சமீபத்தில் டாப்டென் என்ற பதிவில் சில சிபாரிசுகளை பார்த்தேன். அவர்கள் குமுதத்தில் வந்த சிலவற்றை மீள்பதிவு செய்திருக்கிறார்கள். அவை பற்றிய கமெண்ட்கள் இங்கே.
சிறந்த பத்து தமிழ் நாவல்கள் – சா. கந்தசாமி
சா. கந்தசாமியின் சாயாவனம் என் சிறு வயதில் அம்மா, அப்பா, நான் எல்லாரும் பல முறை விரும்பி படித்த புத்தகம். என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம் அதுதான் என்று நினைக்கிறேன். மாற்றம் என்றால் என்ன என்பதை மிகவும் ஆக சுட்டி இருப்பார்.
1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவல் என்பதால் இது பலரால் சிபார்சு செய்யப்படுகிறது. என் கருத்தில் இது படிக்கப்பட வேண்டியது இல்லை. போரடிக்கும்.
2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம் க.நா.சு. படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் குறிப்பிட்ட நாவல். இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம் ஜெயமோகன் சொன்ன நாவல். இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா கிருத்திகா சமீபத்தில் மறைந்துவிட்டாராம். இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன் அசோகமித்திரன் மிக subtleஆன ஆசிரியர். இந்த புத்தகம் எனக்கு too subtle. அவரது தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள் போன்ற புத்தகங்களை சிபாரிசு செய்கிறேன்.
6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் படித்ததில்லை.
7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை.
8. அவன் ஆனது – சா. கந்தசாமி படித்ததில்லை.
9. வானம் வசப்படும் – பிரபஞ்சன் படிக்கலாம், ஆனால் எனக்கு இந்த புத்தகம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை.
10. ரப்பர் – ஜெயமோகன் ஜெயமோகனின் சுமாரான நாவல். அவரது முதல் நாவலும் கூட. அவரது potential நன்றாக தெரியும், ஆனால் அவர் எழுத்தாளராக இன்னும் பல படிகள் ஏற வேண்டி இருப்பதும் தெரியும். இதை விட பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் போன்ற புத்தகங்களை நான் சிபாரிசு செய்கிறேன்.
கந்தவர்னை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படித்ததில்லை. அவரது சிபாரிசுகள்.
1. மோகமுள் – தி. ஜானகிராமன் மிக அருமையான புத்தகம். அந்த கால கும்பகோணத்தின் தூசியை இதன் பக்கங்களில் சுவாசிக்கலாம்.
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் ஒரே ஒரு நீல. பத்மநாபன் நாவல்தான் என் நினைவில் இருக்கிறது. எனக்கு இங்கே கொஞ்சம் குழப்பம். இதை படித்திருக்கிறேனா என்று நினைவில்லை.
3. சாயாவனம் – சா. கந்தசாமி முன்பே சொன்ன மாதிரி, என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம்.
4. மலரும் சருகும் – டி. செல்வராஜ் படித்ததில்லை.
5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் மிக அருமையான புத்தகம். ராஜநாராயணனின் பல புத்தகங்கள் அருமையானவை.
6. கடல்புரத்தில் – வண்ணநிலவன் படிக்கலாம், ஆனால் எல்லாரையும் போல் நான் இந்த புத்தகத்தை சிலாகித்து சொல்ல மாட்டேன்.
7. கீரல்கள் – ஐசக் அருமைராஜன் கேள்விப்பட்டதே இல்லை.
8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன் நல்ல புத்தகம்.
9. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம் என் பதிவு இங்கே.
10. கோவேறுக் கழுதைகள் – இமையம் படித்ததில்லை.
சி. மோகன் சிபாரிசுகள் – எனக்கு இவர் யாரென்று தெரியாது. படித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.
1. இடைவெளி – எஸ். சம்பத் படித்ததில்லை.
2. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். ஆரம்பம் மிக நன்றாக இருந்தது. புத்தகம் பிடிக்கும் என்று தோன்றியது. ஆனால் மேலே தொடர முடியாமல் ஒரு சோம்பேறித்தனம்.
3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் அபாரமான புத்தகம். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம்.
4. நினைவுப் பாதை – நகுலன் படித்ததில்லை.
5. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன் ஒரு ரவுடி மிக லாஜிகலாக சிந்தித்து தன் வைப்பாட்டிக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்கிறான். ஜி. நாகராஜன் இன்னும் தமிழ் உலகை ஷாக் செய்யக் கூடியவர்.
6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி அற்புதமான புஸ்தகம்.
7. மோகமுள் – தி. ஜானகிராமன் முன்பு சொன்ன மாதிரி அருமை.
8. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை
9. தண்ணீர் – அசோகமித்திரன் இந்த முறை அவரது எழுத்து எனக்கு புரிந்துவிட்டது – என்று நினைக்கிறேன். ஜமுனா, அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, தண்ணீர் பஞ்சம் எல்லாம் நன்றாக வந்திருக்கும்.
10. சாயாவனம் – சா. கந்தசாமி முன்பே சொன்ன மாதிரி இலக்கியத் தரம் வாய்ந்த புஸ்தகம்.
பெப்ரவரி 19, 2009 at 5:21 பிற்பகல்
சுட்டிக்கு நன்றி!
அ) வாசவேஸ்வரம் – கிருத்திகா : காலச்சுவடு க்ளாசிக் வரிசையில் வந்திருக்கிறது. அவசியம் படிங்க!
ஆ) 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன் – உங்க கருத்தோடு 101% ஒத்துப் போகிறேன். அவரின் மற்ற நாவல்கள் அளவு இது கவரவில்லை. ஹைதரபாதியாக இல்லாதது ஒரு காரணமோ?
இ) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் : படம் மட்டுமே பார்த்திருக்கிறேன். படிப்பேன்னு தோணல
ஈ) புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் – கரெக்ட். இங்கும் அதே நிலை.
உ) ஆனால், நான் உங்களை மாதிரி விஷ்ணுப்ரம் முடித்தது இல்லிஅ. 75 பக்கத்தோடு முற்றுப்புள்ளி இட்டாச்சு (விஷ்ணுபுரத்திற்கு)
ஊ) ஈரம் கசிந்த நிலம் – ரவீந்திரன்: வாசித்தது உண்டா?
எ) தமிழின் முக்கியமான புனைவுகள்: ராஜமார்த்தாண்டன் சேர்க்கப்பட்டது.
இன்னும் ஒண்ணு பாக்கி. நாளை வரும்.
ஜூன் 30, 2011 at 10:59 மு.பகல்
Where I can get Putham veedu ?
I know that ஹெப்சியா ஜேசுதாஸன் doesn’t have a copy.
ஜூலை 11, 2011 at 12:29 பிற்பகல்
தாங்கள் குறிப்பிட்டுள்ள நாகம்மாள் நாவல் எங்கள் பதிப்பகம் சார்பில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. (கௌதம் பதிப்பகம், எண் 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை-50. பேசி: 9688829900, 9894762888) கோ.சந்திரசேகரன்