
வெகு நாட்களாக இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று ஒரு ஆவலிருந்தது. RVயிடம் புத்தகத்தை கேட்டிருந்தேன். ஓவ்வொரு முறையும் அவனிடமிருந்து விடைபெறும் பொழுது மறந்து விடுவேன். என்னுடைய பெண் பிருந்தாவிற்கு இலக்கிய வகுப்பிற்க்காக பள்ளியில் இந்த புத்தகம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை அவள் படித்து முடித்தும் நான் எடுத்துக் கொண்டேன். அவள் ஒரு எச்சரிக்கை கொடுத்தாள். “Daddy, don’t read the introduction, it will give away the story” என்றாள். நானும் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு பிரிஃபேஸ், இண்ட்ரொடக்ஷன் இரண்டையும் விட்டு விட்டு படிக்கத் தொடங்கினேன். பின்னர் அவை இரண்டையும் படித்து சரி பார்த்தேன். பிருந்தா சொன்னது ஓரளவு சரியாகத்தானிருந்தது. கதையில் வரும் மேஜர், ஸ்னோபால், நெப்போலியன் கதாபாத்திரங்களை நிஜபாத்திரங்களுடன் உடனே அடையாளம் கண்டுகொண்டேன். இன்னும் சில பாத்திரங்களையும் கண்டு கொள்ளமுடிந்தது. சில பாத்திரங்களை கண்டுபிடிக்கமுடியவில்லை.
பண்ணை வைத்திருக்கும் மிஸ்டர்.ஜோன்ஸை எதிர்த்து பண்ணை மிருகங்கள் புரட்சி செய்து பண்ணையின் நிலைமையை மாற்றிய கதை. இது காலத்தினுடன் சேர்த்து பார்த்து படித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இப்பொழுது படிப்பவர்களுக்கு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரியவில்லை. ரஷ்யப் புரட்சி, கம்யூனிஸம், கார்ல் மார்க்ஸ், லெனினின், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி ஆகியவர்களின் மேல் நாட்டமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த இலக்கியம்.
ஜார்ஜ் ஆர்வெல் கலையையும், அரசியலையும் பிணைத்து அழகான இலக்கியமாக Animal Farmஐ நமக்கு வழங்கியுள்ளார். இன்றைய காலத்தில் ”அரசியலில் இதெல்லாம் சகஜம்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 1920-1950 காலகட்டங்களில் புரட்சி மலர்ந்தால் நமக்கு தினம் விருந்து என்று கனவு கண்டு கொண்டிருந்த பல கோடி மக்களுக்கு அரசியல்வாதிகளின் அந்தர் பல்டிகள் மிகுந்த ஏமாற்றமாகியிருக்கலாம். இன்று இருக்கும் நமக்கு அரசியல்வாதிகள் செயல்கள் இவ்வளவு ஏமாற்றம் அடைய செய்யாது. ஏனென்றால் அன்றைய காலத்தை விட இன்று அரசியல்வாதிகள் நிறையவே மக்களை தலையில் மிளகாய் அரைத்து மொட்டையாக்கி விட்டார்கள். ஏதாவது கொஞ்சம், நஞ்சம் முடி இருந்தாலும் அதையும் திருடி விற்று காசு பார்த்துவிடுவார்கள். இதனால் மக்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை கேட்டும், செயல்களை பார்த்தும் தங்கள் மொட்டை தலையை தடவிப் பார்த்து பழகிக் கொண்டார்கள்.
இன்று Animal Farmஐ இலக்கிய ஆர்வத்துடன் படிப்பவர்களுக்கு, இது இன்றும் மகிழ்வூட்டும் ஒரு புத்தகம். மிருகங்களின் ஏழு கட்டளைகள் (மோசஸின் 10 கட்டளைகளை போல்), Beasts of England என்ற கவிதை எல்லாம் நல்ல தமாஷ்.
அதிகம் கதையை சொல்லவேண்டாம் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புத்தகத்தை ஆன்லைனில் படிக்க விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.
April 3, 2009 at 1:44 மு.பகல்
//ஆனால் 1920-1950 காலகட்டங்களில் புரட்சி மலர்ந்தால் நமக்கு தினம் விருந்து என்று கனவு கண்டு கொண்டிருந்த பல கோடி மக்களுக்கு அரசியல்வாதிகளின் அந்தர் பல்டிகள் மிகுந்த ஏமாற்றமாகியிருக்கலாம்.//
உண்மைதான். ஜார்ஜ் ஆர்வெல்லே அதற்கு ஒரு உதாரணம். அதுதான் அவர் எழுதிய 1984-க்கும் காரணம் என அறிகிறேன்.
The God that failed (பூஜித்த தெய்வம் பொய்த்தது) என்ற தலைப்பில் ஆறு மாஜி கம்யூனிச சிந்தனையாளர்கள் கம்யூனிசம் பற்றிய தமது கருத்துக்களை ஆவணப்படுத்தியுள்ளனர். அவர்கள்: Andre Gide (France), Richard Wright (the United States), Ignazio Silone (Italy), Stephen Spender (England), Arthur Koestler (Germany), and Louis Fischer, an American foreign correspondent.
அன்புடன்,
டோண்டு ராகவன்
April 3, 2009 at 2:08 மு.பகல்
சமீபத்தில் ஆர்வெல் ரோல்ஸ் இன் ஹிஸ் கிரேவ்
“Orwell Rolls in His Grave” என்று ஒரு ஆவணப்படம் அமெரிக்காவில் வெளிவந்தது.. அதையும் பார்க்கவும். அதாவது ஆர்வெல் சோசலிச ரசியாவை பற்றி பணம் பெற்று கிறுக்கியவை இன்று முதலாளித்துவ அமெரிக்காவுக்கு எப்படி பொருந்துகிறது என்பதைப் பற்றியது. கருத்துரிமை ஆர்வலர்கள் அவசியம் பார்க்க வேண்டும். இது குறித்து பி.பி.சி எழுதியது
From BBC:
If Fahrenheit 9/11 lit a match under the Bush administration, this homemade documentary about the manipulation of the media by America’s ruling elites solemnly stokes the resulting flames of angry discontent. Filmmaker Robert Kane Pappas’s long-winded yet terrifyingly bleak Orwell Rolls In His Grave argues that the mainstream American media are no longer the voice of American freedom. Instead, they’re part of a repressive political power structure that has uncanny parallels with the dystopian world of George Orwell’s novel 1984…
Exploding the myth of the American media’s liberal bias, the film asks tough questions: why, in March 2003, did 51% of Americans believe that Saddam Hussein was personally responsible for 9/11? Why did CBS hurriedly drop a BBC-led story about electoral irregularities in Florida after the subject of the allegations – Governor Jeb Bush – denied it was true?…
Jamie Russell November 14 , 2004
For complete review: http://www.bbc.co.uk/films/2004/11/10/
ஆர்வெல் மட்டுமல்ல இன்னமும் பல அறிஞர்கள் கம்யூனிச அவதூறு பிரச்சாரத்துக்காக விலைக்கு வாங்க பட்டார்கள்… அவர்களும் உருண்டு கொண்டிருப்பர் என நம்புவோம். அவர்களை பற்றிய சுட்டிகள் http://tinyurl.com/cf8vcj
மற்றும் http://tinyurl.com/dao42c
April 10, 2009 at 5:26 மு.பகல்
அன்புள்ள அரை டிக்கெட்,
ஜார்ஜ் ஆர்வல் பணத்துக்கு விலை போனவர் என்று நம்புவது கஷ்டம். அவரேதான் Homage to Catalonia எழுதி இருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறேன். 1937-இல் Homage to Catalonia எழுதியவர் Animal Farm-உம், 1984-உம் எழுதியதற்கு ஒரே காரணம் அவர் விலை போய்விட்டார் என்பதை விட அவர் மனம் மாறிவிட்டது என்பதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடியது. நீங்கள் எல்லாவற்றிலும் conspiracy theory தேடுகிறீர்கள். கம்யூனிச ஆதரவாளர் ஒருவர் கம்யூனிசத்துக்கு எதிராக மாறினால் அதற்கு ஒரே காரணம் அவர் விலை போனதுதான் என்ற முடிவில் இருக்கிறீர்கள் போல.
நீங்கள் ஆர்வெல்லுக்கு எதிராக காட்டும் ஆதாரம் என்ன? // பிரிட்டிஷ் உளவு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்த செலியா என்ற பெண் 1996இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
“1949இல் ஆர்வெல்லை கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் உளவு வேலை தொடர்பாகச் சந்தித்தேன். அவருக்கு இவ்வேலையில் பெரும் ஆர்வம் இருந்தபோதிலும் உடல்நிலை சரியில்லாததால் இயலவில்லை என்று கூறிவிட்டு, பத்திரிக்கைத் துறையில் உள்ள கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலைக் கொடுத்தார். தான் ஆள்காட்டிய விசயம் வெளியே தெரிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.” //
இது ஒன்றுதான். செலியா கிர்வான் ஆர்வெல்லை சந்தித்து கம்யூனிச எதிர்ப்பு பிரசாரங்களை யார் எழுதலாம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஆர்வெல் யாரெல்லாம் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் – அதனால் கம்யூனிச எதிர்ப்பு பிரசுரங்களை எழுத சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார். கவனிக்கவும், இது கம்யூனிச சார்பு எழுத்தாளர்களை ஜெயிலுக்கு அனுப்ப அல்ல. அவர்கள் மீது கேஸ் போட அல்ல. ஒரு குறிப்பிட்ட வேலையை யார் செய்ய தகுதி இல்லாதவர்கள் என்று நிறுவும் ஒரு preliminary screening. இதுதான் அவர் பணம் வாங்கிக்கொண்டு கம்யூனிசத்தை எதிர்ப்பதற்கு நீங்கள் காட்டும் ஆதாரம்.
நான் அடிக்கடி சொல்வது உங்களுக்கு தெரியும் – எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்… ஆர்வெல் ஒரு துரோகியாவே இருந்துவிட்டு போகட்டும். அதனால் அவர் சொல்வது எதுவும் நம்பத் தகுந்தது இல்லை என்று ஆகிவிடுமா? Animal Farm அருமையான புத்தகம். உலகின் தலை சிறந்த புத்தகங்களில் ஒன்று. அவர் சொல்வதைப் பாருங்கள். அந்த நிலை இன்று அமெரிக்காவிலும் நிலவுகிறதா, அதை நம்மால் முடிந்த அளவு மாற்றுவோம். அவ்வளவுதான். அப்புறம் 1984 எல்லா இசங்களையும் கண்டிக்கிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அமேரிக்கா உருப்படும் என்று அந்த புத்தகத்தில் அவர் எழுதவில்லை. அமெரிக்காவிலும் ஏதோ சிலரே செய்திகளை கட்டுப்படுத்துவார்கள் என்றுதான் எழுதி இருக்கிறார்.
April 9, 2009 at 6:47 பிற்பகல்
டோண்டு ராகவன், அரைடிக்கட் நன்றி
டோண்டு நான் The God that failed படித்ததில்லை. என் லிஸ்டில் சேர்த்துக்கொள்கிறேன். 1984 பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
அரைடிக்கட்,
ஜார்ஜ் ஆர்வெல் சூழ்நிலையால் கம்யூனிஸத்திற்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறார். ஈடனில் ஸ்காலர்ஷிப்பில் படிக்கும் பொழுது out of placeஆக உணர்ந்திருக்கிறார். பணக்காரர்கள் படிக்கும் இடத்தில் (நேரு, இந்திரா போன்றோர்கள் எல்லாம் இங்கே படித்தார்கள் – நான் ஈடன் கல்லூரிக்கு சுற்றுலா பயணியாக சென்றபோது பார்த்திருக்கிறேன். கட்டிடங்களே நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்) அவருக்கு ஒத்துப் போகவில்லை. மேலும் அவர் கம்யூனிஸ சித்தாந்தத்தால் கவரப்பட்டவரே தவிர யதார்த்த கம்யூனிச அரசியலுக்கு துணை போனவராகத் தெரியவில்லை. அதனால் அவருக்கு நடைமுறை கம்யூனிசத்தின் மேல் வெறுப்பு வளர்ந்தது இயற்க்கையே.