“அவார்டா கொடுக்கறாங்க?” எங்களுடைய இன்னொரு ப்ளாக். நாங்கள் சினிமா பற்றி இங்கே எழுதுகிறோம். பொதுவாக பழைய சினிமா பற்றி, அபூர்வமாக புது சினிமாக்கள் (1975-க்கு பிறகு வந்ததெல்லாம் எங்களுக்கு புது சினிமா) பற்றியும் எழுதுவோம். லேட்டஸ்டாக பணமா பாசமா படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறேன். விகடனாருக்கு படம் பிடித்திருக்கிறது!

புதிய எழுத்தாளர் அறிமுகம்: எங்கள் குழுவில் உப்பிலி ஸ்ரீனிவாஸ் என்ற நண்பரை நான்காவது எழுத்தாளராக வளைத்துப் பிடித்துவிட்டோம் . (ஆனால் இப்பொழுது இவருடன் சேர்த்து மூவர் தான் எழுதுகிறோம் – திரு. சேதுராமன் மறைவு குறிப்பு கீழே) .

சேதுராமன் மறைவு:
இந்த தளத்தில் நானும் பக்சும் எழுதுகிறோம் என்று சொன்னாலும் இங்கே மூன்று பேர் எழுதுகிறோம். சேதுராமன் இந்த தளத்தின் அங்கீகரிக்கப்படாத, அங்கீகாரம் வேண்டாத மூன்றாவது ப்ளாகர். அவர் மறைந்தது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. எங்கள் அஞ்சலி இங்கே.

வசந்தகுமார் எங்களை சுவாரசிய பதிவராக தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி!

ஆர்வி எழுதிய அம்மாவுக்கு புரியாது சிறுகதை உரையாடல் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது. போட்டியை நடத்திய பைத்தியக்காரன், மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு நன்றிகள்!
வெற்றி பெற்ற சிறுகதைகளை புத்தகமாக வெளியிடப் போகிறார்களாம். இந்த புத்தகம் இன்னும் சில நாட்களில் – நவம்பருக்கு முன்னால் வெளியிடப்படுமாம். ஜ்யோவ்ராம் சுந்தர், சிவராமன், கிழக்கு பதிப்பகம் பத்ரி ஆகியோருக்கு நன்றிகள் பல!

பிருந்தா எழுதிய கவிதை பரிசு பெற்றிருக்கிறது. பரிசு விவரங்கள், இடுகையில்.

இந்த கதை பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால் படியுங்களேன்! படித்துவிட்டு கடைசியில் என் புலம்பலையும் படியுங்கள்!

வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட ‘வெற்றி’கள், வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.

என் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன். வழக்கம் போல ‘தோல்வி நிச்சயம்’ என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

கற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகஸித்து, பின்னொரு அசட்டுத் துணிவில், அவளது பரிகஸிப்பையும் ஏச்சையும் எதிர்பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று ‘உன்னை நான் காதலிக்கிறேன்’ என்று முற்றிலும் கூறி முடிக்கும் முன்பாக, அந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர்பார்த்துப் பல காலம் தவங் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர் நோக்கிச் சிவந்த அதரங்கள் துடிதுடிக்க என் கரங்களிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது!

இந்தத் தோல்வியை, அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும். ஊருக்குத் திரும்பிய பின்தானே? அல்ல; இப்போதே! நான் ரொம்ப அவசரக்காரன்.

கொண்டாடுவது என்பது பெரிய காரியமா? அது கொள்ளப்பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது. அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியமன்று. கொண்டாடத்தக்கதை சிலர் வானத்தை வண்ணப் படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள். சிலர் நாலு பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறார தான் உண்டு மகிழ்வார்கள். அதெல்லாம் அப்பொழுதிருக்கும் அவரவர் சக்தியைப் பொறுத்தது. எனினும், மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்றுதான்.

இப்பொழுது என் நிலைமை… பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம்தான். அதற்கென்ன? இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே! அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன? கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ? நிச்சயம் முடியும்.

சங்கரய்யர் ஹோட்டலில் புதுப் பால், புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி இரண்டணா தான். காபி அருந்தியதும் உடம்பில் ஒரு தெம்பும், மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன. ஊர் திரும்ப ஒதுக்கி வைத்த பன்னிரண்டணா போக, கையில் இருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம்? ‘கடைசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப் போல் செலவு செய்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.

”ஐயா தருமதுரை… கண்ணில்லாத கபோதி ஐயா..!” என்ற குரல். ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். கிழவன். அவன் எதிரே இருந்த அலுமினி யப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன. அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா, வெள்ளை வெளேரென்று விழுந்தது அழகாகத்தான் இருந்தது. குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே, நான் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்ட திசை நோக்கிக் கரம் குவித்து, ”சாமி, நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு” என்று வாழ்த்தினான். அதன் பிறகு, உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளைக் கொண்டாடி விட்ட நிறைவு பிறந்தது எனக்கு.

புக்கிங் கவுண்டரின் அருகே போய் என் சொந்தக் கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன். டிக்கெட்டை எதிர்பார்த்து நீண் டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது.

”இன்னும் ஓரணா கொடுங்கள் ஸார்!”
”பன்னிரண்டணாதானே?”
”அது நேற்றோடு சரி. இன்னிலேருந்து அதிகம்.”

என் கை சில்லறையுடன் வெளியே வந்தது. திடீரென்று பாதாளத்தில் வீழ்ச்சியுற்றது போன்ற திகைப்பில் நின்று விட்டேன். ‘யாரிடம் போய் ஓரணா கேட்பது?’

‘அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறாரே, அவரிடம்…’ என்று நினைக்கும்போதே, ‘ஓரணாதானே, கேட்டால்தான் என்ன’ என்று நினைக்கும்போதே, கேட்டால் என்று நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே! யாரோ ஒருவன் அவர் அருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ? அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது. எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை எண்ணும்போது, மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது?

‘அதோ, அந்தக் குருடனின் அலுமினியப் பாத்திரத்தில் செப்புக் காசுகளின் நடுவே ஒளி விட்டுச் சிரிக்கிறதே இரண்டணா, அது என்னுடையது!’

‘அது எப்படி உன்னுடையதாகும்? நீ கொடுத்துவிட்டாய்; அவன் வாழ்த்திவிட்டான்!’

‘இப்ப சந்தியில் நிற்கிறேனே? அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை? அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா? கேட்டால் தருவானா? தர மாட்டான். அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று!’

‘எடுத்துக் கொண்டால்? அதோ, ஒரு ஆள் ஓரணா போட்டுவிட்டு அரையணா எடுத்துக் கொள்கிறானே! அது போல ஓரணாவைப் போட்டு விட்டு அந்த என்னுடைய இரண்டணாவை எடுத்துக் கொண்டால்?’

‘இது திருட்டு அல்லவா?’

‘திருட்டா? எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா அவனுக்குக் கிடைக்குமே! அந்த ஓரணா புண்ணியம் போதும்; என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்று பொருளாதார ரீதியாய்க் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணிய போதிலும், திருடனைப் போல் கை நடுங்குகிறது. ஓரணாவைப் போட்டேன்; இரண்டணாவை எடுத்துக்கொண்டு திரும்பி னேன்.

”அடப்பாவி!” திரும்பிப் பார்த்தேன். குருட்டு விழிகள் என்னை வெறிக்க, வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் அவன் கேட்டான்…

”சாமி, இதுதானுங்களா தர்மம்? யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு. அதை எடுத்துக்கிட்டு, ஓரணா போடறியே? குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான் போவே!”

நெருப்புக் கட்டியைக் கையிலெடுத்ததுபோல் அந்த இரண்டணாவை அலுமினியத் தட்டில் உதறினேன். இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.

‘தெரியாம எடுத்துட்டேன்’ என்று சொல்லும்போது, என் குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.

ஒரு பெண் அரையணா போட்டுவிட்டுக் காலணா எடுத்துச் சென்றாள். குருடன் உடனே இரண்டணா இருக்கி றதா என்று தடவிப் பார்த்தான். அப்படிப் பார்த்தபோது அது இல்லாதிருந்துதான் நான் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்தது. அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம். விட மனம் வருமா?

நான் யோசித்தேன்.

‘அது அவன் பணமா?’

‘ஆமாம்!’

‘நான்தானே தந்தேன்!’

‘காசைத்தான் கடன் தரலாம்; தருமத்தைத் தர முடியுமா? தருமத்தை யாசித்து, தந்தால்தான் பெறவேண்டும்.’

வெகுநேரம் நின்றிருந்தேன். நான் போக வேண்டிய ரயில் வந்து போய்விட்டது. அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது. தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன் வரை கால்வலிக்க நடந்து அனுபவித்தேன்.

சில வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு கோர ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது, அன்று நான் போக இருந்து, தவறவிட்ட ரயில்தான்.
இந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன்? தருமம் காத்ததா?

எனக்குத் தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது!

நல்ல தொழில் திறமை தெரிகிறது. நானும் சில கதைகள் எழுதி இருக்கிறேன். எனக்கு பெரிய பிரச்சினையே இதுதான். முடிச்சு கிடைத்துவிட்டது. சாதாரணமாக ஒரு பாராவில் அந்த முடிச்சை எழுதிவிடலாம். அதை எப்படி கதையாக நீட்டுவது? இந்த கதையிலும் சின்ன முடிச்சுதான்.அதை ஜேகே எப்படி இத்தனை வார்த்தைகளாக மாற்றுகிறார்? பிச்சை போட்டார், தேவை வருகிறது. அதுதான் கதை. அதற்கு ஒரு பீடிகை – ஏதோ வெற்றி தோல்வி, கொண்டாட்டம், சங்கரய்யர் ஹோட்டல் காப்பி என்று. அப்புறம் பிச்சை, டிக்கெட், தேவை. தான் யாரையாவது கேட்கலாமா என்று யோசனை, பிறகு நைசாக ஓரணாவை திரும்பப் பெறும் எண்ணம். அப்புறம் நடை. அதற்கும் கடைசியில் விபத்து. இரண்டு இட்லியை வைத்து அதை சுற்றி நாலு கலரில் சட்னி, சாம்பார், கொத்சு, பொடி என்று அடுக்குகிறார். இந்த மாதிரி அடுக்கும் கலைதான் கை வரவே மாட்டேன் என்கிறது!

1961இல் எழுதி இருக்கிறார். விகடனில் முத்திரைக் கதையாக வந்தது என்று நினைக்கிறேன், சரியாகத் தெரியவில்லை.

நான் என் சின்னப் பெண் க்ரியாவைக் ஏதோ கிளாசிலிருந்து கூட்டிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தேன். என்னிடம் இரண்டு சாக்லேட் இருந்தது. ஒன்று இவளுக்காக, இன்னொன்று இவள் அக்காவுக்காக. இவள் சாக்லேட்டை கொடுத்ததும் உடனடியாக தின்றுவிட்டாள். நன்றாக இருக்கிறது என்று சொன்னாள். திடீரென்று எனக்கு ஒரு விபரீத சோதனை செய்யும் எண்ணம் வந்தது. இன்னொன்றையும் இவளிடம் கொடுத்தேன். கொடுத்துவிட்டு சொன்னேன்.

க்ரியாம்மா, இது அக்காவுக்காக. நீயே கொடு. நீ சாப்பிட்டா நான் ஒன்னும் சொல்லமாட்டேன். ஆனா எனக்கு தெரியும், நீ அக்கா சாக்லேட்டை சாப்பிட மாட்டே! சமத்தா அக்காகிட்டே கொண்டு போய் கொடுத்துடுவே!
இல்லப்பா நான்தான் சாப்பிடப் போறேன்!
நீ சமத்து. யூ லவ்வ்வ்வ் அக்கா! எனக்கு தெரியும், நீ சாப்பிட மாட்டே!
ஐ லவ் அக்கா. ஐ ஆல்சோ லவ் சாக்லேட்!

என்று சொல்லிவிட்டு தின்றுவிட்டாள்!

என்ன ஒரு சிம்பிள் லாஜிக்! வாழ்க்கையில் இந்த மாதிரி லாஜிக்கை பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்

தொடர்புடைய பதிவுகள்:
நேற்று இன்று நாளை
க்ரியாவின் ஏமாற்றம்
பெரிய நம்பர்கள்
க்ரியாவுக்கு சொன்ன கதை

கடுகு என்ற அகஸ்தியன் ஒரு காலத்தில் வாரப் பத்திரிகைகளில் பிரபலம். அவரது கமலா, தொச்சு காரக்டர்கள் இன்னும் பலருக்கு நினைவு இருக்கும். நினைவு இல்லாதவர்கள் அவரைப் பற்றி முன்னாள் குமுதம் உதவி ஆசிரியர் ரா.கி. ரங்கராஜன் எழுதியதை இங்கே காணலாம். அவர் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் பத்தி ஒன்றை இங்கே காணலாம். இதை எல்லாம் அவர் இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கும் ப்ளாகில் பார்க்கலாம்.

கல்கியைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறார். கல்கிதான் கடுகுவுக்கு ஆதர்ச எழுத்தாளர். இந்த உறவு எப்படி ஆரம்பித்தது என்று எழுதி இருக்கிறார். அதில் கல்கியின் மறைவு பற்றி எழுதி இருந்த வரிகள் உருக்கமாக இருந்தன.

கல்கிக்கு அஞ்சலிக் கூட்டங்களை பல அமைப்புகள் நடத்தின என்றாலும், அரண்மனைக்காரத் தெரு கோகலே ஹாலில் நடைபெற்ற கூட்டம் மறக்க முடியாதது. அதில் முத்தியால்பேட்டை இளஞர் சங்கத்தின் காரியதரிசி பேசியது இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
அவர் பேசியது: “கடந்த செப்டம்பர் மாதம் எங்கள் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் பாரதி விழாவை கல்கி அவர்களின் பரிபூர்ண ஆதரவுடன் பவழக்கார தெருவில் நடத்திக் கொண்டிருந்தோம். தெருவில் தான் மேடை பெரிய கூட்டம். மூன்றாம் நாள் மாலை மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது நான் வரவு செலவு கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காசு தீர்ந்து போன நிலைமை. பலருக்கு பணம் பாக்கி. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். மேடையில் உட்கார்ந்திருந்த கல்கி அவர்களிடம் சென்று, ரகசியமாக கவலையுடன் விஷயத்தைச் சொன்னேன். அவர் “தம்பி கவலைப்படாதே, இந்தா. என் வீட்டு மேஜை சாவி, வீட்டிற்குப் போய் என் மேஜை டிராயரைத் திறந்து, அதிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு வா”என்று சொல்லி சாவியைக் கொடுத்தார். நான் போய் எடுத்து வந்தேன். இளஞர்கள் மீது அவருக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை …..” என்று பேசிக்கொண்டே வந்த அந்த இளைஞர், துக்கம் தாளாமல் மேடை.யில் நின்றுக் கொண்டே, குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார். இவ்வளவு பெரிய கூட்டத்தில், மைக் முன்னால் நின்று அழுகிறோமே என்று அவருக்குத் தோன்றவே இல்லை.

விமர்சகர் சுப்புடுவைப் பற்றி, எழுத்தாளர் தேவன் பற்றி, பத்திரிகையாளர் சாவி பற்றி சுவாரசியமான பதிவுகளும் என் கண்ணில் பட்டன.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
கல்கி – ஒரு மதிப்பீடு
கல்கி பற்றி எஸ்.எஸ். வாசன்
கல்கி, ராஜாஜி, மதுவிலக்கு

கடுகு தளம், கடுகு – சுய அறிமுகம், கடுகு பற்றி ரா.கி. ரங்கராஜன்
கடுகு கல்கியைப் பற்றி எழுதிய பதிவு
கடுகு சுப்புடு, சாவி, தேவன் பற்றி எழுதிய பதிவுகள்

கிட்டத்தட்ட 45 லட்சம் கார்களின் ஆக்ஸலரேட்டர்கள் அமுக்கியது அமுக்கிய படியாகவே இருந்துவிட்டால் எத்தனை விபத்துகள் நடந்திருக்கும்? இதுவரை ஆச்சரியமாகவும், அதிர்ஷ்டவசமாகவும் ஒரு விபத்தும் ஏற்படவில்லை என்பது செய்தி. ஆனாலும் பிரச்சனை மிகவும் அபாயகரமானது.

செய்தியை தொடராதவர்களுக்கு: டொயோட்டா கார்களின் ஆக்ஸிலரேட்டர்கள் காலை எடுத்தவுடன் மீண்டும் மேல் எழ மறுக்கிறது. மேலும் அது ஃப்ளோர்மேட் (Floormat) என சொல்லப்படும் காரின் தரைக் கம்பளத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதனால் டிரைவர்கள் கரை நிறுத்த முயன்றாலும் நிறுத்த முடியாமல் போகலாம். இந்த தரம் குறைந்த ஆக்ஸிலரேட்டர்கள் 2005லிருந்து விற்க்கப்பட்ட 4.5 மில்லியன் டொயோட்டா கார்களில் பொருத்தப்பட்டுள்ளது. டொயொட்டா கம்பெனி ஜனவரி 21ஆம் தேதி 45 லட்சம் கார்களை “ரீகால்” செய்துள்ளது. அதுபோக ப்ரியஸ் என்னும் காரின் பிரேக்கிலும் இது போன்ற பிரச்சனை இருப்பதாகவும், அதன் ”க்ரூஸ்” கண்ட்ரோல் எலக்ட்ரானிக் சாதனத்திலும் பிரச்சனை உள்ளதாகவும் ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

இதில் பிரச்சனை என்னவென்றால் டொயோட்டா கம்பெனிக்கு இந்த விஷயங்கள் முன்னரே நன்றாகவே தெரியும் எனக்கூறப்படுகிறது. எனக்கும் அது நம்புவதற்க்குறியதாகத்தான் இருக்கிறது. இந்த ரீகாலின் மூலம் டொயோட்டா கம்பெனிக்கு 2 பில்லியன் டாலர்கள் நஷ்டம் எனக் கூறுகிறார்கள். டொயோட்டாவிற்கு இந்த விஷயம் முன்னரே தெரிந்திருக்கும் பட்சத்த்தில் முன்னரே (இரண்டு வருடங்களுக்கு முன்னரே) ரீகால் செய்திருந்தால் ஒரு 100 மில்லியனோ அல்லது 500 மில்லியன் டாலர் நஷ்டத்துடன் போயிருக்கும். நாகரீகமாகவும் இருந்திருக்கும். மனித உயிர்களின் மேல் டொயோட்டாவிற்கு உள்ள அக்கறையும் அதை வெளிப்பட்டிருக்கும். அதை செய்யாமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்திருப்பது போல தெரிகிறது. ஏதோ ரேடியோ பார்ட்ஸ் மட்டம் அல்லது சீட்டில் குஷன் மட்டம் என்றால் மறைத்திருக்கலாம். மனித உயிர்களைவிட தொழில் லாபம் பெரியதா? இல்லை கம்பெனியின் போட்டிமனப்பான்மை பெரியதா? இல்லை கம்பெனியின் பிம்பமத்திற்கு கேடு என்ற பயமா?

எப்படி பார்த்தாலும் டொயோட்டாவிற்கு நிலைமை இப்பொழுது அதை விட பல் மடங்கு மோசமாக உள்ளது.  மக்கள் இது தான் வாய்ப்பு என்று நஷ்டயீடு வழக்குகள் போட ஆரம்பித்துவிட்டார்கள். டொயோட்டாவிற்கு முடிவு நெருங்கிவிட்டதா? அல்லது ஒரு பாஸிங் கிளவ்டா? பங்கு சந்தையில் அந்தர் பல்டி அடித்த டொயோட்டா பங்குகள் வாங்க பலருக்கு வாய்ப்பா? காலம் பதில் சொல்லும்.

தொடர்புள்ள சுட்டிகள்

டொயோட்டா பிம்பத்திற்கு கலங்கம்

டொயோட்டா மன்னிப்பு கோருகிறது

ஒரு துக்ளக் அட்டைப்படம்

ஒரு துக்ளக் அட்டைப்படம்

இட்லிவடை தளத்தில் துக்ளக் ஆரம்பித்த கதையைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்கள். சோ தன் நண்பர்களிடம் தன்னாலும் ஒரு பத்திரிகை நடத்த முடியும் என்று ஐந்து ரூபாய் பெட் வைத்திருக்கிறார். அந்த ஐந்து ரூபாய் ஜெயிப்பதற்காக ஆரம்பித்த பத்திரிகைதான் துக்ளக்!

பத்திரிகை நடத்த அனுபவம் இல்லை, அதனால் சும்மா பேருக்கு ஒரு இதழைக் கொண்டு வந்துவிட்டு நிறுத்திவிடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆனந்தவிகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியம் உதவி செய்து பத்திரிகை வெளி வந்திருக்கிறது.

சோ 1970 பொங்கல் அன்று பத்திரிகை வெளியே கொண்டு வரலாம் என்று சொல்லி இருக்கிறார். பாலன் நாலு வாரம்தானே இருக்கிறது, பத்திரிகையில் என்ன வர வேண்டும் என்று ஒன்றும் யோசிக்கவில்லையே மூன்று மாதம் டைம் எடுத்து யோசிக்கலாமே என்று சொன்னாராம். சோ மூன்று வாரத்தில் தோன்றாதது மூன்று மாதத்திலும் எனக்கு தோன்றாது என்று தன் துக்ளக் ஸ்டைலில் பதில் சொன்னாராம்!

சோவின் அதிர்ஷ்டம் அழைக்கிறது புத்தகத்தில் இதை எல்லாம் விவரமாக எழுதி இருக்கிறார். இட்லிவடை தளத்தில் பக்கங்களை ஸ்கான் செய்து போட்டிருக்கிறார்கள். பாருங்கள்!

இந்த பேட்டியையும் பாருங்கள். 1970 ஜனவரியில் துக்ளக் இன்னும் ஆரம்பிக்காதபோது சோவை விகடனில் எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!

பத்திரிகை ஆசிரியர் ஆகிறார் ‘சோ’!
நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர் சொல்கிறார்களே, உண்மையா?

சோ: யாரெல்லாம் சொன்னார்கள்?

நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காண வந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் பேட்டி காணப் போகிறீர்களா?

சோ: நான் உங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து நானும் ஒரு பத்திரிகைக்காரனாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லையா?

நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?

சோ: அது தமிழ்நாட்டின் தலை விதி!

நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்?

சோ: ஒரு சகலகலா வல்லவர்!

நிருபர்: யார் அது?

சோ: நான்தான்.

நிருபர்: பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம், லட்சியம் என்ன?

சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்றவேண்டும்; ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு, இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளரவேண்டும். இந்த லட்சியங்களுக்காகத்தான் நான் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது என் தவறல்ல! பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது; ஆரம்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான்!

நிருபர்: உங்கள் பத்திரிகை எப்போது வெளிவரும்?

சோ: பொங்கல் ரிலீஸ்!

நிருபர்: முதல் இதழில் உங்கள் பத்திரிகையில் என்னென்ன வரும் என்று சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

சோ: ஏன்? துக்ளக்கை யாரும் வாங்கக் கூடாது, உங்கள் ஆனந்த விகடனையே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பார்க்கிறீர்களா?

நிருபர்: சரி! உங்கள் பத்திரிகையின் அமைப்பைப் பற்றி ஏதாவது கூற முடியுமா?

சோ: எவற்றையெல்லாம் பார்த்து எனக்குச் சிரிப்பு வருகிறதோ அவற்றையெல்லம் பார்த்து மக்களையும் சிரிக்க வைக்க முயலப் போகிறேன். I am going to look around me and also make my readers look around themselves.

துக்ளக் தளத்தில் பழைய இதழ்களை படிக்கலாம். ரெஜிஸ்டர் செய்ய வேண்டும், கேள்வி பதில் படிக்க முடியாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
இட்லிவடை தளத்தில் துக்ளக் ஆரம்பித்த கதை பதிவு
சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு
சோவின் தைரியம் பற்றி நல்லதந்தி
துக்ளக் தளம்

This is my message to all you students as you find your future.

One, believe in yourself, and don’t let a GPA, performance review or promotion in a job define you. There is more to life than these things – your family, your friends, your internal desires and goals. And the grades you get in dealing with each of these areas will define you as a person.

Two, don’t judge others too quickly. It is great to get into IIT, but it is not the end of the world if you don’t. All of you should be proud to have the IIT tag, but never ever judge anyone who is not from this institute – that alone can define the greatness of this institute.

And lastly, don’t take yourself too seriously. Life is too short, enjoy yourself to the fullest. One of the best parts of campus life is the friends you make. And make sure you make them for life.

ஐந்து விருதுகளில் மூன்று “தமிழர்களுக்கு” (ரெட்டிகாரு ஆட்சேபிக்கலாம். ராமகிருஷ்ணன் அமெரிக்க குடிமகன்.) பத்மவிபூஷன் கிடைத்திருக்கிறது.

மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்திருக்கிறது. அதிசயம்தான்! மிருதங்க வித்வான்களை எல்லாம் யாரும் பொதுவாக கண்டுகொள்வதில்லை. அப்படியே உ. சிவராமனை யாராவது சிபாரிசு செய்திருந்தாலும் பத்மஸ்ரீக்கு மேலே எதிர்பார்ப்பது ஆச்சரியம். இவரை விட பல மடங்கு தாக்கம் வாய்ந்த இளையராஜா, ரஹ்மானுக்கே இப்போதுதான் பத்மபூஷன். (கவனியுங்கள், இங்கே தாக்கத்தைப் பற்றி பேசுகிறேன், திறமையைப் பற்றி இல்லை) இது நல்ல விஷயம். இப்படிப்பட்ட கலைகளை recognize செய்த இந்திய அரசுக்கு, சிபாரிசு செய்த தமிழக அரசுக்கு ஒரு சபாஷ்!
சிவராமன் ஒரு ப்ளாக் எழுதுகிறார், போய்ப் பாருங்கள்!
அவருடைய வார்த்தைகளில் (ஹிந்துவுக்கு நன்றி!)

This is the first time the mridhangam has been selected for the most prestigious award and I am really fortunate to be the first recipient. For all my service to the art of mridhangam, spanning over 60 years, I consider this award a signal honour to me and my musical career. It will also be a trendsetter for the present and future generations of percussionists who can strive and achieve such honours by their total dedication and sincerity.

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பத்ம விபூஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருஷம் மறந்துவிடும், இப்போதே கொடுத்ததற்கு ஒரு சபாஷ்!

அப்போலோ ஹாஸ்பிடல் நிறுவனர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டிக்கு பத்ம விபூஷன். ஒரு “புதிய” தொழிலை ஆரம்பித்தவர் என்றுதான் இவரை சொல்ல வேண்டும். இதுவும் தகுதி உள்ளவருக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வார்த்தைகளில் (ஹிந்துவுக்கு நன்றி!)

I am so pleased that this award is a recognition for all the clinicians who have managed to put Indian healthcare on the world map. It makes me all the more committed to bringing excellence in healthcare. We are also now focussing on making quality healthcare available to all with our slogan ‘Touch a billion lives.’

43 பத்மபூஷன் விருதுகளில் இரண்டு மூன்று (நான்கு?) தமிழர்கள்தான் – ராஜாவும் ரஹ்மானும். ஏற்கனவே எழுதிவிட்டேன்.
ராஜாவின் வார்த்தைகளில் (ஹிந்துவுக்கு நன்றி!)

When I came out of the recording studio, the entire street was clogged with people. I am pleased. What is there to say? Silence is my message.

ஆரோக்யசாமி பால்ராஜ் – ஸ்டான்ஃபோர்ட் பேராசிரியர். வயர்லெஸ் தொழில் நுட்ப நிபுணர்.

நாராயணன் வகுள் – பேரை வைத்துப் பார்த்தால் தமிழர் மாதிரி தெரியவில்லை. சென்னை ராமகிருஷ்ணா பள்ளியிலும் லயோலாவிலும் படித்தவராம். ஸ்டேட் பாங்க், சென்ட்ரல் பாங்கில் பெரிய பதவிகளில் இருந்திருக்கிறார்.

81 பத்மஸ்ரீ விருதுகளில் 8 தமிழர்கள்தான்:
பிரபல ஹிந்தி நடிகை ரேகாவுக்கு (ஜெமினி கணேசன், புஷ்பவல்லியின் மகள்) கிடைத்திருக்கிறது. தகுதி உள்ளவர்தான்.
ராஜீவ் காந்தி வழக்கில் துப்பு துலக்கிய முன்னாள் சி.பி.ஐ. டைரக்டர் டி.ஆர். கார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது. இவரும் தகுதி உள்ளவர்தான்.
பத்மா சேஷாத்ரி பள்ளி நிறுவனர் ராஜலக்ஷ்மி பார்த்தசாரதிக்கு (ஒய்.ஜி.பி.யின் மனைவி, ஒய்.ஜி. மகேந்திராவின் அம்மா) கிடைத்திருக்கிறது. தகுதி உள்ளவர்தான். அவருடைய வார்த்தைகளில் (ஹிந்துவுக்கு நன்றி!)

I am very happy that education has been recognised with this award. It is the liberating kind of education that Padma Seshadri Bala Bhavan group of schools has been inculcating, with the right mix of art, education and culture, that has been recognised. I have to specially thank my parents and husband who had stood by me, and I share this with the staff of the schools and the students.

பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு கிடைத்திருகிறது. இதைப் பற்றி தனிப் பதிவு இங்கே.
டாக்டர் ஜலகண்டபுரம் ஆர். கிருஷ்ணமூர்த்தி விருது பெறுகிறார். குன்றத்தூரில் இருக்கிறாராம். சித்த மருத்துவராம்.
ஃ பார்முலா ஒன் கார் ரேஸ் வீரர் கார்த்திகேயனுக்கு விருது கிடைத்திருக்கிறது. இவரும் தகுதி உள்ளவர்தான்.
டி.வி.எஸ். தலைவர் வேணு ஸ்ரீனிவாசனுக்கு விருது கிடைத்திருக்கிறது. தகுதி உள்ளவர்தான்.
டி.என். மனோகரன் என்ற தொழிலதிபருக்கும் கிடைத்திருக்கிறது. என்ன தொழில் செய்கிறார் என்றுதான் தெரியவில்லை. :-) இவர் அக்கௌண்டன்ட்டாம். இப்போது இந்திய அரசு இவரைத்தான் சத்யம் கம்ப்யூட்டர்சின் தலைவராக நியமித்திருக்கிறதாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
உமையாள்புரம் சிவராமனின் ப்ளாக்
வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பற்றி விக்கி குறிப்பு
பிரதாப் ரெட்டி பற்றி அப்போலோ ஆஸ்பத்திரி தளத்தில்

இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்மபூஷன் விருது பற்றி நான்
ஆரோக்யசாமி பால்ராஜின் பக்கம்
நாராயணன் வகுளைப் பற்றி விக்கி குறிப்பு, ஃபோர்ப்ஸ் குறிப்பு

ரேகா பற்றிய விக்கி குறிப்பு
டி.ஆர். கார்த்திகேயன் ராஜீவ் கொலை வழக்கு பற்றி அளித்த ஒரு பேட்டி, ராஜீவ் கொலை பற்றி துப்பு துலக்கிய குழு – ஒரு அறிமுகம்
திருமதி ஒய்.ஜி.பி. பற்றி பத்மா சேஷாத்ரி பள்ளி தளத்தில்
இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ பற்றி நான்
ஜலகண்டபுரம் கிருஷ்ணமூர்த்தி பற்றி விக்கி குறிப்பு
கார் ரேஸ் வீரர் கார்த்திகேயன் பற்றிய விக்கி குறிப்பு, கார்த்திகேயனின் தளம்
வேணு ஸ்ரீனிவாசனைப் பற்றி பிசினஸ்வீக்
டி.என். மனோஹரனைப் பற்றி

விருது பெற்றவர்களின் லிஸ்ட்


நான் இ.பா.வை ரசிப்பவன் இல்லை. அவரது நாவல்களில் எல்லாரும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லா நாவல்களிலும் ஒரு “அறிவுஜீவியின்” கோணம்தான், அதுவும் டெல்லியில் வாழும் ஒரு தமிழ் பிராமண “அறிவு ஜீவி” கோணம் மட்டுமே. இதில் நகைச்சுவை என்கிறார்கள், அங்கதம் என்கிறார்கள் எனக்கென்னவோ இதை விட வடிவேலு அடி வாங்குவதே கொஞ்சம் பெட்டர் நகைச்சுவையாக இருக்கிறது. அவரது சாகித்ய அகாடமி விருது பெற்ற குருதிப் புனல் என் கண்களில் குறைகள் நிறைந்த படைப்புதான். அதில் அனாவசியமாக கோபால கிருஷ்ண நாயுடு காரக்டரை ஒரு ஹோமொசெக் ஷுவலாக சித்தரித்துவிட்டார் – படித்தவர்கள் பலருக்கு நாற்பத்து சொச்சம் பேர் எரிந்ததை விட வில்லன் ஹோமோ என்பது மட்டும்தான் நினைவில் தங்கி இருக்கிறது. தந்திர பூமி, சுதந்திர பூமி, ஏசுவின் தோழர்கள் எதுவும் எனக்கு தேறவில்லை. என் கண்ணில் வெறும் fluff. அவருடைய புகழ் பெற்ற நந்தன் கதை நாடகத்தைப் பாருங்கள் – கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல நந்தனை ஒழிக்கிறார்கள். ராமானுஜர் நாடகம் வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளில் தொகுப்பு மட்டுமே. அவருடைய படைப்புகளில் கிருஷ்ணா கிருஷ்ணா ஒன்றுதான் எனக்கு பிடித்திருந்தது. அவருடைய படைப்புகளில் அது ஒன்றுதான் நூறு வருஷத்துக்குப் பின்னாலும் படிக்கக் கூடியது என்பது என் கருத்து. என் மகாபாரதப் பித்தும் இந்த நினைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவர் எழுதிய ஒரு கப் காப்பி சிறுகதை புகழ் பெற்றது, ஆனால் அது சீக்கிரம் மறக்கப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். (அழியாச்சுடர்கள் தளத்தில் போட்டால் லிங்க் செய்யலாம்.)

ஆனால் இ.பா.வின் தாக்கம் பெரியது. அவருடைய தாக்கம் ஆதவனில் நன்றாகவே தெரிகிறது. ராமசேஷன் அதே மாதிரி அறிவுஜீவிதான். இன்று வரை கீழ்வெண்மணி நாவல் என்றால் குருதிப் புனல்தான். அவருடைய நாடகங்கள் முக்கியமான முயற்சிகள். நந்தன் கதை கூட நாடகமாகப் பார்த்தால் கொக்கும் வெண்ணையும் தெரிவதில்லை. வைஷ்ணவ குரு பரம்பரை கதைகள் எல்லாம் ஐயங்கார்களே மறந்துகொண்டிருக்கும் காலம் இது. ராமானுஜர் நாடகம் பார்க்க நன்றாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அவருடைய எந்த நாவலும் மோசம் இல்லை. கால வெள்ளத்தில் நிற்காது, அவ்வளவுதான். அவர் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் கொண்டு வந்த மாற்றங்களும் அநேகம்.

தமிழில் சீரியஸ் எழுத்தாளர்களுக்கு பத்மஸ்ரீ கொடுக்கப்படுவது நல்ல விஷயம். ஜெயகாந்தனுக்கு போன வருஷம் கொடுத்தார்கள். இந்த வருஷம் இ.பா.வுக்கு. சீக்கிரம் அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், சா. கந்தசாமி, பூமணி, ஜெயமோகன் மாதிரி எழுத்தாளர்களுக்கும் கொடுங்கப்பா! அதுவும் அசோகமித்திரன் இருக்கும் நிலையைப் பார்த்தால் ரொம்ப நாள் தாங்கமாட்டார் என்று தோன்றுகிறது, இருக்கும்போது மரியாதை செய்யுங்கள்! (சுந்தர ராமசாமிக்கான சான்சைத்தான் விட்டுவிட்டோம்.)

லிஸ்டில் டாக்டர் ரங்கநாதன் பார்த்தசாரதி என்று போட்டிருந்தார்கள். இந்திரா பார்த்தசாரதியைத்தான் தெரிகிறது, யாருக்கு ரங்கநாதனைத் தெரியும்? :-)

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: படிப்பு, ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
2010 – விருது பெற்றவர்களின் முழு லிஸ்ட்
2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்
ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன்
ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்ம பூஷன்
விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா?

கீழ்வெண்மணி நாவல்கள்
இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள்

கொலை அரங்கம் 1984ல் வெளியான போது ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகள் எழுப்பிய காலம்.

அந்தப் போராட்டத்தை அரசியல்வாதிகள் பலர் பல விதத்தில், தத்தம் சுய நலன்களுக்காக பொய்யான அனுதாபங்களைக்  காட்டி, தம் மேல் வெளிச்சம் பெறுவதற்காகப் பயன் படுத்தினார்கள்.

இது சுஜாதாவின் மனதில் ஒரு கற்பனைக் கதையாக உருவாகி த்ரில்லர் வடிவத்துக்கு மாறியது.

‘கொலை அரங்கம்’ – கணேஷ் – வசந்த் நாவலின் முதல் அத்தியாயத்தில்  இருந்தே, தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் ஒன்று.   இந்த நாவலில் இருவரையும், மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறார் சுஜாதா.

இது குண்டுகள் வெடிக்கும் காலம்.  சென்னை விமான நிலையத்தில் வெடித்த குண்டு பல உயிரை மாய்த்தது.

இலங்கையில் இருந்து, வாழ்விழந்த பல தமிழர்கள் புகலிடம் தேடி தமிழகம் வருகின்றனர்.   இதற்கெல்லாம், கணேஷ் வசந்த் மூலம் இந்தக் கொலை அரங்கத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறார் சுஜாதா.

‘குங்குமம்’ வார இதழில் இந்த கதை வெளிவந்தது.

தமிழ் ஹிந்து தளத்துடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர்கள் கொஞ்சம் paranoid ஆக இருக்கிறார்கள், இஸ்லாமிய கிருஸ்துவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள் என்பது என் கருத்து. ஆனால் ஒரு நல்ல நண்பர் சொல்லும் சில விஷயங்கள் அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றன. அவர் பெயரை சொல்வதை அவர் விரும்புவதில்லை. (திராவிட கழக ஆட்கள் ரௌடிகள் அவரை அடிக்க ஒரு முறை தேடி இருக்கிறார்களாம், அதனால் அவர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க விரும்புகிறார்.) அதனால் அவரை நல்ல நண்பர் என்றுதான் குறிப்பிட முடிகிறது.

ஆனால் ஏமாற்றி மத மாற்றம் செய்வதைப் பற்றி எனக்கும் அவர்களுக்கும் ஒரே கருத்துதான். திராவிட இயக்கத்தைப் பற்றி அங்கே சொல்லப்படும் தகவல்கள் (கவனிக்கவும், தகவல்கள்; அவர்களது கருத்துகள் இல்லை) திராவிட இயக்கம் மற்றும் பெரியாரின் தலையை சுற்றி ஒரு ஒளி வட்டம் (halo) உருவாக்க தமிழகத்தில் எடுக்கப்படும் முயற்சிகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. என்னுடைய கருத்தில் பெரியாரே – a straightforward and transparent man – அப்படிப்பட்ட முயற்சிகளை விரும்பமாட்டார்.

போகப் போகத் தெரியும் நல்ல முயற்சி. அது பல தெரியாத தகவல்களைத் தருகிறது. சுப்பு என்பவர் எழுதி இருக்கிறார். இணையக் கட்டுரைகளை இப்போது தொகுத்து புத்தகமாகப் போடுகிறார்களாம். என்னை மாதிரி கஞ்சப் பிசினாரிகள் இணையத்தில் இங்கே படிக்கலாம்.

எனக்கு நினைவிருக்கும் சில:

  1. வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு தமிழ் நாட்டில் பொதுவாக நினைப்பது போல பெரியது இல்லை என்பதை பல பகுதிகளில் எழுதி இருக்கிறார். இதைப் பற்றி சமீபத்தில் ஜெயமோகனும் எழுதி (பகுதி 1, பகுதி 2) இருந்தார். குறிப்பாக கேரளத்தில் அப்படி நினைக்கப்படுவதில்லை என்று சொல்லி இருந்தார். வைக்கத்தைப் பற்றி திராவிட இயக்கத்தினரை விட மலையாளிகளுக்குத்தான் அதிகம் தெரியும் என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். :-)
  2. சுயமரியாதைத் திருமணம் என்று பலமாக பிரச்சாரம் செய்த பெரியார் மணியம்மையை சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. பதிவுத் திருமணம்தான் செய்துகொண்டார்.
  3. சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயர் ஒரு குருகுலம் அமைத்தார். அதற்கு காங்கிரஸ் ஐயாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தது. ஆனால் அங்கே இரண்டு பிராமணச் சிறுவர்கள் மற்ற ஜாதி சிறுவர்களோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டாம் என்றாம் ஐயர் அனுமதி கொடுத்திருந்தார். அது பெரிய விஷயமாக வெடித்து பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். இதைப் பற்றி இரு தரப்பு வாதங்களும் பல பதிவுகளில் பேசப்பட்டன.

எனக்கு பிடித்த சில பதிவுகள் பற்றி மேலும்:

பகுதி இரண்டில் சுவருக்குள் சித்திரங்கள் என்ற ஜூவி தொடரைப் பற்றி எழுதுகிறார். அதில் மாணிக்கம் கவுண்டரின் கடைசி வார்த்தைகள் ஒரு அருமையான சிறுகதை படித்த உணர்வைத் தருகின்றன. அமெரிக்காவில் நாலு மாடி வீடும், எட்டு மெர்சிடஸ் காரும், பாங்கில் பத்து மில்லியன் டாலரும் இருந்தாலும் கொசு கடிக்கும் மாம்பலம்தான் என் ஊர் என்ற ரேஞ்சில் யாரோ ஒருவர் “கவிதை” எழுதி இருந்தார். அந்த மாதிரி இருக்கிறது.

பதிவு 28: வீரமணியை சோ கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களும் தவறானவையே என்று சொல்ல வைக்க ததிங்கினத்தோம் போட்டுப் பார்க்கிறார், முடியவில்லை. ஆனால் என் நெருங்கிய நண்பன் தங்கமணிமாறன் திராவிட கழகக் குடும்பத்தவன். அவன் எனக்கு கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை எதிர்க்கும் திராவிட கழக பிரசுரங்களை காட்டி இருக்கிறான். அவன் சொன்ன விளக்கம் “எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. பெரியார்/தி.க. சில விஷயங்களில் focus செய்ய முடிவு செய்தது. அதனால் அவர்கள் கிருஸ்துவ மதம் சரி, ஹிந்து மதம் மட்டுமே தவறு என்று நினைப்பதாக முடிவு செய்யக் கூடாது”. இந்த அணுகுமுறையில் எனக்கு தவறு எதுவும் தெரியவில்லை. ஆனால் அதை வீரமணி வெளிப்படையாக சொல்லாதது, அதுவும் இப்படி கிடுக்கிப்பிடி போட்டு கேட்கும்போது சொல்லாதது சரி என்று அவனால் கூட சொல்ல முடியாது.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: படிப்பு, ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
பெரியார் – என் மதிப்பீடு
பெரியார் திரைப்பட விமர்சனம்

வைக்கம் போராட்டம் பற்றி ஜெயமோகன் – பகுதி 1, பகுதி 2

போகப் போகத் தெரியும் கட்டுரைகளின் தொகுப்பு
போகப் போகத் தெரியும் கட்டுரைகள் புத்தகமாக வெளி வருகிறது
போகப் போகத் தெரியும் பகுதி 2 – ஜெயிலில் மத மாற்றம்
போகப் போகத் தெரியும் பகுதி 28 – சோ வீரமணியை எடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி

அடுத்த பக்கம் »