நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். நான் சொல்வது தமிழ் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா இல்லையா என்று தெரியாது.
பார்ப்பனர்கள் அடுத்தவர் காலில் விழும்போது அபிவாதயே என்று தொடங்கும் சுய அறிமுகத்தை செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஐதீகம் உண்டு. நான் இந்த கோத்ரத்தில் பிறந்தவன், இந்த இந்த ரிஷிகள் என் மூதாதையர்கள், என் தாத்தா இவர், என் அப்பா இவர், எங்கள் குடும்பம் இந்த வேதத்தை பரம்பரை பரம்பரையாக ஓதி வந்திருக்கிறது, என் பெயர் இது என்ற அர்த்தம் வரும் – சமஸ்கிருதத்தில் இருந்தாலும் சுலபமாக புரியும்.
எனக்கும் சொல்லி கொடுத்தார்கள், ஆனால் மறந்துவிட்டது. நான் விஸ்வாமித்ர கோத்ரத்தை சேர்ந்தவன். விஸ்வாமித்ர கோத்ரத்தை சேர்ந்தவர்கள் எந்த எந்த ரிஷிகளை மூதாதையர்கள் என்று சொல்வார்கள் என்று சமீபத்தில்தான் சேதுராமன் எடுத்து சொன்னார். நாங்கள் யஜுர் வேதத்தை ஓதி வந்திருக்கிறோமோம். என் அம்மாவின் அப்பா குடும்பத்தினர் சாம வேதத்தை ஓதி வந்திருக்கிறார்களாம். (எனக்கு தெரிந்த வரை என் உறவினர்கள் யாரும் எந்த வேதமும் தெரிந்தவர்களில்லை.)
ரிக்வேத பாரம்பர்யம் உள்ள குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதர்வண வேத பாரம்பரியம் உள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவர்கள் இன்னும் இருக்கிறார்களா? யாருக்காவது தெரியுமா? இந்த வேதம் இருக்கிறதா? அனேகமாக பார்ப்பனர்களை விட பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்குத்தான் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருக்கிறது. தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்!
ஐயங்கார்கள், குறிப்பாக தென்கலை ஐயங்கார்கள் சமஸ்கிருதத்தை விட தமிழை, தமிழில் உள்ள நூல்களை அதிகமாக ஓதுபவர்கள். அவர்கள் இந்த மாதிரி ஏதாவது வேதம் ஓதும் பாரம்பரியம் உள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்வார்களா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்!
வட நாட்டில் த்விவேதி(இரண்டு வேதம் தெரிந்தவர்), த்ரிவேதி(மூன்று வேதம்), சதுர்வேதி(நான்கு வேதம்) என்று பெயர் வைத்துக் கொள்வது உண்டு. குறைந்த பட்சம் இந்த சதுர்வேதிகள் நான்கு வேதமும் ஓதும் பாரம்பரியம் உள்ளவர்களா?
நான்கு வேதங்களில் அதர்வண வேதம் ஒன்றுதான் கொஞ்சம் விஞ்ஞானம், கொஞ்சம் மருத்துவம் எல்லாம் உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் அதுதான் எல்லாவற்றையும் விட வேகமாக வழக்கொழிந்திருக்கிறது! ஆச்சரியம்!
மே 31, 2009 at 2:28 மு.பகல்
வணக்கம்.
1. காலில் விழும் பண்பு பிராமணர்களுக்கு மட்டும் அல்லவே. பெரியோர்களைக் கண்டால் காலில் விழுந்து வணங்குவது நமது மரபாகத் தானே உள்ளது.
2. தென்கலை ஐயங்கார் தமிழில் வேதம் ஓதுவார்கள் என்ற கருத்தை மேலும் விளக்குங்களேன்.
வேதம் என்றாலே வடமொழியில் தானே இருக்கிறது. தமிழில் வேதம் என்றால் என்ன விளக்குங்களேன்.
அன்புடன்
.கவி.
மே 31, 2009 at 3:29 மு.பகல்
வேதங்கள் மூன்று தான் என்று முதலில் வழங்கி வந்தனர். இதில் ரிக் வேதம் செய்யுள் நடையிலும், யஜுர் வேதம் உரை நடையிலும், சாம வேதம் பாடல் நடையிலும் எழுதப்பட்டு ஓதப் பட்டு வந்தன.
பிறகு மகரிஷிகள் அதர்வணராலும் ஆங்கீரசராலும் அவர்களுடைய சிஷ்யர்களுக்கு அளிக்கப் பட்டது தான் அதர் வண வேதம். குறிப்பாக அதர்வனரின் பெயரைக் கொண்டே வழங்கப் படுவது அதர்வண வேதம்.
மற்ற மூன்று வேதங்களை விடவும் மிகப் பெரியது அதர்வண வேதம். அது 20 காண்டங்களைக் கொண்டது.(ஒவ்வொரு காண்டமும் ஒரு புத்தகம் எனக் கொள்ளலாம்). இதில் மொத்தம் 5987 செய்யுள்கள் உள்ளன.
ஒவ்வொரு காண்டமும் ஒரு வகையான அறிவைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக மருந்துகளும், ஆரோக்கிய வாழ்வும் பற்றி ஒரு புத்தகம் உள்ளது. இதே போல
2. மன அமைதியும் வாழ்வு நெறிகளும்.
3.கடவுளர்களும் அவர்களது சக்திகளும்.
4.பூமித்தாயின் புகழ். (பூமி சுக்தம்)
5.அரசியலும் நிர்வாகமும் (சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம் என்ற புத்தகத்திற்கு இதுவே முன்னோடி)
6. மனோ தத்துவம்.
7.கலியாணம் மற்றும் மனையியல்
8. கட்டிடக்கலை / வாஸ்த்து சாஸ்த்திரம்
9.தொழிலும்தொழில் முறையான ஜாதிப் பிரிவுகளும்.
10. உணவு முறைகள். யார் என்ன உணவு உண்ணலாம் என்ற நெறி முறைகள்.
11. மழை பொழிய வைக்கும் மந்திரங்கள்.
12.நேரம், காலம், தசம அளவுகள்
இது போல இன்னும் பல அறிவு சார்ந்த தலைப்புகளில் இந்த செய்யுள்கள் உள்ளன.
இதில் மொத்தமாகப் பார்த்தால், முன்னே உள்ள மூன்று வேதங்களில் உள்ள ‘கடவுளைத் தேடும்’ மன விசாரம் இல்லை. உலகாதாய (Materilaisam) பருப்பொருள் சார்ந்த அறிவே அதர்வண வேதத்தில் இருப்பது கண்கூடு.
எனவேதான், ஒரு உண்மையான(?) பிராமணன் அதர்வண வேதத்தைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் பிற்காலத்தில் எழுதப் பட்ட மஹாபாரதம், முண்டக உபநிஷத் போன்றவற்றில் வேதம் நான்கு எனக் கூறப்படுகிறது. எனவே நாமும் வேதம் நான்கு என்று ஏற்றுக் கொண்டு விட்டோம்.
ஆனாலும், அதர்வண வேதம் அழிய வில்லை.
தேள்கடிக்கு மந்திரித்துக் கொண்டாலும், வாஸ்து நிபுணரின் ஆலோசனைப் படி உங்கள் பெட் ரூமை மாற்றியமைத்துக் கொண்டாலும், ஒரு ஜோசியர் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற பெண்ணைப் பார்த்துக் கொடுத்தாலும் அங்கே அதர்வண வேதம் உபயோகப் பட்டுள்ளது என்பதை அறியவும்.
ஆதாரம்: Essentials Of Atharva Veedha – By
R.L. Kashyap -Professor of Electrical and Computer Engg, Purdue University, USA.
Published by :
Sri Aurobindo Kapali Sastry Institute of Vedic Culture, Bangalore.
11.
மே 31, 2009 at 3:41 மு.பகல்
தெய்வத்தின் குரலில் “அதர்வண வேதத்தை” பற்றி சொல்லியுள்ளது. தற்காலத்தில் யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கக்கூடும்.
மே 31, 2009 at 3:43 மு.பகல்
உங்கள் பல கேள்விகளுக்கு காஞ்சி பெரியவரின் புஸ்தகம் “தெய்வத்தின் குரல்” படித்துப்பாருங்கள் விடை கிடைக்கலாம்.
மே 31, 2009 at 5:11 மு.பகல்
கவி, அதர்வண வேதம் பற்றிய மறுமொழிக்கு நன்றி!
காலில் விழுந்து வணங்குவது பாப்பனர்களின் கலாசார அடையாளம் என்று நான் எழுதவில்லை. தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். அப்படி வணங்கும்போது அபிவாதயே என்று தொடங்கும் சுய அறிமுகம் செய்து கொள்வது எனக்கு தெரிந்து பார்ப்பனர்களிடம் மட்டுமே உள்ள வழக்கம் என்றுதான் எழுதி இருக்கிறேன். அதுவும் இப்போது அழிந்துகொண்டு வருகிறது. உதாரணமாக எனக்கு இந்த சமஸ்கிருதத்தில் செய்து கொள்ளும் சுய அறிமுகம் தெரியாது.
நான் ஐயங்கார் இல்லை. பொதுவாக வடகலை ஐயங்கார்கள் சமஸ்கிருத நூல்களை, விளக்கங்களை முக்கியமானதாக கருதுவார்கள் என்றும், தென்கலையினர் தமிழில் உள்ள நாலாயிர திவ்ய ப்ரபந்தம், விளக்கங்கள் ஆகியவற்றை முக்கியமானதாக கருதுவார்கள் என்றும் கேள்வி. நம்மாழ்வாரின் பாசுரங்களையோ இல்லை வேறு எதையோ அவர்கள் தமிழ் வேதம் என்று கொண்டாடுவார்களாம். யாராவது ஐயங்கார்கள், இல்லை ஐயங்கார்களை, வைஷ்ணவ சம்பிரதாயங்கள், குரு பரம்பரை பற்றி தெரிந்தவர்கள், இதை படித்தால் விளக்குங்கள்!
வடுவூர் குமார், அதர்வண வேதம் பற்றிய மறுமொழிக்கு நன்றி! வேத பாட சாலைகளில் அதர்வண வேதம் சொல்லிக் கொடுக்கப்படுகிறதா? யாருக்காவது தெரியுமா?
ரங்குடு, விளக்கங்களுக்கு நன்றி! இன்றும் இந்த வேதம் படிக்க கிடைக்கிறது என்பது நல்ல விஷயம். அதர்வண வேதத்திலும் ரிக் வேதம் போன்று தத்துவ விசாரங்களும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரியோ தவறோ தெரியாது.
மே 31, 2009 at 5:40 மு.பகல்
சுவையார்வமான உரையாடல்கள் தகவல்கள் !
உங்களை பிராமணர் என்று சொல்லாமல் பார்பனர் என்று நீங்கள் அழைத்துக் கொள்ளும் உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்
மே 31, 2009 at 5:41 மு.பகல்
திரு RV,
உங்கள் உள்நோக்கம் என்ன என தெரியவில்லை.
நீங்கள் ப்ராமணன் எனும் தன்மையை விடுத்து மேல் நாட்டில் இருக்கிறீர்கள். அபிவாதயே கூட மறந்துவிட்டீர்கள். அப்படி இருக்க வேதம் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்?
விக்கிபிடியாவில் போடவா? அல்லது அதர்வண வேதம் பற்றி பதிவு இடவா?
எது எப்படியோ… விளக்கம் கீழே…
முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது.. ப்ராமணன் மட்டுமே வேதம் படிப்பவன் என எண்ணுவது. ப்ராமணன் வேதத்தை பாதுகாத்து ஓதுபவன் அவ்வளவே. அனைத்து சமூகக்காரர்களும் வேதத்தை பயன்படுத்துவார்கள்.
உதாரணம் உங்கள் கோத்திர ரிஷி விஸ்வாமித்திரரும், வேதத்தை தொகுத்த வியாசரும் பிறப்பால் ப்ராமணர்கள் இல்லை.
அதர்வண வேதம் என்பது ஆன்மீக உள்நோக்கத்திற்காக பயன்படுத்தபடவில்லை என்பதும் அதை பாதுகாப்பவர்கள் இல்லை என கூறுவது தவறு.
அதர்வண வேதம் கடினமான செயல்களை கொண்டது எனலாம். விஞ்ஞானம் நிறைந்தது. மேலும் மந்திர தந்திர செயல்கள் கொண்டது. அதனால் அனைவரிடமும் இதை கொண்டு சேர்த்தால் தவறான நபர்மூலம் கேடு விளையும் என்பதனால் இதை பிறருக்கு கற்றுகொடுக்க தயங்கினார்கள்.
நாளடைவில் வழகொழிந்து போனது. திரு வடுவூர் குமார் சொன்னது போல அவதார புருஷர் காஞ்சி மஹாபெரியவர் இதை மீண்டும் உயிர்ப்பித்தார்.
தற்சமயம் வேதபாட சாலையில் அதர்வணம் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. வேதகாலத்தில் தாங்கள் எதில் விற்பன்னராக இருக்கிறார்களோ அதை அவர்கள் பாரம்பரியத்திற்கு சூட்டிக்கொண்டார்கள்.
(உ.ம் – தற்காலத்தில் ஜாவா ப்ரொபஷனல், டாட் நெட் ப்ரொபஷனல் என சொல்லிக்கொள்ளுவதை போல)
காஷ்மீர், கேரளா மற்றும் மஹாராஷ்ட்ராவில் அதர்வண வேதம் இன்னும் வழக்கத்தில் உள்ளது. அதர்வண வேதம் பிற மதங்கள் தோன்ற காரணமாக இருந்ததால் நாளடைவில் மக்கள் இதை மறந்தார்கள் எனலாம்.
உங்களுக்கு எனது கேள்வி…
காகம் கூட தனது செயல்களை கற்றுக்கொள்ளாத குயில் குஞ்சை சேர்த்துக்கொள்ளுவதில்லை. அது போல ப்ராமணன் என சொல்லி கொள்ள பெருமையாக கருதும் நீங்கள் ஏன் அந்த பாரம்பரித்திற்கு உதவாத குயிலாக இருக்கிறீர்கள்?
மே 31, 2009 at 7:05 மு.பகல்
ஸ்வாமி ஓம்கார் அவர்களே,
அதர்வண வேதம் பற்றிய மறுமொழிக்கு, விளக்கங்களுக்கு நன்றி!
// உங்கள் உள்நோக்கம் என்ன என தெரியவில்லை. //
இதில் என்ன உள்நோக்கம் எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. எழுதி இருப்பதுதான் நோக்கம். உங்களுக்கு தெளிவாக புரியவில்லை என்றால் இன்னும் ஒரு முறை சொல்கிறேன் – அதர்வண வேதம் இன்னும் “உயிரோடு” இருக்கிறதா? அதை ஓதும் பாரம்பரியம் இருப்பதாக தெரியவில்லையே?
// நீங்கள் ப்ராமணன் எனும் தன்மையை விடுத்து மேல் நாட்டில் இருக்கிறீர்கள். அபிவாதயே கூட மறந்துவிட்டீர்கள். அப்படி இருக்க வேதம் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்? //
பிராமணன் எனும் தன்மை உள்ளவர்கள் மட்டுமே வேதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் போல. நான் அப்படி நினைக்கவில்லை. எனக்கு வேதங்கள் எல்லாம் சரித்திர முக்கியத்துவம் உள்ளவை. ஆன்மீக முக்கியத்துவம் இல்லாதவை. அப்புறம் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டே போகலாம். உதாரணமாக நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
// முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது.. ப்ராமணன் மட்டுமே வேதம் படிப்பவன் என எண்ணுவது. ப்ராமணன் வேதத்தை பாதுகாத்து ஓதுபவன் அவ்வளவே. அனைத்து சமூகக்காரர்களும் வேதத்தை பயன்படுத்துவார்கள். //
வேதத்தை யாரும் பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. நீங்கள் விஷயம் தெரிந்தவர் போல இருக்கிறது. எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று விளக்குங்களேன்!
// உதாரணம் உங்கள் கோத்திர ரிஷி விஸ்வாமித்திரரும், வேதத்தை தொகுத்த வியாசரும் பிறப்பால் ப்ராமணர்கள் இல்லை. //
வியாசர் பராசரரி மகன். அவரை எப்படி பிராமணர் இல்லை என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நம் பாரம்பர்யம் அப்பா வழியில் வருவது (நியோகம் தவிர) அதேவியாசர் எழுதிய மகாபாரதத்தில்தான் சிசுபாலன் கிருஷ்ணன் க்ஷத்ரியன் இல்லை என்று சொல்லி அவமானப்படுத்துகிறான். ஒவ்வொரு ஜாபாலிக்கும், விச்வாமித்ரருக்கும், பல கர்ணன், ஏகலைவனை பார்க்கலாம். நந்தானாரும், திருப்பாணாழ்வாரும், சோகாமேளரும், ரவிதாசும் என்ன பிறப்பை சுலபமாக மறந்துவிட முடிந்ததா?
// அதர்வண வேதம் என்பது ஆன்மீக உள்நோக்கத்திற்காக பயன்படுத்தபடவில்லை என்பதும் அதை பாதுகாப்பவர்கள் இல்லை என கூறுவது தவறு. //
இது ஒரு clarification மட்டுமே: அப்படி சொல்லி இருப்பவர் திரு ரங்குடு. நான் அவருக்கு அளித்த மறுமொழியிலும் அதர்வண வேதத்திலும் ரிக்வேதம் போல தத்துவ விசாரங்கள் உண்டாம் என்று எழுதி இருக்கிறேன்.
// அதர்வண வேதம் கடினமான செயல்களை கொண்டது எனலாம். விஞ்ஞானம் நிறைந்தது. மேலும் மந்திர தந்திர செயல்கள் கொண்டது. அதனால் அனைவரிடமும் இதை கொண்டு சேர்த்தால் தவறான நபர்மூலம் கேடு விளையும் என்பதனால் இதை பிறருக்கு கற்றுகொடுக்க தயங்கினார்கள்.
நாளடைவில் வழகொழிந்து போனது. திரு வடுவூர் குமார் சொன்னது போல அவதார புருஷர் காஞ்சி மஹாபெரியவர் இதை மீண்டும் உயிர்ப்பித்தார்.
தற்சமயம் வேதபாட சாலையில் அதர்வணம் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. வேதகாலத்தில் தாங்கள் எதில் விற்பன்னராக இருக்கிறார்களோ அதை அவர்கள் பாரம்பரியத்திற்கு சூட்டிக்கொண்டார்கள்.
(உ.ம் – தற்காலத்தில் ஜாவா ப்ரொபஷனல், டாட் நெட் ப்ரொபஷனல் என சொல்லிக்கொள்ளுவதை போல)
காஷ்மீர், கேரளா மற்றும் மஹாராஷ்ட்ராவில் அதர்வண வேதம் இன்னும் வழக்கத்தில் உள்ளது. அதர்வண வேதம் பிற மதங்கள் தோன்ற காரணமாக இருந்ததால் நாளடைவில் மக்கள் இதை மறந்தார்கள் எனலாம். //
விளக்கங்களுக்கு மிக்க நன்றி!
// உங்களுக்கு எனது கேள்வி…
காகம் கூட தனது செயல்களை கற்றுக்கொள்ளாத குயில் குஞ்சை சேர்த்துக்கொள்ளுவதில்லை. அது போல ப்ராமணன் என சொல்லி கொள்ள பெருமையாக கருதும் நீங்கள் ஏன் அந்த பாரம்பரித்திற்கு உதவாத குயிலாக இருக்கிறீர்கள்? //
உங்கள் புரிதல் தவறானது. பிராமண ஜாதியில் பிறந்தவன் என்று சொல்லி கொள்வதில் எனக்கு ஒரு பெருமையும் இல்லை. அப்படி நான் எழுதவும் இல்லை. எனக்கு அப்படி சொல்லிக் கொள்வதில் ஒரு சிறுமையும் கூட இல்லை. நான் சென்னையில் பிறந்தவன். அப்படி சொல்லி கொள்வதிலும் எனக்கு எந்த பெருமையோ சிறுமையோ இல்லை. அதைப் போலத்தான் நான் பிராமண ஜாதியில் பிறந்ததும்.
மே 31, 2009 at 6:27 மு.பகல்
கோவி. கண்ணன்,
மறுமொழிக்கு நன்றி!
நான் பார்ப்பனர், பிராமணர் என்ற இரு வார்த்தைகளையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். இரண்டுக்கும் நடுவில் என்ன வித்தியாசம் என்று எனக்கு தெரியவில்லை. இங்கே பார்ப்பனர் என்று உபயோகித்து தற்செயலே!
மே 31, 2009 at 2:22 பிற்பகல்
//இங்கே பார்ப்பனர் என்று உபயோகித்து தற்செயலே!// எனக்கென்னவோ சில மாங்கா மடயர்களின் பதிவுகளைப் தொடர்ந்து படிப்பதாலே இப்படி சொற் பிரயோகம் ‘தற்செயலாக’ நடந்துள்ளது என்று நினைக்கிறேன்.
மே 31, 2009 at 7:22 மு.பகல்
//பொதுவாக வடகலை ஐயங்கார்கள் சமஸ்கிருத நூல்களை, விளக்கங்களை முக்கியமானதாக கருதுவார்கள் என்றும், தென்கலையினர் தமிழில் உள்ள நாலாயிர திவ்ய ப்ரபந்தம், விளக்கங்கள் ஆகியவற்றை முக்கியமானதாக கருதுவார்கள் என்றும் கேள்வி.//
இரு பிரிவினருமே தமிழ்ப் பாசுரங்களை கொண்டாடுபவர்கள் தான். அதென்னவோ, தென்கலை, தென்னாசார்ய சம்ப்ரதாயம் என்றாலே தமிழை உயர்த்திப் பிடிப்பவர்கள் என்கிற மாதிரி ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நம்மாழ்வார் என்று கொண்டாடப் படும் குருகூர்ச் சடகோபன், நான்கு பிரபந்தங்களை அருளியிருக்கிறார். அதில் திருவாய்மொழி, சாம வேதத்தின் சாரமாகக் கொண்டாடப் படுகிறது. பெரிய திருவந்தாதி என்ற பிரபந்தம் 87 பாசுரங்களை மட்டுமே கொண்டது, அதர்வண வேத சாரமாகக் கருதப் படுகிறது. மற்ற இரண்டும் ரிக், யசுர் வேத சாரமாக உள்ளது. இங்கே, வேதக் கருத்துக்களை உள்ளடக்கிய தமிழ்ப் பாசுரங்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்.மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினால் கூகுளார் தயவில் இணையத்திலேயே காணக் கிடைக்கும்.
அப்புறம், பார்ப்பான், பார்ப்பனன், அந்தணன், வேதியன்,பிராம்மணன் எல்லாம் ஒரே பொருள் குறிப்பவையே.
மே 31, 2009 at 5:39 பிற்பகல்
அபிவாதயே கற்றது மறந்து விட்டது என்கிறீர்கள், ஆனால், வேதங்களைப் பற்றிய கேள்விகளை பதிவில் கேட்டிருக்கிறீர்கள். அதனால் தான் உங்களின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. அதாவது: கிறித்தவ / இஸ்லாமிய முறைமைகளில், ஏன், இன்றைய பல்கலைக் கழகங்களிலும் கூட, இப்படி அறிமுகம் செய்து கொண்ட பின், இப்படியாகப்பட்ட கேள்வி கேட்டால், உங்கள் கேள்வியின் நோக்கம் எப்படி அறியப்படும்? For example, I googled this: http://www.google.com/search?q=why+not+atharvana+veda – இப்படி எளிதாய் அறியக் கூடிய இந்நாளில், உங்கள் அறிமுகம்/கேள்விமுறை தவறான எண்ணத்தைத் தரக்கூடும்.
அதர்வண வேதம் பற்றிய இதே கேள்விகளை என் சிறு வயதில், என் தந்தையிடம் கேட்ட போது, அவர் சொன்னது (இங்கே பல பதிவர்கள் இவற்றைச் சொல்லி விட்டார்கள்): அதர்வண வேதம் வாஸ்து, ஆயுர்வேதம் போன்ற வழிமுறைகள் கொண்டது; காலத்தால் பிந்தையது; பிறரை அழிக்கக் கூடிய “மந்திரங்கள்” (Today, you can Google atharva veda spells) கொண்டதால், வழக்கத்தில் இருந்து அழிந்திருக்கலாம் என்று சொன்னார்.
வ.குமார், தெய்வத்தின் குரல் படித்ததில்லை, இதற்காகவேனும் படிக்க வேண்டும். மேலதிகத் தகவல் தந்த ரங்குடுவுக்கு குறிப்பான நன்றி. RV, இந்த தகவல்களை இன்று பலரறியக் கேள்வி கேட்டமைக்கு நன்றி.
இதற்கு மேல், என் குலம் கோத்திரம், வறிய இளமை, அரசியல் நிலைப்பாடு மற்றும் பல சொன்னால் தான் நானும் பிரபலமாவேன் என்றால் எனக்குத் தேவையில்லை!
ஜூன் 1, 2009 at 6:21 மு.பகல்
கெக்கேபிக்குணி அவர்களே, அதர்வண வேதம் பற்றிய மறுமொழிக்கு நன்றி!
அபிவாதயே ஞாபகம் இல்லாவிட்டால் வேதம் பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்று பொருள் வருமாறு எழுதி இருக்கிறீர்கள். அப்படி நினைக்க மாட்டேர்கள் என்று நம்புகிறேன்.
அதர்வண வேதம் பற்றி கூகிளில் தேடினாலே கிடைக்குமே என்று எழுதி இருந்தீர்கள். இன்று வேதம் தெரிந்தவர்கள், ஓதுபவர்கள் வெகு சிலரே என்றாலும் வேதம் ஓதும் பாரம்பரியம் உள்ள குடும்பத்தினர் ஓரளவு இருக்கிறார்கள். என் முப்பாட்டன் காலத்தில் என் குடும்பத்தினர் ரிக்வேதம் கற்றனர், யஜுர்வேதம் கற்றனர் என்று சொல்லக்கூடிய குடும்பங்களை பார்க்கலாம். ஆனால் அதர்வண வேதம் கற்றனர் என்று சொல்லக்கூடிய குடும்பங்களை நான் பார்த்ததில்லை. அப்படி ஒரு பாரம்பரியம் இருந்ததா, சதுர்வேதி என்று சொல்லப்படுபவர்களுக்கு அப்படி ஒரு பாரம்பரியம் உண்டா, வேத பாடசாலைகளில் இது இன்னும் கரறுத்தறப்படுகிறதா என்று கேட்டிருந்தேன். என்னுடைய சந்தேகம் சரியாக வெளிப்படவில்லையோ என்னமோ. இதைப் பற்றி கூகிளில் தேட தெரியவில்லை, உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
ஓரளவு ப்ராக்டிகல் விஷயங்கள் உள்ள வேதம் சீக்கிரமே வழக்கொழிந்துவிட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வேளை இதில் உள்ள எதுவும் வேலைக்காகவில்லையோ என்னவோ.
// இதற்கு மேல், என் குலம் கோத்திரம், வறிய இளமை, அரசியல் நிலைப்பாடு மற்றும் பல சொன்னால் தான் நானும் பிரபலமாவேன் என்றால் எனக்குத் தேவையில்லை! //
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. நான் இதை எல்லாம் கேட்கவில்லையே?
ஜூன் 1, 2009 at 7:39 மு.பகல்
பார்ப்பனர் என்ற சொல்லும் பிராம்மணர் என்ற சொல்லும் ஒரே பொருள்தான் தருகிறது என்று சொல்லுகிறார்கள்.
பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள் தென்னாட்டு விஜயத்தின்போது திரு மு.கருணாநிதி தலைமையிலான திமுக “நேரு ‘பண்டிதரே’ திரும்பிப்போ” என்று போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். “பண்டித” என்ற சொல் ஒன்று தான் ஆனால் தொனியால் பொருள் வேறு வேறு.
அதைப்போலத்தான் திகவினரும் திமுகவினரும் பாதசேவகர்களும் ‘பார்ப்பனர்’ என்ற சொல்லை இழிவாகப் பயன்படுத்துகின்றனர் என்பது உண்மை.
உங்களை நீங்கள் “பார்ப்பனன்” என்று சொல்லிக்கொள்ளுவதும் அதனைக் கோவிகண்ணனாரும் அவருடைய சீடகோடிகளும் பாராட்டுவதும் இயல்பு அல்ல.
ஜூன் 1, 2009 at 9:59 மு.பகல்
“ஓரளவு ப்ராக்டிகல் விஷயங்கள் உள்ள வேதம் சீக்கிரமே வழக்கொழிந்துவிட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”
ஆர்வி, நீங்கள் சொல்வது விளக்கமில்லை. வேதங்கள் ஓதுவது பிராக்டிகல் பெனிஃபிட் – அதாவது வேலை, பனம், அந்தஸ்து, ஆரோக்யம் முதலியவற்றை இலக்காக கொண்டு ஓதப் படுவது அல்ல. வேதங்கள் ஓதுவதற்கு இரு காரணங்கள் – ஆன்மிகம், மரபு. தற்காலத்தில் இரு காரனங்களும் பிராமணர்களை ஊக்குவிப்பதல்லை ஆதலால் வேதபாராயணங்களும் மிக குறைந்து விட்டது.தற்காலத்தில் பிராமணர்களை ஊக்குவிப்பது நீங்கள் சொல்லும் பிரக்டிகல் விஷயங்கள் தான்.
அதர்வ வேதத்தின் “வழக்கொவிதலின்” வேகம் மற்ற வேதங்களின் “வழக்கொழிதலின்” வேகத்தை விட அதிகமில்லை. ஆரம்பத்திலிருந்தே, மற்ற வேத சாகைகளை விட அதர்வேத சாகை குறைவுதான். அகில இந்திய பிராமணர்களில் அதர்வவேத சாகை 2% மேல் தேறாது. சாகை என்பது ஒரு வேதத்தை ஆரம்பமாக கொண்ட குடும்பங்கள்.
மொழி இயல் அடிப்படைடியில் அதர்வ வேதம் சுவாரசியமனது. மொழி இயல் அடிப்படைடியில் வேத சமஸ்கிருதம் – அதாவது பாணினிக்கு முற்பட்டது – 5 தளங்களை உட்பட்டதாகு கருதப் படுகிறது. அதில் ரிக்வேதமும், அதர்வ வேதத்தின் சில பகுதிகளும் மிகப் பழமையானதாகும். அதாவது அதர்வ வேதத்தின் கோர்வை – Redaction – வேத காலத்தின் பிற்பகுதியில் செய்யப் பட்டாலும் , அதன் சில பகுதிகள் ஆரம்ப காலத்திலிருந்து வருபவை.
வடகலை-தென்கலை ஒப்பீடுக்கு
http://members.tripod.com/~sriramanujar/tVsv.html
கடைசியாக, ஏன் அதர்வண வேதம் என்கிறீர்கள் ? எனக்கு தெரிந்து அதர்வ வேதம் என்றுதான். ண எப்படி கூடியது?
விஜயராகவன்
ஜூன் 1, 2009 at 4:58 பிற்பகல்
முரளி, கோவி கண்ணன், எஸ். கிருஷ்ணமூர்த்தி,
பார்ப்பனர், பிராமணர், போன்ற வார்த்தைகளுக்கு நடுவே பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. திரு கிருஷ்ணமூர்த்தியும் (எஸ். கிருஷ்ணமூர்த்தி இல்லை வேறு ஒரு கிருஷ்ணமூர்த்தி) அப்படித்தான் சொல்கிறார்.
ஒரு வேளை தமிழ் நாட்டிலிருந்து வெளியேறி பல வருஷங்கள் ஆகிவிட்டதால் எனக்கு இன்றைய நிலவரம் சரியாக புரியாமல் இருக்கலாம். எஸ். கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல் பார்ப்பனர் என்ற வார்த்தையை திராவிட கழகத்தினர் இழிவாக பயன்படுத்துஅது உண்மைதான். அவர்கள் பிராமணர் என்ற வார்த்தையையும் அப்படியேதான் பயன்படுத்துகிறார்கள், அதனால் இரண்டுக்கும் நடுவில் எனக்க வித்தியாசம் தெரியவில்லை. இன்றைய தமிழகத்தில் பார்ப்பனர் என்ற வார்த்தைக்கு என்ன pejorative அர்த்தம் இருக்கிறது என்று தெரிந்தவர்கள் – முரளி, கோவி கண்ணன், எஸ். கிருஷ்ணமூர்த்தி, வேறு யாராவது – விளக்குங்களேன்!
எஸ். கிருஷ்ணமூர்த்தி, பார்ப்பனர் என்ற வார்த்தை உங்களை புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். உங்களை புண்படுத்தும் நோக்கம் இல்லை. ஆனால் வேறு விவரங்கள் தெரியும் வரையில் உங்கள் ஒருவருக்காக மட்டும் வார்த்தை உபயோகத்தை மாற்றி கொள்வதாக இல்லை. ஒரு நாலைந்து பேராவது அப்படி சொன்னால் கட்டாயம் மாற்றி கொள்கிறேன். எனக்கு தெரிந்து என்னை விட பல மடங்கு பிரபல் பதிவர் டோண்டு ராகவன் அவர்களும் – தான் ஒரு ஐயங்கார் என்று “பெருமையுடன்” சொல்லிக் கொள்பவர் – பார்ப்பனர் என்ற வார்த்தையை தன பதிவுகளில் பயன்படுத்துகிறார்.
விஜயராகவன், உங்கள் விளக்கங்களுக்கு நன்றி!
முதலில் இந்த அதர்வ-அதர்வண வேதம் பற்றி. நான் படித்த காலங்களில் அதர்வண வேதம் என்றுதான் பள்ளி புத்தகங்களில் இருந்தது. அது தவறா, இல்லை இரண்டு பெயர்களும் ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்தனவா என்று தெரியவில்லையே?
வேதம் ஓதுவது ப்ராக்டிகல் விஷயங்களுக்காக அல்ல என்று எழுதி இருந்தீர்கள். ஆனால் ஜுரத்துக்கு குணம் தரும் வைத்தியம் இதுதான் என்று அதர்வ வேதத்தில் எழுதி இருந்தால், அது ஜுரத்தை உண்மையாக குணமும் படுத்தினால் , அது அவ்வளவு சீக்கிரம் மறைந்துவிடாது என்று எனக்கு தோன்றுகிறது. யஜுர் வேதம் யாகங்களை, மத சடங்குகளை செய்யும் முறைகளை விளக்குவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரியோ தவறோ தெரியாது. ஆனால் மத சடங்குகளை எப்படி செய்வது என்று விவரிக்கும் குறிப்புகள் வழக்கொழியாத போது – யாகங்கள் எல்லாம் மிக அபூர்வமாகவே நடக்கும்போது – மருத்துவம் பற்றிய குறிப்புகள் வழக்கொழிந்து விட்டது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
அதர்வ வேத சாகை 2% தான் என்று சொல்லி இருந்தீர்கள். ஏன் இப்படி என்று தெரிந்தால் அதையும் சொல்லுங்களேன்!
வடகலை தென்கலை பற்றிய சுட்டிகளுக்கு நன்றி! (சில விஷயங்கள் அங்கே புரியாவிட்டாலும் கூட)
என் மறுமொழிகளை படித்து பார்த்தபோது ஸ்வாமி ஓம்கார், கெக்கேபிக்குணி ஆகியோர் அளித்த விளக்கங்கள் மிக உபயோகமாக இருந்தன என்பது சரியாக வெளிப்படவில்லை. அவர்களுக்கும், கிருஷ்ணமூர்த்த், ரங்குடு , வடுவூர் குமார் ஆகியவர்களுக்கும் நன்றி!
ஜூன் 2, 2009 at 12:01 மு.பகல்
//அபிவாதயே ஞாபகம் இல்லாவிட்டால் வேதம் பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்று பொருள் வருமாறு எழுதி இருக்கிறீர்கள். அப்படி நினைக்க மாட்டேர்கள் என்று நம்புகிறேன்.// நல்லா இருக்குங்க உங்க ஜோக். அபிவாதயே உங்களுக்கு நினைவு இல்லாததுக்கும், வேதம் பற்றிய கேள்விக்கும் என்ன தொடர்புன்னு தான் கேட்டேன்.
ஒரே பதிவில் இரண்டையும் நீங்கள் சொன்னதனால் நானும் என் குலம் கோத்திரம் சொல்லணுமா என்றும் கேட்டேன்.
//ஓரளவு ப்ராக்டிகல் விஷயங்கள் உள்ள வேதம் சீக்கிரமே வழக்கொழிந்துவிட்டது // நான் சொன்னது: “பிறரை அழிக்கக் கூடிய “மந்திரங்கள்” (Today, you can Google atharva veda spells) கொண்டதால், வழக்கத்தில் இருந்து அழிந்திருக்கலாம் ” Spells ப்ராக்டிகல் விஷயங்கள் இல்லையே! ஆயுர்வேதம், வாஸ்து எல்லாம் completely வழக்கொழிந்தா மாதிரி தெரியவில்லை.
ஜூன் 2, 2009 at 12:20 மு.பகல்
கெக்கேபிக்குணி,
// அபிவாதயே உங்களுக்கு நினைவு இல்லாததுக்கும், வேதம் பற்றிய கேள்விக்கும் என்ன தொடர்புன்னு தான் கேட்டேன்.
ஒரே பதிவில் இரண்டையும் நீங்கள் சொன்னதனால் நானும் என் குலம் கோத்திரம் சொல்லணுமா என்றும் கேட்டேன். //
எனக்கு அபிவாதயே மூலமாகத்தான் சாகைகள் இருப்பது தெரியவந்தது. அதன் மூலம்தான் சில பல பார்ப்பன உறவினர்கள், நண்பர்களின் சாகைகள் தெரிய வந்தது. அதர்வண வேத சாகைக்காரர்கள் யாருமே இல்லையே என்று தோன்றியது. அதுதான் தொடர்பு. மற்றபடி நீங்கள் குலம் கோத்திரம் எல்லாம் சொல்லணும் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஏன் நினைக்கிறீர்கள்? யார் கேட்டது?
அடுத்தவர்களை அழிக்கும் மந்திரங்கள் எல்லாம் ப்ராக்டிகல் விஷயங்கள் இல்லைதான். யாகங்கள் பிற்காலத்தில் எவ்வளவு ப்ராக்டிகளோ அந்த ரேஞ்ச்தான் இவையும். ஆனால் இதில் மருத்துவம், விஞ்ஞானம் என்று சில ப்ராக்டிகல் விஷயங்களாவது இருக்கின்றன. யாகங்கள் எப்படி நடத்துவது என்ற வேதம் வழக்கொழிவதற்கு முன்பே இது வழக்கொழிந்ததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
திரு. விஜயராகவன் சொன்னது மாதிரி ஆரம்பத்திலேயே இந்த சாகைக்காரர்கள் குறைவாக இருந்திருக்கிரார்களோ, அதனால்தான் சுலபமாக வழக்கொழிந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. மிச்ச சாகைக்காரர்கள் எல்லாம் என்ன சதவிகிதம் என்று யாருக்காவது தெரியுமா?
ஜூன் 2, 2009 at 12:26 மு.பகல்
“ஆனால் ஜுரத்துக்கு குணம் தரும் வைத்தியம் இதுதான் என்று அதர்வ வேதத்தில் எழுதி இருந்தால், அது ஜுரத்தை உண்மையாக குணமும் படுத்தினால் , அது அவ்வளவு சீக்கிரம் மறைந்துவிடாது என்று எனக்கு தோன்றுகிறது.”
சரி, கொக்குமேல் வெண்ணையை வைத்து பிடிக்கும் கதையாக உள்ளது. அதனாலேயே பாப்யூலாரிடி குறைந்திருக்கலாம். அது ஜோக்கு. பிராக்டிகல் விஷயங்களுக்குதான் 64 கலைகள் என வந்தனவே. வேதங்களுக்கு த்ரயீ என்ர பெயரும் உண்டு. த்ரயீ-மூவர் முதல் மூன்று வேதங்களைதான் கண்டுகொள்கிறது. அதனால் ஓரளவு அதர்வ வேதத்திற்கு ஸ்டேடஸ் இல்லை போல இருக்கு. மற்ற வேதங்கள் ஸ்ரௌத சடங்குகளில் உபயோகப் படுத்த படுகின்ரன. அதர்வ மந்திரங்கள் க்ர்ஹ்ய-ராஜ பட்டாபிஷேகம் போன்ற சடங்குகளில் பயன்படுத்த படுகின்றன.
அதர்வ வேதத்தில் தான் இரும்பைப் பற்றி முதல் தகவல் கிடைக்கிறது. அதனால் சில ஆய்வாளர்கள் அதன் காலம் 3200 முன்பு என்கிறனர், ஏனெனில் அப்போதுதான் இந்தியாவில் முதலில் இரும்பு செய்யப்பட்டு அறிமுகமானது.
ஜூன் 9, 2009 at 6:21 மு.பகல்
விஜயராகவன்,
அதர்வ வேதம் பற்றிய மேல் விவரங்களுக்கு நன்றி!
பெப்ரவரி 26, 2010 at 4:09 பிற்பகல்
அன்பரே,
எனக்கு உம்மிடமிருந்து உதவி தேவைப்படுகிறது செய்ய மனமிருந்து முடியுமாயின் எனது மின்அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி. வணக்கம்.
மார்ச் 1, 2010 at 7:54 மு.பகல்
பார்த்திபராசன், என்ன வேண்டும்?
செப்டம்பர் 17, 2010 at 2:49 பிற்பகல்
நான்குவேதங்களும் தமிழ் மொழியில் எனக்கு வேண்டும். உதவ முடியுமா?
செப்டம்பர் 17, 2010 at 3:31 பிற்பகல்
வாசகர்கள் யாருக்காவது பார்த்திபராசன் கேட்பது போல வேதங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு சுட்டிகள், புத்தகங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.
April 11, 2010 at 10:15 மு.பகல்
பார்ப்பனர், பிராமணர், போன்ற வார்த்தைகளுக்கு நடுவே பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்
You are an Idiot. It is telling there is no difference between Bisebele bath and sambar rice. The word parpan is used by a kanada sori nai EVR to spread his mother tongue in Tamil. The difference between bise bele bath and sambar is the same difference between biramanal and parpaan.
April 13, 2010 at 2:07 பிற்பகல்
சமீபத்தில் விஜய் தொ.கா வர்மக் கலை பற்றி ஒரு மக் கலை நிபுணர் பேசினார். தான் இதை கேரளாவை சேர்ந்த ஒரு அந்தணரிடம்( அந்தணர் என்று தான் ஞாபகம் எனக்கு) கற்ற தாகவும் அவரும் குறிப்பிட்ட சில விஷயங்களை தவிர்த்து விட்டார் ( துஷ் பிரயோகம் ஆபத்தாக முடியும் என்பதால்) என்றும் அதனால் இப்போது அது வழக்கில் வேறு எங்கு இருக்கிறது என்று கூட தெரியவில்லை என்று கூறினார்.
அதர்வண அல்லது அதர்வ வேதம் பற்றி என் தந்தை குறிப்பிட்டதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
ஆனால் இங்கே சொன்னால் யாரவது உறுதி செய்யவோ மறுக்கவோ கூடும். அதை வைத்து கொஞ்சம் தெளிவு கிடைக்குமா பார்க்கலாம்.
//swami omkar-அதர்வண வேதம் பிற மதங்கள் தோன்ற காரணமாக இருந்ததால் நாளடைவில் மக்கள் இதை மறந்தார்கள் எனலாம்//
இந்த வேதம் இஸ்லாமிய படை எடுப்பில் அவர்களால் கை கொள்ளப் பட்டது(வேதத்தை முதலில் பெர்சிய மொழியில் மொழி பெயர்த்தவர்கள் அவர்களே என்று விக்கி சொல்லுகிறது) இஸ்லாமிய வைத்திய முறைகள், ஓதும் வழக்கங்கள், அவர்களின் ஜோசியம் போன்றவை அதர்வ வேத வழக்கு.
April 13, 2010 at 5:32 பிற்பகல்
விருட்சம், அதர்வ வேதம் இஸ்லாமிய ஓதும் வழக்கங்களுக்கு அடிப்படை என்று நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. அப்படி இருக்காது என்றுதான் தோன்றுகிறது.
ராமதுரை, பார்ப்பனர்-பிராமணர் என்பவை என் கண்ணில் சமமான வார்த்தைகளே! உங்கள் கருத்து உங்களுக்கு என்பதோடு விட்டுவிடுகிறேன்.
April 13, 2010 at 4:04 பிற்பகல்
வியாசர் பராசர முனியின் மகன் தான். அவரது தாய் மீனவ பெண் சத்யவதி
April 14, 2010 at 9:52 பிற்பகல்
(தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி 1978 – தொகுப்பாசிரியர் ரா.கணபதி வானதி பதிப்பகம் சென்னை)
அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார். அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம். அதிலே பல விதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும் சத்துருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. ப்ரோஸ் பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்தப் பிரயோஜனம் உண்டு. ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அனேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன. மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அனேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.
ரொம்ப உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன. லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்திரத்தையெல்லாம் கொண்டாடுகிற ப்ருத்வீ ஸூக்தம் இந்த வேதத்தில்தான் வருகிறது.
யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்திற்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை. இதன் சம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய் தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும், பிரசித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள் பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம் என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
முமுக்ஷுவானவன் (ஞான ஸாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்ற வசனம் இருக்கின்றது. அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.
பிற்காலத்தில் அதர்வ அத்யயனம் விட்டுப் போனாலும், நீண்ட காலம் அது வழக்கில் இருந்திருக்கிறது என்பது கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. திண்டிவனத்திற்குப் பக்கத்தில் பேரணிக்குக் கிட்டே எண்ணாயிரம் என்ற ஊரிலும், காஞ்சீபுரத்திற்குப் பக்கத்திலுள்ள வாலாஜாபாத் சமீபத்திலேயும் கிடைத்திருக்கிற கல்வெட்டுக்களில், ஆங்காங்கே இருந்த பெரிய வித்தியாசாலைகளைப் பற்றித் தகவல்கள் இருக்கின்றன. இவற்றைப் பார்த்தால் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்திலும் கூடத் தமிழ் தேசத்தில் அதர்வ வேத அத்யயனம் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது.
வடக்கே ஒரிசாவில் இருக்கும் பிராமணர்களில் பதினெட்டுப் பிரிவுகள் உள்ளன. அவர்களில் ஆதர்வணிகர் என்றே ஒரு பிரிவுக்குப் பெயர். அதர்வ வேதிகள் என்பதே இதற்கு அர்த்தம். இப்போதும் குஜராத், சௌராஷ்டிரம், கோசலம் முதலான தேசங்களில் ரொம்பவும் அபூர்வமாக அதர்வ வேதிகள் இருக்கிறார்கள்.
(ஸ்ரீ பெரியவர்கள் மேற்கொண்ட முயற்சிகளால் அதர்வ வேத அத்யயனம் மீண்டும் பொலிவு பெற வாய்ப்புள்ளது. தமிழக வித்தியார்த்திகளும் குஜராத்தில் உள்ள ஸினோருக்குச் சென்று அதர்வ வேதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.)
April 15, 2010 at 9:28 பிற்பகல்
ஸ்ரீனிவாஸ், இந்த விவரங்களை எல்லாம் சேதுராமன் அனுப்பி அதையும் ஒரு பதிவாக போட்டிருக்கிறோம். http://koottanchoru.wordpress.com/2009/06/03/அதர்வண-வேதம்-பற்றி-மறைந்/
காஞ்சி மடம் பற்றிய பதிவுகள் எல்லாம் – நீங்கள் எழுதி இருப்பது உட்பட – இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. http://koottanchoru.wordpress.com/மதிப்பீடுகள்/காஞ்சி-சங்கர-மடம்/
நவம்பர் 20, 2010 at 3:12 பிற்பகல்
ப்ராமணர்கள் பணம் சம்பாதிப்பதற்காக வழிதவறி கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கலிகாலம்.
நவம்பர் 29, 2010 at 10:42 பிற்பகல்
சுகுமார், // ப்ராமணர்கள் பணம் சம்பாதிப்பதற்காக வழிதவறி கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. // பணம் சம்பாதிப்பது வழி தவறுவது என்று நான் கருதவில்லை.
பெப்ரவரி 21, 2011 at 4:46 பிற்பகல்
அதவர்வம் படிக்க மிகவும் ஆசை மூலமும் உரையும் எளிய தமிழில் கிடைக்குமா உதவும் மனது உள்ளவர்கள் விபரம் தெரியபடுத்தவும்
ஜூன் 26, 2011 at 3:21 பிற்பகல்
nanba enakku atharvana vetham puthakam vendum enge kitaikkum …by dev