நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.
சேதுராமன் எழுதிய முதல் பகுதி இங்கே.
சாண்டில்யன் வாரிசுகள் நாட்டுடமை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார்களாம். ராயல்டியே இன்னும் நிறைய வந்துகொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
சாண்டில்யன் என் வாழ்க்கையில் இரண்டாவது ஸ்டார் எழுத்தாளர். (முதல்வர் வாண்டு மாமா). ஒன்பது பத்து வயதில் அவர் புத்தகங்கள் – கடல் புறா, யவன ராணி, மலை வாசல், ராஜ முத்திரை போன்றவை – மிகவும் த்ரில்லிங்காக இருந்தன. கிருஷ்ணமூர்த்தி சொன்ன மாதிரி இந்திய சரித்திரத்தின் சில பகுதிகளை அவர் மிகவும் கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு இன்றும் ஸ்கந்த குப்தனை பற்றி தெரிந்ததெல்லாம் மலை வாசல் புத்தகத்தில் படித்ததுதான். ஹூணர்கள், ராஜபுதனம், கனோஜி ஆங்க்ரே பற்றி முதலில் தெரிந்து கொண்டதெல்லாம் சாண்டில்யனின் கதைகள் மூலம்தான்.
ஆனால் சீக்கிரத்திலேயே அலுத்துவிட்டார். ஒரே ஃபார்முலா வைத்து எழுதுவார். என் கருத்தில் அவர் நாவல்களை இன்னும் ஒன்றிரண்டு ஜெனரேஷன்களில் மறந்துவிடுவார்கள்.
அவரது சரித்திர நாவல்கள் தமிழ் நாட்டில் மிக பாப்புலராக இருந்தன. குமுதம் பல வருஷங்களாக அவரது சரித்திர நாவல்களை தொடர்கதையாக வெளியிட்டது. யவன ராணி, கடல் புறா ஆகியவை அவரது மாஸ்டர்பீஸ்கள் என கருதப்படுகின்றன. அவருக்கு வால்டர் ஸ்காட், டூமாஸ் ஆகியோரை விட ரஃபேல் சபாடினி போன்றவர்கள்தான் ரோல் மாடல் என்று நினைக்கிறேன். அவருடைய நாவல்களில் பேச்சு இருக்கிற அளவுக்கு ஆக்ஷன் இருக்காது. உதாரணமாக மன்னன் மகள் நாவலில் முக்கால் நாவல் முடிந்த பிறகுதான் கதை நகரவே ஆரம்பிக்கும.
சாண்டில்யனின் பெரிய குறையே வளவள என்று எழுதிக் கொண்டே போவதுதான். பேப்பருக்கு பிடித்த கேடு. ஒவ்வொரு சாப்டரிலும் போன சாப்டரில் என்ன நடந்தது என்று ஒரு சுருக்கத்தோடு ஆரம்பிப்பார். பத்திரிகையில் தொடர்கதையாக படிக்கும்போது அது உபயோகமாக இருக்கலாம். நாவலாக படிக்கும்போது எரிச்சல் ஊட்டுகிறது. இயற்கை வர்ணனை, ஹீரோயின் வர்ணனை ஆகியவற்றை எடுத்துவிட்டால் புத்தக கனம் பாதியாக குறைந்துவிடும்.
சமயத்தில் அவர் சரித்திரத்தை மாற்றவும் தயங்குவதில்லை. பல்லவ அரசனான தந்திவர்மன் ராஷ்டிரகூடர்களால் தோற்கடிக்கப்பட்டான். பல்லவ திலகம் கதையில் தந்திவர்மன் ஹீரோ. ஹீரோ தோற்கக் கூடாது, அதனால் அவர் ராஷ்டிரகூடர்களை வெல்வான். பிறகு நான் வென்றாலும் உன்னிடம் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுவான்.
சாண்டில்யனின் புத்தகங்களில் யவன ராணி, கடல் புறா, மலை வாசல், ராஜ முத்திரை, கன்னி மாடம் ஆகியவை சுவாரசியமானவை. ஜல தீபம் (இரண்டாம் பாகம் சுத்த வேஸ்ட் – இந்த பகுதி பூராவும் ஒரு வெள்ளைக்காரி ஹீரோவை மயக்க முயற்சிப்பாள், அவ்வளவுதான்), ஜீவ பூமி, அவனி சுந்தரி, பல்லவ திலகம், மூங்கில் கோட்டை, ஜல மோகினி, கவர்ந்த கண்கள், மஞ்சள் ஆறு, ஆகியவை படிக்கலாம். பாண்டியன் பவனி, ராஜ யோகம், நில மங்கை, சேரன் செல்வி, ராணா ஹமீர், துறவி, நாக தீபம் போன்றவை எல்லாம் வேஸ்ட்.
அவரது முதல் சமூக நாவலான பலாத்காரம் (புரட்சிப் பெண்) மிக அமெச்சூர்தனமாக எழுதப்பட்டது. அந்த நாவலின் ஒரே ஆச்சரியம் சத்தியமூர்த்தி இதை எப்படி இவ்வளவு சிலாகித்து ஒரு முன்னுரை எழுதினர் என்பதுதான். அவரது ராஜஸ்தானிய நாவல்கள் பல கொடுமையாக இருக்கும். கர்னல் டாட் எழுதிய Annals and Antiquities of Rajasthanஇலிருந்து ஒரு வரி எடுத்துக் கொள்வார். அதை வைத்து ஒரு நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதுவார்.
ராஜ யோகம், நில மங்கை, சேரன் செல்வி என்ற மூன்றும் ஒரு trilogy மாதிரி வந்தது என்று நினைவு. இப்படி எழுதுவது தமிழில் அபூர்வம்.
அவரது போராட்டங்கள் என்ற சுய வாழ்க்கை வரலாற்றை எல்லாருக்கும் சிபாரிசு செய்கிறேன். மிக அற்புதமான memoirs. அதில் அவர் என் வீடு திரைப்படத்தை பற்றி மிகவும் உருகி உருகி எழுதி இருப்பார். ராண்டார்கை இதை பற்றி எழுதி இருப்பது இங்கே. ராண்டார்கை அவரது நெருங்கிய நண்பர் சித்தூர் நாகையாவை பற்றி எழுதிய இந்த கட்டுரையில் அவரும் நாகையாவும் பிற்காலத்தில் சந்தித்த ஒரு நிகழ்ச்சியை பற்றி உருக்கமாக எழுதி இருக்கிறார்.
நெட்டில் கடல் புறாவை ஒருவர போட்டுக் கொண்டிருக்கிறார் – இங்கே.
விக்னேஸ்வரன் என்பவர் சில சாண்டில்யன் நாவல்களுக்கு விமர்சனங்கள் எழுதி இருக்கிறார். விலை ராணி, கடல் புறா, மன்னன் மகள், ராஜ யோகம் ஆகியவற்றுக்கான விமர்சனங்கள் கிடைக்கின்றன.
என் கண்ணில் சாண்டில்யனின் புத்தகங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை இல்லை. சுமாரான இலக்கியத் தரம்தான். தமிழ் உரைநடை வரலாற்றில் அவர் ஒரு footnote மட்டுமே. ஆனால் அவர் ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. அவர் மூலமாக நான் கற்றுக் கொண்ட சரித்திரம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இந்த முறை வந்த லிஸ்டில் பலரை விட அவர் சிறந்த தெரிவுதான்.
ஜூன் 3, 2009 at 11:08 மு.பகல்
ஞாயிற்றுக்கிழமை ஹிந்து நாளிதழ், தமிழக அரசு 22 தமிழ் அறிஞர்களின் படைப்புகளின் உரிமைகளை ரூபாய் எண்பத்து நான்கு லக்ஷம் கொடுத்துத் தனதாக்கிக் கொண்டது என்கிறது.. இது தவிர ராஜம் கிருஷ்ணன் அவர்கள்
படைப்புகளையும், ரூபாய் மூன்று லக்ஷம் கொடுத்து அரசு உரிமையாக்கியது என்கிறது.. அரசு விதிகளின் படி உயிருடன் இருப்பவர்களின் படைப்புக்களை உரிமையாக்கக் கூடாது என்றாலும், எழுத்தாளரின் உடல் நிலை
கருதி, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதென்கிறது
இவ்வறிக்கையின் படி, கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் வாரிசுகள் தலா ஐந்து லக்ஷம் ரூபாய் பெறுவர்:
அழ. வள்ளியப்பா, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ராய. சொக்கலிங்கம், எஸ்.அகஸ்தியலிங்கம், பாவலர் நா. ரா. நாச்சியப்பன், புலியூர் கேசிகன், சின்ன அண்ணாமலை, வடுவூர் துரைசாமி ஐயங்கார், மு. ராகவ ஐயங்கார்.
அரசு ஆணையின் படி வரும் எழுத்தாளர்களின் வாரிசுகள், தலா மூன்று லக்ஷம் ரூபாய் பெறுவர்:
வையாபுரி பிள்ளை, பம்மல் சம்பந்தனார், ஏ.சிதம்பர நாதன் செட்டியார், எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கர தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், வை.மு. கோதை நாயகி, பூவை எஸ்.ஆறுமுகம்,
என்.வி.கலைமணி, கவிஞர் முருகுசுந்தரம், கவிஞர் கோவேந்தன், திருக்குறள் மணி, ஏ.கே.நவனீதகிருஷ்ணன்.
தமிழக அரசு நாட்டுடைமையாக்கும் விருப்பம் தெரிவிக்கப்பட்டும், அதை நிராகரித்தவர்கள் வருமாறு:
கண்ணதாசன், சுந்தர ராமசாமி, லக்ஷ்மி, சாண்டில்யன், மு.வரதராசனார், முதலானோர் வாரிசுகள்.
ஜே.ஆர்.ரங்கராஜு மற்றும் கே.ஆர்.ஜமதக்னி ஆகியோரின் படைப்புகளை உடைமையாக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன!!
மீண்டும் நம்பர் குழப்பம் தெரிகிறது!!
உரிமையாக்கப் பட்டது = 22, நிராகரிக்கப்பட்டது = 5, உரிமையாக வேண்டியவை = 2 மொத்தம் = 29
பட்ஜெட் பிரகாரம் குறிப்பிடப்பெற்றது 28 — மீண்டும் அந்த ‘கமா’ விளையாடுகிறது ஒரு பெயரில்!
ஜூன் 4, 2009 at 11:38 மு.பகல்
/ராயல்டியே இன்னும் நிறைய வந்துகொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்./
இங்கே தமிழகத்தில் எழுத்தாளனுக்கு, ராயல்டி என்பது பதிப்பாளர் பார்த்துக் கொடுக்கிற “தர்மம்” தான். கறாராகவும் எழுத்தாளர்களால் இருக்க முடிவதில்லை. முக்கியமான காரணம், புத்தகங்களை விலை கொடுத்து வாங்குகிற பழக்கம் இங்கே பரவலாகவில்லை. நூலகங்களை நம்பியே பெரும்பாலான பதிப்பகங்கள் பிழைப்பை நடத்த வேண்டிய நிலைமை.
இப்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகிறது. புத்தகச் சந்தைகள் ஒவ்வொரு ஊரிலும், இரண்டு மூன்று மாதங்களுக்கொரு தரமாவது நடக்கிறது, புத்தகங்களை வாங்குகிறவர்களுடைய எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டுமே உச்சத்தை தொடுகின்றன, அல்லது இப்போது சில பதிப்பாளர்கள் விளம்பர உத்திகளை மட்டுமே முதலாக வைத்து, புத்தகங்களைத் தலையில் கட்டி விடுகிற முன்னேற்றமும் நடந்து கொண்டிருக்கிறது.
இங்கே முக்கியமான விஷயம், தமிழக அரசு எழுத்தாளர்களின் படைப்புக்களை நாட்டுடைமையாக்குவதில் காணப்படும் சில விசித்திரங்கள் தான்!
முதலில், எந்த அடிப்படையில் நாட்டுடைமையாக்கப் படவேண்டிய நூல்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?
சம்பந்தப்பட்டவர்களிடம் சம்மதம் பெற்ற பிறகே, முடிவை வெளியே அறிவிக்கிற குறைந்தபட்ச அறிவு கூட அரசுக்கு இல்லாமல் போவதேன்?
உரிமையாளர்களுக்கு அளிக்கும் தொகையை எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?
எழுத்தாளர்களின் படைப்பை நாட்டுடைமையாக்குவதனால், சமுதாயத்திற்கு என்ன பெரிய நன்மை ஏற்பட்டு விடப் போகிறது என்று அரசு கருதுகிறது?
ஆக, அரசின் இந்தத் திட்டம், ஆரம்பத்தில் இருந்தே குழப்பங்களோடு தான் இருக்கிறது, இனியும் இருக்கும்!
அப்புறம் ஆர்வி, சாண்டில்யன் எழுத்துக்களை நீங்கள் ரசிக்கவில்லை என்பதில் எனக்கு வியப்பு ஒன்றும் இல்லை. ரசனை என்பது மாறிக் கொண்டே இருப்பது என்பதால் மட்டுமல்ல, ஒருவருக்குப் பிடிப்பது இன்னொருவருக்குப் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதாலும் தான்!
தமிழில், சரித்திரக் கதைகள் எழுதுவதில், இன்றைக்கும் கூடப் போட்டியாளர்கள் எவரும் இல்லாத காரணத்தால், சாண்டில்யன் இன்றைக்கும் வெற்றி பெற்றவராகவே அறிவிக்கப் படுகிறார். அவரைப் பின்னுக்குத் தள்ள, ஒரு சரியான போட்டி வரட்டும், அப்புறம் சாண்டில்யனை மதிப்பிட, ஒப்புவமை செய்ய சரியான நேரம் வரும்!
ஜூன் 9, 2009 at 5:33 பிற்பகல்
கிருஷ்ணமூர்த்தி,
சாண்டில்யன் பற்றிய உங்கள் மறுமொழிக்கு தாமதமாக பதில் எழுதுகிறேன், மன்னிக்கவும்.
நாட்டுடமை process பற்றி எனக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. சேதுராமனுக்கு ஜெ போட்ட பதிவில் அவற்றை கொஞ்சம் கோடி காண்பித்தேன். இன்னும் விபரமாக எழுத கை வரவில்லை.
// தமிழில், சரித்திரக் கதைகள் எழுதுவதில், இன்றைக்கும் கூடப் போட்டியாளர்கள் எவரும் இல்லாத காரணத்தால், சாண்டில்யன் இன்றைக்கும் வெற்றி பெற்றவராகவே அறிவிக்கப் படுகிறார். அவரைப் பின்னுக்குத் தள்ள, ஒரு சரியான போட்டி வரட்டும், அப்புறம் சாண்டில்யனை மதிப்பிட, ஒப்புவமை செய்ய சரியான நேரம் வரும்! //
சில போட்டியாளர்களை பற்றி சமீபத்திய பதிவுகளில் எழுதி இருக்கிறேன். ஆனால் போட்டி கம்மிதான். உலக அளவிலேயே சரித்திர நாவல்கள் எழுதுவது குறைவுதான். வால்டர் ஸ்காட், டூமா, ரஃபேல் சபாடினி மட்டும்தான் நினைவுக்கு வருகிறார்கள்.
ஜூன் 30, 2009 at 5:44 மு.பகல்
Hello Krishnamurthy, this is Mohan, I do remember reading Kadal Pura when I was 13 or 14 I guess, one of my favourite book. By the way do you by any chance know who wrote Mohini Theevu (I guess it was sandilyan, but dunno for sure) I also would like to read the book, so by any chance if you suggest me where to buy or download it would be of great help. To be Honest, I really like your knowledge and presentation in Tamil, great job.
Regards,
Mohan M.