- கல்கி ஸ்டாம்ப்
- பொன்னியின் செல்வன்
- பொன்னியின் செல்வன் 2
- எம்.எஸ்.
- கல்கி ராஜாஜி சதாசிவம்
- டி.கே.சி.
- தியாக பூமி 1
- தியாக பூமி 2
பதிமூன்று, பதினான்கு வயதில் ஒரு உறவினரிடம் கல்கி பத்திரிகையிலிருந்து கிழித்து பைண்ட் செய்யப்பட்ட ஐந்து வால்யூம் பொன்னியின் செல்வனைப் பார்த்தேன். ஒரே மூச்சில் ஒன்றிரண்டு நாட்களில் படித்து முடித்தேன். அதற்கு பிறகு அதைப் பற்றி எத்தனையோ நாட்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டே இருந்திருக்கிறேன். ஆதித்த கரிகாலனை உண்மையில் கொன்றது யார்? பெரிய பழுவேட்டரையரா, நந்தினியா, தற்கொலையா, என்று ஒருவர் பின் ஒருவராக அலசி இருக்கிறோம். (எங்களுக்கு தோன்றிய தீர்வு – ஆசிரியர் பொய் சொல்லி இருக்கிறார், இவர்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்படி சில வரிகளை வேண்டுமென்றே எழுதி இது ஒரு அவிழ்க்கப்படாத முடிச்சாகவே இருக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்.) சினிமாவாக எடுத்தால் எந்த ரோலுக்கு யார் பொருத்தம் என்று மணிக்கணக்காக வாதிட்டிருக்கிறோம். (இன்றும் இதை பற்றி இணையத்தில் வாதிடுவதை பார்க்கிறேன்) நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். பல ஆங்கில மீடிய மாணவர்கள் சின்ன வயதிலேயே தெரிந்து கொள்ளும் Three Musketeers, ஐவன்ஹோ மாதிரி நாவல்களை எல்லாம் ஒரு பதினேழு பதினெட்டு வயதில்தான் மெதுவாகத்தான் படித்தேன். அப்படி படிக்கும்போது என் மனதில் இவற்றை பொன்னியில் செல்வனோடு ஒப்பிட்டு பார்ப்பேன். டூமாவும் ஸ்காட்டும் கல்கி கவர்ந்த அளவு என் மனதை கவரவில்லை. உண்மையில் ஸ்காட்டின் பல நாவல்கள் போர். கெநில்வொர்த்தை படிக்க மிக பொறுமை வேண்டும்.
அதற்கு முன்னாலும் கல்கி பற்றிய பிரக்ஞை இருந்தது. கல்கி பத்திரிகையை படித்திருக்கிறேன். ஆனால் கல்கியின் எழுத்தாளர் என்ற முகத்தை பற்றி அவ்வளவாக தெரியாது. இதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை, தியாக பூமி, கள்வனின் காதலி, மகுடபதி எல்லாம் தேடி தேடி படித்தேன். சிவகாமியின் சபதம் – குறிப்பாக நாக நந்தியின் பாத்திரம் – பிடித்திருந்தது. பார்த்திபன் கனவு வாண்டு மாமா எழுதும் கதைகளின் சாயலில்தான் இருந்தது. ஆனால் மிக சுவையாக இருந்தது. அலை ஓசையை நான் பெரிதாக ரசிக்கவில்லை. ஆனால் அதுதான் கல்கிக்கே பிடித்த நாவல். தியாக பூமி பிடித்திருந்தது. கள்வனின் காதலி, மகுடபதி எல்லாம் அலை ஓசை அளவுக்கு கூட வரவில்லை.
பொ. செல்வன் என் மனதை அதிகமாக ஆக்கிரமித்திருந்தது. அதனால் அவரது மற்ற முகங்கள் பற்றி தெரிய பல வருஷம் ஆயிற்று.
கல்கி சுதந்திர போராட்ட வீரர். ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கிறார். ராஜாஜியின் அணுக்க சீடர். அரசியலில் ஒரு background figure. அவருக்கு ராஜாஜி மந்திரி சபையில் பதவி கொடுக்க முன் வந்ததாகவும் அதை அவர் மறுத்து விட்டதாகவும் சின்ன அண்ணாமலை சொல்கிறார். ராஜாஜியுடன் மது ஒழிப்புக்காக திருச்செங்கோடு ஆசிரமத்தில் வேலை பார்த்திருக்கிறார்.
பத்திரிகை உலகத்தோடு அவருக்கு தொடர்பு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. நவசக்தி, விமோசனம், பத்திரிக்கைகளில் பணி புரிந்திருக்கிறார். ஆனால் பத்திரிகையில் அவர் கொடி கட்டி பறந்தது விகடனில்தான்.
விகடனுக்கு ஏட்டிக்கு போட்டி என்ற கட்டுரைய்டன் அவர் தொடர்பு ஆரம்பித்தது. (வாசன் அதை பற்றி இங்கே சொல்கிறார்). தமிழில் அதைப் போன்ற நகைச்சுவை கட்டுரைகள் எழுத ஆரம்பித்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். Jerome K. Jerome, E.V. Lucas, Stephen Leacock, James Thurber போன்ற பலரால் கவரப்பட்டு இதை ஆரம்பித்திருக்கிறார் போல. (மணிக்கொடி எழுத்தாளர்கள் அவர் முதல் நாள் Lucas, Leacock போன்றவர்களின் கட்டுரையை ஒரு ஆங்கிலப் பத்திரிகை சென்னைக்கு வந்ததும் படிப்பார், அடுத்த நாள் அதை உல்டா செய்து விகடனில் எழுதி விடுவார் என்று சொல்கிறார்கள்) ஆனால் அவரது எழுத்துக்கள் மிக அருமையாக இருந்திருக்கின்றன. அவருக்கு பின் நாடோடி, துமிலன் போன்ற சிலர் முயற்சி செய்தாலும் அந்த நகைச்சுவை கட்டுரை genre இன்று தமிழில் செத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். (ஆங்கிலத்திலும் காணப்படுவதில்லை – ப்ளாக் உலகத்தில் பிழைத்து வந்தால் உண்டு)
அவரது இசை கச்சேரி விமர்சனங்கள் புகழ் பெற்றவை. கர்நாடகம் என்ற பேரில் கலக்குவாராம். அவரும் சுப்புடுவும்தான் கலை விமர்சகர்களாக புகழ் பெற்றவர்கள். சுப்புடு கல்கி தன் கச்சேரி விமர்சனத்தை பாராட்டியதை கடைசி வரை சொல்லிக் கொண்டிருந்தார்.
பல சிறுகதைகளும் எழுதினர். நிறைய காப்பி அடித்தார் என்று மணிக்கொடி எழுத்தாளர்கள், குறிப்பாகா புதுமைப்பித்தன் சொல்லி இருக்கிறார். அவர் எழுதிய “புது ஓவர்சீயர்” என்ற கதை பிரேம்சந்தின் புகழ் பெற்ற சால்ட் இன்ஸ்பெக்டர் கதையின் அப்பட்டமான காப்பிதான். எனக்கு சால்ட் இன்ஸ்பெக்டர் கதை பிடித்தமானது என்பதால் படிக்கும்போதே தெரிந்துவிட்டது. புதுமைப்பித்தன் அவரது புகழ் ஏணியின் முதல் படிக்கட்டான ஏட்டிக்கு போட்டி கட்டுரையே Jerome K. Jerome-இன் Three Men in a Boat-in தழுவல் என்று சொல்கிறார். இது உண்மைதான் என்பது டோண்டு ராகவன் எழுதிய இந்த பதிவில் தெளிவாக தெரிகிறது. எதையும் அவர் தழுவல் என்று ஒப்புக்கொண்ட மாதிரி தெரியவில்லை.
தழுவலோ, என்னவோ, விகடன் விற்பனை உச்சாணிக்கு போனது. பல பல உத்திகளை கையாண்டு விகடன் படிக்காத மத்திய தர வர்க்க குடும்பம் இல்லை என்ற நிலைக்கு விகடனை கொண்டு போனார். உதாரணமாக, தியாக பூமி திரைப்படம் தயாரிக்கப்பட்ட போது அந்த படத்தின் ஸ்டில்களோடு அந்த கதையை விகடனில் தொடர்கதையாக வெளியிட்டார். வியாபாரம் பிய்த்துக்கொண்டு போனது.
அவருக்கு தான் பத்திரிகையின் ஸ்டாராக இருந்தாலும், நல்ல வசதியாக இருந்தாலும், வாசனுக்குத்தானே லாபம் எல்லாம் போகிறது என்று தோன்றி இருக்க வேண்டும். சதாசிவமும், அவரும் சேர்ந்து நாற்பதுகளின் ஆரம்பத்தில் கல்கி பத்திரிகையை ஆரம்பித்தார்கள். நினைவிலிருந்து எழுதுகிறேன், அவர் கல்கி பத்திரிகையின் 25% பாகஸ்தர். மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம். நல்ல வசதியாக வாழ்ந்திருப்பார்.
பார்த்திபன் கனவு, அலை ஓசை, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் எல்லாம் கல்கி பத்திரிகையில் தொடர்கதையாக வந்தவைதான். அவை எல்லாம் கல்கியை வெற்றிகரமான பத்திரிகையாக மாற்றின. நாடோடி, விந்தன், சாவி போன்ற திறமை வாய்ந்த, ஆனால் ஸ்டார் வால்யூ இல்லாத உதவி ஆசிரியர்கள் இருந்தார்கள். கல்கி அவரது பேராலும், எழுத்தாலும்தான் வெற்றி அடைந்தது.
நடுவில் பல சர்ச்சைகள் வேறு. பத்திரிகை விற்க வேண்டுமென்றே சில சர்ச்சைகளை கிளப்பி இருப்பாரோ என்று தோன்றுகிறது. பாரதியார் மகாகவியா இல்லையா என்று ஒரு சர்ச்சை – கல்கி அவர் மகாகவி இல்லை என்று வாதாடினர். ஆனால் பின்னால் பாரதிக்கு மணி மண்டபம் கட்ட முன்னால் நின்று பணம் வசூலித்து கட்டினார். இந்த மகாகவி சர்ச்சை அவர் வேண்டுமென்றே கிளப்பியது என்று நினைக்கிறேன்.
மணிக்கொடி எழுத்தாளர்களோடு சண்டை – புதுமைப்பித்தன் இவரை மிக மோசமாக திட்டி இருக்கிறார். தழுவல் என்ற குற்றச்சாட்டுக்கு கல்கி பதில் சொல்லாமல் நழுவிவிட்டார் என்று நினைவு. தழுவல் தவறு என்று நான் நினைக்கவில்லை, ஆனால் தழுவினோம் என்று ஒத்துக்கொள்ளாமல் நழுவுவதுதான் உதைக்கிறது.
தமிழிசை இன்னொரு சர்ச்சையை கிளப்பியது. அது அவரது உண்மையான கருத்து என்று நினைக்கிறேன். பாரதியாரே தமிழில் பாட மறுக்கிறார்களே என்று குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
ராஜாஜி அவருக்கு ஒரு வீக்னெஸ். அவரால் ராஜாஜியை குறை சொல்ல முடியாது. ராஜாஜி என்ன செய்தாலும் சரி என்று சொல்லி இருப்பார். 1940-1955 வரை கல்கி தலையங்கங்கள் கிடைத்தால் அவர் ராஜாஜியை பற்றி என்ன எழுதி இருக்கிறார் என்று பார்க்கலாம். காமராஜை நிறைய திட்டி இருப்பார் என்று நினைக்கிறேன்.
மொத்தத்தில் அவரை விட சிறந்த, திறமையான பத்திரிகையாளரை தமிழ் உலகம் பார்த்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தன் எழுத்து திறமையை அருமையாக leverage செய்து விகடனை ஒரு சாம்ராஜ்யம் ஆக்கினார். கல்கியை ஒரு சிற்றறரசாகவாவது ஆக்கினார். அவரது மறைவுக்கு பிறகும் அலை ஓசை, பொ. செல்வன், சி. சபதம், பா. கனவு ஆகியவை ஒன்று மாற்றி ஒன்று கல்கியில் வந்து கொண்டே இருக்கும்.
ஒரு எழுத்தாளராக அவரது சாதனை அவரது சரித்திர நாவல்கள்தான். பொ. செல்வன் Les Miserables, Tale of the Two Cities போன்ற வரிசையில் வைத்து பார்க்க வேண்டிய நாவல். அவரது கட்டுரைகள் (தழுவலோ, என்னவோ) பொதுவாக படிக்க சுலபமானவை, சுவாரசியமானவை. அவற்றை தொகுத்து வெளியிட்டால் வாங்கலாம். அவரது சிறுகதைகளும் – மயிலைக் காளை, தேரழுந்தூர் சிவக்கொழுந்து கதைகள், பொய் மான் கரடு, தப்பிலி கப் இன்னும் பல – அவ்வளவாக தமிழ் விமர்சகர்களால் கவனிக்கப்படாது துரதிர்ஷ்டம்தான். ஆனால் மிக நல்ல எழுத்துக்கள், படிக்க, பாதுகாக்க வேண்டிய கதைகள். அவரது இசை விமர்சனங்களும் தொக்குக்கப்பட்டால் நன்றாக வந்திருக்கும்.
புதுமைப்பித்தன் மாதிரி கல்கியின் கதைகள் உலகத்தரம் வாய்ந்தவை அல்ல. பு. பித்தன் மாதிரி கல்கி நோபல் பரிசு பெறும் தகுதி உள்ள எழுத்தாளரும் அல்ல. ஆனால் நல்ல எழுத்தாளர்.
சதாசிவம், எம்.எஸ்., கல்கி, ராஜாஜி, டி.கே.சி. ஆகியோரின் நட்பு, சின்ன அண்ணாமலை, விந்தன், நாடோடி, பரதன், சாவி ஆகியோரின் தொடர்பு, மிக சிறப்பானது.
அவரது சினிமா பங்களிப்பும் குறிப்பிட வேண்டியது. தியாக பூமி தவிர, மீரா படத்திலும் அவரது பங்களிப்பு இருந்தது. காற்றினிலே வரும் கீதம் பாட்டை யார் மறக்க முடியும்?
பொ. செல்வன் பல கதாபாத்திரங்களின் ஓவியங்களை இங்கே காணலாம்.
மொத்தத்தில் அவர் பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் அருமையான பணி ஆற்றி இருக்கிறார். அவர் சின்ன வயதிலேயே மறைந்தது நம் துரதிர்ஷ்டம்.









மார்ச் 24, 2009 at 2:08 மு.பகல்
கல்கியின் ஏட்டிக்கு போட்டியில் ஒரு பகுதி 3 men in a boat, not to say of the dog ஏனும் புத்தகத்திலிருந்து சுடப்பட்டது என்பது பற்றி நான் எழுதிய சில வரிகள்:
சுந்தா அவர்கள் சமீபத்தில் ஜூலை 1974-ல் துவங்கி கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கல்கியில் “பொன்னியின் புதல்வர்” என்ற பெயரில் தொடராக வாரா வாரம் 1976 வரை எழுதி வந்தார். அவரிடம் நான் “Three men in a boat, to say nothing of the dog” என்ற இந்த புத்தகத்தை எடுத்துச் சென்று மேலே குறிப்பிட்டப் பகுதியைக் காட்டினேன். அது தனக்கும் தெரியும் என்றும் வாழ்க்கை வரலாற்றில் தான் கண்டிப்பாக அதைப் போடுவதாகக் கூறினார். அதை உன்னிப்பாகவும் கவலையாகவும் எதிர்பார்ப்பேன் என்று கூறி விட்டு வந்தேன். அவரும் சொன்னபடியே செய்தார். ரொம்ப நல்ல மனிதர். பார்க்க:
http://dondu.blogspot.com/2006/04/1_26.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
மார்ச் 24, 2009 at 3:13 மு.பகல்
நன்றி, டோண்டு! உங்கள் பதிவையும் இப்போது சுட்டி இருக்கிறேன்.
ஜூலை 15, 2009 at 10:35 மு.பகல்
//புதுமைப்பித்தன் மாதிரி கல்கியின் கதைகள் உலகத்தரம் வாய்ந்தவை அல்ல. பு. பித்தன் மாதிரி கல்கி நோபல் பரிசு பெறும் தகுதி உள்ள எழுத்தாளரும் அல்ல. ஆனால் நல்ல எழுத்தாளர்///
How Can you tell this? கல்கியின் எழுத்துக்கு இங்கு எத்தனை பேர் அடிமைகள் என்று தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..காலங்கள் பல கடந்த பின்னும்..இந்த தலைமுறையையும் கவரும் அவருடைய படைப்புகள்.. அவருடைய பொன்னியின் செல்வன் படைப்பிற்கு ஈடாக எந்த ஒரு சரித்திர நூலையும் கூற இயலாது என்பது என் போன்ற பலரின் கருத்து.. கல்கி போன்ற சிறந்த எழுத்தாளரை வேறு ஒரு எழுத்தாளருடன் ஒப்பிடுவதும்..அவரை குறைவாக மதிப்பிடுவதும் மிகவும் கண்டனத்துக்குரியது..வருத்தத்துக்குரியது….
ஜூலை 16, 2009 at 11:44 பிற்பகல்
வள்ளி,
சரித்திர நாவல்கள், கல்கியை பற்றி மறுமொழி இட்டதற்கு நன்றி!
கல்கி தலை சிறந்த பத்திரிகையாளர். நல்ல சரித்திர நாவல்கள் எழுதி இருக்கிறார். பொ. செல்வன் உலகத்தின் க்ளாசிக் புத்தகங்களில் இடம் பெறும். சி. சபதம் நல்ல நாவல், பா. கனவு பரவாயில்லை. ஆனால் எவ்வளவு பேர் விரும்பி படிக்கிறார்கள் என்பது இலக்கிய தரத்தின் அளவுகோல் இல்லை. அப்படி பார்த்தால் ராஜேஷ் குமாருக்கும் ரமணி சந்திரனுக்கும் நோபல் பரிசு கொடுக்க வேண்டி இருக்கும். பொ. செல்வன் ஒரு க்ளாசிக். சி. சபதம் நல்ல நாவல். ஆனால் கல்கியின் மற்ற எழுத்துகள் எதுவுமே அவ்வளவு சிறப்பானவை என்று சொல்வதற்கில்லை. அலை ஓசை, தியாக பூமி, கள்வனின் காதலி, மகுடபதி எல்லாமே சுமார்தான். அவருடைய சிறு கதைகள் பல காப்பி அடிக்கப்பட்டவை.
புதுமைப்பித்தன் கல்கியை விட சிறந்த எழுத்தாளர்தான், அதில் சந்தேகமே இல்லை. தமிழின் முதல் உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் அவர்தான்.
நவம்பர் 23, 2010 at 3:07 மு.பகல்
http://mdeii.blogspot.com/search?q=Kalki
This from the “Anjali” boy, Anand!
Enjoy!
நவம்பர் 29, 2010 at 10:45 பிற்பகல்
கல்கி சுட்டிக்கு நன்றி, ஜீப்!
சிமுலேஷன் இப்படி கல்கி/தேவனை ஒப்பிட்டது யார் ஜெயமோகனா?
நவம்பர் 24, 2010 at 1:53 பிற்பகல்
“கல்கி, தேவன் இருவருமே வாசகர் சுவாரசியத்தை முக்கியமாகக் கருதினாலும், இருவருடைய வெளிப்பாடுகளிலும் வேறுபாடுகள் இருந்தன. கல்கி திடுக்கிடும் நிகழ்ச்சிகளிலும், நாடகத்தனமான் திருப்பங்களிலும் அவருடைய கதைகளை விரித்துச் சென்றார். அவருடைய பாத்திரங்கள் ‘ஸ்டீரியோடைப்ஸ்’ என்ற பிரிவில் வரக் கூடியவை. அவற்றின் மேன்மை, சிறுமை, கயமை எல்லாமே ஒற்றைப் பரிமாண்ம் கொண்டவை. உயர்ந்த மதிப்பீடுகளையும், இலக்குகளையும் வைத்து எழுதினார் என்றாலும், அவருடைய பாத்திரங்கள் பொம்மைத்தனம் கொண்டவை. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த பொம்மைகள் வாசகர் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிவகாமி, நாகநந்தி போன்ற பாத்திரங்கள் வாசகர்களால் விரிவாக்கப்பட்டவை. கல்கியின் நிறையப் பாத்திரங்கள் அவருடைய பல இதரப் பாத்திரங்களை ஒத்திருக்கும். அவருக்கு முன் மாதிரியாக ஆங்கில, பிரஞ்சு ஆசிரியர்களில் குறிப்பிட வேண்டுமானா வால்டர் ஸ்காட் மற்றும் அலெக்சான்டர் டுமாஸைக் கூறலாம்.”
இப்படியெல்லாம் கூறியது நான் அல்ல; பின்னர் வேறு யார்?
- சிமுலேஷன்
December 6, 2010 at 3:38 மு.பகல்
அசோகமித்திரன் தான் இப்படிக் கூறியுள்ளார்.
- சிமுலேஷன்
December 6, 2010 at 3:59 மு.பகல்
அசொகமித்ரனா? இப்படி ஏமாந்துட்டேனே?
December 5, 2010 at 5:02 பிற்பகல்
Vanakkam
Thangalathu padhivai kanden – very informative to learn more about kalki
BTW – I have created audio of Ponniyin selvan novel for the benefit of the great Amara Kalki’s fans and for those who cannot read or write tamil but wanted to hear Tamizh and Ponniyin selvan
http://www.itsdiff.com/kalkips.html
Please do let us know of your feedback and ponniyinselvanaudio@gmail.com
Nandri
December 6, 2010 at 3:58 மு.பகல்
ஸ்ரீ, நீங்கள் இந்தப் பதிவைப் பார்த்தது சந்தோசம்! உங்கள் ப்ரோக்ராமில் அடிக்கடி ஃபோன் செய்யும் நூவார்க் ஆர்விதான் இந்த தளத்தின் (ஒரு) பதிப்பாளன். சில சமயம் அங்கே ப்ரோக்ராம் செய்த திருமலைராஜனும் அடிக்கடி எழுதுகிறார்.
உங்கள் சுட்டியையும் இணைத்துவிடுகிறேன்.