April 2009


ரதி என்ற நண்பரோடு இணைய தளத்தில் சில சண்டைகள் போட்டிருக்கிறேன். ரதி புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர். புலிகளின் தீவிர ஆதரவாளர். அவரது வாழ்க்கை அனுபவங்களை பற்றி அவர் எதார்த்தமாக சொன்ன சில விஷயங்களை வைத்து பார்க்கும்போது அவரது அந்த தேர்வு புரிந்து கொள்ளக்கூடியதுதான். நானோ புலம் பெயர்ந்த தமிழன். ஒரு 25 வருஷங்களாக புலிகள், குறிப்பாக பிரபாகரன் ஃபாசிஸ்ட் என்று நினைப்பவன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதும், வேறு வேறு perspective-கள் இருப்பதும் புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்தானே! ஆனால் எங்கள் இருவருக்கும் ஒரு விஷயத்தில் முழு உடன்பாடு இருக்கிறது – இப்போது இலங்கையில் நடப்பது genocide, இந்தியா இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது.

ஆனால் ரதி நான் மதிக்கும் இணைய நண்பர்களில் ஒருவர். இணைய தளத்தில் பதிவு எழுதுவதின் பெரிய பலனே ரதி, சேதுராமன், டோண்டு, சாரதா, நல்லதந்தி, சுபாஷ், முரளி, சூர்யா, அரை டிக்கெட், போன்ற பலரோடு ஏற்பட்ட பழக்கம்தான்.

காங்கிரஸ்தான் இலங்கை தமிழர்களை பொறுத்த வரை நல்ல சாய்ஸ் என்ற பதிவு ரதிக்கு உடன்பாடு இல்லாதது. அவரை நான் கேட்டிருந்தேன் – ஒரு இலங்கைத் தமிழர் என்ற முறையில் யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று நினைக்கிறீர்கள் என்று. அவர் அளித்த பதில் மிக அருமையாக இருந்தது. அதை இங்கே பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு ரதி!

//தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?//

அரசியல், கட்சிகள், அரசியல் தலைவர்கள் என்ற கருத்தியல் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான் உள்ளது என்பது என் கருத்து. அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும், வாக்காளர்களும் தொண்டர்களும் பகதர்களாக மட்டும் இருப்பதால் அரசியல்வாதிகள் அவர்களை பகடைக்காய்களாக வைத்து பரமபதம் ஆடுகிறார்கள். ஆட்சியில் உட்கார்ந்தவுடன் தங்கள் சொந்த நலன்களைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். பக்தர்களை மறந்துவிடுகிறார்கள், அடுத்த தேர்தல் வரும்வரை. இதற்கு இந்தியாவும்/தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வோடும் கலந்துவிட்டது.

ஆனாலும், நான் எந்த இந்தியா/தமிழ்நாடு கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ அபிமானி கிடையாது. அது கூட எங்கள் ஈழப்பிரச்சனையை வைத்து இவர்கள் அரசியல் நடத்துவதால் தான். அதுபோக, தமிழ்நாட்டு தமிழர்களுக்காவது உண்மையாக இருக்கிறார்களா? அதுவுமில்லை.

தேசிய அளவில் இந்தியாவில் எந்த கட்சியாவது ஒட்டு மொத்த இந்தியர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா?பெரும்பாலும் சாதி அல்லது வேறு ஏதோ ஒரு விடயத்தை ஒவ்வொரு மாநிலமும் அதன் கட்சியும் முன்னிலைப்படுத்துகின்றன. மாநில அளவில் கட்சிக்களுக்கிடையில் குத்துச்சண்டை போடாத குறையாக ஆட்சி நடத்துகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்த எந்த கட்சியும் தேசிய அளவில் கிடையாது. இதில் நான்/நாங்கள் எந்த கட்சியை நம்புவது. அது தவிர, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்துக்காவது ஈழத்தமிழனில் அக்கறையுள்ளதா? தேசிய அளவில் எந்த கட்சியாவது ஈழத்தமிழன் பிரச்சனையை பேசுகிறதா?

ஆனால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏதாவது மாற்றம் கொண்டுவந்தால் அல்லது அதற்கு எந்த கட்சியாவது ஆதரவளித்தால் அதன் பிறகு பார்க்கலாம். இன்னும் இந்திராவின் காலத்தில் உருவாக்கிய வெளிநாட்டுக்கொள்கையின் அடிப்படையிலேயே ஈழப்பிரச்சனையை அணுகினால் எந்த கட்சியையும் நாங்கள் எப்படி நம்புவது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் விடுதலையை நாங்கள் தான் போராடிப் பெறவேண்டும் என்ற நிலைதான் எங்களுக்கு. இந்தியா எங்களுக்கு விடுதலையை பெற்றுதரும் என்று நம்ப ஈழத்தமிழன் முட்டாளும் அல்ல. இருந்தாலும், ஈழத்தமிழனின் இன‌ப்படுகொலைக்கு துணை போகாத, எங்கள் ஈழவிடுதலையை தங்கள் தேசிய நலனுக்காக நசுக்க நினைக்காத எந்த கட்சியும் எனக்கு சம்மதம். அப்படி ஒர் தேசிய அளவிலான கட்சி இந்தியாவில் உள்ளதா?

ரதி சொல்வது மாதிரி இந்திரா காலத்திலிருந்து நமது அணுகுமுறை மாறத்தான்வில்லை. இந்தியாவின் நலனுக்காக ஈழத் தமிழரை ஒரு pawn ஆக கருதும் மனநிலைதான் உள்ளது. இந்திரா போராளிகளை வைத்து இந்தியாவை தெற்கு ஆசிய வல்லரசாக ஆக்க நினைத்தார். ராஜீவ் அதை தொடர்ந்தார் – ஆனால் அகலக் கால் வைத்துவிட்டார். புலிகளின் சம்மதம் இல்லாமல் அவர் போட்ட ஒப்பந்தம் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தியது. (அதற்கு காரணம் புலிகளின் ஃபாசிஸ்ட் மனநிலை, புலிகளை அற்பமாக ராஜீவ் நினைத்தது) ராஜீவ் மரணத்துக்கு பிறகோ புலிகளை அடக்க எத்தனை தமிழர் செத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை இருக்கிறது.

ரதியோடு எனக்கு எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தபோதும் இந்த கருத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்.

பூரணலிங்கம் பிள்ளை

பூரணலிங்கம் பிள்ளை

சேதுராமனின் அடுத்த guest post.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

தமிழ் இலக்கியத்தைப் பற்றி விரிவானதொரு திறனாராய்ச்சிப் புத்தகம் முதன் முதலாக எழுதியது இவராகத்தானிருக்கும். 1904ம் வருடம் “A Primer of Tamil Literature” என்ற புத்தகம்தான் இவர் முதலில் எழுதியது. இதன் மறுபதிப்பு 1929ல் வெளி வந்தபோது அப்புத்தகத்திற்கு “Tamil Literature” எனப் பெயரிடப்பட்டது.

திருநெல்வேலிக்கருகேயுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற சிற்றூரிலே 1866ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி பிறந்தவர் பூர்ணலிங்கம். அவ்வூர்ச் சிவன் கோயிலுள்ள பெருமானின் பெயர் பரிபூர்ணக்ருபேசர் அல்லது பூர்ணலிங்கம் என்பது. அங்கு வாழும் மக்கள் தம் குழந்தைகளுக்கு பூரணலிங்கம் என்ற பெயரிடுவது இன்னமும் வழக்கில் உள்ளது. இவரது பெற்றோர் திரு. சிவசுப்பிரமணியப் பிள்ளை, திருமதி வள்ளியம்மை என்பவர்கள்.

இளம் வயதில் ஊரிலுள்ள திண்ணைப் பள்ளியில், செல்லப் பெருமாள் வாத்தியார் என்ற ஆசிரியரிடம் கல்வி பயின்றார். பூரணலிங்கத்தின் தந்தையும் செல்லப் பெருமாளிடமே கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு அருகிலுள்ள மேலப்பாளையம் பள்ளிக் கூடத்தில் சுந்தரம்பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கணமும், திருக்குறளும் மனதிலே நன்றாகப் பதியும்படி பாடம் கேட்டுத் தேர்ந்தார். அடிப்படைத் தமிழ்க் கல்வி முடிந்ததும் தருவையிலுள்ள பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் பயின்றார். தனது ஹைஸ்கூல் படிப்பை, இன்று ஹிந்து கல்லூரி என்றழைக்கப்படும், ஆங்கிலத் தமிழ்ப் பள்ளியிலே படித்துத் தமது பதினைந்தாவது வயதில் நடுப்பள்ளித் தேர்வில் வெற்றிபெற்று, அதற்கடுத்த ஆண்டு இரட்டைத் தேர்வு பெற்று, மெட்ரிகுலேஷன் படிப்பும் முடித்தார்.

நிதிப் பற்றாக்குறை காரணமாக பூர்ணலிங்கம் மேலே தொடர்ந்து படிக்க முடியாமல், பரமக்குடியிலுள்ள முன்சீஃப் கோர்ட்டிலே எழுத்தாளராகப் பணியாற்றத்தொடங்கினார். இந்த விஷயம் அறிந்து ஹிந்து கல்லூரி பேராசிரியர் விங்க்ளேர் இவர் பட்டப் படிப்பை முடித்தாக வேண்டும் என்ற அன்புக் கட்டளையிட்டு அதற்கு ஆவன செய்து எஃப்.ஏ. தேர்வில் வெற்றியடையச் செய்தார். அப்போது கல்லுரியில் நடந்த மில்லர் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. முதல் வகுப்பில் சேர்ந்தார். டாக்டர் மில்லரே இவர் வகுப்பிற்கு ஆங்கிலப் பாடங்கள் எடுத்தவர். பி.ஏ.பட்டம் பெற்ற பின் பூரணலிங்கம் தனது சகோதரி திருமணத்திற்காக ஊருக்குத் திரும்பியவர் முதலில் எழுத்தாளராக, நெல்லை மாவட்டக் கலெக்டர் காரியாலயத்திலும், பின்னர் பாளையம் கோட்டையிலுள்ள இந்து உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகவும் பணி புரிந்தார்.

திருநெல்வேலியில் பணி புரிந்த போது, தாயம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டக் கலெக்டர் வேண்டுகோளின்படி எட்டயாபுரம் ஜமீன் இளவரசுக்குக் கல்வி கற்றுத் தரத் தொடங்கி அப்பணியை இனிதே முடித்தார். வாழ்க்கை முன்னேற்றம் கருதி, பணியில் இருந்தவாறே சட்டப் படிப்பு முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வந்தார். இவர் சென்னை வந்த செய்தி கேட்டு டாக்டர் மில்லர் கிறிஸ்தவக்கல்லூரியிலும், உயர் பள்ளியிலும் ஆசிரியப்பணி தந்து ஆதரித்தார். கல்லூரியில் இவர் வேலை பார்க்கும்போது (1894-1899) அங்கு தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) இவருக்கு ஒப்புயர்வற்ற நண்பரானார். இவ்விருவரும் சேர்ந்து சென்னைக் கடற்கரையினில் செய்து கொண்ட முடிவின் பயனாக எழுந்தவைதான் தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்கள். பரிதிமால் கலைஞரால் எழுதப் பெற்றது தமிழ்மொழி வரலாறு – தமிழ் இலக்கிய வரலாறைப் பூரணலிங்கம் ஆங்கிலத்தில் எழுதினார்.

1900ம் வருஷம் முதல் 1904ம் வருஷம் வரை கோயம்புத்தூர் செயிண்ட் மைக்கேல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், 1904 முதல் 1911 வரை திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், பணி புரிந்தார். 1912 முதல் 1919 வரை சென்னையில் இருந்தபோது சொந்தமாக கெமிசிசு என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அதே காலத்தில் JUSTICE என்ற ஆங்கிலத்தாளுக்குத் துணையாசிரியராகவும் இருந்தார்.

1920 முதல் 1922 வரை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், பின்னர் 1926 வரை திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரித் தலைவர் கார்டினர் வேண்டுதலின் பேரில் ஆங்கிலத் தலைமையாசிரியராகவும் பணி புரிந்தவர், ஓய்வு பெற்று முந்நீர்ப் பள்ளம் திரும்பினார்.

ஓய்வு காலத்தில் தமிழ்ப் பணியிலும், ஆங்கிலத்திலும் தமிழிலும் பேருரைகள் நிகழ்த்துவதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இடைவிடாது படித்துக் கொண்டே இருப்பார். சட்டம் பயின்றும், வழக்குரைஞர் வாழ்க்கையில் பற்றில்லாமையால் பி.எல்.தேர்வினை எழுதாது விட்டுவிட்டார். யாரையும் எளிதில் நம்பும் தன்மையுடையவர். எவரும் வியக்கும் வண்ணம் பல வகைத் துன்பங்களையும் புறங்கண்டு, எவர் துணையினையும் எதிர்பாராமல் வாழ்ந்தவர், தனது எண்பத்தோராவது வயதில் (1947ல்) காலமானார்.

இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு.

பூரணலிங்கம் பிள்ளை ஆங்கிலத்தில் முப்பத்திரண்டு நூல்களும், தமிழில் பதினெட்டு நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார். ஆங்கில நூல்கள் வருமாறு:

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றிய பல்கலைக் கழக வினாக்கள் — ஷேக்ஸ்பியர் பாடல்கள் — கோல்ட்ஸ்மித்தின் கதைகள் — கார்லைல் எழுதிய அபட்டு சாம்சன் — ஆங்கில இலக்கிய விளக்கத் தொகுப்பு — ஆங்கிலத்தில் பயிற்சிகள் — ஆங்கிலத்தில் பேச்சு முறை — மெட்ரிகுலேஷன் வாசகம் — மெட்ரிகுலேஷன் முன்வகுப்பு வாசகம் — ரிப்பன் ஆரம்பம் – இளைஞர் முதியவர் வாசகங்கள் — நடுத்தர வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடத் திரட்டு — இந்திய வரலாறு (இளைஞர்களுக்கு) — இங்கிலாந்து வரலாறு (முதியவர்களுக்கு) — பி.ஏ.வகுப்பிற்கு சாக்ரடிஸ் பிளேட்டோ வரலாறுகள் — ஜூலியஸ் சீசர் உரை — ஒதெல்லோ உரை — எஃப்.ஏ., பி.ஏ. ஆங்கிலப் பாடப் புத்தகங்களுக்கு விரிவான உரைகள் — ரோமன் சட்டத் தொகுப்பு — மேயின் பழங்காலச் சட்டம் – சட்ட முறைமைகளின் சுருக்கம் — மேயின் பழங்காலச் சட்டச் சுருக்கம் — ஒப்பந்தச் சட்டம் — இன உதவிச் சட்டம் — திருக்குறள் உரையுடன் — இலங்கைப் பெருமன்னன் இராவணன்

தமிழ் நூல்கள்
ஔவை குறள் — ஆயிரத்து ஐம்பத்தைந்து செய்யுட்களையுடைய ‘செய்யுள் கோவை’ — விவேக விளக்கம் – இராயர் அப்பாசி கதைகள் — வாசகத் திரட்டு — இரு சிறு கதைகள் — கதையும் கற்பனையும் நீதிக் கதைகள் — வீரமணி மாலை — தமிழ்க் கட்டுரைகள் — பன்னிரு பெண்மணிகள் — நபி நாயகமும் கவி வாணர்களும் — மருத்துவன் மகள் — தமிழரும் தமிழ்ப்புலவர்களும் — தப்பிலி — காமாட்சி என்ற நவ நகை நாடகம் — ஐரோப்பியப் போர் — நவராத்திரி விரிவுரைகள் — சூரபதுமன் வரலாறு

(தகவல் ஆதாரம் – நெல்லைத் தமிழ்ப் புலவர்கள் — புத்தகத்திலிருந்து பிள்ளையவர்கள் வரலாற்றைத் தந்து உதவியவர்கள் – அவரது பிள்ளை வயிற்றுப் பேரர்களான மு.சி.பூரணலிங்கம், மு.சி.சந்திரன் திருநெல்வேலி, வலைத்தளத்தில் வி.சுந்தரம் ஐ.ஏ.எஸ்.கட்டுரை)

ஆர்வி: சேதுராமன் எப்படியோ பூரணலிங்கம் பிள்ளையின் பேரன்களை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு இந்த விவரங்களை சேகரித்திருக்கிறார். மிக பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

பூரணலிங்கம் பிள்ளை எழுதிய ஆங்கில நூல்கள் அந்த காலத்து ஆங்கிலக் கல்விக்கு பாடப் புத்தகங்களாகவோ, இல்லை கோனார் நோட்சாகவோ பயன்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய தமிழ் புத்தகங்களின் தலைப்புக்கள் சுவாரசியமாக இருக்கின்றன. அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு ஒரு முன்னோடி முயற்சியாக இருந்திருக்க வேண்டும். அது மீண்டும் பதிவு பெற்றால் நன்றாக இருக்கும்.

சமீபத்தில் பரிதிமால் கலைஞர் எழுதிய மதிவாணன் என்ற புத்தகத்தை படித்தேன். தாங்க முடியாத போர் கதை என்பது வேறு விஷயம். அதன் முகவுரையில் அவர் இந்த புத்தகம் மு.சு. பூரணலிங்கம் பிள்ளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நினைவு தெரிந்த நாளாக சரியோ தப்போ எந்த குட்டையில் ஊறிய மட்டை பெட்டர் என்று ஒரு திடமான கருத்து இருந்தது. இந்த தேர்தல் மாதிரி மோசமான மன நிலையில் எப்போதும் இருந்ததில்லை. அதற்கு காரணம் இலங்கைத் தமிழர்கள்தான்.

இலங்கைத் தமிழர்கள் இன்று செத்துக் கொண்டிருக்காவிட்டால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று தைரியமாக சொல்வேன் – காங்கிரஸ் நல்லவர்கள் என்பதற்காக இல்லை, பா.ஜ.க. முஸ்லிம்களையும் ஹிந்துக்களையும் பிரித்து வைப்பதை ஒரு strategy ஆக கொண்டிருப்பதால்.

கலைஞரும் ஜெவும் மற்ற குட்டித் தலைவர்களான சிதம்பரமும் ராமதாசும் விஜயகாந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாக கையை விரித்துவிட்டால் கூட பரவாயில்லை. இவர்களது போலித்தனம் மகா வெறுப்பை கிளப்புகிறது. என்ன மாதிரியான தலைவர்கள் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார்கள்? ஜெ துணிச்சலாக திமிராக மனதில் பட்டதை சொல்வார் என்று எனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தது. தேர்தல் வந்தவுடன் உண்ணாவிரதமாம். அயோக்கியத்தனம் மட்டுமே உள்ள தலைவர்கள்.

ஆனால் யாராவது ஆட்சிக்கு வரத்தான் போகிறார்கள். யார் வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற நப்பாசையாவது மிஞ்சும்?

அத்வானி இல்லை. பா.ஜ.க. இந்திய இறையாண்மையை காங்கிரசை விட சென்சிடிவாக பார்க்கும் – அவர்களுக்கு இலங்கையின் இறையாண்மை பலவீனப்படுவது நல்ல விஷயம் இல்லை.

கம்யூனிஸ்டுகள்? இல்லை. அவர்களுக்கு வழிகாட்டியான சீனா எப்போதுமே உயிர்களைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை. அவர்கள் ஆதரவு ராஜபக்செவுக்குத்தான்.

மாயாவதி போன்ற யாராவதா? இலங்கையை பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு?

காங்கிரசா? இது நப்பாசைதான் – கலைஞர் வாயை திறக்க மாட்டார்தான், ஆனால் காங்கிரஸ்காரர்களுக்கு புரியாமல் போய்விடுமா? என்ன அவ்வளவு பெரிய முட்டாள்களா? தமிழ் நாட்டில் பேருக்காவது கட்சி இருக்கும் ஒரே “தேசியக் கட்சி” இதுதான். காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்குப் பின் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார்கள் என்று எழுத கை கூசுகிறது. நம்பிக்கை இல்லைதான். ஆனால் மற்ற பேர் மீது 0% நம்பிக்கைதான் இருக்கிறது. இவர்கள் மீது ஒன்றிரண்டு சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிதம்பரமும், மணிஷங்கர் ஐயரும், இளங்கோவனும், ஜி.கே. வாசனும் அடி முட்டாள்களா? ப்ராக்டிகலாக யோசித்துப் பாருங்கள். இவர்களுக்கு உள்ள மாற்று இலங்கை தமிழர்களின் நிலையை இன்னும் மோசமாக்குவார்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

என்ன கொடுமைடா சாமி! போயும் போயும் இவர்கள்தான் இருப்பதிலே நல்ல சாய்ஸ் என்றால் என்னத்தை செய்வது!

இந்திய பிரச்சினைகள் மட்டுமே என்றால் எனக்கு காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதில் தயக்கம் இல்லை. மசூதி இடிக்கப்பட்ட நாள் முதல் நான் பா.ஜ.க. எதிர்ப்பாளன். அன்று உருவான strategy-ஐ பா.ஜ.க. மாற்றிக் கொள்கிற மாதிரி தெரியவில்லை. மாயாவதி போன்றவர்களை விட காங்கிரஸ் பெட்டர் என்பது என் திடமான அபிப்ராயம். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் கொஞ்சம் குறையலாம், ஆனால் அவர்கள் கூட்டாளிகள் அதை ஈடு செய்துவிடுவார்கள். மேலும் அவர்கள் கம்யூநிச்டுகளா, காபிடலிஸ்டுகளா என்பதே இப்போதெல்லாம் குழப்பமாக இருக்கிறது. (நந்திக்ராமத்தை பாருங்கள்!)

வை.மு. கோதைநாயகி

வை.மு. கோதைநாயகி

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

வை.மு.கோ.வைப் பற்றி குமுதத்தில் மறக்க முடியாத மங்கைகள் என்ற சீரிஸில் வந்த கட்டுரையை இங்கே காணலாம். அந்த கட்டுரை இதற்கும் ஆதாரமாக பயன்பட்டிருக்கிறது.

ஒரு மடிசார் புடைவை மாமி, பள்ளிக்கூடம் சென்று படிக்காதவர், தன்னுடை ஐந்தாம் வயதில் ஒன்பது வயது சிறுவனை மணம் செய்து கொண்டவர். தேசீயவாதி, காந்தி அடிகளின் பக்தை, 1932ம் ஆண்டிலேயே சுதந்திர இயக்கத்தில் ஆறு மாதம் சிறை சென்றவர். தன்னந்தனியாகவே ஒரு தமிழ்ப் பத்திரிகையை முப்பத்தைந்து ஆண்டுகள் நடத்திக் காட்டியவர், பெண்ணியவாதிகளின் முன்னோடி, மேடைப் பேச்சாளர், பாடகி, கவிஞர், 115க்கும் மேலாக நாவல்கள் எழுதியவர். சமூக ஊழியர். இவ்வளவு குணாதிசயங்களையும் கொண்டவர்தான் வை.மு. கோதை நாயகி.

வை.மு.கோ 1901ம் வருஷம் டிசம்பர் மாதம் முதல் தேதி, நீர்வளூர் வெங்கடாச்சாரி, பட்டம்மாள் தம்பதியருக்கு செல்வ மகளாகப் பிறந்தவர். ஆசாரமானதோர் வைஷ்ணவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் இள வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் அழைக்கப் பட்டவர். தன்னுடைய ஐந்தாவது வயதில், திருவல்லிக்கேணி வைத்தமா நிதி முடும்பை குடும்பத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற ஒன்பது வயது சிறுவனை மணம் செய்து கொண்டார்.

பெண் என்பதால் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டாம் என்ற ஒரு தடை இருந்த காலம் அது. அந்தக் காரணத்தினாலேயே கோதைநாயகி பள்ளி சென்று படிக்கவில்லை. எழுதவும் படிக்கவும் தெரியாது. ஆனால் சிறு வயதிலேயே தன்னுடன் பழகிய மற்ற குழந்தைகளுக்குப் பழைய கதைகளைச் சொல்லி வந்தார். பழைய கதைகள் எல்லாம் சொல்லித் தீர்ந்தவுடன், தானே புதுக் கதைகளைக் கற்பனை செய்து சொல்ல ஆரம்பித்தார். இவர் கதை சொல்லும் அழகைக் கண்டு, பெரியவர்களும் இவரது கதைகள் கேட்கத் தொடங்கி விட்டனர். புகுந்த வீட்டில் இருந்த ஒரு பக்திச் சூழ்நிலை – எப்போதும் திருவாய்மொழி, பாசுரங்கள் முதலியன ஒலித்துக் கொண்டே இருக்கும் – அவருக்குத் தமிழ் நடையை இயல்பாகவும் சரளமாகவும் வரச் செய்தது.

தனக்கு எழுதத் தெரியாதென்பதால், இவர் தன் தோழி பட்டம்மாளை, தான் சொல்பவற்றை எழுதித் தரச் சொல்லுவார் – இவ்வாறு இவர் சொல்லி, பட்டம்மாள் எழுதி உருவானது தான் இந்திர மோகனா என்ற நாவல். தொடர்ந்து பட்டம்மாளிடமே அவர் தமிழை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார்.

அந்தக் காலத்தில் பெண்கள் கதை எழுதுவது, பத்திரிகை நடத்துவதென்பது, அங்குள்ள பலருக்குப் பிடிக்கவில்லை. அடுப்பு ஊத வேண்டிய பெண்ணிற்கு, இந்த வேலைகள் எதற்கு என்று சில பெண்களும் கூட விமர்சித்தனர். இந்த எண்ணங்களையும், விமர்சனங்களையும் மீறி வை.மு.கோ. தன் பணியைத் தீவிரமாகத் தொடங்கினார்.

அப்போது சென்னையில் வெளியாகி வந்த ஜகன்மோகினி என்ற பத்திரிகை நஷ்டத்தில் நடந்து கொண்டிருந்தது. அதை வாங்கி வெற்றிகரமாக நடத்தலாம் என்றெண்ணிய வை.மு.கோ.விற்கு கணவர் பார்த்தசாரதி உறுதுணையாக நின்றதோடு, 1925ல் அதை வாங்கித் திறம்பட நடத்தவும், விற்பனை அதிகரிக்கவும் உதவினார். இதன் பிறகு ஜகன்மோகினி தமிழ் நாட்டின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றாக முன்னேறியது.

இந்தக் காலத்தைத் தமிழ் நாவல்களின் தொடக்க காலம் என்றும்கூறலாம்.. சக எழுத்தாளர்களில், ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் முதலானோரைக் குறிப்பிடலாம். கல்கி என்னும் தாரகை இன்னம் இலக்கிய வானில் ஒளி விடவில்லை. ஜகன்மோகினியில் வெளியான வை.மு.கோ.வின் முதல் நாவல் வைதேகி – துப்பறியும் நாவல்கள் எழுதிய முதல் தமிழ்ப் பெண்மணியும் இவர்தான். நூற்றுப் பதினைந்திற்கும் மேலான நாவல்கள் எழுதி வாசகர்கள் மனத்தில் அழியா இடம் பெற்றவர்.

சிறந்த மேடைப் பேச்சாளர் – பேசும்போது இடையிடையே குட்டிக் கதைகள் சொல்லிக் கூட்டத்தைக் கவரும் திறமை இவருக்கிருந்தது. கர்னாடக இசையிலும் இவர் ஆற்றல் பெற்றவர். தான் பாடியதுமல்லாமல், பல இளம் இசைக் கலைஞர்களை – முக்கியமாக டி.கே.பட்டம்மாள் – ஊக்குவித்தார். ராஜாஜியின் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தில் இவர் பேசியதைக் கேட்டு, தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் இவரையும் பேசச் சொல்லி அன்பாக உத்தரவிட்டார் ராஜாஜி.

வை.மு.கோ. மேடைகளில் பாடுவதன்றி பல பாட்டுகளையும் புனைந்துள்ளார். இவர் சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் எல்லாம் சமீபத்தில் இசை மார்க்கம் என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன. முப்பதுகளில் வை.மு.கோ வீட்டில் வசித்த பி.ராமபத்ரன் என்பவர் இப்புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார். அம்பா மனோஹரி,கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற அபூர்வ ராகங்களிலுள்ள இந்த கிருதிகள் ரஞ்சனி-காயத்ரி, கு.பாலமுரளிகிருஷ்ணா முதலியோரால் இப்போது மேடைகளில் பாடப்பட்டு வருகின்றன.

சுப்பிரமணிய பாரதியார், வை.மு.கோ.விற்காகவே தம் ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்ற பாட்டைப் புனைந்ததாகவும், பின்னர் டி.கே. பட்டம்மாள் இந்தப் பாட்டினால் பிரபலமானார் என்பது இன்னோர் செய்தி. (சாருகேசி – ஹிந்து பத்திரிகையில் 13-2-2009)

இவரொரு சிறந்த சமூக சேவகி – திருவல்லிக்கேணியில், காந்தியடிகளின் நினைவாக, மஹாத்மாஜி சேவா சங்கம் 1948ம் வருடம் மார்ச் ஏழாம் தேதி நிறுவப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு உதவும் பல நுண்கலைகள் கற்றுத் தரப்பட்டன. முதலில் ஒரு வாடகை இடத்தில் இருந்த இச்சங்கத்திற்கு, கக்சேரிகள் நாடகங்கள் மூலம் நன்கொடை வசூலித்து, ஒரு சொந்த இடமும் பெற்றுக் கொடுத்தார்.

ராஜ்மோகன், அனாதைப் பெண் , தயாநிதி (சித்தி என்ற பெயரில்) ஆகிய இவரது நாவல்கள் வெள்ளித் திரையில் வெளிவந்தன. பத்மினி நடித்த சித்தி என்ற படம் ஆறு விருதுகளைப் பெற்றது. அதில் சிறந்த கதையாசிரியர் விருது வை.மு.கோ.வுக்கு வழங்கப்பட்டது.

வை.மு. கோதைநாயகி 1960ம், வருஷம் ஃபிப்ரவரி 20 தேதி சென்னையில் காலமானார்.

வை.மு. கோதைநாயகி படைப்புகள்

வைதேகி (1925 – 4) — பத்மசுந்தரன் (1926 – 3) — சண்பகவிஜயம் (1927 – 2) — ராதாமணி (1927 – 4) — கௌரிமுகுந்தன் (1928 – 2) — நவநீதகிருஷ்ணன் (1928 – 2) — கோபாலரத்னம் (1929) — சியாமளநாதன் (1930 -2) சுகந்த புஷ்பம் (1930) – ருக்மணிகாந்தன் (1930) — வீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் (1930) — நளினசேகரன் அல்லது செருக்காலழிந்த சீமாட்டி (1930) — உத்தமசீலன் (1932 – 3 ) கதம்பமாலை (1932 – 2) — பரிமள கேசவன் (1932 – 2) — மூன்று வைரங்கள் (1932 -2 ) — காதலின் கனி (1933 – 2) — சோதனையின் கொடுமை (1933 – 2) — படாடோபத்தின் பரிபவம் (1933 -2 ) — சாருலோசனா (1933 – 3) — தியாகக்கொடி (1934 – 2) — புத்தியே புதையல் (1934 – 2) — ஜயசஞ்சீவி (1934 – 4) — அமிர்த தாரா (1935 – 4) — ஆனந்தசாகர் (1935 -3) — பட்டமோ பட்டம்(1935 – 2) — பிச்சைக்காரக் குடும்பம் (1935 – 2) — பொங்கும் காதல் அல்லது மங்களபாரதி (1935 – 2) — அநாதைப் பெண் (1936 – 4) — இன்பஜோதி (1936 – 2) — பிரேம பிரபா (1936 – 2) — ராஜமோஹன் (1936 – 2) அன்பின் சிகரம் (1937 – 2) — சந்திர மண்டலம் (1937 – 2) — மாயப் பிரபஞ்சம் (1937 – 2) — உளுத்த இதயம் (1938) — மகிழ்ச்சி உதயம் (1938 – 4) — மாலதி (1938 – 3) — வத்ஸகுமார் (1938 ) — வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில் (1938 ) ஜீவியச்சுழல் (1938 -2 ) கலா நிலையம் (1941 – 4) — க்ருபா மந்திர் (1934 -4) — மதுர கீதம் (1943 – 4) — வாத்சல்யம் அல்லது வாக்குத் தத்தம் (1943 – 3) — அமுத மொழி (1944) — பிரார்த்தனை (1945 ) — அபராதி (1946 – 2) — தெய்வீக ஒளி (1947 -2) – புதுமைக் கோலம் (1947) — தபால் வினோதம் (1945 – 2) — கானகலா (1950) — தூய உள்ளம் (1950) — நியாய மழை (1950) – ப்ரபஞ்ச லீலை (1950) ப்ரேமாஸ்ரமம் (1950) — மனசாட்சி (1950) — ஜீவநாடி (1950) — சௌபாக்கியவதி (1950) — நம்பிக்கைப் பாலம் (1951 -2) — பாதாஞ்சலி (1951) — ரோஜாமலர் (1951) — தைரியலக்ஷ்மி (1952) — சுதந்திரப் பறவை (1953) — நிர்மல நீரோடை(1953) — கிழக்கு வெளுத்தது (1958)

- முதற் பதிப்பு வெளியான வருஷமும், மொத்தப் பதிப்புகளும் அடைக்குறிக்குள்

(ஆதாரம் – தமிழ் நாவல் வளர்ச்சி 1900-1940 புதிய ஒளியில் இருண்ட காலம் – முனைவர் சுப. சேதுப் பிள்ளை — தகவல் நன்றி — (ஹிந்து இதழ்களில், ராண்டார் கை, எஸ்.முத்தையா 2001, 2002ல் எழுதிய கட்டுரைகள் – மறக்க முடியாத மங்கைகள் என்ற தலைப்பில் குமுதம் இதழில் திருவேங்கிமலை சரவணன் எழுதிய கட்டுரை, மங்கையர் இதழ்கள் என்ற புத்தகத்தில் பிரேமா எழுதிய கட்டுரை – திருச்சி முஹம்மது யூனூஸ் எழுதிய கட்டுரை — புகைப்படம் நன்றி : திரு வி.எஸ்.வி. அவர்கள்)

ஆர்வி: இவரும் ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூரார் ஸ்டைலில்தான் எழுதி இருப்பார் போலிருக்கிறது. நான் படித்ததில்லை, அதனால் நிச்சயமாக சொல்ல முடியாது. இந்த மாதிரி எழுத்துக்கள் நாட்டுடமை ஆக வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சேதுராமன் முயற்சியால் பலரை பற்றி கிடைத்த விவரங்களை படித்த பிறகு வடுவூராரும், ரங்கராஜுவும் இவரும் ஏன், லக்ஷ்மியும் சாண்டில்யனும் கூட மற்ற பலரை விட சிறந்த சாய்ஸ் என்றுதான் தோன்றுகிறது. இவர்கள் ஒரு கால கட்டத்தை பிரதிபலிக்கிறார்கள். பலருக்கும் அந்த அளவு கூட முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லை.

இதுவும் சேதுராமன் எழுதிய guest post.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

திருநெல்வேலி மாவட்டத்திலே, அம்பாசமுத்திரத்துக்கு அருகிலுள்ள ஊர்க்காடு என்னும் சிற்றூரில் பிறந்தவர் நவநீத கிருஷ்ணன். இவர் தந்தையார் அங்குள்ள குறுநிலமன்னரின் அவைக்களப் புலவராக விளங்கியிருந்த ‘அரசவரகவி’ அங்கப்ப பிள்ளையென்பவர். அவருடைய மக்கள் மூவரில், நடுவர் தான் கங்காதர நவநீத கிருஷ்ணன்.

அ.க.ந. பள்ளிக் கல்வியைக் கற்று முடித்தபின் புலமைக் கல்வியும் கற்றுச் சிறப்படைய விரும்பியதால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். கல்வி கற்கும்போதே செய்யுள் பாடவும், இயற்றவும் கட்டுரைகள் எழுதவும் வல்லவரானார். இவர் கல்வி பயிலும்போது நாவலர் நெடுஞ்செழியனும், பேராசிரியர் அன்பழகனும், அண்ணாமலையில் கல்வி பயின்று கொண்டிருந்தனர். அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய நன்மதிப்பையும் பெற்றவர் நவநீத கிருஷ்ணன்.

புலவர் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற பிறகு, திண்டுக்கல் புனித சூசையப்பர் மகளிர் உயர் நிலைப்பள்ளியில் ஈராண்டுகள் பணி புரிந்தார். சிவகாசி மகாராஜ பிள்ளை அவர்களின் ஒரே மகளான பிச்சம்மாள் என்பவரை மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். திருமணமான பிறகு, பாளையங்கோட்டையில் குடியேறி நெல்லையில் பணி புரியலானார். மந்திரமூர்த்தி உயர் நிலைப் பள்ளியில் ஒன்பது ஆண்டுகளும், பின்னர் மதுரை திரவியம் தாயுமானார் இந்து கலாசாலைப் பள்ளியில் பதினைந்து ஆண்டுகளும் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

தமிழ்ப் பணியோடு சிவப் பணியையும் இடையிடையே செய்து வந்ததால், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் இவருடைய புலமையைப் பயன்படுத்தத் தொடங்கினர். காலத்துக்கு வேண்டியவாறு நூல்களை எழுதிப் பொருளும் புகழும் பெற்றார். திருக்குறளைப் பலருக்கும் போதித்ததோடு “வள்ளுவர் சொல்லமுதம்” என்னும் நூலையும் (நான்கு பகுதிகள்) எழுதினார். திருவள்ளுவர் கழகத்திற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் தலைவராக இருந்தவர், நெல்லையப்பர் கோயிலிலும் ஈராண்டுகள் திருக்குறள் விரிவுரையாற்றினார்.

இவரது தமிழ்த் தொண்டையும், சிவத் தொண்டையும் பாராட்டிய மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் இவருக்கு “தமிழ்க் கொண்டல்” என்ற சிறப்புப் பெயரையும், தருமபுரம் ஆதீனம் “செஞ்சொற்புலவர்” என்ற பெயரையும் வழங்கினர்.

1967ம் வருடம் சித்திரை முதல் தேதியன்று, கைத்தொழில் பொருட்காட்சியில் செய்யும் தொழிலின் ஏற்றத்தைப் பற்றி நெசவாளர்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியபின் இல்லத்தை அடைந்தவர் திடீரென்று காலமானார்.

இவர் இயற்றிய நூல்களின் பட்டியல் வருமாறு:
1. காவியம் செய்த மூவர்
2. இலக்கியத் தூதர்
3. கோப்பெருந்தேவியர் மூவர்
4. இலக்கிய அமைச்சர்கள்
5. அறநூல் தந்த அறிவாளர்
6. தமிழ் காத்த தலைவர்கள்
7. முதல் குடியரசுத் தலைவர்
8. முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
9. தமிழ் வளர்ந்த கதை
10. ஔவையார் கதை (வில்லுப் பாட்டு)
11. திருவள்ளுவர் கதை (வில்லுப் பாட்டு)
12. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை
13. டாக்டர் சேதுப் பிள்ளை
14. வள்ளுவர் சொல்லமுதம் (நான்கு பகுதிகள்)
15. அடுக்கு மொழி ஆவுடையப்பர் வரலாறு

(தகவல் நன்றி — தமிழ்ப் புலவர் வரிசை பத்தாம் பகுதி — ஆசிரியர் சு.அ. இராமசாமிப் புலவர் — பதிப்பாளர் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்- சென்னை. 1973)

ஆர்வி: சேதுராமன் இவர்தான் திருக்குறள் மணியோ என்று யூகிக்கிறார். வழக்கம் போல எனக்கு ஒன்றும் பிரமாத விஷயமாக தெரியவில்லை. ஒரு வேளை நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் நண்பர் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ?

சேதுராமனின் அடுத்த guest post.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

பொன்னி இதழ் மூலம் ஒரு பாரதிதாசன் பரம்பரை அறிமுகம் ஆனது. அதே போல் பாரதிதாசனின் குயில் இதழால் ஒரு பரம்பரையும் உருவானது. குயில் இதழ் மூன்று கால கட்டங்களில் வெளிவந்தது. மாத இதழாக ஜூலை 1947 முதல் ஆகஸ்ட் 1948 வரையும், வார இதழாக ஜூன் 1958 முதல் ஃபிப்ரவரி 1961 வரையும், மாதமிரு முறையாக ஏப்ரில் 1962 முதல் ஆகஸ்ட் 1963 வரையும் பிரசுரமானது. குயில் இதழில் பாவேந்தரின் படைப்புகளே மிகுதியாக இடம் பெற்றன. குயிலின் இரண்டாவது பிறப்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கவிஞர்களின் படைப்புகள் வெளியிடப்பட்டன. இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் த.கோவேந்தன், துரை.மாணிக்கம் (பெருஞ் சித்திரனார்), ம.இலெ.தங்கப்பா, மா. இராமலிங்கம், புதுவைச் சித்தன் ஆகியோர். மூன்றாம் பிறப்பில் ‘குயில்’ பொன்னடியான், தமிழன்பன், பாளை எழிலேந்தி, சென்னை தேவிதாசன் ஆகியோர்களின் படைப்புக்களைத் தமிழகத்திற்களித்தது.

1932ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி பிறந்தவர் கோவேந்தன். இவரது பெற்றோர் வே.மு. தங்கவேல், குயிலம்மாள் தம்பதியினர். கோவேந்தனின் இயற்பெயர் கோவிந்தசாமி. பின்னாளில் காவேரிக் கவிராயர், சொல்லேருழவர் என்ற புனை பெயர்களிலும் எழுதிப் புகழ் பெற்றவர். இவரது தந்தை தங்கவேலும் மும்மொழிப் புலமையுடையவர். மறைமலையடிகளாரின் சைவ சமய நோக்கிலும், தனித் தமிழ்ப் போக்கிலும் பேரார்வம் கொண்டு விளங்கியவர். கோவேந்தனின் பதின்மூன்றாம் வயதிலே, தந்தையாரைச் சந்திக்க வந்த பாவேந்தரை முதன்முதலில் கண்டு வீட்டிலே அவருக்குக் குற்றேவல் புரியும் பணியை மேற்கொண்டார். பாவேந்தரின் படைப்புகளையெல்லாம் வெகு ஆர்வமுடன் படித்த கோவேந்தன், 1947ல் எழுதத் தொடங்கி, குயில் இதழ் கவிஞர்களுக்கு நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு, மூன்று முறை பரிசு பெற்றார்.

பாவேந்தரின் இயல்பு, மன உணர்வு, தமிழ் இன உணர்வு முதலியவற்றை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த கோவேந்தன் எழுதிய “பாவேந்தம்” என்ற நூலும் “பல கோணங்களில் பாரதிதாசன்” என்ற நூலும் பெரிதும் உதவின. பாவேந்தர் குயிலிலும் மற்ற இதழ்களிலும் எழுதிய பாடல்களைத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்கிய பெருமை கோவேந்தனுக்கு உண்டு.

பதின்மூன்றாம் வயதில் தொடங்கி இன்று வரை உணர்வும், கற்பனையும், வீச்சும் குறையாவண்ணம், கவிதைகள் புனைந்து வருகிறார் கோவேந்தன். படைப்புக் கவிதைகள் தவிர மொழிபெயர்ப்புக் கவிதைகளிலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார். சோவியத் கவிஞர்களையும், அவர்களது கவிதைகளையும் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தது இவரது குறிப்பிடத்தக்க பணி. குறும்பா (Limeric), நகைப்பா(Parody), முதலான மேல் நாட்டு வடிவங்களையும் தமிழில் பரவலாக்கிய பெருமை இவருக்கே.

நகைப்பா என்பது முதல் நூல் ஒன்றைப் பகடி (நையாண்டி) செய்து அதைப் போலவே எழுதுவதாகும். முதல் நூலின் நடை, உத்தி, சாரம் முதலியவற்றை அடியொற்றி, படிப்பவர்க்குச் சிரிப்பினை உண்டாக்குவது நகைப்பாவின் தன்மையாகும். புற நானூற்றை அடியொற்றி வரைந்த நகைப்பா நூல் புது நானூறு என்பதாகும். சமுதாயத்தில் நடைபெறும் ஏமாற்றுகள், இழிவுகள், அரசியல்வாதிகளின் ஒழுக்கக் கேடுகள், அரசு ஊழியர்களின் புரட்டு வேலைகள் முதலியன இன்னூலில் திறம்பட எடுத்துரைக்கப் பட்டுள்ளன.

(தகவல் நன்றி – முனைவர் மு. இளங்கோவன் எழுதியுள்ள “பாரதி தாசன் பரம்பரை” — வெளியீடு – முகிலரசி, 31 கொல்லப் பாளையம், ஆர்க்காடு 632503)

ஆர்வி: விவரங்களை பார்த்தால் எனக்கு இவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டியவையாக தெரியவில்லை. ஆனால் கவிதையை பற்றி எனக்கு தெரிவது கற்பூர வாசனையை பற்றி கழுதைக்கு தெரிவதும் ஏறக்குறைய ஒரே அளவுதான்.

சேதுராமனின் அடுத்த guest post.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

நாற்பதுகளில், பாவேந்தர் பாரதிதாசன் செட்டி நாட்டுப் பகுதியில் சொற்பொழிவுகள் பல செய்தது, அந்தப் பகுதி இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. மாதக் கணக்கில் அவரை அங்கு தங்க வைத்துக் கருத்துரை வழங்க வைத்தனர். பாரதிதாசன் நூல்களை அச்சிடவும், அவர்தம் நாடகங்களை நடத்தவும், முத்தமிழ் நிலையம் என்னும் அமைப்பை உருவாக்க முடிவு செய்தனர். இளந்தமிழன் என்ற கையெழுத்து இதழினை நடத்தியவரும், தமிழ் இளைஞர் கழகம் என்ற அமைப்பின் பொறுப்பாளருமான முருகு சுப்பிரமணியன் திட்டமிட்டவாறு, கோனாப்பட்டியில் மற்ற அன்பர்களுடன் சேர்ந்து முத்தமிழ் நிலையத்தைத் தொடங்கினார்.

1947ம் ஆண்டு முருகு சுப்பிரமணியம் அவர்களால் பொன்னி எனும் இலக்கியத் திங்களிதழும் தொடங்கப் பெற்றது. பல இளங்கவிஞர்கள் தோற்றம் பெறவும் அறிஞர்களின் கட்டுரைகள் வெளியாகவும் இவ்விதழ் பெரிதும் பயன்பட்டது. பொன்னி இதழில் பல கவிஞர்கள் கவிதை புனைய விரும்பவே, இதழாசிரியர் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பின் கீழ் மாதம்தோறும் ஒரு கவிஞரை அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்.

கொத்தமங்கலத்தைச் சேர்ந்த மு. அண்ணாமலைதான் இவ்வமைப்பின் மூலம் முதலாக அறிமுகமானார். அண்ணாமலையைத் தொடர்ந்து 47 கவிஞர்கள் பொன்னி இதழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இப்பரம்பரைப் பட்டியலில், பொன்னி இதழ் வெளியிடுவதில் துணை நின்ற மு. அண்ணாமலை, நா. ரா. நாச்சியப்பன் இருவரும் முதலிரு இடங்களில் நிற்பது குறிப்பிடத்தக்கது. இப்பரம்பரையிலுள்ள முக்கியமான மற்ற கவிஞர்கள் – சுரதா, புத்தனேரி சுப்ரமணியன், முடியரசன், கோவை இளஞ்சேரன், ஷெரிஃப், சுப்பு ஆறுமுகம் ஆகியோர்.

பொன்னி இதழில் பாரதிதாசன் பரம்பரை தொடரில் இரண்டாவதாக அறிமுகமான நா.ரா.நாச்சியப்பன் இராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்குடியைச் சேர்ந்தவர். பிறந்த தேதி ஜூலை 13, 1927. பாவேந்தர் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். இளமைக் காலத்திலேயே, பாவேந்தரைத் தம் ஊருக்கு அழைத்து இலக்கியக் கூட்டங்கள் நடத்தியவர். பொன்னி புதுக்கோட்டையிலிருந்து வெளியான போது வெளியீட்டிற்கு உதவியவர்.

பின்னர் மு.அண்ணாமலை சென்னையில் அச்சகம் தொடங்கியபோது, அவ்வச்சகப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர். அக்காலத்தில் வெளியான குயில் இதழினுக்கும் தம் உடலுழைப்பினை நல்கியவர். நாச்சியப்பன் பர்மாவில் வாழ்ந்த காலத்தில் பெரியார் அங்கு சென்ற போது, வரவேற்ற பெருமைக்கும் உரியவர்.

1949-1950ல் பொன்னி இதழின் துணையாசிரியராக இருந்த நாச்சியப்பன், 1945ல் ஐங்கரன் எனும் கையெழுத்து ஏடு நடத்தியும், ஆத்தங்குடியில் திராவிடர் கழகம் தொடங்கியும் பெரியாரிடம் பாராட்டுப் பெற்றவர்..1948ல் கொய்யாக் காதல் எனும் காவியம் எழுதி வெளியிட்டார். கே.ஆர்.இராமசாமியின் “மணமகள்” நாடகத்திற்கும், அண்ணாவின் “சந்திரமோகன்” நாடகத்திற்கும், பாடல்கள் எழுதிய பெருமைக்கும் உரியவர்.

இவர் எழுதிய மற்ற நூல்கள் ஈரோட்டுத் தாத்தா(பெரியார் பற்றியது), இன்பத் திராவிடம், தேடி வந்த குயில் முதலானவை. 1972ல் இளந்தமிழன் என்ற திங்களிதழைத் தொடங்கி நடத்தினார். இவர் இயற்றிய பாடல்களின் இரு தொகுதிகளும் 1980-1981ல் வெளிவந்தன. பல சிறுவர் பாடல்களையும் திறனாய்வு நூல்களையும் எழுதி வருபவர். பாவேந்தரின் வழியில் பல கதைக் கவிதைகளைப் படைப்பதுடன், கவிதையுணர்வு தொய்யாமல் படைப்புகளை வெளியிட்டு வருகின்றார்.

பாரதிதாசன் வழியிலேயே கடவுள் மறுப்பு, தமிழ்ப் பற்று, சமுதாயப் பார்வை, பகுத்தறிவு முதலான பொருண்மைகளில், இவர்தம் கவிதைகள் அமைந்துள்ளன.

(தகவல் ஆதாரம் – முனைவர் மு. இளங்கோவன் எழுதிய “பாரதிதாசன் பரம்பரை” – வெளியிட்டோர் – முகிலரசி, 31 கொல்லப் பாளையம், ஆர்க்காடு 632503 — 2001)

ஆர்வி: கிடைத்த விவரங்களை வைத்து பார்த்தால் அப்படி ஒன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய எழுத்துகளாக தெரியவில்லை. திராவிட இயக்கத் தொடர்பு இருப்பதால் கலைஞர் இவரது வாரிசுகளுக்கு உதவி செய்ய விரும்பி இருக்கலாம். இந்த தேர்வுகளில் transparency இல்லாதது பெரும் குறைதான்.

கலைஞரின் என்டிடிவி பெட்டியை பற்றியும் பின்னால் ஜகா வாங்கியதை பற்றியும் எழுத நினைத்திருந்தேன். எழுத்தாளர் பா. ராகவன் நான் நினைத்ததை ஏறக்குறைய அப்படியே எழுதி இருக்கிறார். இந்த சருக்கலைப் பற்றி மட்டும் அல்லாமல் பல பின் புல செய்திகளையும் தொகுத்திருக்கிறார். என்னை விட அவர் மிக நன்றாக எழுதக் கூடியவர், அதனால் நீங்கள் எல்லாம் தப்பித்தீர்கள்!

கலைஞரை பற்றி நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. தன் பேச்சு, எழுத்து திறமையால் பல ஜெனரேஷன்களை கவர்ந்தவர், அதே திறமையால் கட்சிக்கு ஒரு பலமான தொண்டர் தளத்தை உருவாக்கியவர், இப்போதெல்லாம் வீணாக ராமர் படித்த எஞ்சினியரிங் காலேஜ், அவாள் விடும் சவால், சட்டக் கல்லூரி கலவரத்தை தூண்டிவிடும் ஜெயலலிதா, என் நண்பன் பிரபாகரன் என்றெல்லாம் சொல்லி மாட்டிக் கொள்வது பாவமாக இருக்கிறது. Like watching a once great cricket player hanging on well past his prime. எங்கேயோ இருக்க வேண்டியவரால் சில பலவீனங்களை தவிர்க்க முடியவில்லை என்பது சோகம்தான். நவீன திருதராஷ்டிரன் வேறு!

சேதுராமனின் அடுத்த guest post.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் வல்லவரான இவர் எழுதியுள்ள ஆங்கிலப் புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் — அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடுகள் வருமாறு:

A grammar of old Tamil with special reference to Pathitruppaththu
A Bibliography of Dravidian languages *
A Bibliography of the Nilgiri Hills Tribes *
Dravidian Linguistics *
Dravidian Syntax *
Kanikara Dialect
Studies in early Dravidian Grammar *
Sociolinguistics and Dialectology *
Auxiliaries in Dravidian Linguistics *

(*இவை யாவும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் துணை ஆசிரியர்களுடன் எழுதப்பட்டவை)

திரு அகஸ்தியலிங்கம் பற்றி இன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு எம். ராஜேந்திரன் கூறுவதாவது – அவர் அகில இந்திய பல்கலைக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தை நிறுவியராவார். அவர் 1986ல் இருந்து 1989 வரை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தராகப் பணி புரிந்தார். தமிழ் மொழி பற்றியும், தமிழர்கள் பண்பு, இலக்கியம் முதலியவை பற்றி இவர் எழுதியுள்ள புத்தகங்கள் உலகிலுள்ள தமிழ் அறிஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன என்றும் திரு ராஜேந்திரன் குறிப்பிடுகிறார்.

திரு அகஸ்தியலிங்கம் 2008 ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஒரு சாலை விபத்தில் காலமானார் (ஹிந்து மெட்ரோ ப்ளஸ் ஆக. 5 – 2008)

(ஆதாரம் – வலைத்தளக் கட்டுரைகள் – ஹிந்து)

ஆர்வி: இவரைப் பற்றிய விக்கிபீடியா குறிப்பை இங்கே காணலாம். எழுதி இருக்கும் புத்தகங்களின் தலைப்புகளை பார்த்தால் பெரிய ஆராய்ச்சியாளர் போல தெரிகிறது.

நான் ஓரளவுக்கு தமிழ் படிப்பவன். இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு. தமிழ் இலக்கியம், கவிதைகள் ஆகியவற்றில் பெரிதாக ஈடுபாடு இல்லாவிட்டாலும், பல குறள்களை கோனார் நோட்ஸ் இல்லாமல் இன்றும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, தமிழ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புழக்கத்தில் இருந்தும் இன்னும் வாழும் மொழி என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமிதம் உண்டு. தமிழ் இலக்கியங்கள் பேராவது தெரியும், மறைமலை அடிகள், பரிதிமால் கலைஞர், தேவ நேயப் பாவாணர், சி.வை. தாமோதரம் பிள்ளை என்றால் யாரென்று தெரியும்.

இந்த வருஷம் நாட்டுடமை ஆக்கப்பட்ட படைப்புகளை எழுதியவர்களின் லிஸ்டை கொஞ்சம் தாமதமாகத்தான் படித்தேன். பொதுவாக எனக்கு இதில் பெரிதாக ஆர்வம் இருப்பதில்லை. இந்த லிஸ்டில் வருபவர்கள் தமிழ் பண்டிதர்கள், தமிழ் குரங்குதான் முதல் குரங்கு என்று அழுத்தி சொல்பவர்கள், கல்லாடம், கில்லாடம் மாதிரி நூல்களுக்கு உரை எழுதுபவர்கள் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதிலெல்லாம் எனக்கு ஆர்வம் குறைவுதான், அதனால் இந்த மாதிரி செய்திகளை ஹெட்லைனோடு விட்டுவிடுவது வழக்கம்.

லிஸ்டை முழுதாக படித்த போது தமிழ் பற்றி ஓரளவு தெரிந்தவன் என்ற என் எண்ணம் காலியாகிவிட்டது. முக்கால்வாசி பேர் யாரென்று தெரியவில்லை. சில பேர்கள் கேட்டவையாக இருந்தாலும் – புலியூர் கேசிகன், பாஸ்கரத் தொண்டைமான் மாதிரி – அவர்களை பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவர்களை பற்றி இணையத்திலும் அதிகமாக செய்திகள் இல்லை.

குறையை தீர்க்க வந்தவர் சேதுராமன். விடாமல் ஒவ்வொருவரையும் பற்றி தேடிப் பிடித்து விவரங்கள் சேகரித்திருக்கிறார். புலியூர் கேசிகனின் மகளிடம் பேசி இருக்கிறார். பூரனலிங்கத்தின் பேரனை தேடி கண்டுபிடித்திருக்கிறார். அயராமல் ஒவ்வொருவரைப் பற்றியும் தமிழில் தட்டச்சு செய்து எனக்கு அனுப்பி இருக்கிறார். அவரது ஊக்கமும், முயற்சியும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை.

அவர் செய்திருக்கும் அத்தனையும் இந்த அரசு செய்திருக்க வேண்டும். ஒருவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்றால், அவரது எழுத்துக்கள் ஏன் முக்கியமானவை என்று ஒரு சிறு விளக்கம், அவரை பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பு, என்ன பணம் வழங்கப் பட்டது என்ற தகவல் இவை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இந்த சின்ன விஷயத்தைக் கூட இவ்வளவு அமெச்சூர்தனமாக செய்வது கடுப்பாக இருக்கிறது. சேதுராமன் ஜமதக்னி பற்றி தெரிந்து கொள்ள எதோ அரசு துறையை தொடர்பு கொண்டாராம், அவர்களுக்கும் தெரியவில்லையாம்!

அவரது முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன. இன்னும் ஒரு ஆறேழு பேரை பற்றியாவது விவரம் திரட்டுவார் என்று நினைக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்!

எனது தளத்துக்கு ரீச்சும் வீச்சும் அதிகம் கிடையாது. ஆனால் அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி வேறு பதிவுகளிலும் எழுதினால் – டோண்டு, பாஸ்டன் பாலா, பத்ரி, பா.ராகவன், ஜெயமோகன், நாகார்ஜுனன் - போன்றவர்கள் எழுதினால், இன்னும் பலரும் இது சரி என்று நினைத்தால், ஒரு வேளை இந்த அரசு காதில் விழுமோ? ஒரு நப்பாசைதான்.

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers