மே 2009


அனல் பறக்கும் வாதங்களும் எதிர் வாதங்களும் வந்து கொண்டிருக்கின்றன. நான் பேசுவது நல்ல விஷயம் என்று நம்புபவன். மாற்று கருத்துகள் வரவேற்கப்பட வேண்டும் என்று நினைப்பவன். ரதி, ப்ரியா, வானதி மற்ற அனைவருக்கும் கருத்துகளை எழுதியதற்காக நன்றி!

நான் எங்கே நிற்கிறேன் என்று இந்த பதிவில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரண்டாவது பகுதி இங்கே.

புலிகள்:
புலிகள் ஈழம் வேண்டும் என்று போராடுவது தவறான செயலா?
இல்லவே இல்லை.
ஒரு அரசாங்கம் பிறப்பு, பேசும் மொழி, மத நம்பிக்கைகள் ஆகியவற்றை வைத்து உங்களை இரண்டாம் தர குடிமகனாக சட்ட பூர்வமாக நடத்த முயற்சிக்கும்போது; அரசு எந்திரம் இந்த அடிப்படையில் மக்களை ஒடுக்கும்போது; போராடுவது தவறே இல்லை. போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. அஹிம்சை ஓரளவுதான், சில சூழ்நிலைகளில் மட்டும்தான் பயன் தரும்.

பிறகு புலிகளையும பிரபாகரனையும் நான் ஏன் எதிர்க்கிறேன்?
புலிகள் இலங்கை அரசோடு, சிங்களவர்களோடு மட்டும் போராடவில்லை. சக போராளிகளையும், கருத்து வேற்றுமை உள்ள அனைவரையும் வஞ்சம் வைத்து கொல்கிறார்கள். ஈழ விடுதலை என்பது அவர்கள் சொல்லும் வழியிலே, அவர்கள் தலைமையிலே மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

புலிகள் தலைமையில் ஒரு தனி ஈழம் அமைவது நல்ல விஷயமா?
இல்லை.
புலிகள், பிரபாகரன் ஃபாசிஸ்ட்கள். அவர்கள் தலைமையில் அமையும் எந்த ஆட்சியும் நல்லது இல்லை.

ராஜீவ்:
புலிகள் ராஜீவை கொலை செய்ததை கண்டிக்கப்பட வேண்டியதா?
கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது.
எல்லா இந்தியர்களும் எதிர்க்க வேண்டிய விஷயம் இது. இதற்கெல்லாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இது புலிகளும் ஈழத் தமிழர்களும் கூட கண்டிக்க வேண்டியது என்பது என் உறுதியான கருத்து. வெறும் பழி வாங்கும் உணர்ச்சியால் நடந்த கொலை இது. மக்கள் நலத்தில் அக்கறை உள்ள எந்த தலைவனும் கடந்த கால கசப்புகளை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு செயல்படக் கூடாது. ப்ராக்டிகலாகவும் யோசிக்க வேண்டும். இந்த ஒரு கொலைதான் இந்தியர்களை புலிகளுக்கு எதிராக திருப்பியது. இன்று நிலை கொஞ்சம் மாறி இருந்தாலும் தமிழர்களும் புலிகளுக்கு எதிராக செயல்பட இது ஒன்றுதான் முக்கிய காரணம். அதற்கு முன்னால் புலிகளுக்கு எதிராக கருத்து சொன்ன தமிழர்கள் வெகு சிலரே. பிரபாகரனின் மிக பெரிய முட்டாள்தனமான செயல் இது.

ராஜீவ் – ஜெயவர்தன ஒப்பந்தம் நல்ல விஷயமா?
ஆம்.

பிறகு புலிகள் அதை ஏன் எதிர்த்தார்கள்?
பிரபாகரன் ஒரு பிடி மண்ணாக இருந்தாலும் போதும், அது என் கண்ட்ரோலில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்ததால்.

ஒப்பந்தம் ஏன் தோல்வி அடைந்தது?
அனுபவம் இல்லாத ராஜீவை ஜெயவர்தன மாட்டி விட்டுவிட்டார். ராஜீவ் புலிகளை, பிரபாகரனை, பிரபாகரனின் பிடிவாதத்தை, அவரது “என் வழி தனி வழி” மனப்பான்மையை குறைத்து மதிப்பிட்டுவிட்டார். ஆப்பெடுத்த குரங்கு போல ஆகிவிட்டது ராஜீவின் நிலை.

IPKF அத்து மீறியதா?
என்னால் ஆதாரம் காட்ட முடியாது. ஆனால் எந்த ராணுவமும் அத்து மீறி இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. போலீஸ் திருடர்களை அடிக்கக் கூடாதுதான். ஆனால் அடிப்பதே இல்லை என்று யாராவது நம்புகிறீர்களா?

இலங்கை அரசு:

இலங்கை அரசை ஆதரிக்க வேண்டுமா?
இல்லவே இல்லை.
புலிகள் செய்த/செய்யும் தவறுகள் பரங்கிமலை அளவு என்றால் இலங்கை அரசு செய்த/செய்யும் தவறுகள் இமய மலை அளவு. Period.

தமிழ் நாடு:

தமிழர்களின் தவறு என்ன?
புலிகள் பற்றிய குற்ற/எதிர்ப்பு உணர்ச்சியில் நாம் ஈழத் தமிழர்களின் கஷ்டங்களை தமிழர்கள் அல்லாத இந்தியர்களிடம் விளக்க தவறி விட்டோம். உதாரணமாக இந்த தளம் தமிழில்தானே இருக்கிறது?
மற்ற இந்தியர்கள் தமிழர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள், ஆ ஊ என்றால் தீக்குளிக்கிறார்கள் தீயில் எரிகிறார்கள், (யாரையா தீயில் எரிவதை தீக்குளித்தல் என்ற அழைப்பது?), ஈழம் என்றால் அறிவு பூர்வமாக, ப்ராக்டிகலாக பேசுவதில்லை என்றுதான் நினைக்கிறார்கள். வைக்கோதான் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும், மற்ற தேசிய தலைவர்களுக்கும் தெரிந்த ஈழத் தமிழர் ஆதரவுக் குரல். உணர்ச்சிவசப்படாமல் வைக்கோவுக்கு பேசவே தெரியாது. வேறு என்ன நினைப்பார்கள்? இல்லை என்றால் கலைஞர் மாதிரி பதவிக்காக ஜால்ரா அடிப்பார்கள்; இல்லை ஜெ மாதிரி குட்டையை குழப்புவார்கள். தமிழ் நாட்டின் முகங்கள் மிகவும் polarised ஆக இருக்கின்றன. வைக்கோவுக்கும் சோவுக்கும் இடைப்பட்ட ஒரு குரல் எங்கே?

தமிழர் தலைவர்களின் தவறு என்ன?
தலைமை வகிக்கும் தகுதி இல்லாதவர்கள். ஸ்டண்ட் அடிப்பதே குறி.
சிதம்பரம் போன்றவர்கள் என் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவதில்லை?

இன்று என்ன செய்ய வேண்டும்?
முதலில் ப்ராக்டிகலாக யோசிக்க வேண்டும். பழைய கசப்புகளையே நினைத்து செயல்படக்கூடாது.

இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும்?
Ideally, போரை நிறுத்த வேண்டும். ஆனால் இது நடக்கப் போவதில்லை. நீங்கள் இலங்கை அரசின் நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். 25 வருஷ போருக்கு பின் இன்று வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. புலிகளை அனேகமாக அழித்து விடலாம் என்ற நிலை. போரை நிறுத்தினால் அது புலிகள் இயக்கம் மீண்டும் வலிமையோடு உயிர்த்தெழ உதவும். அப்படி செய்ய இலங்கை அரசுக்கு என்ன பைத்தியமா இத்தனை நாள் தமிழர்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள், இன்னும் சில ஆயிரம் பேர் செத்தால் என்ன ஆகிவிடும் என்றுதானே யோசிப்பார்கள்? இலங்கை அரசு போரை தொடரத்தான் போகிறது.

போரை நிறுத்தப் போவதில்லை என்றால் அடுத்த நிலை என்ன?
தமிழர் காம்ப்களை செஞ்சிலுவை சங்கமோ, ஐ.நா.வோ பார்வை இட வேண்டும். அவர்களை நல்லபடி நடத்த வேண்டும்.
அரசியல் சட்ட மாற்றங்கள் இப்போதே ஆரம்பிக்க வேண்டும். இவற்றை செய்தால் இலங்கை அரசுக்கு propaganda வெற்றி கிடைக்கும்.

புலிகள் என்ன செய்ய வேண்டும்?
Ideally, தனி ஈழம் கோரிக்கையை விட்டுவிட்டு, இலங்கை அரசோடு ஒத்துழைக்க வேண்டும். இதுவும் நடக்கப் போவதில்லை. காயங்கள் மிக ஆழமானவை, புலிகளின் மனோநிலையும் அப்படிப்பட்டதில்லை.

அப்படி என்றால் புலிகளுக்கு அடுத்த நிலை என்ன?
போரில் ஈடுபடாத தமிழர்களை ஒரு பாதுகாப்பு வளையமாக பயன்படுத்தாதீர்கள். எனக்கு நிச்சயமாக அப்படி நடக்கிறதா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அப்படி செய்ய புலிகள் நிலையில் இருக்கும் எவருக்கும் தோன்றத்தான் தோன்றும்.
இழப்புகளை எவ்வளவு தூரம் குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் குறைத்துக் கொண்டு தப்பிப்பதுதான் இப்போதைக்கு சிறந்த வழி. எதிர்காலத்தில் மீண்டும் வலிமை பெற முயற்சிக்கலாம்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது.
இங்கே வரும் இலங்கை தமிழர்களை ஆதரிப்போம். கல்வி, மருத்துவ வசதி, சுலபமாக தொழில் செய்ய கடன் வசதி, குடியுரிமை ஆகியவை கொடுக்கப்பட வேண்டும். இலங்கை தமிழர்கள் தம் காலில் நிற்க முடிந்த உதவிகள் செய்ய வேண்டும்.
இலங்கை அரசின் மீது diplomatic pressure இருந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழர் காம்ப்கள் ஊடகங்கள், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. ஆகியவை சுலபமாக அணுகும் நிலையில் இருக்க, அரசியல் சட்டம் இப்போதே மாற்றப்பட, எதிர்கால அரசியல் அமைப்பு இப்படி இருக்கும் என்று வரையறுக்கப்பட இப்போதே pressure இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஈழத் தமிழர் படும் கஷ்டங்களை எடுத்து சொல்லுங்கள். ஆங்கில பத்திரிகைகள், பதிவு தளங்கள் ஆகியவற்றில் ஏன் இலங்கை பிரச்சினை பேசப்படுவதில்லை? இந்தியாவில் இருந்து வரும் டாப் டென் ஆங்கில பதிவுகள் எப்போது இலங்கை பிரச்சினையை பற்றி பேசின? அவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசினாலும் பரவாயில்லை, முதலில் தங்கள் கருத்துகளை பதிக்க வேண்டும். அந்த் ஆரம்பம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை. As a tactical step, நீங்கள் புலிகளை ஆதரித்தாலும் இப்போதைக்கு அவர்களை பற்றி பேசாதீர்கள். நீங்களும் ஆங்கிலத்தில் பதிவிடுங்கள்!
காங்கிரஸ்காரர்களை பிடியுங்கள். கலைஞர் மண் குதிரை. சண்டைக்காரன் காலில் விழுவதே இப்போதைக்கு நல்லது. அவர்கள் வாயை திறக்க வேண்டும். அதற்கு முயற்சி செய்யுங்கள்!

RV,  100 சதவிகிதம் நான் நினைப்பதையே எனக்காக எல்லா பதில்களையும் எழுதிவிட்டான்.  எனவே நான் தனியாக பதில் எழுதவேண்டாம் என நினைக்கிறேன். Priya, ரதி, Cherankrish, Vadivelu, Ann1975, Ragunath  ஆகிய அனைவருக்கும் நன்றி.  நான் காண்ட்ரோவர்சியல் டாபிக்கை இதுவரை தொடாமல் இருந்தேன். அதற்கு காரணம் அதனால் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பதால்.  ஏதோ ஒரு வேகத்தில் எழுதிவிட்டேன்.  வாசகர் ரதி மிகவும் பாதிக்கப்பட்டது மாதிரி தெரிகிறது. ஆனாலும் கண்ணியமாக பதில் எழுதியிருக்கிறார். மற்றவர்களும் கண்ணியமாகவே பதில் எழுதியுள்ளனர்.

ஒருவர் தகாத வார்த்தைகளை கூறி பதில் எழுதியிருந்தார். எனக்கு இரண்டு நாள் முழுவதும் அதிர்ச்சியாக இருந்தது. மதிப்பிற்குரிய டோண்டு ராகவன், சாரதா, மற்றும் பல இளம் வாசக நண்பர்கள் இருக்கும் வலை உலகத்தில் இப்படியும் இருக்கிறார்களே என்று வருத்தமாக இருந்தது. இந்த பிளாக்கை ஒரு கண்ணியமான பிளாக்காக இது வரை காத்துவருகிறோம்.  அது சீர்குலையக்கூடாது என்பதால் நாங்கள் அதை வெளியிடவில்லை.  எதிர்ப்பு கருத்து இருந்தால் அந்த கருத்தை சொல்வதற்கு பதிலாக தனிமனிதர்களை, குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகள் கூறி தாக்குவது எப்படி நாகரிகமாக முடியும்? கடைசியில் அவர் “நீயெல்லாம் இருப்பதால் தமிழ்நாடு உருப்படாது என்றும் எழுதியிருந்தார்”. இந்த ஒரு வாக்கியம் தான் ”நாகரிகமாகவும்”, படிக்கும் படியாக இருந்தது. இவர் மாதிரி பேசுபவர்கள் இருக்கும் நாடாகத்தான் தமிழ்நாடு இருக்கவேண்டும் என்று நினைக்கிறார் போலும்.  இங்கு பங்கேற்கும் பிற வாசக நண்பர்கள் ஒருவர் கூட அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் வாழ விரும்பமாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இனி வரும் நாட்களில் காண்ட்ரோவர்சியல் டாப்பிக்ஸை முழுவதுமாக தவிர்க்க முயற்ச்சி செய்கிறேன்.  இந்து பத்திரிக்கையில் வீக்லி மாகசீனில் கே.கங்காதர் என்பவர் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அவர் எந்த காண்ட்ரோவர்சியல் சமாச்சாரத்தையும் தொட மாட்டார். அவர் போல எழுதுவது சாலச் சிறந்தது என்று இந்த இரண்டு நாட்களில் கற்றுக் கொண்டேன்.

ஆர்வியின் இரண்டு சென்ட்: இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. இரண்டு “தகாத வார்த்தை” எழுதும் யாருக்கோ பக்ஸ் மேல் இவ்வளவு தாக்கம் இருக்கிறதே? பக்ஸ் எதிர்காலத்தில் என்ன எழுத வேண்டும் என்று இவர்களா தீர்மானிப்பது? நான் இதை எழுதலாமே, எழுத வேண்டாமே என்று ஏதாவது சொன்னால் கூட பக்ஸ் கேட்பதில்லை :-)
06/06/09 – RVயின் பாயிண்ட்களைப்  படித்தப்பிறகும் (Thanks RV – எப்போது நீ சொல்லி நான் கேட்காமல் இருந்தேன் என்று தான் தெரியவில்லை :-) ), எனது பகுத்தறிவும், சிறிது காலம் கடந்ததாலும் நான் தெளிவு பெற்றுவிட்டேன். ஒரு தர்க்கத்தில் ஃபேலஸிக்கள் (fallacies)  இருக்கலாம். We can even tolerate Argumentum ad Hominem. But what this guy wrote is beyond that. That’s why I got really confused. Well. The positive way of seeing this is that there is nothing more that could offend me than what he said. So now that I have seen the worst, I think, I am prepared for anything. So, I am jumping right in and “Hello World! Bring it on.”


ஒரு விளக்கம் – இந்த தளம் நானும் என்னுடைய நண்பன் பக்சும் சேர்ந்து எழுதுவது. வேலை பளுவால் பக்ஸ் எழுதுவது கொஞ்ச நாளாக குறைந்திருக்கிறது. எங்களுக்குள் இருக்கும சிறு கருத்து வேறுபாடுகளை கண்டு குழம்ப வேண்டாம்! ஓவர் டு பக்ஸ்.

பி.ஜே.பி கட்சியின் நிலைபாடுகள் ஒரு போதும் எனது பகுத்தறிவுக்கு ஒத்துப் போவதில்லை. அவர்கள் செய்வதெல்லாம் அரசியல், அதற்க்காக எதுவும் செய்யத்தயங்காத ராட்சஷ கொள்கைகள் கொண்டவர்கள். ஆனால் விசித்திரமாக இலங்கை பிரச்சனையில் பி.ஜே.பி.யை தவிர எந்தக் கட்சியும் ஒரு தெளிவான நிலைப்பாடை எடுத்த மாதிரி எனக்குத் தெரியவில்லை. எனது நிலைப்பாடும் அதுவே.

எனது நிலைப்பாடு: இலங்கைத் தமிழ் மக்களுடைய துயரங்களுக்கு அரசியல் தீர்வு மட்டுமே சரியான வழி. ராணுவத்தீர்வு முடிவுறாத ஒன்றாகத்தான் இருக்கமுடியும். சரியான பாதையில் செல்ல அமிர்தலிங்கம் போன்றோர்கள் முயற்ச்சி செய்தபோது, புலிகள் இலங்கைத் தமிழ் மக்களை தவறான பாதைக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றார்கள். இதனால் இலங்கைத் தமிழ் மக்கள் பல வருடங்களை இழந்தது மற்றுமல்லாமல் எந்த ஒரு நல்ல வழிகாட்டியும் இல்லாமல் தவிக்கிறார்கள். மேலும் தமிழ் ஈழம் என்பது டூ மச் என்று நான் நினைக்கிறேன். ஆனால் சிங்கள அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களை இரண்டாந்தர, மூன்றாந்தர குடிமக்களாக பார்க்காமல் சிங்கள மக்களுக்கு ஈடாக சம் உரிமைகள் கொடுத்து அங்கீகரிக்க வேண்டும். ஒரு ஃபெடரல் சிஸ்டம் உருவாக்கப்பட்டு ”ஈழம்” ஒரு அட்டானாமஸ் பிராவின்ஸாக மாற்றப்படவேண்டும்.

இதை எதிர்ப்பவர்கள் தான் இன்று அதிகம். பிராபாகரனை இன்னும் தமிழ்நாட்டில் போற்றுபவர்கள் ஏராளம். இலங்கைத் தமிழர்கள் மடிகிறார்கள் என்ற போர்வையில் கிடுக்கியில் அகப்பட்ட எ(பு)லியை விடுவிக்க பலர் இன்று தமிழ் நாட்டில் துடிக்கிறார்கள். இப்படி துடிக்கும் ”தமிழ்” தமிழர்கள் பலர் தங்களுக்கென்று ஒரு சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள மறந்துவிட்ட, “பகுத்தறிவு பாசறை” வாதிகள். தன் நாட்டில் வந்து ஒரு தலைவரை கொன்றுவிட்டவர்க்கு இவர்கள் பரிந்து பேசுகிறார்கள். தனது நாட்டின் பாதுகாப்பை இழிவு படுத்திய விடுதலை புலிகளைப் பார்த்து பொங்கி எழ மாட்டார்களாம். பேச்சு வார்த்தைக்கு வந்த பிரபாகாரன் அப்படியே வெளியே போனால் ஆபத்து என நினைத்து, தனது சொந்த புல்லட் ப்ரூஃப் அங்கியை கொடுத்த உதவிய தனது நாட்டு முன்னால் பிரதமரை மனித வெடிகுண்டுகளை வைத்து தகர்க்கும் கோழைகளை பார்த்து பொங்கி எழ மாட்டார்களாம். ஆனால் பிற நாட்டு மக்கள் துன்புறுவதை கண்டு பொங்கி எழுவார்களாம். எனனய்யா வேடிக்கை இது?

நான் பெரிதும் மதிக்கும் நண்பர் ஒருவர் சில அரசியல் கட்சிகள் பிரகடனப்படுத்தும் ஒரு வாக்கியத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதாவது இலங்கை தமிழ் மக்களுக்கும் “தமிழ்” தமிழ்மக்களுக்கும் உள்ள உறவு “தொப்புள் கொடி” உறவு. அதனால் இலங்கை மக்கள் அவதிப்படும் பொழுது நாம் எல்லோரும் பொங்கி எழவேண்டும் என்று கூறுகிறார்கள். சிரிப்பு வருகிறது. நல்ல காலம். விடுதலைப் புலிகளுக்கும் நமக்கும் உள்ள உறவு கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்க உறவு என்று சொல்லாமல் விட்டர்களே! திராவிடர் கழகம் என்ற ஒரே “குடும்பத்திலி”ருந்து வந்தவர்கள் தங்கள் உறவு முறைகளை மறந்து அடித்துக் கொள்வார்களாம். வெட்டிக் கொள்வார்களாம். ஆனால் முன் பின் அறிமுகமில்லாத வேற்று நாட்டவர்களுக்காக வரிந்துக் கட்டிக் கொண்டு வருவார்களாம். (நான் இங்கே இலங்கைத் தமிழர்களுக்காக போராடுவதாக பிதற்றுவர்களின் ஹிப்போகிரசஸியைத் தான் சாடுகிறேன். நான் எப்படிப் பார்க்கிறேன் என்பது பின்னால் வந்துக் கொண்டிருக்கிறது). பிரச்சனை என்ன என்று சற்றும் புரிந்துக் கொள்ளாத, சில அடிமட்டத் தொண்டர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் என்ற சொந்த உறவுகளை சரியாக நடத்தாமல், எங்கோ இருக்கும் ”தொப்புள் கொடி” உறவுக்காக உயிர் விடுவதும் நான் நாளிதழ்களில் பார்க்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில், இந்த “தொப்புள் கொடி” உறவுகளை போதை மருந்து வினியோகிக்கிறார்களென்ற போர்வையில் சேலத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கினார்கள். அகதிகள் முகாம்களில் கொடுமைகள் நடப்பதாக கேள்விப்படுகிறோம். எங்கே போயிற்று இந்த உறவு முறைகள்?

இலங்கை தமிழர்களை எப்படி பார்க்கவேண்டும்? மனிதர்களாக. ஆம்! மனிதர்களாக மட்டுமே. அப்பாவிகள் எங்கே துன்புறுத்தப்பட்டாலும் அதை நாம் மனிதாபிமானத்துடன் பார்ப்பதே மனித குணம். இலங்கையிலோ, டார்ஃபரிலோ, பாலஸ்தீனியர்களோ, பக்கத்துவீட்டிலோ, அநியாயம் எங்கு நடந்தாலும் அது அநியாயமே. இதில் “தொப்புள் கொடி” உறவு, அந்தரங்க உறவு என்பதெல்லாம் அரசியல் நடத்தும் எத்தர்களின் பசப்பு வார்த்தைகளே. தமிழர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழ் பேசுபவர்கள் என்பதைத் தவிர வேறு எந்த விஷேச உறவு முறைகளும் கிடையாது. (மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும் ஒரு நாள் இது உருவாகலாம். அப்பொழுது இந்த அரசியல் கட்சிகள் ஒரு புது உறவு முறையை கண்டுபிடிப்பார்கள்.)

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் சற்றே சிந்திக்கவேண்டும். ஒரு தர்க்கத்திற்க்காக இலங்கை அரசு தனி நாட்டிற்கு உடன்பட்டு பிராபகரன் அந்நாட்டின் ஜனாதிபதியாக ஆகிறார் என வைத்துக்கொள்வோம். ஆறாவது மாதத்திலேயே இலங்கைத் தமிழ் மக்கள் “விலங்கு பண்ணை” (Animal Farm) மிருகங்கள் போல் ஆகிவிடுவார்கள். இது பிரபாகரனின் வரலாறு நமக்கு நன்றாக முன்னறிவிப்பு செய்கிறது. (தனி நாடு பெறுவதற்க்கு முன்னரே இப்படி யென்றால் தனி நாடு கிடைத்தப் பிறகு அவரைக் கேட்க ஆளே கிடையாது. எத்தனை தலைவர்களை கொன்று குவித்தார்கள்!.

விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக அழிப்பதில் மஹிந்தா ராஜபக்‌ஷேயின் நோக்கம் சரியான நோக்கம் தான். சரண் அடையுமாறு இப்பொழுதும் அவர் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். புலிகள் அதை ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும். அதுவே சாத்தியாமான நடைமுறை. அதுவல்லாமல் ஒருதலைப் பட்ச போர் நிறுத்தமென்றெல்லாம் கோட்டபயா ராஜபக்‌ஷே சொல்வது போல் நகைச்சுவை பண்ணிக்கொண்டிருக்கும் நேரமல்ல இது. தங்கள் இனம் மேல் இவர்களுக்கு அக்கறை இருக்குமானால், லட்சக்கணக்கான் அப்பாவி இலங்கைத் தமிழ் மக்கள் உயிரை ஒருதலைப்பட்சமாக காப்பாற்றுவதற்க்காகவாவது சரணடைய வேண்டும்.

தன் பங்கிற்க்கு இலங்கை அரசு கண்மூடித்தனமாக விடுதலைப் புலிகளை கொல்கிற வேகத்தில் அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்தவேண்டும். குறுகிய எல்லையில் ஒடுக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் எல்லையை மேலும் ஒடுக்கி சில சதுர மீட்டர்களுக்குள் சுற்றி வளைக்கவேண்டும். பொது மக்கள் கருதி விமானப்படை குண்டுகள் நிறுத்தப்படவேண்டும். அமிர்தசரசு பொற்கோவிலில் இந்திய அரசு இரண்டாம் முறை மேற்கொண்ட உத்திகளை கையாளவேண்டும். மனிதநேய உதவிகளை அனுமதிக்கவேண்டும். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்கள் இலங்கைக்கு ஐ.நா. கடனுதவிகளை நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கொடுக்க சொல்லி அழுத்தம் கொடுக்கவேண்டும்.

P.S.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சமீபத்தில் நடிகர்கள் நடத்திய ஒரு பொதுக்கூட்டத்தை யூ-டுயூப் வீடியோவில் பார்த்தேன். காட்டுமிராண்டித்தனமாக பட்டது எனக்கு. பலர் ”இலங்கைத் தமிழர்களுக்கு” குரல் கொடுக்கிறோம் என்று பொங்கி எழுந்து நகைச்சுவை பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஒரு நடிகர் இலங்கை பிரச்சனையை காற்றில் விட்டுவிட்டார். ஏதோ ”வந்தாரை வாழவைக்கும் தமிழகம்”, “வாழவைக்கவும் தெரியும்”, “ஓடவைக்கவும் தெரியவும்”, “சிலர் தொகை அதிகம் வாங்கும் நடிகர், நான் தொகை குறைவாக வாங்கும் நடிகன், அதனால் நான் ஒருவருக்கும் குறைந்தவனல்ல” என்றெல்லாம் பேசினார். அப்பொழுது ரஜனிகாந்த் போன்ற நடிகர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். இவர் என்னப் பேசுகிறார் என்று வியந்தேன். சற்று முன்தான் அவர் தன் அன்றாட வாழ்க்கையில் வெகு குறைவாகவே சந்திக்கும் வேற்று நாட்டவர்களான இலங்கைத் தமிழர்கள் தங்கள் இனம் என்றும் அதற்க்காக பொங்கி எழ வேண்டும் என்றும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளால் கொதித்து எழுந்தார். ஆனால் அன்றாடம் தன் தொழிலில் சந்திக்க நேரிடும் தன் சக நடிகரை, சொந்த நாட்டினரை இப்படி சம்பந்தமில்லாமல் அவமானப் படுத்துகிறாரே? தொழிலில் சம்பளம் அதிகம் வாங்கும் சக நடிகரைப் பார்த்தே இவ்வளவு காழ்ப்புணர்ச்சியென்றால், இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக அவர் வீட்டுக்கு வெளியில் டெண்ட் அடிக்க நேர்ந்தால் அவ்வளவுதான்.

ஹாங்காங் இலக்கிய வட்டம் அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் ஆறு தமிழறிஞர்களை பற்றி அருமையான உரைகளை பதித்திருக்கிறது. இவர்கள்

1. திரு.வி.க.
2. வ.உ.சி.
3. தேவநேயப் பாவாணர்
4. சி.சு. செல்லப்பா
5. வை.மு. கோதைநாயகி
6. அ.இரா. வெங்கடாசலபதி

வை.மு.கோதைநாயகி பற்றிய உரைக்கான பதிவு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. இந்த தளத்தில் அவரைப் பற்றி எழுதப்பட்ட பதிவு இங்கே.

தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் படித்துப் பாருங்கள்!

சேதுராமன் பாவலர் நாச்சியப்பன், புலவர் கோவேந்தன் ஆகிய இருவரைப் பற்றியும் நாட்டுடமை சீரிஸில் எழுதி இருக்கிறார். இருவரும் எப்படி பாரதிதாசனின் தாக்கத்தால் கவிஞர் ஆனவர்கள் என்றும் அவர்களது கவிதை முயற்சிகள் பற்றியும் அதில் பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன. இன்று முனைவர் இளங்கோவன் என்ற தமிழ் ஆராய்ச்சியாளரின் தளத்தை தற்செயலாக பார்த்தேன். அவர் பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களை பற்றி புத்தகமே எழுதி இருக்கிறார். அந்த புத்தகம் நாச்சியப்பன் பற்றிய பதிவுக்கு ஆதாரமாக பயன்பட்டிருக்கிறது. அவருடைய தளத்தில் பாரதிதாசன் பரம்பரையைப் பற்றியும், புலவர் கோவேந்தன் நடத்திய வானம்பாடி பத்திரிகையைப் பற்றியும் இரு பதிவுகள் எழுதி இருக்கிறார், பாருங்கள்!

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவு இங்கே.

« முந்தைய பக்கம்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers