April 2009


டென்ஹாட் தளத்தில் நாஞ்சில் நாடன் தனக்கு பிடித்த பத்து இலக்கியங்கள் எவை என்று சொன்னதை காணலாம். சவுகரியத்துக்காக அவை இங்கே மீண்டும்:

1. அப்பர் – தேவாரம்
2. கம்பர் – இராமாயணம்
3. திருமந்திரம்
4. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்
5. முத்தொள்ளாயிரம்
6. நகுலன் கவிதைகள்
7. பிரமிள் கவிதைகள்
8. சுந்தர ராமசாமி சிறுகதைகள்
9. அசோகமித்திரன் சிறுகதைகள்
10. அ மாதவன் கதைகள்

இவற்றில் முதல் ஏழுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம். கவிதைகளை கொண்டால் ஓடி விடுவேன். அ. மாதவனை நான் இன்னும் படித்ததில்லை.

ஆனால் சுந்தர ராமசாமியின் சிறுகதை தொகுப்பு இருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர். இப்போது நினைவு வரும் கதைகள் “கோவில் மாடும் உழவு மாடும்”, “விகாசம்”, “சீதை மார்க் சீயக்காய்த் தூள்” போன்றவை. விகாசம் மிகவும் அற்புதமான கதை. கண்ணில்லாத ராவுத்தர் ஒரு கணக்கு ஜீனியஸ். துணிக் கடையில் கூட்டம் குவியும்போது அவர் முதலாளிக்கு மிகவும் தேவையாக இருக்கிறார். ஆனால் ஒரு கால்குலேட்டர் அவரை மிக சுலபமாக replace பண்ணி விடுகிறது. தனது ஞாபக சக்தியால் அவர் முதலாளியின் மானேஜராக மறு அவதாரம் எடுக்கிறார்.

அசோகமித்ரனை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். “காந்தியும் புலிக் கலைஞனும்”, “பிரயாணம்” போன்றவை மிக பிரமாதமான கதைகள். ஒரு கதையில் கார் ஓட்ட திடீரென்று தெரிந்துவிடும் அந்த நொடியை பற்றி எழுதி இருப்பார். மன்னன்!

a_chidambaranathan

மீண்டும் சேதுராமனின் பங்களிப்பு!

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

கும்பகோணத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செட்டியார், பார்வதியம்மாள் தம்பதியினருக்கு, ஏப்ரல் 3, 1907 அன்று பிறந்தவர், செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ. சிதம்பர நாத செட்டியார். மூன்று சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உடன்பிறந்தவர்களாவர். பள்ளிப் பருவத்தில், கும்பகோணம் பேட்டையிலுள்ள தொடக்கப்பள்ளியிலும், பின்னர் நேடிவ் உயர் நிலைப் பள்ளியிலும் இறுதி வகுப்பு வரை படித்துத் தேறினார். தொடக்கத்திலிருந்தே தமிழையும் ஆங்கிலத்தையும் சம அளவில் கற்று வந்தார் சிதம்பரநாதர். அதன் பின் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்தவர் தமது பி.ஏ. வகுப்பில் சிறப்புப் பாடமாகத் தமிழை எடுத்துக் கொண்டார். கல்லூரித் தேர்வில் வெற்றி பெற்றவர் 1928ல் சென்னைப் பல்கலைக் கழக அலுவலகத்திலும், பின்னர் தலைமைச் செயலகத்திலும் எழுத்தராகப் பணியாற்றினார். பணியிலிருக்கும் போதே அரசினர் நடத்திய வருவாய்த் துறைத் தேர்விலும், வரவு செலவு கணக்குத் தேர்விலும் முதலிடம் பெற்றவர். இவரது திறமையை நன்குணர்ந்த அன்றைய அரசு சென்னை அரசாங்க முகமதியக் கல்லூரியில் (அண்ணா சாலையிலுள்ள இன்றைய அரசு கலைக் கல்லூரி) தமிழாசிரியராக நியமித்தது. கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருந்த போதே இடை நிலை வகுப்பிற்கு ஆங்கிலத் துணைப்பாடம் நடத்தவும் ஆங்கிலக் கட்டுரை ஏடுகளைத் திருத்தவும் அரசு இவரை நியமித்தது. மூன்று வருஷங்கள் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பின் பாலக்காடு அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார்.

1933ல் பெரிய நாயகி அம்மையை இவர் மணம் புரிந்து கொண்டார். அம்மையாரும் தமிழ் எழுத்தாளருமன்றி ஓவியக் கலை வல்லுநருமாவார். இவர் வரைந்த அண்ணல் காந்தியடிகளின் ஓவியம் இன்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியை அணிசெய்கிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933ல் தமிழ் எம்.ஏ. வகுப்பில் சேர்ந்த சிதம்பரநாதர் 35ல் முதலிடத்தில் தேறி, மீண்டும் சென்னை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளரானார். இவரது புலமையை நன்குணர்ந்த அன்றைய துணைவேந்தர் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் பல்கலைக் கழகத்திலேயே, நாவலர் சோமசுந்தர பாரதியார் பேராசிரியாக இருந்த தமிழ்த்துறையிலேயே இவரை விரிவுரையாளராக்கினார்.

தமிழகத்தில் தமிழராய்ச்சியில் முதன் முதலாக டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர் சிதம்பரநாதர் தான். பட்டத்திற்கு இவர் ஆராய்ந்தது தமிழ்ச் செய்யுள் இலக்கணம் (Advanced Studies in Tamil Prosody)

ஆங்கிலத்திலும் தமிழிலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ள சிதம்பர நாதரின் முதல் தமிழ் நூல் இந்திய சரித்திர மாலை (1930) – இவர்சுமார் இருபதுக்கும் மேலாக நூல்கள் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற நூலின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று , குறிப்பிட்ட காலத்துக்குள் நூலை வெளியிட்டார். 1958 ஏப்ரில் மாதம் சென்னைச் சட்ட சபை மேலவைக்குப் போட்டியிட்டு இருமுறை வென்று உறுப்பினர் ஆனது குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து வெளிவந்த மாத இதழான “செந்தமிழ்ச் செல்வி”க்கு மதிப்புறு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

திரு சிதம்பர நாதச் செட்டியார் 22 நவம்பர் 1967ல் மதுரையில் காலமானார். இவர் இறக்கும்போது மதுரைத் தியாகராசர் கல்லூரியில் 1965 முதல் முதல்வராக அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இவர் எழுதிய நூல்களின் பட்டியல் வருமாறு:
இந்திய சரித்திர மாலை (1930)
கட்டுரைக் கொத்து (1933)
காக்காய் பிடித்தலும் குருவி பிடித்தலும் (சிற்றிலக்கண நூல் – 1940)
பெரியார் மன்றோ (1941)
Advanced Studies in Tamil Prosody (Doctoral thesis – 1942)
உழைப்பால் உயர்ந்த ஒருவர் (புக்கர் வாஷிங்டன் (1952)
முன்பனிக்காலம் (இலக்கியக் கட்டுரைகள் – 1951)
சிறுகதையும் அதன் வளர்ச்சியும் (1954)
தமிழோசை (1956)
Cilappadikaram the earliest Tamil Epic (1956)
தமிழ் காட்டும் உலகு(இலக்கியக் கட்டுரைகள் – 1957)
வீட்டுத் திருமகள் (கட்டுரைகள் – 1958)
மன்னுயிர்க்கன்பர் (ஆல்பர்ட் சுவைட்சர் – 1958)
Introduction to Tamil Poetry (1958)
சிறுகதைக் களஞ்சியம் (தொகுப்பாசிரியர் – 1959)
Indian Words in English Dictionary (1964)
ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம் (தலைமைப் பதிப்பாசிரியர்)
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆயிரந்திரு நாம அர்ச்சனை (1967)
இளங்கோவின் இன்கவி (சிலப்பதிகாரத் திறனாய்வுக் கட்டுரைகள் – 1972)
செங்கோல் வேந்தர் (1977)
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977)
ஒத்தெல்லோ (ஆங்கில நாடகத் தமிழ் மொழி பெயர்ப்பு – சாகித்ய அகாதெமிக்காக)
Ancient Tamil Kings – Their High Ideals

(ஆதாரம்: இந்திய இலக்கியச் சிற்பிகள்: அ. சிதம்பர நாதச் செட்டியார் - திரு ந.வேலுசாமி எழுதியது, சாகித்திய அகாதெமி முதல் பதிப்பு – 2005)

ஆர்வி: சேதுராமன் தொகுத்த தகவல்கள்படி, இவர் நல்ல தமிழ் ஆராய்ச்சியாளர் என்று தெரிகிறது. இவர் எழுத்துக்களை நான் படித்ததில்லை என்றாலும் நாட்டுடமை ஆக்கப்பட்டது சரிதான் என்று நினைக்கிறேன்.


வெங்கட் சாமிநாதன் திண்ணை இணைய இதழில் சமீபத்தில் மூன்று கட்டுரைகளை எழுதி இருக்கிறார். சுருக்கமாக, அவர் அந்த காலத்தில் இருந்த ஒழுக்கங்கள் இன்று கைவிடப்படுகின்றன என்றும், கடந்த இருபது வருஷங்களில் அவர் முக்கியமானவையாக நினைக்கும் புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றியும் இவற்றில் எழுதி இருக்கிறார். சுட்டிகள் கீழே.

பாகம் 1
பாகம் 2
பாகம் 3

அன்றைக்கிருந்தாப் போல இன்றைக்கில்லை என்பது எல்லா பெரிசுகளும் சொல்லும் குறைதான். இன்னும் 20 வருஷம் கழித்து நான் உயிரோடு இருந்தால் நானும் இப்படித்தான் பேசுவேன். ஆனால் காந்தியின் தாக்கம் கணிசமானவர்களை ஒழுக்கமானவர்களாக மாறியது என்றுதான் தோன்றுகிறது. இன்று காந்தியின் தாக்கம் மதுக் கடைகள் அவர் பிறந்த நாள் அன்று மூடப்படுவது மட்டும்தான். நம்முடைய ரோல் மாடல்கள் இன்று அம்பானியும், மாறன்களும், பில் கேட்சும், நாராயண மூர்த்திகளும், ப்ரேம்ஜிகளும், ரஜினிகாந்த்களும், விஜய்களும், அஜித்களும், தெண்டுல்கர்களும், தோணிகளும்தான். காந்தி, நேரு, காமராஜ், படேல், ராஜாஜி, வ.உ.சி. போன்றவர்கள் அல்ல. அதனால் நமது value system மாறித்தான் விட்டது.

சரி அதை விடுவோம். புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி அவர் நிறைய எழுதி இருக்கிறார். அவற்றை பற்றி என் குறிப்புகள் கீழே.

முதல் சுட்டியில் அவர் குறைகள்தான் பெரிதாக இருக்கிறது. கடைசியில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில பெயர்கள்: யூமா வாசுகி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சுப்ர பாரதி மணியன், யுவன் சந்திரசேகர், சு.வேணுகோபால், உமா மகேஸ்வரி, இமையம், பெருமாள் முருகன், கண்மணி குணசேகரன், சோ.தருமன்

இவற்றை நான் படித்தவர்கள் ஜெயமோகன், சுப்ர பாரதி மணியன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் ஆகியோர்தான்.

ஜெயமோகனை பற்றி நான் புதிதாக எதுவும் சொல்லப் போவதில்லை. என் கருத்தில் அவர் நோபல் பரிசு வாங்கும் தரத்தில் எழுதுகிறார். பேய் பிடித்தவன் போல் எழுதுகிறார். ஒரு வருஷத்துக்கு 2000-3000 பக்கங்கள் எழுதுவார் போலிருக்கிறது. நானும் எழுத முயற்சித்தேன், ஒரு பக்கம் எழுதவே எனக்கு ஒரு வாரம் ஆகிறது. ஆழமாகவும், அதே சமயத்தில் விரிவாகவும் எழுதுகிறார். Deep and wide. இரண்டாம் சுட்டியில் வெ.சா. அவரது விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் ஆகிய புத்தகங்களை சிலாகித்து சொல்கிறார். நான் காடு என்ற புத்தகத்தையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்வேன். ஜெயமோகனின் விமர்சனங்களும் முக்கியமானவை.

சுப்ர பாரதி மணியனை நான் கிட்டத்தட்ட இருபது வருஷங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். அருமையான மனிதர். எனக்கு அவரது புத்தகங்கள் மிகவும் dry ஆக இருக்கின்றன. படிக்க சுலபமாக இல்லை. அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றை படித்திருக்கிறேன். சில புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறேன் – சாயத்திரை – என்றாவது படிப்பேன்.

யுவன் சந்திரசேகரின் ஒளி விலகல் புத்தகம் அபாரமான புத்தகம். விக்ரமாதித்தன் கதை பாணியை வைத்துக் கொண்டு இவ்வளவு அருமையாக எழுத முடியுமா? வேறு புத்தகங்கள் இல்லை, என்றாவது வாங்கி படிக்க வேண்டும்.

பெருமாள் முருகன் எழுதியவற்றில் நான் நிழல் முற்றம் மட்டுமே படித்திருக்கிறேன். திருச்செங்கோடு மாதிரி ஒரு சிறு நகரத்தில் இருக்கும் ஒரு தியேட்டரை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட மிக நல்ல நாவல். ஏழாம் உலகம் அளவுக்கு தாக்காவிட்டாலும், இந்த நாவல் சித்தரிக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் நிஜமாகத்தான் தெரிகிறார்கள்.

இரண்டாம் சுட்டியில் அவர் புத்தகங்களை பற்றி இன்னும் focus செய்திருக்கிறார்.

அ. முத்துலிங்கம் கொண்டாடப்பட வேண்டியவர். அவர் கதைகளை நான் ஓசியில் இணையத்தில்தான் படித்தேன். அசோகமித்ரனின் வாரிசு இவர்தான். ஆனால் அசோகமித்ரனை விட இவரது எழுத்துக்கள் கொஞ்சம் optimism உள்ளவை. பல கதைகளை படித்து புன்னகை வரும்.

ஜோ டி குருசின் ஆழி சூழ் உலகு பற்றி சிலாகித்து சொல்கிறார். இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அருமையான புத்தகம் என்று ஒரு நூறு பக்கம் படித்ததும் தெரிந்தது. ஆனால் ஒரு பக்கம் வைத்துவிட்டேன். சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது.

பி.ஏ.கிருஷ்ணனின் புலி நகக் கொன்றை பற்றி குறிப்பிடுகிறார். மிக அருமையான புத்தகம். லா.ச.ராவின் பாற்கடலுக்கு பிறகு குடும்ப உறவுகளை வைத்து இவ்வளவு அருமையான autobiographical நாவல் படித்ததில்லை. இதைப் போலத்தான் எனக்கும் ஒரு புத்தகம் எழுத ஆசை.

ராஜமார்த்தாண்டனின் கொங்கு தேர் வாழ்க்கை ஒரு சிறப்பான கவிதை தொகுப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் கவிதையை கண்டாலே ஓடுபவன். எங்கேயாவது ஓசியில் கிடைத்தால் புரட்டிப் பார்க்கலாம்.

எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய மணல் கடிகை ஒரு புது உலகத்தை நம் முன் வைக்கிறது என்று சொல்கிறார். நான் படித்ததில்லை. சூத்ரதாரி என்ற பேரில் எழுதுபவரும் கோபாலகிருஷ்ணன்தானோ?

மேலும் கண்மணி குணசேகரனின் அஞ்சலை, யூமா. வாசுகியின் ரத்த உறவு ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகிறார். நான் படித்ததில்லை. படித்தவர்கள் யாராவது இருந்தால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!

தோபபில் முகம்மது மீரான் பற்றி மூன்றாவது சுட்டியில் சொல்கிறார். மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை மட்டுமே நான் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம்.

சல்மா என்ற பெண்ணியக் கவிஞர் பற்றி எழுதி இருக்கிறார். முன்னமே சொன்ன மாதிரி எனக்கும் கவிதைக்கும் காத தூரம்.

ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் சினிமாவில் நுழைந்திருப்பது நல்ல விஷயம் என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் சுஜாதா போன்ற அறிவாளிகளும் சினிமா என்ற கடலில் அடையாளம் தெரிவதில்லை என்பதையும் சொல்கிறார். ஜெயகாந்தன் மட்டுமே தான் தானாகவே இருந்த எழுத்தாளராம். எனக்கு உன்னைப் போல் ஒருவன் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ?

இமயத்தின் கோவேறு கழுதைகள், சோ. தர்மனின் கூகை, மற்றும் தூர்வை, பாமாவின் கருக்கு ஆகியவை முக்கியமான தலித் நாவல்களாம். நான் படித்ததில்லை. படித்தவர்கள் சொல்லுங்கள்! பாமாவின் வன்மம் ஒரு அருமையான நாவல். பள்ளர் பறையர் உப ஜாதிகளுக்கு இடையே உள்ள தகராறுகளை பற்றி எழுதி இருக்கிறார்.

கனடாவின் தேவகாந்தன் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை ஒரு ஆவணம் போன்ற நாவலாக எழுதி இருக்கிறாராம். எங்கேயாவது கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

சின்ன அண்ணாமலையும் கல்கியும்

சின்ன அண்ணாமலையும் கல்கியும்

நாட்டுடமை பதிவில் அவ்வளவாக விவரம் தெரியவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டவர்களில் சின்ன அண்ணாமலையும் ஒருவர். அவரைப் பற்றி சேதுராமன் அவர்கள் திரட்டிய விவரங்கள் கீழே.

தனது பத்தாவது வயதிலேயே, தனது ஊரிலேயே, தனது உறவினர் வீட்டிலேயே, மஹாத்மா காந்தியைத் தரிசிப்பதற்கு ஒருவர் எத்தனை கொடுத்து வைத்திருக்க வேண்டும் ? இந்த பாக்கியம் பெற்றவர் காரைக்குடியைச் சேர்ந்த சின்ன அண்ணாமலைதான்.. இளைஞன் அண்ணாமலையின் சிறிய தாயார் உமையாள் ஆச்சி, ராய.சொக்கலிங்கத்தின் துணைவியார் – 1934ல் மஹாத்மா காரைக்குடி வந்த போது இந்த நிகழ்ச்சி நடந்தது. இது மட்டுமல்ல, பிற்காலத்திலே, காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையை தமிழில் வெளியிட அண்ணலிடமே அனுமதி பெற்றவரும் கூட. இவருக்குச் சின்ன அண்ணாமலை என்ற பெயர் சூட்டியது வேறு யாருமல்ல, இராஜாஜி அவர்களேதான்.

காரைக்குடி சா.கணேசனின் உறவினர் இவர் – சின்னஞ்சிறு பிராயத்திலேயே தேசத்தைப் பற்றியும் காந்திஜியைப் பற்றியும் நன்கறிந்து, தேசப்பணிகளிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அண்ணாமலை.

இளம் வயதில் காரைக்குடியிலும், மலேயாவில் டெலுக்கான்சன் என்ற ஊரிலிருந்த ஆங்கிலோ-சைனீஸ் பள்ளியிலும் படித்தவர். தனது பதின்மூன்றாவது வயதிலே உமையாள் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டார்.

மேடையில் பேசுபவர்களுக்கு சுவையாக எழுதத் தெரியாது, எழுதத் தெரிந்தவர்களுக்கு மேடையில் அழகாகப் பேச வராது.அண்ணாமலை இதற்கு விதிவிலக்கு! சின்ன அண்ணாமலை அபூர்வமான பல ஆற்றல்கள் படைத்தவர், பதினாயிரம் இருபதினாயிரம் ஜனங்கள் அடங்கிய கூட்டத்திலே மணிக்கணக்கில் பிரசங்கமாரி பொழியக்கூடியவர், ஆவேசமாகப் பேசுவார், அழ வைக்கும்படி பேசுவார், சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார் – இவரைப் போன்றவர்கள் நமது சட்ட சபையில் இருந்தால் எவ்வளவு கலகலப்பாகும் என்று நான் எண்ணுவது உண்டு. பேசும் ஆற்றலைப் போல் எழுதும் ஆற்றல் படைத்தவர் சின்ன அண்ணமலை – அழகிய சிறு கதைகள், சிறந்த நாவல்கள், ரசமான பிரயாணக் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார் (“காணக் கண்கோடி வேண்டும்” என்ற நூலின் முன்னுரையில் கல்கி எழுதியது) சின்ன அண்ணாமலை கல்கி கிருஷ்ணமூர்த்தியைத் தன் குருவாகவும், வழிகாட்டியாகவும் வரித்துக் கொண்டவர்.

திரு. சத்தியமூர்த்தி கலந்து கொண்ட அரசியல் மானாட்டில், அண்ணமலை பேசி முடித்தவுடன் அவரைப் பாராட்டி நாவன்மையைப் புகழ்ந்த சத்தியமூர்த்தி தான் அணிந்திருந்த காவி கலர் கதர் அங்கவஸ்திரம் ஒன்றைச் சபையின் கரகோஷத்தினிடை அவருக்குப் போர்த்தினார். அந்த நினைவாகவே இவர் தன் வாழ் நாள் முழுதும் கதரில் காவி நிறச் சட்டையையே அணிந்து வந்தார்.

ஆகஸ்ட் , 1942ல் நடந்த விடுதலைப் புரட்சியின் போது, பல பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு கனல் தெறிக்கப் பேசியவர், போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டார் – மறு நாள் பகலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறைக்கதவை உடைத்துத் திறந்து இவரை விடுதலை செய்தார்கள்.

இவர் நடத்திய தமிழ்ப் பண்ணை புத்தகாலயம், இராஜாஜி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, மற்றவர்களின் புத்தகங்களைப் பதிப்பித்தது. அண்ணாமலை எழுதிய முதல் புத்தகம் “சீனத்துச் சிங்காரி”

மகாத்மா காந்தி கடைசியாகச் சென்னை வந்த போது, இராஜாஜி அண்ணாமலையை அண்ணலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அண்ணாமலையின் சிறைவாசம், விடுதலை பற்றிச் சொல்லிய பிறகு ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் வெளியிட விரும்புகிறார் அண்ணாமலை, உங்கள் அனுமதி தேவை என்றிருக்கிறார் இராஜாஜி. “நஷ்டம் வராமல் பத்திரிகை நடத்துவாயா” என்று காந்தி கேட்டதற்கு “இவரும் உங்களைப் போல் வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்தான்” என்றாராம் இராஜாஜி. மகிழ்ச்சியில் திளைத்த மகாத்மா, உடனேயே ‘தமிழ் ஹரிஜன்’ துவக்க விழா நடத்தி விடலாம் என்று சொல்லி முதல் காரியமாக தமிழிலேயே ‘தமிழ் ஹரிஜன்’ என்றெழுதித் துவக்கி வைத்தார்.

அண்ணாமலை கல்கியைச் சந்தித்ததே ஒரு சுவாரசியமான கதை. தேவகோட்டையில் ராஜாஜி வந்திருந்த போது ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அண்ணாமலை அக்கூட்டத்தில் ஒரு பேச்சாளர். அண்மையில் கல்கி எழுதி ஆனந்தவிகடனில் தலையங்கமாக வெளி வந்த ராஜாஜி பற்றிய விஷயங்களை நன்றாகவே மனப்பாடம் செய்திருந்தார் அண்ணாமலை. முதலில் மேடை நடுக்கம் தான் – ராஜாஜி ஊக்கிவிடவும் கணீரென்ற குரலில் தான் பேச வேண்டியதை தைரியமாக எடுத்துரைத்தார். ராஜாஜி ஆசிகள் வழங்கி கூடவே “நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்” என்றார்.

பேச்சு முடிந்தவுடன் மேடையில் பின்புறம் அமர்ந்தார் அண்ணாமலை. அருகில் இருந்த ஒருவர் ‘ரொம்ப நன்றாகப் பேசினீர்கள் – இவ்வளவு விஷயம் எங்கு படித்தீர்கள்’ என்று கேட்டார். அவரிடம் உண்மையை மறைக்கக் கூடாதென்று ”ஆனந்தவிகடனில்” என்றார் அண்ணாமலை. யார் எழுதியது தெரியுமா என்றார் அந்த மனிதர். கல்கி என்றார் அண்ணாமலை. அவரைத் தெரியுமா? தெரியாது, நான் பார்த்ததில்லை. பார்த்தால் என்ன செய்வீர்கள்? சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்வேன். “அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணுங்க” என்றார். ஏன் என்று கேட்டார் அண்ணமலை. நான்தான் அந்தக் கல்கி என்று பதில் வந்தது (அண்ணாமலை எழுதிய “சொன்னால் நம்ப மாட்டீர்கள்” என்ற புத்தகத்திலிருந்து)

தன் வாழ்வில் அனேக தேசபக்தர்களைச் சந்தித்துப் பழகும் பாக்கியம் பெற்றவர் சின்ன அண்ணாமலை.

சிவாஜி ரசிகர் மன்றம் ஆரம்பித்ததில் ஒரு முக்கியமான நோக்கம் இருந்தது.. 1967 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது, தொண்டர்கள் ஏமாற்றமும் சோர்வும் அடைந்திருந்தனர். அப்போது தமிழ் நாடு முழுவதும் இளைஞர்கள் பலர் சிவாஜிக்கென்று அனேக ரசிக மன்றங்கள் வைத்திருக்கின்றனர், இவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்தால் காங்கிரசுக்குப் புதிய பலம் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தனர்.

இதன் காரணமாகவேதான் 1969 ஆகஸ்டு மாதம் ” அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்” என்ற அமைப்பு உருவாகியது.
அதன் முதல் பேரவை அக்டோபர் முதல் தேதியன்று சென்னையில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றது. சரித்திரம் காணாத ஊர்வலமும், தென்னாட்டு, வடனாட்டு நட்சத்திரங்களும், அலை மோதினர். காங்கிரசைப் பலப்படுத்த அண்ணாமலை மறைமுகமாகச் செய்த இந்த ஏற்பாடு காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டமில்லாததால் அதன் இலக்கை எட்டிப் பார்க்க முடியவில்லை. அண்ணாமலை ஏழு வருடங்கள் இந்த அமைப்பின் தலைவராக இருந்தார்.

நிறைய நூல்கள் இவர் எழுதியும், அந்த நூல்களின் விவரங்கள் கிடைக்கவில்லை — இவர் எழுதிய முதல் நூல் “சீனத்துச் சிங்காரி” நினைவுக்கு வரும் மற்ற நூல்கள் – தியாகச் சுடர், சொன்னால் நம்ப மாட்டீர்கள், கண்டறியாதன கண்டேன், காணக் கண் கோடி வேண்டும் என்பவை.

(தகவல் உபயம் – சொன்னால் நம்ப மாட்டீர்கள்! – சின்ன அண்ணாமலை – குமரன் பதிப்பகம்}

ஆர்வி: சின்ன அண்ணாமலையின் சொன்னால் நம்ப மாட்டீர்கள் புத்தகத்தை சிறு வயதில் நானும் படித்திருக்கிறேன். அவர் கல்கி, ராஜாஜி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். பின்னாளில் சிவாஜி, காமராஜ் ஆகியோருக்கு நெருக்கமாக மாறினார். ம.பொ.சிக்கு சின்ன அண்ணாமலையிடம் ஒரு வேலை செட்டப் செய்ய ராஜாஜி நடத்திய முயற்சிகள் ஏனோ பலிக்கவில்லை. அவருக்கு கல்கி ஒரு காரே வாங்கிக் கொடுத்திருக்கிறார். சி. அண்ணாமலையின் முதல் கார் அதுதானாம்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் புத்தகத்தில் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கும் விஷயம் ஒன்று – ஒரு முறை இவர் வெளியூரில் எங்கோ பிரசாரத்துக்கு போய்விட்டு இரவில் டீ குடிக்க ஒரு கடையில் நிறுத்தினாராம். மக்கள் இரவு ஆட்டம் பார்த்துவிட்டு சாரி சாரியாக வந்து கொண்டிருந்தார்களாம். இவர் என்ன படம், எப்படி இருந்தது என்று எல்லாரையும் கேட்டுக் கொண்டிருந்தாராம். வீரபாண்டிய கட்டபொம்மன் படம். எல்லாரும் சிவாஜி நடிப்பை சிலாகித்துக் கொண்டிருந்தார்களாம். ஒருவர் மட்டும் இதெல்லாம் ஒரு படமா என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்தாராம். சி. அண்ணாமலை அவரிடம் உங்களுக்கு சிவாஜி நடிப்பு பிடிக்கவில்லையா என்று கேட்டாராம். அவர் சொன்னாராம், நடிப்பு எல்லாம் சரி, ஆனால் எங்க எம்ஜிஆரா இருந்தா வெள்ளைக்காரங்களை எல்லாம் சுட்டுட்டு குதிரை மேல ஏறி வந்து முடிசூட்டிக்குவாரு! என்று ஒரு போடு போட்டாராம்.

அந்த புத்தகத்தில் மக்களே திரண்டு வந்து ஜெயிலை உடைத்து விடுதலை செய்த ஒரே மனிதர் தான்தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். “பூட்டை உடை” என்ற புத்தகம் எழுதியதற்காக கேஸ் போடப்பட்டதும், இவர் பூட்டை உடை என்றால் என்ன என்று தமிழ் தெரியாத ஜட்ஜ், ப்ராசிக்யூட்டர் ஆகியோருக்கு விளக்க முயற்சி செய்ததால் மூன்று மாதம் ஜெயில் தண்டனை கிடைக்க வேண்டியது ஆறு மாதமாக ஆனதையும் நகைச்சுவையாக விவரிக்கிறார்.

அவர் ஒரு சிறந்த தேச பக்தர், பேச்சாளர் என்று தெரிகிறது. ஆனால் நாட்டுடமை ஆக்கப்படும் அளவுக்கு என்ன எழுதிவிட்டார் என்பது இன்னும் தெரியவில்லை.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பதிவில் புலவர் என்.வி. கலைமணி பற்றி விவரங்கள் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். சேதுராமன் அவர்கள் கஷ்டப்பட்டு விவரங்கள் தேடி உள்ளார். ஓவர் டு சேதுராமன்.

எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று கார்த்திக் சந்திர தத் பதிப்பித்துள்ள WHO IS WHO OF WRITERS (1999) சொல்கிறது – தமிழரசி என்ற வாரப்பத்திரிகையை வெளியிட்டு வந்தவர், நூற்றைம்பதுக்கும் மேலான புத்தகங்கள் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இலக்கியம், நுண்கலைகள், அரசியல், இதழியல் முதலியவற்றைப் பற்றியுமல்லாது, நாவல்களும் எழுதியுள்ளார்.

ஐம்பதுகளில், பல்வேறு தினசரி பத்திரிகைகளில் பணி புரிந்துள்ளார் – இவற்றுள் முக்கியமானவை அண்ணா தொடங்கிய திராவிட நாடு, முரசொலி, தனி அரசு, தென்னகம், எரியீட்டி நாளிதழ்களாகும்.

புத்தகங்களின் சில தலைப்புகள் — “தேசத் தலைவர் காமராஜ்”, “ஏழைகள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்”, “நேருவும் கென்னடியும்”, “நீதி மன்றத்தில் எம்.ஜி.ஆர்” முதலான வாழ்க்கைக் குறிப்புகள், “வஞ்சக வலை”, “மரண மாளிகை” போன்ற சரித்திர நாவல்கள், “இலட்சிய ராணி”, “சாம்ராட் அசோகன்” முதலிய நாடகங்கள், “சிந்தனை சிக்கல்கள்” என்ற அறிவியல் புத்தகம் — இவருடைய படைப்புகளாகும்.

டிசம்பர் 30, 1933ல் பிறந்த இவர் அண்ணமலைப் பல்கழகத்தின் மாணவர் – சரித்திரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.. சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘புலவர்’ பட்டமும் பெற்றவர்.

யு.என்.ஐ. செய்திக் குறிப்புப்படி, புலவர் கலைமணி 2007 மார்ச்சு மாதம் 6 தேதி காலமானார் என்று தெரிகிறது – மனைவி, இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள் கொண்டது இக்குடும்பம்.

என்.வி. என்ற இனிஷியல்களும், அண்ணா மற்றும் கழக நாளிதழ்களின் தொடர்பும், இவர் கழகத்தை நிறுவிய ஐவர்களுள் ஒருவரான என்.வி.நடராசன் குடும்பத்தைச் சேர்ந்தவரோ? என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது.

(தகவல் உபயம் – Who is Who of Indian Writers K. C. Dutt (1999) – UNI Press Release Mar. 7, 2007)

ஆர்வி: சேதுராமன் திரட்டிய தகவல்களை வைத்துப் பார்க்கும்போது நாட்டுடமை ஆக்கும் அளவுக்கு என்.வி. கலைமணி என்ன சிறப்பாக எழுதி இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இங்கே உள்ள விவரங்கள் ஒரு சிறு அறிமுகமே. அதை மட்டும் வைத்து முடிவெடுப்பது சரி இல்லை. அரசுதான் தான் ஏன் ஒருவரை இப்படி கவுரவப்படுத்துகிறது என்று தெளிவுபடுத்த வேண்டும்.

இதுவும் ஒரு மீள்பதிப்பு. முந்தைய பதிவை சில டெக்னிகல் காரணங்களால் எங்கும் லிங்க் செய்ய முடியவில்லை. அதனால் இந்த மீள்பதிப்பை போட்டுவிட்டு பழைய பதிவை நீக்கிவிட்டேன்.

1919-இல் பாரதியுடன் ராய.சொக்கலிங்கம்

1919-இல் பாரதியுடன் ராய.சொக்கலிங்கம்


9-11-1919 அன்று காரைக்குடி இந்து மதாபிமான விழாவில் கலந்து கொண்ட மஹாகவி பாரதியார் – அவருக்கு வலப்புறம் ராய.சொ.வும் இடப்புறம் சொ.மு.வும். (இந்த சொ.மு. யாரென்று தெரியவில்லை)

நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துக்கள் பற்றிய பதிவில் பல பேரை பற்றி தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். திரு. சேதுராமன் அவர்கள் ராய. சொக்கலிங்கத்தை பற்றி சிரமப்பட்டு கண்டுபிடித்து கீழே உள்ளதை எழுதி இருக்கிறார். அவருக்கும் அவருக்கு விவரங்களை தந்து உதவிய காரைக்குடி சித. ராயப்ப செட்டியாருக்கும் எனது நன்றி! இது அவரது guest post.

இது போன்ற விஷயங்களை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. கூகிளில் தேடும் விஷயம் இல்லை. சேதுராமன் எப்படி சித. ராயப்ப செட்டியாரை கண்டுபிடித்தாரோ! சித. ராயப்ப செட்டியார் விவரங்கள் கொடுத்து உதவியது மட்டும் இல்லாமல் ஒரு புத்தகத்திலிருந்து இந்த புகைப்படத்தையும் scan செய்து உதவி இருக்கிறார். வளவள என்று எழுதுவதை காட்டிலும் ஒரு ஓவியமோ, புகைப்படமோ விஷயத்தை நமக்கும் சுலபமாக சொல்லிவிடுகிறது. இதை பார்த்தவுடன் நமக்கும் ராய.சொ. பாரதியின் காலத்து அறிஞர் என்று தெரிந்துவிடுகிறது பாருங்கள்!

எழுத்துகளை நாட்டுடமை ஆக்கினால் மட்டும் போதாது, அவர்களது புத்தகங்களை வெளியிடவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தேன். புத்தகங்களை வெளியிடாவிட்டாலும், எழுத்தாளர்களின் வாழ்க்கை குறிப்புகள், அவர்கள் ஏன் இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றாவது சிறு குறிப்பாக வெளியிட வேண்டும். அப்படி அரசு செய்யும் வரை நம்மை போன்று சாதாரண மனிதர்கள்தான் இதற்கு சிரமப்பட வேண்டும். திருவாளர்கள் சேதுராமன், சித. ராயப்ப செட்டியார் ஆகியோருக்கு ஓ பக்கங்கள் ஞானி ஸ்டைலில் இந்த வார பூச்செண்டு கொடுக்க வேண்டியதுதான்! (இப்போது சேதுராமன் மேலும் சின்ன அண்ணாமலை, என்.வி. கலைமணி, அகஸ்தியலிங்கம், மு. ராகவையங்கார் ஆகியோரை பற்றியும் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.) உங்களுக்கும் பூச்செண்டு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று புரிகிறதா? :-)

ஓவர் டு சேதுராமன்.

தமிழ்க் கடல் ராய.சொ. 30-10-1898 அன்று, காரைக்குடியில் பிறந்தவர். தந்தையின் பெயர் ராயப்ப செட்டியார், தாயார் அழகம்மை ஆச்சி. இளமையில் ஆசிரியர் சுப்பையா திண்ணைப் பள்ளியிலும், பின்னர் தனது பதினெட்டாவது வயதிலிருந்து இரண்டு வருஷங்கள் பண்டித சிதம்பர அய்யர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியப் பாடங்கள் பயின்றார்.

ராய.சொ. அவர்கள் திருமதி உமையாள் ஆச்சியை பள்ளத்தூரில் 1918ல் திருமணம் புரிந்து கொண்டார்கள். இத்திருமண வாழ்க்கை 43 ஆண்டுகள் தொடர்ந்தது.

தமிழ் இலக்கணப் பயிற்சி நடக்கையில் அப்போது ‘சமூகச் சீர்திருத்தத் தந்தை’ என்றழைக்கப்பட்ட திரு.சொ.முருகப்பாவின் தொடர்பு ஏற்பட்டது.. பல அன்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தனர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார் 1919ல் நேரில் வந்து இச்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவாழ்த்துக் கவி பாடிச் சங்கத்தைப் பெருமைப் படுத்தினார். சங்கத்தின் தலைவராக ராய.சொ. பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.

சொ.முருகப்பா 1920ல் தொடங்கிய ‘தன வைசிய ஊழியன்’ பத்திரிகைக்கு, இரண்டாவது ஆண்டிலிருந்து ராய.சொ. ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் இப்பத்திரிகையின் பெயர் ‘ஊழியன்’ என்று மாற்றப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகள் இப்பத்திரிகை காரைக்குடியிலும், சென்னையிலும் வெளி வந்தது. இப்பத்திரிகையில் உதவி ஆசிரியர்களாகப் பணி புரிந்தவர்களில், வ.ரா, தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.

நாட்டின் விடுதலைப் பணிகளில் காந்தியடிகள் காட்டிய நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ராய.சொ.1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார். நகரத்தார் வகுப்பில் அரசியல் காரணமாக முதன் முதலாகச் சிறை சென்றவர் ராய.சொ தான்.

தன்னுடைய தென்னாட்டுப் பயணத்தின் போது, 1934-ம் ஆண்டு, அண்ணல் காந்தியடிகள், ராய.சொ.குடிலுக்கு வந்து, விருந்துண்டு அவரைப் பெருமைப் படுத்தியது இன்றும் எல்லோருடைய நினைவில் இருக்கிறது. காரைக்குடி நகரசபைத் தலைவராக இருந்தபோது, காரைக்குடியில் இருந்த நான்கு ஆரம்பப் பள்ளிகளைப் பதினேழாகப் பெருக்கினார்.

இந்து மதாபிமான சங்கம் 1958ல் ராய.சொ.வுக்கு “தமிழ்க்கடல்” என்ற பட்டம் வழங்கியது.. 1961ல் இரங்கூன் நகர நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தர்ம பரிபாலன சபை அவருக்கு “சிவமணி”என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். தொடர்ந்து 1963ல் கோலாலம்பூர் அருள் நெறித் திருக் கூட்டம் அவரை “சிவம் பெருக்கும் சீலர்” என்று கௌரவம் செய்தனர்.

ஆலயப் பணிகளில் வெகுவாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் – தென்னாட்டிலும், வட நாட்டிலும் உள்ள திருத்தலங்களுக்கெல்லாம் விஜயம் செய்தவர்.

தன் வாழ்க்கைக் காலத்தில் திரட்டிய, புத்தகங்கள், பத்திரிகைகள் முதலானவற்றைக் கொண்ட பெரும் நூல் நிலையத்தை, காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு வழங்கினார். இத்தொகுப்பு, கிடைத்தற்கரிய பதிப்புகளும், திங்கள் இதழ்களும், அகர நூல்களும், திருக்குறள் இராமாயணம் பல பதிப்புகளும், இலக்கண, இலக்கிய, சமய, அரசியல், பல்வேறு உரை நூல்கள், கொண்டது.

காந்தி நூற்றாண்டு விழாவினையொட்டி அன்னார் மீது தாம் முன்னர் இயற்றிய 901 பாடல்களையும் தொகுத்து “காந்தி கவிதை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் சென்னையில் வெளியிட்டார்.

இவரது படைப்புகளில் “தேனும் அமுதும்”, “திருவாசகத் தேன்”, “திருத்தலப்பயணம்” முதலான பக்தி நூல்கள் இருபத்தியெட்டும், காவேரி, குற்றால வளம் முதலான உரை நடைகள் ஐந்தும், “காந்தி பிள்ளைத்தமிழ்”, “காந்தி பதினெண்பா” முதலான எட்டு கவிதை நூல்களும், “சேதுபதி விறலிவிடு தூது”, “கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது” முதலான நான்கு இலக்கிய வெளியீடுகளும், உள்ளன. இவை தவிர “கம்பனும் சிவனும்”, “வில்லியும் சிவனும்” என்ற ஆராய்ச்சி நூல்களும் இவர் படைத்துள்ளார்.

முன்னாள் இந்து மதாபிமான சங்கம் பொன் விழா கண்ட போது, உமையாள் மண்டபம் என்ற பெயரால் மேல் மாடி ஒன்று கட்டிக் கொடுத்திருந்தார்.. அழகப்பா கல்லூரி வட்டத்திலிருந்து ஓய்வெடுத்ததும், இம்மண்டபத்தில் குடியேறி தமது இறுதி நாள் வரை வாழ்ந்த ராய.சொ. 30-9-1974ல் மறைந்தார்.

(ஆதாரம் – “தமிழ்க் கடல் ராய.சொ. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு” — அன்பளித்தது சித. ராயப்ப செட்டியார், காரைக்குடி)

மீண்டும் ஆர்வி:
இது ராய.சொவின் வாழ்க்கைக் குறிப்பு. அவரது எழுத்துகளை பற்றி சுருக்கமாகவே விவரங்கள் உள்ளன. பொதுவாக மரபு கவிதைகள் எழுதி இருக்கிறார், ஊழியன் என்ற பத்திரிகையை நடத்தி இருக்கிறார் என்று தெரிகிறது. அரசே பதிப்பித்தால் ஒழிய இவரது எழுத்துக்கள் மறு பதிப்பு பெற வாய்ப்புகள் குறைவுதான். இருப்பதை வைத்து பார்க்கும்போது இவர் எழுத்துக்கள் ஏன் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்று விளங்கவில்லை.

இது ஒரு மீள் பதிப்பு. சில டெக்னிகல் காரணங்களால் முந்தைய பதிவை எங்கும் லிங்க் செய்ய முடியவில்லை. அதனால் முந்தைய பதிவை நீக்கிவிட்டு, இதை பதித்திருக்கிறேன்.

டாப்டென் பதிவில் இன்னும் சில சிபாரிசுகளை கண்டுபிடித்தேன்.

சுஜாதா
விகடனில் சுஜாதா தேர்ந்தெடுத்த பத்துப் புத்தகங்கள் (மார்ச் 26, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து):

1. புறநானூறு ஏதோ இங்கும் அங்கும் கேட்டதுதான். இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம்.

2. பைபிள் எனக்கு பழைய ஏற்பாடுதான் பிடித்திருக்கிறது. பழைய ஏற்பாட்டு கடவுளுக்கும் புதிய ஏற்பாட்டு கடவுளுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

3. பகவத் கீதை என்றைக்காவது படித்து பார்க்க வேண்டும்

4. பாரதியார் கவிதைகள் நிறை குறைகளை சீர் தூக்கி பார்ப்பது எனக்கு முடியாத காரியம்

5. புதுமைப்பித்தன் கதைகள் புதுமைப்பித்தன் நோபல் பரிசு பெறத் தகுதி உள்ளவர்.

6. திருக்குறள் இதுவும் ரொம்ப தூரம்தான்.

7. சிவப்புப் புத்தகம் (மா சே துங்) படித்ததில்லை.

8. தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) இது படிப்பதிற்கில்லை. இதை தொகுப்பதில் பங்கு பெற்ற மு. ராகவையங்காரைப் பற்றி இங்கே காணலாம்.

9. நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிரித்து பார்த்திருக்கிறேன்.

10. Why I Write? – ஜார்ஜ் ஆர்வெல் கட்டுரைகள் படித்ததில்லை.

அசோகமித்ரன்
விகடனில் அசோகமித்ரன் தேர்ந்தெடுத்த பத்துப் புத்தகங்கள் (ஏப்ரல் 2, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து):

1. திருக்குறள் (கழக வெளியீடு) ஏற்கனவே சொன்ன மாதிரி கொஞ்ச தூரம்தான்.

2. சிலப்பதிகாரம் (உ.வே.சா. நூலக வெளியீடு) இதுவும் தூரம்தான்.

3. கம்பராமாயணம் (சென்னை கம்பன் கழக வெளியீடு) இதுவும் தூரம்தான்.

4. சத்திய சோதனை – மஹாத்மா காந்தி படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

5. கண்டுணர்ந்த இந்தியா – நேரு அருமையான புத்தகம்

6. என் சரித்திரம் – உ.வே. சாமிநாதய்யர் நல்ல புத்தகம், ஆனால் டாப் டென்னில் எல்லாம் இடம் பிடிக்காது.

7. என் கதை – கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை படித்ததில்லை

8. பாரதியார் கட்டுரைகள் நல்ல புத்தகம்.

9. விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ. சிவஞானம் படிக்க ஆசை, கிடைக்க மாட்டேன் என்கிறது.

10. தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா வெளியீடு) இது படிப்பதற்கில்லை

பி.கே சிவகுமார் – எனக்கு இவர் யாரென்று தெரியாது.
எனக்குப் பிடித்த பத்துப் புத்தகங்கள் என்று யோசிக்க ஆரம்பித்ததில் உடனடியாகத் தோன்றியது இந்தப் பட்டியல்.

1. பைபிள் புதிய ஏற்பாடு எனக்கு பழைய ஏற்பாடுதான் பிடித்திருக்கிறது.

2. கம்பராமாயணம் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் உரையுடன்) தூரம்.

3. மஹாகவி பாரதியார் கவிதைகள் என் பதிவு இங்கே.

4. மஹாத்மா காந்தியின் சத்திய சோதனை படியுங்கள்.

5. ஜவஹர்லால் நேருவின் The discovery of India படியுங்கள்.

6. திருவாசகம் கொஞ்ச தூரம்.

7. ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் படித்ததில்லை.

8. ஜெயமோகனின் தமிழின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளின் எழுத்துகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு(கள்) அருமையான் தொகுப்பு.

9. Francis Wheen எழுதிய “Karl Marx – A Life.” படித்ததில்லை.

10. Richard Dawkins எழுதிய “The Selfish Gene” படித்ததில்லை.

நான் தமிழ் நாடு அரசியல், 2009 தேர்தல் ஆகியவற்றை பற்றி எழுதிய சில பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பதிவில் விவரம் தெரியாது என்று குறிப்பிட்டவர்களில் மு. ராகவையங்காரும் ஒருவர். ராகவையங்கார் பற்றி அவரது கொள்ளுப்பேரனான முரளிதரன் எழுதிய விக்கி குறிப்பு இங்கே. சேதுராமன் கஷ்டப்பட்டு அவரைப் பற்றி விவரங்கள் சேகரித்திருக்கிறார். அவருக்கு நன்றி! சேதுராமன் அவர்களின் guest post கீழே தொடர்கிறது.

மு. ராகவ அய்யங்கார் 1878 ஜூலை மாதம் 26 தேதி ராமநாதபுரத்தில் பிறந்தவர். தந்தையார் சதாவதானம் முத்துஸ்வாமி அய்யங்கார் என்ற தமிழ்ப் புலவர். இளமையில் ராகவ அய்யங்கார் புகழ் பெற்ற பாண்டித்துரைத் தேவரிடம் தமிழ்க் கல்வி பயின்றார்.

படிப்பிற்குப் பிறகு சில காலம் தொல்பொருளாராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த டி. ஏ. கோபிநாதராவுடன் தமிழ் நாட்டின் கோயில்களிலுள்ள கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார். செந்தமிழ் என்ற பத்திரிகையின் உதவி ஆசிரியராக சில காலமும், பின்னர் ஆசிரியராக சில காலமும் பணியாற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகம் ரெவரெண்ட் ஜே.எஸ். சாண்ட்லர் தலைமையில் “தமிழ்ப் பேரகராதி” தயாரிப்பில் 1913 முதல் தமிழ் உதவி ஆசிரியராக இருந்தார். சாண்ட்லர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இம்மாபெரும் முயற்சி, பின்னர் தலைமையேற்ற எஸ்.வையாபுரிப் பிள்ளை காலத்தில் 1936ல் தான் முடிந்தது. இவரது ஆராய்ச்சித்திறனைப் போற்றும் வகையில் இவருக்கு 1939ல் “ராவ் சாஹேப்” என்ற பட்டத்தையும் முன்னாள் அரசு அளித்துக் கௌரவித்தது.

திருவாங்கூர் பல்கலைக் கழகத்தில், தலைமைத் தமிழ் ஆராய்ச்சியாளராக 1944 முதல் 1951 வரை பணி புரிந்திருக்கிறார். இதற்கிடையே லயொலா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் இருந்திருக்கிறார். கலைமகள், தமிழ் நேசன் பத்திரிகைகளில் மதிப்பியல் ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

வேளிர் வரலாறு, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ஆழ்வார்கள் கால நிலை முதலான பன்னிரண்டு நூல்கள் படைத்துள்ளார். தவிரவும், நரி விருத்தம் (அரும்பதவுரையுடன்), திருக்கலம்பகம், விக்கிரம சோழனுலா, கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை, நிகண்டகராதி முதலான பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

செந்தமிழ், கலைமகள், தமிழர் நேசன், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி முதலான பத்திரிகைகளில் நிறையக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

1954ல் தன் மனைவியையும், இளைய மகனையும் இழந்தவர், தன் மூத்த மகனுடன் மானாமதுரையில் வாழ ஆரம்பித்தார். 1960 பிப்ரவரி இரண்டாம் தேதி மானாமதுரையிலேயே காலமானார்.

(தகவல் உபயம் – “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்கள்” என்ற புத்தகத்தில் எம்.எஸ்.அறிவுடைநம்பி எழுதிய கட்டுரை – புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்தது – காவ்யா வெளியீடு // வி.சுந்தரம் ஐ.ஏ.எஸ்.எழுதிய ஒரு வலைத்தளக் கட்டுரை)

ஆர்வி:
1. ராகவையங்கார் பாண்டித்துரை தேவரிடம் தமிழ் பயின்றிருக்கிறார். பாண்டித்துரை தேவரோ ராகவையங்காரின் அப்பா முத்துஸ்வாமி ஐயங்காரிடம் தமிழ் பயின்றிருக்கிறார்!
2. தமிழ் பேரகராதி தயாரிக்கும் முயற்சியில் ரெவ். ஜே.எஸ். சாண்ட்லர் சீஃப் எடிட்டர் ஆகவும் ராகவையங்கார் சீஃப் பண்டிட் ஆகவும் பணி புரிந்திருக்கின்றனர். சீஃப் பண்டிட் என்றால் என்ன என்று சரியாக புரியவில்லை.
3. ஏதோ அரசல்புரசலாக கேள்விப்பட்டதை வைத்தே இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டியவை என்றுதான் நினைத்தேன். சேதுராமன் திரட்டிய விவரங்கள் இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

தொடர்புடைய பதிவுகள்:
ராகவையங்கார் பற்றிய விக்கி குறிப்பு

இது எங்கள் நோட்டிஸ் போர்ட்.

ரொம்ப நாளாக பயமுறுத்திக் கொண்டே இருந்தேன், கடைசியில் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் – சிலிகான் ஷெல்ஃப் – ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார்.

எங்கள் தளங்கள்

ப்ளாக்
அவார்டா கொடுக்கறாங்க?
கூட்டாஞ்சோறு
சிலிகான் ஷெல்ஃப்

இந்தத் தளத்தில் இது வரை வந்த கட்டுரைகள் ஆர்வி, பக்ஸ், சேதுராமன், உப்பிலி ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் கூட்டு முயற்சி. பிறருடைய நல்ல படைப்புகள் சிலவற்றையும் மீள் பதிவு செய்துள்ளோம்.சேதுராமன் அவர்கள் தற்போது எங்கள் நினைவில் மட்டுமே இருக்கிறார்.

ஆர்வி எழுதிய அம்மாவுக்கு புரியாது சிறுகதை உரையாடல் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது. போட்டியை நடத்திய பைத்தியக்காரன், மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு நன்றிகள்!

பக்சின் மகள் பிருந்தா எழுதிய கவிதை பரிசு பெற்றிருக்கிறது. பரிசு விவரங்கள், இடுகையில்.

« முந்தைய பக்கம்அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers