பெப்ரவரி 2009
மாதாந்திர தொகுப்பு
பெப்ரவரி 25, 2009
Posted by Bags under
MathippeedukaL,
Reading,
Tamil Nadu Politics | குறிச்சொற்கள்:
Arnold Schwaznegger,
Chennai,
Communist party,
Congress,
Jayalalitha,
Jeeva,
Kaalachchuvadu pathippagam,
Kalaignar karunanidhi,
Karunanidhi,
MGR,
Nar bahadur bhandari,
Sikkim,
Vajpayee |
1 Comment

ஜீவா - சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி எத்தனையோ புத்தகங்கள் எழுதியிருக்கும் பொழுது தோழர் ஜீவானந்தத்தை பற்றி எழுதிய “நினைவோடை” புத்தகத்தை இங்கே குறிப்பிட்டிருக்கிறானே என நீங்கள் சிந்திக்கலாம். இவன் என்ன கம்யூனிஸ்ட்டா எனறு கூட நினைக்கலாம். அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த புத்தகம் தான் நான் ஆர்.வி.யிடமிருந்து தள்ளிக் கொண்டு வந்தவற்றிலேயே சிறிய புத்தகம். 78 பக்கங்கள். இரண்டு வாரம் ஒன்றும் அதிகம் படிக்க முடியாத அளவிற்கு வேலை. இந்த வார இறுதியில் எதாவது ஒரு புத்தகத்தை முடித்த கணக்காக இருக்கட்டுமே என்று இந்த புத்தகத்தை கையிலெடுத்தேன். ஒரு புதிய எழுத்தாளர் (எனக்கு) அறிமுகம் ஆன கணக்காகவும் இருக்கும். முழு மூச்சாக இதில் படிப்பதற்கு த்ரில் ஒன்றும் இல்லை. சிறிது சிறிதாக படித்து முடித்துவிட்டேன்.
ஜீவாவின் ஆளுமையை பற்றி தெரிந்து கொண்டேன். அவரை பற்றி எனக்கு தெரியாது. சரித்திரத்தில் அவருடைய முக்கியத்துவம் என்ன என்றும் தெரியாது. ஆனால் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது. மேலும் நான் படித்த சுந்தர ராமசாமியின் (அவர் எழுதியது அல்ல, நேர்காணல் போன்ற ஒரு ஸ்டைலில் அவர் கூறியது) முதல் புத்தகம் என்பதால் அவரைப் பற்றியும் ஒரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.
சுந்தர ராமசாமி, ஜீவாவிடமிருந்து கற்று கொண்டதை நான் சுந்தர ராமசாமியிடம் கற்று கொண்டேன். பல நல்ல விஷயங்கள் கூறியிருக்கிறார். ஒன்று இது: ஜீவாவும், சுந்தர ராமசாமியும் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு ட்ரெயினில் போய்க்கொண்டிருந்த பொழுது சில வயதான விவசாயிகள் எதிர் வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் நமக்கு பேச என்ன இருக்கப்போகிறது என்று அலட்சியம் ஏற்படும் நமக்கு. சுந்தர ராமசாமிக்கும் கிட்டத்தட்ட அப்படிதான் தோன்றியதாம். ஆனால் ஜீவா பாமரனிடம்கூட தெரிந்துகொள்வதற்கு ஏதாவது ஒன்று இருக்கும் என்னும் மனப்போக்கு கொண்டவர். அதனால் அவர்களிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். ஒரு விவசாயி கூறியதன் சுருக்கம் இது: நாம் ரயிலின் இரண்டு பக்கங்களிலும் வெற்று நிலத்தைப் பார்க்கிறோம். சென்னை வரை இது போல் தானிருக்கிறது. இதில் நிலங்களை தரிசாக போட்டிருக்காமல் ஏதாவது பயிர் செய்யலாம். ஏதாவது ஒரு பயிர் இங்கே நிச்சயமாக வளரும். தரிசு நிலம் என்று ஒன்றுமே கிடையாது. அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மரத்தை (தண்ணீர் தேவைப்படாத – அப்படியும் மரங்கள் இருப்பதாக கூறுகிறார்) வளர்த்தால் ஏழைகளுக்கு இலவசமாகவே எரிபொருள்(விறகு) கொடுக்கமுடியும்.
ஜீவாவும், சுந்தர ராமசாமியும் பிரமித்துப் போய்விட்டார்களாம். பாமரரிடமும் கற்றுகொள்ள வேண்டும் என்று ஜீவா நினைத்தது சரிதானே? இதன் நுணுக்கத்தை அறிந்து கொண்டு, அதன் படி நடந்தால் நமக்கு நம் ஆளுமையை செம்மைபடுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
ஒரு தலைவராக இருப்பதனால் எந்தத் தவறும் செய்யக்கூடாது என்று நாம் எதிர்பார்ப்பது அறியாமை. தலைவரும் ஒரு மனிதர் தானே. தலைவர்கள் எந்தத் தவற்றை செய்யக்கூடாது என்பதில் வேண்டுமானால் மக்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம். ஜீவா விஷயத்தில் தவறுகளை பார்த்த சுந்தர ராமசாமி இதைத் தான் வலியுறுத்துகிறார். அது போலவே கட்சி என்றால் தவறுகள், கொள்கை காம்பிரமைஸ் இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமான கருத்து அல்ல என்றும் கருதுகிறார்.
நான் பல வருடங்களுக்கு முன்னர் நர் பகதூர் பண்டாரி என்ற முதலமைச்சரின் போக்கு பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். (சிக்கிமின் முன்னாள் முதலமைச்சர்). மக்களுக்கு அவருடைய போக்கு (நிறைய பெண்கள் தொடர்பு) தெரிந்தும் அவர் ஒரு தேர்தலில் எல்லா தொகுதிகளையும் (குறிப்பாக பெண்கள் ஒட்டுகளை) கைப்பற்றினார். இதிலிருந்து தெரிவதென்ன என்றால் எவரும் அவருடையா சொந்த நடத்தை பற்றி கவலையுறவில்லை. ஆனால் இன்று அவர் இன்னொறு வழக்கில் கைதாகி (4 லட்ச ரூபாய் கையூட்டு வாங்கியதற்க்காக) சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். பொது வாழ்க்கையில் ஈடுபடும் தலைவர்கள் பல தவறுகள் செய்யக்கூடும். நாம் எதைப் பற்றி கவலைப்பட வேண்டுமோ அதைப் பற்றி மட்டுமே கவலை பட வேண்டும். இதைவிட்டு விட்டு எதிர் கட்சிகளும், போட்டிக்கட்சிகளும் குழப்புவதற்கு செவிசாய்க்காமல், பகுத்தறிவு என்பதை சிறிதாவது உபயோகப்படுத்தி முடிவெடுக்கவேண்டும். அதில்லாமல் எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் கனக்ஷன் இருக்கிறதாமே, அதனால் கருணாநிதிக்கு ஓட்டு போடலாம், வாஜ்பாயி மது அருந்துவாராமே அதனால் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவோம் என்ற கும்பல் தான் அதிகமாக இருக்கிறது. இது நம் நாட்டில் மட்டுமில்லை. அர்னால்ட் ஷ்வாஸ்னெக்கர் ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ என்ற ஒரே காரணத்தினால் (எந்த முன் அனுபவமுமின்றி) மட்டுமே அவர் குடியரசு கட்சியின் சார்பாக, ஜனநாயக கட்சியின் கோட்டையான் கலிபோர்னியா மாகானத்தின் ஆளுனராக இருக்கிறார்.
சுந்தர ராமசாமி மேலும் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்களின் குறுகிய கண்ணோட்டங்களை பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த மாதிரி புத்தகங்கள் அதிகம் நான் படித்ததில்லை. குறிப்பிட்ட வாசக வட்டத்தை அடைவதற்காக ”காலச்சுவடு பதிப்பகம்” வெளியிட்டிருக்கிறார்கள்.
பெப்ரவரி 22, 2009
Posted by RV under
Reading | குறிச்சொற்கள்:
Amma vandhal,
Ettu thikkum madha yanai,
Ezham ulagam,
Imayam,
Irawati karve,
J.j. sila kurippukal,
Jeyakanthan,
Jeyamohan,
Ka.na. subramanyam,
Kadu,
Karamundar veedu,
Koveru kazhuthaikal,
Kuzhanthaikal aankal penkal,
M.t. vasudevan nair,
Mogha mul,
Nanjil nadan,
Neela. padmanabhan,
Oru manidhan oru veedu oru ulagam,
Oru puliya maratthin kathai,
Pa. singaram,
Pin thodarum nizhalin kural,
Poytthevu,
Prabanjan,
Puyalile oru thoni,
Raja marthandan,
Randamoozham,
S. ramakrishnan,
Sennel,
So. dharman,
Solai sundarap perumal,
Sundara ramasami,
Thalaimuraikal,
Thanjai prakash,
Thi. janakiraman,
Thoorai,
Upa pandavam,
Vanam vasappadum,
Venkat saminathan,
Vishnupuram,
Yugantar |
Leave a Comment
டாப்டென் பதிவில் மேலும் சில புத்தக சிபாரிசுகள். நன்றி குமுதம், டாப்டென், பாஸ்டன் பாலா
முந்தைய சிபாரிசுகள் இங்கே மற்றும் இங்கே.
தலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன் முக்கியமான இலக்கிய விமர்சகர் என்று சொல்கிறார்கள். நான் அவரது இலக்கிய விமர்சனங்களை படித்ததில்லை. இப்போது திண்ணை தளத்தில் தன் வாழ்க்கை நினைவுகளை சுவாரசியமாக எழுதி வருகிறார்.
1. மோகமுள் – தி. ஜானகிராமன் கந்தர்வன், சி. மோகன் ஆகியோரும் சிபாரிசு செய்த புத்தகம். கும்பகோணத்து தெருக்களின் தூசி புத்தகத்தின் பக்கங்களில் இருக்கிறது.
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் கந்தர்வன் சிபாரிசு செய்த நாவல். எனக்கு இதை படித்திருக்கிறேனா என்று கொஞ்சம் குழப்பம்.
3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி சி. மோகன் சிபாரிசு செய்திருக்கிறார். அருமையான புத்தகம். என்னுடைய காப்பியை பக்ஸ் தூக்கிக்கொண்டு போயிருக்கிறான். நீங்கள் சிலிகான் வாலியில் வசிப்பவராயிருந்தால், இரவல் வாங்கிக் கொள்ளலாம். ராஜ மார்த்தாண்டனும் சிபாரிசு செய்கிறார்.
4. கோவேறு கழுதைகள் – இமையம் கந்தர்வன் சிபாரிசு செய்தது. படித்ததில்லை.
5. வானம் வசப்படும் – பிரபஞ்சன் சா. கந்தசாமி சிபாரிசு செய்தது. படிக்கலாம். ஆனால் சூப்பர் டூப்பர் நாவல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.
6. தூர்வை – சோ. தர்மன் படித்ததில்லை.
7. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் படித்ததில்லை
8. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ் படித்ததில்லை
9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்; அற்புதமான நாவல். சி. மோகனும் சிபாரிசு செய்கிறார். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம். சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம். ராஜ மார்த்தாண்டனும் சிபாரிசு செய்கிறார்.
10. செந்நெல் – சோலை சுந்தரபெருமாள் முக்கியமான புஸ்தகம். நல்ல நாவல் என்று சொல்ல மாட்டேன். கீழ் வெண்மணி பற்றி எழுதப்பட்ட docu-fiction. படிக்கும்போது இப்படித்தான் நடந்திருக்கு என்று நமக்கு தோன்றும். இந்திரா பார்த்தசாரதியும் கீழ் வெண்மணி பற்றி குருதிப் புனல் என்ற நாவலை எழுதி இருக்கிறார். ஆனால் அந்த நாவலில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். இதிலோ அந்த ஊரிலேயே வாழ்ந்த ஒருவர் கதையை சொல்வது போல தோன்றும். சான் ஹோசே நூலகத்தில் கிடைக்கும்.
தமிழின் முக்கியமான புனைவுகள்: பட்டியல்: ராஜமார்த்தாண்டன்
ராஜ மார்த்தாண்டனும் முக்கியமான இலக்கிய விமர்சகர் போலிருக்கிறது. நான் எதையும் படித்ததில்லை.
1. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம் அருமை. என் பதிவு இங்கே. கந்தர்வனும் சிபாரிசு செய்கிறார். சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.
2. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி அருமை. சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.
3. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் அருமை. வேதம் படிக்கும், ஒரு விதவையுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று குழம்பும் மகன், அவனது சோரம் போகும் அம்மா ஆகிய இரு பாத்திரங்களை வைத்து விளையாடி இருக்கிறார்.
4. ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி அருமை. வெங்கட் சாமிநாதனும், சி. மோகனும் குறிப்பிடுகிறார்கள். பக்ஸ் கொடுத்த பிறகு சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.
5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி படித்ததில்லை.
6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் முடிக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். சி. மோகனும் சிபாரிசு செய்கிறார்.
7. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் அருமையான புத்தகம். வெங்கட் சாமிநாதனும் குறிப்பிடுகிறார்.
8. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன் ஜெயமோகன் நாலைந்து அற்புதமான நாவல்களை எழுதி இருக்கிறார். என்னை மிகவும் கவர்ந்தது இதுதான் – விஷ்ணுபுரத்தை விட, ஏழாம் உலகத்தை விட, காடு நாவலை விட.
9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் சா.கந்தசாமியின் சிபாரிசும் கூட. படித்ததில்லை.
10. உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன் நல்ல புத்தகம். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு fascination உண்டு. மகாபாரதத்தை வைத்து எவ்வளவு மோசமாக எழுதினாலும் ரசிப்பேன் என்று நினைக்கிறேன். இது நன்றாகவே எழுதப்பட்டிருக்கும், சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மகாபாரதத்தை வைத்து இதை விட நல்ல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தர் என் லிஸ்டில் மிகவும் மேலே இருக்கும். பிரேம் பணிக்கர் இப்போது எம்.டி. வாசுதேவன் நாயரின் ரண்டாமூழம் என்ற நாவலை ஆங்கிலத்தில் online ஆக மொழி பெயர்த்துக் கொண்டு வருகிறார். அதுவும் இதை விட சிறந்த புத்தகம்.
பெப்ரவரி 21, 2009
சரோஜினி வரதப்பனுக்கு இந்த வருஷம் பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டது. அதை பற்றி எழுதிய பதிவில் இவரைப் பற்றி சரியாக தெரியவில்லை என்று சொல்லி இருந்தேன். இவரை பற்றி விகடனில் அந்தக் காலத்தில் வந்திருந்த கட்டுரை. ஒரே குறை, அதை படித்த பிறகும் அவர் என்ன சேவை செய்தார் என்று தெரியவில்லை. அவர் முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகள் என்று மட்டும் தெரிகிறது.
விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்.
விகடன் பொக்கிஷம்
”சமூக சேவையில்தான் எனக்குத் திருப்தி!”
சில பேர், அரும் பெரும் காரியங்களை அமைதியோடு செய்து முடித்து விட்டு, அடக்க ஒடுக்கமாக இருந்து விடுவார்கள். சிலரோ சாதாரணமான காரியங்களைக்க ூட ‘ஹா, ஹூ’ என்று ஊரைக் கூட்டி, அமர்க்களப்படுத்திக் கொண்டுதான் செய்வார்கள்.
திருமதி சரோஜினி வரதப்பன் முதல் வகையைச் சேர்ந்தவர்.
”அரசியலில் தங்களுக்கு ஆர்வம் இல்லையா?” என்று கேட்டபோது, ”உண்டு. அதைக் காட்டிலும் சமூக சேவை செய்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன். இந்த ஆவலை எனக்குத் தூண்டிவிட்டவர் திருமதி அம்புஜம்மாள்தான்” என்கிறார் இவர்.
நேருஜி பிரதம மந்திரியான புதிதில் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்தார். அப்போது மாதர்கள் சங்கத்தின் சார்பில் அவருக்கு இந்தியில் ஒரு வரவேற்பு வாசித்து அளிக்கப் பட்டது. அந்த வரவேற்பை இந்தியில் எழுதியது, வாசித்தது இரண்டுமே சரோஜினி வரதப்பன்தான்.
மற்றொரு சமயம் இவர் டெல்லிக் ுப் போயிருந்தபோது, திருமதி அம்புஜம்மாள் இவரை நேருவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ”எனக்கு இவரைத் தெரியுமே!” என்றார் நேருஜி. ”இவர் அசெம்பிளி மெம்பராக வேண்டும் என்பது என் ஆசை” என்றார் அம்புஜம்மாள். நேருஜி உடனே சரோஜினி வரதப்பனைப் பார்த்து, ”தங்களுக்கு அந்த ஆசை இருக்கிறதா?” என்று கேட்டார்.
”இல்லை. எனக்கு இப்போது செய்து கொண்டிருக்கும் சமூக சேவையில்தான் திருப்தி” என்றார் இவர்.
சரோஜினி வரதப்பன் இப்போது வகித்து வரும் முக்கியப் பதவிகள்… சென்சார் போர்டு அங்கத்தினர், கௌரவ மாஜிஸ்டிரேட், மாதர் நல இலாகா சேர்மன்.
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் இவர், ”அந்தக் காலத்தில் பேட்டை முதலியார்கள் ரொம்ப வைதீகம். ‘பெண்களுக்கு அதிகப் படிப்பு எதற்கு?’ என்று கூறிவிட்டார்கள். ஆனாலும், நான் இந்தியில் விஷாரத் பாஸ் செய்திருக்கிறேன்” என்கிறார்.
சமீபத்தில் இந்திராகாந்தி சென்னை ராஜ்யத்தில் சுற்றுப்பயணம் செய்த போது, அவர் புரிந்த ஆங்கிலச் சொற்பொழிவுகளை தமிழில் மொழி பெயர்த்தவர் இவர்தான்.
மாதர் நல இலாகாவில் இவர் புரிந்துள்ள சாதனைகள் பல. சென்னை ராஜ்யத்திலுள்ள 373 பிளாக்குகளுக்கும் சுமார் 10,000 மாதர் நலச் சங்கங்களுக்கு மேல் தோன்றி இருக்கின்றன என்றால், அதற்கு இவருடைய ஆர்வமும் உழைப்புமே முக்கிய காரணம்.
”இந்தியாவில் முதன்முதலில் சென்னையில்தான் மாதர் நல இலாகா தொடங்கப்பட்டது. அதைப் பார்த்து இப்போது உத்தரப்பிரதேசத்திலும் ஆந்திராவிலும் ஆரம்பித்திருக்கிறார்கள்” என்கிறார் இவர்.
”எத்தனை முறை வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, ”முதல்முறை 1956ல் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.எல்.ஓ. மகாநாட்டுக்கு என் தந்தை (முதல்வர் பக்தவத்சலம்) போனபோது நானும் உடன் சென்றேன். லண்டன், பிரான்ஸ், ஸ்வீடன், வெஸ்ட் ஜெர் மனி, கெய்ரோ ஆகிய இடங்களைப் பார்த்துவிட்டு வந்தேன். அவற்றில் மேற்கு ஜெர்மனிதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த நாடு, யுத்தத்திற்குப் பின் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. அங்கே பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதில்லை. தேச முன்னேற்றத்தையே முக்கிய லட்சியமாகக் கொண்டு உழைத்து வருகிறார்கள்” என்றார். சமீபத்தில் அமெரிக்க நாட்டின் அழைப்பை ஏற்று, அங்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு வந்துள்ளார் இவர்.
”குபேர நாடாக விளங்கும் அமெரிக்காவிலும் போக்குவரத்து வசதியும், மின்சாரத் தொடர்பும் இல்லாத பிற்போக்குப் பகுதிகள் நிறைய இருக்கின்றன. அந்தப் பகுதிகளின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி ஜான்சன் அங்கே பணத்தைக் கொண்டு போய்க் கொட்டிக்கொண்டிருக்கிறார். அமெ ரிக்காவிலும் வயது வராத சிறுவர்கள் நிறையக் குற்றம் புரிகிறார்கள். வறுமையினால்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று கூறமுடியாது. தாயின் கவனிப்பு இல்லாததே காரணம். ஹாலிவுட்டில் விசேஷமாக எதுவுமில்லை. நம் கோடம்பாக்கத்தைப் போல்தான் இருக்கிறது.”
இவையெல்லாம் சரோஜினி வரதப்பன் தரும் தகவல்கள்.
கர்னாடக இசையில் இவருக்கு நல்ல தேர்ச்சி உண்டு. ஐந்நூறு கீர்த்தனைகளுக்கு மேல் பாடத் தெரிந்த இவருக்கு, பிடில் வாசிப்பிலும் நல்ல புலமை உண்டென்பது பலருக்குத் தெரியாத செய்தியாகும்.
பெப்ரவரி 18, 2009



”பாடி ஷாப்பிங்” என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா? (ஆட்டோ பாடி ஷாப்பிங் இல்லை. அது ஆக்ஸிடெண்ட் ஆன கார்களை பழுது பார்க்கும் இடம்.) நான் குறிப்பிடும் ”பாடி ஷாப்” பாடியை (உடல்களை) வைத்து வியாபாரம் பண்ணுவது. செத்து போனவர்களின் உடல்களை வைத்தும் வர்த்தகம் நடந்துக் கொண்டிருக்கிறது. உயிருடன் இருப்பவர்களை வைத்தும் வர்த்தகம் நடந்துக் கொண்டு தானிருக்கிறது. இரண்டாவது ரகம் பல விதங்களில் நடக்கிறது. இது போன்ற வியாபாரங்கள் சிகப்பு விளக்குப் பகுதிகளில் நடப்பது ஒரு எல்லை. வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி, ஏங்கி தவிக்கும் இளைஞர்களை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணி வியாபாரம் செய்வது இன்னொரு எல்லை. வீடியோ கடையில் இருக்கும் டிவிடி, கேஸட்டுகள் போல் வாடகைக்கு விடப்படும் இளைஞர்கள் அவதி சொல்லிமுடியாது. இது சிலருக்கு வாழ்க்கையில் ஒரு படிக்கல். அல்வா சாப்பிடுகிற மாதிரி. ஈஸியாக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவிடுவார்கள். மற்றவர்களுக்கு பாகற்காய் சாப்பிடுவது மாதிரி.
இவர்களுக்கே இந்த கதி என்றால் பிச்சைக்காரர்களுக்கு? அதுவும் சில அங்கங்கள் இல்லாதவர்களுக்கு? அவர்கள் எங்கே போகமுடியும்? இவர்களை வைத்து எப்படி பிஸினஸ் பண்ணுவது என்று பிஸினஸ் ஸ்கூல்களுக்கு இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் இதற்குள் Master of Business Administration in Mendicant Commerce என்று ஒரு ப்ரோக்ரம் வைத்திருப்பார்கள். (அந்த அளவிற்கு பிஸினஸ் ஸ்கூல் தாழ்ந்து விடவில்லை. இந்த “தொழிலில்” உள்ள லாபத்தை குறிப்பிடுவதற்காக அவ்வாறு மிகைப் படுத்தினேன்). பிச்சைக்காரர்களைப் பார்த்தால் அருவருப்படைந்து முகம் சுழிப்பதும், அவர்களை இரண்டாம் முறை பார்த்தால் வாந்தி வந்து விடும் எனறும் நினைக்கும் நம்மில் பலருக்கு அவர்கள் மேல் ஒரு கருணையையும், இரண்டாம் முறைப் பார்க்கத் தூண்டும் ஆர்வமும் ஏற்ப்படுத்துவது ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”. நான் படித்த ஜெயமோகனின் முதல் முழு நாவல். மனிதர் சரளமாக எழுதித்தள்ளி விட்டார். ஜீரணிப்பது அவரவிரின் மனநிலையைப் பொருத்தது.
ஏழாம் உலகம் பலருக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியது. இதற்குத் தயாராகாதவர்கள் இப்படியும் உலகத்தில் நடக்குமா? என்று ஆச்சரியப்படுவார்கள். உடனே பிச்சைக்காரர்கள் அமர்ந்திருக்கும் ஒரு திருவிழா கூட்டத்திற்கோ அல்லது கோவில் வாசலுக்கோ சென்று பிச்சைகாரகளைப் பார்த்துவிட்டு, அருகில் இன்னொருவர் இருக்கவேண்டுமே என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, பின்னர் சற்று மறைவாக நின்று ஒரு மூன்று மணி நேரம் காத்திருந்து அங்கே என்னவெல்லாம் நடக்கிறது, யார் யாரெல்லாம் வருகிறார்கள், வருபவர்கள் பிச்சைக்காரர்களை என்ன செய்கிறார்கள், பிச்சைப்பாத்திரத்தில் விழுந்தக் காசு எங்கெயெல்லாம் போகிறது என்று பார்க்கவேண்டும் எனறெல்லாம் ஆர்வம் எழும். நம் மணிபர்ஸில் அந்தக் காசும் இருக்குமோ என்று சற்றே அருவருப்புடன் நாணயங்களை பார்க்கத் தோன்றும்.
ஹீரோ வொர்ஷிப் பண்ணும் தமிழுலகத்திற்கு போத்திவேலு பண்டாரம் என்ற கதாபாத்திரத்தை தைரியமாக கொடுத்திருக்கிறார் ஜெயமோகன். வழக்கமாக வரும் ஹீரோக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சதையும், உணர்ச்சியும் உள்ள கதாபாத்திரம். ஒரு பக்கம் அருமையான எளிமையான குடும்பத்தலைவர், மறுபக்கம் பழனியில் செய்யும் தகாதவைகள், மற்றுமொரு பக்கத்தில் தனது உபதொழிலை நியாயப்படுத்தும் விதம் – நமக்கே இது ஒருவேலை ஒரு சேவைதானோ? என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. ஆனால் உடனே இதற்கு காரணமே இவர் தானே என்று சுதாரித்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கதையை அற்புதமாக பிண்ணியிருக்கிறார் ஜெயமோகன்.
ஒரு மகள் தன் தந்தையை வெறுக்க ஆரம்பித்துவிட்டால் எந்த அளவிற்கும் போகலாம் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையை பூசி மெழுகாமல், இரக்கமே இல்லாமல், அப்பட்டமாக போட்டு உடைத்துவிட்டார் ஜெயமோகன். வாசகர்களின் இரக்க உணர்ச்சிக்கு ஒரு பெரிய ஏமாற்றம். ஆனால் அது தான் உண்மை என்று தெளிவாக்கிவிட்டார்.
அப்பாவி மனைவி “நாம் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்” என்று சுயபட்சாதாபம் அடையும் பொழுது போ.வே.பண்டாரத்தின் குற்ற உணர்ச்சியை எப்படி வார்த்தைகளில்லாமலே ஜெயமோகனால் சொல்லமுடிந்தது? அசத்திவிட்டார்.
முத்தம்மைக்கு நிகழும் கொடுமையின் ஒரு சுற்றின் ஆரம்பத்தில் ஆரம்பித்தக் கதை அடுத்த சுற்றின் ஆரம்பத்திற்கு முன்னர் வந்து முடிவடைவது போல் அருமையான கதையமைப்பு. அங்கே ஜெயமோகனின் இன்ஜெனுய்ட்டி (ingenuity) தெரிகிறது.
வட்டார வழக்கை சரளமாக கையாண்டிருக்கிறார். அவருடைய வசிக்கும் பகுதி என்பதால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றாலும் கதாபாத்திரங்களுக்கு அவ்வழக்கு இயற்க்கையாக இருக்குமாறு அமைத்தது பாராட்டுக்குறியது. ஆனால் பழனியில் பிஸினஸ் பண்ணும் செட்டியார் எப்படி நாகர்கோவில் வட்டார வழக்கில் பேசுகிறார்? அங்கே உதைக்கிற மாதிரி தோன்றுகிறது. கொஞ்சம் தெளிவு படுத்தியிருக்கலாம். வட்டாரத்திற்கு அறிமுகமேயில்லாத வாசகர்கள் கொஞ்சம் திணறுவார்கள். (வட்டார வழக்கு டிக்ஷ்னரி கொடுத்தது மிகவும் உதவியாக இருக்குமென நினைக்கிறேன்). எனக்கு அறிமுகமான எழுத்தாளர்களில், மார்க் ட்வெயினின் ”The Adventures of Huckleberry Finn”னிற்கு (ஜிம்மும், ஹக்கும் பேசுவது) ஈடாக வட்டார வழக்கை கையாண்டிருப்பது ஜெயமோகன் தான். எனக்கு நாகர்கோவில் வழக்கு ஓரளவு பரிட்சயமே. அதனால் எளிதாக இருந்தது.
கதை எனக்கு தனிப்பட்ட வகையில் அவ்வளவு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. ஜெயமோகன் நல்ல நகைச்சுவையாக எழுதுகிறார். பொதுவாகவே நகைச்சுவை எனக்கு பிடித்தமான் ஒன்று. ஒரு மெலன்கலிக் தீம் என்றாலும் பல இடங்களில் நகைச்சுவை என்னை புன்னகை பூத்தவாறே பக்கங்களை வேகமாக புரட்ட வைத்தது. அவ்வளவு கன்வின்ஸிங்காக இல்லாத் ”ஸ்லம்டாக் மில்லியனர்” முதலில் பார்த்தது தப்பாகி விட்டது என நினைக்கிறேன். ஷாக் அப்சார்பராக அதற்கு முன் ஒரு தமிழ் டி.வி சீரியலில் ”பிச்சைக்கார இண்டஸ்டிரி” பற்றி சில காட்சிகளை பார்த்துவிட்டேன். ஆனால் ஜெயமோகன் இந்தக் கதையை 2004ல் எழுதிவிட்டார். அவருக்குதான் நியாயமாக முதன் முதலில் இந்த சப்ஜக்டை தொட்ட பெருமை சாரும். எல்லா வகையிலும் ”ஏழாம் உலகம்” ஒரு உன்னத படைப்பே.
(முக்கியமாக ஒன்றை விட்டுவிட்டேன்: ஜெயமோகனை அறிமுகப்படுத்திய ப்ளாக்கின் கோ-ஆதர் RVக்கு நன்றி; இன்னொரு விஷயத்திற்கும் நன்றி – ஜெயமோகன் கோபித்துக் கொள்வார் – அதனால் இங்கே சொல்லமாட்டேன்
)
பெப்ரவரி 17, 2009
எனக்கும் பழைய தமிழ் இலக்கியத்துக்கும் கொஞ்சம் தூரம். சின்ன வயதில் உருப்போட்டதால் நாலு குறள், குற்றாலக் குறவஞ்சியில் இரண்டு பாட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வெண்பா சொல்லுவேன். அவ்வளவுதான். சிவ பெருமான் கர்ப்பகிரகத்தை விட்டு இறங்கி வந்து எழுதிய கவிதையான கொங்கு தேர் வாழ்க்கையை முழுதாக படித்தபோது இவர் கர்ப்பகிரகத்திலேயே இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது.
கலைஞரோ இந்த இலக்கியத்தில் முங்கி குளிப்பவர். அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பிய பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரண தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
அவருடைய கதைகளில் நான் படித்தது பொன்னர் சங்கர் ஒன்றுதான். ஆரம்ப பள்ளி மாணவன் லெவலில் எழுதப்பட்ட கதை. ஒரே லாபம் அண்ணன்மார் சாமி கதை பற்றி தெரிந்துகொண்டதுதான். ஜெயமோகன் அவரது ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம் ஆகியவற்றை தன் வரலாறு கற்பனை படிப்புகள் இரண்டாம் பட்டியலில் சிபாரிசு செய்திருக்கிறார். பொன்னர் சங்கர் மட்டும் வைத்து சொன்னால் இவர் எழுதாமலே இருக்கலாம் என்றுதான் சொல்வேன்.
அவர் எழுதும் கவிதைகளோடு எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை. சின்ன வயதில் “ஸ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்னாளோ?” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. இன்று இதெல்லாம் ஒரு கவிதையா என்று தோன்றுகிறது. நான் கூட இது மாதிரி ஆயிரம் எழுதுவேன் – “ஸ்ரீரங்கநாதன் கோவில் புளியோதரையில் காரங்கள் போட்டுவிட்டான் எரியுதடா!” என் கவிதையை என் மனைவி கூட ரசிக்க மாட்டாள். அவாள்-சவால், குடும்பத் தகராறு பற்றி எழுதுவது எல்லாமும் கவிதை, பாரதி எழுதியதும் கவிதை என்பது உலக மகா அநியாயம்.
அவரது பேச்சும் எழுத்தும் பலரை கவர்ந்தன. அவரது கரிஷ்மாவின் ஆதாரமே அவரது தமிழ்தான். ஆனால் அது வெறும் அலங்காரத் தமிழ். அதில் கருத்தை விட எதுகை மோனைக்குத்தான் முதல் இடம். துக்ளக்கின் ஒண்ணரை பக்க நாளேட்டில் அவரை கிண்டல் செய்து – “அதை அவன் படித்திட்டான், பின் கண் துடைத்திட்டான், பின் படுத்திட்டான்” என்றுதான் பேசுவார் என்று எழுதுவார்கள். எனக்கு கருத்துதான் முக்கியம். அதனால் அது என்னை ஓரளவு வயது வந்ததும் கவரவில்லை. மேடையில் பேசினால் சும்மா பொழுதுபோக்குக்காக கேட்கலாம் – பஸ் பயணத்தில் ராஜேஷ் குமார் கதை படிப்பது போல.
மொத்தத்தில் எனக்கு தெரிந்த அவரது இலக்கிய பங்களிப்பு முக்கியமானது இல்லை. அவர் இலக்கியங்களை சாதாரணத் தமிழனுக்கு கொண்டு வர செய்துள்ள முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை, ஆனால் அவற்றின் தரத்தை பற்றி எனக்கு தெரியாது.
அவரது சினிமா பங்களிப்பு அடுத்த பகுதியில்.
பெப்ரவரி 16, 2009
Posted by RV under
Reading | குறிச்சொற்கள்:
18avadhu atchak kodu,
Asokamithran,
Avan anadhu,
Chayavanam,
Ezham ulagam,
G. nagarajan,
Gandharvan,
Gopalla gramam,
Hepsiba jesudasan,
Idaiveli,
Imayam,
Issac arumairajan,
J.j. sila kurippukal,
Jeyakanthan,
Jeyamohan,
Ka.na. subramanyam,
Kadalpuratthil,
Kadu,
Keeralkal,
Ki. rajanarayanan,
Koveru kazhuthaikal,
Kritthika,
Malarum sarugum,
Manasarovar,
Mogha mul,
Nagammal,
Nakulan,
Nalai marroru nale,
Neela. padmanabhan,
Ninaivup pathai,
Oru manithan oru veedu oru ulagam,
Oru nal,
Pa. singaram,
Pallikondapuram,
Pin thodarum nizhalin kural,
Poytthevu,
Prabanjan,
Prathapa mudaliyar saritthiram,
Puttham veedu,
Puyalile oru thoni,
R. shanmughasundaram,
Rubber,
S. sampath,
Sa. kandasami,
Sundara ramasami,
T. selvaraj,
Thalaimuraikal,
Thanneer,
Thi. janakiraman,
Vanam vasappadum,
Vannanilavan,
Vasavesvaram,
Vedhanayagam pillai,
Vishnupuram |
[3] Comments
சமீபத்தில் டாப்டென் என்ற பதிவில் சில சிபாரிசுகளை பார்த்தேன். அவர்கள் குமுதத்தில் வந்த சிலவற்றை மீள்பதிவு செய்திருக்கிறார்கள். அவை பற்றிய கமெண்ட்கள் இங்கே.
சிறந்த பத்து தமிழ் நாவல்கள் – சா. கந்தசாமி
சா. கந்தசாமியின் சாயாவனம் என் சிறு வயதில் அம்மா, அப்பா, நான் எல்லாரும் பல முறை விரும்பி படித்த புத்தகம். என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம் அதுதான் என்று நினைக்கிறேன். மாற்றம் என்றால் என்ன என்பதை மிகவும் ஆக சுட்டி இருப்பார்.
1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவல் என்பதால் இது பலரால் சிபார்சு செய்யப்படுகிறது. என் கருத்தில் இது படிக்கப்பட வேண்டியது இல்லை. போரடிக்கும்.
2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம் க.நா.சு. படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் குறிப்பிட்ட நாவல். இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம் ஜெயமோகன் சொன்ன நாவல். இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா கிருத்திகா சமீபத்தில் மறைந்துவிட்டாராம். இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன் அசோகமித்திரன் மிக subtleஆன ஆசிரியர். இந்த புத்தகம் எனக்கு too subtle. அவரது தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள் போன்ற புத்தகங்களை சிபாரிசு செய்கிறேன்.
6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் படித்ததில்லை.
7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை.
8. அவன் ஆனது – சா. கந்தசாமி படித்ததில்லை.
9. வானம் வசப்படும் – பிரபஞ்சன் படிக்கலாம், ஆனால் எனக்கு இந்த புத்தகம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை.
10. ரப்பர் – ஜெயமோகன் ஜெயமோகனின் சுமாரான நாவல். அவரது முதல் நாவலும் கூட. அவரது potential நன்றாக தெரியும், ஆனால் அவர் எழுத்தாளராக இன்னும் பல படிகள் ஏற வேண்டி இருப்பதும் தெரியும். இதை விட பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் போன்ற புத்தகங்களை நான் சிபாரிசு செய்கிறேன்.
கந்தவர்னை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படித்ததில்லை. அவரது சிபாரிசுகள்.
1. மோகமுள் – தி. ஜானகிராமன் மிக அருமையான புத்தகம். அந்த கால கும்பகோணத்தின் தூசியை இதன் பக்கங்களில் சுவாசிக்கலாம்.
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் ஒரே ஒரு நீல. பத்மநாபன் நாவல்தான் என் நினைவில் இருக்கிறது. எனக்கு இங்கே கொஞ்சம் குழப்பம். இதை படித்திருக்கிறேனா என்று நினைவில்லை.
3. சாயாவனம் – சா. கந்தசாமி முன்பே சொன்ன மாதிரி, என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம்.
4. மலரும் சருகும் – டி. செல்வராஜ் படித்ததில்லை.
5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் மிக அருமையான புத்தகம். ராஜநாராயணனின் பல புத்தகங்கள் அருமையானவை.
6. கடல்புரத்தில் – வண்ணநிலவன் படிக்கலாம், ஆனால் எல்லாரையும் போல் நான் இந்த புத்தகத்தை சிலாகித்து சொல்ல மாட்டேன்.
7. கீரல்கள் – ஐசக் அருமைராஜன் கேள்விப்பட்டதே இல்லை.
8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன் நல்ல புத்தகம்.
9. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம் என் பதிவு இங்கே.
10. கோவேறுக் கழுதைகள் – இமையம் படித்ததில்லை.
சி. மோகன் சிபாரிசுகள் – எனக்கு இவர் யாரென்று தெரியாது. படித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.
1. இடைவெளி – எஸ். சம்பத் படித்ததில்லை.
2. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். ஆரம்பம் மிக நன்றாக இருந்தது. புத்தகம் பிடிக்கும் என்று தோன்றியது. ஆனால் மேலே தொடர முடியாமல் ஒரு சோம்பேறித்தனம்.
3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் அபாரமான புத்தகம். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம்.
4. நினைவுப் பாதை – நகுலன் படித்ததில்லை.
5. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன் ஒரு ரவுடி மிக லாஜிகலாக சிந்தித்து தன் வைப்பாட்டிக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்கிறான். ஜி. நாகராஜன் இன்னும் தமிழ் உலகை ஷாக் செய்யக் கூடியவர்.
6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி அற்புதமான புஸ்தகம்.
7. மோகமுள் – தி. ஜானகிராமன் முன்பு சொன்ன மாதிரி அருமை.
8. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை
9. தண்ணீர் – அசோகமித்திரன் இந்த முறை அவரது எழுத்து எனக்கு புரிந்துவிட்டது – என்று நினைக்கிறேன். ஜமுனா, அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, தண்ணீர் பஞ்சம் எல்லாம் நன்றாக வந்திருக்கும்.
10. சாயாவனம் – சா. கந்தசாமி முன்பே சொன்ன மாதிரி இலக்கியத் தரம் வாய்ந்த புஸ்தகம்.
பெப்ரவரி 14, 2009
Posted by RV under
MathippeedukaL,
Tamil Nadu Politics | குறிச்சொற்கள்:
Annadurai,
Dayanidhi maran,
Duraimurugan,
E.v.k. sampath,
I. periyasami,
Jeyalalitha,
Kalaignar karunanidhi,
Karuppaiah moopanar,
MGR,
Mu.ka. azhagiri,
Mu.ka. mutthu,
Mu.ka. stalin,
Murasoli maran,
Nagai rouseau,
Narayanasami nayudu,
Navalar nedunchezhiyan,
Pongalur pazhanicchami,
Rahman khan,
Rajiv gandhi,
Suppu,
Tha. krishnan,
V.n. janaki,
V.p. singh,
Veerapandi arumugam |
[4] Comments
கலைஞரைப் பற்றிய மதிப்பீடு இங்கே. கீழே எனக்கு தெரிந்த வரை கலைஞரின் அரசியல் வாழ்க்கையை பற்றி.
திராவிட இயக்கத்துக்கும் காங்கிரசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. காந்தி வரும் வரை காங்கிரஸ் மேட்டுக்குடிக்காரர்களின் கட்சி. அந்த மேட்டுக்குடி காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுப் போட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியார் வரும் வரை திராவிட இயக்கத்தினரும் அப்படித்தான். காந்தி காங்கிரசுக்கு எப்படி கடவுளோ அப்படித்தான் பெரியாரும் திராவிட இயக்கத்துக்கு. நேரு தனிப்பட்ட முறையில் மிஸ்டர் க்ளீன் ஆக இருந்தாலும் கட்சியின் பல கோளாறுகளை கண்டுகொள்ளவில்லை. அவருடைய கரிஷ்மா அனைவரையும் கவர்ந்தது. அண்ணாவும் அப்படித்தான். இந்திரா காந்தி காரியம் ஆனதும் பெரியவர்களை கழற்றி விடுவது (காமராஜ்), லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் எல்லாவற்றையும் காங்கிரஸில் ஒரு தவிர்க்க முடியாத விஷயம் ஆக்கினார். கலைஞரும் அப்படித்தான். இந்திராவுக்கு மொரார்ஜி, கலைஞருக்கு நாவலர். இந்திராவுக்கு காமராஜ், கலைஞருக்கு ராஜாஜி. இந்திராவுக்கு சஞ்சய் காந்தி, கலைஞருக்கு அழகிரி. ராஜீவ் போல ஸ்டாலின்.
அவரது கொள்கைகளை அவர் கைவிட்டு வெகு நாட்களாகிவிட்டன. அவரது கூர்மையான மூளை இப்போது பதவி, குடும்பம் ஆகியவற்றை மட்டுமே முன் வைத்து செயல்படுகிறது. அவர் தலைவர் இல்லை, அரசியல்வாதி. இந்திராவை மறுபடி பார்ப்பது போல இருக்கிறது.
ஆனால் அவர் இந்திரா போல பணக்கார, அரசியல் பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். சிறு வயதிலேயே பொது வாழ்வுக்கு வந்தவர். ஒரு காலத்தில் லட்சியவாதியாக இருந்திருக்க வேண்டும். சினிமா என்று ஒன்று இல்லாவிட்டால் ஏழையாகத்தான் இருந்திருப்பார். தி.மு.க. பதவிக்கு வருவதற்கு முன்பே சில பல தகிடுதத்தம் செய்தவர் என்று கண்ணதாசன் தன் மனவாசம், வனவாசம் போன்ற புத்தகங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் அண்ணா அவரது பணம் திரட்டும் திறமை, தேர்தலை சமாளிக்கும் திறமை ஆகியவற்றால் அவரை கட்சியின் இன்றியமையாத தலைவர் என்று கருதினாராம். காந்திக்கும் இதற்கெல்லாம் ஒரு படேல் தேவைப்பட்டார் என்று ஞாபகம் இருக்கட்டும்.
பதவிக்கு வருவதற்கு முன் அவர் அரசியல் பங்களிப்பை பற்றி எனக்கு ரொம்ப தெரியாது. தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஈ.வே.கி. சம்பத், கண்ணதாசன் போன்றவர்களுக்கு இவரோடு ஏற்பட்ட மனஸ்தாபம், அண்ணா இவருக்கு கொடுத்த முக்கியத்துவம், ஆகியவற்றால்தான் கட்சியை விட்டு போனார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கட்சியில் அண்ணா, நாவலருக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் இருந்தார் போல தெரிகிறது.
1965இன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், அரிசி தட்டுப்பாடு, காமராஜ் மத்திய அரசியலில் மூழ்கியது, ராஜாஜி, ம.பொ.சி. போன்ற அப்பழுக்கற்ற உழைப்பாளர்களின் கூட்டணி, சுடப்பட்ட எம்ஜிஆர் மீது எழுந்த சிம்பதி, எம்ஜிஆரின் திரை உலக இமேஜ் போன்ற பல காரணங்கள் தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தின. அண்ணா இறந்தவுடன் எல்லாரும் நாவலர்தான் முதலமைச்சராக வருவார் என்று எதிர்பார்த்தார்கள். எம்ஜிஆர் ஆதரவுடன் அவரை கவிழ்த்துவிட்டு முதலமைச்சரானார். நாவலர் கட்சி பொது செயலாளர் பதவிக்கு போட்டி இட்ட போது அது வரை பெரியாருக்காக காலியாகவே வைக்கப்பட்டிருந்த தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நாவலரை மீண்டும் கவிழ்த்தார். 71இல் பங்களாதேஷ் போரினால் இந்திராவுக்கு ஏற்பட்டிருந்த ஆதரவு, எம்ஜியார், அண்ணாவின் மறைவு ஆகியவற்றின் மீது சவாரி செய்து காமராஜை தோற்கடித்தார்.
அது வரை அருமையாக கணக்கு போட்ட மூளை எம்ஜிஆர் விஷயத்தில் சொதப்பி விட்டது. அவருக்கு ஒரு மந்திரி பதவி கொடுத்திருக்கலாம். குறைந்த பட்சம் மு.க. முத்துவை வைத்து படம் எடுக்காமல் இருந்திருக்கலாம். எம்ஜிஆர் தன் பாணியிலே ஒரு இளைஞன் கிழவனாகிக்கொண்டிருக்கும் தனக்கு போட்டியாக உருவாவதை பார்த்தார். மந்திரி பதவியும் கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று சவால் விட்டு கட்சியை விட்டு வெளியேறினார். கலைஞர் தனக்கு ஐந்து வருஷம் பதவி இருக்கிறது, அதற்குள் எம்ஜிஆரை அடக்கி விடலாம் என்று நினைத்திருக்க வேண்டும். பெரிய தப்பு கணக்கு. (சின்ன தப்பு கணக்கு சோவை அடக்கி விடலாம் என்று நினைத்தது)
மிசா சமயத்தில் ஜேபி, மொரார்ஜி போன்றவர்களே ஜெயிலுக்கு போக, அவர் ஜெயிலுக்கு போகாது ஆச்சரியம்தான். ஸ்டாலின் அடிபட்டார், சிட்டிபாபு செத்தே போனார். பலர் மன்னிப்பு கேட்டு தி.மு.கவை விட்டுப் போனார்கள். ஆனாலும் கட்சி இருந்தது. கலைஞரின் தமிழுக்கும் தலைமைக்கும் பின்னால் ஒரு கூட்டம் இருந்தது. என்ன, எம்ஜிஆருக்கு பின்னால் இருந்த கூட்டம் இதை விட பெரியதாக இருந்ததால் கலைஞர் 77இல் தோற்கடிக்கப்பட்டார்.
ஆனால் 77இல் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் அதிர்ந்திருப்பீர்கள். மஸ்டர் ரோல் ஊழல், சர்க்கரை ஊழல், அந்த ஊழல், இந்த ஊழல் என்று வெளி வந்துகொண்டே இருந்தது. மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்ட ஒரு சென்னை கார்ப்பரேஷன் குமாஸ்தா வாக்குறுதி என்று ஒரு சினிமா படமே தயாரித்தார். தினத்தந்தியில் பொழுது விடிந்து பொழுது போனால் இதே நியூஸ்தான். லஞ்சம் அதற்கு முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை மறைத்து, பயந்துகொண்டே வாங்கினார்கள். அதை சாதரண விஷயமாக்கியது கலைஞர்தான். அவர் வழியில் பின்னால் எம்ஜிஆரும் போனார். கலைஞர் எழுபதுகளில் எட்டடி பாய்ந்தால் எம்ஜிஆர் பின்னாளில் பதினாறடி பாய்ந்தார்; ஜெவும் சசிகலாவும் எண்பதடி பாய்ந்தார்கள். கலைஞர் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அவரும் இப்போதெல்லாம் நூறடி பாய்கிறார்.
அவர் 80இல் தோற்றது ஒரு சோகக் கதை. பேசாமல் இருந்திருக்கலாம். இந்திராவிடம் கெஞ்சி எம்ஜிஆர் அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார். அனுதாப அலை அடித்து எம்ஜிஆர் திரும்ப வந்துவிட்டார். காங்கிரஸின் உள்குத்து வேலையால் ஹண்டே அவரை கிட்டத்தட்ட தோற்கடித்தே விட்டார் (ஆயிரமோ என்னவோதான் ஓட்டு வித்தியாசம்) மனம் குளிர்ந்து எம்ஜிஆர் ஹண்டேவுக்கு மந்திரி பதவி எல்லாம் கொடுத்தார். அப்போதுதான் எம்ஜிஆரும் கலைஞரும் சேர்ந்து அரசியலை சும்மா oneupmanship ஆக ஆக்கினார்கள். கலைஞருக்கு எம்ஜிஆரை embarass செய்ய வேண்டும், அது ஒன்றுதான் வாழ்க்கையின் லட்சியம் போல இருந்தது. எம்ஜிஆருக்கு கலைஞரை வார வேண்டும் அது ஒன்றுதான் லட்சியம். கலைஞரின் சட்ட சபை ஆயதங்கள் ரஹ்மான் கான், துரைமுருகன், சுப்பு. அவர்கள் மூவரும் எம்ஜிஆர் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்கள். எம்ஜிஆரும் அவர்களை ரசித்துக்கொண்டே காளிமுத்து (கருவாடு மீனாகாது போன்ற தத்துவங்களை சொன்னவர்) போன்றவர்களை வைத்து ஏதோ சமாளித்துக்கொண்டிருந்தார். (துரைமுருகனை படிக்க வைத்தது எம்ஜிஆர்தான். துரைமுருகனிடம் அவர் எம்ஜிஆரை தீவிரமாக தாக்கிய காலத்தில் இதை பற்றி கேட்டார்களாம். அவர் எம்ஜிஆர் தெய்வம், கலைஞர்தான் தலைவன் என்று சொன்னாராம்.) எம்ஜிஆரை காக்கா பிடிக்க வேண்டும் என்றால் கலைஞரை மட்டம் தட்ட வேண்டும் அவ்வளவுதான் – கலைஞர் தெலுங்கர் என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். இந்த கலாட்டாவில் உழவர் போராட்டம் (உழவர் தலைவர் நாராயண சாமி நாயுடு கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்ற உறுதியான கொள்கை உடையவர்), இட ஒதுக்கீடு கலாட்டா, திருந்செந்தூர் கொலை, பால் கமிஷன் அறிக்கை, என்று பல விஷயங்கள் நடந்தன.
84இலோ கேலிக்கூத்து. எம்ஜிஆர் படத்தை போட்டு ஓட்டு கேட்டுப் பார்த்தார். எம்ஜிஆரின் உடல் நிலைக்காக அடித்த அனுதாப அலையில் கலைஞர் ஏறக்குறைய காணாமலே போய்விட்டார். அவரும் உடனே ஏன் சூடு சுரணை இல்லாத தமிழனே, நீ என்னை தண்ணியிலே போட்டால் நான் உனக்கு தோணியாவேன், கரையில் போட்டால் ஏணியாவேன், வயலுக்கு போட்டால் சாணியாவேன் என்று தன் பாணியிலே அறிக்கை விட்டுக்கொண்டு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தார்.
எம்ஜிஆர் மறைந்து, ஜானகி-ஜெ சண்டையில் அவர் 89இல் ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது அநியாயம்.
ஆனால் 89இல் மாறன் மத்திய அமைச்சர் ஆனது தி.மு.கவுக்கு ஒரு inflection point. ஒரு லோக் சபா எம்.பி. கூட இல்லாவிட்டாலும் வி.பி. சிங் தி.மு.க.விலிருந்து ஒரு அமைச்சர் வேண்டும் என்று சொன்னார். அன்றிலிருந்து கலைஞருக்கு மத்திய அரசு பற்றி ஒரு கணக்கு மனதில் ஓட ஆரம்பித்தது. திராவிட நாடு எல்லாம் அப்போதுதான் உண்மையிலேயே போயே போச்! அவர் அப்போதுதான் முழுமையான இந்தியர் ஆனார்.
91இல் ராஜீவ் சிம்பதி அலையில் ஜெ ஆட்சிக்கு வந்தார். எழுபதுகளில் கலைஞர் ஆட்சி எப்படி தமிழ் நாட்டின் valuesஐ மாற்றியதோ அப்படித்தான் இந்த ஆட்சியும். இப்படியும் பதவி துஷ்ப்ரயோகம் செய்ய முடியுமா என்று அசந்து போனோம்.
சசிகலா கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ஜெ யாரோ முன் பின் தெரியாதவர்கள் எனக்கு பல லட்சம் டாலர் அன்பளிப்பு தந்தார் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். வளர்ப்பு மகன் திருமணம் மாதிரி ராமன்-சீதா கல்யாணம் கூட நடந்திருக்காது. ஜால்ராக்கள் கொழித்தனர். ஜெவுக்கு எதிராக ஒரு கடுமையான எதிர்ப்பு அலை வீசியது. சோ ராமசாமியே ஜெவுக்கு கலைஞர் பெட்டர் என்று சொன்னார். மூப்பனாருடன் கூட்டணி, மூப்பனாருக்கு பெருந்தன்மையாக அதிக அளவு எம்.பி. சீட்கள், சன் டிவி, ரஜினிகாந்த், சோ ஆகியோரின் வெளிப்படையான ஆதரவு – 96இல் அமோகமாக ஜெயித்தார்.
அவர் முயன்றிருந்தால் தேவே கவுடா, குஜ்ரால் ஆகியோர் இடத்தில் மூப்பனார் அமர்ந்திருக்க முடியும். பொறாமை, ஈகோ. வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் உள்குத்து வேலை நடத்தினார். ஜென்டில்மன் மூப்பனாரும் பேசவில்லை.
96இல் நல்லபடியாக ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலங்களிலேயே சிறந்தது அதுதான். க்ரிடிக் சோ கூட அதை ஒத்துக்கொண்டார். சோவே எல்லா விஷயங்களிலும் நல்ல ஆட்சிதான், ஆனால் புலிகள் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது, அதனால் ஜெவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார். ஆனால் கட்சி உளுத்துப்போய்விட்டது. சொந்த பலத்தில் ஆட்சிக்கு வர முடியாது. கூட்டணி சரியாக அமையவில்லை. மக்களும் ஆட்சியில் காந்தியே இருந்தாலும் தோற்கடிப்பது என்று ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
மீண்டும் ஜெ. நள்ளிரவில் கைது. (அதை எப்படிய்யா சரியாக விடியோ எடுத்தார்கள்?) மாறன் வேட்டி அவிழ ஜீப் பின்னால் ஓடியது மறக்க முடியாத காட்சி. ஒரு மத்திய அமைச்சருக்கே அவ்வளவுதான் மரியாதை என்றால் ஜெவின் திமிரை என்ன சொல்வது? நாற்பது எம்.பி. தொகுதியும் அவருக்கே. அன்றிலிருந்து அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர். தங்கபாலு, கிருஷ்ணசாமி எல்லாம் சும்மா லுலுலாயி.
2006 – அருமையான தேர்தல் வியூகம். காங்கிரஸ், பா.ம.கவுடன் கூட்டணி. இலவச டிவி அறிவிப்பு. மைனாரிட்டி அரசுதான், ஆனால் மெஜாரிட்டி அரசுக்கு இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இலவசங்கள் சரியான விஷயம் இல்லைதான் – ஆனால் சொன்னதை செய்தார், சொன்னதைத்தான் செய்தார். இலவச டிவி கொடுத்தார், அரிசி சீப்பாக கிடைக்கிறது எல்லாம் சரிதான். ஆனால் குடும்பத் தகராறை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அழகிரி பக்கம் சாய்ந்தார், தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டார், கனிமொழி அரசியலுக்கு வந்தார், பிறகு கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்தும் விட்டது. இதற்கு ஏனையா அவர்களை வெளியே அனுப்பினீர்கள்? அழகிரியால் கெட்ட பேர்தான். (தா. கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதிலிருந்தே அப்படித்தான் – தா.கி. இறந்ததும் அதற்கும் சமீபத்தில் 19xxஇல் யாரோ கொல்லப்பட்டார் என்று காட்டியது மிக மோசமான விஷயம்)
இன்றைக்கு அவரை பார்த்தால் பதவிக்காக இளவரசர்கள் அடித்துக்கொள்ள, ஒன்றும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருந்த மொகலாய ராஜாக்கள், திருதராஷ்டிரன் போலத்தான் இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் ரிடையர் ஆகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.
கட்சி உளுத்துப்போய்விட்டது. தி.மு.கவில் இன்று யார் சேருவார்கள்? அப்பா தி.மு.க.வில் பிரமுகராக இருந்தால் பிள்ளை சேருகிறான், அவ்வளவுதான். கலைஞரும் குறுநில மன்னர்களின் வாரிசுகளை அங்கீகரிக்கிறார். அழகிரி, ஐ. பெரியசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி மாதிரி பலர் அவர்களது வாரிசுகளை முன் வைத்துவிட்டார்கள். ஆனால் எந்த இளைஞன் வந்து இந்த கட்சியில் சேருவான்? அவன் அப்பா பிரமுகராக இல்லாவிட்டால் அவனுக்கு அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம். (நாகப்பட்டினம் ரூசோ கட்சிக்காக உழைத்தார் – அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை, செத்தே போனார். அவர் மனைவி சுயேச்சையாக நின்று கணிசமான ஓட்டு வாங்கினார்)
கலைஞரின் தமிழுக்காக ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட பலர் வந்து சேர்ந்தார்கள். இன்று ஸ்டாலினுக்காக யாரும் வரப் போவதில்லை. அவருக்கு பிறகு கட்சி இன்னும் மோசமாகத்தான் ஆகப்போகிறது. அவுரங்கசீப் ஞாபகம்தான் வருகிறது. அவுரங்கசீப்பின் சாம்ராஜ்யம் அளவில் மிகப் பெரியது. ஆனால் உள்ளே சிவாஜியை சமாளிக்க முடியவில்லை, அவருக்கு பிறகு சாம்ராஜ்யமும் உடைந்து சுக்கல் சுக்கலாக போய்விட்டது. தி.மு.கவும் அப்படித்தான் ஆகப்போகிறது. பெருங்காய டப்பா மாதிரி கொஞ்ச நாள் வாசனையை வைத்து ஓட்டுவார்கள்.
பல தகுதிகள் இருந்தாலும், கட்சியை கட்டி காப்பாற்றி இருந்தாலும், அவரை அரசியலில் வெற்றி அடைந்திருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை. தோல்வி என்றும் சொல்ல முடியவில்லை. ஆதங்கம்தான் மிஞ்சுகிறது. எவ்வளவோ செய்திருக்கலாம்.
அவரது இலக்கிய சினிமா பங்களிப்பை பற்றி அடுத்த பகுதியில்.
பெப்ரவரி 13, 2009
வயது எண்பத்தைந்து – அவருக்கு இருக்கும் வேகம், உழைப்பு, உற்சாகம் எல்லாம் ஒரு இருபத்தைந்து வயது இளைஞனுக்கு கூட இருக்காது. இன்றைய தமிழ் நாட்டு அரசியலில் பீஷ்மர். பீஷ்மர் காலம் செல்ல செல்ல ஹஸ்தினாபுரத்தின் பலவீனமாக மாறினார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ராஜாஜிக்கு அடுத்தபடியாக சொல்லக்கூடிய புத்தி கூர்மை. எம்ஜிஆருக்கு அடுத்தபடி சொல்லக்கூடிய மனோதிடம். அண்ணாவுக்கு சமமான பேச்சு, எழுத்துத் திறன். கட்சியின் முடிசூடா மன்னர், ஆனால் ஜெ மாதிரி சர்வாதிகாரி இல்லை. எல்லாரையும் மிஞ்சிய அசாத்திய உழைப்பு. ஒரு மாபெரும் தலைவனாவதற்கு வேண்டிய அத்தனை prerequisite-களும் உண்டு. இருந்தென்ன? குடும்பத்தையும் கட்சியையும் ஒன்றாக்கிய சுயநலம், பெருத்த ஈகோ, தற்பெருமை, ஊழல், லஞ்சம், பதவியை துஷ்ப்ரயோகம் செய்வது, பதவி வெறி எல்லாம் சேர்ந்து அவரை ஒரு சாதாரண தலைவனாக கீழே தள்ளி விட்டன. எப்படியோ இருக்க வேண்டியவர் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாரே என்று பல சமயங்களில் தோன்றும்.
மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அவர் என்ன ஜாதி என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒரு கீழ் ஜாதிக்காரராகத்தான் இருக்க வேண்டும். வளர்ந்து வரும்போது பல ஜாதி அவமானங்களை சந்தித்திருக்க வேண்டும். அந்த வடு அவருக்கு இன்னும் இருக்கிறது. தான் ஒரு சூத்திரன் என்று அவ்வப்போது அழுவார். அதனால்தான் அவாள், சவால் என்றெல்லாம் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார். யாராவது அவரை குறை சொன்னால் அவர் முதலில் கவனிப்பது குறை சொன்னவர் என்ன ஜாதி என்றுதான். குறை சொன்னவர் பார்ப்பனராக இருந்தால் உடனே நான் சூத்திரன், பார்ப்பன திமிர் என்றெல்லாம் ஒரு பாட்டம் ஒப்பாரி வைப்பார். குறளோவியம் எழுதியவர்தான். வள்ளுவருக்கு கோட்டமும் சிலையும் எழுப்பியவர்தான். ஆனால் அந்த நேரத்தில் “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்” என்ற குறளை சவுகரியமாக மறந்துவிடுவார்.
நகைச்சுவை உணர்வு அதிகம். நக்கல் பேசுவதில் பெரும் விருப்பமுண்டு. ஆனால் நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல பேசி மாட்டிக்கொள்வார். ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான் என்று கேட்டார். மேடைக்கு மேடை தான் வள்ளுவருக்கு கோட்டம் கட்டினேன், சிலை எழுப்பினேன் என்றெல்லாம் பேசுவார். இவர் எந்த ஆர்க்கிடெக்ச்சர் காலேஜில் படித்தவர் என்று கேட்க மாட்டார்களா என்ன?
ஸ்பின் மாஸ்டர். தன் தவறை ஒத்துக்கொள்ளவே மாட்டார். தவறை சுட்டிக்காட்டினால் முட்டாள்தனமாக (கு)தர்க்கம் பேசுவார். ஜெ தவறு செய்தபோது நீ ஏதாவது சொன்னாயா என்று கேட்பார். ஜெ திருடி என்றால் இவர் திருடுவது நியாயம் ஆகாது என்பது புரியாத மாதிரி நடிப்பார். சமீபத்தில் 1964இல் கூட இப்படித்தான் நடந்தது என்று ஏதாவது precedent காட்டுவார். precedent இருந்தால் போதும் என்றால் எல்லா தவறுகளையும் செய்து கொண்டே போகலாம். கீரிப்பட்டிக்காரர்களும் ஆயிரம் precedents காட்ட முடியும். அங்கே மட்டும் அவருக்கு இந்த precedent ஐடியா செல்லாது.
சில சமயங்களில் அவர் வேதாந்தி; க்வாண்டம் ஃபிசிக்ஸ் விஞ்ஞானி. கொலையே நடந்தாலும் அங்கே கொலை நடந்திருக்கிறது என்று யாராவது சொல்லும் வரை கொலை நடக்கவில்லை என்று நினைப்பவர். Does the world exist if there is nobody to observe it? அதனால் அவர் கொலை நடப்பதை தடுப்பதை விட கொலை நடந்தது என்று சொல்வதை தடுக்கத்தான் அதிக முயற்சிகள் எடுப்பார்.
மொத்தத்தில் சரித்திரத் தலைவராக இருக்க வேண்டியவர் – குடும்பத் தலைவராக குறுகிவிட்டார்.
அவரது அரசியல் வாழ்க்கை, இலக்கிய, சினிமா வாழ்க்கை பற்றி அடுத்த இன்ஸ்டால்மென்ட்களில்.
பெப்ரவரி 11, 2009
கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய போராட்டங்களை சமீபத்தில் பட்டியல் இட்டாராம். இந்த லிஸ்ட் எங்கேயாவது கிடைக்குமா என்று தேடினேன். குறிப்பாக எனக்கு ராஜீவின் இறப்புக்கு பிறகு என்ன போராட்டம் நடத்தினார், வைக்கோவை புலிகளோடு சதி செய்ததாக சொல்லி கட்சியில் இருந்து விளக்கிய பிறகு என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள ஆசை. தமிழ் ஓவியா என்பவரது பதிவில் கிடைத்தது.
1991க்கு பிறகு உள்ள ஐட்டங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.
* 17.7.1995 அன்று ஒவ்வொரு நகரத்திலும் கழகத்தினர் கறுப்புச் சின்னம் அணிந்து உண்ணா நோன்பு.
* 2.11.1995 அன்று சென்னையில் கறுப்புக் கொடி ஏந்திய பேரணி
* 3.11.1995 அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக் கொடி பேரணி
* தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 25 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க நிதி.
* 30.11.1995 முழு அடைப்பு.
ராஜீவ் மரணம் அடைந்து பதினேழு வருஷம் ஆகிவிட்டது. அதில் பத்து வருஷம் ஜெ ஆட்சி. ஏழு வருஷம் கலைஞர். தான் ஆட்சியில் இருந்தபோது அவர் ஊரை ஏமாற்றக் கூட ஒன்றும் செய்யவில்லை என்று அவரே ஒத்துக்கொள்கிறார். ஜெவின் முதல் ஆட்சி காலத்தில் – 95இல் மட்டும் – ஒரு மூன்று நான்கு மாதம் உண்ணா விரதமும் பேரணியும் – அதுவும் ஆட்சி முடிந்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும்.
இரண்டாவது ஆட்சி காலத்தில் – வைக்கோ ஜெயிலுக்கு போன சமயம் – நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கி இருந்திருக்கிறார். ஆனால் தான்தான் இலங்கை தமிழர்களின் காவலர் என்று காட்டிக்கொள்ள வேண்டும். தான் தும்மினாலும் அது தமிழர் நலனுக்கு என்று ஸ்பின் செய்ய வேண்டும்! யப்பா! இவர் இவ்வளவு கீழே இறங்க வேண்டாம்!
பின் குறிப்பு: நான் புலிகளை எதிர்க்கிறேன். தமிழ் நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு போராடுவது என்றால் புலிகளுக்கு ஆதரவு தருவது என்பது போல ஆகிவிட்டது. அதுவும் கலைஞருக்கு எப்போதுமே புலிகள் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. அவர் செய்தது தவறு என்று சொல்லவில்லை – ஆனால் இலங்கை தமிழர்களை பதினேழு வருஷம் ஏறக்குறைய மறந்துவிட்டு இப்போது டிராமா போட்டு பேரை கெடுத்துக் கொள்கிறார்.
பெப்ரவரி 7, 2009
1965இல் வந்த கட்டுரை இது. அப்போது ஆர்வி தமிழ் நாட்டின் தொழில் அமைச்சர். நன்றி, விகடன்!
உன்னத லட்சியம்… உள்ளத் தூய்மை..!
பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு தொழில் வளத்தில் பெருமைப்படக்கூடிய நிலையில் இருக்கவில்லை. ‘வடக்கு வளருகிறது, தெற்கு தேய்கிறது’ என்ற குற்றச்சாட்டு வலுத்திருந்த காலம் அது.
ஆனால், கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் தொழில் துறையில் வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதை ஒருவரும் மறுக்க முடியாது.
முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறு தொழில்களே இருந்த நம் மாநிலத்தில் இன்று ஏழாயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் காட்சியளிக்கின்றன. நெய்வேலி நிலக்கரித் திட்டம் நாட்டிற்கே ஓர் அணிகலனாகத் திகழ்கிறது. மின்சார உற்பத்தி பன்மடங்காகப் பெருகி, பல தொழில்களுக்கு உயிர்நாடியாக ஒளி தருகிறது. இருபத்து நான்கு தொழிற்பேட்டைகள் இணையற்ற வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கல்பாக்கம் அணு மின்சார நிலையம் தென்னகத்திற்கே பெருமை தேடித் தரப் போகிறது.
இவ்வாறு எண்ணற்ற தொழிற் சாலைகள் ஏற்படவும், பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், தொழிற்கல்வி முன்னேறவும், சிறு தொழில்களும் பெருதொழில்களும் ஒருங்கே வளரவும் காரணமாயுள்ள தமிழக சர்க்காரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
இத்துறையில் தொழிலமைச்சர் திரு.ஆர்.வெங்கட்ராமன் அரும் பணியாற்றி, அரிய சாதனைகள் புரிந்துள்ளார்.
தொழில் அமைச்சராவதற்கு முன் தொழிலாளர் தலைவராக இருந்து ‘ஆர்.வி.’ என்ற அன்புப் பெயரைப் பெற்றிருப்பவர் திரு.வெங்கட்ராமன். தொழிற்சங்கத்தில் தொண்டாற்றியபோது, தொழிலில் உள்ள இடையூறுகளையும், தொழில் அதிபர்களின் பிரச்னைகளையும் நன்கு உணர்ந்திருந்த காரணத்தால், நாட்டில் தொழில் வளருவதற்கு எத்தகைய சூழ்நிலை தேவை என்று அறியும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருந்தது. ஆகவே, தமது பதவிக் காலத்தில் தமிழகத்தையே தொழில்மயமாக்கி சீரும் சிறப்பும் மிகுந்ததாகச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, கருமமே கண்ணாய் இருந்து வருகிறார். புதுப்புதுத் தொழில்கள் தோன்றுவதற்கான திட்டங்களை வகுத்து, அவற்றைத் தொடங்குவதற்கான நபர்களைக் கண்டுபிடித்து, தேவையான நிதி வசதி செய்து கொடுத்து, தடைகளை அகற்றி, அகலும்பகலும் அயராது உழைத்து வருகிறார்.
வெளிநாடுகளுக்குப் போகும் போதெல்லாம்கூட அவர், அந்த நாடுகள் எந்தெந்தத் துறைகளில் எந்தெந்த வகைகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவக் கூடும் என்று ஆராய்ந்து வரத் தவறுவதில்லை. அது மட்டுமல்ல, அரும்பாடுபட்டு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கவும் வழி செய்து வருகிறார்.
திரு.வெங்கட்ராமனின் கருத்துக்களில் புதுமை இருக்கும்; பேச்சில் தெளிவு இருக்கும்; பிரச்னைகளை ஆராய்வதில் மதி நுட்பம் இருக்கும்; செயலாற்றுவதில் ஊக்கமும் உறுதியும் இருக்கும்.
பொதுத் துறை என்றும், தனியார் துறை என்றும் வேற்றுமை பாராட்டிக் கொண்டிராமல், உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்பதைப் பற்றியே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பவர் வெங்கட்ராமன். முதலீடு செய்பவர்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் குறைத்து தொழில் வளருவதற்குத் தடையாக இருக்கும் விதிமுறைகளைக் கண்டிக்கவும் அவர் தயங்குவதில்லை. அந்நியச் செலாவணி தேவையற்ற சிறு தொழில்கள் துவங்குவதற்கு தாராளமாக லைசென்சுகள் வழங்கப்படவேண்டும் என்றும், தொழிலதிபர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் பலமுறை வற்புறுத்தியிருக்கிறார்.
‘உற்பத்தியைப் பெருக்கி அதனால் கிடைக்கும் செல்வத்தைச் சீராகப் பங்கிடுவதுதான் உண்மையான சோஷலிசம்’ என்பதில் அசையாத நம்பிக்கை உடையவர் திரு.வெங்கட்ராமன். இவரைப் போல் உன்னத லட்சியத்துடனும் உள்ளத் தூய்மையுடனும் பணிபுரி யும் அமைச்சர்கள் இருந்துவிட்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிக் கவலையே படவேண்டாம்.
அடுத்த பக்கம் »