நான் புலிகளை எதிர்க்கிறேன். ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன். இப்போது எல்லா ஊடகங்களும் புலிகள் என்றால் தமிழர்கள், தமிழர்கள் என்றால் புலிகள் என்று பேசுவதால் குழம்பி இருக்கிறேன்.
83இல் நான் கல்லூரி மாணவன். என் கல்லூரியில் வந்து சேர்ந்த ஒரு இலங்கை மாணவனுக்கு முகத்தில் ஒரு வெட்டுக்காயம் இருக்கும். தான் நண்பர்கள் என்று நினைத்தவர்களே வெட்டியதாக ஒரு முறை சொன்னான். அப்போது தமிழ் நாட்டில் எல்லாருமே ஈழ ஆதரவாளர்கள்தான். கருத்து வேறுபாடு என்றால் இப்போதே இலங்கைக்கு படை அனுப்ப வேண்டுமா, இல்லை முதலில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா என்பதுதான். இந்தியா தலையிட வேண்டும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. காலேஜில் ஸ்ட்ரைக் எல்லாம் நடந்தது. அவ்வப்போது ஹாஸ்டலை மூடி எங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
85-86இல் பிரபாகரனை பற்றி கேள்விப்பட்டோம். சிரிசபாரத்தினம் அப்போதுதான் கொலை செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். நான் பகத் சிங் காந்தியை கொன்றிருந்தால் யாராவது பகத் சிங்கை கொண்டாடுவோமா என்று கேட்டேன். கிழக்கு பகுதியும் அப்போதுதான் கை விட்டு போனது என்று ஞாபகம். ஆனால் என் முக்கால்வாசி நண்பர்கள் நீ தமிழனா என்று கேட்டார்கள். நான் பதில் எல்லாம் சொல்லாமல் உங்களுக்கு அறிவிருக்கிறதா என்று கேட்டேன். அதுவும் என் “லங்கோட்டி யார்” நண்பன் ஒருவன் திராவிட கழக பாரம்பரியம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவன். இரவு பகலாக சண்டை போடுவோம். (இன்னும் லங்கோட்டி யார்தான்)
IPKF இலங்கைக்கு போயிருக்கக்கூடாது என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் என் காரணங்கள் வேறு – இது மிகவும் செலவு பிடிக்கும் வழி, புலிகள் வழிக்கு வர மாட்டார்கள் என்று நன்றாக தெரிந்த இலங்கை அரசு, அவர்களுடன் போராடும் உயிர் சேதத்தையும் செலவையும் நம் தலையில் கட்டிவிட்டார்கள் என்பதுதான். ஜாமீன் கையெழுத்து மாதிரி போட்டுவிட்டு மாட்டிக்கொண்டோமே, புலிகளை ராஜீவ் முட்டாள்தனமாய் நம்புகிறாரே, ஆப்பெடுத்த குரங்கு மாதிரி இந்தியாவின் நிலை ஆகி விடப்போகிறதே என்று பயப்பட்டேன். பயந்தது போலவே ஆனது.
ராஜீவ் கொலைக்கு பிறகு தமிழர்களின் நிலை மாறியது. ராஜீவை கொன்றது அறிவுள்ள தலைவன் செய்யும் வேலை இல்லை. தமிழ் நாட்டில் ஒரு turnaround வரும் என்பது கூட புலிகள் யாருக்குமே தெரியவில்லையா? ராஜீவாவது புரிந்து கொள்ளலாம். (ஒத்துக்கொள்ள முடியாது, புரிந்து கொள்ளலாம்.) அமிர்தலிங்கம் கொலை எதற்காக? சொந்த சகோதரர்களை தன் பலத்தை அதிகரிக்க மட்டுமே கொலை செய்யும் கயமைத்தனம்.
ஆனால் இன்று புலிகள் இல்லாமல் ஈழத் தமிழர்கள் இல்லை! பிரபாகரனை தவிர அத்தனை தலைவர்களும் பரலோகத்துக்கு அனுப்பிவிட்டார்கள். பிரபாகரன் இல்லாமல் ஈழத்தில் ஒரு சமாதானம் உண்டாக முடியாது. தனி நாடோ, இல்லை தமிழர்களுக்கு முழு உரிமையோ எதுவானாலும் பிரபாகரன் ஒத்துழைக்காமல் நடக்காது. பிரபாகரனை இலங்கை அரசு என்றைக்கும் நம்பப்போவதில்லை. நம்பும்படி ஒரு நாளும் பிரபாகரன் நடந்துகொள்ள வில்லை. பிரபாகரனும் இலங்கை அரசை என்றும் நம்பப்போவதில்லை. இலங்கை அரசும் அப்படி நடந்துகொள்ளவில்லை. அப்படி எதிர்காலத்தில் யாராவது புது இலங்கை தலைவர் நடந்துகொண்டாலும் பிரபாகரனிடம் ஒத்துழைப்பு கிடைக்காது. பிரபாகரனுக்கு ஒரு பிடி மண் எஞ்சினாலும் போதும், அந்த மண்ணுக்கு தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற நினைப்புதான்.
தமிழகத்தில் இன்று உணர்ச்சி வசப்பட்டு பேசும் எல்லாருக்கும் இதுதான் பிரச்சினை. பிரபாகரனிடம் குற்றம் கண்டுபிடிப்பது இலங்கை தமிழர்களை பலவீனப்படுத்தும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது தவறு என்று சொல்லமுடியாது. தமிழர்கள் அடிபடுகிறார்கள். திருப்பி அடிக்க பிரபாகரனை விட்டால் வேறு வழி இல்லை என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் புலிகள் அடங்கினால்தான் இலங்கையில் சமாதானம் வர கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
என்னதான் வழி? எனக்கு தெரியவில்லை. தெரிகிற சில:
1. இந்தியாவுக்கு வரும் இலங்கை அகதிகளை நன்றாக நடத்த வேண்டும். அவர்கள் சாப்பாட்டுக்கும், துணிக்கும், வழி இருக்க வேண்டும். அவர்கள் விருப்பபட்டால், அவர்களுக்கு எந்த தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லை என்று நிச்சயமாக தெரிந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் வாழ வழி இருக்க வேண்டும் (படிக்க ஸ்காலர்ஷிப், சுலபமான கடன் வசதி…)
2. இந்திய கடற்படை நடமாட்டம் கடலோரத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். மீனவர்கள் உயிர் அல்பம் இல்லை. மீன் பிடிக்கும் உரிமை சிங்கள கடற்பகுதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் புலிகளுக்கு உதவும் மீனவர்கள் எந்த தயவு தாட்சண்யமும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
3. பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். புலிகளுக்கு ஆதரவாக பேசுவதே குற்றம் என்ற நிலை மாற வேண்டும். தனி மனித சுதந்திரத்தை எந்த காரணம் கொண்டும் அடக்கக்கூடாது. ஆனால் பேச்சுக்கு மேல் போனால் இரும்புக் கரம் தேவை!
4. சும்மா நடிகர்கள் உண்ணாவிரதம் என்றெல்லாம் சினிமா காட்டாமல், உருப்படியாக ஏதாவது செய்யலாம் – நடிகர்கள், இயக்குனர்கள் தங்கள் அடுத்த பட சம்பளத்தில் ஒரு சதவிகிதம் அகதிகளுக்கு உதவியாக கொடுக்கலாம். நூறாவது நாள், ஐம்பதாவது நாள் வசூலை அகதிகளுக்கு கொடுக்கலாம். சண் டிவியும் கலைஞர் டிவியும் ஜெயா டிவியும், ஒரு மணி நேர விளம்பர வசூலை கொடுக்கலாம். இவர்கள் எல்லாம் ஒரு வேளை சாப்பிடாவிட்டால் என்ன ஆகிவிடும்?
5. நான், கார்கி மாதிரி சாதாரணர்கள் மாய்ந்து மாய்ந்து ப்ளாக் எழுதலாம். ஏதோ ஒரு அற்ப சந்தோஷம் – ஒரு லாபமும் இல்லை…
நவம்பர் 24, 2008 at 10:13 மு.பகல்
what is “லங்கோட்டி யார்” ?
December 23, 2008 at 3:31 மு.பகல்
Nakkeeran, “uyir nanban” would be a good translation – it literally means “loincloth-friend”
December 20, 2008 at 2:16 பிற்பகல்
your are correct .we are very late.
December 23, 2008 at 3:04 மு.பகல்
Thanks methu!
ஜனவரி 5, 2009 at 4:23 பிற்பகல்
வணக்கம் அண்ணன்….முதலில் உங்கள் கட்டுரை முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் ஆனால் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வேண்டாம். அதற்கு நிறைய விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும். வரலாறும் அதைப்பற்றிய புரிதலும் தெளிவும் வேண்டும். அணித்தரமாக நின்று பேசுவதற்கு தேவையான அறிவும், அதனுடன் இணைந்த துணிவும் வேண்டும். சிரிப்பு பகுதிக்கு துணுக்கு எழுதுவதுபோல் எதுவுமே இல்லாமல் எழுதி மற்றவர்கள் உங்களைப் பார்த்து நகைக்கும்படி பதிவுசெய்யாதீர்கள். பிறகு நான் ஒரு ஈழத்தமிழன். எங்கள் வாழ்க்கையும் அதன் வலியும், செவிவழியும், செய்தித்தாள் வழியும் கேட்டுத் தெரிந்து புரிந்துகொள்ளக் கூடியதல்ல. நீங்கள் புலிகளை எதிர்த்துக் குரல் கொடுங்கள் அது உங்கள் முடிவு. பேச்சுரிமை. எல்லோருக்கும் போராளிகளை பிடிக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்க முடியாது. சுகபோகத்தில் இருந்தால் அப்படித்தான் தோன்றும். மற்றவர்களின் வலி புரியாது. புலிகளை எதிர்க்கிறேன், ஈழத்தமிழர்களை ஆதரிக்கின்றேன் என்று அரசியல் வாதிபோல் பதிவுதராதீர்கள். எந்த சுயநலமில்லாத ஈழத்தமிழனும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தயவு செய்து முதலில் நிறைய நூல்கள் படியுங்கள். தொடர்ந்து அறிவுப்பூர்வமாய் எழுதுங்கள்… வாழ்த்துக்கள் அண்ணா.
ஜனவரி 5, 2009 at 5:10 பிற்பகல்
சு. சிவா,
என்னை அண்ணன் என்று சொல்லி என் வயதை குத்திக் காட்டுகிறீர்களே!
வெளியே நின்று பேசுபவர்களுக்கு ஈழத் தமிழர்களின் வலி புரியப் போவதில்லை என்பது மிகச் சரி. நெருப்பு எப்படி சுடும் என்று தொட்டவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் வெளியே நின்று யாருமே பேசக் கூடாது என்றால் ஈழத் தமிழர்களையும் சிங்களர்களையும் தவிர வேறு யாருமே – சீமான், நெடுமாறன், வைகோ, கலைஞர் போன்ற யாருமே – பேசக்கூடாது என்று ஆகிவிடும். அது சரி அல்ல, அதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள். அதனால் நீங்களும் நாம் பேசுவதை யாரும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்று அவநம்பிக்கை கொள்ளாமல் முடிந்தவரை விளக்கி பாருங்கள். நான் சொல்வது மடத்தனம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது – ஆனால் என்ன மடத்தனம் என்று நீங்கள் விளக்கினால்தானே புரியும்? முடிந்த வரை நாம் இருவரும் மற்றவரின் பார்வையில் என்ன தெரிகிறது என்று பார்க்க முயற்சிக்கலாம். முடியாத போது இதற்கு மேல் முடியாது என்று விலகி செல்லலாம். அதுதான் எனக்கு சரி என்று தோன்றுகிறது.
எனக்கு அறிவு போதுமா – முதலில் இருக்கிறதா – என்று எனக்கு தெரியாது. ஆனால் அடுத்தவர்கள் நகைப்பதை பொருட்படுத்தாமல் எனக்கு சரி என்று படுவதை சொல்லும் துணிவு நிச்சயமாக இருக்கிறது. மற்றபடி உங்கள் வாழ்த்துகளுக்கும், கடுமையான மாற்று கருத்துகளை நாகரீகமாக எடுத்து சொன்னதற்கும் நன்றி!
ஜனவரி 6, 2009 at 7:27 மு.பகல்
வணக்கம் அண்ணா…
எனது பதிவுக்கான உங்கள் மறுமொழிக்கு நன்றி. எனது முந்தய பதிவில் ஒரு சிறு திருத்தம் நிறைய நூல்கள் படியுங்கள். தொடர்ந்து அறிவுப்பூர்வமாய் எழுதுங்கள் என்று நான் குறிப்பிட்டது. எங்களைப் பற்றிய நூல்களையும், எங்கள் வாழ்வு தொடர்பான தெளிவான அறிவையும் தான். எனது கவணக்குறைவால் இங்கே அது தவறாகப் பதிவாகியுள்ளது. பண்பாடற்ற மனிதனின் கீழ்த்தரமான சொற்களாய் என்னையே அது உறுத்துகிறது. ஒரு சகோதரனின் கவணக்குறைவாக என்னையும் மன்னியுங்கள். பிறகு வெளியில் நின்று பேசக்கூடாது என்று நான் குறிப்பிடவில்லை. எங்கள் வாழ்வைப்பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் பேசும்போது காயப்படுத்துகிறது என்று என் வலியைச் சொல்கிறேன். ஒரு அரசியல்வதி தன் சுயநலத்திற்காய் அப்படி கதைக்கலாம். எங்கள் பெயரை முதலீடாக்கி உயரலாம். அரசியலைத் தொழிலாக கொண்ட சிலருக்கு நல்ல இலாபமும் கிடைக்கிறது. அவர்கள் அப்படித்தான் என்று எங்களுக்கும் தெரியும். நாங்கள் கண்டுகொள்வதும் இல்லை. அவர்கள் வார்த்தையில் பெரிதாய் காயப்படுவதும் இல்லை. உங்களைப் போன்ற பொதுமக்கள் கதைக்கும் போதுதான் அதிகமாய் காயப்படுகிறோம்.
ஜனவரி 6, 2009 at 7:44 மு.பகல்
சு. சிவா,
நீங்கள் தவறாக எதையும் சொல்லிவிடவில்லையே, ஏன் தேவை இல்லாமல் வருந்துகிறீர்கள்?
தெளிவான புரிதல் இல்லை என்று சொன்னீர்கள்; அதை உங்களை போன்றவர்கள்தான் சரி செய்ய வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று விவரியுங்களேன்! அது எங்களை போன்றவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
ஜனவரி 29, 2009 at 3:10 பிற்பகல்
Don’t abuse congress:congress poured “MILK” in the life of cinema actresses:
Maya,Ambika,Raadha,rekaa-ahaa “TAHDIYADI PROYOHAM” Mooppanarr seide”sadhanai,intha nadikaikallukku sanitari napkin kodutthathuthaan:
ஜனவரி 29, 2009 at 5:09 பிற்பகல்
K. Pathi,
I don’t understand this comment. What is the relevance of Maya, Ambika, Radha, Moopanar etc. to this post?
மார்ச் 30, 2009 at 2:14 பிற்பகல்
Hi Rv,
இது என்ன எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் புலிகளைப் பற்றி இப்படி எழுதுகிறீர்கள். I mean reference/source.
//புலிகள் அடங்கினால்தான் இலங்கையில் சமாதானம் வர கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.//
இதை இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்தி எழுதுங்கள்.
I find these are some false assumptions you have about LTTE.
மார்ச் 30, 2009 at 4:35 பிற்பகல்
ரதி,
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி!
இந்த பதிவில் இருப்பவை முக்கால்வாசி என் கருத்துகள். These are opinions, not facts. கருத்துகளுக்கு ஆதாரங்கள் எப்படி தருவது என்று விளங்கவில்லை. என் இப்படி நினைக்கிறேன் என்று வேண்டுமானால் விளக்க முயற்சிக்கிறேன்.
85-86-இலிருந்தே சக போராளிகள் புலிகளால் கொல்லப் படுவது தெரிந்த விஷயமே. இதற்கு ஆதாரம் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். சிரி சபா ரத்னம், உமா மகேஸ்வரன், பத்மநாபா, அமிர்தலிங்கம் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருப்பது தெரிந்த விஷயம்தான். ஒவ்வொரு கொலையும் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது. ஒரு காலத்தில் கிழக்கு பகுதி நம் கண்ட்ரோலில் இருந்தது. இன்று? முல்லைத் தீவு கூட நாளை இருக்குமா என்று தெரியவில்லை. ராஜீவின் கொலை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஒரு எதிர்ப்பை உருவாக்கி இருப்பது உங்களுக்கு தெரியாமல் இருக்காது. அந்த கொலை மட்டும் இல்லை என்றால் இன்று இந்தியாவில் யாரும் – குறைந்த பட்சம் தமிழகத்தில் காங்கிரஸ் உட்பட்ட எந்த கட்சியும் புலிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலை இருக்காது. சிரி சபா ரத்னத்தை நினைவில் வைத்திருக்கும் யாராவது கத்தலாம், ஆனால் அவர்கள் குரல் மிக பலவீனமாக இருந்திருக்கும். தமிழர்கள் நிலை மோசமானாலும் பரவாயில்லை, இயக்கத்தின் பலம், ஆதரவு குறைந்தாலும் பரவாயில்லை, தான் மட்டுமே தமிழர்களின் குரல் என்று இருந்தால் போதும் என்று பிரபாகரன் நினைப்பது தெளிவு. இப்படிப்பட்டவரை ஃபாஸிஸ்த் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?
// /புலிகள் அடங்கினால்தான் இலங்கையில் சமாதானம் வர கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.//
இதை இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்தி எழுதுங்கள். //
இலங்கை அரசும் பிரபாகரன் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பப் போவதில்லை. பிரபாகரனும் இலங்கை அரசு கொடுக்கும் எந்த வாக்குறுதியையும் நம்பப் போவதில்லை. போர் எப்படி நிற்கும்?
புலிகளுக்கு இலங்கை அரசை அடக்கும் அளவுக்கு பலம் இல்லை என்று நான் நினைக்கிறேன். புலிகள் அடங்கினால் இந்தியா, நார்வே உள்ளிட்ட பல நாடுகள் தமிழர்களுக்கு காரன்டிகள் கொடுக்குமாறு வற்புறுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. வாய்ப்புகள், செய்யலாம், நடக்கலாம் போன்ற வார்த்தைகள் எந்த ஈழத் தமிழனுக்கும் நம்பிக்கை தரப் போவதில்லை. இது மிக மோசமான, கசப்பான விஷயம்தான். ஆனால் இதுதான் ப்ராக்டிகல் என்று எனக்கு தோன்றுகிறது.
இந்தியா இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்வதை நான் கடுமையாக எதிர்க்கிறேன், இந்தியாவும், தமிழ் நாடும் இலங்கையிலிருந்து வருபவர்களை சரியாக நடத்தவில்லை, இந்த நிலை உடனடியாக மாற வேண்டும் என்பதையும் சொல்லி விடுகிறேன். நீங்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது அல்லவா?
April 13, 2009 at 10:24 பிற்பகல்
RV,
இது நீங்கள் எழுதும் கட்டுரையோ என்று நினைத்துதான் ஆதாரம் கேட்டேன். இது உங்கள் கருத்துகள் என்று புரியவைத்ததற்கு நன்றி. நீங்கள் உங்கள் கருத்துகளை தாரளமாக எழுதுங்கள்.ஆனால், புலிகள் பற்றி கொஞ்சம் உண்மையையும் தெரிந்து கொண்டு எழுதுங்கள்.
புலிகளோ அல்லது அவர்களின் தலைவர் பிரபாகரனோ தாங்கள் மட்டும் தான் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்ற உங்கள் கூற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. வேறு எந்த இயக்கமும் தங்களை ஈழவிடுதலைக்காக உண்மையாக அர்ப்பணித்ததில்லை. பல பேர் சிங்கள அரசுக்கு விலை போனதுதான் உண்மை. ஈழத்திலும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி, ஈழத்தமிழர்கள் புலிகள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை தான் விருபம்புகிறார்கள். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
//சிரி சபா ரத்னம், உமா மகேஸ்வரன், பத்மநாபா, அமிர்தலிங்கம் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருப்பது தெரிந்த விஷயம்தான்.//
நீங்கள் சொல்லும் இவர்கள் எல்லாம் அடக்கப்பட, ஒடுக்கப்பட்ட தமிழனுக்ககாக போராடியதை விட தங்கள் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கைக்காக ஈழவிடுதலை என்ற கருத்தை பயன்படுத்தியதுதான் உண்மை.
புலிகள் ராஜீவ்காந்தியை கொன்றார்கள் என்பதை நான் நம்பவில்லை. இந்தியாவில் இந்திராகாந்தியால் வளர்க்கப்பட்ட புலிகளை RAW போன்ற அமைப்புகள் ஒழித்துக்கட்ட வேண்டும் நினைத்தது தான் உண்மை. அதற்காக அவர்கள் எத்தனையோ முயற்சிகள் செய்தது பற்றியும் படித்திருக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு பிடிக்காத ஒரு உடன்படிக்கையை ராஜீவ்காந்தி இலங்கை அரசுடன் செய்ததையும் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதையும் சேர்த்து, புலிகள் மீது பழியைப்போட்டு வேறு யாரோ தப்ப நினைக்கிறார்களோ என்பது என் கருத்து. என் கருத்தை மேலும் வலுவடையச்செய்தது அண்மையில் நான் குமுதம் இணையத்தில் பார்த்த திருச்சி வேலுச்சாமி என்பவரின் பேட்டிதான்.
என்னுடைய இன்னுமொரு கருத்து என்னவென்றால், இந்தியாவில் எந்த தலைவர், எந்த ஆட்சி இருந்தாலும் யாரும் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி, தனிநாடு, தமிழ்த்தேசியம் என்ற கருத்தை ஏற்கவே மாட்டார்கள். காரணம், இதை ஆதரித்தால் இந்தியா பிரிந்து விடுமோ என்ற எண்ணமாக இருக்கலாம்.
ஆனால், நாம் தொடர்ந்தும் சிங்கள ஆட்சியின் கீழ் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு விடுவோம். இதனை எதிர்த்து போராடும் துணிவும் அர்ப்பணிப்பும் புலிகளை தவிர யாருக்கும் இருந்ததில்லை.
புலிகளை யார் விமர்சித்தாலும், அவர்கள் பற்றி எந்த முடிவெடுக்கும் உரிமையும் ஈழத்தமிழர்களை தவிர வேறு யாருக்கும் இல்லை. புலிகள் வேறு மக்கள் வேறல்ல. புலிகள் என்பவர்கள் ஒவ்வொரு ஈழத்தமிழனின் உடன் பிறப்புகள், சகோதர, சகோதரிகள். அவர்கள் பறிக்கப்பட்ட எங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்கள். விடுதலைப்போராகளிகள்.
April 13, 2009 at 11:15 பிற்பகல்
ரதி,
உங்கள் வருகை மகிழ்ச்சியை தருகிறது.
// ுலிகளோ அல்லது அவர்களின் தலைவர் பிரபாகரனோ தாங்கள் மட்டும் தான் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்ற உங்கள் கூற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. வேறு எந்த இயக்கமும் தங்களை ஈழவிடுதலைக்காக உண்மையாக அர்ப்பணித்ததில்லை. பல பேர் சிங்கள அரசுக்கு விலை போனதுதான் உண்மை. ஈழத்திலும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி, ஈழத்தமிழர்கள் புலிகள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை தான் விருபம்புகிறார்கள். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.//
புலிகள் மற்ற தலைவர்கள் அனைவரையும் ஒழித்துவிட்டார்கள் என்ற கருத்துடனாவது உடன்படுகிறீர்களா? நான் பதிவில் எழுதிய மாதிரி இன்று ஈழத் தமிழர்களுக்கு போராடும் எந்த சக்தியை புலிகள் உயிருடன் விட்டு வைத்திருக்கிறார்கள்? தமிழர்களுக்கு என்ன சாய்ஸ் இருக்கிறது?
// நீங்கள் சொல்லும் இவர்கள் எல்லாம் அடக்கப்பட, ஒடுக்கப்பட்ட தமிழனுக்ககாக போராடியதை விட தங்கள் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கைக்காக ஈழவிடுதலை என்ற கருத்தை பயன்படுத்தியதுதான் உண்மை. //
அவர்கள் தனிப்பட்ட முறையில் எப்படிப்பட்டவர்களாக இருந்தால் என்ன? அவர்கள் கொலை தமிழர்களை பலவீனப்படுத்தியது என்பதல்லவா முக்கியம்? இருபது வருஷங்களுக்கு முன் தமிழர்களின் கண்ட்ரோலில் எவ்வளவு நிலம் இருந்தது? இன்றைக்கு?
// புலிகள் ராஜீவ்காந்தியை கொன்றார்கள் என்பதை நான் நம்பவில்லை. //
இதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சிவராசனும், தனுவும் புலிகளை இல்லையா? சரி பிரபாகரனோ பாலசிங்கமோ யாரோ “ராஜிவ் கொலை ஒரு ட்ராஜெடி” என்று இலைமறைகாயாக சொல்லவில்லையா? இது வரை எப்போதாவது பிரபாகரனோ, பாலசிங்கமோ யாராவது ராஜீவ் கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுத்திருக்கிரார்களா? இந்தியாவில் புலிகள் எதிர்ப்பு என்பது ராஜீவ் கொலையை முக்கிய காரணமாக கொண்டது. நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம், ஒரு திறமையான தலைவன் இப்படி ஒரு “பொய்க் குற்றச்சாட்டால்” தன் இயக்கத்துக்கு ஆதரவு அழிவதையும் எதிர்ப்பு வளர்வதையும் கண்டாவது கூரை மேல் ஏறி கத்த வேண்டாமா? உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
// இந்தியாவில் எந்த தலைவர், எந்த ஆட்சி இருந்தாலும் யாரும் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி, தனிநாடு, தமிழ்த்தேசியம் என்ற கருத்தை ஏற்கவே மாட்டார்கள். காரணம், இதை ஆதரித்தால் இந்தியா பிரிந்து விடுமோ என்ற எண்ணமாக இருக்கலாம். //
இருக்கலாம். பங்களாதேஷை பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஆனால் காஷ்மீரைப் பார்த்தல் நீங்கள் சொல்வது சரியோ என்று தோன்றுகிறது.
// ுலிகளை யார் விமர்சித்தாலும், அவர்கள் பற்றி எந்த முடிவெடுக்கும் உரிமையும் ஈழத்தமிழர்களை தவிர வேறு யாருக்கும் இல்லை. புலிகள் வேறு மக்கள் வேறல்ல. புலிகள் என்பவர்கள் ஒவ்வொரு ஈழத்தமிழனின் உடன் பிறப்புகள், சகோதர, சகோதரிகள். அவர்கள் பறிக்கப்பட்ட எங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்கள். விடுதலைப்போராகளிகள். //
புலிகள் ஈழ்த் தமிழர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு குறுகிய தளத்தில் இயங்கவில்லை. அவர்களுக்கு ஆதரவு – இந்தியா, தமிழ் நாடு, நார்வே, புலம் பெயர்ந்த தமிழர்கள் குடியேறியுள்ள நாடுகள் – ஆகியவற்றிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தேவைப்படுகிறது. ஆதரவு வேண்டும், ஆனால் என்னை பற்றி எந்த முடிவும் எடுக்க நீ யார் என்று கேட்பது ப்ராக்டிகலாக இல்லை.
இலங்கை அரசை அடக்கும் பலம் புலிகளுக்கு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தில் இதற்கு முடிவுதான் என்ன?
April 18, 2009 at 3:32 பிற்பகல்
RV,
ஒரு விடயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். ஒர் ஈழத்தமிழராக என்னை யாராவது பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்றால் அது தமிழீழ விடுதலைப்புலிகள் தான்.
//அவர்கள் கொலை தமிழர்களை பலவீனப்படுத்தியது என்பதல்லவா முக்கியம்//
ஆரம்பத்தில் இருந்து சுருக்கமாக சொல்கிறேன். ஈழவிடுதலைப்போராட்டத்தின் (தரப்படுதலின் பின்பு) ஆரம்ப காலங்களில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், அமெரிக்காவுக்கு இலங்கையிலுள்ள திருகோணமலை துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று பேராசை இருந்தது. இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒர் பனிப்போர் இருந்த காலம். இந்திரா காந்தி, இலங்கை அரசு எங்கே அந்த இயற்கை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரை வார்த்துவிட்டால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடுமென்று கருதி ஈழப்பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தார். இலங்கை அரசுக்கு தலையிடி கொடுக்க ஈழத்தில் விடுதலை இயக்கங்களை வளர்த்து விட நினைத்தார். ஈழவிடுதலை இயக்கங்களை பிராந்திய ரவுடிகளாக வளர்த்து விட்டால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு, குறிப்பாக அமெரிக்காவின் துறைமுக கனவுக்கு, அது ஒரு தடையாக இருக்கும் என்று நினைத்திருப்பார் போலும். இதில் தான் அவர் கணக்கு பிழைத்து விட்டது. இந்தியா சொன்ன எல்லா விடயங்களுக்கும் மற்றைய விடுதலை இயக்கங்கள் தலையாட்டி பொம்மைகளாக இருக்க புலிகள் மட்டும் தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். அவர்களின் இலட்சியம் ஈழவிடுதலை என்பதாக மட்டும் இருந்தது. இதில் என் கருத்து என்னவென்றால் இந்தியாவின் பிராந்திய வல்லரசு கனவுக்கு ஈழவிடுதலை இயக்கங்கள் பிராந்திய ரவுடிகளாக இருக்க வேண்டுமா என்பதுதான்?
இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு,ராஜீவ்காந்தியின் காலத்தில் அவர் தான் என்னவோ ஈழப்பிரச்சனையை தீர்த்து பெயர் எடுக்க வேண்டுமென்று நினைத்தார் போலும். பிரச்சனை ஈழத்தமிழர்களுக்கும் இலங்கை ஆளும் இனவெறி அரசுக்கும். ஆனால், ராஜீவ்காந்தி இனவெறி பிடித்த ஜெயவர்த்தனாவுடன் தான் ஒரு உடன்படிக்கையை போட்டார். அதன் பிரகாரம் புலிகளை ஆயுதங்களை களையவைத்தார். அவர்களிடமிருந்து வாங்கிய ஆயுதங்களை நீங்கள் மிகவும் ஆராதிக்கும் மற்றைய இயக்கங்களுக்கு கொடுத்து புலிகளை தீர்த்துக்கட்ட நினைத்தார். ஆனால் புலிகள் முந்திக்கொண்டார்கள். நீங்கள் வக்காலத்து வாங்கும் மற்றைய இயக்கங்களின் தலைவர்கள் இருந்திருந்தால் எங்களை எப்பவோ இனவெறி அரசுக்கு வித்திருப்பார்கள். அதுதான் உண்மை.
எனக்கு ஈழவிடுதலையை பற்றி அவ்வளவாக விவரம் தெரியாத வயது என்றாலும் அந்த நாள் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. 1987 August, 4 எங்கள் தேசியத்தலைவர் சுதுமலை என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார். அதில் அவர் சொன்ன இரண்டு விடயங்கள், ஒன்று இனிமேல் ஈழத்தமிழர்களை சிங்கள இனவெறி அரசிடமிருந்து பாதுகாப்பது இந்திய அரசின் பொறுப்பு (ஆயுதங்களை களைந்த பின்). மற்றது, தான் ஒரு போதும் எந்த தேர்தலிலோ அல்லது எந்த பதவிக்காகவோ போட்டியிட மாட்டேன் என்பது. தான் இறுதிவரை ஈழவிடுதலைக்காக மட்டுமே போராடுவேன் என்பதுதான்.
இப்படியாக யாருக்கும் விலைபோகாத புலிகளை தீர்த்துக்கட்ட அவர்களுக்கும் மற்றைய இயக்கங்களுக்கும் இடையே சகோதர சண்டையை மூட்டி விட்டதில் இந்திய உளவுத்துறைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. புலிகளை நிராயுதபாணிகளாக்கி, மற்றைய இயக்கங்களை அவர்களுக்கு எதிராக ஏவிவிட்டு ஈழவிடுதலையை நசுக்க முனைந்ததற்கு பெயர்தான் “Indo-Sri Lanka Accord”.
இந்த ஒரு ஒப்பந்தத்தால் இந்திய ராணுவத்தால் தெருநாய்களை விட கேவலமாக சொந்த மண்ணிலேயே எம்மினம் கொலை செய்யப்பட்டதையும் தாங்கமுடியாத சித்திரவதைகளை அனுபவித்ததையும் அதன் ரணங்களையும் இன்னும் அடுத்த நூறு வருடங்களுக்கேனும் எம்மினம் மறக்காது. இன்றும் ஈழத்தமிழனத்தை அழிக்க இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களும் ஆளணிகளும் வழங்க கூறும் காரணம், நாங்கள் கொடுக்காவிட்டால் பாகிஸ்தானும் சீனாவும் கொடுக்கும் அது இந்திய தேசியபாதுப்புக்கு நல்லதல்ல. ஆக, இந்தியாவின் தேசியபாதுகாப்புக்காக ஈழத்தமிழனம் அழியலாம் என்கிறார்களா இந்திய ஆட்சியாளர்கள்?
//இலங்கை அரசை அடக்கும் பலம் புலிகளுக்கு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தில் இதற்கு முடிவுதான் என்ன?//
முடிவு: இலங்கை அரசை அடக்கும் பலம் புலிகளுக்கு இருக்கிறது. அதை அவர்கள் பல களச்சமர்களில் நிரூபித்திருக்கிறார்கள். இந்தியா ஆயுத மற்றும் ஆளணி உதவிகளை இலங்கை இனவெறி அரசுக்கு தாரளமாக அள்ளி வழங்காதவரை புலிகளால் இலங்கை இனவெறி அரசை அடக்க முடியும் என்பது என் நம்பிக்கை. அது தவிர ஒவ்வொரு ஈழத்தமிழனின் மற்றும் தமிழ்நாட்டு தமிழனின் முயற்சியில் இருக்கிறது எங்கள் வேதனைகளுக்கு முடிவு. இந்தியாவோ, இலங்கை இனவாத அரசுகளோ தங்கதாம்பாளத்தில் வைத்து ஈழவிடுதலையை கொடுக்க மாட்டார்கள். உங்களைப்போன்றவர்கள் உங்கள் அரசுக்கு எழுதுங்கள். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா என்ன செய்யவேண்டுமென்று உங்கள் கருத்தை தெரிவியுங்கள். நீங்கள் புலிகளுக்கு எதிரா? போகட்டும். அப்பாவி ஈழத்தமிழனை கொல்ல ஆயுதம் கொடுக்க வேண்டாமென்று உங்கள் அரசுக்கு சொலுங்கள். அவர்கள் உடனே கேட்க மாட்டார்கள். மீண்டும் மீண்டும் சொலுங்கள். கேட்கும் வரை.
அறுபது வருடங்களாக போராடும் என் இனம் இன்னும் நம்பிக்கை இழக்காமல் போராடிக்கொண்டுதான் இருக்கிறது. என்றாவது ஒரு நாள் ஈழத்தமிழனும் குண்டுச்சத்தங்கள் கேட்காத ஒரு மெளனவெளியில் உயிர்ப்பயமின்றி நடமாட, பள்ளி செல்ல, நிம்மதியாக உறங்கி எழ, எங்கள் வீதிகளில் ஓடிவிளையாட, இந்த உலகங்கத்திலுள்ள மற்ற இனத்தவரைப் போல் சுதந்திரத்தின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க தன்வரையில் உலகத்து வீதிகளில் எல்லாம் இறங்கி இன்றும் போராடிக்கொண்டுதான் இருக்கிறான். எங்களுக்கும் ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நாங்கள் இன்னும் இழக்கவில்லை.
April 18, 2009 at 7:56 பிற்பகல்
ரதி,
உங்கள் வருகை எப்போதும் போல மகிழ்ச்சியாக இருக்கிறது.
// ஒர் ஈழத்தமிழராக என்னை யாராவது பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்றால் அது தமிழீழ விடுதலைப்புலிகள் தான்.//
இது தவறென்று என்னால் என்ன, யாராலும் சொல்ல முடியாது. சொந்த அனுபவங்கள் உங்கள் கருத்தை உறுதிப்படுத்தி இருப்பது ஆச்சரியம் இல்லை. எனக்கு புலிகளை பற்றி வேறு அபிப்ராயம் இருப்பதும் உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் – அந்த அபிப்ராயம் உங்களுக்கு சரியாக படாவிட்டாலும் கூட.
இந்தியாவை பற்றி, குறிப்பாக இந்திரா காலம் பற்றி, ஏறக்குறைய நீங்கள் எழுதி இருக்கும்படிதான் நானும் நினைக்கிறேன். தனக்கு என்ன ஆதாயம் என்று இந்தியா/இந்திரா யோசித்தது ஆச்சரியம் இல்லை என்றாலும் 20 வருஷங்களுக்கு முன்னால் அநேக தமிழர்களைப் போல உண்மையான அக்கறையுடன்தான் இந்தியா/இந்திரா நடந்து கொள்வார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த கணக்கு தவறானது தமிழர்களின், தமிழர் தலைவர்களான எம்ஜிஆர், கலைஞர் ஆகியோரின் தோல்விதான். எம்ஜிஆரும், கலைஞரும் கூட அப்போது தனக்கு பேர் வருமா என்றுதான் யோசித்திருக்கிறார்கள் – ஆனால் அது அப்போது புரியவில்லை.
// ராஜீவ்காந்தியின் காலத்தில் அவர் தான் என்னவோ ஈழப்பிரச்சனையை தீர்த்து பெயர் எடுக்க வேண்டுமென்று நினைத்தார் போலும். //
எனக்கு அந்த ஒப்பந்தம் நல்ல நோக்கங்களுடன் போடப்பட்டது, நிறைவேறி இருந்தால் தமிழர் கஷ்டம் குறைந்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அடுத்தவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவது மிக அபாயமானது. புலிகளை, அவர்கள் பிடிவாதத்தை, – என் கண்களில் அவர்களது நான் மட்டும்தான் பிரதிநிதி என்ற எண்ணத்தை – ராஜீவ் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். ஜெயவர்த்தனேவின் அனுபவம், புத்தி அங்கே ராஜீவை மிக சுலபமாக வென்றுவிட்டது. ஆனால் இந்திய ராணுவம் அத்து மீறியது, ஆப்பெடுத்த குரங்கு போல இந்தியா சிக்கிக் கொண்டது என்பது எல்லாம் உண்மைதான் – எல்லா ராணுவமும் அப்படித்தான் என்றாலும் கூட. புலிகளும் உத்தமர்கள் அல்ல என்பதை மட்டும் நினைவுபடுத்துகிறேன்.
// இலங்கை அரசை அடக்கும் பலம் புலிகளுக்கு இருக்கிறது. //
எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. 20 வருஷங்களாக நம் கண்ட்ரோலில் உள்ள நிலம் குறைந்துகொண்டுதான் வருகிறது. இந்தியா, சீனா, இதர நாடுகள் செய்யும் உதவி இந்த தோல்விக்கு முக்கிய காரணம் இல்லை என்பது என் கருத்து. அதே நேரத்தில் முக்கிய காரணமோ இல்லையோ, இந்தியா இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்பது என் உறுதியான கருத்து. புலிகளைப் பற்றி எனக்கு என்ன அபிப்ராயம் என்பது இங்கே ஒரு பொருட்டே இல்லை. பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த விஷயத்தில் நாம் ஒன்றாக சிந்திக்கிறோம்.
// எங்களுக்கும் ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நாங்கள் இன்னும் இழக்கவில்லை. //
விடியும், விடிந்தே ஆக வேண்டும்.
நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ரதி?
April 19, 2009 at 3:33 பிற்பகல்
RV,
//உங்கள் வருகை எப்போதும் போல மகிழ்ச்சியாக இருக்கிறது.//
மிகவும் சந்தோசம். நன்றி.
//எல்லா ராணுவமும் அப்படித்தான் என்றாலும் கூட. புலிகளும் உத்தமர்கள் அல்ல என்பதை மட்டும் நினைவுபடுத்துகிறேன்//
என் பார்வையில் நீங்கள் புலிகளையும் இராணுவத்தையும் ஒப்பிடுகிறீர்களோ என்று தோன்றுகிறது. உங்களுக்கு இராணுவம் என்றால் புத்தக அறிவு மட்டும் தான் போலுள்ளது. ஆனால், இலங்கை, இந்திய ராணுவத்திடம் பலி ஆடுகளாய் மாட்டிய, மாட்டிக்கொண்டிருக்கிற ஈழத்தமிழர்களை கேட்டுப்பாருங்கள் அவர்கள் சொல்வார்கள் ராணுவத்தின் கொடூரமான நிஜத்தை. எல்லா ராணுவமும் அப்படித்தான் என்று உங்களால் வேண்டுமானால் சுலபமாக சொல்ல முடியலாம். பாத்க்கப்படுகிற எங்களுக்குத்தான் தெரியும் அதன் வலியும் ரணமும் எவ்வளவு கொடுமையானது என்று.
ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தெரியும் புலிகள் உத்தமர்கள் என்று. அவர்கள் இயக்கம் எவ்வளவு கட்டுக்கோப்பானது, புலிகள் ஒழுக்கசீலர்கள் என்பதும் உலகறிந்த விடயம். ராணுவ சிப்பாய்களில் கூட நல்லவர்கள் இருக்கலாம். ஆனால், பெரும்பாலானவர்கள் காடையர்கள் நாகரீகமற்றவர்கள். இதற்கு ஒன்றல்ல ஓராயிரம் உதாரணங்கள் ஈழத்திலிருந்தும் உலக வரலாற்றில் இருந்தும் என்னால் காட்ட முடிய்ம். நீங்கள் ராஜீவ்காந்தியின் கொலைக்கு புலிகள் தான் காரணம் என்ற கோணத்தில் மட்டும் தான் புலிகளைப் பார்க்கிறீர்களோ என்று எனக்கு தோன்றுகிறது. அதற்காக நீங்கள் புலிகள் மீது எவ்வளவு வெறுப்பை வேண்டுமானாலும் காட்டுங்கள். அவர்களைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுங்கள். அது உங்கள் கருத்து சுதந்திரம். ஆனால் உண்மையின் மறுபக்கத்தையும் தெரிந்து கொண்டு எழுதுங்கள்.
//நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ரதி?//
இதற்கான பதிலை சொல்கிறேன். ஆனால், உங்கள் கேள்விக்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சொல்லுவீர்களா?
April 19, 2009 at 4:09 பிற்பகல்
// /நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ரதி?//
இதற்கான பதிலை சொல்கிறேன். ஆனால், உங்கள் கேள்விக்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சொல்லுவீர்களா? //
இதுக்கெல்லாம் என்னங்க காரணம்? எங்கேயாவது பக்கத்தில் வசிக்கிறீர்கள் என்றால் (சான் ஃப்ரான்சிஸ்கோ பே ஏரியா) நேரில் பேசலாமே என்றுதான். ஏன் இப்படி சந்தேகத்தோடவே எல்லாத்தையும் பாக்கறீங்க? சாதாரணமான கேள்விங்க!
April 19, 2009 at 4:19 பிற்பகல்
RV,
நான் கனடாவில் வசிக்கிறேன்.நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்களா?
April 20, 2009 at 3:51 மு.பகல்
ஆம், நான் சான் ஃப்ரான்சிஸ்கோ அருகே வசிக்கிறேன்.
ஆகஸ்ட் 26, 2009 at 7:10 பிற்பகல்
Tamilnadu people should go to Srilanka and make Tamizh Eezham possible.