ரொம்ப நாட்களாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆசை. யார் யாரோ சொல்லி இருக்கிறார்கள், எனக்கு இப்போது யார் யார் சொன்னார்கள் என்று கூட சரியாக நினைவில்லை. க.நா. சுப்பிரமணியம் எழுதியது. முதல் பதிப்பு 1946இல் வெளி வந்தது. ஜெயமோகனின் டாப் டென் லிஸ்டில் இதற்கு ஆறாம் இடம். என்னுடைய டாப் டென் லிஸ்டில் இடம் பெறாது. ஆனால் நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று.
எனக்கு ஒரு முட்டாள்தனமான பழக்கம். சில புஸ்தகங்கள் எனது ரசனைக்கு ஒத்து வரும் என்று தெரியும். ஆனால் அதை படிக்க சரியான நேரம் வர வேண்டும் என்று காத்திருப்பேன். என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி படிக்க வேண்டும் என்றும் வேலை டென்ஷன் இருந்தால் படிக்க முடியாது என்றெல்லாம் சில எண்ணங்கள் உண்டு. இந்த சரியான நேரம் எப்போது வரும் என்று எனக்கு தெரியாது. விஷ்ணுபுரம் வாங்கி 4 வருஷம் கழித்துத்தான் படித்தேன். பொய்த்தேவு எப்போது வாங்கினேன் என்று கூட தெரியாது, இரண்டு காப்பிகள் இருந்தன. (ஆனால் காலச்சுவடு அருமையாக பதிப்பித்திருக்கிறது) ஆனால் சில புத்தகங்களை திருப்பி திருப்பி படிப்பேன் – ஹாரி பாட்டர், டிக் ஃப்ரான்சிஸ் எழுதிய சில த்ரில்லர்கள், சில கணேஷ்-வசந்த் கதைகள். அவற்றில் உள்ள சுவை எனக்கு குறைவதே இல்லை.
இரண்டு வாரம் முன்னால்தான் முதல் முப்பது நாற்பது பக்கம் படித்தேன். உடனே தெரிந்துவிட்டது, இது ஒரு அருமையான புத்தகம் என்றும், படிக்க சுலபமான புத்தகம் என்றும். (விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் இரண்டும் சுலபமான புத்தகங்கள் அல்ல) சுலபமான புத்தகம் என்றால் மிக விரைவாக படிக்க முடியும். கதை ஒரு நேர் கோட்டில் செல்லும். முன்னால் என்ன சொல்லப்பட்டது என்று திருப்பி திருப்பி பார்க்க வேண்டியதில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் சுலபமாக படிக்க முடியும். One Hundred Years of Solitude படிக்க நேரமாகும். ஆனால் ஏனோ பிடிக்கும் என்று தெரிந்தும், சுலபம் என்று தெரிந்தும் இந்த புத்தகத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். இன்று திருப்பி எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
பொய்த்தேவு என்றால் என்ன என்று கூட தெரியாது. இத்தனைக்கும் எனக்கு ஓரளவு தமிழ் தெரியும். ஆனால் தேவு என்றால் தெய்வம் என்று பொருள் இதை படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.
படித்து முடித்ததும் மனதில் விவரிக்க முடியாத ஒரு நிறைவு.
இதற்கு கதை சுருக்கம் எல்லாம் எழுத முடியாது. ஆனால் இந்த கதையை பல தளங்களில் பார்க்கலாம். ஏழை மேட்டுத்தெரு சோமு சோம சுந்தர முதலியாராக மாறி சோமுப் பண்டாரமாக முடிகிறார். அவரது ஆசைகள், பார்த்ததற்கெல்லாம் ஆசைப்படும் குணம், அவரது தெய்வங்கள், அவரது ஆதர்ச மனிதர்கள், என்று பார்க்கலாம். என்னை பாதித்தது வேறு ஒரு தளம். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் தேடும் விஷயங்கள் வேறு. இந்த தேடலுக்கு உண்மையிலேயே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? காமம் எல்லா உயிர்களுக்கும் உள்ள அடிப்படை தேடல் என்று வைத்துக்கொள்ளலாம், அதற்கு அர்த்தம் தேடுவது அர்த்தம் இல்லாத செயல். பணம்? புகழ்? குடும்பம்? இவை எல்லாம் நமக்கு ஏன் முக்கியம் என்று நாம் யோசிப்பதே இல்லை. சரி, நான் யோசித்தது இல்லை.
எங்கோ அமேரிக்காவில் உட்கார்ந்து இருந்தாலும், எனது வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எனது அப்பா, அம்மா, அத்தை(கள்), பெரியப்பா, பெரியம்மா, அத்தான்கள், அத்தங்காள்கள், காலேஜ் நண்பர்கள் இவற்றை சுற்றிதான் என் எண்ணங்கள் சுழல்கின்றன. முதலியாரின் வேர்கள் மேட்டுத் தெருவில் இருப்பது போல. அவரது விலங்குகள் ராயர் குடும்பத்தில் இருப்பது போல.
அவர் சோமுப் பண்டார மாற்றத்தை பற்றி இன்னும் விவரித்திருக்கலாம்.
கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம். படிக்க சொல்லி சொன்ன எந்தரோ மகானுபாவலுகளுக்கு நன்றி.
P.S.
ஜெயமோகனின் குறிப்பு பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.
தமிழின் முதல் நாவல் என்று ஐயமின்றி கூறலாம். நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் படைப்பு. சோமு முதலி என்ற கதாபாத்திரத்தின் முழுவாழ்க்கையை முன்வைத்து வாழ்வின் சாரமான பொருளென்ன என்று தேடும் படைப்பு ஒரு காலை வேதாந்தத்திலும் மறுகாலை இருத்தலியத்திலும் ஊன்றி நிற்கும் காத்திரமான ஆக்கம் சோமுவை சிறுவயது முதல் தொடரும் அந்த மணியோசை நாவலில் கவித்துவத்தின் அபாரசத்தியங்களைப் பற்றி தமிழுக்கு கற்பித்தது.
Post-Post-Script:
பொய்த்தேவு என்று கூகிளில் தேடிப் பார்த்தேன். ஒரே ஒரு பக்கம்தான் கிடைத்தது. அதுவும் நானே ஜெயமோகனின் டாப் டென் லிஸ்டை பற்றி எழுதிய ஒரு குறிப்புத்தான்.
ஆனால் ஜெயமோகனின் பக்கத்தையே கூகிளால் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழில் எழுதப்பட்ட பக்கங்களில் எப்படி தேடுவது என்று யாராவது கொஞ்சம் சொல்ல முடியுமா?
செப்டம்பர் 17, 2008 at 2:19 மு.பகல்
This might not be what you are looking for, but when I searched for the keyword ‘poithevu’, google comes up with 2 results, neither of them I think is your page, and when I searched for ‘poiththevu’, it came up with one different result, top 10 tamil novels of this century.
Your page comes up when I searched for ‘poitthevu’.
When searching for Tamil words, I find it helpful to use a few different spellings, because people tend to search differently !!
செப்டம்பர் 17, 2008 at 8:29 பிற்பகல்
Thanks for the tip. I tried “poitthevu” & “poithevu”, but didn’t think of “poiththevu”
My real problem is this. Why doesn’t google search take me to all tamil web pages that mention “poitthevu”? Even this post comes up because I tagged it with “poitthevu” spelt out in English. For example, google search doesn’t take me to Jeyamohan’s list. I am sure there are at least a few Tamil web pages out there that refer to Poitthevu, how do I get to them?
ஜனவரி 12, 2009 at 6:37 பிற்பகல்
ஜெயமோகனின் டாப் டென் லிஸ்ட்: http://jeyamohan.in/?p=84
ஜனவரி 12, 2009 at 11:17 பிற்பகல்
//தமிழில் எழுதப்பட்ட பக்கங்களில் எப்படி தேடுவது என்று யாராவது கொஞ்சம் சொல்ல முடியுமா?//
நீங்கள் தமிழில் எழுத செயலியைக் (application) கொண்டே கூகிளில் தேடலாம் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் விவரமாகக் கூறவும்.
ஜனவரி 13, 2009 at 5:57 பிற்பகல்
manki, murali,
Thanks! When I used google.co.in to search for poyththevu, I don’t even get this page…
ஜனவரி 13, 2009 at 6:12 பிற்பகல்
I searched in google.com and found quite a few results.
http://www.google.com/search?q=பொய்தேவு&hl=en&filter=0
ஜனவரி 15, 2009 at 7:57 மு.பகல்
“Google Search” preferences-இல் “Search for pages written in any language”-ஐத் தேர்ந்தெடுத்து சேமிக்கவும். இப்போது Google Search பக்கத்துக்கு வந்து ”தேடு” பெட்டியில் “பொய்த்தேவு” என்று தமிழிலேயே தட்டச்சவும். 332 results வரும்.
கூகிள் உபயமாய் அச்சொற்றொடரின் முதல் தோற்றமும் பதப்பொருளும் கீழே விளக்கப்படுகின்றன:
திருக்கோத்தும்பி/உரை 17-20
”அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ”
பதப்பொருள் :
கோத்தும்பீ – அரச வண்டே! அவர் தேவர் – அவரே கடவுள், அத்தேவர் தேவர் – அவரே அந்தத் தேவர்களுக்கெல்லாம் தேவர், என்று – என்று, இங்ஙன் – இவ்வாறு, பொய்த்தேவு பேசி – கடவுளர் அல்லாதவர்களைப் புகழ்ந்து, புலம்புகின்ற – பிதற்றுகின்ற, பூதலத்தே – பூலோகத்தில், பத்து ஏதும் இல்லாது – உலகப்பற்று சிறிதுமின்றி, என் பற்று அற – என்னுடைய பற்றுகள் அறும்படி, நான் பற்றி நின்ற – நான் பற்றிக்கொண்டிருக்கிற, மெய்த்தேவர் தேவர்க்கே – உண்மையாகிய தேவர் பிரானிடத்தே, சென்று ஊதாய் – போய் ஊதுவாயாக.
ஜனவரி 15, 2009 at 4:51 பிற்பகல்
Thanks Murali & anonymous!
I tried both your methods and got a little more success.
ஜனவரி 21, 2009 at 12:52 மு.பகல்
உன்னிடம் கிளப்பிக் கொண்டு வந்த புத்தகங்களில் இதை மிஸ் பண்ணி விட்டேனோ? பரவாயில்லை. அடுத்த ரவுண்ட் லிஸ்டில் இது இருக்கிறது.
>>>ஜெயமோகனின் குறிப்பு பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம். தமிழின் முதல் நாவல் என்று ஐயமின்றி கூறலாம்
பிரதாப முதலியார் சரித்திரம் அல்லவா முதல் நாவல்?
ஜனவரி 21, 2009 at 1:00 மு.பகல்
பிரதாப முதலியார்தான் முதலில் பதிப்பிக்கப்பட்ட நாவல் என்றாலும் ஜெயமோகனின் கண்ணோட்டத்தில் அது “நல்ல” நாவல் இல்லை. நாவலுக்குரிய எல்லா தகுதிகளும் பெற்ற முதல் தமிழ் நாவல் பொய்த்தேவு என்று அவர் நினைக்கிறார்.
பெப்ரவரி 14, 2010 at 12:02 பிற்பகல்
நான் தேடியதில் எனக்கு 1,510 முடிவுகள் கிடைத்தன. காண்க: http://www.google.com.my/search?q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a
ஜெயமோகனின் பதிவு 14வது இடத்தில் இடம்பெற்றிருந்தது.