- எஸ். வையாபுரிப் பிள்ளை
- ஜெயமோகன்
பிள்ளை பற்றிய முந்தைய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.
நான் வையாபுரிப் பிள்ளை பற்றி இணையத்தில் தேட கஷ்டப்பட்டேன். நல்ல வேலையாக சேதுராமன் ஜெயமோகன் எழுதிய சில சுட்டிகளை எனக்கு காட்டினார். பி.கே. சிவகுமார் எழுதியவை சில கிடைத்தாலும் எல்லாமும் கிடைக்கவில்லை.
வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை என்ற சுட்டியில் ஜெயமோகன் எழுதியது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
தமிழ்ப்பண்பாடு ஆரம்பம் முதலே எப்படி சம்ஸ்கிருத மரபைச் சார்ந்துள்ளது என்று விளக்கிய வையாபுரிப் பிள்ளை தமிழ்பண்பாட்டை சம்ஸ்கிருதக் கல்வி இன்றி முழுக்க புரிந்து கொள்ள இயலாதென்றார். தமிழின் தனித்துவத்தை அங்கீகரித்தவர் அவர். தமிழாய்வுக்கு சம்ஸ்கிருதக் கல்வியை வலியுறுத்தியதோடு சமஸ்கிருதம் என்ற வளம் மிக்க மொழி மீது தமிழர்களுக்குள் உருவாக்கப்பட்ட வெறுப்பு ஆபத்தானது என்று வாதிட்டார். ஆகவே அவர் பிராமண ஆதரவாளர் என்று சொல்லப்பட்டார். ஆனால் மொத்தமாகப் பார்க்கையில் மனோன்மணியம் சுந்தரனார் வழிவந்த வையாபுரிப்பிள்ளையிடம் பிரமாண நிராகரிப்பு நோக்கே விஞ்சி நின்றது என இன்று காணமுடிகிறது.
நானும் சமஸ்கிருதமும் தமிழும் திராவிட இயக்கத்தினர் சொல்வதை விட அதிக தொடர்பு உள்ளவை என்று நினைக்கிறேன்தான். ஆனால் பிள்ளை தமிழ் பண்பாடு சமஸ்கிருத மரபை சார்ந்தது என்று நினைத்ததாக சொல்வது எனக்கு மிக வியப்பாக இருக்கிறது. எனக்கு சமஸ்கிருதம் தெரியாதுதான், ஆனால் இவை இரண்டும் வேறு வேறு, ஒன்றுக்கொன்று ஏதோ கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் நடந்திருக்கிறது என்பதுதான் என் எண்ணம். ஒரு தமிழறிஞர் இப்படி நினைத்தார் என்பது அதிசயமாக இருக்கிறது. எந்த மொழி மீதும் வெறுப்பு என்பது ஆபத்தானதுதான். சமஸ்கிருத கல்வி தமிழ் பண்பாட்டை நன்றாக புரிந்து கொள்ள உதவக் கூடும் என்பது சரிதான் – சமஸ்கிருதம் என்ன, தெலுகு, கன்னடம், மலையாளம் கூட உதவத்தான் செய்யும். அதற்காக தமிழ் பண்பாடு தெலுங்கு பண்பாட்டை சார்ந்தது என்று சொல்லி விட முடியாதே?
இந்த முறை இந்தியா செல்லும்போது பிள்ளையின் நூல்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.


April 17, 2009 at 5:37 மு.பகல்
சமஸ்கிருதத்தை தேவ பாடை என்று கருதுவோர், வையாபுரிப்பிள்ளை போன்று கருத்துடையவர்களாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
இவர்களெல்லோரும் தமிழில் சமஸ்கிரதம் கலந்திருப்பதை ஒப்புக் கொள்வது போல் சமஸ்கிரதத்தில் இருக்கும் தமிழ்சொற்களை அது தமிழ்ச் சொல்தானென்று ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள்.
April 17, 2009 at 4:31 பிற்பகல்
கோவி. கண்ணன்,
நீங்கள் சொல்வது சரியாக புரியவில்லை. // சமஸ்கிருதத்தை தேவ பாடை என்று கருதுவோர், வையாபுரிப்பிள்ளை போன்று கருத்துடையவர்களாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
இவர்களெல்லோரும் தமிழில் சமஸ்கிரதம் கலந்திருப்பதை ஒப்புக் கொள்வது போல் சமஸ்கிரதத்தில் இருக்கும் தமிழ்சொற்களை அது தமிழ்ச் சொல்தானென்று ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள் //
நீங்கள் இவர்கள் என்று சொல்பவர்கள் யார்?
ஜூலை 31, 2009 at 1:52 மு.பகல்
ஏப்ரலில் வந்த பதிவுக்கு மிப்போது பின்னூட்டம் தாமதம் தான். இப்போது தான் கண்ணில் பட்டது.
சமஸ்க்ரிதம் தமிழைப் போன்ற ஒரு மொழி. அது தேவ பாஷை என்பதெல்லாம் உயர்வு நவிற்சி. அதே சமயம் இரு மொழிகளை ஒப்பு நோக்கி உயர்வு தாழ்வு என்பதே மடமை என்பேன்.
(ஒரு மொழியில் கவிதை எழுதுபவர்கள் மொழியை நேசிப்பவர்கள்.. கட்டுரை எழுதுபவர்கள் எழுதப் படும் பொருள் மீது அதிகம் நேசம் உள்ளவர்கள். அந்தக் காலத்தில் உரைநடை இல்லை. வடமொழியில் இருந்து வந்தவை கவிதைகளே ).
சில . .பதங்கள் — அல்ல, சொற்கள் — தமிழில் இருந்தும் வடமொழிக்கு போயிருக்க வேண்டும்; இயற்கையின் நியதி.. என் சிற்றறிவுக்கு , எட்டியவரை மீன், , நீர் , ஆகியவை –அல்ல — முதலியவை தமிழில் இருந்து போனதாகத் தோன்றுகிறது.
தவிர, வட மொழியையும் படித்தால் நல்லது என சொல்லலாம்; ஆனால் தமிழ் பண்பாட்டை புரிந்து கொள்ள வட மொழி கற்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பிற பகுதிகளின் நாகரீகத்துடன் தமிழ் பண்பாட்டை ஒப்பு நோக்குவதற்கு பிற மொழிகளில் உள்ள இலக்கியங்களை படித்து செய்வது சரி என்று கூறலாம்.
தமிழ் மொழி அறிஞர் களாகட்டும் , வடமொழி அறிஞர் களாகட்டும் இதர மொழிகளை கற்க முன் வராதது பரஸ்பர வெறுப்புக்கு ஒரு காரணம் என எண்ணுகிறேன். மேலும் திறந்த மனதுடன் இது போன்ற விஷயங்களை அணுக வேண்டும் . அது இல்லாத வரை விவாதங்கள் ஒரு பயனும் அளிக்காது.
ஒன்று சொல்ல வேண்டும்: மொழியை ஒரு கருவியாக பார்க்காமல் உயரத்தில் வைத்து, உயிர் என்றெல்லாம் கூறுவது தான் பரந்த மனப்பான்மை முளைக்க விடவில்லை. (என்னை தமிழ் துரோகி எனச் சொல்ல போதுமானவை சொல்லி விட்டேன் என நினைக்கிறேன். )
ஆகஸ்ட் 3, 2009 at 8:41 மு.பகல்
நெற்குப்பை.தும்பி,
மொழி பற்றிய உங்கள் கருத்தில் எனக்கும் அனேகமாக இசைவு இருக்கிறது.
ஆகஸ்ட் 3, 2009 at 10:05 மு.பகல்
நெற்குப்பை சொல்கிறார் “தமிழ் மொழி அறிஞர் களாகட்டும் , வடமொழி அறிஞர் களாகட்டும் இதர மொழிகளை கற்க முன் வராதது பரஸ்பர வெறுப்புக்கு ஒரு காரணம் என எண்ணுகிறேன்.”
அது எனக்கு தெரிந்து உண்மையில்லை. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த வடமொழி அறிஞர்கள் – தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள், மேலும் தமிழ் அறிஞ்ரகள் கூட. சில வருடங்கள் முன் கூட ஒரே நபர் Professor of Sanskrit and Tamil (e.g. prof.Raghavan) இரு மொழிகளிலும் பேராசிரியராக இருந்துள்ளார். வேதாந்த தேசிகர் போன்ற வைணவ ஆசாரியர்கள் இரு மொழிகளிலும் மத விஷயங்களை எழுதியுள்ளனர். எனக்கு தெரிந்து மற்ற (இந்திய)மாகாணங்களிலும் சமஸ்கிருதம், மாகாண மொழி இரண்டிலும் புலமை பெற்ற பலர் இருக்கிறனர் – உதாரனம் பாலகங்காதர் திலக் , மராட்டியர்.
வடமொழி புலமை இருக்கோ இல்லியோ, மாகாண மொழி புலமை பொதுவாக மரபாக எல்லா படித்தவரிடமும் இருந்தது. இதற்கு விதிவிலக்கு தற்காலம் – இந்தியாவில் தற்காலத்தில் ஆங்கில மொழி ஒன்றே போதும் – நல்ல வேலை, அந்தஸ்து, படிப்பு போன்றவைக்கு.
விஜயராகவன்
ஆகஸ்ட் 11, 2009 at 12:21 பிற்பகல்
நான் சொன்னது பெரிய அளவில் என்று இருந்திருக்க வேண்டும். விதி விலக்குகள் பல உண்டு. தே. போ.மீ, அப்பாதுரை போன்ற பன் மொழி புலவர்கள் இங்கும் உண்டு.
அந்த கால கட்டத்திலும் கம்பர் வட மொழியைக் கற்காமல் ராமாயணம் எழுதி இருக்க முடியாது. அவர் ஆத்திகர். பிரச்னையே நாத்திகர்களாலும் , திராவிடம் பேசுபவர்கள் வடமொழியை தமிழுடன் ஒப்பிட்டு உயர்வு தாழ்வு என்று பேசுவதால் தான் எனத்தான் சொல்ல விரும்பினேன்.
வட நாட்டிலும் தென் இந்திய மொழிகள் தமிழ் போன்ற வேறு மொழிக் கூட்டம் என அறியாதது, அல்லது கேட்டிருந்தால் நம்பாதது
ஆகஸ்ட் 11, 2009 at 9:41 பிற்பகல்
நாத்திகர்கள் மொழிகளை ஒப்பிட்டு உயர்வு தாழ்வு என்று பேசினால், அவர்கள் போலி நாத்திகர்கள். `திராவிடம்` என்பது ஒரு மொழி அல்ல, திராவிடம் என்பது மொழிக் குடும்பம். அது ஒரு category, அவ்வளவுதான். ஒரு மொழிக் குடும்பத்தை யாரும் பேச முடியாது. தமிழ் என்பது மொழி. தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள், மரபாக உயர்வு தாழ்வு என பேசியது கிடையாது. இரண்டிலும் புலமை வாய்ந்தவர்கள் இருந்தனர், இருக்கின்றனர்.
ஆகஸ்ட் 12, 2009 at 7:15 மு.பகல்
நான் நாத்திகன். தமிழன். சமூக நீதிக் காரணங்களுக்காக, தமிழில் பூசனைகள் செய்யும் வழிமுறைகள் நிறுவப்பட வேண்டுமென்று நினைப்பவன். ஆனால் ஒரு மொழி மற்றொன்றை விட உயர்ந்ததென நினைப்பதை மனித வரலாற்றைக் கற்றுணராதவர்களின் தவறான அபிப்பிராயம் என்று கருதுபவன். தமிழ், வட மொழியை விட உயர்ந்தது என்றோ வட மொழி தேவ மொழி என்று நினைப்பதோ அந்தந்த இனத்தோரின் குறுகிய அறிவின் வெளிப்பாடே. கோபாலும் பாஸ்கலும் ஒரு காலத்தில் மிக அத்தியாவசியமான கணிணி மொழிகள். வட மொழி சமுதாயத்தில் கோலொச்சியது போல. இப்போது அவை புழக்கத்தில் இல்லை. அதனால் அவை தற்போது இருக்கும் மொழிகளுக்குத் தாழ்ந்தவை அல்ல. அதே நேரம் அடிப்படை தகவல் பரிமாற்றத்திற்கு அடிகோலிய ஒரே காரணத்திற்காக ஆதி மொழிகளை இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது.
தகவல், தொழில், அறிவியல், கலை – இலக்கியம் – இசை, தத்துவம், அரசியல், மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம், வரலாறு, புவியியல் தளங்களில் எந்த மொழி வசதியாக இருக்கிறதோ அதுவே அந்தந்த சமூகத்திற்கு சிறந்த மொழி. இல்லையேல், வட மொழி பரவலாக கற்றுக் கொடுக்கப் படாததால் அழிவுற்றது போல் பிற மொழிகளும் அழிய வேண்டியதுதான்.
தமிழைத் தமிழே வாழ வைத்துக் கொள்ளும். தமிழ் மொழி வளர்ச்சியை அறிஞர்கள் கையிலிருந்து அரைவேற்காடு அரசியல் வாதிகள் பிடுங்கிக் கொண்டு ஓட்டுப் பிச்சை எடுக்கும் பாத்திரமாக மாற்றியிருப்பதால் தமிழறிவு என்பது uncool ஆகி விட்டது. தமிழும் காலத்திற்கேற்ப வளைந்து நெளிந்து வளர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
இல்லையேல், பெரியாரின் நல்ல கருத்துக்களுள் ஒன்றை நினைத்துக் கொள்வோம்: “ஆங்கிலம், தமிழனின் பேச்சு மொழியாக ஆகும் நாளில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்”.
ஆகஸ்ட் 25, 2009 at 7:03 மு.பகல்
பின்னூட்டங்கள் பதிவுக்கு வண்ணம் கூட்டுகின்றன.
கோபால், பாஸ்கல் கணினி மொழிகளுடன் வடமொழியை ஒப்பிட்ட்டமை அருமை.
மொழிகளில் உயர்வு தாழ்வு எனப் பேசுவது அறியாமை என்பதே இப்பதிவு, மற்றும் பின்னூட்டங்கள் உணர வைக்கின்றன.
இறுதியில்
//…இல்லையேல், பெரியாரின் நல்ல கருத்துக்களுள் ஒன்றை நினைத்துக் கொள்வோம்: “ஆங்கிலம், தமிழனின் பேச்சு மொழியாக ஆகும் நாளில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்//
என்று சொல்லி இருப்பது இடறுகிறது. தமிழர்கள், என்ன தான் ஆங்கில மோகம் கொண்டு அலைந்தாலும், தமிழை தொடர்ந்து கற்று, பயன் படுத்தி, பெரியார் ஏளனத்துடன் சொல்லியது போல் ஆகாமல் தமிழைக் காப்பார்கள் என நம்புவோம்