மார்ச் 2009


hitler

சமீபத்தில் டிவிடியில் பார்த்த திரைப்படம் டவுன்பால்(Downfall). (ராமச்சந்திரன் உஷா இணையத்தில் இதைப் பற்றி ஒரு பதிவு இருந்ததாக ஞாபகம்) திரைப்படம் நனறாக எடுத்துள்ளார்கள். அதைப்பற்றி அவார்டாகொடுக்கிறாங்க? பிளாக்கில் பிறகு பதிவதாக திட்டமிட்டுள்ளேன். இது நெடுநாட்களாக நான் படித்து தெரிந்து கொண்ட உலகத்தலைவர்களைப் பற்றி ஒரு மதிப்பீடு எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு எண்ணத்தை செயல்படுத்த உதவியது. ஹிட்லரைப் பற்றி முதலில் பார்ப்போம்.

மனிதர்களுக்கு வரும் குரூர எண்ணங்கள் பலவற்றை வெளிப்படுத்துவதற்க்கு சந்தர்ப்பம், மற்றும் இணக்கம் அளிக்காத சமுதாய அமைப்பு எவ்வளவு இன்றியமையாதது என்பது இவர் வாழ்க்கை மூலம் அறிந்துக்கொள்ளலாம். ஆசை (நிறைவேறாததால்) கோபமாகி, கோபம் (முற்றியதால்) மூர்க்கமாகி, மூர்க்கம் (இயலாமையால்) வெறியாகி, வெறி பிற மனிதர்களின் எந்தவித உணர்ச்சிகளை எற்றுக் கொள்ளாத நிலைப்பாட்டிற்க்கு பல தலைவர்களை எடுத்துச்சென்றதாக வரலாறு கூறுகிறது. மனிதர்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கு வரையரையைகளை வகுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு வரையரைகளயும் மீறும் பொழுது தங்கள் வெளிப்பாடுகளின் சீற்றத்திற்கு ஏற்றவாறு சராசரி மனிதன், பேராசைகாரன், கோபக்காரன், மூர்க்கன், வெறியன் என்பது போன்ற ஆளுமைகளுடனும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் இல்லாததால் அல்லது கட்டுப்படுத்தும் கலையை கற்றுக்கொள்ளாததால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் சில நேரங்களில் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

குரூரத்தின் எல்லயை கடந்துவிட்டவர்களுள் (வரலாறு பலரை இவ்வாறு நமக்கு அடையாளம் காட்டுகிறது) ஒருவர் ஏடால்ப் ஹிட்லர் என்று தோன்றுகிறது. தனி மனித வெறுப்பினாலும், தனது குறுகிய பார்வையினாலும் 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்ததாக வரலாறு கூறுகிறது. இந்தக் கணக்கைப் பற்றிய சர்ச்சை இருந்தாலும், நிச்சயமாக இரத்தம் தோய்ந்த கைகளின் சொந்தக்காரர் ஹிட்லர் என்பதில் மண்ணில் பிறந்த ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சில புள்ளிவிவரங்களின் படி
இவரால் 20 மில்லியன் முதல் 50மில்லியன் (2 கோடி முதல் 5 கோடி) வரை இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் உயிர் சேதம் உண்டாயிற்று எனக் கூறுவோர் உண்டு. இன்றைய நியோ-நாஜிகளும் (neo-nazis), யூத எதிர்ப்பாளர்களும் (anti-semitic), ஹோலோகாஸ்டை மறுப்பவர்களும் (holocaust deniers) இந்த புள்ளிவிவரங்கள் எதையும் ஏற்க மறுப்பார்கள்.

ஹிட்லர் போன்ற ஒருவரை பற்றி பல உளவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்தும் அது ஒரு முடிவில்லாத ஆராய்ச்சியாகவே எனக்கு தோன்றுக்கிறது. அத்தகைய சிக்கலான் மனநிலை உடையவர். ஹிட்லரிடம் இருந்த பேராபத்தான குணங்கள் பல. தனது எண்ணங்களே உண்மை என நினைத்து அதை நடைமுறைபடுத்த சற்றும் சிந்திக்காமல் உடனே செயலாக்க நினைக்கும் அபாயம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மற்ற விஷயங்களில் சரி. போர் போன்ற பெரு முயர்ச்சிகளிலும் இவர் மிகவும் அலட்சியம் காண்பித்திருக்கிறார். வலிமையற்ற ஆஸ்திரியாவையும், செக்கோஸ்லோவேக்கியாவையும் தட்டிக்கேட்க கூட ஒருவரும் இல்லாத சூழ்நிலையில் அவர் ஜெர்மனியுடன் இணைத்துக் கொண்டார். எளிதில் வென்று சுகம் கண்ட இவர் இதுவே பிற நாடுகளிலும் எதிர்ப்பார்த்தார். போலந்து இவருடைய இந்த மாயையை விலக்கியது. ஏற்றுக்கொள்ளமுடியாமல் நிஜத்தை எதிர் நோக்கினார். அவர் நினைத்தால்தான் ஒப்பந்தங்கள் ஒப்பந்தங்களாகப் பார்க்க்கப்பட்டது. இல்லாவிட்டால் ஒப்பந்தங்கள் அவருக்கு அலட்சியமாயிற்று. ஜோஸப் ஸ்டாலினை கிள்ளுக்கீரையாக நினைத்தார். ஸ்டாலின் இவரைவிட எத்தன், பெரிய சர்வாதிகாரி என்பதை ஏற்க மறுத்தார். பெனிட்டோ முசோலினியயை பயமுறுத்தி தன் வசப்படுத்திய மாதிரி ஸ்டாலினை பயமுறுத்துவதில் வெற்றிப்பெற்றாலும் தன் வசப்படுத்த முடியாத ஒரு இயலாமை. மாஸ்கோ வரை சென்றும் அதை கைப்பற்ற முடியாத ஒரு வெறுப்பு. நெவில் சாம்பர்லினின் எத்தனையோ அறிவுரைகளை நிராகரித்தார். இரண்டாம் உலகப்போர் ஆரம்பத்தில் ஒருவரைத் தவிர மற்றத் தலைவர்கள் (சாம்பர்லின், ரூஸவெல்ட் மற்றும் ஸ்டாலின் உள்ளடங்களாக), அவருடைய செயல்களுக்கு அவ்வளவு எதிர்ப்பை காட்டவில்லை. சாம்பர்லினுக்கு பின்னால் வந்த சர். வின்ஸ்டன் சர்ச்சில் தான் ஹிட்லருக்கு ஈடான ஆத்திரத்துடன் ஹிட்லரை எதிர்த்தவர். ஆனால் ஹிட்லர் அதை அலட்சியப்படுத்தினார் (சர்ச்சில் யூதர்களின் அனுதாபி என்று தெரிந்தும்). அவர் எப்பொழுதும் இங்கிலாந்து தனக்கு ஆதரவு அளிக்கும் என்ற தப்புக் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். சாம்பர்லினுடைய மிதமான போக்கு ஹிட்லருடைய இந்த அணுகுமுறைக்கு காரணமாக இருந்திருக்கலாம். டான்ஸிக் யுத்தத்தில் கிட்டதட்ட 2 லட்சம் பிரிட்டிஷ் துருப்புகளை கைப்பற்றியப் பிறகு ”போகட்டும்” என விட்டுவிட்டு ஜெர்மனியின் ராணுவத்திற்கு அதிர்ச்சியையும், தனக்கே சாவு மணியும் அடித்துக்கொண்ட இன்காம்பீட்டண்ட் தலைவர் இவர். இவர் ராஜதந்திரம் புரிகிறது. அதாவது அவருக்கு எப்பொழுதும் சோவியட் யூனியனை தனியாக கைப்பற்றுவதில் சந்தேகம் இருந்துக் கொண்டே இருந்தது. இங்கிலாந்து உதவியுடன் அதை நிச்சயம் கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த எண்ணம் கண்ணை மறைக்க சர்ச்சிலின் எண்ணங்களை கணக்கிலெடுத்துக் கொள்ள தவறினார். சர்ச்சிலோ பிறரின் புகழை பார்த்து சந்தோஷம் அடையாதவர். (பொறாமை என்று கூட சொல்லலாம் – காந்தியைப் பார்த்து “அரை நிர்வாண பிச்சைக்காரன்” என்றவர்). ஹிட்லரிடம் இவர் காட்டிய வெறுப்பு கணக்கிலடங்காதது. இது அந்த காலத்தில் பலருக்கு புரிந்திருந்தது. ஆனால் புரியவேண்டிய ஹிட்லருக்கு புரியவில்லை.

ஆரிய சுப்ரிமஸி கொள்கை இவருக்கு ஏற்ப்பட்டது தனிப்பட்ட பாதிப்பினால் என்று கருதுகிறேன். தனது ஆரிய பாட்டி வேலை செய்து வந்த வீட்டின் யூதரால் கெடுக்கப்பட்டதை அறிந்ததிலிருந்து யூதர்கள் மேல் ஒரு வித வெறுப்பை வளர்த்துக் கொண்டார். இது போக யூதர்கள் ஆதிக்கமிகுந்த கல்விச் சாலைகளும் மற்ற இடங்களிலும் தனக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்றும் எண்ணங்களை வளர்த்துக் கொண்டார். யூதர்களை தன் வசதிக்கு ஏற்றவாறு போற்றவோ, தூற்றவோ செய்தார். தூற்றியது 99 சதவிகிதம். (தமிழகத்தில் சிலருக்கு “அவாளை”ப் பார்த்து தாழ்வு மணப்பான்மை. ஐரோப்பாவில் ”அவாளுக்கு” யூதர்களை பார்த்து தாழ்வு மணப்பான்மை – “உலகத்தை பார்த்தேன், சிரித்தேன்” என்ன ஒரு திரைப்படத்தில் வசனம் ஒன்று வரும். அது ஞாபகம் வருகிறது. என்ன என்று சொல்ல?)

சாவி விகடன் பொக்கிஷத்தில் எழுதிய இந்த கட்டுரை என்னை நெகிழ வைத்தது. பாரதியின் முகங்களில் எதையும் அறியாத அவரது பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் கண்களில் பாரதி எப்படி தென்பட்டார் என்பதை சாவி விவரிக்கிறார். அந்த நாற்காலி ஃபோட்டோ இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 13-9-1964-இல் வெளி வந்திருக்கிறது. நன்றி விகடன்! ஓவர் டு விகடன்.

‘இதுதான் பாரதியார் குடியிருந்த வீதி!” என்றார் புதுவை நண்பர்.

”இந்த வீதிக்குப் பெயர்..?”

”ஈசுவரன் கோயில் தெரு!”

கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த வீதி, கடற்கரையில் போய் முடிகிறது.

”பத்துப் பன்னிரண்டு வருஷ காலம் இந்தத் தெருவில்தான் குடியிருந்தார். அதோ தெரிகிறது பாருங்கள், இடது சாரியில் இருபதாம் நம்பர் வீடு… அதுதான் பாரதியார் குடியிருந்த வீடு!”

கவியரசர் வாழ்ந்த அந்த மாடி வீட்டையே சற்று நேரம் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பூட்டப்பட்ட கதவுகளுடன் பாழ்பட்டு நின்ற அந்த இல்லத்தின் தோற்றம், என் உள்ளத்தில் ஏதேதோ சிந்தனைகளைக் கிளறிவிட்டன.

பாரதியாரின் இல்லத்துக்கு அடுத்த வீட்டு வாசல் திண்ணையில், சாதுவாக ஒரு மனிதர் உட்கார்ந்தபடி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் நெற்றியிலே பளிச்சென்று திருநீறு ஒளி வீசிக்கொண்டிருந்தது.

”அடுத்த வீட்டில்தானே பாரதியார் குடியிருந்தார்?” என்று மெதுவாக அவரிடம் விசாரித்தேன்.

”ஆமாம். இப்போது அது என் வீடு. 1953-ல் நான் விலைக்கு வாங்கிவிட்டேன். பத்து வருஷமா சும்மாவேதான் பூட்டி வெச்சிருக்கேன். போன வருசமே சர்க்கார்லே இந்த வீட்டை வாங்கறதா இருந்தது. இந்த வருசத்துக்குள்ளேயாவது முடிஞ்சுடும்னு எம் புத்தியிலே படுது. தனிப்பட்டவங்க யாருக்கும் இதை விக்க றதா உத்தேசமில்லை. சிவாஜி கணேசன் கூட வந்து பார்த்துட்டுப் போனாரு…”

”நீங்க பாரதியாரை நேரிலே பார்த்திருக்கீங்களா? பேசியிருக்கீங்களா?”

”பார்க்காமல் என்ன? அடுத்த வீட்டுலேதானே பத்து வருசத்துக்கு மேல இருந்தாரு! கவர்மென்ட்டுக்கு விரோதமாக இங்கே வந்தாரு. தங்கமான குணம். எல்லார்கிட்டேயும் சகஜமா பழகுவாரு. குழந்தைங்களைக் கண்டால் தூக்கிட்டுப் போய் விளையாடுவாரு. குழந்தைங்க ஏணையிலே தூங்கிக்கிட்டு இருந்தாக் கூட தூக்கிட்டுப் போயிடுவாரு. குழந்தைங்கன்னா அவ்ளோ பிரியம்! அவரும் சரி, அவர் பெண்ஜாதியும் சரி… ரொம்ப நல்ல குணம். ஒருத்தரையும் கடுமையாப் பேசமாட்டாரு. யார் கூப்பிட்டு சாப்பாடு போட்டாலும் சாப்பிடுவாரு. வித்தியாசமே கிடையாது.”

”பார்க்க எப்படி இருப்பார்?”

”எப்பப் பார்த்தாலும் கறுப்புக் கோட்டு ஒண்ணு போட்டுக்கிட்டிருப்பாரு. தலையிலே ஒரு துணியைச் சுத்திக்குவார். மாடி மேலே உலாத்திக் கிட்டே பாடிக்கிட்டிருப்பார்.”

”எந்தப் பாட்டாவது ஞாபகம் இருக்குதா?”

”அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. அந்தக் காலத்திலே இவர் இவ்வளவு பெரிய ஆசாமியாவார்னு தெரிஞ்சிருந்தா, கொஞ்சம் உன்னிப்பாவே கவனிச்சிருக்கலாம்!”

”அவர் உங்களோடு பேசியிருக்காரா?”

”ஆமாம். ‘என்ன செட்டியாரே’ன்னுதான் கூப்பிடுவார்.”

”உரக்கப் பாடுவாரா?”

”பெரிய குரல் கொடுத்துத்தான் பாடுவார். பேச்சும் அப்படித்தான் ஆவேசமாயிருக்கும். எப்பவும் ஒரு வேகம்தான்; ஆவேசந்தான். சில சமயம் ‘ஓம் சக்தி! ஓம் சக்தி’ன்னு கூவுவாரு. சின்னக் குரலே கிடையாது. உறைப்பாப் பேசுவாரு. அடிக்கிறாப் போல இருக்கும். ‘என்னடா இவர் இப்ப டிப் பேசறாரே’னு கூடத் தோணும். அது அவரு சுபாவம். கவர்மென்ட் பேரிலே இருக்கிற வெறுப்பு அப்படி…”

”உங்க பேரு?”

”கு.மா.சி.எம். அண்ணாமலைச் செட்டியார்.”

”செட்டிநாடா?”

”இல்லே. இந்த ஊரேதான். இவர் என் மகன். காளத்தின்னு பேரு.”

”எதிர் வீட்டிலே ராஜரத்தினம் செட்டியார் இருக்கிறார். அவருக்கும் பாரதியாரோடு பழக்கம் உண்டு. அவர் வீட்டிலே பாரதியார் உட்கார்ந்த நாற்காலி கூட ஒண்ணு இருக்குது. பார்த்துட்டுப் போங்க. வாங்க, நானே அழைச்சிட்டுப் போறேன் அவரிடம்” என்று கூறி, எங்களை எதிர் வீட் டுக்கு அழைத்துச் சென்றார் காளத்தி.

”ரொம்பக் கஷ்டம்தாங்க அவருக்கு, அந்தக் காலத்திலே! எந்த நேரமும் யூனியன் போலீஸ் ஸி.ஐ.டி-ங்க தெருக் கோடியிலே இருந்துக்கிட்டு ‘வாச்’ பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அப்பெல்லாம் அவரைக் காப்பாத்தினது ரௌடி வேணுதான்” என்றார் ராஜரத்தினம் செட்டியார்.

”என்ன? ரௌடி வேணுவா?!”

”ஆமாங்க! பாரதியார்கிட்டே அவனுக்கு என்னவோ அவ்வளவு அன்பு. அவர் கூடவே இருந்து பந்தோபஸ்து கொடுப்பான். பாரதியார் அவன் கூடத்தான் தென்னந்தோப்புப் பக்கமெல்லாம் உலாத்தப் போவாரு. ‘பாரதியாரை புதுச்சேரி பார்டர் தாண்டி இட்டுக்கிட்டு வந்துடு. ஆயிரம் ரெண்டாயிரம் தரேன்’னு இங்கிலீஷ் போலீஸ் சொல்லுவாங்க. ஆனாலும் வேணு ரொம்ப நேர்மையானவன். பாரதியாருக்கு உண்மையாய் இருந்தான். கடைசி வரைக்கும் அவரைக் காப்பாத்தினான்.”

”உங்களுக்கு அப்ப என்ன வயசு இருக்கும்?”

”இருபதுக்குள்ளே இருக்கலாம். அவருக்கு முப்பது இருக்கலாம்.”

”அவர் பாடறப்போ நீங்க கேட்டிருக்கீங்களா?”

”உம். மெத்தையிலேருந்து உரக்கப் பாடுவாரு. காளி பூஜை பண்ணுவாரு. சுதேசமித்திரன் ஆபீசிலேருந்து மாசா மாசம் முப்பது ரூபா வரும் அவருக்கு. அதிலேதான் ஜீவனம். ஏழு ரூபாயோ என்னமோதான் வாடகை. அதையே அவரால கொடுக்க முடியாது. ஒரு நாள் அவர் சம்சாரம் வந்து ‘ராஜம்! – அந்தம்மா என்னை ராஜம் ராஜம்னுதான் கூப்பிடும் – அவசரமா எனக்கு ஏழு ரூபா கொடு. இந்த நாற்காலியை வெச்சுக்கோ. இதை விலைன்னு வெச்சுக்க வேணாம். உதவி செய்யறதா நினைச்சுக் கொடு’ன்னாங்க. இன்னுங்கூட அந்த நாற்காலி இருக்குது. பத்திரமா வெச்சிருக் கேன். பிரம்பு பின்னின நாற்காலி. நாலு ரூபா கூட பெறாது. பிரம்பு கூட மேலேதான் பின்னினோம். அடியிலே இருப்பது அப்படியே தான் இருக்குது. மாத்தல்லே. கடையிலே இருக்குது நாற்காலி. போய்ப் பாருங்க. டேய்… இவங்களை அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டுடா! ரொம்பப் பேரு வந்து பாக்கறாங்க. ‘எனக்குக் கொடுத்துடு’ன்னு கேக்கறாங்க. பாரதியார் ஞாபகார்த்தமா இருக்கட்டும்னு யாருக்கும் கொடுக்கல்லே!” என் றார் ராஜரத்தினம் செட்டியார்.

அவருடைய பேரனுடன் சென்று அந்த நாற்காலியைத் தரிசித்தோம்.

சித்திரக்காரர் அதைப் படம் வரைந்துகொள்ளும் நேரத்தில் நான் அதைத் தொட்டு, நகர்த்தி, நிமிர்த்திப் புரட்டிச் சாய்த்துக் கவிழ்த்து ஒருக்களித்து எத்தனை கோணங்களில் எப்படியெல்லாம் பார்க்கமுடியுமோ அத்தனை கோணங்களிலும் ஆசை தீரப் பார்த்தேன்.

கடைசியாகக் கவியரசரின் ஆசனத்தைத் தொட்டு வணங்கி விட்டுப் புதுவையிலிருந்து ஒரு புதிய உணர்ச்சியோடும் ஊக்கத்தோடும் திரும்பி வந்தேன்.

என் மூச்சிலே இப்போது ஒரு சக்தியே பிறந்திருக்கிறது!

சாத்தான் என்ற பதிவர் நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பதிவுக்கு மறுமொழி எழுதி இருந்தார். அவரது வலைப்பதிவு முகவரிக்கு சென்றபோது தினமும் ஒரு நூல் என்ற சைட்டை பற்றி தற்செயலாக தெரிந்து கொண்டேன். இங்கே பழைய பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிக்கிறார்கள். யார் என்ற விவரம் அவ்வளவாக தெரியவில்லை. நான் ஒன்றிரண்டு புத்தகங்களை பார்த்தேன். பழைய பத்திரிகைகள் – குமரி மலர், பிரசண்ட விகடன், முயல் – வேறு எங்கேயும் இப்படி பதிக்கப்பட்டு நான் பார்த்ததில்லை. மிக அருமையான முயற்சி.

சாத்தானின் பதிவும் நன்றாக இருக்கிறது. இவரின் உண்மையான பெயர் தெரியவில்லை. எழுத்தாளர், மற்றும் ஓவியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஓவியங்களுக்காகவே இவரது பதிவை பார்க்கலாம். அவர் ஓவியங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிக அருமை.

துக்ளக் என்னை மன்னிக்கட்டும்!

நாற்பது தொகுதிகளிலும் நானே போட்டி – ஜெயலலிதா அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எல்லா தொகுதிகளிலும் தானே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் சட்டம் இடம் கொடுக்குமா என்று கேட்டதற்கு கருணாநிதி தன் இஷ்டம் போல வளைப்பதற்கு இது அவரது வீட்டின் ஜன்னல் சட்டம் அல்ல, நாட்டின் சட்டம் என்று பதிலளித்தார்.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் சோனியா காந்தி புரட்சித் தலைவி, தமிழகத்தின் தவப் பயன், மகாத்மா ஜெயலலிதா டெல்லியில் நிற்க மனு தாக்கல் செய்யாவிட்டால் சோனியா காந்தி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று மகாதேவன் அறிவித்திருக்கிறார். சோனியா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லையே, அவரை எப்படி நீங்கள் நீக்க முடியும் என்று கேட்டதற்கு டி.டி.கே. தினகரன் முதலில் அவரை உறுப்பினராக்கி பிறகு நீக்குவோம் என்று சொன்னார். திவாகரன் அதெல்லாம் வேண்டாம், சோனியாவை காங்கிரசிலிருந்து நீக்கிவிடலாம் என்று கருத்து தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா 552 தொகுதிகளிலும் போட்டி இட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த செய்தியை வெளியிடும்போது “முன்னாள் முதல்வர்” ஓ. பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டு எழுதும்படி தினகரன், மகாதேவன், திவாகரன் மூவரும் நிருபர்களை கேட்டுக் கொண்டார்கள்.

கலைஞர் பேட்டி
இது பற்றி பேட்டி அளித்த கலைஞர் நாற்பது ஆண்டு கால நண்பரான எம்ஜிஆர் கூட நாற்பது தொகுதிகளிலும் போட்டி இடுவேன் என்று சொன்னதில்லை என்பதை சுட்டி காட்டினார். இது பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சமூக நீதிக் கொள்கைக்கு விரோதமானது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். நல்லி சில்க் உடுத்தும் நய வஞ்சகி, நச்சுப் பாம்பு ஜெயலலிதா போன்று தான் எப்போதும் நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்றும் வருத்தத்தோடு கூறினார். உடனே தான் நல்லி சில்க் முதலாளியான செட்டியாரின் இனத்துக்கு எதிரி இல்லை என்றும், செட்டியாரியத்தை மட்டுமே எதிர்ப்பதாகவும் ஒரு விளக்கமும் அளித்தார். கூட்டணி தர்மத்தை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்த ராமதாசும், கம்யூனிஸ்ட் கட்சி அவாளும் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றும் வினவினார். முதுகில் குத்தும் துரோகி, கழக கண்மணிகளின் முதல் விரோதி வைக்கோ தி.மு.க. அணிக்கு மாற விரும்பினால் அவரை இரு கரம் நீட்டி வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சோ கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்த சோ, பிஜேபிக்கு இரண்டு சீட் கொடுத்துவிட்டு மிச்ச 38 சீட்டில் ஜெ நின்றிருந்தால் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். யாருக்கு வாய்ப்பு அதிகரித்திருக்கும், ஜெவுக்கா, பிஜெபிக்கா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. நரேந்திர மோடி குஜராத்தில் எல்லா தொகுதிகளிலும் போட்டி இட வேண்டும் என்று அவர் பிஜேபி தலைமைக்கு ஆலோசனை தெரிவித்து வருகிறதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணி கட்சிகள் நிலவரம் 
கூட்டணியில் குழப்பம் விளைக்க கலைஞர் செய்யும் முயற்சிகள் படுதோல்வி அடையும் என்று ஜெயலலிதா இன்று பேட்டி அளித்திருக்கிறார். இந்த முயற்சிகளை கலைஞர் உடனே நிறுத்தாவிட்டால் அடுத்த திமுக உள் கட்சி தேர்தலில் எல்லா பதவிகளுக்கும் தான் போட்டி இட வேண்டி வரும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் மீண்டும் கலைஞரை அணுகியதாகவும், கலைஞர் அவருக்கு இதயத்தில் இடம் தருவதாக கூறியதாகவும் தெரிகிறது. அன்புமணிக்கு உடனடியாக மந்திரி பதவியும், பிறகு ஒரு ராஜ்ய சபா சீட்டும் தருவதாக சொல்லி இருப்பதால் டாக்டர் இந்த ஏற்பாட்டை ஒத்துக் கொள்வார் என்று தெரிகிறது.

கட்சியிலிருந்து நிற்க வைக்க ஆள் தேட வேண்டிய அவசியம் இல்லாததால் வைக்கோ மிகவும் நிம்மதியாக இருப்பதாக தெரிகிறது. அம்மாவை தலைவராக ஏற்றுக்கொண்டது பெரிய தீர்க்கதரிசனம் என்று அவர் நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இது தெரிந்த ஜெயலலிதா “இவர் ரொம்ப நல்லவரு! எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு” என்று சொன்னதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து நெரிசல் 
லாயிட்ஸ் ரோடில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டி இட வேண்டும் என்று ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் மனு கொடுக்க க்யூவில் நிற்பதால் லாயிட்ஸ் ரோடில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது அதிமுகவினரின் அராஜகம் என்றும் இதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் துரைமுருகன் சொல்லி உள்ளார்.

 

தி.மு.க. தொகுதி பங்கீட்டில் தகராறு

தி.மு.க. அணியில் தொகுதி பங்கீட்டு தகராறுகள் இன்னும் முடியவில்லை. காங்கிரசுக்கு 20 சீட், விடுதலை சிறுத்தைகளுக்கு 1 சீட் என்ற அளவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டாலும் ஸ்டாலின் அழகிரிக்கு இடையே தொகுதி பங்கீடு முடியாததால் கலைஞர் பெரும் கவலையில் இருக்கிறார் என்று தெரிகிறது. சீக்கிரம் பங்கீட்டை முடிக்கும்படியும், இல்லாவிட்டால் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை சமாளிக்க முடியாது என்றும் அவர் சொன்னதாக தெரிகிறது. மு.க. முத்து இந்த முறை இதயத்தில் மட்டும் இடம் தந்தால் போதாது என்றும் சொல்லி வருவதாக நமது நிருபர் தெரிவிக்கிறார்.

அழகிரி கை ஓங்குகிறது
இன்று இந்த தேர்தலின் விசேஷ பொறுப்பாளராக அழகிரி நியமிக்கப்பட்டார். இதை பற்றி பேசிய கலைஞர் அழகிரி ஏற்கனவே தென் மண்டல செயலாளராக இருப்பதாகவும், தமிழ் நாடு இந்தியாவின் தென் மண்டலத்தில்தான் இருப்பது பெரியார் வழி வந்து புவியியல் பயின்றவர்களுக்கு தெரியும் என்றும், அதனால் அழகிரியே இந்த தேர்தலுக்கு முழு பொறுப்பை ஏற்கப்போவதாகவும் சொன்னார். அழகிரி அவருக்கு ஒரு சால்வை போட்டு மரியாதை செலுத்தினார். அப்போது பேராசிரியர், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். பிறகு அழகிரி நிருபர்களிடம் பேசுகையில் ஸ்டாலின் என்பது ரஷியப் பெயர், ஸ்டாலினுக்கு ரஷிய தேர்தலில் முழு பொறுப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தினகரன் அலுவலகம் மதுரையில் மூடப்பட்டதற்கும் இந்த செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சன் டிவியின் மக்கள் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

தயாநிதி மாறன் மதுரையில் போட்டி!
அழகிரி குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் சமரசம் ஏற்பட்டதாகவும், அதனால் தயாநிதி மதுரையில் போட்டி போட இருப்பதாகவும் தெரிகிறது. அழகிரியின் மகனான தயாநிதி சன் டிவியின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்பார் என்றும ஒரு வதந்தி உலவுகிறது.

 

 

ராஜீவ் மரணம் தற்கொலை – சுப்ரமணிய சாமியின் அதிர்ச்சி தரும் அறிக்கை

“இங்கே பாருங்கோ, ராஜீவ் எக்ஸ் ப்ரைம் மினிஸ்டர். அவருக்கு நிறைய செக்யூரிடி எல்லாம் உண்டு. அவர்கிட்ட எப்படி பாம் போக முடியும்? அந்த பாம் அவரோட உடம்பிலேயே இருந்துது. அவருக்கு குடும்பத்திலே சோனியா ரொம்ப தொந்தரவு கொடுத்தாலே அந்த மனுஷன் பாவம் அவர் உடம்பிலே அவரே பாம் செட்டப் பண்ணி தற்கொலை பண்ணிண்டுட்டார். இதுக்கு என்கிட்டே நிறைய எவிடன்ஸ் இருக்கு. அதை எல்லாம் எனக்கு பிரபாகரனே கொடுத்திருக்கார்” என்று சாமி சொன்னதாக கேட்ட நாம் அதிர்ந்து போனோம். அவரிடம் நீங்கள்தான் புலிகளோட எதிரியாச்சே என்று கேட்டோம். அதற்கு அவர் “இல்லே இல்லே நான் காங்கிரசுக்கு எதிரி. பிரபாகரனும் அப்படித்தான். அதனால அவர் என்னோட நண்பன், இதுக்கு உங்களுக்கு எவிடன்ஸ் வேணும்னா தாவூத் இப்ராஹீம் கிட்ட கேட்டுக்குங்கோ” என்று சொன்னார்.

இதனால் ஜெ அவருக்கு மதுரை தொகுதியை விட்டுத் தருவார் என்றும், மிச்சம் உள்ள 39 தொகுதியில் மட்டுமே போட்டி இடுவார் என்றும தெரிகிறது. அந்த பாம்பை(bomb) செட்டப் செய்தது கருணாநிதி என்னும் பாம்புதான் என்றும், ராஜீவின் தற்கொலைக்கு கருணாநிதி அவருக்கு கமர்கட் கொடுக்காததும் ஒரு முக்கிய காரணம் என்றும், ஜெ முழங்கினார்.
இதை கேட்டதும் கலைஞர் எழுதிய கவிதை.

ஜெயலலிதா வட்டமிடும் கழுகு,
நான் உனக்காக உருகும் மெழுகு,
தமிழா நீ பார்த்து பழகு.

ஆர்எம்வி கட்சியின் இமாலய வளர்ச்சி – தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம்

பல நாட்களாக அவார்டா கொடுக்கறாங்க என்ற ப்ளாக்-ஐ எழுதி வரும் ஆர்வி இன்று ஆர்எம்வி கட்சியில் சேர்ந்தார். ஆர்விக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் பழைய கால சினிமா பற்றி ஆர்எம்வியை பேட்டி காண முயற்சித்ததாகவும், ஆர்எம்வி தவறாக புரிந்து கொண்டு அவரை கட்சி உறுப்பினர் ஆக்கி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் அவரது எம்ஜிஆர் கழகத்தில் உறுப்பினர் எண்ணிக்கை போன வருஷத்தை விட 100% அதிகரித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

எம்ஜிஆர் கழகத்துக்கு ஒரு சீட் – கலைஞர் அறிக்கை
தமிழக அரசியல் மாற்றங்களை எப்போதும் கூர்ந்து கவனித்து வரும் கலைஞரின் கழுகுக் கண்களிலிருந்து எம்ஜிஆர் கழகத்தின் இமாலய வளர்ச்சி தப்பவில்லை என்று தெரிகிறது. இன்று மாலை அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் நாற்பது ஆண்டு நண்பர் எம்ஜிஆருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவரும், ஏமாற்றங்களை அண்ணாவின் ஆணைப்படி எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டு தாங்கிக் கொள்பவருமான ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகத்துக்கு வரும் தேர்தலில் அமெரிக்காவில் ஒரு சீட் ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்தார். இதன் மூலம் வெளி நாடுகளிலும் போட்டியிடும் முதல் இந்தியக் கட்சி தி.மு.க.தான் என்ற ஒவ்வொரு தமிழனும் பெருமைப் படலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சீட்டில் அமெரிக்காவில் வாழும் ஆர்வி போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆர்எம்வியிடம் தமிழகத்தில் சீட் கிடைக்காததற்காக ஏமாற்றம் அடைகிறீர்களா என்று கேட்டதற்கு அவர்
“உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்”
என்று பாடிவிட்டு, எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபனைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் ராஜு, வட அமெரிக்காவில் வாசு என்று இரண்டு படங்களை எடுக்க திட்டம் போட்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

ஆர்விக்கு மாரடைப்பு
உலகம் சுற்றும் வாலிபனை பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த ஆர்வி வட அமெரிக்காவில் வாசு பற்றி வந்த செய்தியை படித்துவிட்டு தான் அமெரிக்காவில் தி.மு.க. அணியில் போட்டி இடப்போவதை தெரிந்து கொண்டார். உடனே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது மாரடைப்பு இல்லை, வாயு தொந்தரவுதான் என்று டாக்டர்கள் சொன்னாலும் அவர் தேர்தல் முடியும் வரை கோமாவிலிருந்து வெளி வரமாட்டேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் -ஆர்எம்வி ஆலோசனை
ஆர்வி பார்ப்பன ஜாதியில் பிறந்தவர் என்பதை இப்போதுதான் கலைஞர் அறிந்தார். அவர் உடனே “அவாள் நமக்கு எப்போதுமே சவால்தான்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சமீபத்தில் 1964-இல் கூடுவாஞ்சேரி இடைத்தேர்தலில் ஒரு குல்லுக பட்டர் தி.மு.க.வின் முதுகில் குத்தியதையும், ஜெயலலிதா சட்டசபைய்ல் தான் பாப்பாத்தி என்று சொல்லிக் கொண்டதையும், அதே சட்ட சபையில் ஜாதி பேதத்தை ஒழிப்பதற்காக தான் சூத்திரன், நாலாம் வருணத்தவன் என்று சொல்லி கொண்டதையும் நினைவு கூர்ந்தார். பிறகு தென்சென்னை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டதால், ராஜாஜியை மூதறிஞர் என்று முதலில் அழைத்தது தான்தான் என்பதையும் நினைவு கூர்ந்தார். தான் பார்ப்பனர்களுக்கு எதிரி இல்லை, பார்ப்பநீயத்துக்குத்தான் என்று இலக்கிய ரசம் சொட்ட சொட்ட இன்னொரு கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார். இந்த கவிதை நாளை தினகரன், முரசொலியில் வரும் என்றும், இந்த கவிதைக்கு கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நமீதா அபிநயம் பிடித்துக் காட்டுவார் என்றும் தெரிகிறது.

பிறகு ஆர்எம்வி இது போன்ற துயர சம்பவங்களை தவிர்க்க விரும்புவதாகவும், அதனால் வழக்கம் போல் கலைஞர் இதயத்தில் மட்டும் சீட் கிடைத்தால் போதும் என்று கூறினார். கலைஞர் தான் எதையும் தாங்கும் இதயம் உள்ள அண்ணாவின் வழி வந்தவன், ஆர்எம்வியையும் தாங்குவேன் என்று குறிப்பிட்டார்.

காதில் விழுந்த துணுக்கு செய்திகள் 

ரஜினி ஆதரவு யாருக்கு?
ரஜினி நான் யாருக்கு ஆதரவு தரணும், எப்படி ஆதரவு தரணும், எப்போ ஆதரவு தரணும் அப்படின்றதெல்லாம் யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது என்று சொல்லி இருக்கிறார். இதையே இந்திரன் படத்தில் ஒரு பன்ச் ஆகவும் வைத்த்ருப்பதாக ஒரு வதந்தி உலவுகிறது. படத்தின் ரகசியங்கள் வெளி வருவதால் ஷங்கர் மிக கோபத்தில் இருக்கிறாராம்.

ஸ்வீட் எஸ், சீட் நோ
சரத்தின் மூத்த மகளுக்கு நேற்று 25 வயது முடிந்தது. இதை குடும்பத்தில் அனைவரும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார்கள். தன் கட்சி சார்பில் நிற்க மூன்று தகுதி உள்ளவர்கள் கிடைத்துவிட்டதால் சரத் ஆனந்தத்தில் மிதக்கிறார். ஆனால் ராதிகாவோ ஸ்வீட் கொடுத்து கொண்டாடினால் ஓகே, ஆனால் சீட் கொடுத்து கொண்டாடக் கூடாது, பணத்தை எல்லாம் முதல் தாரத்து வாரிசுங்க மேலயே விட்டீங்க, அப்புறம் தெரியும் சேதி என்று உறுமுகிறாராம்.

முன் வந்த பதிவுகள்
சுப்பிரமணிய சாமி – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 5
டி. ராஜேந்தர் – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 4
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3 – சரத்குமார்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்

சந்திரலேகா அறையில் காத்திருக்கிறார். சாமி வருகிறார்.

சாமி: சாரி சந்திரலேகா, கொஞ்சம் லேட்டாயிடுத்து. வர வழியிலே சில பேர் கருப்பு கோட் போட்டுண்டு நின்னுண்டு இருந்தா. அவாள அவாய்ட் பண்ணிட்டு சுத்திண்டு வரத்துக்குள்ளே கொஞ்சம் லேட்.
சந்திரலேகா: நீங்க வர வழிலே கோர்ட் எதுவும் கிடையாதே?
சாமி: என்னன்னு தெரியலியே! அடையாளம் தெரிஞ்சுரப்படாதுன்னு முகத்தை கூட மூடிண்ட்ருந்தா.
லேகா: நீங்க மசூதி வழியா வந்திருப்பீங்க. பர்தா போட்ட பொண்ணுங்களை பயந்து ஓட்றீங்களே!
சாமி: என்ன பண்றது, என் தலைஎழுத்து இப்படி ஆயி போச்சு. கருப்பை பாத்தாலே ஒரே காப்ராவா இருக்கு. சரி வா, நம்ம கட்சி நிர்வாகிகளோட பேசுவோம்.
லேகா: இருக்கறது நானும் நீங்களும்தான். வேணும்னா இந்த சேர்ல ஒசாமா, அந்த சேர்ல ஒபாமா இருக்கறதா நினைச்சுக்கங்க.
சாமி: நான் ஒபாமாவுக்கு நாளைக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கேன். ஒசாமா கடன்காரந்தான் கிடைக்க மாட்டேங்கறான்.
லேகா: அது ஒபாமா அப்பாயின்ட்மென்ட் இல்லை. உம் அப்பாம்மாவுக்கு கொடுத்த அப்பாயின்ட்மென்ட். வெறும் வாயையே மெல்லுங்க!
சாமி: இதை எல்லாம் எவனும் கண்டுக்கறதில்ல. நீ மட்டும் ஏன் கண்டுக்கற? சரி பாயிண்டுக்கு வருவோம். நான் ஜெயலலிதாகிட்ட சொல்லி மதுரை சீட் வாங்கி நிக்கப் போறேன். அந்த சீட் மட்டும் கிடைக்கட்டும், அப்புறம் பார், மஹாத்மா காந்தியை கொன்னது அழகிரிதான் அப்படின்னு சொல்லி பிச்சு உதறிட மாட்டேன்!
லேகா: (மனதுக்குள்) ஏன் தலைஎழுத்து ஐ.ஏ.எஸ். படிச்சிட்டு இங்கே வந்து மாட்டிக்கிட்டேன். (உரக்க) அதை எல்லாம் யாரு கேக்கப் போறாங்க? உங்களுக்கு சீட் சரி, எனக்கு என்ன வழி?
சாமி: வேணும்னா உன்னை ஒபாமா கிட்ட சேத்து உட்டடறேன்! இந்த கட்சிக்கு த்யாகம் பண்ணினது யாரு? நான்தானே! முட்டையால என்னத்தானே அடிச்சா!
லேகா: இந்த கட்சியில் சேந்ததே பெரிய தியாகம்! உங்க கூட இருக்கறதால என்னை யாரும் மதிக்கறதில்ல, இல்லாட்டி நானும் பிஜேபி, மாயாவதி கட்சின்னு எங்கியாவது சேந்து ஒரு எம்பி சீட்டாவது வாங்கி இருப்பேன்.
சாமி: வாங்கினா போறுமா, ஜெயிக்க வேணாமா!
லேகா: (கடுப்பில்) கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று பாட ஆரம்பிக்கிறார். சாமி ரூமை விட்டு ஒரே ஓட்டம்.

முன் வந்த பதிவுகள்
டி. ராஜேந்தர் – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 4
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3 – சரத்குமார்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்


டி. ராஜேந்தர் தனது அறைக்குள் சினம் கொண்ட சிங்கத்தை போல் – சீச்சி மதம் கொண்ட யானையை போல் – நடை போட்டுக் கொண்டிருக்கிறார். உஷா ஒரு சோஃபாவில். சிம்பு “வேர் இஸ் த பார்ட்டி” என்று பாடிக் கொண்டே உள்ளே நுழைகிறார்.

உஷா: நம்ம ஊட்டிலதாண்டா பார்ட்டி! உனக்காக எவ்ளோ நேரமா காத்திருக்கிறது? உங்க அப்பா என்ன தூங்கவும் வுடமாட்டேன்றார்.
சிம்பு: மம்மி, ஐ அம் எ யூத்! நைட் பர்ட்! பார்ட்டிம்மா!
டிஆர்: இங்கேயும் பார்ட்டிதாண்டா! நம்ம கட்சி ஆலோசனைக் கூட்டம். நீ வேர் இஸ் த பார்ட்டின்னு அலையறே. உங்க பாட்டி இருந்தா இப்போ உன்னை பாத்து பாத்து, உனக்காக்க காத்து காத்து..
சிம்பு: டாடி! மூடுங்க உங்க வாய் அண்ட்…
உஷா: ஓடி வந்து சிம்புவின் வாயை பொத்துகிறார். கஷ்டப்பட்டு உஷாவின் கையை எடுத்துவிட்டு. உளறல்னு சொல்ல வந்தேம்மா! நீங்க நினைக்கற மாதிரி டயலாக் எல்லாம் படத்தில்தான் வைப்பேன். அப்போதான் யூத் வருவாங்க.
டிஆர்: வாடா என் மச்சி வெங்காய பஜ்ஜி என்னாச்சு கட்சி, எதிர்க்கறவனை குதறிடுவேன் கட்சி!
சிம்பு: ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ஓ கடிச்சு குதறிடுவேன் அப்படின்றீங்களா? வர வர உங்க தமிழ் எனக்கே புரிய மாட்டேங்குது. சரி மற்ற கட்சி நிர்வாகிகள் எல்லாம் எங்க?
உஷா: உன் தம்பி தங்கச்சி எப்பவோ எஸ் ஆயிட்டாங்க. நான்தான் மாட்டிக்கிட்டேன்.
சிம்பு: ஆமா, கட்சி ஆலோசனை கூட்டமா இல்லை ராத்திரி குடும்பத்தில எல்லாரும் உட்காந்து சாப்பிடுறமான்னு தெரியல. இதுக்கு ஒரு கட்சி வேற!
டிஆர்: கலைஞர்தான் எனக்கு ரோல் மாடல். அவருக்கும் குடும்பம்தான் கட்சி. எனக்கும் அப்படித்தான்.
உஷா: சரி விஷயத்துக்கு வருவோம்டா. எனக்கு தூக்கமா வருது, இவரு புடிச்சு வச்சிக்கிட்டு உட மாட்டேன்றார்.
சிம்பு: என்னா ஆலோசனை? தேர்தல்ல நிக்கக் கூடாது. சம்பாதிக்கற பணத்த எல்லாம் இப்படி உட முடியாது.
டிஆர்: நானே உடையார். என்கிட்டயே உட முடியாதுன்னு பேசறியா! தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி, ஊட்டி வளர்த்த ஓரன்பு தங்கச்சி
சிம்பு: டாடி! நான் புள்ள! ரைமிங்க்க்காக புள்ளைய தங்கச்சின்னு மாத்தறீங்களே!
உஷா: கொட்டாவி விடுகிறார்.
டிஆர்: சரி யூத்துக்காக அம்மாடி ஆத்தாடி பாட்டை ரீமிக்ஸ் பண்ணி அம்மாடி ஆத்தாடி ஓட்டை எனக்கு தரயாடின்னு மாத்தி பாடினால் ஜிங்குச்சான் ஜினுக்குச்சான் 234 தொகுதியும் நமக்குத்தான்.
உஷா: ஏங்க இப்படி குழப்பறீங்க! இப்ப நடக்குறது டெல்லி தேர்தல். அங்க 40 தொகுதிதான்.
சிம்பு: பாரு இவருக்கு தேர்தல் பத்தி ஒன்னும் தெரியாமலே கட்சியாம், ஆலோசனையாம்.
டிஆர்: இருந்தாலும் நம்ம கவுரவத்தை காப்பாத்திக்கணும் இல்லே!
சிம்பு: இந்த தேர்தலை புறக்கனிக்கிறோம்னு ஒரு அறிக்கை விடுங்க! கத முடிஞ்சுது.
டிஆர்: ஆ! அதுவும் நல்ல யோசனைதான். இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் விட வேண்டும், வென்றவர்கள் மேல் பன்னீர் இல்லை அப்படின்னு ஒரு அறிக்கை விட்டுடறேன்.
உஷா இதுதான் சாக்கு என்று குட் நைட் என்று கத்திவிட்டு ஓடி விடுகிறார். சிம்பு வேர் இஸ் த பார்ட்டி என்று திரும்ப வெளியே போய்விடுகிறார். டிஆர் தனியே உட்கார்ந்து அறிக்கை எழுத ஆரம்பிக்கிறார்.

முன் வந்த பதிவுகள்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3 – சரத்குமார்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்

sarath_radhika

சரத் குமார் அறையில் அங்கும் இங்குமாக உலாத்திக் கொண்டிருக்கிறார். ராதிகா உள்ளே நுழைகிறார்.
சரத்: என்ன இவ்வளவு லேட்டு? நம்ம நிர்வாகிகள் எல்லாம் இங்கே காத்துக்கிட்டுருக்காங்க இல்ல?
ராதிகா: அங்கும் இங்கும் திரும்பி பார்க்கிறார்.
சரத்: அட என்னத்தான் அம்மணி சொல்றேன். நம்மள நாமே பெருமையா பேசினாத்தான் இந்த ஊர் சனம், பதினெட்டு பட்டி எல்லாம் பெருமையா பேசும்.
ராதிகா: ஆமா இந்த பதினெட்டு பட்டின்னு சொல்லி சொல்லியே தலையில மண்ண வாரி போட்டுக்கிட்டீங்க. பேசாம கலைஞரோடவே இருந்திருந்தா என்னிக்காவது ஒரு நாள் மந்திரி பதவி கிடைச்சிருக்கும். எம்.பி. சீட்டாவது வாங்கி இருக்கலாம். அட இருந்திருந்து ஒரு படம் எடுத்தீங்களே, 1977-ன்னு, அதையாவது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அளிக்கும்னு அவருக்கு வித்துப் போட்டிருக்கலாம். இப்ப பாருங்க கட்சியில் பதினெட்டு பேர் கூட இல்ல.
சரத்: அது என்ன நீ அப்படி சொல்லிப்போட்டே தாயி! திருமங்கலம எலெக்ஷன்ல நமக்கு எவ்வளவு ஓட்டு கிடைச்சது பாத்தில்ல?
ராதிகா: உங்க படம் பேரு 1977. 1977 ஓட்டு கூட கிடைக்கலே. கட்சி செலவு, தண்டமா படம் எடுக்க செலவு. பணம் போய்க்கிட்டே இருக்கு.
சரத்: சரி விடு அம்மணி! படத்தை கூடத்தான் 1977 பேர் கூட பாக்கலே. அதையெல்லாம் நான் சொல்லிட்டு திரியறனாக்கும்! இப்போ ஆக வேண்டியதை பாப்போம் புள்ள! நாம இந்த பிஜெபியோட கூட்டு சேந்தா என்ன?
ராதிகா: நான் சோத்தோட கூட கூட்டு சேக்கறதில்ல. எப்பவும் பொரியல்தான்.
சரத்: அட விளையாடாத புள்ளே! நாம, இந்த பிஜேபி, கார்த்திக் எல்லாம் ஒண்ணா சேந்தா தெற்கே ஒண்ணு ரெண்டு எம்.பி. சீட் கிடைக்காதா?
ராதிகா: தெற்கே, வடக்கே எல்லாம் கிடைக்கும். நமக்கு கிடைக்குமா? அதான் கேள்வி.
சரத்: அட என்னா புள்ள! அபசகுனம் மாதிரி பேசறே!
ராதிகா: த பாருங்க, நாம கலைஞரோட சேர்றதுதான் நல்லது. குறைஞ்ச பட்சம் உங்க 1977 படத்தை சன் டிவிலே போடுவாங்க.
சரத்: அட நீ வேற புள்ள! கலைஞர் நமக்கு இதயத்தில்தான் இடம் கொடுப்பாரு.
ராதிகா: யோவ்! அதுக்குத்தான்யா அங்கே சேரலாம்னு சொல்றேன். பணமாவது மிச்சமாகும்!

முன் வந்த பதிவுகள்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்

rmv1

2009 தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்

ஆர்எம்வி தன் அறையில் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு எதையோ மும்முரமாக தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆர்எம்வி: (தனக்கு தானே) இந்த வீட்ல எதுவும் வச்சது வச்ச இடத்தில இருக்காது. எல்லாத்தையும் கலைச்சு போட்ருவாங்க. ஆச்சி! ஆச்சி!

அவரது மனைவி சலித்துக் கொண்டே வருகிறார்.
மனைவி: நல்ல அளகான வள்ளியம்மைன்ற பேரை விட்டுட்டு ஆட்சி என் கையில சொல்லிக்கறத்துகாகவே என்னை ஆச்சி ஆச்சின்னு கூப்பிடுறாஹ.

மனைவி: என்னங்க?
ஆர்எம்வி: இங்க வச்சிருந்த பேப்பர் எல்லாம் எங்க போட்டே?
மனைவி: என்னா பேப்பர்?
ஆர்எம்வி: அதன் 1998-இலிருந்து நியூஸ்பேப்பர் எல்லாம் இங்க அடுக்கி வச்சிருந்தனே?
மனைவி: அட என்னாங்க? பத்து வருஷம் பழைய பேப்பரை தேடிக்கிட்டு? தூசி பறக்குதுன்னு அதையெல்லாம் தூக்கி எடைக்கு போட்டுட்டேன்.
ஆர்எம்வி: அடிப்பாவி! காரியத்தை கெடுத்திட்டியே! இப்ப என்ன செய்யறது?
மனைவி: இப்போ என்னா ஆயிடுச்சு? என்னவோ உங்க அம்மா எனக்கு கொடுத்த நகையெல்லாம் தூக்கி போட்டுட்ட மாதிரி பேசரீயளே! அதுவும் உங்க அம்மா எனக்கு நகை கிகை கொடுத்துற கிடுத்துறப் போறாங்க! உங்களைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டேன்?
ஆர்எம்வி: சரி சரி ஆரம்பிக்காத! எல்லா பேப்பரையும் போட்டுட்டியா? 2006-ஆம் வருஷ பேப்பர் கூட?
மனைவி: அட இது என்னடா வம்பா போச்சு? அதை வச்சு என்ன பண்ணப் போறீங்க?
ஆர்எம்வி: அது இல்ல, கலைஞர் வழக்கம் போல இதயத்தில மட்டும்தான் இடம் கொடுக்கப் போறாரு. மீண்டும் இதயத்தில் மட்டுமே இடம் என்பது ஏமாற்றமே, அடுத்த முறையாவது சீட் கொடுங்கள் என்று பழைய எலெக்ஷன் சமயத்தில் விட்ட அதே அறிக்கையையே திருப்பி கொடுத்திடலாம்னு பாத்தேன். ஒவ்வொரு முறையும் புதுசு புதுசா எழுதி கொடுக்கறதுக்கு தனியா பணம் தரணுமில்லெ?
மனைவி: செட்டியாரு பணத்தில கெட்டிதான்.
ஆர்எம்வி: இல்லாமலா எம்ஜிஆர் கிட்ட இத்தன வருஷம் குப்பை கொட்டினேன்?
மனைவி: இதிலெல்லாம் சிக்கனம் பாக்காதீங்க. இதயத்தில் இடம் என்பதை மாற்றுவார் உதயம் அப்படின்னு ஏதாவது புதுசா எழுத சொல்லுங்க. அப்பத்தான் ஸ்டாலின் பிள்ள உதயநிதி தி.மு.க. தலைவராகும்போதாவது உங்களுக்கு சீட் கொடுப்பாங்க!

முன் வந்த பதிவுகள்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்

actor_karthik 2009 தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று நடிகர் கார்த்திக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்:

கார்த்திக் ஆளுயரக் கண்ணாடியை பார்த்து பேசிக் கொள்கிறார்.

கார்த்திக்: என்னப்பா, எல்லாரும்ம்ம்…. வந்தாச்சா!
கண்ணாடி கார்த்திக்: ஆமா, அத்தனை பேரும் வந்துட்டோமில்ல!
கார்த்திக்: இப்போ பார்லிமென்ட் தேர்தல் வருது. கலைஞரு ஒரு பக்கம் நிக்குறாரு, அம்மா ஒரு பக்கம். நம்ம எந்த பக்கம்னு பாக்கணும்.
க.கா: ஆமா, நாமதான் பாக்கணும். நாமளும் பாக்கலேன்னா யாரு பாப்பாங்க?
கார்த்திக்: நாம முக்குலத்தோர். நமக்கு சரனாலயம்னு ஒரு அமைப்பு வேறு இருக்கு. இப்ப ஃபார்வர்ட் ப்ளாக் தலைவர் வேற ஆகி இருக்கோம்.
க.கா: தலைவா, உன்னை ஃபார்வர்ட் ப்ளாக்லேந்து தூக்கி ரொம்ப நாளாச்சு!
கார்த்திக்: தூக்கிட்டாங்களா? சொல்லவே இல்ல? சரி அதை விடு. கலைஞர், காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. எல்லாரும் ஒரு அணியிலே இருக்காங்க.
க.கா: வாயை திறந்து உடனே மூடிக் கொள்கிறார். அவர் மனதுக்குள் எண்ணம் ஓடுகிறது – கட்சியிலேர்ந்து தூக்கிட்டாங்கன்னே தெரியலே, இவர் கிட்ட போய் ம.தி.மு.க. அம்மா பக்கம் போய்ட்டாங்க, பா.ம.க. போறாங்கன்னு என்னிக்கு புரிய வச்சு என்னிக்கு இந்த கூட்டம் முடியறது? கண்டுக்காம விட்ருவோம்.
கார்த்திக்: நமக்கு அம்மாதான் வசதி. அவங்களுக்குத்தான் தேவர் ஆதரவும் அதிகம். அப்புறம் கலைஞர் இதயத்தில மட்டும்தான் இடம் கொடுப்பார்.
க.கா: அம்மாவுக்கு நாம வசதிப்படணுமே?
கார்த்திக்: இந்த நடராஜனைப் பிடிச்சு அவர் மூலமா அவங்ககிட்ட மூணு சீட் கேப்போம். அவங்க ரெண்டு தந்தா கூட போதும். அதிலே ஒன்னுலே நான் ஜெயிச்சு எம்.பி. ஆயிடறேன். அப்புறம் அடுத்த அஞ்சு வருஷத்துக்கு – 2009 வரைக்கும் – நான்தான் இளைஞர் நலத்துறை அமைச்சர்!
க.கா: கார்த்திக் இப்போதுதான் 2004 தேர்தலுக்கு திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்து மயக்கம்!

அந்நாட்களில் (ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது) நண்பர்கள் விவாதங்கள் (விவாதனை என்று தமிழில் ஒரு வார்த்தை உண்டா? – ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரியவில்லையென்றால் உடனே ஆன்லைன் டிக்‌ஷ்னரியை ரெஃபெர் செய்துக்கொள்கிறேன். தமிழில் எப்படி சரி பார்ப்பது என்று தெரியவில்லை) சாண்டில்யனே சிறந்த சரித்திர நாவலாசிரியர் என்றும் பிற ஆசிரியர்களெல்லாம் அவருக்கு பிறகுத்தான் என்றும் அமையும். எம்ஜியார், சிவாஜி போல் இதிலும் ஒரு போட்டி உண்டு.  (அட்லீஸ்ட் எங்கள் வட்டத்திலாவது இருந்தது).  அந்தப் போட்டிக்கு காரணம் கோவி. மணிசேகரன் என்ற நாவலாசிரியர். அன்று எனக்கு சாண்டில்யன் எழுத்துக்கள் புரியாத்தாலோ என்ன்வோ நான் கோவி. மணிசேகரனனை ஆதரிக்கும் கட்சியிலிருப்பேன்.  :-) வாக்கு வாதங்கள் மிகவும் கிண்டலாகவும், காட்டமாக இருக்கும்.  அதை நினத்துப் பார்த்தால் அந்த காலங்கள் திரும்ப வராதா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.

இப்பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. எவரும் கோவி. மணிசேகரனை பற்றி பேசுவது போல் தெரியவில்லை. உண்மையில் எங்கள் வட்டத்தை தவிர அவர் அவ்வளவு பாப்புலர் இல்லையா? இல்லை தமிழ் இலக்கிய உலகம் அவரை புறக்கணித்து விட்டதா? அல்லது மறந்துவிட்டதா? இல்லை அவரை பற்றி பேசுவது என் கண்ணில் படவில்லையா?

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers