எனக்கு ஐந்து ஆறு வயது இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு டெண்ட்டு கொட்டாய் திறந்தார்கள். முதல் படம் திருவருட்செல்வர். என் அப்பா ஊரில் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர். அவருக்கு ஸ்பெஷல் இன்விடேஷன். ஏதோ துண்டை காணோம் துணியை காணோம் என்று சிவாஜி கதறி கதறி அழுவதுதான் ஞாபகம் இருக்கிறது.
அடுத்த படம் பாக்தாத் திருடன். வீட்டில் அழுது புரண்டு சண்டை போட்டேன். என் அம்மா யாரும் கூட வர மாட்டோம், பரவாயில்லை என்றால் போய்த்தொலை என்று கோபத்துடன் சொன்னாள். நானும் விட்டுக்கொடுக்காமல் போய்விட்டேன். சண்டைக் காட்சிகளின் போது பயம். என்னை யாராவது திரையிலிருந்து வெளி வந்து அடித்துவிடுவார்களோ என்று ஒரு வினோத பயம். பெஞ்ச்சுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டேன். யாருடா இந்த வீரத் திருமகன் என்று எங்கள் குடும்ப நண்பர் எட்டிப் பார்த்து நான் தனியாக வந்திருப்பதை அறிந்து கொண்டு பக்கத்தில் உட்கார்ந்து எனக்கு தைரியம் சொல்லிக் கொண்டே படம் பார்த்தார்.
அது அல்லவோ படம்? எம்ஜிஆர் கத்தியை சுழற்றுவதென்ன, வில்லன்களை துரத்துவதென்ன? அடி தூள்! அப்போதிலிருந்து ஒரு மூன்று நான்கு வருஷம் நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன். அதற்கு பிறகு சிவாஜி நடிப்பு, ஜெய்ஷங்கரின் ஜேம்ஸ் பாண்ட் சாகசங்கள், ரஜினி ஸ்டைல், கமலின் இளமை என்று ரசனை மாறினாலும் எம்ஜிஆரை மறக்க முடிந்ததில்லை.
நாங்கள் இருந்த ஊரின் பேர் லாடாகரனை எண்டத்தூர். விவசாய கிராமம். சில பெரிய “பண்ணையார்கள்”, முக்கால்வாசி கூலிகள். அனேகமாக எல்லாரும் ஏழைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். எம்ஜிஆர் தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டதும் அந்த ஊரில் ஒரு ஊர்வலம் நடந்தது – ராத்திரி ஒன்பது மணிக்கு. எல்லாரும் வேலையை முடித்துக் கொண்டு, ராத்திரி சாப்பாடு ஆனதும் கோஷம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போனார்கள். நூறு பேராவது போயிருப்பார்கள். வேலைகளை முடித்துக்கொண்டு எம்ஜிஆருக்கு நேரம் ஒதுக்கியது என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி. இவர்கள் எண்டத்தூரில் ராத்திரி ஒன்பது மணிக்கு ஊர்வலம் போனதால் என்ன ஆகி விடப் போகிறது? பேசாமல் படுத்து தூங்குவதை விட்டுவிட்டு ஊர்வலம் போக வேண்டுமென்றால் எம்ஜிஆர் அவர்கள் உள்ளத்தில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்க வேண்டும்?
அப்புறம் 1977இல் – எமர்ஜென்சிக்கு பிறகு – வந்த தேர்தலில் எம்ஜிஆர் இந்திரா கூட்டணி. அதற்கு முற்போக்கு கூட்டணி என்று பேர். பத்து பனிரண்டு வயது சிறுவனான நான் அப்போது இருபது அம்சத் திட்டம் பற்றி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் பரிசெல்லாம் வாங்கி இருந்தேன். உண்மையிலேயே இருபது அம்சத் திட்டம் நல்ல விஷயம் என்று நம்பிய காலம். இது முற்போக்கு கூட்டணி என்றால் கலைஞர் இருப்பது பிற்போக்கு கூட்டணிதானே என்று யோசிக்கும் அளவுதான் என் மூளை இருந்தது. எம்ஜிஆருக்குத்தான் என் ஆதரவு.
எம்ஜிஆர் அரசியலில் வெற்றி அடைந்தவர். ஆனால் அவர் ஒரு சினிமாக்காரராக்கத்தான் தன்னை உணர்ந்திருக்க வேண்டும். அவர் ஆழ் மனதில் அவர் ஒரு அரசியல்வாதி இல்லை.
சிவாஜி நடிகர். பாலச்சந்தர் இயக்குனர். இளையராஜா இசை அமைப்பாளர். ஏவிஎம் செட்டியார் தயாரிப்பாளர். ஆனால் எம்ஜிஆர் சினிமாக்காரர் – நல்ல சினிமாக்காரர். அவரது ஆளுமை பெரியது.
1936இல் சினிமாவில் நுழைந்தாலும் கிட்டத்தட்ட பதினைத்து வருஷங்கள் சைடி ரோல்கள்தான். அப்புறம் ஒரு பத்து வருஷங்கள் ராஜா ராணி படங்களில் ராஜா. அதற்கப்புறம் சினிமா உலகுக்கே ஒரு பத்து வருஷங்கள் ராஜா. கடைசி ஐந்தாறு வருஷங்கள் பழைய பெருங்காய டப்பா வாசனையை வைத்து ஓட்டினார்.
அவர் நல்ல நடிகர் இல்லை. எர்ரால் ஃப்ளின் நல்ல நடிகரா? இருக்கலாம், ஆனால் ஒரு சாகசம் புரியும் நடிகராகத்தான் நமக்கு தெரியும். ஆனால் எர்ரால் ஃப்ளின் முக்கியமான நடிகர். அதே போல்தான் எம்ஜிஆரும்.
அவர் நல்ல இயக்குனரா? தெரியவில்லை. அவர் இயக்குனர் என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்ட படங்கள் மிகக் குறைவு. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி இரண்டொரு படங்கள்தான். ஆனால் நாடோடி மன்னனுக்கு பிறகு அவரது படங்களை அவர்தான் இயக்குனர் என்று சொல்ல வேண்டும்.
அவர் நல்ல தயாரிப்பாளரா? சினிமாவை ஒரு தொழிலாக செய்தாரா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல தயாரிப்பாளர் செலவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவோ குறைத்து வரவை அதிகரிக்க முயற்சி செய்வார். எம்ஜிஆர் பணத்தை காரணம் இல்லாமல் செலவழிப்பார் என்று கேள்வி. ஷூட்டிங்குக்கு வந்துவிட்டு மேக்கப் ரூமை விட்டு வெளியேவே வரமாட்டாராம்.
சினிமாவை பொறுத்த வரை அவர் ஒரு மிக லாபகரமான saleable brand. அவருக்கும் அது தெரிந்திருந்தது. அவர் தயாரிப்பாளர்களை வைத்து தன் பிராண்டை பலப்படுத்திக்கொண்டார். அவரை நம்பி தயாரிப்பாளர்கள் பணத்தை கொட்டினார்கள். படம் வெளிவந்தால் பொதுவாக அவர்கள் ஏமாற்றம் அடைந்ததில்லை. தானும் அவ்வப்போது பணத்தை கொடுத்து கொடை வள்ளல் என்று பேர் வாங்கினார். அந்த பேரும் mostly part of the brand building exercise, அவ்வளவுதான். உண்மையில் அவர் எஸ்.எஸ். வாசன், செசில் பி. டிமில், ராஜ் கபூர் போன்றவர்கள் வரிசையில் சேர்க்கப் பட வேண்டியவர்.
அவரது சினிமா எதுவும் உலகத்தரம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அலிபாபா, உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண் போன்றவை அருமையான பொழுதுபோக்குப் படங்கள். எங்க வீட்டுப் பிள்ளையில் அவர் நம்பியாரை சாட்டையால் அடித்துக் கொண்டே நான் ஆணையிட்டால் என்று பாடும் காட்சி பார்க்கும் அனைவரையும் குதூகலம் அடைய செய்யும். ஆயிரத்தில் ஒருவனில் அவர் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்றால் விசில் பறக்கத்தான் செய்யும். நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது” என்றால் அதற்கு எம்ஜிஆர் “இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது” என்று சொன்னால் கை தட்டத்தான் செய்யும். அவர் சிலம்பம் ஆடுவதும் கத்தி சண்டை போடுவதும் இன்றும் பார்க்கலாம்.
ஆனால் அவரது பல சினிமாக்கள் இன்று பழையதாகிவிட்டன. காவல்காரன், தர்மம் தலை காக்கும், சக்கரவர்த்தி திருமகள், ஜெனோவா, மலைக் கள்ளன், திருடாதே, நம் நாடு, உழைக்கும் கரங்கள், நேற்று இன்று நாளை மாதிரி படங்களை இன்று பார்க்க முடிவதில்லை. போர் அடிக்கும். எழுபதுகளில் அவர் நடித்த அநேக படங்கள் மட்டமானவை. பெண்களை கீழ்த்தரமாக – காயா இது பழமா என்று தொட்டுப் பார்க்கட்டுமா? – சித்தரித்தன.
தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். அவரது பாதிப்பு இல்லாத ஹீரோ தமிழ் சினிமாவில் இல்லை. சிவாஜி கூட அவரது பாணியில் நடிக்க முயன்றிருக்கிறார்.
அவரது அரசியல் வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது. அண்ணா அவரை கூட்டம் கூட்டவும் ஓட்டு வாங்கவும் பயன்படுத்தினார். கலைஞர் அவரது ஆதரவால்தான் நாவலரை வென்று முதல்வரானார். நடிகருக்கு மந்திரி பதவி கொடுத்திருந்தால் அவர் எப்போதும் பின்னணியிலேயே இருந்திருப்பார். மந்திரி பதவி கொடுக்காததும், அவரை அமுக்க மு.க. முத்து முயன்றதும் கலைஞரின் தப்புக் கணக்கு. நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று காண்பிக்கிறேன் என்று சவால் விட்டு விட்டு அதிமுகவை ஆரம்பித்தார். அண்ணாயிசம் என்றெல்லாம் உளறிக் கொட்டினார். மக்களுக்கோ அவர் என்ன சொல்கிறார் என்பது ஒரு பொருட்டே இல்லை. அவர் முகத்தைப் பார்த்தால் போதும்.
முதல்வரான முதல் முறை கலைஞர் மாதிரி ஊழல் செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்தார். ஆனால் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்று தோன்றியது. கலைஞர் பேசாமல் இருந்திருந்தால் அடுத்த முறை அவர் தோற்றிருக்கலாம். கலைஞரின் அடுத்த தப்புக் கணக்கு அவரது அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தது. சிம்பதி அலை கிளம்பி அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். லஞ்சமும் வந்து விட்டது. இட ஒதுக்கீட்டை அதிகரித்து என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார். கலைஞருக்கு விட்ட சவாலில் ஜெயித்தாகிவிட்டது. நிர்வாகத்தில் பெரிதாக இண்டரஸ்ட் இல்லை. அவருக்கு சொந்தமான உலகம் சினிமாதான். என்ன செய்வது? ஒன்றுமே செய்யவில்லை. கட்சியை நடத்த, கட்சிக்காரர்களை ஒரு கட்டுக்குள் வைக்க, தேர்தலில் செலவழிக்க என்று ஊழல் பணம் வருகிறது. மிச்ச நேரத்தில் டிவி பார்த்துக்கொண்டும், கலைஞரை மட்டம் தட்டிக் கொண்டும், உசுப்பி விட்டுக் கொண்டும், சுப்பு+துரைமுருகன்+ரஹ்மான் கான் கூட்டணியை சட்ட மன்றத்தில் சமாளித்துக்கொண்டும் காலத்தை ஓட்டினார். மூன்றாவது ஆட்சி காலத்திலோ உடல் நலம் மிக மோசமாக இருந்தது. அவர் வெறும் பொம்மை என்று தோன்றியது.
அவரது மனோதிடம் அசாதாரணமானது. தொண்டையில் குண்டு பாய்ந்ததும் அவரது சினிமா வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியது. ஆனால் அதற்குப் பிறக்கும் பத்து வருஷம் வெற்றிகரமாக நடித்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கலைஞர் எம்ஜிஆருக்கு கொடுத்த டார்ச்சர் கொஞ்சநஞ்சம் இல்லை. உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் அவரே பணத்துக்கு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எப்படியோ சமாளித்து நின்றார். 87ல் உடல் நலம் சரி இல்லாமல் போன போதும் மீண்டும் கடுமையாக உழைத்து பேச ஆரம்பித்தார்.
அவரது இமேஜ் அவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தொப்பியும் கண்ணாடியும், படங்களில் எந்த வித கெட்ட குணமும் இல்லாத தட்டையான கதாபாத்திரமாக வருவதும், ரிக்ஷாக்கரார்களுக்கு ரெயின்கோட் வழங்குவதும், வள்ளல் என்று பேர் வாங்கியதும் brand buildingதான்.
அவர் ஒரு நல்ல சினிமாக்காரர். அசாத்தியமான மனோதிடம் கொண்டவர். தனது பிராண்டை வைத்து அரசியலில் வென்றார். ஆனால் அவருக்கு உண்மையில் அரசியலிலும் நிர்வாகத்திலும் அவ்வளவு உற்சாகம் இருந்ததில்லை. தமிழ் சினிமா உலகில் அவர் ஒரு மைல் கல். அவர் அரசியலில் வெற்றி அடைந்திருந்தாலும் அவர் தமிழ் நாட்டை பின்னடைய செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜனவரி 31, 2009 at 7:22 மு.பகல்
Your Analysis on MGR is very correct. Texas Instruments எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் தான் ஆஃபீஸ் ஆரம்பிப்பதாக இருந்தது. அதைத் தடுத்ததில் பெரும் பங்கு எம்.ஜி.ஆருக்கு உண்டு என் அப்பா சொல்லிக் கேடிருக்கேன். போங்கடா நீங்களும் உங்க ஊரும் என்று சொல்லிவிட்டு, பெங்களூருக்குவிற்கு வந்து விட்டார்களாம். அன்று TI மட்டும் சென்னையில் கிளை ஆரம்பித்திருந்தால் இன்று சென்னையல்லவோ நாட்டின் சிலிகான் பள்ளத்தாக்காக இருந்திருக்கும். இது உங்களுக்குத் தெரிந்ததை எழுத முடியுமா?
ஜனவரி 31, 2009 at 7:56 மு.பகல்
எதார்த்தமான நடை,நடு நிலையான் பார்வை.யார் மணமும் புண் படக்கூடாது என்ற தொனி.really good one.also give us about கலைஞர்.
ஜனவரி 31, 2009 at 7:11 பிற்பகல்
விஜயகுமார், தேனியார்,
மறுமொழிகளுக்கு நன்றி!
விஜயகுமார், டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் பற்றி கேள்விப்பட்டதில்லை. ஆனால் எம்ஜிஆர் இப்படி செய்திருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.
தேனியார், கலைஞரும் அஜெண்டாவில் உண்டு. கூடிய சீக்கிரம்.
பெப்ரவரி 5, 2009 at 4:30 பிற்பகல்
மிக நேர்மையான அலசல், தீர்கமான முடிவு நன்றி
பெப்ரவரி 6, 2009 at 1:09 மு.பகல்
நன்றி, ஸ்ரீவிக்னேஷ்!
ஜூலை 30, 2010 at 3:13 பிற்பகல்
இலங்கைக் கண்டியில் பிறந்ததனாலோ என்னவோ அவர் இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கு மிகப் பெரும் ஆதரவாளராக விளங்கினார். இந்திய அரசே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாத நேரத்திலும் எம்ஜியார் மிக வெளிப்படையாக அவர்களை ஆதரித்தார். அவர் முதலமைச்சராக இருந்த போது 1987 -ல் ஒரு முறை 15 கோடி ரூபாயை ஈழத் தமிழர்களின் உணவு, உடை, மருந்துச் செலவுக்காகக் கொடுத்தார்.
ஜூலை 30, 2010 at 10:20 பிற்பகல்
எம்ஜிஆரின் இலங்கை கனெக்ஷன் பற்றி எழுதியதற்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!
ஜூலை 30, 2010 at 11:35 பிற்பகல்
பிரபாகரன் வாழ்வும் மரணமும் – பா. ராகவன்
=================================================
பாலசிங்கம், மு.நித்தியானந்தம், கர்னல் சங்கர் ஆகியோர் அன்றைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாவரத்துக்குப் போனார்கள். வரவேற்றார். உட்காரச் சொல்லி அன்புடன் விசாரித்தார். எங்கே பிரபாகரன் என்று கேட்டார். ‘அவர் ஒரு பயிற்சி முகாமுக்கு அவசரமாகப் போயிருக்கிறார். அதனால் வர முடியவில்லை’ என்று பாலசிங்கம் சொல்லிச் சமாளித்தார்.
எம்.ஜி.ஆருக்கு ஏமாற்றம் தான். ஆனாலும் சமாளித்துக் கொண்டு பேசினார். என்ன நடகஈறது இலங்கையில் ? போராளிக் குழுக்கள் எத்தனை இயங்குகின்றன ? இந்தியா என்ன உதவி செய்கின்றது ? பயிற்சி அளிக்கிறதா ? பண உதவி செய்கிறதா ? இது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் எதுவும் சரிவரத் தெரிவதில்லை.
பாலசிங்கம் அனைத்தையும் பொறுமையுடன் விளக்கினார். இலங்கை அரசின் இனப் படுகொலைகள். கருப்பு ஜூலையில் நடைபெற்ற களேபரங்கள். போராளி இயக்கங்களுக்கு இந்திய உளவுத் துறை அளிக்கும் பயிற்சிகள். இருநூறு விடுதலைப் புலிகளுக்கு மட்டும் பயிற்சியில் கலந்து கொல்ல அனுமதி கிடைத்த விவரம். சொற்பமான பண உதவி. இந்திய அரசு எங்களை மட்டும் ஏன் ஓர வஞ்சனை செய்ய நினைக்கிறது என்று புரியவில்லை ஐயா.
ஓஹோ என்றார் எம்.ஜி.ஆர். ‘உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்’ என்று கேட்டார்.
ஒரு கணம் பாலசிங்கம் விழித்தார். அருகிலிருந்த கர்னல் சங்கர் சட்டென்று ‘நாங்கள் தமிழகத்தில் பயிற்சி முகாம் நடத்த விரும்புகிறோம். ஆயிரம் பேருக்காவது பயிற்சி அளிக்க நினைக்கிறோம். அதற்கு ஒரு கோடி செலவாகும். ஆயிரம் பேருக்குப் பிறகு ஆயுதங்கள் வாங்க இன்னும் ஒரு கோடி. உங்களால் இரண்டு கோடி ரூபாய் தந்து உதவ முடியுமா ?’
எம்.ஜி.ஆர். சிரித்தார். நாளைக்கு மாலை வாருங்கள் என்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தார்.
பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் மறுநாள் மாலை பாலசிங்கம் எம்.ஜி.ஆரைச் சந்திக்க மீண்டும் வந்தார். வந்ததும் எம்.ஜி.ஆர். அவர்களை லிஃப்டில் ஏற்றி பொத்தானை அழுத்தினார். மேல் மாடிக்குப் போகப் போகிறோம் என்று நினைத்தவர்களுக்கு வியப்பு. லிஃப்ட் கீழே, தரைத் தளத்துக்குக் கீழே போனது. நின்றதும், இறங்கி கதவைத் திறந்தாள் விசாலாமான ஒரு அறை. அறையெங்கும் பெட்டிகள். இரண்டு காவலாளிகள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். அவர்களிடம் இரண்டு விரல்களைக் காட்டி சைகை செய்தார். இரண்டு பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டன.
இரண்டு பெட்டிகளில் இரண்டு கோடி.
(இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்…..)
ஆகஸ்ட் 1, 2010 at 2:22 மு.பகல்
பா.ரா.வின் கட்டுரை சுவாரசியமாக ஆரம்பித்திருக்கிறது. நன்றி, ஸ்ரீனிவாஸ்!
ஆகஸ்ட் 1, 2010 at 4:43 மு.பகல்
பிரபாகரன் வாழ்வும் மரணமும் – பா. ராகவன்
=================================================
1984 -ம் ஆண்டு இரண்டு கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய விஷயம். இலங்கைப் போராளிக் குழுக்களைப் பொருத்தவரை, புலிகள் உள்பட – யாருமே வாழ்நாளில் முன்னெப்போதும் பார்த்திராத மாபெரும் தொகை. சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர். அந்தத் தொகையைத் தன் சொந்த சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்ததில் மலைத்துப் போனார் பிரபாகரன்.
இரவெல்லாம் கண் விழித்து உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள். அதனையும் நூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள். எண்ணி முடித்து எடுத்து வைத்தபோது விடிந்தே போயிருந்தது.
‘தம்பி நேரில் வராததில் முதல்வருக்கு வருத்தம்தான்’ பாலசிங்கம் சொன்னார்.
‘அவசியம் நேரில் பார்த்து நன்றி சொல்லத்தான் வேண்டும்’ என்றார் பிரபாகரன்.
அந்த வாரமே ஒரு நாள் குறிக்கப்பட்டது. ராமாவரம் வீட்டுக்குப் பிரபாகரனும் பாலசிங்கமும் நேரில் சென்று எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்கள். வரவேற்றார். உடகாரச் சொல்லி பேச ஆரம்பித்தார்.
தமிழகத்தில் இன்றைக்கு இலங்கை குறித்துப் பேசாத தலைவர்கள் யாருமில்லை. முதல் முதலில் அவர்களுக்கு உதவலாம், உதவ வேண்டும், உதவுவது நமது கடமை என்று கருதிச் செயல்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர் ஆரம்பித்து வைத்ததைத்தான் மற்றவர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். எம்.ஜி.ஆர். செய்தது வெறும் பண உதவி மட்டுமல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் ஒரு சிக்கலான ஒரு சூழலில் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த சமயம் அது. அப்போது எம்.ஜி.ஆர். நீட்டிய நேசக்கரம், அவர்கள் தன்னம்பிக்கை இழக்காதிருக்கப் பேருதவி புரிந்தது.
இந்திய உளவு அமைப்பான RAW அப்போது போராளிக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தது. எல்லாம் இந்திரா காந்தியின் ஏற்பாடு. டெலோ இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இருந்தது. ப்ளோட் இருந்தது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இலங்கைப் போராளி இயக்க இளைஞர்கள் வட இந்தியாவில் சில ரகசியப் பயிற்சி முகாம்களில் மும்முரமாகப் பயின்று கொண்டிருந்தார்கள். என்ன காரணத்தினாலோ, இந்தப் பயிற்சி முகாமில் பங்கு பெற முதலில் புலிகளை அழைக்கவில்லை. பிறகு, கடுமையாக முயற்சி செய்து, வாதாடித் தான் இடம் பெற முடிந்தது. ஆனால் சொற்பமான போராளிகளுக்கு மட்டுமே பயிற்சி தர முடியும் என்று சொல்லப்பட்டது.
இந்த ஓர வஞ்சனையில் மிகவும் மனம் நொறுங்கிப் போயிருந்தார் பிரபாகரன். என்னவாவது செய்து தமது போராளிகளுக்கு நல்ல பயிற்சி அளிக்க வேண்டும், தரமான ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்க்கு எம்.ஜி.ஆர். அளித்த பணம் ஒரு வரமாகவே தெரிந்தது.
உடனடியாக சென்னைக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் சில பயிற்சி முகாம்கள் நிறுவப்பட்டன. இலங்கையிலிருந்து பல விடுதலைப் புலிகள் தமிழகத்துக்கு வரவழைக்கப் பட்டு இந்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். மறுபுறம் நவீன ஆயுதங்களை வாங்குவதற்கான ஆலோசனைகள் பலமாக நடைபெற்றன,
பிரபாகரன், கே பியைக் கூப்பிடுங்கள் என்று சொன்னார்.
(இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்…..)
ஆகஸ்ட் 2, 2010 at 2:17 பிற்பகல்
பிரபாகரன் வாழ்வும் மரணமும் – பா. ராகவன்
=================================================
கேபி ஒரு உலகம் சுற்றும் வாலிபன். இன்றைக்குவரை அப்படிதான். அவரிடம் தாய்லாந்து குடியுரிமை இருப்பதாகச் சொல்வார்கள்.
எம்.ஜி.ஆர். கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை ஆயுதக் கொள்முதலுக்காகச் செலவிடுவது என்று முடிவு செய்து கேபியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னார் பிரபாகரன். அனேகமாக புலிகள் இயக்கத்துக்கென கேபி செய்த முதல் assignment அதுவாகத்தான் இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் பல நாடுகளில் தனக்கு உருவாகியிருந்த தொடர்புகளை வைத்து ஏராளமான நவீன ரகத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், கண்ணி வெடிகள், தகவல் தொடர்புக் கருவிகளை வாங்கி பத்திரமாகக் கப்பலேற்றி அனுப்பிவிட்டார் கேபி.
சென்னைத் துறைமுகத்துக்கு சரக்கு வந்து செர்ந்தபோத் பிரபாகரனுக்கு இன்னொரு சிக்கல் வந்தது. ஆயுந்தங்கள் வந்துவிட்டன. ஆனால் எப்படி எடுப்பது ?
(இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்…..)
ஆகஸ்ட் 3, 2010 at 12:33 மு.பகல்
பிரபாகரன் வாழ்வும் மரணமும் – பா. ராகவன்
===========================================
முன்னதாக உமா மகேஸ்வரன் இதே மாதிரி ஒரு ஆயுதக் கொள்முதல் செய்திருந்தார், அவருடைய பிளாட் இயக்கத்துக்காக. அதுவும் இதே மாதிரி சென்னைத் துறைமுகத்துக்கு வந்தபோது புலனாய்வு அதிகாரிகள் மோப்பம் பிடித்து விட்டார்கள். கோடிக்கணக்கான பணம். அசுர முயற்சி. ஒரு தவம் மாதிரி செய்து வரவழைத்த ஆயுதங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு, காணாமலாயின. உமா இடிந்தே போய் விட்டார்.
பிரபாகரன் யோசித்தார். முயற்சி செய்வது பெரிய விஷயமில்லை. அது சரியான பலனைத் தர வேண்டும். வேண்டியது கொஞ்சம் புத்திசாலித்தனம். உடனே பாலசிங்கத்தைக் கூப்பிட்டார்.
அண்ணை, நீங்கள் முதலமைச்சரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள். எதையும் மறைக்க வேண்டாம். நமது ஆயுதக் கப்பல் வந்திருக்கிறது. சேதாரமில்லாமல் நமக்குச் சரக்கு கிடைத்தாகவேண்டும். அவர்தான் உதவ வேண்டும். அவரால் மட்டும்தான் உதவ முடியும்.
எம்.ஜி.ஆருடனான அடுத்த சந்திப்பு அப்போது நடந்தது. இப்போதும் எம்.ஜி.ஆர்.தான் உதவினார். சற்றும் சலனமில்லை. பரபரப்பில்லை. ஒரு ஈ எறும்புக்கும் விஷயம் தெரியாது. ஒரே ஒரு ஃபோன் கால். யாருக்குச் செய்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆயுந்தங்கள் அனைத்தும் அலுங்காமல் குலுங்காமல் திருவான்மியூர் வீட்டுக்கு வந்து சேர்ந்தன.
–முற்றும்
ஆகஸ்ட் 10, 2010 at 2:54 பிற்பகல்
எம்.ஜி.ஆர் பற்றி பத்ரி சேஷாத்ரி கூறுகிறார்….
===============================================
எம்.ஜி.ஆர் ஒரு விசித்திர மனிதர். மேலோட்டமாகப் பார்க்கும்போது எனக்கு அவர் ஒரு கோமாளியாக மட்டுமே தெரிந்தார். நாகப்பட்டினத்தில் என் வீட்டுச் சுவரில் யாரோ ஒட்டிவிட்டுப் போயிருந்த எம்.ஜி.ஆர் போஸ்டர்களை நான் கிழித்து எறிய, அதனால் கடும் ஆவேசம் கொண்ட சில ரசிகர்களின் கெட்ட பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.
ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில் கருணாநிதி, கலியமூர்த்தி என்று இரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என் வகுப்பில் இருந்தனர். தினம் தினம் கலைஞர் கருணாநிதியையும் நடிகர் சிவாஜி கணேசனையும் திட்டித் தீர்ப்பதுதான் அவர்கள் வேலை. அவர்கள் இன்றும் எம்.ஜி.ஆரை வழிபடும் பக்தர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தமிழ்ச் சினிமாக்களில் எம்.ஜி.ஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.
தனிப்பட்ட முறையில் எந்த எம்.ஜி.ஆர் படத்தையும் முழுதாக உட்கார்ந்து என்னால் பார்க்க முடிந்ததில்லை. அவர் படங்கள் வேறு யாருக்காகவோ எடுக்கப்பட்டுள்ளன என்று விட்டுவிடுவேன்.
அரசியல் தளத்தில் எம்.ஜி.ஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார். திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்.ஜி.ஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது பெரும் ஆச்சரியம்தான்.
எம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்.ஜி.ஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.
என்றாவது, யாராவது ஒருவர் எம்.ஜி.ஆரின் நிர்வாகத் திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்.ஜி.ஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அது உண்மையா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு மக்கள் தலைவர் என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.
அவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் அவர் நிர்வாகத்துக்குச் சற்றும் லாயக்கற்றவர் என்பதைச் சிறிதும் உணராமல் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது. அவரது மறைவின்போது சென்னையில் நடந்த கலாட்டாக்களை நான் நேரில் பார்த்தேன். (அப்போது நான் சென்னை ஐஐடியில் படித்துக்கொண்டிருந்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் முட்டாள்தனமாக சுற்றினேன். பைத்தியம் பிடித்த ரசிகர்கள் யாராவது என்னை நையப் புடைத்திருக்கக்கூடும்! நல்லவேளையாக எந்தச் சேதாரமும் இன்றி ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டேன்!)
அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
வாத்யார் என்றாலே பொதுமக்களுக்கு அவர் ஒருவர்தான். (இந்தப் பெயர் ஏன் வந்தது?)
ஆகஸ்ட் 12, 2010 at 1:03 மு.பகல்
ஸ்ரீனிவாஸ், பத்ரியின் பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி!
பெப்ரவரி 28, 2011 at 5:30 பிற்பகல்
எம்ஜிஆர் ஒரு இயக்கம் மட்டுமல்ல ஒரு வித மயக்கம் எனக்கு மட்டுமல்ல எம்ஜிஆர் படங்கள் இன்றும் பாடங்களாகதான் பலருக்கும் தெரிகின்றன
இன்றும் நான் கல்லூரியில் உரை ஆற்றும்ரும்போது கூட அவரது பாடல்கள் உதவி புரிந்திருக்கின்றன நல்லதை பார்த்தவுடன் புரிவதற்க்கு அவருடைய தோற்றமும் செயலும் பெரிதும் துணை புரிந்திருக்கின்றன அவையனைத்தும் மிக கவனத்துடன் கையாளபட்டவை, ஒரு டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஒரு 100 பேருக்கு சாப்பாடு போட்டிருக்கலாம் அவரது சத்துணவு திட்டம் ஒரு தலைமுறைக்கு சாப்பாடு போட்டுவிட்டது என்பது உண்மை இப்பொழுது நடக்கும் அரசியல் நிலமைகளை பார்க்கும்போது அவருடிய ஆட்சி காலம் மிக சிறந்ததாகவே தெரிகிறது அதை பற்றி மிக விரிவாக பேசலாம்
மிகவும் பின் தங்கிய பகுதியில் பிறந்து வளர்ந்த என்னை போன்றவர்கள் பின்னாளில் IIT இல் படிபதர்க்கும் ஏபிஜெஏ KALAM உடன் பணி புரியும் நிலை அடைவதற்க்கும் தூண்டுகோலஆக எம்ஜிஆர் படங்கள் இருந்தன என்பது நான் கண்ட உண்மை
Prof