லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி மறைந்துவிட்டதாக படித்தேன். லக்ஷ்மி சத்தியமூர்த்தியின் ஒரே மகள். எம்.எல்.சி.யாக இருந்தவர். எமர்ஜென்சிக்கு பிறகு தமிழ் நாட்டில் ஜனதா கட்சி என்று ஒரு அமைப்பு உருவாக உழைத்தவர். 77-இல் தென் சென்னையில் எம்.பி. தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அப்போது மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இவருக்காக பிரச்சாரம் செய்து கேட்டிருக்கிறேன். (ஃபெர்னாண்டஸ் மிக அருமையான பேச்சாளர்.) அவரை நான் அந்த ஒரு சமயத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அவருக்கு அப்போது ஐம்பது வயது இருந்திருக்கலாம். ஒல்லியாக, ஒரு நாற்பது வயதுக்காரர் மாதிரி இருந்தார்.
அவரை பற்றி இந்த தளத்தில் நான் எழுத ஒரே காரணம்தான். வாசகர் வட்டம் என்ற ஒரு அமைப்பை அவர் அறுபதுகளில் உருவாக்கினார். நாங்கள் வசித்த கிராமங்களில் வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகங்கள் மிக அபூர்வமாகத்தான் கிடைக்கும். ஆனால் கிடைக்கும் புத்தகங்களை என் அம்மா மிக ஆர்வத்தோடு படிப்பார். நல்ல முறையில் அச்சிடப்பட்டிருக்கும். (சாதாரணமாக நூலகங்களில் புத்தகங்களின் க்வாலிடி சொல்லும்படி இருக்காது, சுலபமாக கிழிந்துவிடும்.) தி. ஜானகிராமன், லா.ச.ரா. ஆகியோரின் புத்தகங்களை கேட்டு வாங்கி பதித்தார் என்று ஞாபகம். எனக்கு பர்சனலாக ஞாபகம் இருப்பது சாயாவனம் மட்டுமே. நல்ல இலக்கியத்தரம் உள்ள புத்தகங்களை பதிக்க ஒரு குழுவினர் முயற்சி செய்கிறார்கள் என்று என் அம்மா சொல்லும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
பிற்காலத்தில் க்ரியா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி என் அம்மாவுக்கு வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகங்களை பார்த்து ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி வாசகர் வட்டம் உருவாகிய முயற்சியை பற்றி இங்கே பேசுகிறார். மிக அருமையான பேட்டி, மிஸ் செய்யாமல் படியுங்கள்! வீட்டை எல்லாம் அடகு வைத்து புத்தகம் வெளியிட்டிருக்கிறார்!
ஜூன் 14, 2009 at 1:13 மு.பகல்
உங்கள் மூலம் லஷ்மி குறித்து விரிவாக அறிய முடிந்தது, அன்னாருக்கு அஞ்சலிகள்
ஜூன் 14, 2009 at 1:17 மு.பகல்
வாசகர் வட்டம் பிரசுரித்த நூற்களை பழைய பு்த்தகக் கடைகளில் வாங்கியிருக்கிறேன். உருவாக்கமும் அச்சும் மிகத்தரமாக இருக்கும்.
ஜூன் 14, 2009 at 1:20 மு.பகல்
அவருக்கு என்னுடைய அஞ்சலிகள்
ஜூன் 14, 2009 at 4:40 மு.பகல்
அந்தச் சிறிய வாசகர் வட்டத்திற்குள் நானும்
இருந்தேன் என்று பெருமைப்படுகின்றேன்!
இரவல் கொடுத்தது, வீடு மாற்றும் போது
தொலைத்தது போக மீதம் இருக்கும் வா.வ.
புத்தகங்கள்: தமிழர் பண்பாடும் வரலாறும்
(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி – சிட்டி மொழி
பெயர்ப்பு) – சோக்ரதர் ஆத்ம சிந்தனைகள்
(ராஜாஜி) – விஞ்ஞானத்தின் புதிய எல்லைகள் -
இன்றைய தமிழ் இலக்கியம் – அம்மா
வந்தாள் (தி.ஜானகிராமன்).. இன்னொரு
உண்மை, புத்தகத்தின் ஜாக்கெட்டுகள்
அப்படியே இருக்கின்றன!!
ஜூன் 14, 2009 at 4:51 மு.பகல்
ஒருமுறை பெங்களூர் செல்லும்போது வழியில் எங்கள் கிருஷ்ணகிரி வீட்டுக்கு வந்து இருக்கிறார் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி. அப்போது எனக்கு மிகச்சிறு வயது. வட்டக் கண்ணாடியின் பின்புறம் ஒளிர்ந்த சாந்தமான அந்தக் கண்களின் தீட்சண்யம் இன்னும் என் மனக்கண்களில் இருக்கின்றன. எண்பதுகளில் டெல்லிக்கு வந்த போது நார்த் அவென்யூவில் யாரோ ஒரு எம்பி வீட்டுக்கு வந்தார் என்று கேள்விப்பட்டு அவரை சந்திக்கப்போனேன். காந்தி நினைவகத்தில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க வந்திருந்தார். அப்போது நாடகங்களில் தீவிரமாக இருந்தேன். யார் யாருடைய நாடகங்கள் எல்லாம் மேடையேற்றியிருக்கிறாய் என்று கேட்டார். யதார்த்தாவின் நாடகங்கள் பற்றியெல்லாம் கேட்டார். விடைபெறும்போது சற்று காத்திருக்க வைத்து அவருடைய பையில் குடைந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். அது – மோகன் ராகேஷின் அறையும் குறையும் இந்தி நாடகத்தி்ன் மொழிபெயர்ப்பு. வாசகர் வட்டம் வெளியிட்டது. பேராசிரியர் ரவீந்திரன் பரிந்துரையில் மோகன் ராகேஷின் ‘குக்குர் முத்தேன்’ என்னும் இந்தி நாடகத்தை தமிழில் குடைகள் என்ற பெயரில மேடையேற்றினேன். நான் உபயோகிதத நாடகப்படி வாசகர் வட்டம் வெளியிட்ட அந்த நூலில் இருந்தது. ரவீந்திரன் ஏற்கனவே எனக்குக் கொடுத்தது. பின்னாளில் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்தே அந்த நூலைப்பெற்ற போது அந்த வயதில நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகும் தான் பதிப்பித்த சில நல்ல நூல்களை அவற்றின் நினைவுகளுடன் சுமந்திருக்கிறார் அவர். அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு எடுத்ததும் நிறையப் படித்தார். சென்னையில கச்சேரிகளுக்கு வருவார். எவ்விதப் புகழ் மற்றும் பொருள் வெளிச்சத்தையும் நோக்கிச் செல்லாத ஒரு தனித்த பாதையை தனதாக்கிக் கொண்டார்.
ஒரு வேண்டுகோள்.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி பற்றிய ஒரு அஞ்சல் கட்டுரையை ஓரிரு பக்கங்களுக்கு வடக்கு வாசல் இதழுக்கு எழுதி அனுப்புங்கள். ஜூலை இதழில் வெளியிடுகிறேன். 20ம் தேதிக்குள் கட்டுரை எங்களுக்குக் கிடைக்கவேண்டும்.
அன்புடன்
ராகவன் தம்பி
ஜூன் 14, 2009 at 8:33 மு.பகல்
கானா பிரபா, திகழ்மிளிர், சுரேஷ், சேதுராமன் சார், ராகவன்,
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
சேதுராமன், // அந்தச் சிறிய வாசகர் வட்டத்திற்குள் நானும் இருந்தேன் என்று பெருமைப்படுகின்றேன்! // Why am I not surprised?
நாற்பது வருஷங்களுக்கு அப்புறமும் புத்தகம் நல்ல கண்டிஷனில் இருப்பது பெரிய விஷயம்.
ராகவன், கட்டாயமாக எழுதுகிறேன். ஆனால் நான் எழுதியதை நீங்கள் போட வேண்டும் என்று ஒரு obligation-உம் இல்லை.
எனக்கு தெரிந்தது கொஞ்சம்தான்.
ஜூன் 14, 2009 at 9:18 மு.பகல்
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்
என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
ஜூன் 15, 2009 at 8:51 மு.பகல்
சுதேசமித்திரநில் சத்தியமூர்த்தியின் கடிதங்கள் என்ற தலைப்பில் லட்சுமிக்கு எழுதிய கடிதங்கள் படித்திருக்கிரேன். என்னுடைய அஞ்சலிகள்.
ஜூன் 16, 2009 at 7:00 மு.பகல்
சொல்லுகிறேன்,
சத்யமூர்த்தி தன் மகளுக்கு எழுதிய இந்த கடிதங்களை நான் படித்ததில்லை. உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்!