்துணியும் தின்னச் சோறும் அற்ற கடைநிலை மாந்தர்.
வசதி படைத்தவர்கள் எங்கே? புலம்பெயர்ந்தோர் என்ற பெயரில் ஒளிந்துகொண்டிருப்பவர்கள் அனைவரும் செல்வர்கள். பணக்காரர்கள்.
இந்த உண்மை ஏன் எழுதப்படுவதில்லை?
ஜூன் 26, 2009 at 11:47 மு.பகல்
ஆனந்த விகடன் ஈழத்தைப் பற்றியும், புலிகளைப்
பற்றியும், எழுதுவதை உண்மையென்று ஏற்றுக்
கொள்வது சரியாகாது. சமீப காலமாகத் தமிழ்
பத்திரிகைகள், முக்கியமாக விகடனும், குமுதமும்
அவற்றைச் சார்ந்த மற்ற இதழ்களும் புலிகளின்
பிரசார ஏடுகளாகவே இருந்து வந்தன.. இன்னமும்
அப்படியே தான் இருக்கின்றன.
ஈழத்தமிழ் மக்களுக்கு, பிரபாகரன் செய்த ஒரு
பெரிய நன்மை, எண்பதுகளில், அவர்கள் புலம்
பெயர உதவியததுதான். நேரடியாக இல்லை
யென்றாலும், இயக்கத்துக்கும், சிங்கள அரசுக்கும்
இடையான போரைக் காரணம் காட்டி, பலர்
ஐரோப்பா, இங்கிலாந்து, கானடா, ஆஸ்திரேலியா
நியுசிலாந்து நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதை வைத்தே அத்தமிழர்களிடமிருந்து புலிகளின்
இயக்கத்துக்குப் பணமும் மற்ற உதவிகளும்
தடையின்றிக் கிடைத்தன.
பெரும்பான்மையான தமிழர்கள், இந்தியா வந்து,
இங்கிருந்தே வெளி நாடுகளுக்குச் சென்றனர்.
இந்திய அரசு அவர்களுக்கு மறைமுகமாகவே
உதவியது — அதாவது, போலி பாஸ்போர்ட்,
அன்னிய நாணய உதவி நாடிய ஈழத்தமிழர்களைக்
கண்டு கொள்ளாமலேயே இருந்தது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு கட்டாயத்தின்
பேரிலேயே, புலிகளுக்கு ஆதரவளித்தனரே
தவிர புலிகளிடம் அவர்களுக்கு இருந்த
அன்பாலோ அல்லது அனுதாபத்தாலோ
அல்ல.
கடந்ததையே நினைத்துக் கொண்டிராமல்,
புலிகளை அறவே மறந்துவிட்டு, ஈழத்தில்
அல்லல் படும் தமிழர்களுக்கு ஆவன
செய்ய வேண்டுவதே எல்லோருடைய
குறிக்கோளாக இருக்கவேண்டும்.
ஜூன் 26, 2009 at 12:27 பிற்பகல்
சேதுராமன் சொல்லுவது சரி; புலிகள் அவர்கள் புலம்பெயர்தோர் மீது கட்டாய முறை இவற்றை பற்றி பேசி, இலங்கை தமிழர்களுக்கு உதவி தரப் போவதில்லை. ஆனால்,for the record , சில விஷயங்களை சொல்ல வேண்டும்
1.தமிழரக்ளை புலம் பெயர்சி செய்ய வைத்தது, அரசியல் ரீதியிலும், மற்ற நோக்கிலும் ஒரு விதத்திலும் நன்மை இல்லை. ஏனெனில், தரையில் இருப்பவரக்ளுக்கு தான் அரசியல், இன உரிமைகளை கோரும் உரிமை இருக்கு. அதனால் பிரபாகரன், போர் இவை தமிழர்களை புலம் பெயர் செய்தது, மரக் கிளையில் உட்கார்ந்து, அதையே வெட்டுவதாகும். சில கணக்குகல் படி, 15 வருடங்களில் இலங்கை மொத்தமாக தமிழர் மக்கள்தொகை 8% கீழே வந்து விடுமாம்; அதற்கப்புரம் எப்படி ஈழம், தமிழர் மாகாணம், அர்சியல் உரிமை இதையெல்லம் பேசுவது?
2. பிரபாகரனின் “நேரடியாக இல்லை
யென்றாலும்” என்கிறார். புலிகளின் மற்ற தமிழர் அமைப்பு மீது ஏற்பட்ட வேட்டைகளால், பல தமிழ்ர்கள், இளைஞர்கள், நாட்டை விட்டு ஓடினர்.
3. புலிகள் மிரட்டி பணம் திரட்டும் முறை நன்றாக தெரிந்தது.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4807846.stm
http://www.irpp.org/events/archive/20070921/becker.pdf
நான் இனிமேல் புலிகள் பற்றி அவ்வளவாக எழுதப்போவதில்லை. புலிகளின் மிச்சங்கள் பல நாடுகளின் அரசாங்கங்கள் பொறுப்பு
ஜூன் 29, 2009 at 11:25 பிற்பகல்
What about Eelam Tamils who are fed up with Ealamists? Only the Tamils living in India and Western countries want to have “Eelam”. You guys are living in a closed circle. When you will understand the reality? You don’t want to listen to the truth.
ஜூலை 1, 2009 at 12:54 மு.பகல்
விஜயராகவன், ரதி, ரகுநாத், சேதுராமன், வாசகன், பொல்லாதவன், கிருஷ்ணமூர்த்தி,
ஈழம் அவசியம் அவசரம் பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
விஜயராகவன், நம் அரசியல்வாதிகள் அளிக்கும் வாக்குறுதிகள் எல்லாம் தொடர்ந்து பிரஷர் இருந்துகொண்டே இருந்தாலொழிய நடப்பதில்லை. நாம் அனைவரும் செய்ய வேண்டியாய்து அதுதான் என்று எனக்கு தோன்றுகிறது. ஏதோ ஒரு கப்பல் கடலிலேயே இரண்டு மாதமாக இருக்கிறது என்று படித்தேன். ஆனால் கனிமொழிக்கு ஒரு ஃபோந் போட்டதும், ஜூவியில் கட்டுரை வருவதாக தெரிந்ததும், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்படுகிறதாம். ஃபோந் வராவிட்டால் கண்டுகொள்ள மாட்டார்கள்! நம்மால் அதை செய்ய முடியும் என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் கனிமொழிக்கு மட்டும் பிரஷர் இருந்தால் போதாது, ராகுல் காந்தி மீதும் பிரஷர் இருக்க வேண்டும்.
வாசகன், மாற்று கருத்துகள் எவ்வளவு disagreeable ஆக இருந்தாலும் அவற்றை வெளியிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் விகடன் செய்வது எனக்கு தவறாக தெரியவில்லை.
பொல்லாதவன், கூப்பாடு போடுவதை நிறுத்தாதீர்கள். தொடர்ந்து செய்யுங்கள். முடிந்தால் மாற்று கருத்துகளை கண்டு கோபம் அடைவதை விட்டுவிட்டு வாதிட முயற்சி செய்யுங்கள்.
கிருஷ்ணமூர்த்தி, புலம் பெயர்ந்தோர் பொதுவாக ஈழத்தில் காம்ப்களில் இருப்பவர்களை விட நல்ல நிலையில் இருக்கிறார்கள்தான். ஆனான் அவர்கள் எல்லாரும் பணக்காரர்கள் இல்லை. ஹோட்டலில் தட்டு கழுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்
ரகுநாத், மாற்று கருத்துகளை சொல்பவர்கள் ஃபாசிஸ்ட்கள் ஆகி விடுவார்களா? இல்லை ரேசிஸ்ட்கள் ஆகி விடுவார்களா? புலம் பெயர்ந்தவர்களின் இழப்பு பெரியது. அவர்களது perspective இந்திய தமிழர்களின் perspective-இலிருந்து மாறுபடுவது ஆச்சரியம் இல்லை.